MMV – 25, 26

MMV – 25, 26

அத்தியாயம் – 25

சுமிம்மாவின் பட்டாளமே ஆம்ஸ்டர்டாம் ஏர்போர்டில் இறங்கியது. அஜயின் தந்தை நாதன் அவர்களை வரவேற்க வந்திருந்தார். “வாங்க பயணம் எல்லாம் எப்படிப்பா இருந்தது..” புன்னகையுடன் கேட்டபடி அவர்களின் அருகில் வந்தார்.

“பயணத்தில் எந்த குறையும் இல்லங்க..” மற்றவர்களை முந்திக்கொண்டு பதில் கொடுத்தார் சுமிம்மா.

“நம்மலவிட சுமிம்மா தான் ரொம்ப ஹாப்பி ஆ இருக்காங்க..” என்று பாரதியிடம் அவள் முணுமுணுக்க, “அவங்க சந்தோஷமாக இருந்த அதே போதும் நிலா..” என்றான் பாரதி..

“அப்பா..” என்று அஜய் அவரைக் கட்டிக்கொண்டான்.

“எப்படிப்பா இருக்கிற..” என்றவர் அவனை தோளோடு கைபோட்டு அணைத்துக் கொண்டவர்,

“இந்தியா போறேன்னு சொல்லிட்டு போயிட்டு இப்படி கல்யாணம் பண்ணிட்டு வந்து நிற்கிற..” என்று அவனுடன் வம்பு வளர்த்தார். தந்தை, மகன் என்ற வேறுபாடு இன்றி பேசுவதைக் கண்டு மற்றவர்களின் முகமும் மலர்ந்தது.

ரேணு அவர்களைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்கவே, “என்ன மருமகளே உன்னை நாடுவிட்டு நாடு கடத்திவிட்டானா?” என்று அவர் அவளை கேலி செய்ய அவள் வெக்கத்துடன் தலை குனிந்தாள்.

“வாங்க நம்ம வீட்டிற்கு போய் பேசலாம்..” என்று அவர்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

அந்த இடமெல்லாம் நிலா பார்த்ததில்லை என்றதாலோ என்னவோ அவளின் பார்வை அங்கும் இங்கும் அலைபாய அவளறியாமல் அவளின் இடையில் கைவைத்து இழுத்து அணைக்க, “ஐயோ என்னங்க..” என்று அவனின் கைகளை விலக்கினாள் நிலா.

“என்னடி இப்போ எதுக்கு இந்த துள்ளு துள்ளுற..” என்றவன் குறும்புடன் கேட்க, “நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க..” அவளின் கன்னங்கள் நொடியில் சிவந்துவிட்டது..

“பின்ன என்ன அதிசயத்தைப் பார்க்கிற மாதிரி பார்க்கிற..” என்றவன் அவளிடம் வம்பு வளர்த்திட, “நான் இங்கெல்லாம் வருவேன்னு கனவில் கூட நினைக்கல..” என்றாள் இயல்பாக.

அவளின் மனமும் அவனுக்கு புரிந்தது. நடுத்தர குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு ஆயிரம் ஆசைகள் இருந்தாலும் அந்த ஆசைகளை அவர்கள் நிறைவேற்றிக் கொள்ள நினைப்பது இல்லை. அதற்க்கான வாய்ப்பு அவர்களுக்கு அமைவதுமில்லை.

“நினைக்காது எல்லாமே நடக்கும் அதுதான் வாழ்க்கை..” என்று கண்சிமிட்டியவன் அவளின் கைகளைக் கோர்த்துக்கொண்டு முன்னே சென்றான்.

ரித்துவும் திவாவும் அவர்களின் உலகத்திற்குள் மூழ்கிவிட, ரேணுவுடன் பேசியபடியே முன்னே நடந்தான் அஜய்..

பிரவீனின் பார்வை அந்த ஏர்போட்டைச் சுற்றிவர எதர்ச்சியாக அவளின் மீது படிந்திட, “நம்ம ஆள் மாதிரி இருக்கே..” என்றவனின் பார்வை அவளின் மீதே நிலைத்தது.

அவன் அந்த இடத்திலேயே நின்றுவிட சுமிம்மா அவனின் பார்வை சென்ற திசையைக் கவனித்துவிட்டு,  “என்னடா உன்னோட ஆளு வந்துட்டா போல..” என்றவர் மெல்லிய குரலில் கூற பிரவீனிற்கு தூக்கிவாரிப்போட்டது..

அவரின் பக்கம் திரும்பிய பிரவீன், “என்ன சுமிம்மா இப்படி குண்டைத்தூக்கி போடுறீங்க..” அவன் அதிர்ச்சியுடன் கேட்டான்.

“நீ எத்தனை குண்டு தூக்கிப்போட்டு இருக்கிற. அம்மா சும்மா சேம்பிள் பார்த்தேன்டா கண்ணா..” என்று அவனைப் பார்த்துக் குறும்புடன் கண்சிமிட்டி சிரித்தார். மற்றவர்கள் முன்னே செல்வதைக் கவனிக்காமல் பிரவீன் அதிர்வுடன் நின்றிருந்தனர்.

“இங்க நின்னு என்ன பண்ண போறோம் வா போலாம்..” என்று அவனின் கைபிடித்து அழைத்துச் சென்றவரின் இழுப்பிற்கு சென்றார் சுமிம்மா.

அவர்கள் வீட்டிற்கு சென்றதும் அவரவர்களுக்கு தனியறையை ஏற்பாடு செய்திருந்த நாதன், “நீங்கெல்லாம் நல்லா குளிச்சிட்டு ரெஸ்ட் எடுங்க..” என்றவர் அவர்களை அனுப்பி வைத்தவர் அவரின் வேலையைக் கவனிக்கச் சென்றார்.

அதன்பிறகு இரவு உணவை முடித்துவிட்டு கொஞ்சம் நேரம் அரட்டை அடிக்க அஜயின் தந்தைதான் முதலில் பேச்சை எடுத்தார்.

“இந்த ஒருவாரம் அவனுக்கு கம்பெனியில் கொஞ்சம் வேலை இருக்கு. அடுத்த வாரம் கம்பெனி வேலை முடிந்தபிறகு நீங்க எல்லோரும் சேர்ந்து ஊரைச் சுற்றிப் பாருங்க..” என்றார்.

