Mohana punnagaiyil 13

Mohana punnagaiyil 13

மோகனப் புன்னகையில் 13

மறுநாள் முழுவதும் மங்கையுடனேயே தனது நேரத்தைச் செலவு பண்ணினாள் சுமித்ரா. கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிப் பேசி அவளை வழமைக்குத் திருப்பி இருந்தாள்.

மங்கைக்கும் கொஞ்சம் பரதத்தில் ஆர்வம் இருந்ததால் பெரும்பாலும் பேச்சு அதைப் பற்றியே இருந்தது.

“மங்கை…”

“சொல்லுங்க க்கா.”

“ஸ்டீஃபன் என்ன சொன்னார்?” விலுக்கென்று நிமிர்ந்து உட்கார்ந்தாள் மங்கை. இளையவளின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் சுமித்ரா.

“காதல் ன்னா என்னன்னு எனக்குத் தெரியும் டா. அதோட வலியும் எனக்குத் தெரியும்.” மங்கையின் கையை லேசாகத் தட்டிக் கொடுத்தாள் சுமித்ரா.

“அக்கா…”

“சொல்லக் கஷ்டமா இருந்தா வேணாம் டா.”

“அது அப்படி இல்லைக்கா… யாரு சொன்னாங்க?”

“உன்னோட அத்தான் தான் சொன்னாங்க. ஸ்டீஃபன் கிட்டவும் பேசி இருப்பாங்க போல.”

“அப்படியா! என்ன சொன்னாங்களாம்?” அந்தக் குழந்தை முகத்தில் அத்தனை ஆர்வம்.

“உன்னோட அத்தான் என்ன சொன்னாலும் ஸ்டீஃபன் செய்வாங்க. அது தெரியுமா உனக்கு?”

“அப்படியெல்லாம் செய்ய வேணாம் ன்னு அத்தான் கிட்ட சொல்லுங்க க்கா. இதெல்லாம் அவங்களுக்காத் தோணணும். சொல்லிக் குடுத்து வரக்கூடாது.”

“அப்படீங்களா கிழவி. இதை உங்க அத்தான் கிட்ட மறக்காம சொல்லிர்றேன்.” சுமித்ரா சொல்லவும் லேசாகப் புன்னகைத்தாள் மங்கை. 

“அப்படி இல்லை மங்கை. நான் அந்த அர்த்தத்துல சொல்லலை. ஒரு வேளை மனசுல ஆசை இருந்தாலும் மத்த விஷயங்களுக்காகத் தன்னோட ஆசையை மறைக்கலாம் இல்லையா?”

“அக்கா…”

“நம்பிக்கையை விட்டுராத மங்கை. உன்னோட அத்தான் எல்லாத்தையும் சரி பண்ணிடுவாங்க.”

“நான் சொன்ன விஷயத்தை அவங்க சீரியஸாவே எடுத்துக்கலை க்கா. குழந்தைக்குப் பாடம் சொல்லிக் குடுக்கிற மாதிரி ஒரு லெட்டர் போட்டிருந்தாங்க.” மங்கை குறைப் பட்டுக் கொள்ளவும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள் சுமித்ரா.

“அதான் நான் சொல்லுறேன் இல்லை மங்கை. ரொம்ப நல்ல பையன். வாழ்க்கையோட கஷ்ட நஷ்டங்கள் புரிஞ்சவர். உன்னை மாதிரி ‘போர்ன் வித் அ சில்வர் ஸ்பூன்’ கிடையாது. அதுதான் நாலையும் சீர்தூக்கிப் பார்த்து யோசிச்சிருப்பார் போல.”

மங்கை தலையைக் குனிந்து கொண்டாள். முகம் வாடிப் போனது. 

“கவலைப்படாதே மங்கை. உண்மையான அன்பு என்னைக்கும் தோத்துப் போகாது.” சுமித்ராவின் குரலில் அத்தனை உறுதி.

??????

