MMOIP 9

1650508912096-5f27bbbc

MMOIP 9

அத்தியாயம் – 9

 

நாட்கள் நகர்ந்தது…நோம்பி சாட்டப்பட, அனைவரும் திருவிழா வரை அசைவம் சமைக்காமல் பதினைந்து நாட்கள் பத்தியம் இருந்து திருவிழாவை நோக்கி நாட்களை நகர்த்தினர்.

தோப்பு, திருவிழா, வயல் வேலை என வெற்றி கொஞ்சம் அலைச்சலாக சுற்ற, முன்போல அவனை கோவிலில் பார்ப்பது மட்டுமே. அப்படி பார்க்கும் போதும் அவனை சுற்றி ஆட்கள் இருந்தனர்.

அதன் காரணமாக தேன்மொழிக்கு வெற்றியைத் தனியே நேரில் கண்டு பேச சந்தர்ப்பமே கிடைக்கவில்லை.

எனவே ஒரு கடிதத்தில் தன் பிரச்சனையை எழுதி அவனிடம் எப்படியோ சேர்த்து விடலாமென முடிவு செய்தாள்.

அவனிடம் பேச ஒரு நிமிடம் ஆகாது. அவனும் அதற்க்கே காத்திருக்கிறான்.

முதலில் அவள் பார்வையை உணர்ந்து அவளிடம் பேச வர, தேன்மொழி பயந்து தவிர்க்கவும், கொஞ்சம் கொஞ்சமாக அவள் மனம் அவனுக்குப் புரிய, அவளைப் போலவே கண்டுக்காதது போல் இருந்து கொண்டான்.

எத்தனை வருடங்கள்… இந்த காத்திருப்பு?

யாரும் பார்த்து பிரச்சனையானால்… வீட்டில் தெரிந்தால், இத்தனை வருட காத்திருப்புக்கு என்ன பலன்?

அவள் காதல் அவளுக்கு நிறையவே பொறுமையைக் கற்று கொடுத்திருந்தது.

அதனாலே…

 

கண்ணோடு கண்

பாா்க்கும் காதல் போதும்

இரு கண் கொண்ட தூரம்

போல் தள்ளி இரு போதும்

 

என்பதுபோல காதலித்தார்கள்.

அவன் சிலரிடம் நின்று பேசிகொண்டிருக்க, அவள் எழுதிய லெட்டரை ஒரு சிறுவனிடம் கொடுத்துவிட்டு, ‘நான் கொடுத்தேன் என அவரைத் தவிர யாரிடமும் சொல்லக் கூடாது.’ என சொன்னவள், எப்போதும் கோவிலுக்கு கொண்டு வரும் பையிலிருந்து சாமிக்கு படைத்த பின் இருக்கும் கொழுக்கட்டையை கொடுக்க, அதில் குஷியானவன் வேலையை கச்சிதமாக முடித்தான்.

முதலில் அதை புரியாமல் வாங்கிய வெற்றி, சிறுவன் காதில் மெல்லிய குரலில் சொன்ன ஒற்றை பெயரில் அதை உடனே பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டு சுற்றியும் தேட, அவன் பார்வையை சந்தித்தாள்.

பார்வைகளின் சந்திப்பு, புன்னகை பரிமாற்றம் மாத்திரமே அவர்களிடம். நேரடி பேச்சு இல்லாததால். அதுவுமே அரிதானது; சிறிதானது.

எப்போதும் சில நொடிகள் மட்டுமே தொடரும் பார்வை இன்று கொஞ்சம் நீள… அவள் கண்களாலே ஏதோ கூறுகிறாள் எனவும் புரிந்தது.

‘என்ன விஷயம்? அந்த கடிதத்தில் என்ன இருக்கிறது?’ என்றே அவன் மனம் யோசித்தது.

சில நொடிகளில் அவளும் சென்றுவிட, மற்றவர்களிடம் பேசியவன் பின் தனியே வந்து அந்த லெட்டரை பிரித்தான்.

இது என்றோ எதிர்பார்த்ததுதான். ஆனாலும் அவள் மூலம் இப்போது கேள்விப்படும்போது ஆத்திரமாக வந்தது.

எப்போது புவனா கதிர் விஷயம் தெரிந்ததோ, அப்போதே அவர்கள் தான் ஜோடி என்று மனம் கணக்கிட, அதேபோல அவள் அவனவள் என்ற எண்ணம்.