அவரின் பேச்சிற்கு மதிப்பு கொடுத்து மற்றவர்கள் அமைதியாக இருக்கவே, “அஜய் முதலில் அவனோட வேலையைக் கவனிக்கட்டும்..” என்றதும் பாரதிக்கு வித்யாவின் நினைவு வந்தது.

“ஸார் என்னோட பெசண்ட் ஒருத்தங்க இங்கே வருவாங்க..” என்றவர் அந்த பெண்ணின் நிலையை எடுத்துச்சொல்ல, “அதனால் என்ன தம்பி. அவங்க வந்தா நான் கண்டிப்பா உன்னை பார்க்க வர சொல்கிறேன்..” என்றார் இயல்பான புன்னகையுடன்.

ரேணு அந்த வீட்டின் மருமகள் என்ற நிலையிலிருந்து அவர்களை எல்லாம் உபசரிக்கவே, “பொண்ணுக்குப் பொறுப்பு வந்துவிட்டது..” என்று ரித்து ரேணுவை கேலி செய்தாள்.

“பிறந்த வீட்டில் இருக்கும் பொழுதுதான் பொண்ணுங்க விளையாட்டாக இருப்பாங்க. ஆனால் போற இடத்தில் அவள் இல்லாமல் ஒரு அணு கூட அசையாது. அந்த வீட்டோட ஆணிவேராக இருந்து கணவன், குடும்பம், குழந்தை என்று அவள் அந்த வீட்டையே சுற்றி வருவாள்..” என்று நிலா ஒரு பெண்ணோட வாழ்க்கையைப் பற்றி கூறினாள்.

மற்றவர்கள் அவள் பேசுவதைப் பொறுமையாக கேட்க, “அவளுக்கு என்று இருக்கும் சில ஆசையைக் கூட அவள் நிறைவேற்ற நினைக்க மாட்டா. ஆன அவளைத்தான் இந்த உலகம் ஆயிரம் பலி சொல்லும்..” என்று அந்த உண்மையை உணர்ந்தவளாக அவள் பேசிக்கொண்டே சென்றாள்.

அவள் பேசுவதை கேட்டுகொண்டே இருந்த நாதன், “நீ சொல்வது உண்மைதான் நிலாம்மா. சின்ன பெண்ணாக இருந்தாலும் வாழ்க்கையைத் தெளிவாக் உணர்ந்து வெச்சிருக்க..” என்றார்.

நிலா கணவனின் முகத்தைப் பார்க்க அவனும் பூரிப்புடன் அவளைப் பார்த்தான். சுமிம்மாவின் சிந்தனை முழுவதும் பிரவீனின் மீதே இருந்தது. தன்னை நம்பி வந்த பிள்ளைகளை எல்லாம் ஒரு குறையின்றி கரையேற்றிய சுமிம்மாவிற்கு பிரவீனிற்கு மட்டும் நாம் குறை வைத்துவிட்டோமோ என்று தோன்றியது.

அவரின் சிந்தனையை அறியாத சிறியவர்கள் ஊரை சுற்றுவதற்கான திட்டங்களைத் தெளிவாக வகுத்தனர். அடுத்த ஒரு வாரத்தில் மின்னல் வேகத்தில் தன்னுடைய வேலைகளை முடித்த அஜய் அவர்களுடன் ஊர் சுற்ற கிளம்பிவிட்டனர்.

அவன் முதலில் அழைத்துச் சென்றது வாலண்டம் என்ற மீன்பிடிப்பு கிராமத்திற்கு தான்.அந்த இடம் வடகடல் பகுதிக்கு அருகே அமைத்துள்ளது. ஆம்ஸ்டர்டாம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருந்தது இந்த கிராமம். கடலோரமாக அமைந்திருக்கும் அந்த கிராமத்தைச் சுற்றிப்பார்க்க மட்டும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

கடலோரமாக அமைந்திருக்கும் அந்த கிராமம் மிகவும் நேர்த்தியாக பராமரிக்கப்பட்டிருந்தது. அங்கே வரும் நபர்கள் தங்கவென்று அங்காங்கே சில குடில்கள் தனியாக அமைக்கப்பட்டிருக்க அதற்கு குறிப்பிட்ட தொகை வாடகையாக வசூலிக்கப்பட்டது.

வெள்ளை நிற மேகங்கள் வானில் ஊர்வலம் போக, கடற்கரையின் அலையோ மெல்ல கரையைத் தொட்டு சென்றது. பகல் என்ற பொழுதிலும் அங்கே வெயிலின் தாக்கம் அதிகமில்லாமல் இருந்தது.

சில்லென்ற கடற்கரைக்காற்று வந்து முகத்தில் மோதிட புத்துணர்வாக உணர்ந்த பெண்கள் அங்கிருப்பவர்களை வேடிக்கைப் பார்த்தனர்.

சுற்றுலா பயணிகள் எல்லாம் அந்த கிராமத்தை வலம் வருவதைக் கண்ட சுமிம்மா, “நிஜமாகவே இடம் ரொம்ப அழகாக இருக்கு..” என்றார்.

“ம்ம் நீங்க சொல்வதும் உண்மைதான் சுமிம்மா..” என்றாள் ரித்து புன்னகையுடன். அவர்கள கடற்கரையின் அழகை ரசிக்க ஆண்கள் அனைவரும் சென்று அங்கிருக்கும் குடில்களை வாடகைக்கு எடுத்தனர்.

“பாரதி அண்ணா எல்லோருக்கும் தனித்தனியாக குடில்களை வாடகைக்கு எடுத்திருக்கேன். இந்த இடத்தில் இருக்கவே ரொம்ப ரம்மியமாக இருக்கும்..” என்றவன் அவர்களின் அறையில் கீயை அவனிடம் கொடுத்தான்.

அடுத்தடுத்து ரூம் கீயை அவரவர்களின் கையில் பொறுப்பாக ஒப்படைத்துவிட்டு, “இன்னும் இரண்டு நாள் இங்கே அப்புறம் ரோஸ் கார்டன் போகலாம்..” என்றவன் சொல்ல மற்றவர்கள் அதை ஒப்புகொண்டனர்.

