MMV-12
MMV-12
அத்தியாயம் – 12
அஜயின் வீட்டில்..
“திவாகர் எழுத்திரு.. நம்ம கேக் ஷாப் வரை போயிட்டு வரலாம்..” என்று தூங்குபவனை எழுப்பிக் கொண்டிருந்தான் அஜய்
“எதற்கு கேக் ஷாப் போகணும்..” அவன் அரைத்தூக்கத்தில் கேட்க, “ரேணுக்கு நாளைக்கு பிறந்தநாள்டா..” என்றதும் எழுந்தமர்ந்த திவாகர் அவனை ஆழ்ந்து பார்த்தான்.
“என்னடா அப்படி பார்க்கிற..”அவன் தன்னுடைய ஷர்ட்டின் மீது பார்வையை ஓட்டிட, “ரேணுக்கு கூட அவளோட பிறந்தநாள் ஞாபகம் இருக்காது. ஆனால் நீ மட்டும் அவளோட பிறந்தநாளை ஞாபகம் வெச்சு விஷ் பண்ற..” என்றதும் அஜய் மெளனமாகப் புன்னகைத்தான்.
ரேணு பெரிய இடத்தின் பெண் என்றாலும் நட்பிற்குள் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை. அஜயும் அவளை போலதான் என்பதால் பல விஷயத்தில் இருவரின் குணங்களும் ஒத்து போனாலும், சில விஷயங்கள் முரணாக அமைவதுண்டு.
அதை இருவரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவளுக்கு கோபம் வந்தால் அவள் எழுந்து சென்றுவிடுவாள். இவனும் அப்படித்தான். கோபம் குறைந்ததும் இருவரும் இயல்பாக பேசிக்கொள்வார்கள். அவர்களை சமாதானம் செய்யும் வேலை நண்பர்களுக்கு மிச்சம்..
“அதுக்குதான் இந்த ரித்து என்னை அடிக்கடி திட்டுகிற.. ஒரு நாளாவது என்னோட பிறந்தநாளை ஞாபகம் வைத்து விஷ் பண்ணியிருக்கிறாயா என்று கேட்கிற..” காதில் புகைவரும் அளவிற்கு கடுப்புடன் கூறினான்..
அவனின் முகத்தைக் கவனித்த அஜய், “ஒரு தேதியை ஞாபகம் வைத்துக் கொள்வதில் உனக்கு என்னடா அவ்வளவு கஷ்டம்..” என்று விளக்கம் கேட்டு வைத்தான்.
“டேய் என்னடா இப்படி கேட்டுட்ட. வருஷத்தில் எனக்கு நினைவு இருக்கிற ஒரே நாள் அது பிப்ரவரி 14 மட்டும்தான். மற்ற எந்தநாளும் மனசில் பதியவே மாட்டேங்கிறது..” என்றவன் புலம்பிக்கொண்டே கிளம்பினான்
“திவா உன்னைக் கட்டிக்கிட்டு அவள் என்ன பாடுப்பட போகிறாளோ..” என்றவன் சொல்ல நண்பனை முறைத்தான் திவாகர்..
“ஒரு பிறந்தநாளை ஞாபகம் வெச்சுக்க முடியல. இதில் என்னை நீ முறைக்கிறாயா?” அவனை மிரட்டிய அஜய் பைக் சாவியை எடுத்துக்கொண்டு மாடியிலிருந்து கீழிறங்கினான்..
அஜய்க்கு நேர் எதிர்குணம் படைத்தவன் திவாகர். எப்பொழுதுமே விளையாட்டாக இருப்பான். அதுதான் ரித்து இவனின் பின்னாடி சுத்துவதற்கு ஒரே காரணம். இருவருக்கும் இடையே பெரிய போர்களமே நடந்தாலும் ஒருவரையோருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பது தான் அவர்களின் பிளஸ்.
“திவா சீக்கிரம் கிளம்புடா. மழை வருகின்ற மாதிரி இருக்கு. அதற்குள் திரும்ப வீட்டிற்கு வரணும். இந்த கீழ்வீட்டு அக்கா கேட்டை பூட்டுட்டுப் போய் படுத்துவிடுவாங்க..” என்று வாசலில் நின்று குரல்கொடுத்தான்.
“நான் கிளம்பிட்டேன்..” என்று கதவை பூட்டிவிட்டு இரண்டு இரண்டு படியாக தாவி இறங்கினான் திவாகர்.