அப்படியிருக்க, ஆரம்பத்தில் இருந்த இந்த யோசனையையே சுத்தமாக இல்லாவிட்டாலும் கொஞ்சமே மறந்திருந்தான்.

இப்போது இந்த பேச்சே அவனுக்கு கேட்கப் பிடிக்கவில்லை. அவர்களுக்கும் அப்படித்தானே இருக்கும் என நினைத்தவன், அந்த பேச்சு முடிந்து போனதில் நிம்மதி கொண்டான்.

ஆனாலும் அடுத்து அவர் வேறு பார்க்க கூடும் என்றதில், தீவிரமாக யோசனையில் இறங்கினான்.

»»»»

போன் அடிக்க, ஏரியில் கதிர் குளித்துக் கொண்டிருந்ததால் அப்போது ஒரு துண்டில் தலையை துவட்டியவாறே வந்த பிரபா அதை எடுத்தான்.

‘ஹெலோ.’ என அவன் ஆரம்பிக்கும் முன், “ஹாய்…கதிர் எப்படி இருக்கீங்க?” என ஒரு பெண் குரல்.

“ஒரு வாரம் லீவுனு சொல்லிட்டு ஆளையே காணோம்?” என எதிரில் யார் இருக்கிறார்கள் என அறியாமல் தொடர, இவனோ, ‘இவனுக்கு யார் அதுவும் புவனாவ தவர ஒரு பொண்ணு போன் பண்ணுது. வேல செஞ்ச இடத்துலயாதான் இருக்கும் போல. பேசலாமா? வேணாமா?’ என யோசித்தவாறே பதில் பேசாமல் நின்றான்.

பின்னால் திரும்ப கதிர் வரவும், போனைக் காட்டி சீக்கிரம் வருமாறு சைகை செய்தான்.

புவனாதான் போன் செய்துள்ளாளோ என கிட்டத்தட்ட ஓடி வந்தவன் வாங்கி நம்பரை பார்க்க, அவனுக்கு கொஞ்சம் புஸ்ஸென்றானது.

எதிர்முனையில், “ஹெலோ ஹெலோ… கதிர் இருக்கீங்களா?” என்ற குரல் கேட்க நிகழ்வுக்கு வந்தவன்,

“ஹாய் காவ்யா. எப்படி இருக்கீங்க?” என்றான் அக்கறையாக.

“ஏன் இவ்ளோ நேரம் பதில் பேசல?” என்ற கேள்வியில் பிரபாவை பார்க்க, அவனோ அசடு வழிய சிரித்துவிட்டு நகர்ந்துவிட்டான்.

“அது… நான் அந்த பக்கம் இருந்தேன். பிரண்ட்தான் தெரிஞ்சவங்க யாரும் இருக்கும்னு அட்டென்ட் பண்ணான். நீங்க பேசவும் என்ன கூப்டு கொடுத்துட்டான்.” என அவள் புருவங்கள் உயர்ந்தது.

‘எப்படா சான்ஸ் கிடைக்கும் பேசலாம்னு நெனைக்கறவங்களுக்கு மத்தில இப்படியும் இருக்காங்க போல!’ என நினைத்துக் கொண்டாள்.

காவ்யா அவன் வேலை செய்யும்… இல்லை செய்த கம்பெனியில் அவனைவிட உயர் பதவியில் இருப்பவள்.

தேவையில்லாமல் யாரிடமும் பேசாமல் தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பாள்.

ஆசிரமத்தில் வளர்ந்த பெண். பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றதால் ஒருவரின் ஸ்பான்ஸர்ஷிப்பால் கொஞ்சம் பெரிய கல்லூரியில் படிப்பை முடித்தாள். பெர்ஸண்டஜும் அதிகம் பெற்று, கேம்பஸ் இன்டெர்வியூவிலேயே வேலையும் கிடைத்தது.

அவள் வளர்ந்த கஷ்டமான சூழ்நிலை, சுற்றி இருப்பவர்கள் சிலரின் தப்பான பார்வை, நோக்கம் என பலவற்றை பார்த்ததால் யாரிடமும் அதிகம் பேசமாட்டாள்.

வேலை சம்பந்தமாக மட்டுமே பேச்சு இருக்கும். கதிரிடம் அவன் வேலை சேர்ந்த புதிதில் பெரிதாக பேசியதில்லை.

