Monisha’s Vaadi en thamizhachi 17
Monisha’s Vaadi en thamizhachi 17
டாலர் சிக்கியது
தமிழ் எழுந்ததும் படுக்கையின் மீதிருந்த பூங்கொத்து மற்றும் பரிசு பொருள் என எல்லாவற்றையும் பார்த்தவள் கடிதத்தைதான் ஆவலோடு பிரித்தாள்.
“நான் காஞ்சிபுரத்திற்கு ஒரு கேஸ் விஷயமா கிளம்பி போறேன். நான் ரிடர்ன் வர டூ ஆர் த்ரீ டேஸ் ஆகும். மருந்து வாங்கி வைச்சிருக்கேன். போட்டுக்கோ.
டேக் கேர்.
வீர்” என்று முடிந்திருந்த அந்த கடிதத்தை படித்தவளுக்கு அத்தனை எரிச்சலும் கோபமும் ஏற்பட, அவசரமாய் அதனை கசக்கி தூக்கி வீசினாள்.
‘அனுப்புநர் பெறுநர் போட்டிருந்தா பக்கா அப்ஃஸியலான லெட்டரா இருந்திருக்கும்… என்ன மனிஷன்… நடந்த விஷயத்துக்கு ஒரு சாரி கூட இல்ல… அப்புறம் எதுக்கு இந்த லெட்டர்… இதுல டேக் கேர் வேற.. மன்னாங்கட்டி… கொஞ்சங் கூட மனசாட்சியே இல்லை… இந்த கிஃப்டெல்லாம் யாருக்கு வேணும்… இதுல பிளவர்ஸ் வேற’ என்று விரக்தியாய் புலம்பியவள் அவசரமாய் அருகிலிருந்த பூங்கொத்தையும் மருந்தையும் தூக்கியெறிந்தாள்.
கணவனின் அன்பையும் காதலையும் பெற முடியவில்லையே என்ற ஏக்கமே அவளுக்கு கோபமாய் வெளிப்பட்டது.
அதுவும் உறவுக்காக ஏங்கும் பெண்ணவள் அத்தனை உறவாகவும் கணவனையே உருவகப்படுத்தி இருக்க, அவனுக்கு துளியளவும் தன் மீது அக்கறையில்லையே என்று மனதில் ஏற்பட்ட வலி, காயத்தினால் உண்டான உடல் வலியையும் மறக்கடித்திருந்தது.
‘என் மேல காதல் வெஞ்சன்ஸ் இரண்டும் இருக்குன்னு சொன்ன இல்ல வீர்… எனக்குமே அப்படிதான்.. ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன் ஆம்பளங்கிற திமிரு ஈகோ எல்லாம் விட்டுவிட்டு எனக்காக நீ இறங்கி வரனும்… வருவ… அதை நான் பார்க்கனும்” என்று குரூரமாகவே எண்ணிக் கொண்டவள்,
உண்மையிலேயே அத்தகைய தருணம் வரும் போது அதனை அவள் விரும்பி ஏற்க முடியாமல் போகும்.
யாரிடமும் தலைவணாங்காதவன் இவளுக்காக இறங்கி வர அதை அவள் தாங்க முடியமால் போகும்.
அதோடு முடிந்துவிடாமல் தான் என்கிற அவன் அகங்காரத்தையும் ஆண் என்கிற கர்வத்தையும் விட்டொழுத்திவிட்டு இவளுக்காக அவன் கண்ணீர் வடிக்கும் போது அவளின் செந்நீரும் உறைந்து போகும்.
அப்போது அவனின் காதலின் மகத்துவத்தை இவளும், இவளின் காதலின் ஆழத்தை அவனும் புரிந்து கொள்வான்.
எழுந்திருக்க முடியாமல் அவள் அவதியுற்றபடி படுக்கையிலேயே சாய்ந்திருந்தவள் இன்னும் அங்கே மிச்சமாய் இருந்த அந்த பரிசை பார்த்து முகத்தை சுளித்து கொண்டாள்.
தனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அல்லது தன் மனதிற்கு பிடித்த ஒன்றும் அதில் இருக்க போவதில்லை என தானே யூகம் செய்தவள் அதனை பிரித்து பார்க்கவும் விரும்பவில்லை.
ரொம்பவும் சிரமப்பட்டு தன் அறையிலிருந்து வெளியே வந்தவளுக்கு சந்திரா வீட்டில் இல்லை என்று அப்போதுதான் தெரிய வந்தது.
ஏதோ கோவிலில் பூஜை என்று காலையிலேயே புறப்பட்டு போய்விட்டார் என்றும் இரவு அல்லது நாளைதான் வருவார் என வேலைக்காரப் பெண் உரைக்க அப்போது உதவிக்கும் துணையில்லாமல் தனிமை அவளை வாட்டிவதைத்தது.
நிச்சயம் அவன் தன் தாயிடம் அவளின் வலியைக் குறித்து சொல்லி இருக்க மாட்டான். சொல்லக் கூடிய விஷயமா அது. நடந்ததை சொல்லவும் முடியாது.
நடக்காததை எல்லாம் அவர்கள் கற்பனை செய்து கொள்ள அதை தடுக்கவும் முடியாது.
அந்த அறையில் தனிமையில் இருப்பது அத்தனை கொடுமை. வலி குறைந்திருந்தாலும் இந்த நிலைமையில் தான் வேலைக்கு போனால் கேலி செய்தே கொன்றுவிடுவார்கள்.
இதன் காரணத்தாலேயே தர்மாவின் டைரியையும் படிக்க முடியாமல் போனது.
கோபத்தோடு ‘இப்படி பண்ணிட்டானே… அவன் மட்டும் ஜாலியா வேலைக்கு போயிட்டான்… கஷ்டமும் நஷ்டமும் எனக்குதானே’ என்று வாய் ஓயாமல் திட்டியபடி தன் தேவைகளையும் வேலைகளையும் யாருடைய துணையுமின்றி வலியோடு தானே செய்து கொண்டாள்.
தன் வீட்டிலிருந்திருந்தால் தேவியாவது துணைக்கு இருந்திருப்பாள். இங்கு தனக்கு அத்தகைய துணையுமில்லை என பொறுமிக் கொண்டாள்.
*******
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் போலீஸ் நிலையம்.
ரகு வீரேந்திரனை பார்த்ததும் அவன் தன் உயர் அதிகாரி என்ற பெயரளவிலான மரியாதையோடு சல்யூட் அடித்தான். ஆனால் மனதிற்குள் வசைமாறி பொழிந்து கொண்டிருந்தான். அவனை பிடிக்கவில்லை. தன் தோழியை அபகரித்து கொண்ட ராட்சஸானகவே அவன் தெரிந்தான்.
வீரேந்திரன் அவன் எண்ணத்தை உணராமல் “என்ன ரகு ?… தர்மா மார்டர் நடந்த இடத்திற்கு இன்னைக்கு போய் பார்க்கலாமா… ?” என்று கேட்க,
“எஸ் சார்” என்றான்.
“அப்புறம் அவர் கூட வேலை செஞ்சவங்க டீடைல்ஸ்… பிரண்ட்ஸ் ரிலேட்டிவ்ஸ்… அவரோட கான்டெக்ட் டீடைல்ஸ் எல்லாமே நான் சொன்னபடி ரெடி பண்ணிட்டீங்களா? “
“அவருக்கு ரிலேட்டிவ்ஸ்னு பெரிசா யாரும் இல்லை… கல்வெட்டியல் ஆராய்ச்சி பன்றதிலதான் அவர் ரொம்ப ஆர்வமா இருந்திருக்ககாரு… ப்ரண்டஸ் வேலை பார்த்தவங்க கூடதான் அதிக தொடர்பு… அவங்க டீடைல்ஸெல்லாம் வாங்கி வைச்சிருக்கேன்”
“குட்”
“வண்டி ரெடியாயிருக்கு சார்… கிளம்பலாமா ?” என்று ரகு கேட்க,
அவனும் புறப்பட எழுந்து நின்று தன் கீரடமாய் இருந்த கேசத்தை மறைத்தபடி தொப்பியை மாட்டியவன், ரகுவின் முகத்தை அப்போதுதான் கூர்ந்து கவனித்தான். வெறுப்பாய் இருந்த அவன் முக மாற்றங்களை பார்த்தபடி
“என்னாச்சு ரகு… உங்க முகமே சரியில்லையே ?!” என்று கேட்டான்.