“சீக்கிரம் ஏறுடா. மழை வருவதற்குள் வீட்டிற்கு வரணும்..” திவாகர் அவனுடன் பைக்கின் பின்னாடி அமர வண்டியை எடுத்தான் அஜய்.
மறுநாள் ரேணுவிற்கு பிறந்தநாள் என்ற காரணத்தினால் அவளுக்கு சப்ரைஸ் கொடுக்க நினைத்த அஜய், அவளுக்காக ஒரு கேக்கை இரண்டு நாட்களுக்கு முன்னரே ஆர்டர் கொடுத்திருந்தான். அந்த கேக்கை வாங்குவதற்காக திவாகரை அழைத்துக்கொண்டு அங்கிருக்கும் கேக் ஷாப் சென்றனர்
பில் கட்டிவிட்டு ,ஆடார் கொடுத்த கேக்கை வாங்கிகொண்டு இருவரும் கேக் ஷாப்விட்டு வெளியே வர, “அஜய் மழை வர மாதிரி இருக்குடா..” வானம் தூறல் போட தொடங்கியது..
“மழை வருவதற்குள் வீட்டிற்கு போய்விடலாம் திவா..” பைக்கை எடுக்க சென்றான் அஜய்.
அவர்கள் பஸ் விட்டு இறங்கும் முன்னரே மழை வரும் என்று உணர்ந்த பாரதி, “பிரவீன் நீங்க ஸ்டாப்பில் இறங்கி அங்கிருக்கும் நிழல்குடைக்குள் நில்லுங்க.. நான் போய் கார் எடுத்துவிட்டு வருகிறேன்..” பஸ் நின்றதும் இறங்கினான்..
பிரவீன் நிழல்குடைக்குள் நுழைந்த மறுநொடியே மழை பொழிய தொடங்கியது. “அம்மா மழை வருது..” என்று மூவரும் நிழல்குடைக்குள் நுழையவே, அவளையும் அறியாமல் நிலாவின் விழிகள் பாரதியைத் தேடியது..
கண்ணுக்கு எட்டும் தூரம் வரை அவனைக் காணாமல் அவளின் உள்ளம் தவித்திட, ‘இந்த மழையில் எங்கே போயிருப்பான்..’ என்ற கேள்வி எழுந்தது.
“பிரவீன் பாரதி எங்கே?” என்று கேட்டார்.
“அண்ணா கார் எடுக்க வீடு வரை போயிருக்கான் சுமிம்மா..” என்று அவருக்கு பதில் கொடுத்தவன் மழையை வேடிக்கை பார்த்தான்..
“இந்த மழையில் கார் எடுக்க வீடு வரை போகணுமா?” என்ற சுமிம்மா நிலாவின் பக்கம் திரும்பி, “நிலா நீ மழையில் நனைந்துவிட்டாயா?” என்று கேட்க இல்லையென தலையசைத்தாள்
‘கொட்டும் மழையில் நனைந்து கொண்டே வீடு போகணும் என்ற வேண்டுதலா?’ என்று மனதிற்குள் அவனை வறுத்தெடுத்தாள். அதுவரை அவனின் மீது வராத அக்கரை இன்று ஏன் வந்தது என்று அவள் ஆராயவில்லை. அவளின் மனம் அவளுக்கே தெரியாமல் அவனிடம் பறிப்போனது. அவளின் மனம் புரிந்திருந்தால் அவனைவிட்டு விலகி செல்ல நினைத்திருப்பாளோ?
அவனை திட்டுவதை அவள் குறியாக வைத்திருந்த நிலா சுமிம்மா தன்னை கவனிப்பதை உணராமல் நின்றிருந்தாள். ‘யாரை மனசுக்குள் வறுத்தெடுக்கிறா..’ கேள்வியுடன் திரும்பிய சுமிம்மா சாலையைப் பார்த்தார்.
அதன் அருகிலிருந்த கேக் ஷாப்பில் திவாகர் போனில் பேசியபடி நின்றிருப்பதைக் கண்டவர், ‘இவன் என்ன இங்கே நிற்கிறான்..’ அவரின் பார்வை அவனை சுற்றி வந்தது. அஜய் மழையில் நனைந்தவண்ணம் பைக்கை தள்ளிக்கொண்டு வருவதைக் கவனித்தவரின் உதட்டில் புன்னகை மலர்ந்தது.