“இந்த இடத்திற்கு நான் மட்டும் ஜோடி இல்லாமல் வந்துவிட்டேனே..” என்று புலம்பியபடியே அவனின் குடிலுக்குச் சென்ற தம்பியைப் பார்க்கும் பொழுது பாரதிக்கே பாவமாக இருந்தது.

அவன் சென்ற பின்னோடு பாரதியின் பக்கம் திரும்பிய சுமிம்மா, “அவனைபற்றி நீ கவலைப்படாதே பாரதி..” என்றவர் அவனின் பின்னோடு சென்றார்.

அன்று ஓய்வெடுத்துவிட்டு மாலைநேரம் மயங்கும் நேரத்தில் மனைவியுடன் அவரவர்கள் செட் செட்டாக கடற்கரையை வலம் வந்தனர். அவர்களை வேடிக்கைப் பார்த்தபடியே  கடற்கரை மணலில் சுமிம்மாவும், பிரவீனும் அமர்ந்தனர்.

“பிரவீன் அம்மா மேல கோபமா..” என்று பிரவீனிடம் பேச்சுக் கொடுத்தார்.

“உங்க மேல் எனக்கு என்னம்மா கோபம்..” என்றவன் இயல்பாக அவரின் மடியில் படுத்துக்கொள்ள அவனின் தலையைக் கோதியவர், “உன்னை மட்டும் டீலில் விட்டுவிட்டேன்..” என்றவர் தொடங்கும் பொழுதே,

“சுமிம்மா நீங்க காரணம் இல்லாமல் ஒரு முடிவெடுக்க மாட்டீங்க. என்னோட அம்மா எனக்கு கெடுதல் நினைக்க மாட்டாங்க.. சோ டோண்ட் ஃபீல் சுமிம்மா. இந்த இடம்தானே இன்னொரு முறை சங்கரி கூட வந்துட்டாப் போச்சு..” என்று குறும்பாக கூறினான்.

அப்பொழுதுதான் நிலாவும், பாரதியும் மணலில் அமர்ந்திருப்பத்தைக் கண்டு அவரின் மாடியிலிருந்து எழுந்து அவர்களை நோக்கிச் செல்ல சுமிம்மா அவனையே இமைக்காமல் பார்த்தார். அவர்களின் முன்னே நிழலாட கண்டவர்கள் நிமிர்ந்து அவனின் முகத்தைப் பார்த்தனர்.

“என்னண்ணா.. நீங்க அண்ணிகூட வாக் போகல..” என்று கேட்டான். பிரவீனின் மனம் வருந்துமென்று பாரதியும், நிலாவும் அவனோடு கடற்கரையில் அமர்ந்துவிட்டனர்.

“இல்லடா.. ஏதோவொரு யோசனையில் அப்படியே உட்கார்ந்துவிட்டேன்..” என்றான் பாரதி இயல்பாகவே.

“எனக்காக நீங்க தியாகம் பண்ண வேண்டாம். என்னைப் பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும் அண்ணா. நீங்க அண்ணியைக் கூட்டுட்டு வாக் போயிட்டு வாங்க..” என்று பாரதிக்கு கட்டளையிட்டான்.

“ஏன் பிரவீன் இப்படி பண்றீங்க.. என்னால நடக்க முடியாது..” என்று நிலா வேண்டுமென்றே சிணுங்கினாள். அவள் வேண்டுமென்றே மறுப்பது உணர்ந்த பாரதியும் அமைதியாக இருந்தான்.

“ஓ உங்களால் நடக்க முடியலன்னா.. அண்ணாவைத் தூக்கிட்டு போகச் சொல்லுங்க அண்ணி. அதுக்குதானே அண்ணா இருக்கான்..” என்றவன் கேலி பேசி அவர்கள் இருவரையும் அனுப்பிவிட்டு மீண்டும் சுமிம்மாவின் அருகில் வந்தமர்ந்தான்.

மாலை மயங்கும் நேரத்தில் மனைவியுடன் கடற்கரையின் ஓரமாக நடந்த பாரதியின் கைகளோடு தன் கையைப் பிணைத்துக் கொண்டாள் நிலா. இவரின் இடையே அழகான மௌனம் குடிகொண்டது.

அவனிடம் கேட்கலாமா? வேண்டாமா என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்தினாள். அவள் தீவிரமான சிந்தனையுடன் வருவதைக் கவனித்தான் பாரதி.

“என்னடா யோசனை..” என்று அவன் அவளின் கையைப்பிடித்து அருகில் இழுக்க, அவன் பேச்சை நிறுத்திவிட்டு அவளின் முகம் பார்க்கவே உதட்டை கடித்தவண்ணம் அமைதியாக இருந்தாள்.

அவள் தீவிர சிந்தனையில் இருக்க, “நிலா என்னிடம் ஏதாவது கேட்கணும் என்று நினைக்கிறீயா?” என்று கேட்டான்.

அவள் ஒப்புதலாக தலையசைக்க,  “என்ன கேட்கணும்?” அவன் பார்வை அவளின் மீது கேள்வியாக படிந்தது.

“இல்ல..” என்று தொடங்கிய நிலாவிற்கு கூச்சமாக இருக்கவே மீண்டும் மௌனமானாள்.  ஒருப்பக்கம் கணவன்தானே என்று மனம் சொல்ல அவளின் வெக்கம் அவளுக்கு தடைப்போடவே உதட்டைக் கடித்துக்கொண்டு அமைதியானாள்.

“என்னவோ சொல்ல நினைக்கிற..” என்றவன் அவளின் உதட்டிற்கு விடுதலைக் கொடுத்து, “ம்ம் சொல்லு..” என்று அவளுக்கு ஊக்கம் கொடுக்கவே,

“ஆப்ரேஷன் முடிஞ்ச பிறகு நாலு வருஷம் கூட மென்சஸ் ஆகாம இருக்குமா..” என்று தயங்கித் தயங்கி கேட்டவள் வெக்கத்துடன் முகத்தை மூடிக்கொண்டாள்..

