MMOIP 17.2
MMOIP 17.2
அத்தியாயம் – 17.2
இங்கோ இவர்கள்.. மகன் வாழ்வையும் கெடுத்தோம், இரு பெண் வாழ்வையும் கெடுத்தோம், கடைசியில் ஒரு உயிரே போய்விட்டதேயென வேதனை கொண்டனர்.
அவர்கள் வேதனையை அப்போதைக்கு சற்று குறைக்கவே வந்த செய்தி மருமகள் கருவுற்றிருக்கிறாளென்பது.
தாமரையை கொண்டாடியவர்கள், மகனிடம் விஷயத்தை சொல்ல, எப்படியென புரிந்து தன்னையே திட்டி கொண்டவருக்கு, கண்களில் ஒரு அதிர்ச்சி வந்த போதும் கடனேயென கேட்டுவிட்டு எதுவும் கூறாமல் சென்றுவிட்டார்.
தாமரையை திரும்பி பார்க்க, இதை எதிர்பார்த்தேன் என்பதுபோல முகத்தை வைத்திருந்தார்.
மாணிக்கத்தின் மனதை மாற்றி அன்பை எதிர்பார்த்ததெல்லாம் அன்றே முடிந்து போனது!
இந்த கரு உருவாக காரணமாக இருந்த நாளில்…
அளவுக்கதிகமாக குடித்துவிட்டு வீடு வந்தவர் மனைவி அறைக்கு சென்றுவிட, அவர் கண்களில் பட்டார் என்றோ ஒருநாள் ஆசையாக வாங்கி வீட்டின் மருமகளுக்கென தாயிடம் கொடுத்த புடவையை கட்டிய பெண்.
துவைத்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தவரை பின்னிருந்து இறுக்கமாக அணைத்துக் கொண்டவர் கணவன் என்ற உரிமையை எடுக்க, அத்தனை நாட்கள் கணவனின் பார்வைக்கு ஏங்கியவர் அவர் நெருக்கத்தில் உருகினாலும், நிதானமில்லாமல் இருக்கிறாரென விலக முயற்சி செய்தார். பின் ஒரு கட்டத்தில் அவரின் ஆசைக்கு இணங்கினார்.
ஆனால் கூடலுக்குப் பின் நெற்றியில் இதழ் பதித்தவர், “மீனா.” என பிதற்ற சட்டென விலகி எழுந்தவர் கடுப்படுத்த முடியாத கண்ணீரோடு குளியலறைக்கு ஓடினார். அன்றே மனம் முற்றிலுமாக விட்டுப்போனது.
அவரின் மனம் அறிந்தும் இப்படி யோசியாமல் இருந்து விட்டோமேயென நொந்து கொண்டவருக்கு தன் மீதும், அவரின் மீதும் கோபமாக வந்தது.
இனி அவர் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த ஒரு அணுவையும் அசைக்க கூடாதென்றும், அவரின் பக்கமே செல்லக்கூடாதென்றும் முடிவெடுத்தார்.
காதலிக்கும் கட்டியவளுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?
அவர் செய்த காரியத்தை ஏற்கவே இயலவில்லை. அதன்பிறகு தானுண்டு தன் வேலையுண்டு என ஒதுங்கி கொண்டார்.
மாமனார் மாமியாரிடம் கூட முன் போல பேச்சு வைத்துக் கொள்ளவில்லை.
இங்கோ… மாணிக்கம் தான் யாருக்கு உண்மையாக இருக்கிறோம், உருகி காதலித்த காதலிக்கும் உண்மையாக இல்லை, கட்டிய மனைவிக்கும் உண்மையாக இல்லை, உயிரோடு இருக்கவே தனக்கு தகுதியில்லை போலவென அவரையே சாடிக்கொண்டார்.
மனைவி கர்ப்பமாக இருக்கிறாரென்ற வார்த்தை அவரைக் குளிர்விக்கவில்லை. மாறாக அவர் தலையில் யாரோ செந்தனலை அள்ளிக் கொட்டியது போலதான் இருந்தது.
