MMV 4

அத்தியாயம் – 4

இருவழி சாலை வழியாக வாகனங்கள் சீரான வேகத்தில் செல்ல, அங்கே கனத்த மௌனம் நிலவியது. அவன் வருவதைக் கண்டதும், “சுமிம்மா வாங்க வீட்டிற்கு போலாம்..” சொல்லி முடிப்பதற்குள் திணறிவிட்டாள்.

அவளின் விழிகள் அவனைப் பயத்துடன் நோக்கவே, ‘என்னைக் கண்டு எதற்காக பயப்படுகிறாள்’ என்று புரியாமல் அவனின் பார்வை அவளின் மீது படிந்தது.

“இந்நேரம் வீட்டிற்குப் போய் என்ன பண்ண போறோம் நிலா.. இங்கேயே உட்கார்ந்து கொஞ்சநேரம் வேடிக்கை பார்க்கலாம்..” விருப்பம் இல்லாமல் அமர்ந்தாள்.

“சுமிம்மா இங்கே என்ன பண்றீங்க?” குறும்புன்னகையுடன் அவரின் அருகில் இயல்பாக அமர ஏனென்றே தெரியாமல் நிலாவின் முகம் மாறியது. அவளின் செயல்களில் ஒரு ஒதுக்கம் இருப்பதை கவனித்தவன், ‘எதற்காக இப்படி இருக்கிற..’ புரியாமல் உள்ளுக்குள் குழம்பிப் போனான்..

“ஏண்டா தம்பி இங்கே குடிதண்ணீர் பைப் எங்கே இருக்கு என்று கொஞ்சம் சொல்லுடா..” தீவிரமாகவே கேட்டார்..

அவர் எதற்காகக் கேட்கிறார் என்று புரியாவிட்டாலும், “இங்கே அடுத்த வீதியில் இருக்கும் என்று நினைக்கிறேன் சுமிம்மா..” என்றான் கவிபாரதி

“நிலா பக்கத்து வீதியில்தான் குடிதண்ணீர் பைப் இருக்கிறதாம். வாம்மா நம்ம அங்கே போய் வேடிக்கை பார்க்கலாம்..” என்றவரை அவளும் புரியாத பார்வை பார்த்து வைத்தாள்..

“அங்கே போய் என்ன பண்ண போறீங்க சுமிம்மா..” என்று  கேட்டான்.

“குடிதண்ணீர் பைப்பில் தானே சண்டை நடக்கும். டிவியில் உட்கார்ந்து குழாயடி சண்டை பார்ப்பதை விட இங்கிருந்து கொஞ்சதூரம் நடந்து போய் பார்த்த கொஞ்சம் கொலஸ்ட்ரால் குறையுமில்ல தம்பி..” ஏற்ற இறக்கங்களுடன் சொல்ல, “ஹா ஹா ஹா..” சிரித்துவிட்டாள் நிலா.

“அதுமட்டும் இல்லடா பாரதி. உன்னை மாதிரி டாக்டருக்குக் கொடுக்கிற பீஸ் குறையும் இல்ல..” என்று அவனை வம்பிற்கு இழுக்க, “சூப்பர் சுமிம்மா..” என்றாள் நிலா.

அவன் இருவரையும் முறைக்க, “சும்மாடா..” அவனை திசைதிருப்ப நினைத்தவர்,“இன்னும் ஊருக்குப் போகாமல் இங்கே என்ன பண்ற?” தன்னுடைய விசாரணையைத தொடங்கிவிட்டார்.

அதுவரை இருந்த மனநிலை மாறி,“என்னம்மா நான் சொன்னதை மறந்துட்டீங்க போல..” என்றவன் புன்னகைக்க, ‘இவன் என்ன சொன்னான்..’ அவரின் தீவிர சிந்தனை அவனின் உதட்டில் புன்னகையை வரவழைத்தது.

“என்னம்மா என்னை ஊரைவிட்டுத் துரத்தப் பலமாக பிளான் பண்றீங்க போல..” அவரைக் கேலி செய்ய, “அதுக்கு நான் இவ்வளவு தீவிரமாக யோசிக்க அவசியமே இல்லடா தம்பி..” குறும்புடன் கூறினான்.

நிலா மெளனமாக இருக்க, “உங்களிடம் கேட்டது என் தப்புதான்..” என்றவன் புன்னகைத்தான்.

“நான் அப்ளிகேஷன் போட்ட காலேஜில் போய் விசாரிக்க போனேன்..” என்றவர் சலிப்புடன்

“நீங்க என்ன என்றும் பதினாறு என்று நினைப்பா. இந்த வயதில்
காலேஜிற்கு அப்ளிகேஷன் போட்டேன் என்று சொல்றீங்க..” அவரை வாரினான் கவிபாரதி..

அவன் வந்தும் செல்ல நினைத்த மனதை கட்டுக்குள் கொண்டுவந்து தன்னுடைய பொறுமையை இழுத்துப்பிடித்து அமர்ந்தவளின் முகம் மாறியது..

‘இந்த ஆளுக்கு நாக்கில் சனி புகுந்துவிட்டது போல.. சுமிம்மா ஏற்கனவே செம காண்டில் இருக்காங்க.. இன்னைக்கு அம்மாவிடம் வசவு கன்பார்ம்..’ என முடிவே செய்துவிட்டாள்.

“நான் காலேஜ் போனால் என்னடா தப்பு. ஆனால் நீ சொல்ற மாதிரி நான் ஸ்டுடென்ட் இல்ல..” என்றதும் அவனின் புருவங்கள் கேள்வியாக உயர்ந்தது..

“அம்மா நீங்க என்ன படிச்சிருக்கீங்க?” சந்தேகமாகவே கேட்க, “நான் லெக்சர் வேலைக்கு படித்திருக்கிறேன்..” என்றதும்  திகைத்தான் கவிபாரதி

“உங்களுக்கு வேலை கொடுக்க மாட்டேன் என்று யாரம்மா சொன்னது..” அவனின் குரல் கேலி நிறைந்திருந்தது.

“பாரதி நீ அம்மாவோட பலம் தெரியாமல் பேசற. அம்மாவை சும்மா நினைக்காதே எனக்கு பின்னால் பெரிய ஆர்மியே இருக்கு” மிரட்டினார்.

“சுமிம்மாவிற்கு ஆர்மியா இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராக
தெரியல..”நக்கலுடன் கேட்டான்.

நிலாவின் பார்வை ஒரு முறை அவனின் மீது படிந்து மீள அதை கண்டும் காணாதது போன்ற பாவனையுடன், “அப்புறம் இத்தனை வருடம் வேலைக்கு போகாமல் என்ன பண்ணிட்டு இருந்தீங்க..” மீண்டும் வம்பிற்கு இழுத்தான்.

அவன் வேண்டும் என்றே வம்பிற்கு இழுப்பது புரிந்தாலும் கூட சுமிம்மா தன்னுடைய வழக்கமான விளையாட்டை ஒதுக்கி வைத்துவிட்டு அவனின் கேள்விக்கு பதில் சொன்னார்.

“அப்பாவின் வேலையை அவர் இறந்த பின்னாடி எனக்கு கொடுத்தாங்க. இப்போ அந்த வேலையை ரிஸைன் பண்ணிட்டுதான் இங்கே வந்து வேலை தேடிட்டு இருக்கிறேன்..” என்றார் புன்னகையுடன்.

“இப்போ நீங்க வேலை கேட்ட இடத்தில் என்ன சொன்னாங்க..” என்று சிந்தனையுடன் மணியைப் பார்த்தான்..

‘ஐயோ உட்கார்ந்து உயிரை வாங்குகிறானே.. டேய் முதலில் எழுந்து போடா..’ மனதிற்குள் அவனை வறுத்தெடுத்தாள்.

“அந்த காலேஜ் கரஸ்பாண்டன்ட் வந்த கேட்டு சொல்லறேன் என்று சொன்னாங்க..” என்றவர் தொடர்ந்து, “அவனுக்கு அப்படி என்ன வேலை என்று தெரியல. இத்தனை நாளாக காலேஜ் வராமல் இருக்கிறான்..” என்று அவர் போக்கில் வறுத்தெடுத்தார்.

அவன் கல்லூரியின் பெயரைக் கேட்கவே, “இங்கே பக்கத்தில் இருக்கு இல்ல இந்த காலேஜ்தான்..” திடுக்கிட்டான்.

அந்த கல்லூரியின் கரஸ்பாண்டன்ட் அவன்தான். தாத்தாவின் சொத்துகளை அவனின் தந்தைக்கு பிறகு அவன்தான் நிர்வாகம் செய்கிறான். அந்த சொத்தை நிர்வாகிக்கும் பொறுப்பை மட்டுமே கையில் எடுத்துகொண்டான் கவிபாரதி.

அவனின் மௌனத்தை கவனிக்காமல் சுமிம்மா, “இந்நேரம் எந்த பொண்ணு பின்னாடி லோலோன்னு சுத்துகிறானோ தெரியல அந்த இத்துபோனவன்..”அவர் கோபத்தில் சொல்ல நிலாவின் உதட்டில் ரகசிய புன்னகை மலர்ந்தது.

அவள் சத்தமில்லாமல் சிரித்தாலும் அவள் உடல் குலுங்குவதை வைத்தே அவள் சிரிக்கிறாள் என்று உணர்ந்த பாரதிக்கு  அவனின் மீதே கோபம் வந்தது.

“என்னைக்கு போனாலும் இன்று போய் நாளை வா என்ற ஒரு டயலாக் மட்டும் சொல்றான் அந்த காலேஜ் பிரின்சிபால்..” என்றவர் கோபத்துடன் மீண்டும் திட்டினார்.

அவன்தான் அந்த கல்லூரியின் கரஸ்பாண்டன்ட் என்ற உண்மையறியாத அவர் அவனை திட்டிகொண்டிருக்க பாரதியின் முகம் போன போக்கைக் கவனித்த நிலாவிற்கு திடீரென்று மனதில் சந்தேகம் எழுந்தது.

“அம்மா அவன் பாவம். நீங்க இந்த வாங்கு வாங்குவீங்க என்று அவனுக்கு முன்னாடியே தெரியாமல் போச்சு..” கேள்வியாக பார்த்துவிட்டு, “நான் வந்து வேலை கேட்டது தெரிந்தால் மட்டும் துரை உடனே வந்துவிடுவானோ?” விடாமல் அவனுக்கு அர்ச்சனை செய்தார்.

சுமிம்மா திட்டிக்கொண்டே இருக்க அவனின் முக மாறுதலைக் கவனித்த நிலாவின் முகத்தில் சுவாரசியம் கூடிடவே, “நீ ஏன் பாரதி அமைதியாக இருக்கிற..” என்றவர் சந்தேகமாகவே

“நான் வசவு வாங்க வேண்டும் என்று தலையில் எழுதியிருக்கு. அப்போ நான் வாங்கித்தானே ஆகவேண்டும்” என்றதும் அவனை புரியாத பார்வை பார்த்தார் சுமிம்மா.

“நீங்க இந்நேரம் வரை வறுத்தெடுத்த அந்த இத்துபோனவன் நான்தான் சுமிம்மா..” என்றான் பாரதி பாவமாகச் சொல்ல,“என்னடா சொல்ற..” என்று வெளிப்படையாகவே அதிர்ந்தார்.

நிலாவோ அதுவரை இருந்த மனநிலை மாறி அவனை திகைப்புடன் பார்க்கவே, ‘என்ன’ அவனின் புருவம் உயர்ந்தி கேட்கவே, ‘ஐயோ’ எனத் தலையைக் குனிந்து கொண்டாள்.

“ம்ம் அந்த காலேஜ் என்னோடது தான். தாத்தா சொத்துகள் பேரனுக்கு தானே கிடைக்க வேண்டும். அதன் நான் நிர்வாகம் பண்ணிட்டு இருக்கிறேன்..” என்றவன் சாதாரணமாகவே.

அவனின் குரலிலிருந்து வெளிப்பட்ட வருத்தத்தை உணர்ந்தவர், “நீ டாக்டர் தானே?” என்று சந்தேகமாகவே கேட்கவே, “ம்ம்..” என்றதும் அங்கே அமைதி நிலவியது..

அவனின் குரலிலிருந்த வருத்தம் உணர்ந்தவர், “வாழ்க்கை என்றால் ஆயிரம் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். அதை பெருசாக நினைக்காதே கண்ணா..” என்று அவனுக்கு ஆறுதல் சொன்னார்.

நிலாவின் பக்கம் திரும்பியவர், “ நீ என்னம்மா முடிவு பண்ணிருக்கிற..” என்று கேட்டார்

“ம்ம் படிக்கலாம். ஆனால்..” என்று இழுக்கவே, “இன்னும் என்ன..” புரியாமல் கேட்டார்.

“நான் இன்னும் பிளஸ் டூ முடிக்கவே இல்ல..” என்றதும், “நினைத்தேன் நீ புலம்பும் பொழுதே. இப்போ நான் என்னதான் பண்றதோ..” என்று கைகளில் தலையைத் தாங்கி அமர்ந்துவிட்டார்

அவர்களுக்குள் நடந்த பேச்சு வார்த்தையைக் கவனித்த பாரதி, “என்ன பிரச்சனை சுமிம்மா..” என்று கேட்க வெடுகென்று திரும்பியவள் அவனை வெட்டும் பார்வை பார்க்க அவனின் உதட்டில் ரகசிய புன்னகை மலர்ந்தது.

“இவளை படிக்க வைக்கலாம் என்று நினைத்தால் இன்னும் பிளஸ் டூ முடிக்கல என்று சொல்ற..” என்றவர் சங்கடத்துடன் கூறினார்.

சிறிதுநேரம் சிந்தனையில் ஆழ்ந்த கவிபாரதி, “சுமிம்மா எக்ஸாம் க்கு இன்னும் மூன்று மாதம்தான் இருக்கு. இவங்க கண்டிப்பா பாஸ் பண்ணுவேன் என்று சொன்னால் நான் இவங்களை டுடேரியலில் சேர்த்துவிடுகிறேன்..” என்று தானாகவே கூறினான்.

அவன் சொன்ன யோசனை நன்றாக இருக்கவே, “நிலா நீ என்னம்மா சொல்ற..” அவளிடம் கேட்க அவனின் பார்வையும் அவளின் மீது நிலைத்தது.

ஏனோ அவள் சரியென்று சொல்ல வேண்டும் என்று அவனின் உள்ளம் தவித்தது. அதற்கான காரணம் என்னவென்று அவனுக்கே தெரியவில்லை..

“ஆண்களை நம்பி போனால் இங்கே இருக்குது பாரு இதுதான் கிணறு என்று சொல்லி பாழும் கிணற்றில் தள்ளிவிட்டு எனக்கென்ன வந்தது என்று வந்திருவாங்க.. நான் யாரை நம்பியும் போக தயாராக இல்ல. அதற்கு நான் படிக்காமல் இருப்பதே மேல்..” இடத்தைவிட்டு எழுந்துவிட்டாள் நிலா

அவளின் இந்த பதிலில் அவனின் முகம் மாறுவதை மனதில்
குறித்துக்கொண்ட சுமிம்மா, “பட்டிக்காடு மாதிரி பேசாதே  நிலா. அவன் உன்னோட படிப்பிற்கு தானே யோசனை சொன்னான்.. ” என்றார் சுமிம்மா.

நிலாவோ தன்னால் முடிந்தவரை அவனை முறைக்க அவனின் பார்வை அவளின் விழிகளை தழுவிச்செல்ல அவளின் கோபம் அதிகரிக்க அவனை மீண்டும் முறைத்தாள்..

அவளின் கோலிகுண்டு விழிகள் அவனை முறைக்கும் பொழுதெல்லாம் அவனின் மனதில் ஏதோவொரு சலனம். அவனின் உள்ளத்தில் கல்லை வீசியவளின் விழி வீச்சில் அவனின் உதட்டில் புன்னகை அரும்பியது.

“ரோட்டில் போகிறவன் அவன் பாட்டிற்கு போக தெரியாமலா இங்கே வந்து உட்கார்ந்து நமக்கு யோசனை சொல்லிட்டு இருக்கிறான். இந்த பிடிவாதம் வேண்டாம் நிலா..” என்றவர் மீண்டும் தன்மையாக பேசினார்..

“ரோட்டில் போகிறவர் அப்படியே போகவேண்டியது தானே.. இங்கே இவருக்கு என்ன வேலை. எனக்கு யோசனை சொல்லுங்க என்று இவரை வெற்றிலைபாக்கு வெச்சு நான் கூப்பிட்டேனா?” என்று கோபத்துடன்

படபடக்கவே அவனின் பொறுமையும் காற்றில் பறந்தது.
“சுமிம்மா நான் உங்களோடு பேசத்தான் வந்தேன். மற்ற யாருக்கும் யோசனை சொல்ல நான் வரல.. யார் எக்கேடு கெட்ட எனக்கு என்ன வந்தது..” என்றவனும் அவளை முறைத்தான்.

சண்டை கோழிகள் போல நிற்கும் இருவரையும் பார்வையில் அளந்த சுமிம்மா மனதிற்குள் ஒரு கணக்கு போட்டு கொண்டார்.

“கவி அப்படிபட்ட பையன் இல்ல. அவனுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும்.அவனோட வேலைவிட்டு அவன் வந்து பேசுவது உனக்காக இல்ல அதை முதலில் புரிந்து பேசு..” என்று மீண்டும் அதட்டினார்.

நிதர்சனம் புரிந்து அவள் மெளனமாகவே, “கடைசியாக உன்னோட முடிவு என்ன?” என்று கேட்க, “நான் படிக்கிறேன் சுமிம்மா..” என்றாள் நிலா

“இன்னும் மூன்று மாதத்தில் படிக்க முடியுமா? நீ படிக்கும் பொழுது இருந்த சிலபஸ் வேற இப்பொழுது இருக்கிற சிலபஸ் வேற..” என்றதும், “என்னால படிக்க முடியும்.. நிலா ஒன்றும் முட்டாள் இல்ல..” என்று சிடுசிடுத்தாள்.

‘சரியான சிடுமூஞ்சி..’ என்று மனதிற்குள் பொரிந்து தள்ளிவிட்டு, “சரிங்க சுமிம்மா நாளை இவளோட சர்டிபிகேட் எல்லாம் எடுத்துட்டு இந்த முகவரிக்கு வந்துவிடுங்க சுமிம்மா..” என்றான்..

அவன் அவளை ஒருமையுடன் அழைத்ததை அவளும் கவனிக்கவில்லை.இவளும் கவனிக்கவில்லை. ஆனால் சுமிம்மா மட்டும் கவனித்துவிட்டு தனக்குள் புன்னகைத்துக் கொண்டார்.

“எனக்கு வேலை என்னப்பா பண்ண போகிற.. சொல்லுங்க கரஸ்பாண்டன்ட் ஐயா..” வழக்கத்திற்கு மாறாக அவர் ரொம்ப பணிவாக கேட்க, “சுமிம்மா நீங்க என்னை கலாயிக்கிறீங்க..” வாய்விட்டு சிரித்தான் பாரதி.

நிலா வேறுபுறம் திரும்பி நிற்கவே, “இன்னும் மூன்று மாதம் இவளுக்கு படிப்பு சொல்லுதாங்க சுமிம்மா. அடுத்த இயர் நான் உங்களுக்கு வேலை போட்டு கொடுக்கிறேன்..” என்றவன் அக்கறையுடன் கூறினான்..

‘ரொம்பத்தான் அக்கறை..’ என்று உதட்டைச் சுளிக்க, அவனின் பார்வை ரசனையுடன் அவளின் மீது படிய முகத்தை திருப்பிவிட்டாள் நிலா.

“இங்கே வந்து ஒரு மணிநேரம் ஆச்சும்மா. நாளைக்கு நீங்க இந்த டுடேரியல் வந்திருங்க. நான் மற்றதைக் கவனித்துக் கொள்கிறேன்..” அந்த இடத்தில் முகவரியை கொடுத்தான்.

“சரிப்பா நாளைக்கு வேண்டாம்ப்பா. திங்கள் கிழமை வருகிறோம் நீ வந்து இவளை சேர்த்துவிடு..” என்றதும் சிறிதுநேரம் யோசனைக்கு பிறகு அவர்களிடம் விடை பெற்று சென்றான்.

சுமிம்மாவும், நிலாவும் வீடு வந்து சேர்ந்த மறுநொடியே தான் கொண்டு வந்த பெட்டியை எடுத்து எதையோ தேடிட அவள் தேடிய பொருள் கிடைக்காமல் சோர்ந்து வாசலில் வந்து அமர்ந்தாள்.

‘இப்போ சர்டிபிகேட் இல்லாமல் படிக்க முடியாதே. இப்போ நான் என்ன பண்ண..’ என்ற சிந்தனையில் இருக்க, அப்பொழுது ரித்திகாவின் தாத்தாவிற்கு ஒரு கொரியர் வரவே அந்த சிந்தனை அவளின் உள்ளத்தில் உதயமானது.

“சுமிம்மா உங்க செல் கொஞ்சம் கொடுங்க நான் ஒரு போன் பண்ணனும்..”என்றதும் அவளின் கையில் செல்லைக் கொடுத்துவிட்டு நகர்ந்துவிட்டார்..

அவள் நம்பரை டைப் செய்து அழைப்பில் காத்திருக்க மறுபக்கம் போனை எடுக்க காத்திருந்தவளின் உள்ளம் இங்கே படபடத்தது..

மொட்டு வளரும்.