அவளின் சந்தேகதைப் புரிந்துகொண்ட பாரதி மெல்ல அவளின் கைகளை விலக்கிவிட்டு, “எதற்கு வெக்கம்?” என்றவண்ணம் அவளின் சிவந்த கன்னங்களை ரசிக்க அவனின் கைகளை விலகிவிட்டு அவனின் மார்பில் முகம் புதைத்தாள் நிலா.

அவனின் வெக்கம் கண்டு அவன் வாய்விட்டு சிரிக்க, “அதன் கேட்டுட்டேன் இல்ல பதில் சொல்லு..” என்றாள் மெல்லிய குரலில்..

“அது இயற்கையாக ஏற்படும் விஷயம் நிலா. சிலரோட உடம்பு கண்டீஷன் பொறுத்து அது மாறும். சிலருக்கு ஆப்ரேசன் முடிந்த இரண்டு மாதத்தில் மென்சஸ் ஆகும். சிலருக்கு ஒரு வருடம். சிலருக்கு ஐந்து வருடம் இந்த மாதிரி..” என்றவனின் மனதில் சந்தேகம் எழுந்தது.

“ஏய் நீ எதற்கு அன்னைக்கு ஹாஸ்பிட்டல் வந்த..” என்று மார்பில் புதைத்திருந்தவளை வலுக்கட்டாயமாக தன்னிடமிருந்து பிரித்து அவளின் முகம் பார்த்தான்.

“அதெல்லாம் சொல்ல முடியாது போ..” என்ற நிலா அவனின் கைகளை விலகிவிட்டு ஓட்டம்பிடிக்க அவளைத் துரத்திபிடித்த பாரதியின் பார்வை அவளின் மீது மையலுடன் படிந்தது.

அதற்குள் சுமிம்மா அவர்களை அழைக்கவே, “தப்பிச்சிட்ட..” என்றவன் அவளுடன் இணைந்து நடந்தான். அவர்கள் இரவு உணவை முடித்துவிட்டு அவரவர் குடில்களுக்கு சென்றனர்.

அவள் குடிலுக்குள் நுழைய கதவின் பின்னோடு மறைந்து நின்ற பாரதி அவளின் இடையோடு அணைத்து, “ஏய் பூனைக்குட்டி..” என்று அவளின் காதோடு அவன் ரகசியம் பேசவே வாயடைத்துப்போய் நின்றாள் நிலா.

அவனின் கைகள் இடையோடு தழுவியிருக்க உள்ளுக்குள் பயபந்து உருண்டது. அவளுக்கு வாழ்க்கை பற்றி தெரியும் ஆனால் பாரதி அவளை ஏற்றுக்கொண்டது காயம் கொண்ட மனதிற்கு இதமாக இருந்தாலும், சூடுகண்ட பூனைபோல கண்முன்னே நின்ற எதிர்காலத்தை நினைத்து கொஞ்சம் பயப்படவே செய்தாள்.

அவளின் கைகள் சில்லிட்டுப் போயிருப்பதை வைத்தே அவனின் மனநிலையை உணர்ந்த பாரதி, “நிலா ஜெஸ்ட் ரிலாக்ஸ்..” என்று அவளை அழைத்துச்சென்று படுக்கையில் அமரவைத்தவன், “ஏன் ஒரு மாதிரி இருக்கிற..” இயல்பாக அவளின் அருகில் அமர்ந்தவண்ணம் கேட்டான்.

“பாரதி எனக்கு பயமாக இருக்கு..” என்றவளின் முகத்தை ஒருவிரல் கொண்டு நிமிர்த்தி அவளின் விழிகளில் தன் பார்வையைப் படரவிட்டான்.

“எதை நினைத்து பயமாக இருக்கு..” என்று கேட்டான்.

“எதிர்காலத்தை நினைத்து..” என்றவளின் வார்த்தைகளில் வலியை உணர்ந்து அவளை இழுத்து மார்புடன் அணைத்துக்கொண்டவன் அவளின் தலையை வருடினான்.

அவளின் மனதைப் புரிந்துகொண்டவன்,“குட் நைட் நிலா..” அவளை இழுத்து மார்பில் போட்டுகொண்டு விழிமூடி உறக்கத்தில் ஆழ்ந்தான். அவனின் அணைப்பில் பாதுகாப்பை மட்டுமே  உணர்ந்தாள் நிலா. அதை தாண்டி எதுவுமில்லை என்று உணர்ந்த அவளின் மனமோ விடியும் வரை விழித்திருந்தது.

அத்தியாயம் – 26

அடுத்த இரண்டு நாட்களை அங்கே கழித்துவிட்டு அங்கே மிகவும் பிரபலமான கீகென்ஹோஃப் கார்டன்ஸ் அழைத்துச் சென்றான். பிரவீனிற்கு சங்கரியை பேசி முடிப்பது பற்றிய சிந்தனையில் சுமிம்மாவும், பாரதியின் பொறுமையைச் சோதிக்கிறமோ என்ற எண்ணத்தில் உழன்றாள் நிலா.

கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை ரோஜா பூவாக இருப்பதைப் பார்த்து அவர்களின் விழிகள் வியப்பில் விரிந்தது. வெள்ளை, மஞ்சள், சிவப்பு, லாவண்டர், புளூ என்று கலர் கலராக இருந்த ரோஜா தோட்டத்தைப் பார்த்த சுமிம்மாவால் அவரின் கண்களையே நம்பமுடியவில்லை.

“அஜய் என்ன இடம்டா இது. ஐயோ நான் ஊட்டியில் இருக்கும் பூக்களைப் பார்த்தே அவ்வளவு சந்தோஷப்பட்டேனே.. இங்கே இவ்வளவு பூ இருக்கு..” என்றவர் அந்த பூக்களைமெல்ல வருடினார்.

அவரின் குறும்புத்தனத்தைப் புரிந்துகொண்டவன், “உலகத்தில் உள்ள மிகபெரிய மலர் தோட்டத்தில் இதுவும் ஒன்று சுமிம்மா..” என்றான் அஜய் புன்னகையுடன்.

“அஜய் நிஜமாக சொல்றீயா?” என்று நம்பாமல் கேட்ட ரேணுவிற்கு உடம்பெல்லாம் சிலிர்த்துப் போய்விட அஜயின் கரத்தோடு தன்னுடைய கரத்தைப் பிணைத்துக் கொண்டான்.

