அத்தியாயம் – 22
சூரிய வெளிச்சம் ஜன்னலின் வழியாக அறைக்குள் பரவியது. அந்த வெளிச்சம் அவளின் முகத்தில் விழ மெல்ல கண்விழித்த நிலா முதலில் கண்டது தனது கணவனின் முகத்தைத் தான். அவன் அமர்ந்தவண்ணம் உறங்குவதைக் கண்டு குழப்பத்துடன், ‘இவரு எப்போ நம்ம அறைக்கு வந்தார்?’ என்ற சந்தேகத்துடன் எழுந்து அமர்ந்தாள்.
அதற்கு பிறகுதான் நேற்று இரவு நடந்தவை அனைத்தும் நினைவிற்கு வரவே, “பாரதி.. பாரதி..” என்றவளின் குரல்கேட்டு கண்விழித்து அவளின் முகம் பார்த்தான். சூரிய வெளிச்சம் அவளின் முகத்தில் விழ அவளின் முகம் தங்க தாமரை போல ஜொலித்தது..
அடுத்த சிலநொடியில் அவளை அருகிழுத்து பாரதி அவளின் இதழில் முத்தமிட்ட திகைத்து விழித்தாள் நிலா. அவள் விழிகள் விரிய அவனை பார்க்க, “குட் மார்னிங் கலை..” என்றவன் புன்னகைத்தான்..
“குட் மார்னிங்..” என்றவள் அவனைவிட்டு விலகி எழுந்தாள். அவன் கட்டிலின் விளிம்பில் தலைவைத்து உறக்கத்தை தொடரவே, “பாரதி பாய் படுத்து தூங்குங்க..” என்று அவனை அத்ட்டிட, “ம்ம் சரி..” என்றவன் தன்னுடைய தூக்கத்தைத் தொடர்ந்தான்.
அவன் பாயில் படுக்க சொன்னவள் மணியைப் பார்த்துவிட்டு, ‘இன்னைக்கு கீழே போன பெரிய ரகளையே நடக்க போகுது..’ என்று மனதில் நினைத்தவள் குளியலறைக்குள் புகுந்தாள்.
கொஞ்சநேரத்தில் அவள் தயாராகி கீழிறங்கி வர ஹாலில் போர்வையில் முக்காடு போட்டு அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தவளுக்கு அதிர்ந்தாள்..
“ஏன் எல்லோரும் தூங்காமல் இங்கே வந்து உட்கார்ந்திருக்கீங்க?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் நிலா.
“சிவபூஜையில் கரடி நுழைய கூடாது இல்ல.. அதன் இந்த கோலத்தில் உட்கார்ந்திருக்கோம்..” என்றாள் ரேணு சுமிம்மாவைப் பார்த்தபடி..
அவளின் குரல்கேட்டு கண்ணை விழித்து பார்த்த ரித்து, “உனக்கு விடிய விடிய சிவாராத்திரி.. நாங்க எல்லாம் சேர்ந்து நவராத்திரி கொண்டாடினோமா அதன் விடிந்து தூங்கிட்டு இருக்கோம்..” அவளை குழப்பிவிட்டு மீண்டும் திரும்பிப் படுத்து தூங்க தொடங்கினாள்.
ரேணுவோ நிலாவின் விழிகள் சிவந்திருப்பதைக் கண்டு விசில் அடிக்க, “அக்கா நானே இங்க என்ன நடக்குதுன்னு புரியாமல் நிற்கிறேன்.. நீங்க என்னை கமெண்ட் அடிக்கிறீங்க..” என்றவள் பார்வை சுமிம்மாவின் பக்கம் திரும்பியது..
“அம்மா ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க..” என்ற கேள்வியுடன் அவரின் அருகில் அமர்ந்தாள்.