அன்று விஜயேந்திரன் ‘கௌரி புரம்’ போய் வந்திருந்தான். தம்பதிகள் இன்னும் அத்தை வீட்டில் தான் இருந்தார்கள். இரண்டு நாட்களுக்கு மேல் அங்கே தங்க அவன் வேலைப்பளு அனுமதிக்காததால் சுமித்ராவை மங்கைக்குத் துணையாக இருத்தி விட்டு அவன் மட்டும் போய் வந்திருந்தான்.

அமிழ்தவல்லியிடம் லேசாக விஷயத்தைக் கணக்கர் மூலம் தெரிவித்திருந்தான். அவர் பங்கிற்கு அவரும் இப்போது கிளம்பினால் அவனால் சமாளிக்க முடியாது.

லேசாக இருள் பரவ ஆரம்பித்திருந்தது. சமையலறையை எட்டிப் பார்த்தான் விஜயேந்திரன். பெண்கள் மூவரும் ஏதோ பேசிச் சிரித்தபடி சமையலில் மும்முரமாக இருந்தார்கள். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்தபடி ஹாலுக்கு வந்தான்.

கண்ணபிரான் முன் வாசல்த் தோட்டத்தில்த் தான் அமர்ந்திருந்தார். முகம் வாடிப்போய் இருந்தது.

“மாமா!”

“வா விஜயா. போன வேகத்துக்குத் திரும்பி வந்துட்டே.”

“உங்களை எல்லாம் இந்த நிலைமையில விட்டுட்டு என்னால அங்க இருக்க முடியலை மாமா.”

“ரொம்ப நன்றி விஜயா. நீங்க ரெண்டு பேரும் இப்போ இங்க எங்க கூட இருக்கிறது ரொம்பத் தைரியமா இருக்கு ப்பா.”

“என்ன மாமா?‌ ஏதோ மூனாவது மனுஷங்க கிட்ட பேசுற மாதிரி பேசுறீங்க?”

“அப்படி இல்லைப்பா. புதுசாக் கல்யாணம் ஆனவங்க. நீயாவது பரவாயில்லை, அத்தை மாமாவுக்காக வந்து நிக்குற. சுமித்ராவுக்கு என்ன தேவைப்பா? அது பெருந்தன்மை இல்லையா?”

“நான் வேற சுமித்ரா வேற இல்லை மாமா.” விஜயேந்திரனின் பதிலில் கண்ணபிரானின் முகத்தில் ஒரு திருப்தியான புன்னகை வந்து போனது.

“மாமா…”

“சொல்லு விஜயா. ஏதோ சொல்லத்தான் வந்திருக்கேன்னு நல்லாவே புரியுது. தயங்காமச் சொல்லு.”

“நான் சொல்லப் போற விஷயம் உங்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியா இருக்கலாம். அதான்…”

“எம் பொண்ணு குடுத்த அதிர்ச்சியை விட உன்னால ஒன்னும் பெரிய அதிரச்சியைக் குடுத்திட முடியாது. நீ விஷயத்துக்கு வா.”

“ஸ்டீஃபன்…”

“ஓ… யாரு? அந்தக் கனடாப் பையனா?‌ உங்க கல்யாணத்துக்கு வந்திருந்தானே?”

“ம்…”

“உனக்கு நிச்சயமாத் தெரியுமா?” 

“தெரியும் மாமா.”

“ம்…” இப்போது கண்ணபிரான் தாடையைத் தடவிய படி யோசித்தார்.

“வழி வழியா சாஸ்திரம் சம்பிரதாயம் ன்னு ஊறிட்டோம். என்னதான் காலத்துக்குத் தக்க படி மாறினாலும் இந்த அளவுக்குப் போக முடியுமான்னு தெரியலை விஜயா.”

“என்னால உங்களைப் புரிஞ்சுக்க முடியது மாமா. ஆனா மங்கையைப் பத்தி யோசிச்சுப் பாருங்க. எவ்வளவு தீவிரம் இருந்திருந்தா மாத்திரை சாப்பிடுற அளவுக்குப் போயிருப்பா?”

