MMOIP 8

1650508912096-ece21b59

அத்தியாயம் – 8

 

காலையில் வழக்கமாக தேன்மொழி கோவில் வருவாள் என அறிந்த கதிர் அங்கு அவளிடம் பேச காத்திருந்தான்.

வீட்டில் போய் பேசி… யாரும் கேட்டுவிட்டால் பெரிய சிக்கல். கல்யாணப் பேச்சு இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் சென்றிருப்பான். ஆனால் இப்போது அங்கு சென்று பேசுவதை விரும்பவில்லை.

சுந்தரம் மீது அவனுக்கு எப்போதும் பெரிதாக பாசம் இருந்ததில்லை. அவர் அதிகாரம், பேச்சு எதுவும் பிடிக்காது. அவனிடத்தில் அவருக்கு உறவுக்கான மரியாதை மட்டுமே.

அத்தை – அவரை பற்றி பெரிதாக எதும் நினைத்ததில்லை. கணவர் போல இல்லாவிட்டாலும் கொஞ்சம் ஓவராக பேசுவார்தான். ஆனாலும் மாமன் அளவுக்கு கனகம் மோசமில்லை என்பது அவன் கணிப்பு.

தேன்மொழி…

பயந்த சுபாவம் உடைய பெண். அவள் வெற்றி மீது பயத்தை தாண்டி கொண்ட காதலெல்லாம், எட்டாவது அதிசயமாக எழுதி வைக்கலாம். அவள் மனதளவில் நெருங்கியவர்களிடம் நன்றாக வாயடிப்பாள். மற்றவர்களுக்கு சாந்தசொரூபிதான். மொத்தத்தில் நல்ல பண்பான பெண்.

தர்ம துரை…

முன்னெல்லாம் வம்புகளை இழுத்துக் கொண்டு பிரச்சனை பண்ணிக்கொண்டே இருப்பான். இப்போது பவ்வியமாக சுற்றுகிறான். ஏனென்று அறிவான்.

மல்லி… அப்பா ஒருவகையில் சுந்தரத்திற்க்கு நெருங்கிய சொந்தம். எனவே அவன் காதலுக்கு இத்தனை பாடெல்லாம் படவேண்டியதில்லை என பெருமூச்சு விட்டவன் ஒரு திட்டில் அமர்ந்து கொண்டு போனை நோண்டிக் கொண்டிருந்தான்.

“ஊருல இருந்து எப்போ வந்தீங்க மாமா?” என அவனைக் கண்டுவிட்டு தேனே வந்து பேசினாள். இருவரும் நன்றாகதான் பேசிக்கொள்வர். 

அந்த கேள்வியில் நிமிர்ந்தவன், “போன வாரம்தான் வந்தேன். எப்படி இருக்க?” என வினவ,

“நல்லாருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?” என,

“எனக்கென்ன நல்லாதான் இருக்கேன்.” என்றவன்,

“கோவிலுக்கு வந்துருக்க, தரிசனம் முடிஞ்சதா?” என்றான் ஒருமாதிரி குரலில்.

அவனை உற்றுப் பார்த்தாள். கிண்டல் செய்கிறானா என. முகத்தில் இருந்த கேலி விஷயத்தை சொல்ல, ஒரு வெட்கப் புன்னகையை பதிலாகக் கொடுத்தாள்.

வெற்றி அவள் வரும் முன்பே வந்துவிடுவான். அவள் இங்கு வந்ததும் சில நிமிடங்களில் கிளம்பியும் விடுவான். இன்று அவன் வரும் நாள்தான்.

அவர்கள் இருவரும் காதலித்தார்கள் என்ற விஷயம் வெளியே வந்தால் பலரும் அதிர்ச்சிதான் அடைவர்.

அத்தனை ரகசியமானது அவர்களின் காதல்!

கதிருக்குத் தெரியும் என்பதை அறிவாள். உண்மையைச் சொன்னால் அவனுக்குத்தான் முதலில் அவளின் எண்ணம் தெரிந்தது. எப்படி என பிறகு காண்போம்.

“தரிசனம் இன்னும் முடியலையா?” என மீண்டும் கேட்க, ஏனிப்படி என்பது போல ஒரு பார்வை பார்த்தாள்.

இதுவே போதும் என்று நினைத்தவன் சிரித்துவிட்டு நேரடியாக பேச வேண்டிய விஷயத்திற்க்கு வந்தான்.

“உன்கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசதான் வந்தேன்.” என,

“ம்ம்… சொல்லுங்க.” என்றாள்.

வீட்டில் நடக்கும் பிரச்சனையை சொன்னவன்… அவர்கள் தீவிரம் காட்டும் காரணத்தையும் சேர்த்து சொன்னான்.