‘இந்த குடியால்தானே இப்படி. இதற்குமேலும் இப்படியே இருந்து தன் வாழ்க்கையை அழித்துக்கொள்ள வேண்டுமா?’ என்ற எண்ணம் வர, முன்போல அல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பதைவிட்டார்.
தனக்கு என வேலையைத் தேடிக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்.
மாதங்கள் போக, வாழ்க்கையில் தனக்கு கிடைத்த ஒரே மகிழ்ச்சி தன் குழந்தை மட்டுமேயென புரிந்து கொண்ட தாமரையும், மனக்கவலையை ஓரம் கட்டிவிட்டு முடிந்தளவு இயல்பாக வலம் வந்தார். குழந்தைக்காக சத்தாக உண்டு உடல்நலனில் அக்கறையாக இருந்தார்.
இந்த சமயத்தில் தங்கையுடன் கணவன் இல்லாமல் வெளியே இருக்கிறாரென கேட்ட தமயனிடம், “அவரு வெளிய தங்கி வேலை பாக்குறதே எங்களுக்காகதான் ண்ணா. அங்க போனா வசதி படாதுனுதான் இங்க இருக்க சொன்னாரு.” என சமாளித்தார்.
பிரசவ நாளும் வர, அவருக்கு அழகான குட்டி மகன் பிறந்தான்.
அவ்வளவுதான் அதன்பிறகு அவர் நாட்கள் மகனுடன் அழகாக நகர்ந்துது.
‘வெற்றிவேல்’ என பெயர் சூட்டியவர் குழந்தையை தாலாட்டி சீராட்டி வளர்த்தார்.
அவ்வப்போது வீடு வரும் மாணிக்கத்திற்கும் மகனைக் காணும்போது உள்ளே என்னவோ செய்யத்தான் செய்தது. ஆனாலும் கைகளில் வாங்கியது கூட இல்லை.
மருமகனை பார்த்த வேலுவும் அடிக்கடி அங்குவர, தங்கை கணவனின் ஒட்டாத தன்மை நன்றாக புரிந்தது. ஏற்கனவே அவருக்கு நடந்த விஷயமும் தெரிந்திருக்க தங்கையிடம் எதையும் கேட்டு நிம்மதியைக் கெடுக்க வேண்டாமென்று விட்டுவிட்டார்.
ஆனாலும் அந்த குடும்பத்தினர் மீது முன்னிருந்த மரியாதை குறைந்து போனது.
வருடங்கள் கடக்க, ஒருமுறை பிரார்த்தனைக்காக எல்லோரும் கோவில் வந்தனர். ரொம்ப வேண்டி கேட்கவும் மாணிக்கமும் வந்தார்.
மலைமீதுள்ள இன்னொரு கோவிலுக்கு செல்ல வேண்டுமென முடிவு செய்திருக்க, குழந்தையும் சிலமுறை வாந்தி எடுத்துவிட, வள்ளியம்மைக்கும் தலை சுற்றுவது போல இருக்கவும் அவரிடம் வந்து அன்னை மகன் இருவரையும் அழைத்து செல்ல கேட்டார் ரத்தினம்.
குழந்தை நலம் மற்றும் வேண்டுதல் காரணமாக செல்லமுடியாமல் நின்ற தாமரையும், என்னதான் சொல்கிறார் பார்க்கலாமென அமைதியாக இருக்க, வெகுவாக தயங்கினாலும் குழந்தையை வாங்கிக் கொண்டார்.
முதல்முறை கணவன் கையில் குழந்தையை பார்க்கிறார்.
டிரைவர் அழைக்க, ரத்தினம் மற்றும் தாமரை காருக்கு சென்றனர். ஒருமுறை திரும்பி கணவனையும் மகனையும் பார்க்க, மாணிக்கமும் அவரை பார்த்தார்.
அதுவே கடைசி முறையென தெரிந்ததோ!
அதன்பின் விபத்தில் சிக்கி, டிரைவர் பலத்த அடியுடன் தீவிர சிகிச்சை பெற, இவர்களிருவரும் உயிரற்ற உடல்களாகவே வீட்டிற்கு எடுத்து வரப்பட்டனர்.
வள்ளியம்மையும், மாணிக்கமும் அளவில்லா வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தனர்.