“மத்தது எல்லாத்தையும் விடு, உங்க அத்தையைப் பத்தி யோசிச்சுப் பாரு. சம்மதிப்பா ன்னு நினைக்கிறியா?”

“கஷ்டம்தான் மாமா… இல்லேங்கலை.‌ ஆனா இப்போ இருக்கிற நிலைமை யார்கிட்டயும் சம்மதம் கேக்கிற மாதிரி இல்லையே?”

“இதெல்லாம் சரியா வருமா விஜயேந்திரா? ஒரே மதத்திலேயே ஆயிரத்தெட்டுக் குலம் கோத்திரம் ன்னு எத்தனை பிரச்சினைகள் வருது. இதுல இப்படி… எப்படிப்பா? இதெல்லாம் நடைமுறைக்குச் சாத்தியமா? நாளைக்குப் பொறக்கப் போற குழந்தைகளைப் பத்தி யோசிச்சுப் பார்த்தியா?” 

ஒரு தகப்பனாகக் கண்ணபிரான் பேசிய போது விஜயேந்திரனிடம் அதற்கு எந்தப் பதிலும் இருக்கவில்லை. அமைதியாகவே அமர்ந்திருந்தான். ஆனாலும் வாழப் போகும் பெண், தனது வாழ்க்கை இதுதான் என அவளே முடிவெடுக்கும் போது என்ன செய்ய முடியும்?

“எனக்கு எதுவும் புரியலை விஜயா. படிக்காதவன், பணமில்லாதவன் யாரா இருந்தாலும் எனக்குப் பிரச்சினை இல்லை. நம்ம சாதி சனமா இருந்தாக் கண்ணை மூடிக்கிட்டு நான் சம்மதம் சொல்லிருவேன். இதை எப்படிக் கையாள்றது ன்னு எனக்குப் புரியலை. சாதி சனம் கேட்டா நான் என்ன பதில் சொல்ல முடியும் சொல்லு?”

“மாமா! நீங்க சொல்லுற அத்தனையும் சரிதான். நான் ஒத்துக்கிறேன். ஆனா… மதம் எங்கிற ஒன்னு மட்டும் நடுவில இல்லைன்னா ஸ்டீஃபனைப் போல ஒரு பையனை உங்களால கூடத் தேடிக் கண்டு பிடிக்க முடியாது. சுமித்ராக்குத் தெரிஞ்ச பையன் எங்கிறதால சொல்லலை. எனக்கு அவனை தனிப்பட்ட முறையில அவ்வளவு நல்லாத் தெரியும்.”

“ம்…” கண்ணபிரான் அதன்பிறகு மௌனமாகிப் போனார். முகத்தில் கவலையையும் தாண்டி இப்போது சிந்தனை முடிச்சுகள் தான் தெரிந்தது. 

கோதை நாயகிக்கும் என்ன புரிந்ததோ, கணவன் முகத்தையே அடிக்கடி பார்த்தபடி இருந்தார். மங்கை எதுவும் பேசவில்லை என்றாலும் அப்பா முகத்தில் தெரிந்த மாற்றம் விஷயம் அவர் காது வரை சென்று விட்டது என்ற மட்டில் புரிந்து கொண்டாள்.

டின்னரை முடித்துக் கொண்டு எல்லோரும் நகர விஜயேந்திரன் மங்கையின் அறைக்கு வந்தான். சுமித்ரா அப்போதுதான் மங்கைக்குக் கொடுக்க வேண்டிய மாத்திரைகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.

“மங்கை!”

“சொல்லுங்க அத்தான்.”

“வீட்டுக்குள்ள எதுக்கு அடைஞ்சு கிடக்கிறே? உன் ப்ராஜெக்ட் பாதியிலேயே நிக்குதில்லை. அதைத் தொடர்ந்து பண்ணலாம் இல்லையா?”