ஆனால் மாதங்கள் போக அவன் கண்ணியமான பார்வை, ஒர்க் சின்சியாரிட்டி, இயல்பாக பேசுவது, தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது எல்லாம் அவன் மீது நல்ல மதிப்பை கொடுக்கவும், இருவரும் நல்ல நண்பர்கள் ஆனார்கள்.

அவனுக்குமே அவள் மீது மரியாதை உண்டு. வழிந்து கொண்டு யாரும் பேசும்போது அவளிடம் இருந்து தள்ளி நிற்க வைக்கும் அந்த துளைக்கும் பார்வை, வேலையில் எதும் சந்தேகம் என்றாலும் புரியும்படி சொல்வது, தப்பு செய்தால் காட்டும் கண்டிப்பு என ஒரு பாரதி கண்ட புதுமை பெண்ணே அவள் அவனுக்கு.

ரொம்ப பர்சனலாக பேசிக் கொள்ளாவிட்டாலும் ஒருமுறை ஏதேச்சையாக அவன் பர்ஸ்ஸில் இருந்த புவனா புகைப்படத்தை பார்த்தவள்,

“இது யாரு?” எனக் கேட்க,

“என் வருங்காலம்.” என்றான் அலட்டிக் கொள்ளாமல்.

அவள் அவ்வப்போது அதைவைத்து கிண்டல் கூட செய்வாள். அதை ஒரு சிரிப்போடு கடந்துவிடுவான்.

ஆனால், ‘ஊர் சென்று வருகிறேன்.’ எனக்கூறியவன் ஏன் இன்னும் வரவில்லை எதும் பிரச்சனையா என்றே அழைத்தாள்.

“எப்போ வருவீங்க கதிர்?” என,

அவனோ, “இல்ல காவ்யா வேலைய விட்டுட்டலாம்னு இருக்கேன்.” என்றான்.

அவள் எதுவும் கூறவில்லை. ஏனோ கிடைத்த ஒரு நல்ல தோழனும் இனி இங்கு இல்லை என்ற எண்ணம் சோர்வைத் தந்தது. அதைவிட தன்னிடம் ஒரு வார்த்தை கூறியிருக்கலாம் என நினைத்தாள். அதையே கூறியும்விட்டாள்.

அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. வந்ததும் போன் பண்ண நினைத்தான். ஆனால் அவனை பண்ணிய டென்ஷன் மறந்து போனான்.

“அது…” என இழுக்க,

“உங்கிக்க சொல்ல நீ யாருனு நெனைக்கறீங்களா?” கேலியாக கேட்டாலும் அதில் ஒரு வலி இருந்தது. தனக்கு என யாருமில்லையோ என்ற வலி. 

பதறியவன், “ச்சே ச்சே… அப்டிலாம் இல்ல. என் பிரண்ட் என்ன கேக்கலாம்.” என அதைக்கேட்டு அவளுக்கு உள்ளே அத்தனை மகிழ்ச்சி.

“ம்ம்… சரி விடுங்க. நான் சும்மாதான் சொன்னேன்.” என்றவள் மேலும் சில பேச அவனும் இயல்பாக பதில் பேசினான்.

பின்… “ஊருல திருவிழா. டைம் இருந்தா வாங்களேன். இல்ல… நிச்சயம் வரணும். உங்கள எதிர்பார்ப்பேன்.” என அழைக்க, எதிர்புறத்தில் பெரிய மௌனம்.

இதுவரை அவளை யாரும் இதுபோல அழைத்ததில்லை. உண்மையிலேயே அத்தனை பழக்கம் யாரிடத்தும் இருந்ததில்லை. கண்கள் லேசாக கலங்கியது அவனின் உரிமையான அழைப்பில்.

“கண்டிப்பா.” என்றாள் இதழ் விரித்த புன்னகையோடு.

அவள் மனமறிந்தவன் சிரித்துவிட்டு சில நிமிட பேச்சிற்குப் பின் அழைப்பைத் துண்டித்தான்.

பிரபா யாரெனக் கேட்க, அவளை பற்றிச் சொன்னவன், “நல்ல பொண்ணுடா. பாப்போம் இங்க வராங்கலானு. ஸ்ட்ரயிட்டா தங்கச்சி மாறினு வீட்ல சொல்லிடனும். இல்லனா அதுக்கும் ஒன்னு கண்டுபிடிப்பாங்க.” என கூறிவிட்டு நகர்ந்தான்.

 

தொடரும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!