ஏனோ… அவருக்கு பிடிக்காத மனைவியாக இருந்தாலும், இறந்து போகவேண்டுமென்று எண்ணமெல்லாம் அவருக்கு இருக்கவில்லை.
குழந்தையும் தாயைத் தேட வருத்தமாகிப் போனது.
தந்தை இல்லாத சமயம் தாயை தனியே விட மனமில்லாமல் அங்கு வந்துவிட்டார்.
வாழ்க்கையில் பெரிதாக எந்த முன்னேற்றமும் அவருக்கு ஏற்படவில்லையெனினும், கொஞ்சம் இயல்பாக சென்றது.
இப்போதும் அவர் மகனிடம் பாசமாக நடக்கவில்லை. மூன்று வயதே அப்போது வெற்றிக்கு.
தந்தையிடம் முதலில் ஆசையாக செல்பவன், அவர் கண்டுக்காமல் போவது பார்த்து என்ன புரிந்ததோ, அவரை தொல்லை செய்யாமல் பாட்டியிடம் அதிகம் ஒட்டிக் கொண்டான்.
தங்கை இறப்பிற்கு பின் வெற்றியை பார்க்க மட்டுமே அவ்வப்போது வருவார் தங்கவேலும் அவரின் மனைவி மணிமேகலையும்.
மகன் தன்னிடம் பேசவில்லை, அவன் குழந்தையிடம் கூட அத்தனை இணக்கம் காண்பிக்கவில்லையென்ற பேதுதான் வள்ளியம்மைக்கு தான் அன்று மகன் பேச்சைக் கேட்டு திருமணத்தை நடத்தாமல் இருந்திருக்கலாம் என அனுதினமும் தோன்றியது.
இரண்டு மாதங்கள் சென்றிருக்க, சில நாட்களாக மகன் நடவடிக்கையில் மாற்றம் கண்டார். எதையோ ஆழமாக யோசிக்கிறாரென புரிந்தும் என்ன என கேட்கவில்லை. கேட்டாலும் பதில் வராதே.
மனதுக்குள் என்னவோ நடக்கப் போவதாக தோன்றியது.
அதே போல ஒருநாள் வீட்டிற்கு வந்தார் மாணிக்கம்… உடன் மீனாட்சியோடு திருமணம் செய்துகொண்டு.
இதை எப்படி எடுத்துக் கொள்ளவதென்றே அவருக்குத் தெரியவில்லை. மனைவி இறந்து இரு மாதங்கள்தான் ஆகிறது.
ஆனால் அவரோ, எதுவுமே பேசாமல் தன் அறையிலிருக்கும் சான்றிதழ், துணியை ஒரு பையில் எடுத்துக்கொண்டு அவரை கூட்டி செல்ல பார்க்க, என்னதான் சொல்லாமல் திருமணம் முடித்தாலும், மகன் இங்கிருந்து கிளம்பவும்,
“எங்கடா போற?” அதிர்ச்சியாக கேட்டார்.
“என் பொண்டாட்டி கூட நிம்மதியா வாழ போறேன். இங்க இருந்தா அது கிடைக்காதே.” எரிச்சலாக பதில் வந்தது.
அதிர்ந்தாலும், “அப்போ உன் பையன்?” என கேட்டார் அப்போதாவது இறங்குவான என,
ஆனால் அதற்கு, “எனக்கு பொறந்துட்டா மட்டும் அவன என் பையனா ஏத்துக்கணுமா?என் வாழ்க்கையே உங்களாலதான போச்சு. இனிமே எனக்கு புடிக்காதவங்கள வாழ்க்கையில வச்சிக்கிட்டு சகிக்கிட்டு வாழ நான் ஆளில்ல. முடிஞ்சா அவன பாத்துக்கோங்க. இல்லனா கொண்டு போய் ஆசரமத்துல விட்ருங்க. அப்படி பண்ணினா என்கூட கூட்டிட்டு போறேன்.” என மனசாட்சியே இல்லாமல் பேச,
“ச்சே… வாய மூடுடா… நீயெல்லாம் ஒரு மனுசனா? பெத்த பையன… அதும் குழந்தை அதை என்ன பண்ண சொல்ற? நீ போய் என் வயித்துல வந்து பொறந்தயே?