அவனின் பதிலுக்குப் பின் சுந்தரம் என்ன செய்யக்கூடும் என்பதை முக்கியமாகச் சொன்னான். அதைத்தானே முக்கியமாக சொல்ல வந்தான்.

அவன் கூறியதை கேட்டு அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவள் வீட்டில் யாரும் இதைப்பற்றி பேசவேயில்லை. அவளிடம் கேட்கவுமில்லை.

ஏனெனில் அவளை… அவள் விருப்பங்களை அத்தனை முக்கியமாக யாரும் எண்ணவில்லை.

அவர்கள் வீட்டில் மற்றொரு பெண் காதலிப்பதா? அப்படியா அவளை வளர்த்தார்கள்? எத்தனை கட்டுப்பாடுகள்? சிறுவயதிலிருந்து எத்தனை பேச்சுக்கள்? எத்தனை மிரட்டல்கள்? எத்தனை அடிகள்?

அதனால், ‘நாம சொல்றததான கேக்க போறா… அவகிட்ட எதுக்கு சொல்லிக்கிட்டு.’ என்ற எண்ணம்.

ஆனால் நேசம் எல்லாவற்றையும் கடந்து அவளிடம் வந்துவிட்டதே.

இதேபோல விருப்பம் இல்லாமல் கல்யாணம் என்ற பிரச்சனையில் நாம் ஒரு காலத்தில் எத்தனை கோபம் கொண்டோம்… அதற்கு என்னவெல்லாம் செய்தோம் என்பதை மறந்துபோயினர்.

தேன்மொழிக்கு கதிரே வந்து நேரடியாக விஷயத்தை சொல்லவும்… தீவிரம் புரிந்தது. ஆனால் அவன் சொன்ன இரண்டு விஷயமுமே அவளுக்குப் புதிது.

உண்மையில் என்னதான் வெற்றியை மனதார விரும்பினாலும், அதை வீட்டில் கூறவெல்லாம் அவளுக்கு அத்தனை பயம். அதற்காக கண்டிப்பாக விட்டுக் கொடுக்கமாட்டாள். பயம் மட்டுமே.

சூழ்நிலை நம்மை எவ்வளவு தைரியசாலி என காட்டும் இடத்திற்கு கொண்டு வரும் முன், பலரும் தன்னை கோழை என்றுதான் நினைப்பர்.

பிரச்சனை வரும்போது என்ன செய்கிறோம் என்பதை பொறுத்தே நம் தைரியம் எந்தளவு என தெரிய வரும். அதே நிலைதான் அவளுக்கும்.

‘என்ன செய்யலாம்?’ என்ற கேள்வி உடனே மனதில் ஓட… வெற்றிதான் நினைவுக்கு வந்தான்.

உடனே அவனுக்கு கூறவேண்டும் என்று புரிய, எப்படி என யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்.

அவள் பாவனையைக் கண்டே என்ன யோசிக்கிறாள் என பிடிபட அவனுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனாலும் சொல்ல சொல்வோமா என அவன் வாயைத் திறக்கும் முன்,

“நான் அவர்கிட்ட சொல்றேன் மாமா.” என்றாள்.

அதற்கு மேல் அவன் பேச என்ன இருக்கிறது… சரி என்பதுபோல தலையசைத்தான்.

“தகவல் எங்கிட்ட மட்டும்தான் சொல்லுவீங்களா?” வேண்டுமென்றே கேட்டாள்.

இதற்கு என்ன பதில் சொல்ல?

சில நொடி யோசித்தவன், “தகவல் சேர வேண்டியவங்களுக்கு சேர்ந்தா சரி. யார் சொன்னா என்ன?கவனம்.” என்றுவிட்டு கிளம்பிவிட, அவனை ஒரு பார்வை பார்த்தவள், யோசித்தவாறே மீண்டும் கோவிலுக்குள் சென்றாள்.

அவன் வெற்றியிடம் இதைப்பற்றி பேசுவதா?

எத்தனை வருடங்கள் ஆயிற்று அவனுடன் பேசி. ஒரே முறைதான் பேசியிருக்கிறான். அதுவும் சின்ன வயதில். இனியும் பேச்சுக்கள் இயல்பாக நடக்குமா என்று அவனுக்கே தெரியாது.

ஆனால் மனதுக்குள் அவன் மீது அத்தனை மதிப்பும், பாசமும் இருந்தது.

வெற்றிக்கும் இதேபோல தான் என்பது கதிருக்கு தெரிந்திருக்கவில்லை.

இருவருமே வெளிக்காட்டிக் கொள்ளவே மாட்டார்கள்.

விரைவில் அவர்களிடையே உள்ள பாசத்தை எல்லாரும் அறியும்படி சந்தர்ப்பங்கள் வரப் போகிறது என யாரும் அறிந்திருக்கவில்லை.

 

தொடரும்…