அவளின் குரல்கேட்டு அவரின் சிந்தனை கலந்துவிட, “நிலா எனக்கு மனசே சரியில்ல..” என்றவர் அவளின் மடியில் தலைவைத்து படுத்தார். அவள் இதமாக அவரின் தலையை வருடிக்கொடுக்க அதுவரை அவரின் கண்களைத் தழுவாத தூக்கம் இப்பொழுது அவரைத் தழுவியது..
அவர் நிம்மதியாக உறங்கிட மற்றவர்களும் அவரோடு சேர்ந்து சிறிதுநேரம் நித்திரையில் ஆழ்ந்தனர். அவர் தூக்கம் கலந்து கண்விழித்து நிலாவின் முகம் பார்த்தார்.
அந்த சிலமணிநேரத்தில் அவரின் மனதில் ஒரு தெளிவு பிறக்க, “எனக்கு டீ கொடுக்கிறாயா நிலா..” என்றவர் மீண்டும் சிந்தனையில் மூழ்கினார். அவள் சமையலறைக்கு சென்று அனைவருக்கும் சேர்ந்து காபி போட்டு எடுத்து வந்தாள்.
அப்பொழுது மாடியிலிருந்து கீழிறங்கி வந்த பாரதி, “என்ன நிலா எல்லோரும் ஹாலில் தூங்கிட்டு இருக்காங்க..” என்றவன் புரியாமல் கேட்க அவனிடம் ஒரு காபி கப்பை நீட்டிய நிலா, “எனக்கு அது தான் ஒண்ணுமே புரியலங்க..” என்றாள்.
அவன் சோபாவில் சுமிம்மாவின் அருகில் அமர, “எல்லோரும் எழுந்திருங்க.. விடிந்து பத்து மணி ஆகியும் இன்னும் என்ன தூக்கம்..” என்று அவர்களை எழுப்பிவிட்டாள் நிலா.
அவளின் குரல்கேட்டு மற்றவர்கள் மெல்ல எழுந்து அமர, “பிரவீன் என்ன நடந்தது? நைட் நீங்க யாரும் தூங்கவே இல்லையா?” என்று சந்தேகமாக இழுத்த பாரதி காபியைப் பருகினான்..
நிலா அனைவருக்கும் காபியைக் கொடுக்கவே, “இந்த காமெடியை நீயே கேளு அண்ணா..” என்ற பிரவீன் நேற்று இரவு நடந்த விஷயத்தை அவனிடம் கூறினான்..
“இத்தனை விஷயம் நடந்ததா?” என்று நிலா வியப்புடன் சுமிம்மாவைப் பார்த்தாள். அவளைப் பொறுத்தவரை சுமிம்மா எதற்கும் பயப்படவே மாட்டாங்க. ஆனால் இன்று எல்லாம் தலைகீழாக நடக்கவே, “ஏன் சுமிம்மா ஒரு மாதிரி இருக்கீங்க..?” என்று கேட்டான் பாரதி..
“பாரதி நான் கண்ட கனவு பலிக்குமா?” என்று பாவமாக கேட்ட சுமிம்மா நேற்று இரவு கண்ட கனவைப் பற்றி தெளிவாக கூறினார்.
அவரின் மனதிலிருந்த பயத்தை உணர்த்த பாரதி, “சுமிம்மா ஜெஸ்ட் ரிலாக்ஸ்.. அவங்க வந்தால் என்ன? நீங்க ஏன் இப்படி பயப்படுறீங்க..” என்று அவரை இயல்பிற்கு கொண்டு வர முயற்சித்தான்..
“உனக்கு அவங்களைப் பற்றி தெரியாது பாரதி.. அவங்க வந்தா என்னை கூட்டிட்டு போயிருவாங்க..” என்றார் சிந்தனையுடன்..
“அவங்க வந்து கூட்டிட்டு போக நாங்க விடுவோமா? எங்க சுமிம்மாவை நாங்க அனுப்ப மாட்டோம் என்று சொல்லிருவோம்..” என்ற நிலா அவரின் அருகில் அமர்ந்து சுமிம்மாவை ஆறுதல்படுத்தினாள். அவள் சொல்லும் விஷயத்தை அவரின் மனம் ஏற்க மறுத்தது.