“இந்த இடத்தையெல்லாம் கூகுள் மேப்பில் தான் திவா பார்த்திருக்கேன்..” என்ற ரித்து அவனின் தோள் சாய்ந்துக் கொண்டாள். அவன் மென்மையாக அவளை அணைத்துக் கொள்ள ரித்துவிற்கு வார்த்தைகளே வரவில்லை.

பெண்களுக்கு சாதாரணமாகவே பூக்களைப் பிடிக்கும். அதுவும் அவ்வளவு பெரிய மலர்தோட்டத்தைக் கண்ணில் கண்டால் அவர்களின் மனம் எப்படி துள்ளும் என்பதை நான் வார்த்தையால் சொல்ல முடியுமா?

நிலாவும் மெல்ல பூக்களின் அருகே சென்று அவற்றைத் தீண்டுவதும், மலரின் இதழ்களில் முத்தமிடுவது என்று அந்த இடத்தையே சுற்றி வருவதைக்கண்டு அவளிடம் வம்புவளர்க்க நினைத்து அவளின் அருகில் சென்றான் பாரதி..

மெல்ல அவளை நெருங்கிய பாரதி, “இந்த இடம் ரொம்ப பிடிச்சிருக்கா நிலா..” என்று கேட்க ஒப்புதலாக தலையசைத்தவளின் இதழில் அவனின் பார்வை படிந்திட, “ஒரு கவிதை சொல்லவா நிலா..” என்றான் மெல்ல.

“ம்ம் சொல்லுங்க..” என்றாள் அவள் விளையாட்டாகவே.

தேன் கொண்ட செந்தூர மலர்கள்..

வண்டினம் தீண்டாத மலரிதழ்கள்..

எனது இதழ்களை வண்டாக மாற்றி

பருகினேனே உனது இதழ் தேனை..” என்றவன் குறும்புடன் கண்சிமிட்டிட, “ச்சீ..” என்று வெக்கத்துடன் அவனின் மார்புகளில் முகம் புதைத்தாள் நிலா. அவன் சந்தோஷத்துடன் அவளை அணைத்துக் கொண்டான்.

மற்றவர்கள் இவர்களின் உரையாடலை கண்டும் காணாமல் நகர்ந்தனர்   மலர்களுக்கு மயங்கிய பெண்களின் முகத்தை ரசனையுடன் பார்த்துக் கொண்டே தங்களுக்குள் பேசியபடியே அந்த தோட்டத்தைச் சுற்றி வந்தனர்.

“இங்கே எத்தனை வகை பூக்கள் இருக்கும் அஜய்..” என்று திவாகர் அவனிடம் விளக்கம் கேட்டான்.

“இந்த இடத்தோட மொத்த பரப்பளவு 80 ஹெக்டேர் பரப்பளவு. ஐரோப்பாவின் மிகபெரிய மலர் தோட்டம் இது..” என்றான்

“டூலிப்ஸ் போன்ற செந்நீல மலர்கள். மல்லிகை போன்ற மலர்கள் இந்தமாதிரி பலவிதமான மலர்கள் இங்கே இருக்கு. மொத்தம் ஏழு மில்லியன் மலர்கள் இருக்குமென்று சொல்றாங்க திவா” என்ற பாரதியை மற்றவர்கள் திகைப்புடன் நோக்கினர்.

“அண்ணா உனக்கு எப்படி இவ்வளவு..” என்ற பிரவீனிற்கு வார்த்தையே வரவில்லை.

“நம்ம ஒரு இடத்திற்கு போகும் பொழுது அதைப்பற்றி தெரிஞ்சிக்க மாட்டோமா பிரவீன் அந்த மாதிரிதான் இதுவும்..” என்றவன் இயல்புடன் புன்னகைத்தான்.

“அண்ணா பார்க்கத்தான் சைலண்ட் பட் ஆள் சரியான ஆளுதான்..” என்றான் திவாகர். இவர்கள் பேசியபடியே நடக்க, பெண்களோ மலர் தோட்டம் முழுவதும் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்தனர். கண்ணுக்கெட்டும் தூரம் வரை பூக்களை கண்டு வியப்பில் விழிமூட மறுத்தது.

அவர்களின் ரசனையுடன் அந்த இடத்தைச் சுற்றிவர நிலா வழக்கம் போல பூக்களை வருடி வருடி பார்த்தாள். எத்தனை முறை தொட்டாலும் பூக்களின் மேன்மையை உணர்ந்த கரங்கள் மீண்டும் மீண்டும் பூக்களை வருடவே செய்தது. ரித்துவும், ரேணுவும் செல்பி எடுத்தவண்ணம் அந்த இடத்தைச் சுற்றி வந்தனர்.

அதேநேரத்தில் கணவனுடன் அந்த தோட்டத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள் கார்த்திகா. கௌசிக் அந்த இடத்தைப்பற்றிய விளக்கத்தைச் சொல்ல அவளும் அமைதியாக அந்த இடத்தை சுற்றி வந்தவளின் கண்களில் விழுந்தார் சுமிம்மா.

புளூ கலர் சீன்ஸ், சாண்டில் கலர் டாப்பில் கையில் சின்ன செல்போன் மற்றும் பிளாக் கலர் கூலருடன் நின்றிருந்தவரைப் பார்த்தும், “என்னங்க நம்ம சுமிம்மா..” என்றாள் கார்த்திகா

“சுமிம்மாவா..” என்றவன் அவளின் பார்வை சென்ற திசையைக் கவனித்துவிட்டு, “இவங்க எப்போ நெதர்லாந்து வந்தாங்க..” என்ற கேள்வியுடன் மனைவியுடன் அவர்களின் அருகில் சென்றனர்.

அப்பொழுது எதர்ச்சியாக திரும்பிய சுமிம்மா கார்த்திகாவையும், கௌசிக்கையும் கவனித்துவிட்டு, “ஐயோ இவங்க எப்படி இங்கே வந்தாங்க? நாடு விட்டு நாடு வந்தும் எனக்கு நிம்மதியில்ல..” என்றவன் அங்கிருந்து ஓடிவிட நினைத்தவர் சற்று நின்று நிதானித்தார்.