ரகு இயல்பாய் இருக்க யத்தனித்தாலும் அவன் எண்ண ஓட்டத்தை அவன் முகம் பிரதிபலித்துவிட்டது.
அப்போது ரகு அவனை நோக்கி “காலையிலயே ஒரு கேஸ்… அதான் கொஞ்சம டென்ஷனாயிட்டேன்” என்றான்.
“என்ன கேஸ்? “
“பொண்டாட்டிய கை நீட்டி அடிச்சிருக்கான் ராஸ்கல்… அவனை ஒரு அடி அடிச்சிருந்தாலாவது நிம்மதியா இருந்திருக்கும்… அனா தாலி சென்டிமென்ட்… அது இதுன்னு வெறும் வார்ன் பண்ணி அனுப்ப வேண்டியதாய் போச்சு…. அவன் முகத்தை பார்த்ததிலிருந்த அவ்வளவு கோபமா இருக்கு… கட்டின மனைவியை அடிக்கிறவன் எல்லாம் ஆம்பிளையா ?” என்று கேட்ட வார்த்தையில் அத்தனை அழுத்தம்.
வீரேந்திரனின் இதயத்தையும் அந்த வார்த்தைகள் குத்திக் கிழிக்க ,
அவன் யாரையோ சொல்ல அது ஏன் தனக்கு உறைக்கிறது என எண்ணியவன் எதற்கும் அவன் தன்னைத்தான் சொல்கிறானா என ரகுவின் முகத்தை கூர்மையாய் பார்க்க அவனோ “அந்த மேட்டரை விடுங்க சார்… நாம தர்மா வீட்டுக்கு போவோம்” என்று இயல்பாய் சொல்லிவிட்டு முன்னேறி சென்றான்.
வீரேந்திரனுக்கு அவன் சமாளிப்பு நன்றாய் விளங்கிற்று. இவனுக்கு தமிழை தெரிந்திருக்குமோ என்ற சந்தேகமும் உதித்தது.
ஆனால் அந்த எண்ணம் ஒருபுறமிருக்க ரகுவும் வீரேந்திரனும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் தர்மாவின் வீட்டினை அடைந்தனர்.
ரகு அந்த வீட்டின் ஹாலில் வந்து நின்று தர்மா கொலையுண்டிருந்த இடத்தை காண்பித்தான்.
“இங்கதான் அவரோட டெட் பாடி இருந்துச்சு… கையில கூர்மையான கத்தியோட கழுத்தறுப்பட்ட நிலையில” என்று அந்த ஹாலின் மத்தியில் நின்று காண்பிக்க வீரேந்திரன் “ம்ம்ம்” என்றான்.
“கத்தியால் கழுத்திலறுப்பட்டுதான் இறந்திருக்கிறான்னு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்… அவர் இறந்த விஷயம் இரண்டு நாள் யாருக்கும் தெரியல… பக்கத்து வீட்டிலிருக்கிறவங்கதான் பாடி டீக்கம்போஸாகி ஸ்மெல் வர்றதை கண்டுபிடிச்சி தகவல் சொன்னாங்க… ”
“ம்ம்ம்”
“அவருக்கு தற்கொலை செஞ்சிருக்கிற மோட்டிவும் இல்ல … காரணம் இல்லாமல் எப்படி ஒருத்தர் தற்கொலை பண்ணிக்க முடியும்… அதுவும் தனக்குத்தானே கழுத்தறுத்து… மோரோவர் அந்த கத்தியில இன்னொருத்தோரோட கைரேகை இருக்கே… ஸோ அது மர்டரா இருக்கவே வாய்ப்பிருக்குன்னுதான் விசாரிச்சிட்டிருக்கோம்” என்று ரகு விளக்கமளிக்க
“ம்ம்ம்ம்” என்றான் வீர்.