அவனின் பின்னோடு வேகமாக வருவதைப் பார்த்தவர், ”அஜய் பின்னாடி பாருப்பா..” என்று கத்திய சுமிம்மா அவனை நோக்கி ஓடினார். ஆனால் அவரின் குரலை அவன் கவனிக்கவில்லை. அவர் அதிகமாக மழையில் நனையவில்லை என்றாலும் அவரின் கவனம் முழுவதும் அவனின் மீதே இருந்தது.
அவரின் குரல்கேட்டு திரும்பிய ரித்திகா, “அம்மா எங்கே போறாங்க..” என்று கேட்க, “அதுதான் தெரியல..” என்ற நிலாவும் அவரின் பின்னோடு ஓடினாள்..
“சுமிம்மா எங்கே போறீங்க..” அவள் அவரைப் பின்தொடர்ந்திட, “ரித்து அம்மா அஜய் என்று கத்திட்டே ஓடுறாங்க.. அது நம்ம அஜயாக இருக்குமோ..” என்றவன் சொல்ல அவளுக்கு திக்கென்றது..
“வா நம்ம போய் பார்க்கலாம்..” என்ற இருவரும் கேக் ஷாப் நோக்கி ஓட சுமிம்மாவின் குரல்கேட்டு அஜய் திரும்பிப் பார்த்தான்..
“அஜய் பின்னாடி..” என்று சுமிம்மா தன்னால் முடிந்தவரை வேகமாக கத்தினார்.
அம்மா என்னிடம் பேசிட்டாங்க என்ற சந்தோஷத்தில் அவரையே பார்த்துக் கொண்டே நின்றிருந்தான். அதற்குள் அந்த லாரி அவனை கடந்து செல்ல, “ஐயோ அஜய்..” என்று தன்னையும் மீறி அலறிவிட்டார் சுமிம்மா.
அந்த லாரி அவனை உரசியபடி சென்றதில் எதிர்பார்க்காத நேரத்தால் பேலன்ஸ் இல்லாமல் தரையில் சரிந்தான் அஜய். சுமிம்மாவின் குரல்கேட்டு திரும்பிய திவாகர் அஜய் வண்டியுடன் கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்தும், “அஜய்..” என்று அவனின் அருகில் ஓடினான்.
கண்ணிமைக்கும் நொடியில் நடந்த சம்பவம் எல்லோரின் இதயத்தையும் உலுக்கியது. கீழே விழுந்த வேகத்தில் அவனின் நெற்றியில் பலமாக காயம் ஏற்பட, “ஸ்ஸ்..” என்றவன் எழுவதற்கு முயற்சித்தான்.
அவனை தூக்கிவிட்ட திவாகர், “ பைக்கை தூக்கி ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு அஜயின் பக்கம் திரும்பி, “அஜய் உனக்கு ஒன்றும் இல்லையே..” என்று பதட்டத்துடன் கேட்க அவனின் பார்வையோ சுமிம்மாவைத் தேடியது.
அந்த லாரி அவனை மோதிவிட்டது என்று அவரின் மனம் முழுவதுமாக நம்பிட அவர் மனதளவில் கொஞ்சம் தளர்ந்தார். அவனின் அருகில் சென்ற பார்வையால் அவனை ஆராய்ந்தார்.
நெற்றியில் மட்டும் காயத்துடன் நின்ற அஜயைப் பார்த்தும் தான் அவருக்குப் போன உயிர் திரும்ப வந்தது.
“அஜய் உனக்கு அடியில்லையே.. அந்த லாரி உன்மேல் மோதிவிட்டது என்றே நினைத்தேன்ப்பா..” என்றவரை அஜய் இமைக்காமல் பார்த்தான்.
அவரின் கண்களில் அவரையும் மீறி கலங்கியிருக்க அவர் தனக்காக துடித்த துடிப்பின் வழியாக தாய்மையை உணர்ந்தவனின் விழியோரமும் நீர் கசிந்தது.
“நெற்றியில் ரத்தம் ஒழுகுது அண்ணா. வாங்க நம்ம ஹாஸ்பிட்டல் போலாம்..” என்று தன்னுடைய கர்சீப்பால் அவனின் நெற்றியில் வழிந்த இரத்தைத்தை பாசத்துடன் துடைத்துவிட்டாள் நிலா. அவளின் இந்த அக்கரைக்கூட அவனின் மனதைத்தொட்டது.
பிறந்ததிலிருந்து தனிமையில் வளர்ந்தவனுக்கு இப்பொழுது நடந்த விபத்தின் மூலம் ஒரு அன்னையும், ஒரு தங்கையும் பரிசாக கிடைத்ததை நினைத்து இறைவனுக்கு நன்றி சொன்னான்.