“இல்லை… அம்மா என்ன சொல்லுவாங்களோ ன்னு…”

“அதைப்பத்தி நீ ஏன் கவலைப்படுறே? நான் அத்தைக்கிட்டப் பேசுறேன். ஏதோ தெரியாம முட்டாள்த்தனமா ஒரு காரியம் பண்ணிட்டே. இல்லேங்கலை. அதுக்காக அதையே பிடிச்சிக்கிட்டுத் தொங்கக் கூடாது. சரியா?”

“ம்…” 

“ஆக வேண்டியதைப் பாரு. உனக்கொரு கஷ்டத்தைக் குடுத்துட்டு இங்க யாரும் நிம்மதியா இருக்கப் போறதில்லை. அதை மட்டும் எப்பவுமே அடி மனசுல அழுத்தமா பதிச்சு வெச்சுக்கோ.”

மங்கை தலையைக் குனிந்த படியே மௌனமாக அமர்ந்திருந்தாள். விஜயேந்திரனுக்கு அவளை அந்தக் கோலத்தில் பார்க்க அத்தனை வருத்தமாக இருந்தது. 

எத்தனை உற்சாகமான பெண். துறு துறுவென்று சதா ஏதாவது வாயாடிக் கொண்டு. இப்போது எல்லாமே காணாமல்ப் போயிருந்தது.

“அத்தான்!”

“சொல்லு ம்மா.”

“அப்பா ஏன் இன்னைக்கு ஒரு மாதிரியா இருந்தாங்க?” மங்கைக்கு இதற்கு மேல் வெளிப்படையாகக் கேட்க முடியவில்லை. 

“மங்கை… சில விஷயங்களை உன் வயசுக்குச் சுலபமா ஏத்துக்க முடியும். ஆனா பெரியவங்க அப்படி இல்லை. வழி வழியா வந்த ஒரு விஷயத்தை மாத்துறதுன்னா அவங்களுக்கு அது அத்தனை சுலபம் இல்லை. நாம தான் கொஞ்சம் பொறுமையாக் காத்திருக்கணும்.”

“சரி அத்தான்.”

“என்னையே எடுத்துக்கோ. இந்த சுமித்ரா வேணும்ன்னு எவ்வளவு போராடினேன். ஆரம்பத்துல எனக்கு சுமித்ரா இல்லைன்னு தானே நினைச்சேன். அப்போ எல்லாம் உன்னைப் போல நான் மாத்திரையைத் தூக்கலையே? என் வாழ்க்கைக்குள்ள சுமித்ராவைக் கொண்டு வரலாம்னு தெரிஞ்சப்போ அடுத்தடுத்து என்ன பண்ணலாம்னு தான் யோசிச்சேன். அமுல்ப் படுத்தினேன். சட்டுன்னு உயிரை விட்டுடலாம் மங்கை. ஆனா அதால யாருக்கு என்ன லாபம் சொல்லு? நீ ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ அந்த உயிர் உனக்கு வேணும் இல்லையா?”

“அத்தான்!” கண்கள் கலங்க விஜயேந்திரனின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் மங்கை.

“என்னை மன்னிச்சிருங்க அத்தான். தப்புத் தான். நான் பண்ணினது பெரிய தப்புத் தான்.”

“இதை எங்கிட்ட சொல்லாதே. அம்மா எவ்வளவு கண்டிச்சாலும் உன்னை எப்பவுமே எங்கயுமே விட்டுக் குடுக்காத உன்னோட அப்பா கால்ல விழுந்து சொல்லு.” 

விஜயேந்திரன் சொல்லி முடிப்பதற்குள் மங்கை என்ன நினைத்தாளோ… சட்டென்று ரூம் கதவைத் திறந்து கொண்டு அம்மா அப்பாவின் ரூமிற்குள் ஓடினாள்.

