MMV-6

MMV-6

அத்தியாயம் – 6

அதிகாலை பொழுது விடிந்திட, நிரஞ்சனின் வீட்டிலிருந்து போன் அலறியது. அத்தையுடன் சேர்ந்து சமையலைக் கவனித்துகொண்டிருந்த நித்திலாவோ, “யார் இந்த நேரத்தில்..” சிந்தனையுடன் சென்று போனை எடுக்க, “அக்கா நான் சங்கரி..” என்றவள் அவசரமாகவே..

சங்கரி மதுரை காலேஜில் கம்பியூட்டர் இன்ஜினியரிங்க்கு அப்ளிகேஷன் போட்டிருக்கிறாள். நித்திக்கு அடிக்கடி இப்படி போன் செய்து விசாரிப்பாள் சங்கரி.

அதற்குள் அவளின் முகம் மலர, “சங்கரி நல்ல இருக்கிறாயா?” பாசத்துடன் விசாரிக்க அவளின் கோபமே அதிகரித்தது..

“அக்கா இன்னும் நீங்கச் சுமிம்மாவைத் தேடவே இல்லயா?” தாயின் நினைவில் நித்தியின் கண்கள் கலங்கியது..

“மாமா எங்கே..” என்றவளின் குரல்கேட்க அதே நேரத்தில் ஆபீஸ் கிளம்பிய நிரஞ்சன் அவளின் பின்னோடு வந்து நின்றான்.

அவள் கண்கலங்க நின்ற தோரணையே அவளின் மனநிலையை உணர்ந்திட, “நித்தி போனை கொடு..” அவளிடமிருந்து போனை வாங்கிய நிரஞ்சன், “சங்கரி எப்படிம்மா இருக்கிற?” என்று விசாரித்தான்..

“நீங்கப் பேசதீங்க மாமா..” என்றவள் கோபத்துடன்..

“நானும் என்னோட அத்தையைத் தேடிட்டே தான் இருக்கிறேன் சங்கரி. அத்தை வேலையை ரிஸைன் பண்ணிட்டு எங்கயோ இருக்காங்க..” என்றவனின் குரலிலும் வருத்தமே மிஞ்சியது..

நித்தி கண்ணீரோடு கணவனின் தோள் சாய பாசத்துடன் அவளின் நெற்றியில் இதழ்பதித்த நிரஞ்சன், “சீக்கிரம் தேடி கண்டு பிடித்துவிடலாம் சங்கரி.. நீ அம்மாவைப் பற்றி யோசிக்காமல் படிம்மா..” என்று சமாதானம் செய்ய மறுப்பக்கம் மௌனம் நிலவியது..

“சரி மாமா. செப்டம்பரில் காலேஜ் ஸ்டார்ட் ஆகிரும். அக்காவை பத்திரமாகப் பார்த்துகோங்க..” என்றவள் போனை வைத்தாள்.

அவள் போனை வைத்த மறுநொடி, “நித்தி இந்த மாதிரி நேரத்தில் அழுகாதே. நான் அத்தையை சீக்கிரமே கண்டுபிடித்துவிடுவேன்.. என்னை நம்பும்மா..” என்றான் ஆறுதலாக!

நித்திலாவிற்கு இது மூன்றாவது மாதம். அவளுக்கு இது மசக்கை காலம் என்பதால் ரொம்பவே சோர்ந்து போனாள். அதனாலோ என்னவோ தாயின் நினைவு அவளை மேலும் வாட்டியது.

அவள் எப்பொழுதும் இருப்பது போல தன்னை மற்றவர் முன்நிலையில் காட்டிக் கொண்டாலும், அவளின் வருத்தம் அவனுக்குப் புரியாமல் இல்லை. நிரஞ்சன் சுமிம்மாவைத் தேடாத இடமில்லை. ஆனால் தேடலின் முடிவு என்னவோ பூஜ்யம் தான். அதற்காக சோர்ந்துப் போகாமல் இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறான்.

அவர்களின் கல்யாண வாழ்க்கையில் சீராகச் சென்றாலும், பாசம் வைத்த இருவரின் மனமும் சுமிம்மாவைத் தேடிக்கொண்டே இருக்கிறது..

*******

அதன்பிறகு வந்த நாட்களில் நிலா தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்த, அவளுக்கு ஆசிரியராகவே மாறிவிட்டார் சுமிம்மா. அவளும் கொஞ்சம் ஆர்வமாக படித்தாள். அவளின் படிப்பை கருத்தில் கொண்ட சுமிம்மா பாரதியை மறந்தேவிட்டார்.

நிலாவைப் பார்க்கும் நேரத்தில், கவியின் முகம் அவரின் மனதில் வந்து சென்றாலும், ‘இந்த பிள்ளை முதலில் படிப்பை முடிக்கட்டும்..’ என்று நினைத்தார். நிலா டுடேரியல் சென்றபிறகு தனியாக இருக்கும் நேரத்தில் தன்னுடைய குடும்பத்தையும் நினைத்துக் கொள்வார்.

நதி பிறந்த இடத்திலிருந்து கடலில் கலக்கும் வரை ஓடுவது மற்றவரின் நன்மைக்காகவே. சுமிம்மாவின் வாழ்க்கையின் ஓட்டம் நதிக்கு ஈடானது. அவர் பிறந்ததில் இருந்தே அவருக்காக வாழ்ந்த நாட்களைவிட, அடுத்தவர்களின் நன்மைக்காக வாழ்ந்த நாட்கள்தான் அதிகம்.

அவர் பிள்ளைகள் பெறாவிட்டாலும் கூட, தன்னால் முடிந்த வரை அடுத்தவருக்கு நன்மை செய்தே பழகிய உள்ளம் இன்று ஐம்பது நான்கு வயதிலும் நீள்கிறது.

இவர்கள் பாரதியை சந்திக்காமல் இருந்தாலும் கூட, நிலாவின் படிப்பில் மறைமுகமாகக் கவனம் செலுத்தினான் பாரதி. அவள் படிக்கும் டுடேரியல் ஆசிரியரிடம் அடிக்கடி போன் செய்து விசாரித்துக் கொள்வான்.

மற்றபடி நேரடியான சந்திப்புகள் குறைவு என்பதைவிட அவர்கள் சந்திக்கவே இல்லை என்று சொல்லலாம்.. தன்னுடைய வேலை, தம்பியின் படிப்பு என்று பாரதியின் நாட்கள் சென்றது.

மூன்று மாதங்கள் மின்னல் வேகத்தில் ஓடி மறைந்திட பப்ளிக் எக்ஸாம் எழுதி முடித்துவிட்டு ரிசல்டிற்காக காத்திருந்தாள்.

அன்று ரிசல்ட் காலையில் எழுந்து குளித்துவிட்டு பரபரப்புடன் வீட்டைச் சுற்றிக்கொண்டிருந்த நிலாவின் விழிகள் அடிக்கடி மணியைப் பார்த்தது.

“காலையில் மூணு மணிக்கே எழுந்து குளிச்ச நேரம் போகவே போகாது நிலா..” என்று அவளைக் கேலி செய்து சிரித்தார் சுமிம்மா.

“நான் என்னம்மா பண்ணட்டும். நைட் எல்லாம் தூக்கமே வரல. காலையில் குருவி சத்தம் கேட்டதும் எழுந்து குளிச்சிட்டேன். அப்புறம் பார்த்த மணி மூணு..” என்று அசடு வழிய சிரித்தாள்..

அதன்பிறகு சுமிம்மாயுடன் சேர்ந்து அவள் வேலைகளைக் கவனித்தாலும், அவளின் கவனம் என்னவோ கடிகாரத்தின் மீதுதான் இருந்தது.

அவள் மணியைப் பார்த்துவிட்டு, ‘இந்நேரம் ரிசல்ட் வந்துருக்கும் இல்ல. ஏன் போன் வரவே இல்ல..’ அவள் சிந்தனையுடன் நின்றிருக்க, “நிலா பயப்படாமல் இரு நிலா..” என்றவர் புன்னகை முகமாக வலம்வந்தார்.

அதேநேரத்தில் அவளின் ரிசல்ட் பார்த்துவிட்டு அவள் படிக்கும் டுடேரியலில் சுமிம்மாவின் முகவரியை வாங்கிகொண்டு அவர்களின் வீட்டிற்கு வந்தான்.

‘என்ன நடக்குது என்று பார்க்கலாம்..’ நிலக்கதவுடன் சாய்ந்து நின்றுவிடவே,  அவன் வந்து வாசலில் நிற்பதை கவனிக்காத நிலாவோ,“நீங்க ஈஸியாகச் சொல்லிட்டீங்க.. எனக்குதான் இங்கே பக்கு பக்குன்னு இருக்கு..” என்றவள் மலர்ந்த புன்னகையுடன்.

“இரண்டு வருடம் படிப்பை விட்டுவிட்டோமே பாஸ் பண்ணுவோமா மாட்டோமா? என்று பயப்படுகிறாயா நிலா..” என்று கேட்டு அவளை அதிரவைத்தார் சுமிம்மா.

அதுவரை இருந்த மனநிலை மாறி, “ஸாரிம்மா நான் உங்களிடம் மறைக்க நினைக்கல. எனக்குப் பத்தொன்பது வயதுதான். கடந்து சென்ற இரண்டு வருடத்தில் என்னோட வாழ்க்கையில் என்னென்னவோ நடந்துவிட்டது..” என்றவளின் நினைவுகள் எங்கோ சென்று திரும்பியது.

அதைகேட்ட பாரதியோ, ‘ஓஹோ மேடமிற்கு பத்தொன்பது வயசு ஆகிவிட்டதா? அப்புறம் எதற்காகப் பொய் சொன்னா?’ என்று புரியாமல் குழம்பினான்.  ஏதோ நினைவில் அவள் சிலையாகி நின்றாள்.

அவளின் தோளைத் தொட்டு, “காலங்கள் நின்றுவிட்டால் காயங்களும் மனதோடு நின்றுவிடும் நிலா. அதனால் தான் காலமும், நேரமும் நிற்காமல் ஓடுகிறது..” என்றார்.

அதே நேரத்தில், “சுமிம்மா நான் உள்ளே வரலாமா?” அவனின் குரல்கேட்டு இருவரின் கவனமும் களைந்துவிட, இருவரும் திரும்பி வாசலைப் பார்க்க வாசலில் நின்றிருந்தான் பாரதி.

“வாப்பா..” என்று வீட்டின் உள்ளே அவனை அழைக்க அவனின் பார்வையோ நிலாவின் மீது நிலைத்தது.

“நிலா நீ போய் தம்பிக்குக் குடிக்க தண்ணீர் எடுத்துவிட்டு வா..” என்று அவளை சமையலறைக்குள் அனுப்பிவைத்தவர், “நிலா நல்ல மார்க் எடுத்திருக்கா இல்ல?” சன்னக்குரலில் பதட்டத்துடன் கேட்டார் சுமிம்மா.

“ம்ம் நல்ல மார்க் எடுத்திருக்கிறாங்க சுமிம்மா. அவங்க டுடேரியலில் படித்த மாணவர்களில் இவள்தான் சூப்பர் மார்க். 1150 மார்க்” என்றதும் சுமிம்மாவின் மனம் நிறைந்து போனது.

“ஹப்பட்டா என்னோட நம்பிக்கையும், உழைப்பும் வீண் போகல..” என்று பெருமூச்சுவிட்டார் சுமிம்மா.

அதற்குள் அங்கு வந்த  நிலா அவனின் கையில் தண்ணீரைக் கொடுக்க, “என்ன மேடம் சூப்பர் மார்க் எடுத்திருக்கீங்க எங்களுக்கு டிரீட் இல்லையா?” என்று இயல்பாகவே கேட்டான்

“உனக்குப் பார்ட்டி நான் வைக்கிறேன் பாரதி. அவள் பாஸ் பண்ணியதில் அவளைவிட எனக்குதான் சந்தோசமாக இருக்கு..”

“சுமிம்மா என்ன இப்படி அசால்ட்டா சொல்லிட்டீங்க..” பாரதி அதிர, “நீ பார்ட்டி வேண்டும் என்று கேட்ட.. நான் பார்ட்டி தரேன்னு சொன்னே.. இதில் என்னடாப்பா இருக்கு..” என்றவரின் கேலிகுரலைக் கவனித்தான்.

“சுமிம்மா உங்களை எப்படித்தான் அப்பா சமாளித்தாரோ எனக்குத் தெரியல..” என்றதும், “அப்பா இருந்த நீ இந்தளவு வாய்பேச வாய்ப்பே இருக்காது..” என்றவர் வாய்விட்டுச் சிரித்தார்.

அடுத்த கணம் பாரதியின் பார்வை அவள்மீது படிந்து மீண்டது. தேர்வில் வெற்றிபெற்ற பூரிப்பில்  தலையைக்குனிந்து நின்றவளின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்திருந்ததைக் கவனித்தவனின் மனமும் நிறைந்தது.

அவளின் முகம் அவனுக்கு மிகவும் பரிச்சயமான முகமாக இருக்கவே, ‘இவளை இதற்கு முன்னர் எங்கோ பார்த்திருக்கிறேனே..’ அவனின் புருவங்கள் சுருங்கிட, அவனின் சிந்தனையைக் கலைத்தது சுமிம்மாவின் குரல்..

“இப்பொழுது ரிசல்ட்  வந்துவிட்டது. அடுத்து இவளோட படிப்பு மற்றும் என்னோட வேலை..” என்று கேள்விகளை அடுக்கினார்

“சுமிம்மா இந்தாங்க அப்பாயின்மென்ட் ஆடார். அடுத்த வாரம் நீங்க வேலையில் ஜாயின் பண்ணனும்..” என்றவன் லெட்டரை அவரின் கையில் கொடுத்தான்.

“நிஜமாவா பாரதி..” என்று ஆச்சரியத்துடன் விழி விரிய கேட்க, “மேடம் இனிமேல் பொது இடத்தில் என்னை வருத்தேடுக்காமல் இருங்க..” என்றான் அவன் பாவமாக..

“ஏண்டாப்பா உன்னோட இமேஜ் ஸ்பாயில் ஆகுதா?” என்று மீண்டும் அவனை வம்பிற்கு இழுத்தார் சுமிம்மா.

“உங்களிடம் பதில் பேச என்னால் முடியாதும்மா..” வெற்றிகரமாக அவன்  பின்வாங்கவே, “சுமிம்மா மேல கொஞ்சம் பயம் வேண்டாமா?” என்றவனை மிரட்டியவர், “இவளோட படிப்பு..” இருவரும் பேசுவதை அவள் நின்று வேடிக்கைப் பார்த்த நிலாவைக் கைகாட்டினார்

உடனே அவளின் பக்கம் திரும்பிய பாரதி, “உனக்கு அப்ளிகேஷன் கொண்டு வந்திருக்கிறேன் கோர்ஸ் மட்டும் செலக்ட் பண்ணி சையின் கொடு. கூடவே மற்ற டீடைல்ஸ் எழுதிவிடு..” சரியென தலையசைத்தவள், அவனிடமிருந்து அப்ளிகேஷன் வாங்கி கொண்டாள்.

அவன் கேட்ட தகவல்களை எல்லாம் எழுதி முடித்து அப்ளிகேஷனை அவனிடம் கொடுக்க, “நாளைக்கு வந்து காலேஜில் சேர்ந்துக்கோ. அடுத்தவாரம் அம்மாவுடன் காலேஜ் வந்தால் போதும்..” என்றதும் மீண்டும் தலையைமட்டும் மட்டும் ஆட்டினாள் நிலா.

“நல்ல தலையாட்டிப் பொம்மை மாதிரியே தலையை மட்டும் ஆட்டு..” என்றவன்  பார்வையை சுமிம்மாவின் பக்கம் திரும்பி, “நீங்க பட்டிக்காடு என்று சொல்வதில் தவறே இல்ல சுமிம்மா..” என்று நிலாவை கேலி செய்து சிரித்தான்..

நிலா அவனை முறைக்க, “அம்மா அக்னிநட்சத்திரம் அதோட வேலையைக் காட்டும் முன்னே நான் கிளம்பறேன்..” அவன் யாரைச் சொல்கிறான் என்று புரிந்து கொண்டார் சுமிம்மா.

“போடா போக்கி பயலே..” என்றவர் புன்னகைக்க, “சரிம்மா சொன்னது நினைவில் இருக்கட்டும்..” இருவரிடமும் விடைப்பெற்றுச் சென்றான்.

அவன் சென்றபின்னர் தான் சுமிம்மாவிற்கு அந்த சந்தேகமே எழுந்திட, “ஆமா இவனிடம் நான் வீட்டு அட்ரஸ் கொடுக்கவே இல்லையே இவன் எப்படி வீடுவரைக்கும் வந்தான்..” வாய்விட்டுப் புலம்பினார் சுமிம்மா.

அதை கருத்தில் கொள்ளாத நிலவோ, “சுமிம்மா நான் பாஸ் பண்ணிட்டேன்..” என்று அவரின் காலில் விழுக, “நீ இன்னும் நல்லா படித்து டிகிரியில் கொல்டுமேடல் வாங்கணும்..” அவளை ஆசிர்வாதம் செய்தார்.

“நான் ரித்திகா அக்காவிடம் சொல்லிட்டு வருகிறேன்..” என்றவள் சிட்டாக பறந்துவிட்டாள். அடுத்த ஒருவாரம் மின்னல் வேகத்தில் சென்றது..

ரித்திகா கல்லூரி நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்க நிலாவும் சுமிம்மாவும் அவளுடன் சேர்ந்து கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்தனர்..

கல்லூரி பறவைக்களுக்குச் சிறகு முளைத்திருந்தாலும் கூட, அந்தப் பறவைகள் சுதந்திரமாக வானில் பறக்கக் கற்றுகொடுக்கும் இந்த கல்லூரி வாசல் கூட அழகான வேடந்தாங்கல் தான்..

பல ஆசைகளை நெஞ்சில் தேக்கியவண்ணம், கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கும் தேன்சிட்டுகளுக்கு பறக்க பயிற்சி கொடுப்பது மட்டுமே இந்த கல்லூரியின் வேலை.

இந்த சிட்டுகளின் சந்தோசம் எல்லாம் இந்த வேடந்தாங்கலின் உள்ளிருக்கும் வரைதான். பறவைகள் வானில் சிறகடித்து பறந்த பின்னரும் மனம் இன்றும் தேடும் ஒரே இடம் அது கல்லூரி மட்டுமே.

இந்த அழகான வேடந்தாங்கலுக்குள் தானும் ஒரு பறவையாக மாறிவிட நினைத்து கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறாள் நிலா. சுமிம்மா ரித்தியுடன் பேசியபடியே நடந்துவர, நிலாவின் பார்வையோ அந்த கல்லூரியை சுற்றி வந்தது..

காலேஜ் காம்பவுண்ட் சுவற்றில் தொடக்கத்திலிருந்து முடிவுவரை வானத்தை தொடும் அளவிற்கு உயர்ந்து நின்றன மரங்கள். அந்த மரங்களின் பின்னோடு  ஒரு அழகான கட்டிடம் இருப்பது ரோட்டில் செல்லும் யாருக்குமே தெரியாது..

அந்த மரங்களுக்கு கீழே சிமிண்ட் பெஞ்சுடன் நிழல்குடையும் சேர்ந்து அமைக்கபட்டிருக்க வண்டிகள் நிறுத்த மட்டுமே தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.. அதன் அருகில் கேண்டின் அமைக்கபட்டிருந்தது..

அதை தாண்டி உள்ளே சென்றால் மெயின் பிளாக், ஏ பிளாக், பி பிளாக் மற்றும் சி பிளாக் மூன்று கட்டிடங்கள் சதுர வடிவில் தனித்தனியாக இருக்க, மூன்று கட்டிடமே குறைந்தது மூன்று மூன்று மாடிகள் இருந்தது..

அதன் நடுவே ஒரு சின்ன மண்டபம் போல இருக்க அதன் கீழே பிள்ளையார் சிலை அழகாக இருந்தது.  அதை சுற்றிலும் செடிகொடிகள் படர்ந்திருக்க, அந்த காட்சியே வெகு ரம்மியமாக இருந்தது..

கட்டிடங்களுக்கும் செல்ல தனியாக வழித்தடங்கள் அமைக்கப்பட்டிருக்க அந்த இடங்களை மிகவும் அழகாக பராமரித்திருந்தது கல்லூரியின் நிர்வாகம்.

அந்த கட்டிடத்தின் நேர் பின்னாடி திரும்பிச் சென்றால் பெரிய ஆடிடோரியம் மற்றும் அழகாக பிளே கிரவுண்டு அமைக்கபட்டிருந்தது. அங்கே செல்ல மையின் பிளாக்கின் பின்னோடு வழி சென்றது.. அங்கும் மரங்களை வளர்த்திருந்தனர் மாணவர்கள் இளைப்பாற அமருவதற்கு தனியாக படிக்கட்டுகளும் நீளமாக அமைக்கபட்டிருந்தது. அதன் இருபுறமும் செங்கொன்றை மரங்கள் மலர்களை உதிர்த்து அந்த இடத்திற்கு அழகை சேர்ந்தது.

அந்த கட்டிடங்களுக்கு செல்லும் வழித்தடங்கள் எங்கிலும் பூச்செடிகள் மட்டுமே அமைக்கபட்டிருந்தது. சுமிம்மாவை விட நிலா அந்த கல்லூரியின் அழகை ரசித்தவண்ணம் மெல்ல நடந்தாள்.

“ஏய் கொத்தவரங்கா யாரை எஸ்கேப் பண்ணி கூட்டிட்டு போற..” என்ற குரல் நிலாவின் கவனத்தைக் கலைக்க, “ரித்தி கொஞ்சம் நில்லு யாரு அந்த பூசணிக்கான்னு பார்த்துட்டு அப்புறம் போலாம் வா ..” என்று ரித்திவை விலகிவிட்டு அவர்களைப் பார்த்தார் சுமிம்மா.

மொட்டு வளரும்.

error: Content is protected !!