“அவரோட பேஃம்லி அவர் கூட இல்ல… அவர் ஒரு டிவோஸி… ஆராய்ச்சி ஆராய்ச்சின்னு குடும்பத்தை கவனிக்கிறதில்லனு சொல்றாங்க… “
“ம்ம்ம்ம்”
“அந்த கைரேகையோட ரிலேட்டிவ்ஸ் ப்ரண்டஸ்… அப்புறம் நிறைய க்ரிம்னல்ஸ் ரேகையோட எல்லாம் மேட்ச் பண்ணிட்டோம்… ஒண்ணும் செட் ஆகல”
“ம்ம்ம்” என்றவன் பதிலேதும் உரைக்காமல் தன் கழுகு பார்வையால் அந்த வீட்டின் இண்டு இடுக்குகளையும் ஆராய்ந்து கொண்டிருந்தான்.
கடைசியாய் அவரின் புத்தகங்களும் ஓவியங்களும் இருந்த அறைக்குள் நுழைந்தான்.
அப்போது ரகு கொஞ்சம் கடுப்பாகி “என்ன சார்… நான் பேசிட்டே இருக்கேன் நீங்க பதில் பேசாம ம்ம்ம் னு மட்டும் சொல்றீங்க” என்று வினவினான்.
வீரேந்திரன் அவன் புறம் திரும்பி புன்னகையோடு “நீங்க சொன்னதெல்லாம் கேஸ் பைஃலில் படிச்சிட்டேன்.. புதுசா ஏதாச்சும் சொல்லுங்க ரகு” என்று கேட்டான்.
ரகு மனதிற்குள் ‘இருக்கிறததைதானே சொல்ல முடியும் … புதுசான்னு கேட்டா நான் எங்க போறதாம்’ என்று எண்ணியபடி மௌனமாய் நிற்க, வீரேந்திரன் புன்னகையோடு “நான் சொல்லட்டுமா… ரகு ?!” என்றான்.
ரகுவின் அமைதியை பார்த்தபடி “தர்மா… ஆர்க்கியாலஜிஸ்ட்… தமிழ்நாட்டு கோவில்கள் வரலாறுகள் பற்றிய நிறைய ஆராய்ச்சி செய்தவர்… கல்வெட்டியலில் பெரிய எக்ஸ்பெட்… இது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்… ஆனா தெரியாத விஷயம்… வெளிநாட்டில இருக்கிற சிலை கடத்தல் கும்பலுக்கு நம்ம நாட்டோட சிறப்புமிக்க சிலைகளையும் பொக்கிஷங்களையும் பேரம் பேசி விற்கிற க்ரிமினல்… பக்கா க்ரிமினல்” என்று சொல்லும் போதே அவன் பார்வையில் அத்தனை கோபம்.
மேலும் தொடர்ந்து “அவர் டிவோஸியெல்லாம் இல்ல ரகு… சமுதாயத்திற்கு முன்னாடி அவர் போடிற நாடகம்… அவர் மனைவியும் மகன்களும் வெளிநாட்டில சுகபோகமா இருக்காங்க… இவரும் அடிக்கடிக்கு அவங்களை பார்க்க போயிட்டு வருவாரு… அங்கயே செட்டிலாகி மனிஷன் திட்டம் போட்டிருந்தார்… ஆனா அதற்குள்ள இங்கயே இவர் விதி முடிஞ்சிருச்சு…. இல்ல எவனோ முடிச்சிட்டான்” என்றான்.
ரகு உறைந்து போய் நின்றான். அவன் எப்போது இவற்றை எல்லாம் விசாரித்து அறிந்து கொண்டான் என அவன் யோசித்திருக்க அப்போது வீரேந்திரன் அந்த அறையில் இருந்த ஓவியங்களை கூர்ந்து கவனிக்கலானான்.
முதல் ஓவியம்… கடற்கறையில் பெரிய பெரிய மரக்கலயங்கள் நின்று கொண்டிருக்க, நிறைய பொருள்கள் ஏற்றுமதி இறக்குமதிக்காக குவித்து வைத்திருப்பதை போல வரையப்பட்டிருந்தது.