இந்த திடீர்த் தீர்மானத்தைப் பார்த்து சுமித்ராவும் விஜயேந்திரனும் திகைத்துப் போனார்கள் என்றால், அங்கே கோதை நாயகியினதும் கண்ணபிரானினதும் நிலைமை அதை விட மோசமாக இருந்தது.

விளக்கை எல்லாம் அணைத்து விட்டு அப்போதுதான் கண்ணயர்ந்தவர்கள் மகளின் அழுகுரலில் அதிர்ந்து போனார்கள்.

“அப்பா! என்னை மன்னிச்சிடுங்க ப்பா. நான் ரொம்பப் பெரிய தப்புப் பண்ணிட்டேன் ப்பா. நான் அப்படி நடந்திருக்கக் கூடாது ப்பா. என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லுங்க ப்பா. உங்க வாயால சொல்லுங்க ப்பா.” 

மங்கை ஓயாமல் அழ தன்னை வேகமாகச் சுதாரித்துக் கொண்டார் கண்ணபிரான். ஆசை ஆசையாக வளர்த்த மகள். கண்ணீரில் கரைவதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இத்தனைக்கும் கோதை நாயகி கல்லுப் போல உட்கார்ந்திருந்தார். பெண்கள் எப்போதும் மனதளவில் ஆண்களை விடத் தைரியசாலிகள் என்பதைச் சொல்லாமல் சொன்னது அவர் அமர்ந்திருந்த தோரணை.

கண்ணபிரான் மகளை வாரி அணைத்துக் கொண்டார். மனிதருக்குச் சற்று நேரம் பேச்சு வரவில்லை.

“தப்பு உம்மேல இல்லைடா செல்லம். அப்பா மேல தான். எல்லாத் தப்பும் அப்பா மேல தான். எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும் நம்ம அப்பாக்கிட்டச் சொன்னா அதுக்கொரு தீர்வு கிடைக்குங்கிற நம்பிக்கையை உனக்கு நான் குடுக்கலை ம்மா.”

“ஐயோ அப்பா! அது அப்படி இல்லை ப்பா. வழியே இல்லாத ஊருக்கு என்னாலேயே போக முடியலை. இதுல நான் உங்களையும் எப்படிப்பா கூப்பிடுவேன்?”

“வழியே இல்லைன்னு நீயா முடிவெடுத்தா எப்படிம்மா? அப்போ அப்பா நான் எதுக்கு இருக்கேன். உனக்கு நல்ல வழி காட்டத்தானே நான் இருக்கேன்?” 

பேச்சு இப்படியே போக கோதை நாயகி தன் கணவரை ஒரு தினுசாகப் பார்த்தார். அதற்கு மேல் அங்கே விஜயேந்திரனும் சுமித்ராவும் நிற்கவில்லை. தங்கள் ரூமிற்கு வந்து விட்டார்கள்.

கட்டிலில் கால் நீட்டி அமர்ந்திருந்தான் அரண்மனைக் காரன். கண்கள் இரண்டும் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்த மனைவியையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

“விஜி…” லைட்டை அணைத்து விட்டுக் கட்டிலில் அமர்ந்தாள் சுமித்ரா.

“அடேங்கப்பா! இந்த வார்த்தையைக் கேட்டு ரெண்டு நாள் ஆகிடுச்சு.” கணவனின் வார்த்தையில் புன்னகைத்தவள் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

“விஜி…”

“ம்…”

“சித்தியோட முகத்தைப் பார்த்தீங்களா?”

“கவனிச்சேன்.”

“நிறைய எதிர்ப்புகளைச் சம்பாதிக்க வேண்டி வரும் விஜி.”

“நான் எதைப் பத்தியும் கவலைப் படலை அம்மு.”

“உங்க அம்மா…”

“சொல்லு.”

“அவங்க கோபம் முழுக்க எம்மேல தான் திரும்பும்.”

“தெரியும் டா.”