அஜய் நெற்றியில் ரத்தம் சொட்ட நிற்பதைப் பார்த்தும், “அஜய் என்னடா அடிபட்டுவிட்டதா..” என்று பதறிவிட்டனர் பிரவீனும், ரித்திகாவும்.
“ரத்தம் இவ்வளவு வருதே காயம் ரொம்ப வலிக்கிறதா கண்ணா..” என்று பாசத்துடன் கேட்டார் சுமிம்மா. அவன் எந்தகேள்விக்கும் பதில் சொல்லாமல் சுமிம்மாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அதற்குள் அங்கே கும்பல் கூடிவிட தன்னுடைய காரை ஓரமாக நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்த பாரதி சுமிம்மா பதட்டத்துடன் நிற்பதை கண்டதும் அவர்களின் அருகில் சென்றான்.
“சுமிம்மா..” என்ற பாரதியின் குரலில் உணர்வு பெற்றவர், “பாரதி வாப்பா.. இங்கே பாரு அஜய்க்கு தலையில் நல்லா அடிபட்டுவிட்டது.. இவனுக்கு டிரீட்மெண்ட் கொடுக்கணும்..” என்றார்.
எல்லோரும் ஒருவகை அதிர்ச்சியுடன் நிற்பதைக் கவனித்த பாரதியோ, “அஜய் நீ காரின் முன்னாடி ஸீட்டில் போய் ஏறு. நிலா, ரித்து, சுமிம்மா நீங்க மூவரும் காரின் பின்னாடி ஸீட்டில் உட்காருங்க..” என்றவன் தம்பியின் பக்கம் திரும்பினான்..
“பிரவீன் நீயும், திவாகரும் பைக்கில் வீட்டிற்கு வாங்க..” என்றவன் அதட்டல் போட மற்றவர்கள் மறுப்பு சொல்லாமல் அவனின் பேச்சைக்கேட்டு காரில் ஏறியாதும் காரை எடுத்தான்.
பாரதி அவனின் வீட்டிற்கு அவர்களை அழைத்துச்செல்ல அவர்களை பின் தொடர்ந்து பைக்கில் வீடு வந்து சேர்ந்தனர் திவாகரும், பிரவீனும்..
எல்லோரும் காரைவிட்டு இறங்கி வீட்டிற்குள் நுழைய அஜய்க்கு உடனே ட்ரீட்மெண்ட் செய்ய வேண்டும் என்பதால், “நிலா நீ போய் கையை வாஷ் பண்ணிட்டு சுடுதண்ணீர் வைத்து எடுத்துட்டு வா..” என்று சமையலறையை நோக்கி கைகாட்டினான்..
அஜய் நலனை மனதில் கொண்ட நிலா வேகமாக செல்ல, “சுமிம்மா அஜயை சோபாவில் உட்கார வைங்க..” இரண்டு இரண்டு படிகளாகத் தாவி மாடியிலிருக்கும் தன்னுடைய அறைக்குச் சென்றான்.
“அஜய் ரொம்ப வலிக்கிறதா?” என்று அவனின் அருகில் அமரவே, அவரின் பாசம்கண்டு இல்லையென தலையசைத்தான். அவன் கீழே வருவதற்குள் சுடுதண்ணீர் வைத்து எடுத்து வந்தாள் நிலா.
அடுத்த சிலநொடியில் எல்லோரையும் மின்னல் வேகத்தில் வேலை வாங்கிய பாரதி அஜய்க்கு கட்டுப்போட்டு முடித்தவன், “அஜய் நைட் டபிலேட் போடணும். இரண்டு நாள் வலியிருக்கும். காயத்தை தண்ணீரில் படாமல் பார்த்துக்கோ..” என்று கூறவே, திவாகர், பிரவீன் மாடிப்படிகளில் அமர்ந்தனர்.
நிலாவும் ரித்திகாவும் சமையலறைக்கு செல்லும் படிக்கட்டில் அமர்ந்தனர். புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது வீடு.
பாரதி தலையைக்கூட துவட்டாமல் அமர்ந்திருப்பதைக் கண்ட சுமிம்மா, “டேய் மழையில் நனைந்துகொண்டே கார் எடுக்க போனாயே. தலையை துவட்டாமல் நாளைக்கு சளிபிடிக்க போகிறது பார்..” என்று அவனையும் மிரட்டினார்.