அஜய், பிரவீன், திவாகர் மூவரும் அவரை எப்படி இயல்பிற்கு கொண்டு வருவது என்று புரியாமல் விழி பிதுக்கி அமர்ந்திருக்க, பெண்கள் மூவரும் சிந்தனையுடன் அவரையே பார்த்தனர்.
அவரின் பயம் அவர்களுக்கு புரியவே செய்தது. அவரின் பிள்ளைகள் வந்து அழைத்தால் அவரை அனுப்ப முடியாது என்று சொல்ல அவர்கள் யாருக்கும் உரிமை இல்லை.. ஆனால் சுமிம்மா ஏன் வீட்டைவிட்டு வந்தாங்க என்று புரியாமல் சிறியவர்கள் குழம்பினர்.
“சுமிம்மா உங்களை நாங்க அவங்க கூட அனுப்ப மாட்டோம்.. நீங்க இயல்பாக இருங்க.. அது வெறும் கனவுதான்..” என்றனர் அஜயும், திவாகரும்!
“நிஜமாவே என்னை அவங்களோட அனுப்ப மாட்டீங்க இல்ல..” என்றவர் தீவிரமாக கேட்க, “தீவிரவாதியைப் பார்ப்பது போல பார்க்கிறாங்க பாரு..” என்று பிரவீன் அஜயிடம் சொல்ல அது சுமிம்மாவின் காதில் தெளிவாக விழுந்தது..
“நான்அப்படியா உன்னைப் பார்த்தேன்..” என்றவர் அவனின் முதுகில் ஒரு அடிபோட, “ஹப்பா எங்க சுமிம்மா ரிட்டன் வந்துட்டாங்க..” என்ற திவாகரும் ரித்துவும் வாய்விட்டு சிரித்தனர்.
வீடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிட வீட்டின் பொறுப்புகளை தன கையில் எடுத்துகொண்டாள் நிலா. பாரதிக்கு ஈடான அன்பை அவளும் பிரவீனின் மீது செலுத்த தொடங்கினாள். அவளின் செயல்களால் சுமிம்மாவின் பாரம் கொஞ்சம் குறைந்தது.. நாட்கள் இயல்பாக நகர்ந்தது..
சுமிம்மா நித்தமும் சிந்தனையுடன் இருப்பதைக் கண்டு சிறியவர்கள் மனதில் பாரம் ஏறியது.. எந்த நேரமும் சிரிப்பு சத்தத்துடன் இருக்கும் வீடு இப்பொழுது மயான அமைதி ஆக்கிரமித்தது.
அன்று மாலை பொழுது எல்லோரும் வீட்டில் இருக்க சுமிம்மா மட்டும் அவரின் அறையில் எதையோ எடுத்து வைத்துகொண்டு விட்டத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
தன்னுடைய துணிகளை எடுத்து வைக்கும் பொழுது நித்தியின் புகைபடம் கீழே விழுந்தது. அவளின் முகம் பார்த்த சுமிம்மா தன்னுடைய வேலையைவிட்டு படுக்கையில் அமர்ந்துவிட்டார்.
கன்னியாகுமரியிலிருந்து வந்து ஐந்து வருடம் ஆகிவிட்டது.. அவங்க இருவரும் என்ன பண்ணிட்டு இருப்பாங்க.. மாலதி இப்போ எப்படி இருப்பாளோ.. அவங்களுக்கு எல்லாம் குழந்தை பிறந்திருக்குமா? என்று ஆயிரம் சிந்தனையில் உழன்றது அவரின் மனம்..
“சுமிம்மா என்ன பண்றீங்க..” என்ற கேள்வியுடன் பாரதி அவரின் அறைக்குள் நுழைய, அவனின் பின்னோடு அஜய், பிரவீன், திவாகர், நிலா, ரேணு, ரித்து எல்லோரும் அறைக்குள் நுழைந்தனர்.
“துணி மடிச்சிட்டு இருந்தேன் பாரதி..” என்றவர் உள்ளே நுழைந்த பட்டாளத்தைப் பார்த்துவிட்டு, “வானர படையுடன் வந்திருக்கிற பாரதி..” என்றவர் மகளின் போட்டோவை மறைத்து எடுத்து வைக்க, “சுமிம்மா அது என்ன ஆல்பமா?” என்று அவரிடம் கேட்டு வாங்கினான் பிரவீன்.
“ஆமாண்டா.. இந்த பாரு..” என்றவர் பிரவீனின் கையில் ஆல்பத்தைக் கொடுத்துவிட்டு வேலையில் கவனத்தைத் திருப்பினார். சுமிம்மா கொடுத்த ஆல்பத்தை எல்லோரும் பார்க்க பாரதி மட்டும் சிந்தனையுடன் அந்த ஆல்பத்தை புரட்டினான்..
“இதெல்லாம் யாரோட போட்டோ சுமிம்மா..” என்றவன் கேட்டுகொண்டே ஆல்பத்தைப் புரட்டவே, “இது என்னோட ஆர்மி.. இவங்க எல்லோரும் என்னோட பிள்ளைகள்..” என்ற சுமிம்மாவின் முகம் மலர்ந்தது..
“சுமிம்மா அஜய் உங்களிடம் பேசணும் என்று வந்தான்..” என்று அவனை மாட்டிவிட்ட பிரவீன் போட்டோ பார்க்கும் பார்ப்பது போல திரும்பிவிட்டான்..
அவர் அவனைக் கேள்வியாக பார்க்க, “சுமிம்மா அப்பா ஊரிலிருந்து போன் பண்ணினார்.. என்னை அங்கேயே வர சொல்கிறார்.. உங்களை இங்கே விட்டுட்டு போக எனக்கு மனசு வரல அம்மா.. நீங்களும் என்னோடு நெதர்லாந்து வரீங்களா..” என்றவனின் கேள்வியில் பாரதிக்கும் நிலாவிற்கும் தூக்கிவாரிப் போட்டது..
“டேய் என்னடா சொல்ற..” என்று பாரதி ஒருபக்கம் பதற சுமிம்மா சிந்தனையில் ஆழ்ந்தார்.
“அண்ணா அம்மா இங்கேதான் இருப்பாங்க.. கல்யாணம் முடிந்தால் கடமை முடிந்ததா? எங்களோட குழந்தை எல்லாம் யாரு வளர்ப்பாங்க.. நீயும் ரேணுவை கல்யாணம் பண்ணிட்டு இங்கேயே இரு..” என்று அவள் அவனுக்கு கட்டளையிட அவள் சொன்ன விஷயத்தை அவள் கவனிக்கவில்லை..
ஆனால் அதை சரியாக கவனித்த திவாகர், “டேய் தங்கச்சி செம உஷாராக இருக்குடா..” என்று கேலியுடன் கூற அஜய் அவளைப் பார்த்து சிரித்தான்..
“என்ன மச்சான் என் தங்கச்சி சொல்றது உண்மையா?” என்று அவர்கள் இருவரும் சேர்ந்து பாரதியை வம்பிற்கு இழுக்க, “ஐயோ அதெல்லாம் இல்லடா..” என்று அவர்களை கையெடுத்துக் கும்பிட்டான்..
“சுமிம்மா..” என்று பிரவீன் அவரின் கையை சுரண்ட அவனின் பார்வை அந்த ஆல்பத்தில் இருந்தது.. கிட்டதட்ட ஐந்து வருங்களுக்கு பிறகு தன்னவளின் முகத்தைப் பார்த்தவன் மெய்மறந்து அமர்ந்திருந்தான்..
‘சிவசங்கரி..’ அவளின் பெயரை உச்சரித்த பிரவீன் அவளின் அருகில் நின்ற சுமிம்மாப் பார்த்ததும், ‘இவங்க அன்று ரயிலில் வந்தாங்க இல்ல.. இவங்களோட முகத்தையே மறந்துட்டேன்..’ என்று நினைத்தான்..
“சுமிம்மா நீங்க என்ன சொல்றீங்க..” என்று பாரதி அவரிடம் கேட்க சிறிதுநேரம் சிந்தனைக்கு பிறகு அவரின் பார்வை பிரவீனின் மீதும, ரித்துவின் மீது திரும்பியது..
இரு பிள்ளைகளும் தாய், தகப்பன் இல்லாத பிள்ளைகள். அதனால் அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை அமைத்து தராமல் இங்கிருந்து செல்லக்கூடாது என்ற முடிவுடன் நிமிர்ந்த சுமிம்மா, “இல்லடா கண்ணா..” என்றவர் தொடங்கினார்..
“சுமிம்மா..” என்று பிரவீன் அவரின் கைகளை சுரண்ட, “டேய் உனக்கு என்னடா பிரச்சனை..” என்று கேட்டவர் அவனை முறைக்க, “இதில் இருக்கிறவங்க எல்லோரும் யாரு சுமிம்மா..” என்றான் பிரவீன்..
“என்னோட பிள்ளைகள் தாண்டா..” என்றார் அவர்..
“அப்போ நாங்க யாரு..” என்று கோரசாக மற்றவர்கள் கேட்க,
“நீங்களும் என்னோட பிள்ளைகள் தான்..” என்றவர் அவர்களை விட்டுகொடுக்காமல் கூறினார்.
“நல்லாவே சமாளிக்கிறீங்க சுமிம்மா..” என்றாள் ரித்து புன்னகையுடன்..
அதன்பிறகு பாரதியும், அஜயும் அவரின் முடிவைக் கேட்க, “பிரவீன் திருமணம் முடிந்த பிறகு நான் அங்கே வரேன் அஜய்..” என்றார்..
அவர்களுக்கும் அது சரியென்று தோன்றவே, “சரி சுமிம்மா.. நம்ம எல்லோரும் ஊருக்குப் போலாம்.. அங்கே இருக்கிற சொத்துகளை பொறுப்பான ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு வரலாம்..” என்ற அஜய் அவனின் முடிவை கூற அனைவரும் அதற்கு ஒப்புக் கொண்டனர்..
அதன்பிறகு அவரின் பெட்டியில் இன்னும் சில பொருள்கள் இருந்தது.. பட்டம், பம்பரம், பாவாடை சட்டை, சுடிதார், ஒரு அழகான கேப் மற்றும் ஒரு பட்டுபுடவை என்று அனைத்து பொருட்களுடன் சேர்ந்து ஒரு போட்டோவும் இருந்தது..
அந்த போட்டோவில் இருந்த இருவரையும் அங்கிருந்த யாருக்குமே அடையாளம் தெரியாமல் போக ரித்துதான் பாவாடை சட்டையை எடுத்து கையில் வைத்தவள்,“சுமிம்மா இது யாரோடது?” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.
“அது நம்ம சுமிம்மாவோடது ரித்து.. இங்கே பாரு பாவாடை சட்டையில் நம்ம சுமிம்மாவை..” என்று பாரதி ஒரு போட்டோவை அவளிடம் கொடுத்தான் பிரவீன்..
“என்னது சுமிம்மா பாவாடை, சட்டையில் இருக்காங்களா?” என்று எல்லோரின் கைக்கும் இடமாறியது அந்த போட்டோ.
நிலா சுவாரசியமாக அதிலிருந்த பம்பரத்தை எடுத்து, “இது யார் விளையாட சுமிம்மா..” என்று குறும்புடன் கேட்டாள்..
அஜய் ஒரு படிமேலே சென்று, “சுமிம்மா நான் வாங்கிய பட்டத்தைவிட மாட்டி வைக்க வீட்டில் இடமிருக்கு.. ஆனால் இந்த பட்டத்தை காற்றில் விடத்தான் இடமில்ல..” என்றவன் சோகமாக கூறினான்..