“தெரிஞ்சுமா இதைப் பண்ணப் போறீங்க?” சுமித்ரா இந்த வார்த்தைகளைச் சொன்ன போது விஜயேந்திரன் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். அவன் முகத்தில் ஏமாற்றம் பரவியது.

“என்னோட சுமித்ராவா இப்படிப் பேசுறது? எப்படி சுமி? எப்படி உன்னால இப்படிப் பேச முடியுது?”

“சில நேரங்கள்ல நிதர்சனங்கள் வலிக்கத்தான் செய்யும். ஆனாலும் ஏத்துக்கத்தான் வேணும் விஜி.”

“எதை அம்மு ஏத்துக்கச் சொல்றே? உயிரா நேசிக்கிறவங்களை இன்னொருத்தருக்குத் தாரை வார்த்துக் குடுத்துட்டு நடைப்பிணமா ஒரு வாழ்க்கை வாழ்வோமே. அந்த வாழ்க்கையை ஏத்துக்கச் சொல்றியா?”

“எதுக்கு நடைப்பிணமா வாழணும்? அந்தப் புள்ளியைத் தாண்டி வெளியே வரலாம் இல்லையா?”

“எப்படி வர முடியும்? என்னால வர முடியலையே? அப்படி இருக்கும் போது மங்கைக்கு அதை எப்படி என்னால சொல்ல முடியும்?”

“நீங்க பண்ணினதே தப்புன்னு தான் நான் சொல்லுவேன்.”

“எதுடி தப்பு? நான் பண்ணினது எது தப்பு?” அவன் வார்த்தைகளில் இப்போது நெருப்புப் பறந்தது. ஒற்றைக் கை அவள் கூந்தலைக் கெட்டியாகப் பிடித்திருந்தது. வலித்தாலும் சுமித்ராவும் ஓயவில்லை.

“இத்தனை வருஷம் தனியா நின்னது தப்பு. காலா காலத்தில ஒரு கல்யாணத்தைப் பண்ணி இருந்திருந்தா இந்நேரத்துக்கு கரிகாலன் அத்தான் மாதிரி ஒரு குழந்தை உங்களுக்கும் இருந்திருக்கும்.”

“யாருக்கு வேணும்? யாருக்குடி வேணும் அந்தக் குழந்தை? மனசு முழுக்க ஒருத்தி உக்காந்துக்கிட்டு தினம் தினம் ஜாலம் காட்டுறா. அவளைத் தூக்கித் தூரப் போட்டுட்டு எவளோ ஒருத்தி கூட இந்த ஊர் உலகத்துக்காகப் போலியாக் குடும்பம் நடத்தச் சொல்லுறியா?”

“எத்தனை பேரோட வாழ்க்கை அப்படித்தானே விஜி இருக்கு?”

“எனக்கு அதைப் பத்திக் கவலை இல்லை. எனக்கு நீ தான்டி வேணும். நீ மட்டும் தான் வேணும்.”

“நான் வராமலே போயிருந்தா?” சுமித்ராவின் குரல் விம்மியது.

“இந்த அரண்மனைக் காரன் ஒத்தையாவே செத்துப் போயிருப்பான்.”

“விஜீ…” ஒரு கேவலோடு கணவனைக் கட்டிக் கொண்டாள் சுமித்ரா. 

“வேணாம் விஜி… இத்தனை பாசம் வைக்காதீங்க விஜி. எனக்கு அதுக்கு அருகதை இல்லை விஜி.” திக்கித் திணறிப் பேசியவள் அவன் முகம் முழுவதும் முத்தம் வைத்தாள். மனைவியின் செயலில் அரண்மனைக் காரன் ஆடிப் போனான்.

எப்போதும் அவனைக் கெஞ்ச வைப்பவள் இன்று கொஞ்சித் தீர்த்தாள். கொல்லாமல்க் கொன்றாள்.

இத்தனை நாளும் அவன் போட்ட களியாட்டங்கள் இன்று அவள் வசம் இடம் மாறி இருந்தது. காதல்ப் பித்தம் தலைக்கேற பூவிற்குள் விழுந்த வண்டாகினான் அந்த அரண்மனை வாசி.