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது அம்மா..” என்றான் பாரதி சோபாவில் அமர்ந்தவண்ணம்..
“ரித்து தாத்தா சாப்பிடாமல் உனக்காக வீட்டில் காத்துகொண்டிருப்பர். அதனால் நீ தாத்தாவிற்கு அழைத்து விவரம் சொல்லு..” என்று அவளுக்கு நினைவு படுத்தினார்.
ரித்து தாத்தாவிற்கு அழைத்து விவரம் சொல்ல, “சுமிம்மா அங்கே இருக்கிறாங்க இல்ல. அப்புறம் எதற்கு கவலை? நீ காலையில் வீட்டிற்கு வா..” என்றவர் போனை வைத்தார்.
யாரும் சாப்பிடாமல் அமர்ந்திருப்பதைக் கவனித்த நிலா எழுந்து சமையலறைக்குள் நுழைந்தாள். அவள் வேகமாக சமையலை முடிக்க அவளுக்கு உதவியாக ரித்திகாவும் இணைந்து கொண்டாள்.
அஜய் சுமிம்மாவை இமைக்காமல் பார்க்க, “என்னப்பா..” என்று பாசத்துடன் அவரின் கன்னம் வருடிட,“நான் உங்களை அம்மா என்று கூப்பிடவா சுமிம்மா..” என்றவன் கண்களில் கண்ணீரோடு கேட்டான்.
“அதுக்கு என்னடா கூப்பிட வேண்டியதுதானே..” என்றவரின் மடியில் படுத்து அழுதுவிட்டான் அஜய்.
அதே கேள்வியை அங்கிருந்த பாரதி மற்றும் பிரவீன் மனதிலும் இருந்தது. அவனை தலையை வருடிவிட்ட சுமிம்மா சுற்றி இருந்த பிள்ளைகள் முகம் பார்த்தார்.
“சின்ன கண்ணா செல்ல கண்ணா சொந்தம் என்ன சொந்தம்
ஏழு ஜென்மம் போன பின்னும் வாழும் இந்த பந்தம்
தாய் மடியில் ஒய்வு எடுக்கும் காலம் நிம்மதி
தலையெடுத்து வளர்ந்துவிட்டால் இன்பம் துன்பம் பாதி..” என்றவரின் குரலில் அந்த பாடல் இனிமையாக ஒலித்தது.
அதேநேரம் சமையலை முடித்துவிட்டு வெளியே வந்தனர் நிலாவும், ரித்திகாவும். அந்த பாடல் வழியாக அவரின் பாசம் வெளிப்பட்டது..
மற்ற மூவரின் கண்களிலும் ஏக்கத்தைக் கவனித்தவர், “வா..” என்று அழைத்ததும் எழுந்த பாரதி அவரின் இடதுபக்கம் அமர்ந்தான். திவாகரும், பிரவீனும் தரையில் அமர்ந்து அவரின் மடியில் தலைவைத்துக் கொண்டனர்.
“மார்பணைக்கும் மூத்த பிள்ளை நீயும் பிள்ளைதான்
மணிவயிற்றில் சுமக்கவில்லை நானுன் அன்னைதான்
இனி ஒருநாள் ஈன்றேடுப்பேன் நானுன் அன்னையாவேன்
இல்லையென்றால் பிறந்திருப்பேன் நானுன் பிள்ளையாவேன்” என்றவரின் பின்னோடு வந்து அவரின் கழுத்தைக் கட்டிக்கொண்டனர் பெண்கள் இருவரும்..
“மானம் ஒன்றே வாழ்க்கை என்றே மண்ணையாளவா..
வீரம் ஒன்றே வேதம் என்றே விண்ணைச்சாடிவா..
யார் மகன் நீ என்பதைத்தான் ஊரும் சொல்ல வேண்டும்..
பிறந்த உடல் மறைந்த பின்னும் பெரும் சொல்ல வேண்டும்..” என்று பாடியவரின் உண்மையான தாய் பாசத்திற்கு மயங்கியது இளம் உள்ளங்கள்.
அழகான மௌனம் குடிகொள்ள எல்லோரும் சாப்பிட்டுவிட்டு ஹாலில் பேசீட்டை விரித்தவர்கள் அவரைச்சுற்றி படுத்துக்கொள்ள இதுவரை அவர்கள் காணாத உறக்கம் அவர்களின் விழிகளை தழுவியது.
மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது..