அத்தியாயம் – 9

இரவு நன்றாக உறங்கிய நிலா நடுராத்திரியில் தூக்கம் களைந்து எழுந்து அமர்ந்தாள். அவளின் அடிவயிற்றில் கொஞ்சம் கொஞ்சமாக வலி பரவிட, அவளின் முகமே வலியால் மாறிப்போனது. மெல்ல நகர்ந்து சுவற்றில் சாய்ந்து அமர்ந்த நிலாவின் பார்வை சுமிம்மாவின் மீது விழுந்தது. அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, ‘கொஞ்ச நேரத்தில் வலி சரியாகிவிடும்’ என்று தன்னை சமாளிக்க முயன்றாள்.

ஆனால் நேரம் கடந்து செல்ல செல்ல அவளின் வலி அதிகமாகவே, ‘ஐயோ அம்மா வலிக்கிறதே..’ அவள் வலியால் துடிக்கத் தொடங்கினாள். சுமிம்மாவை எழுப்ப சொல்லி அவளின் மூளை கட்டளை இட்டாலும் மனம் அதைக் கேட்க மறுத்தது.

அத்தனை வலியையும் தாங்கிக்கொண்டு எழுந்த நிலா பின் கதவைத்திறந்து கிணற்றடிக்கு சென்றாள். வானம் நிலவு இல்லாமல் வெறுமையாக இருக்க காற்று சிலுசிலுவென்று அடித்திட அடிவயிற்றில் வலி அதிகமானது.

கிணற்றடி திட்டில் அமர்ந்த நிலாவால் வலியைத் தாங்க முடியாமல், “அம்மா அம்மா..” என்று வாய்விட்டு வலியால் கதறினாள். அவள் தன்னையும் மறந்து அழுதிட அவளின் குரல்சத்தம் உயர்ந்ததை அவள் கவனிக்கவில்லை.

கெட்ட கனவு கண்டு கண்விழித்த சுமிம்மா அருகில் நிலாவைக் காணாமல், ‘இந்த நேரத்தில் எங்கே போனா?’ என்ற கேள்வியுடன் அவர் திரும்பிப் பார்க்க பின்வாசல் கதவு திறந்திருப்பதை கவனித்தார்.

‘பின்வாசல் கதவு திறந்து கிடக்குது..’ என்று எழுந்த சுமிம்மா பின் வாசலுக்குச் சென்றார்.

அங்கே வலிதாங்க முடியாமல் துடிப்பதைக் கண்டதும், “நிலா என்னடா பண்ணுது. ஐயோ பிள்ளை வலியில் தனியாக துடிக்கிறாளே..” என்றவர் அவளின் அருகில் அமர்ந்துப் பதட்டத்துடன் கேட்டார்

“அம்மா வயிறு ரொம்ப வலிக்குது அம்மா..” என்றவள் குழந்தை போல கதற சுமிம்மாவிற்கு கண்கள் கலங்கியது.

“ஐயோ இந்த நேரத்தில் நான் உன்னை அழைச்சிட்டு எங்கே போவேன்..” என்றவரின் நினைவில் வந்து நின்றது பாரதியின் முகம். ஒரு நிமிஷம் சிந்தனையில் ஆழ்ந்த சுமிம்மா, வேகமாக எழுந்து வீட்டிற்குள் சென்றார்.

மணி இரண்டை கண்டது சென்று கொண்டிருக்க, ‘இந்த நேரத்தில் அவனோட தூக்கத்தைக் கலைப்பாதா?” என்ற கேள்வி அவரின் மனதில் எழுந்தது. அதை யோசிக்க நேரம் இல்லாமல் அவனுக்கு அழைத்தார் சுமிம்மா.

அலைபேசியின் அவனின் உறக்கத்தை கலைக்க, ‘இந்த நேரத்தில் யாரு..’  போனை எடுத்தவன் அரைத் தூக்கத்தில், “ஹலோ..” என்றான்.

“பாரதி நான் சுமிம்மா பேசறேன்..” என்றார் சுமிம்மா.

அவரின் குரலிலிருந்த பதட்டம் அவனின் தூக்கத்தைக் கலைத்துவிட, “சுமிம்மா என்ன இந்த நேரத்தில்..” என்றவனையும் பதட்டம் தொற்றிக் கொண்டது.

“நிலா வயிற்று வலியில் துடிக்கிறப்பா. ஏன் என்று எனக்கு தெரியல. நீ கொஞ்சம் வீடு வரை வாப்பா..” என்ற சுமிம்மாவின் குரலைத் தாண்டி ஒலித்தது நிலாவின் அழுகைக்குரல்!

அவளின் கதறல் கேட்டதும் அவனின் இதயத்துடிப்பு அதிகரிக்க, ‘என்னோட நிலாவிற்கு என்ன ஆச்சு..’  தன்னையும் மீறி பதறினான் பாரதி.

“நீங்க அவளைப் பார்த்துக்கோங்க அம்மா நான் இதோ வருகிறேன்..” அழைப்பைத் துண்டித்துவிட்டு வேகமாக எழுந்தவன் காரின் சாவியை எடுத்துகொண்டு கிளம்பினான். தம்பியை அழைத்து தகவல் சொல்லலாம் என்ற எண்ணம் கூட இல்லாமல் காரை எடுத்தான்.

இரவின் நிசப்தத்தைக் களைத்தவண்ணம் மின்னல் வேகத்தில் சென்றது பாரதியின் கார். “அவளை நேரில் பார்த்தாலே போதும்” என்று மனம் சொல்ல, பாரதியோ பதட்டத்துடன் காரை செலுத்தினான்.

இரவு நேரம் என்பதால் ரோட்டில் அதிகம் டிராபிக் இல்லாமல் இருக்க கார் சாலையில் சீறிபாய்ந்து சென்றது. அவன் சென்று வீட்டின் கதவை தட்டும் முன்னரே அவனின் காரின் சத்தம் கேட்டு வந்து கதவைத் திறந்தார் ரகுராம்.

“வா பாரதி. பாவம் நிலா ரொம்ப நேரம் வலியால் துடிக்கிற. அவளோட அழுகை குரல்கேட்டு என்னோட தூக்கமே கலைஞ்சிப் போச்சுப்பா. அந்த பிள்ளைக்கு என்னவோ ஏதோ என்று மனசு முழுக்க பதட்டமாக இருக்கு..” என்றவரின் பின்னோடு நின்றிருந்தாள் ரித்திகா.

ஒரு நிதானம் இல்லாமல் தன்னையே மறந்த நிலையிலிருந்த பாரதியின் காதுகளும் செயலிழந்து இருந்தது போல. அவர் சொன்ன எதுவும் அவனின் காதுகளுக்கு எட்டவில்லை. நேராக சுமிம்மா தங்கிருக்கும் வீட்டிற்குள் நுழைந்தான்.

நடுஹாலில் வலியில் துடித்த நிலாவைப் பார்த்தும், “நிலா என்னடா ஆச்சு..” என்றவன் பதட்டத்துடன் அவளின் அருகில் சென்றான்.

அவள் வலியில் உதட்டைக் கடிக்க, “இவளுக்கு என்னாச்சு என்று பாருப்பா..” என்ற சுமிம்மாவின் குரலில் சுயநினைவு பெற்றவன் வேகமாக அவளுக்கு செக் பண்ணி அவளுக்கு ஊசிப்போட்டான்.

கொஞ்சநேரத்தில் அவளின் வலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்திட, “நிலா ஆர் யூ ஓகே..” என்று சொல்ல, “ம்ம்..” என்றவள் சுமிம்மாவின் மடியில் தலைவைத்து படுத்துவிட அவளின் கூந்தலை மெல்ல வருடிவிட்டார் சுமிம்மா.

“என்ன பாரதி நைட் சாப்பிட்ட சாப்பாடு சரியில்லாமல் இப்படி ஆகிவிட்டதா?” என்று சுமிம்மா அவனிடம் விளக்கம் கேட்க, “இல்லம்மா. சாப்பாட்டில் எந்த பிரச்சினையும் வரல. இவளுக்கு வேறு ஏதோ பிரச்சனை இருக்கு..” என்றவனின் புருவங்கள் சிந்தனையில் சுருங்கியது.

ரகுராம் மற்றும் ரித்திகா இருவரும் தூங்காமல் அங்கேயே அமர்ந்துவிட அதுவரை வலியால் துடித்தவள் மெல்ல தூக்கத்திற்கு செல்லும் நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாரதி, “நிலா உனக்கு ஏன் வயிற்றுவலி வந்தது..” அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.

“எனக்கு ஆப்ரேசன் பண்ணியிருந்தாங்க. இந்த மாதிரி வலி வரும்பொழுது ஒரு மாத்திரை போட சொன்னாங்க. அந்த மாத்திரையை நான் எடுத்துவர மறந்துட்டேன்..” என்றவள் தன்னைமறந்து உறங்கிவிட்டாள்.

அது என்ன மாத்திரை என்று அவளுக்கு தெரியாத பொழுது அவளை முழுவதுமாக செக் பண்ணாமல் சொல்ல முடியாது என்று உணர்ந்தவன், “அவளை முழு செக்கப் செய்தால்தான் சொல்ல முடியும் சுமிம்மா..” என்றான்

சிறிதுநேரம் சிந்தனையில் ஆழ்ந்த சுமிம்மா, “வா செக் பண்ண போலாம் என்று சொன்னால் கேட்க மாட்டாள் பாரதி. அவளாக வந்தால் தான் உண்டு..” என்றவரின் பார்வை நிலாவின் மீது நிலைத்தது.

அவனுக்கு அவர் சொல்வது புரிந்தாலும் கூட, ‘இவளுக்கு ஆப்ரேசன் எதற்கு நடந்தது.’ என்ற சிந்தனையுடன் அவரின் அருகில் அமர்ந்தவனின் பார்வை அவளின் மீது நிலைத்தது. அவள் உறங்குவதைக் கவனித்தவளின் உள்ளத்தில் நிம்மதி பரவியதை மனதார உணர்ந்தான்.

அவளுக்கு என்னோவோ ஏதோ என்று துடித்தவண்ணம் காரை ஓட்டிவந்தது மற்றும் இல்லாமல் அவளுக்கு ஒன்று என்றதும் அவன் அவனின் கட்டுப்பாட்டை இழந்து நின்ற நிமிடங்கள்!

அவளின் முகம் காணும் வரையில் தன்னுடைய மனதில் ஏற்பட்ட வலியும், அவளின் உயிர் அவளுக்காக துடித்த துடிப்பும் அவனின் மனக்கண்ணில் படமாக ஓடவே அது ஏன் என்ற ஆராய்ச்சியில் ஆழ்ந்தான் பாரதி.

‘நீ அவளைக் காதலிக்கிறாய்..’ என்றவனின் மனம் அவனுக்கு கொடுத்த பதிலில் திகைத்தவனின் பார்வை அவள் மேல் மையம் கொண்டது.

அதுவரை அழுது துடித்தவள் ஆழ்ந்த நித்திரைக்கு சென்றிருக்க அவளின் முகம் வீங்கி இருந்தாலும் குழந்தை போல உறங்கும் அவளிடம் பறிபோனது பாரதியின் உள்ளம்!

அவளின் கடந்த காலம் பற்றியோ அவள் ஏன் வீட்டைவிட்டு வந்தாள் என்பது பற்றியோ சிந்திக்காமல் அவளின் மனம் அறியாமலே, ‘தன்னுடைய வாழ்க்கையே அவள்தான்..’ என்று முடிவு செய்தவன் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தான்

அவனின் சிந்தனை அப்படி பயணிக்க சுமிம்மாவோ அவளின் கடந்த காலத்தைப்பற்றி அறிந்துகொள்ள நினைத்தார். அப்பொழுது தான் அவளின் பெட்டியை அவரின் பார்வையில் விழுந்தது.

சுமிம்மாவின் மனதில் அந்த சிந்தனை உருவாகவே, “ரித்திகா நிலாவோட பெட்டி அங்கே இருக்கு. அதை எடுத்து அதில் என்ன இருக்குன்னு பாரும்மா..” என்றவர் பாரதியிடம், “இவளுக்கு பெயின் கில்லர் கொடுத்திருக்கிறாயா?” என்று சந்தேகத்துடன் கேட்டார்.

“ம்ம் ஆமாம்மா. இப்பொழுது அவள் எழுந்திருக்க வாய்ப்பே இல்லை..” என்றவன் சொல்லிக் கொண்டிருக்க ரித்திகா எழுந்து சென்று நிலாவின் பெட்டியை எடுத்து வந்தாள்.

அவளின் பெட்டியைத்திறந்து நிலாவின் துணிகளை எடுத்து பாயில் அடிக்கிவிட்டு அந்த பெட்டியில் தேடிட அவர்களுக்கு எந்த துருப்புசீட்டும் சிக்காமல் போகவே, “எந்த பைலும் இல்லாமல் இவளுக்கு என்ன நடந்தது என்று எப்படி கண்டுப்பிடிக்க முடியும்..” என்றார் ரகுராம்.

“இவளுக்கு ஏதோ பிரச்சனை இருக்கு சுமிம்மா. அவளின் மனதில் என்ன இருக்கு என்று நீங்கதான் கண்டுபிடிக்க வேண்டும்..” என்றதும் நிமிர்ந்த சுமிம்மா, “சரிப்பா..” என்றார்.

“நான் வீட்டிற்கு கிளம்பறேன்..” என்றவன் அங்கிருந்து கிளம்பிசெல்ல அவனை வழியனுப்ப அவனின் பின்னோடு சென்றார் ரகுராம். அவன் காரில் ஏறி வீட்டிற்கு சென்றான்.

அவனின் கைகள் சீரான வேகத்கத்தில் காரைச் செலுத்தினாலும் அவனின் மனம் முழுவது அவளின் மீதே நிலைத்து நின்றது. நிலாவின் பின்னணி என்று அறிய நினைத்த மனமோ அவளைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தது.

அவன் எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. வீட்டிற்குள் நுழைந்தும் ஹாலிலிருந்த சோபாவில் அமர்ந்தவனின் விழிகள் மூடிட அவனின் விழிகளின் நடுவே அவள் வந்து நின்றாள்.

அவளின் வெட்டும் பார்வை அவனை பின் தொடர, ‘நிழல் போல இருக்கின்ற உனக்கு நிலவு என்ற பெயரா? எங்கோ இடிக்கிறதே. உன்னோட நிஜமுகம் தெரியாமல் நான் என்னோட காதலை சொல்ல மாட்டேன்..’ என்று இறுதியாக ஒரு முடிவெடுத்தான்.

நிலா நிஜத்திலேயே நிழல் போல தன்னைக் காட்டிக்கொண்டு இருளின் பின்னோடு மறையும் நிலவாக இருக்கிறாள். அவளை மறைத்து நிற்கும் அந்த இருளுக்கு பின்னாடி என்ன பின்னணி இருக்குமோ? ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவன் விழிமூடி உறக்கத்தில் ஆழ்ந்தான்.

ரித்திகா அந்த பெட்டியிலிருந்து எடுத்த துணிகளை எடுத்து அடிக்கி மீண்டும் அதே இடத்தில் கொண்டு போய் வைத்துவிட்டு வந்து பாயில் படுத்தாள்.

அவனை அனுப்பிவிட்டு வந்த ரகுராம் வீட்டின் முன்னாடி போடப்பட்டிருந்த கயிற்று கட்டிலில் படுத்து உறங்கிவிட சுமிம்மாவின் விழிகளில் மட்டும் தூக்கம் தொலைந்தது. நிலாவை பற்றிய சிந்தனையில் அவரின் மனம் ஆழ்ந்துவிட வானமோ விடியலை நோக்கி பயணித்தது.

தினமும் காலையில் கல்லூரிக்கு வரும அஜய் நண்பர்களுடன் இயல்பாக இருப்பது போல இருந்தாலும் கூட, அவனின் பார்வையில் தேடல் இருக்கவே செய்தது. ரேணுவும் அவனின் பார்வையைக் கவனிக்கவே செய்தாள்.