??????

அடுத்த நாள் அத்தனை அழகாக விடிந்தது விஜயேந்திரனுக்கு. முகம் முழுதும் முத்திரைகள் பதித்தவள் அவள் காதலின் எல்லையை அவனுக்கு முழுதாக நிரூபித்திருந்தாள்.

கைகள் அவளைத் தேடியது. அவளோ காணாமல்ப் போயிருந்தாள். வாய்க்குள் புன்னகைத்துக் கொண்டான் கணவன்.

அவனுக்குத் தெரியும். அவளை அறியாமலேயே அவள் வெளிவரும் தருணங்களில் இப்படி ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவது அவள் வழக்கம் தான்.

கண்டும் காணாமல் காலைக் கடன்களை முடித்தவன் டைனிங் டேபிளுக்கு வந்தான். கண்ணபிரானும் மங்கையும் பழைய படி ஐக்கியம் ஆகி இருந்தார்கள்.‌ அத்தையின் முகம் தான் இறுகிப் போய்க் கிடந்தது.

“சுமித்ரா! சீக்கிரம்.” அவன் குரலில் கிச்சனை விட்டு வெளியே வந்தாள் சுமித்ரா. காலை ஆகாரம் டேபிளில் ஆயத்தமாகத்தான் இருந்தது. இருந்தாலும் வேண்டுமென்றே மனைவியை அழைத்தான்.

பக்கத்தில் நின்று பரிமாறியவளின் இடையை வளைத்தது அவன் கரம்.

“விஜீ…” நெளிந்தாள் பெண்.

“ம்… இப்போ தான் விஜியைத் தெரியுதா?”

“கையை எடுங்க. யாராவது வரப்போறாங்க.”

“யாரும் வரமாட்டாங்க. அத்தை உங்கிட்ட ஏதாவது பேசினாங்களா அம்மு?”

“ம்ஹூம்… அவங்க முகத்தைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு ங்க. எதையோ நினைச்சு வருத்தப் படுறாங்கன்னு மட்டும் நல்லாப் புரியுது.‌ ஆனா வாயைத் திறக்கலை.”

“மங்கை பேசினாளா அத்தைக்கிட்ட?”

“முயற்சி பண்ணினா.‌ ஆனா சித்தி பிடி குடுக்கலை.”

“சரி விடு. நீ வருத்தப் படாத அம்மு. நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்.”

“விஜி… மங்கையோட ஆசை விருப்பம் எல்லாமே ரொம்ப முக்கியம் தான். அதுக்காக யாரையும் காயப் படுத்திராதீங்க.”

“சரிடா.” மனைவியின் கன்னத்தில் முத்தம் வைத்தவன் போஸ்ட் ஆஃபீஸுக்குக் கிளம்பி விட்டான். 

“ஹலோ ஸ்டீஃபன்.”

“அண்ணா! மங்கை எப்படி இருக்கா?” பதறியது இளையவனின் குரல். அரண்மனைக் காரன் முகத்தில் அழகாக ஒரு புன்னகை தோன்றியது.

“ம்… நல்லாருக்கா. நீ என்ன முடிவு பண்ணினே?”

“அண்ணா…”

“ஸ்டீஃபன்! உன்னோட பதிலில தான் நிறைய விஷயங்கள் இப்போ அடங்கி இருக்கு. நீ ஏதாவது பேசினாத்தான் மேற்கொண்டு என்ன பண்ணுறதுன்னு என்னால தீர்மானிக்க முடியும்.”

“இது எந்த அளவுக்கு சாத்தியப்படும் அண்ணா?”

“ஏன் ஸ்டீஃபன்? இப்படியெல்லாம் இதுக்கு முன்னாடி யாரும் பண்ணினதே இல்லையா?”