நான் உயிரோட இருக்கும்போது அவன ஏன் நான் அங்க கொண்டு போய் விடுவேன்?
உன்கூட வரதுக்கு அப்டிலாம் என்னால பாவம் பண்ண முடியாது. என் பேரன் போதும் எனக்கு. இனிமே இந்த குடும்பத்துக்கும் உனக்கும் சம்மந்தமே இல்ல.” என கத்த, அவரோ மீனாட்சியை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.
மனதுக்குள் தான் செய்வது தவறென புரிந்தும், மீண்டும் தனக்கு கிடைத்த காதலுக்கு சுயநலமாக முடிவெடுத்துவிட்டார்.
கணவன் இழுப்புக்கு சென்றவாரே மீனாட்சி திரும்பி நடப்பது எதும் அறியாமல் பொம்மையுடன் உட்கார்ந்திருக்கும் வெற்றியை பார்த்தார். அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது.
நடந்ததைக் கேள்விப்பட்ட வேலுவும், ‘ச்சே மனுசனா இவன்.’ என வெறுத்துப் போனார்.
அங்கிருந்தே குழந்தையை பார்த்துக்கொள்ள ஊரிலுள்ள கொஞ்சமாக இருந்த சொத்துக்களை விற்றவர், வெற்றி வீட்டருகில் உள்ள வாடகை வீட்டில் குடியேறி, சொந்தமாக கார் எடுத்து, அதிலேலேயே டிரைவராக இருந்து வருமானம் செய்தார்.
அதன்பின் அவர்கள் வாழ்க்கை கொஞ்சம் மகிழ்ச்சியாக சென்றது.
மணிமேகலையும் வெற்றியை தன் குழந்தை போலவே அன்பாக வளர்த்தார்.
அவனுக்கு குறிப்பிட்ட வயது வரும்வரை குழந்தை பெறுதலை தள்ளிப்போட்டனர்.
தாயை, தந்தையை காணமல் அழுதாலும், வெற்றியும் பாட்டி, மாமன், அத்தையென நாட்களை இனிமையாக நகர்த்தினான்.
திருமணம் முடிந்த ஒருவருடத்தில் மீனாட்சியும் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
‘கதிர்வேல்’ என பெயர் சூட்டியவர்கள் அவனை அன்பாக வளர்த்தனர்.
மீனாட்சி மாத்திரமே எதிலும் முழுதாக ஒட்டவும் முடியாமல், விலகவும் முடியாமல் தடுமாறினார்.
நான்கு வருடங்கள் இப்படியே செல்ல, கடவுள் இன்னுமே உங்களுக்கு இழப்பு உண்டென சொன்னதை வள்ளியம்மை வீட்டில் யாருமறியவில்லை.
ஒருநாள் முக்கியமாக வெளியே சென்றுவருகிறதென சென்ற தங்கவேலு விபத்தில் இறந்து போக, அன்பு கணவன் இழப்பை தாங்க முடியாமல் அதிர்ச்சியில் உடனே பிரசவ வலி வந்து ஒரு பெண் மகவை ஈன்றுவிட்டு மணிமேகலையும் விண்ணுலகை அடைந்தார்.
இழப்பு… இழப்பு… என அந்த குடும்பம் எத்தனையைத்தான் தாங்கும்?
ஆனாலும் வள்ளியம்மை தாங்கினார்.
தன்னை தேற்றிக்கொண்டு இரு குழந்தைகளைக்கும் எல்லாமுமாக இருந்து பாசமாக வளர்த்தார்.
அத்தையின் குழந்தையென காட்டப்பட்ட கொழுகொழு கன்னம் கொண்ட அந்த பெண் சிசுவை பார்த்த மாத்திரத்தில் வெற்றிக்கு பிடித்துபோனது.
அந்த குட்டிதேவதைக்கு ‘புவனேஸ்வரி’ என பெயர் வைக்க, அந்த சிறுவனுக்கே மகளாகிப் போனாள்.
அதன்பின் மூவரும் அழகான குடும்பமாகினர்.
தொடரும்…