‘அவன் யாரைத் தேடுகிறான்?’ என்று அவளுக்குள் கேள்வி எழுந்தாலும் அதை அவள் வெளிக்காட்டாமல் மனதிற்குள் மறைத்தார். ‘சுமிம்மா வருவார்’ என்ற என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தவனின் காத்திருப்பு கடைசியில் தோல்வியில் தான் முடிந்தது. அடுத்த ஒருவாரம் காலேஜ் வரவில்லை.

அவர் கொடுத்த தீர்ப்பையும் தாண்டி அவனின் உள்ளத்தில் ஏதோவொரு தேடல். தான் தேடிய பொருள் ஒன்று கைக்கு கிடைத்த பிறகும் தொலைந்தது போலவே உணர்ந்தான். சுமிம்மா கல்லூரிக்கு வராத நாட்கள் எல்லாம் அவனின் எதிர்பார்ப்பு கூடியது.

அவருடன் சேர்ந்து ரித்திகாவும் கல்லூரிக்கு வராமல் இருக்க, “இந்த ரித்திகாவும் காலேஜ் லீவ் போட்டுட்டு என்ன பண்ணுவாளோ..” என்று புலம்பினான் திவாகர். அவளோடு சண்டை போடாமல் அவனின் நாட்கள் நகர மறுத்தது.

காலையில் எப்பொழுதும் போல கல்லூரிக்குள் நுழைந்த சுமிம்மாவைக் கவனித்த அஜயின்  தேடல் நிறைவடைய, ‘என்னை தவிக்க வெச்சிட்டீங்க அம்மா..’ என்றவனின் விழிகளின் ஓரம் கொஞ்சம் ஈரம்.

கிட்டதட்ட ஒரு வாரத்திற்கு பிறகு சுமிம்மா கல்லூரிக்குள் கவனித்த திவாகர், “ரேணு மேடம் வந்துட்டாங்க..” என்று ஆர்ப்பாடமாக கூறினான்.

“டேய் என்னடா சொல்ற..” என்ற ரேணு திரும்பி கல்லூரி வாசலை பார்க்க அங்கே வந்து கொண்டிருந்தார் சுமிம்மா.

நிலா அவருடன் பேசியவண்ணம் வரவே, “மேடம்..” என்றவர்கள் அவரைநோக்கி செல்ல அஜய் மட்டும் தூரத்திலிருந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு விலகி நடந்தான்.

அவன் செல்வதை கவனித்த சுமிம்மா, ‘உன்னோட மனதிலும் கொஞ்சம் ஈரம் இருக்குடா கண்ணா..’ என்று நினைத்துக் கொண்டார்.

“ஏன் மேடம் ஒரு வாரம் லீவ் போட்டீங்க.. இங்கே எங்களுக்கு பொழுதே போகல..” என்றாள் ரேணு.

“எனக்கும் தான்..” என்றான் திவாகர் ரித்திகாவைப் பார்த்துக்கொண்டே.

“எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. அதனால் தான் திவாகர் அண்ணா அம்மா காலேஜ் வரல..” என்று நிலா காரணம் சொல்ல, “இப்பொழுது உடம்பு எப்படி இருக்கு?” என்று அக்கறையுடன் விசாரித்தான் அவன்

அவனின் அக்கறையில் அவளின் முகம் மலர, “ம்ம் இப்பொழுது பரவல்ல அண்ணா..” என்றாள் நிலா.

சுமிம்மா, ரித்திகா, ரேணு மூவரும் பேசியபடியே நடக்க, “அம்மா நான் கிளாசிற்கு போகிறேன்..” என்றவள் புன்னகைத்துவிட்டு அவள் வகுப்பறையை நோக்கி சென்றாள்.

அதன்பிறகு வந்த நாளிலும் அஜயின் நடவடிக்கைகளைக் கவனித்தார் சுமிம்மா. அவன் பேசாமல் விலகி செல்வது அவரின் உதட்டில் புன்னகையை வரவழைத்தது. அவனை தன்னுடைய மகனாகவே பாவித்த சுமிம்மா, ‘அவனே வந்து பேசுவான்’ என்று எதிர்பார்த்தார்.

அஜய் சுமிம்மாவை புரிந்துகொண்டு அவரோடு இயல்பாக பேச வாய்ப்பு தானாக அமையுமா?

ReplyForward
error: Content is protected !!