அவரின் செயல்களைக் கவனித்த நிலா, “என்ன சுமிம்மா..” என்று கேட்க இவர்களின் குரல்கேட்டு ரேணுவும், ரித்தியும் அவரின் அருகில் வந்தனர்.

“நான் என்ன பண்ணினாலும் கண்டுக்காதீங்க..” என்றவர் பூக்களைத் தொட்டபடியே கெத்தாக நிற்க மற்ற மூவரும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு அமைதியாகிவிட, அதற்குள் அவர்கள் இருவரும் அவர்களின் அருகே வந்தனர்

“நீங்க சுமிம்மாதானே..” என்ற கௌசிக்கை ஏறயிறங்க பார்த்த சுமிம்மா அவரின் போக்கில் முன்னே செல்ல அவரின் வழியை மறித்து நின்றாள் கார்த்திகா.

“சுமிம்மா..” என்றழைக்க, “ஹே யாராந்த சுமிம்மா. நான் ஜெனிபர்..” என்றவர் கெத்தாக சொல்ல, “அம்மா அவங்க சேட்டையை ஆரம்பிச்சிட்டாங்க..” என்று நிலா குறும்புடன் கண்சிமிட்டிட மற்ற இருவரும் வாய்விட்டு சிரித்தனர்.

“தமிழ் தெளிவாக புரியுது..” என்றவனின் பார்வை அவரின் மீது கேள்வியாக படிந்திட, ‘என்னை மட்டும் சரியா அடையாளம் கண்டுக்கிறாங்க..’ என்று மனதிற்குள் புலம்பினார் சுமிம்மா.

“நீங்க எங்க சுமிம்மா தான் எனக்கு சந்தேகமில்ல. உங்களுக்கு சந்தேகமா இருந்தா சொல்லுங்க நான் கிளியர் பண்றேன்..” என்று அவருடன் பேச்சைத் தொடர்ந்தான்.

“ஏய் மேன் என்னோட புருஷன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அதனால் எனக்கு தமிழ் தெரியும்..” என்று அவனுக்கு பதில்கொடுத்தவர் முன்னே சென்றார்.

“புருஷன் தமிழ்நாடு நீங்க நெதர்லாந்தா?” என்று கிண்டலாக கேட்டவனை முறைத்தவர், “ஏய் மேன் நான் நெதர்லாந்து பொண்ணு. என்னோட புருஷன் என்னை கல்யாணம் பண்ணிட்டு இங்கேயே செட்டில் ஆகிட்டார். எங்களுக்கு அஜய், நிலா என்று இரண்டு பிள்ளைகள் இருக்காங்க மேன்..” என்றார்.

அவர் விளையாட்டாக சொல்வதாக அவர் நினைக்க நிலாவை அருகில் இழுத்த சுமிம்மா, “இது என்னோட இரண்டாவது மகள் நிலா..” என்றார்.

அவள் திருதிருவென்று விழிக்க, “அப்போ கன்னியாகுமரியில் இருக்கும் நித்திலா அக்கா உங்களுக்கு யாரு சுமிம்மா..” என்று விடாமல் அவரிடம் வம்பு வளர்த்தான் கௌசிக்

அவர் பேசுவதைக் கேட்டபடியே அமைதியாக நின்றிருந்த கார்த்திகாவோ, “கௌசிக் இவங்க சொல்றதை நீ கேட்காதே. இவங்களைப் பற்றி உனக்கு தெரியாது. இவங்களை இப்படியே விட்டா ஊரையே வித்துட்டு வந்துருவாங்க..” என்று நொடியில் பொரிந்து தள்ளிவிட்டாள்.

அவள் பேசுவதைக்கேட்டு மற்ற மூவரும் சிலையென நிற்க, “ஏய் மேன் என்ன உன்னோட கேர்ள் பிரெண்ட் என்னை என்னவோ சொல்லி திட்டுது..” என்றார் சுமிம்மா அங்கிருந்து நகர்ந்தார்.

அவர்கள் மூவரையும் காணாமல் தேடிக்கொண்டு வந்த பிரவீன் தூரத்தில் நின்றிருந்த சுமிம்மாவைப் பார்த்தும், “சுமிம்மா எங்கே இருக்கீங்க..” என்றவன் அவர்களின் அருகே வரவே கார்த்திகாவும், கௌசிக்கும் அவரைக் கேள்வியாக நோக்கினர்.

“ஐயோ போட்டுக் கொடுத்துவிட்டானே.. எனக்கு எதிரி வெளியே இல்ல..”என்றவர் அங்கிருந்து நொடியில் அவர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மறந்துவிட்டார்.

நிலா, ரித்து, ரேணு மூவரும், “அம்மா எங்க போனாங்க..” என்று சுற்றிலும் பார்வையைச் சுழற்றிட, பாரதி, அஜய், திவாகர், பிரவீன் நால்வரும் அவர்களின் அருகில் வந்தனர்.

அங்கே நின்றிருந்த கௌசிக்கை முதலில் அடையாளம் கண்டுகொண்ட பாரதி, “கௌசிக் நீங்க எப்படி இங்கே? ஆமா சங்கரி எல்லோரையும் சேர்த்து கூட்டிட்டு வரேன்னு சொன்னாளே.. மத்தவங்க எல்லாம் எங்கே இருக்காங்க..” என்று கேள்வியாக அடுக்கினான் பாரதி.

அவர்கள் இருவரும் அவனை புரியாத பார்வை பார்க்க, “நான் கவிபாரதி. சுமிம்மா இப்போ எங்க வீட்டில் தான் இருக்காங்க..” என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட வன் மற்றவர்களையும் அறிமுகப்படுத்தி வைத்தான்.

“ஆமா சுமிம்மா எங்கே?” என்றவன் பார்வையால் சுமிம்மாவைத் தேடினான். அவர்களின் அருகே வந்த நிலா, “அம்மா போன வேகத்திற்கு இந்நேரம் பிளைட் பிடித்து இந்தியா சென்றிருந்தாலும் சென்றிப்பார்..” என்றவள் விளையாட்டாக கூறினாள்.