“அது என்னவோ உண்மைதாண்டா கண்ணா..” என்றார் சுமிம்மா புன்னகையுடன்.. அந்த ஆல்பத்தை புரட்டிய பாரதி தான் அந்த கேள்வியைக் கேட்டான்..
“சுமிம்மா இதில் யாரு உங்களோட பொண்ணும், பையனும்?” என்று கேட்க மற்றவர்கள் திகைப்புடன் அவனைக் கேள்வியாக நோக்கவே, “என்னண்ணா கேள்வி இது..” என்று தமையனை முறைத்தான் பிரவீன்..
“டேய் இவங்க எல்லோரும் டூர் போன மாதிரி இருக்கு.. இதிலிருக்கும் எல்லோரும் சுமிம்மாவோட பிள்ளைகள் இல்ல..” என்று பாரதி சொல்ல அவனை மேச்சுதலாக பார்த்த சுமிம்மா, “சூப்பர் பாரதி..” என்றார்..
“அப்போ இவங்க எல்லாம் யாரு.. அப்போ கேட்டப்போ பிள்ளைகள் என்று சொன்னீங்க..” என்று ரேணு புரியாமல் கேள்வி கேட்க அவளின் தலையை பாசத்துடன் வருடினார் சுமிம்மா..
“எல்லாமே என்னோட பிள்ளைகள் தான். இதெல்லாம் நாங்க எல்லோரும் வீட்டைவிட்டு ஓடிப்போன பொழுது சேகரித்தது.. என்னோட இனிமையான நாட்கள்..” என்றவரின் அகமும் முகமும் ஒருங்கே மலர்ந்தது..
“என்னது வீட்டைவிட்டு ஓடிப்போன பொழுதா?” என்று நிலா சந்தேகமாக அவரைப் பார்க்க, “இந்த ஆல்பத்தில் இருக்கும் பிள்ளைகள் எல்லாருமே ஒவ்வொரு காரணத்தினால் வீட்டைவிட்டு ஓடிவந்தவங்கதான்..” என்றவர் அந்த ஒருவார நிகழ்வை அவரிடம் பகிர்ந்தார்.
சுவாரசியமாக கதைகேட்டவர்கள், “வீட்டைவிட்டு ஏன் சுமிம்மா வந்தீங்க..” என்று கேட்க, “ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் அவங்களோட வாழ்க்கையை அவங்களே சமாளிக்க வேண்டும் என்றுதான் வந்தேன்..” என்றார் சுமிம்மா..
அவர் பேசிகொண்டிருக்கும் பொழுது பிரவீன் அவரின் கையை சுரண்ட, “என்னடா..” என்றவர் எரிச்சலோடு கேட்க, “சுமிம்மா நான் சொன்ன சங்கரி இவள்தான்.. வாங்க இவளோட வீட்டில் போய் பொண்ணு கேட்கலாம்..” என்று அசராமல் குண்டைத் தூக்கி சுமிம்மாவின் தலையில் போட்டான்..
அவர் அதிர்ந்து விழிக்க, “நீ சொன்ன பொண்ணு இவளா?” என்ற ஆர்வத்துடன் அவனின் கையிலிருந்த ஆல்பத்தை வாங்கி போட்டோவைப் பார்த்தான் பாரதி.. அதன்பிறகு சங்கரியின் புகைப்படம் மற்றவர்கள் கைக்கு இடமாறியது..
“எதுவாக இருந்தாலும் நெதர்லாந்து போயிட்டு வந்த பிறகு பேசிக்கலாம்..” என்ற சுமிம்மா தன்னுடைய கவனத்தை திசை திருப்பினார். அவரின் பேச்சிற்கு எல்லோரும் சரியென்றுவிட மறுநாள் ஷப்பிங் சென்றனர். சுமிம்மா எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடந்தது..