“மங்கை வீட்டுல தெரிஞ்சா பெரிய பிரச்சினை ஆகிடும் அண்ணா.”

“அது என் பொறுப்பு. உன்னோட அக்காவையும் அத்தானையும் சமாளிக்க உன்னால முடியுமா?”

“அக்கா பிரச்சினையே இல்லை. புரிஞ்சுப்பாங்க. அத்தான் தான்…”

“ஏன்? அவர் மட்டும் என்ன பண்ணி இருக்காராம்?”

“ஹா… ஹா… அது சரி தான் அண்ணா. ஆனா என்னால அப்படியெல்லாம் அத்தான் கிட்டப் பேச முடியாது ண்ணா. ரொம்பவே நல்லவங்க. எங்க ரெண்டு பேருக்குமே அத்தான் தான் எல்லாம். உதவி பண்ணுன்னு அனுப்பினா நீ உபத்திரவம் பண்ணி இருக்கியே ன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்?”

“ம்…”

“அதோட அண்ணி ன்னு வந்துட்டா அத்தான் எந்த எல்லைக்கும் போவாங்க. இந்த விஷயத்தால உங்க வழ்க்கையில ஏதாவது பிரச்சினை வரும்ன்னு அத்தான் நிச்சயம் பயப்படுவாங்க.”

“ஸோ… உனக்கு மங்கை வேணாம்?”

“நான் அப்படிச் சொல்லவே இல்லையே ண்ணா!” அவசரப் பட்டான் இளையவன்.

“ஹா… ஹா… வெவரம் தான்டா நீ.”

“இல்லையா பின்னே! அரண்மனைக் காரரோட தம்பி இல்லையா நான்? அவர்ல பாதியாவது தேற மாட்டேனா?”

“அடி வாங்காம ஒழுங்காப் பதில் சொல்லு ஸ்டீஃபன். இப்போ நான் என்ன பண்ணட்டும்?”

“அண்ணா… எனக்கு மங்கையை ரொம்பவே பிடிச்சிருக்கு. மறுக்கலை. எங்க ரெண்டு பேருக்கும் நடுவில இருக்கிற எதுவுமே எனக்குத் தடையாத் தெரியலை. ஆனா நாம வாழுற சமுதாயம் அப்படி இல்லை. அது எங்க ரெண்டு பேரையும் சுத்தி இருக்கிறவங்களை ரொம்பக் காயப்படுத்தும். நான் அதுக்குத் தான் தயங்குறேன். இல்லைன்னா இந்த மங்கையைத் தூக்கி ஃப்ளைட் ல வைக்க எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்?”

“அப்படிப் போடு! இப்போ தான் நீ என் தம்பி மாதிரிப் பேசுறே.”

“அண்ணா! பார்த்துப் பண்ணுங்க ண்ணா. யாரும் எங்கேயும் காயப்பட்டிடக் கூடாது.” சுமித்ரா சொன்ன அதே வார்த்தைகள். விஜயேந்திரன் புன்னகைத்துக் கொண்டான்.

“மங்கையோட பேசுறியா ஸ்டீஃபன்? கூட்டிட்டு வரட்டுமா?”

“வேணாம் ண்ணா. எதுவும் முடிவாகாம ஒரு சின்னப் பொண்ணுக்கு நம்பிக்கை குடுக்கிறது ரொம்பத் தப்பு ண்ணா.”

“சரி உன் இஷ்டம்.” தோளைக் குலுக்கியவன் அத்தோடு பேச்சை முடித்துக் கொண்டான். 

அரண்மனைக் காரன் ஒரு விஷயத்தில் இறங்கி விட்டால் முடிக்காமல் ஓய மாட்டான் என்று அப்போது ஸ்டீஃபனுக்குப் புரியவில்லை.

மனம் முழுவதும் நேற்றைய இரவில் திளைத்திருக்க தன் நன்னிலவைத் தேடிப் போய்க் கொண்டிருந்தான் அரண்மனைக் காரன். 

error: Content is protected !!