“ஆமா நிரஞ்சன், நித்திலா, சங்கரி எல்லோருமே வந்திருக்கீங்களா? சங்கரி நெதர்லாந்து வந்து அம்மாவைப் பார்க்கிறேன் என்று சொன்னா. நைட் தான் வந்துவிட்டதாக போன் பண்ணின. நான்தான் மறந்துவிட்டேன்..” என்றவன் அன்று ஷாப்பிங் காம்பிளக்ஸில் நடந்ததை அவனிடம் பகிரந்தான்.

பிறகு அவர்கள் இருவரும் இயல்பாக பேசிக்கொண்டே வந்தனர். அஜய், பிரவீனை அருகில் அளித்த பாரதி, “சுமிம்மா வீட்டிற்கு போயிருக்க வாய்ப்பு இல்ல. இங்கே இருக்கும் ஏதாவது மாலில் ஷாப்பிங் பண்ணிட்டுதான் இருப்பாங்க. அவங்களை கூட்டுட்டு வீட்டுக்கு வாங்க நான் இவங்களைக் கூட்டிட்டு வீட்டிற்கு போறேன்..” என்றான்.

மற்ற இருவருக்கும் அது சரியென்று தோன்றவே, “சரி அண்ணா.. நீங்க இவங்களைக் கூட்டிட்டு வீட்டிற்கு போங்க..” என்றவர்கள் சுமிம்மாவை தேடி அங்கிருக்கும் மாலுக்குச் சென்றனர்.

அந்தநேரம் அவனின் செல்போன் சிணுங்கிட, “ஒரு நிமிஷம்..” என்றவன் போனை எடுத்து பேசிட, “ஸார் நாங்க உங்க வீட்டிற்கு வந்துவிட்டோம்..” என்றாள் வித்யா.

“ஓஹோ நீங்க அங்கேயே வெயிட் பண்ணுங்க.. நான் இதோ வந்துட்டே இருக்கேன்..” என்றவன் அவர்களையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.

கார்த்திகா போன் செய்து வீட்டிலிருந்த மற்றவர்களுக்கு விவரம் கூறிவிட்டு போனை வைக்கவே, “அவங்க எல்லாம் என்ன சொன்னாங்க கார்த்தி..” என்று கேட்டான் கௌசிக்.

“கலை அண்ணா இங்க பக்கத்தில் இருக்கும் மாலில் இருக்காங்களாம்.. நீங்க போங்க நான் சீக்கிரம் வரேன்னு சொன்னாங்க. அப்புறம் வித்யா அக்கா டாக்டரைப் பார்த்ததும் வரேன்னு சொன்னாங்க. இவங்கள தவிர மற்ற எல்லோரும் இன்னும் ஒரு அரை மணிநேரத்தில் அங்கே வந்திருவாங்க..” என்றவள் விவரம் கூறினாள்.

அன்று சங்கரி மாலதியின் நிலையைப் பாரதியிடம் தெளிவாகச் சொல்ல அவர்களை குணப்படுத்த நினைத்தான். கிட்டதட்ட ஐந்து வருடங்கள் தங்களோடு இருந்தவரை பிரிய அவர்களுக்கு மனம் வரவில்லை. ஆனால் ஐந்து வருடம் பிரிந்திருந்த அவர்கள் பிள்ளைகளின் நிலையைவிட இது ஒன்றும் பெரிதல்ல என்று தோன்றியது.

அவர்களுக்காக யோசித்து யோசித்து ஒவ்வொரு விஷயத்தையும் செய்த சுமிம்மாவிற்கு கைமாறு செய்ய நினைத்தவர்கள் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு சுமிம்மாவை அவர்களின் குடும்பத்துடன் அனுப்பிவைக்கும் முடிவை எடுத்தனர்.

தாயில்லா பிள்ளைகளின் வலி எத்தகையது என்று ஒவ்வொருவரும் உணர்ந்த காரணத்தாலோ என்னவோ சுமிம்மா இல்லாமல் அவர்களின் குடும்பம் எப்படியெல்லாம் தத்தளித்திருக்கும் என்று உணர்ந்து, அனைவரும்  சுமிம்மாவை மனதார அவர்களுடன் அனுப்பி வைக்கும் முடிவை ஒரு மனதாக எடுத்தனர்.

அவர்களிடமிருந்து தப்பிக்க நினைத்து சுமிம்மா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளே நுழைந்தவர், “இப்போவும் கிரேட் எஸ்கேப் சுமித்ரா. கொஞ்சம் கவனம் சிதறி இருந்த உன்னை இந்தியாக்கு பார்சலே பண்ணிருப்பாங்க.. பாசக்கார பயபுள்ளைய இருக்காங்களே..” என்று புலம்பியபடியே அந்த இடத்தைச் சுற்றி வந்தார்.

அவரைத்தேடி காம்பிளக்ஸ் உள்ளே நுழைந்த பிரவீனும், அஜயும் அவரை அங்கும் இங்கே தேடினர். அப்பொழுது சுமிம்மா இரண்டாவது தளத்தில் நிற்பதை கவனித்த சுமிம்மா, “அஜய் அம்மா அங்கே நிற்கிறாங்க..” என்றான்.

“இந்தப்பக்கம் மேலே போகணும் அண்ணா..” என்றவன் சொல்ல இருவரும் வேகமாக படியேறி மாடிக்குச் சென்றனர். சுமிம்மா கிடைத்துவிட்டதாக கார்த்திகா போன் செய்த மகிழ்ச்சியில் அவளோடு பேசியபடியே நின்ற கலையரசன் மனைவியைக் கவனிக்க மறந்தான்.

அவன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது துணியை எடுத்துக் கொண்டிருந்த மாலதி கடைக்கு வெளியே நின்ற சுமிம்மாவை கண்ணாடி வழியாக பார்த்துவிட்டு, “ஹை அத்தை..” என்றவள் கடையைவிட்டு வெளியே வந்துவிட்டாள். அவரை அடையாளம் கண்டுகொண்ட மாலதி அவரைப் பின் தொடர்ந்து சென்றாள்.

“இந்த பிரவீன் பையனோட கல்யாணம் வேற குறுக்கே இருக்கு.. எல்லோருக்கும் நல்லதே செய்துவிட்டு அந்த பையனுக்கு மட்டும் குறை வைக்க மனசு வேற இடம் தரல. அவனுக்காக நான் மறுபடியும் கன்னியாகுமரி போகணும். அவன் விரும்பிய பெண்ணை அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்..” என்று அவரின் போக்கில் புலம்பியபடியே அவர் முன்னே சென்றார்.

கார்த்திகாவுடன் பேசிவிட்டு போனை வைத்த கலையரசன் அருகே நின்ற மனைவியைக் காணவில்லை என்றதுமே அடிவயிற்றில் திக்கென்றது.

“இங்கேதானே இருந்தா. அதற்குள் எங்கே போயிருப்பா..” என்றவன் மாலதியைத் தேடிக்கொண்டு கடையைவிட்டு வெளியே வர தூரத்தில் மனைவி செல்வதை கவனித்தவன், “மாலதி எங்கம்மா போற..” என்றவளை பின்தொடர்ந்து சென்றான்.

இரண்டாவது மாடிக்கு வந்து சேர்ந்த அஜய், “இந்தப்பக்கம் தானே சுமிம்மா வந்தாங்க.. அதுக்குள்ள எந்தப்பக்கம் போயிருப்பாங்க பிரவீன் அண்ணா..” என்றவனின் அஜயின் பார்வை அந்த இடத்தை சுற்றி வந்தது.

“எனக்கும் அதுதான் தெரியல. இவங்க யாரையோ கண்டு எதற்கு பயப்படனும்..” என்ற பிரவீனும் சுமிம்மா எங்காவது தென்படுகிறாரா என்று பார்வையால் தேடினான்.

தன்னை யாரோ பின் தொடர்வது போல அவருக்கு தோன்றிய மறுநொடியே திரும்பிப் பார்த்தவர், “மாலதி..” என்று மருமகளைக் கண்டு அதிர்ந்து நின்றார்.

“அத்தை என்னை மன்னிச்சிருங்க..” என்று சுமிம்மாவின் காலில் விழுந்தாள் மாலதி. அந்த இடத்திற்கு வந்தவர்களில் சிலரின் பார்வை அவர்கள் இருவரையும் தொட்டு சென்றது.

“என்ன மாலதி இது..” என்று அவளை அதட்டிட வாய் திறக்கும் முன்னாடியே கலையரசனைப் பார்த்துவிட்டவரின் விழிகள் கலங்கியது. ஐந்து வருடத்திற்கு பிறகு மகனை நேரில் பார்த்தும் அவருக்கு பேச வாய் வரவில்லை.

“அம்மா..” என்றவனின் கண்களும் கலங்கிவிட, “டேய் என்னடா இவ ஊர் தெரியாத ஊரில் வந்து நின்னுட்டு பொசுக்குன்னு காலில் விழுகிற..” என்று மகனிடம் அவர் கேள்வி கேட்கவே, “உங்களை ரொம்ப காயப்படுத்திட்டோம் என்று நினைச்சு நினைச்சே இப்படி ஆகிட்டம்மா..” என்றான் மகன் மனைவியின் கைகளைப் பிடித்தபடியே.

ஐந்து வருடத்திற்கு பிறகு பார்க்கும் மகனின் வாழ்க்கை இப்படியா இருக்க வேண்டும் என்று தாயுள்ளம் தவியாய் தவிக்கவே, “அதெல்லாம் இல்ல அத்த. நான் நல்லா இருக்கேன். நான் நல்லா சமைக்க கத்துக்கிட்டேன். உங்களுக்கு சுண்டக்காய் வத்தக்குழம்பு வெச்சு தரவா..” என்றவள் கணவனின் பக்கம் திரும்பினாள்.

“இங்க சண்ட வத்தல் எங்க கிடைக்கும்? அத்தைக்கு நான் குழம்பு வெச்சு தரணும். நீங்க போய் வாங்கிட்டு வாங்க..” என்றவள் குழந்தை போல சொல்ல மாலதியின் கூந்தலை வருடிய சுமிம்மாவின் கண்கள் கலங்கியது.

அதை கவனித்த மாலதி, “அத்தை நான் நல்லா இருக்கேன்.. எனக்கு ஒண்ணுமே இல்ல. நீங்க அழுகாதீங்க..” என்று அவரின் கண்களைத் துடைத்துவிட்டாள்.

அதற்குள் அவரின் அருகில் வந்த பிரவீன், “சுமிம்மா இங்க வந்து நின்று என்ன பண்றீங்க..” என்றவன் அங்கே நின்றிருந்த கலையரசனைப் பார்த்தும புன்னகைத்தான்.

“அண்ணா, அண்ணி நீங்க வீட்டிற்கு கிளம்புங்க. நம்ம வீட்டில் போய் பேசிக்கலாம்..” என்றவன் இயல்பாக சொல்ல, “இவங்க இருவரும் யாரும்மா..” என்று புரியாமல் கேட்டான் கலையரசன்.

“அதெல்லாம் வீட்டிற்கு போனதும் நாங்களே சொல்றோம் அண்ணா.. நீங்க வாங்க..” என்ற அஜய் மாலதியைப் பார்த்து, “அண்ணி எனக்கு வெண்டக்கா புளிகுழம்பு வெச்சு தரீங்களா?” என்று அவளிடம் கேட்டான்.

அவளின் நிலை அவர்களுக்கும் தெரியும் என்ற உண்மையை உணர்ந்த சுமிம்மாவின் பார்வை மற்ற இருவரின் மீதும் கேள்வியாக படிந்திட, “அம்மா வீட்டுக்கு போனதும் நீங்க நாலு மொத்து மொத்துங்க வாங்கிக்கிறோம். இப்போ வாங்க வீட்டிற்குப் போலாம்..” பிரவீன் குறும்புடன் கண்சிமிட்டி சிரித்தான்.

சுமிம்மா அவர்களை முறைக்கவே, “வாங்க..” என்று அவரின் கையைப் பிடித்த அஜய் அவரிடம் பார்வையால் கெஞ்சினான். பிரவீனும் அவரிடம் பார்வையால் கெஞ்சிட, “வாங்க வீட்டிற்கு போலாம்..” என்றார் சுமிம்மா. பிரவீனும், அஜயும் அவர்களை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினர். சுமிம்மாவின் முடிவு என்னவாக இருக்கும்?

error: Content is protected !!