இரண்டாவது ஓவியம்…
ஒரு ராஜகம்பீரமான இறைவியின் உருவப்படம்… ஓவியத்திலேயே பார்க்க பிரம்மிப்பாய் இருந்த அந்த சிலை, நிஜத்தில் எப்படி இருக்கும் என சிந்தித்தவன் “இந்த சிலை… எந்த கோவிலுடையது” என்று ரகுவிடம் வினவ அவன் “தெரியல சார்” என்றான்.
அந்த ஓவியத்தை நன்கு உற்று பார்த்துவிட்டு தான் எங்கேயோ இதனை பார்த்திருக்கிறோமே என எண்ணிக் கொள்ள ‘எங்கே எப்போது’ என்று தனக்குத்தானே கேட்டு கொண்டான்.
பின் அந்த சிந்தனையை விடுத்து மூன்றாவது ஓவியத்தின் புறம் திரும்பினான்… ஒரு உயரமான கோபுரம் கொண்ட கோவில். கடல் அலைகளை அதன் வெளிப்புறத்து சுவற்றை தொட்டு தழுவி கொண்டிருக்க, அந்த கோவிலின் மேல் உச்சியில் ஒரு பெரிய ஒலி… பார்க்க அது ஒரு கலங்கரை விளக்கத்தை நினைவுப்படுத்தியது.
நான்காவது பலகையில் ஓவியமின்றி காலியாய் கிடந்தது.
வீரேந்திரன் அவற்றை பார்த்து “இந்த ஓவியங்கள் எல்லாமே ஏதோ சொல்லுது ரகு… ஒண்ணோட ஓன்று கனெக்டட் மாதிரி தெரியுது.. ஆனா இந்த போர்ட் காலியா இருக்கிறதை பார்த்தா ஏதோ முக்கியமான ஓவியம் மிஸ்ஸாகுது” என்றான்.
ரகுவிற்கு வியப்பாய் இருந்தது. அப்படியே அச்சுபிசகாமல் தன் தோழி சொன்னதை இவனும் சொல்கிறானே என யோசிக்க வீரேந்திரன் “ரகு”
என்றழைத்தான்.
“சார்”
“இந்த புக்ஸ்ல ஏதாச்சும் வித்தியாசமா இருக்கான்னு பார்த்தீங்களா… எனி க்ளூ..” என்றான்.
“பார்த்தேன்… கீழே அடுக்கியிருந்தெல்லாம் அவர் படிக்கிற புக்ஸ்… மேலே அவரோட டைரி… அப்புறம் அவர் ரிசர்ச் பண்ணி எழுதின புக்ஸ்…” என்றான்.
“அவரோட டைரில எல்லாம் என்ன இருந்துச்சுன்னு படிச்சி பார்த்தீங்களா…?”
“மேலோட்டமா பார்த்தேன்… எல்லாம் சில கோவில் மன்னர்கள் பத்தின ரிசர்ச் மேட்டர்ஸ்… பட் ரொம்ப ஆழமா பார்க்கல”
“என்ன ரகு… இப்படி கேர்லஸ்ஸா பதில் சொல்றீங்க… ஒரு கேஸ்ஸை எடுத்துட்டோம்னா சின்ன சின்ன விஷயங்களை கூட விடாம ஆராயனும்” என்று சொல்லியவன் வரிசையாய் ஒரே நிறத்தில் நின்றிருந்த டைரிகளை பார்த்தான்.
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தலைப்பிருந்தது. வரிசையாய் பல நூற்றாண்டு பழைமையான கோவில்களின் பெயர்கள் அல்லது மன்னனின் பெயர்களாக எழுதியிருக்க
நடுவில் ஒரு இடைவெளி காணப்பட்டது.
வீரேந்திரன் சந்தேகமாய் “ஏதோ ஒரு டைரி நடுவில மிஸ்ஸாகுதோ ?!” என்ற சொல்ல ரகுவும் அதனை கவனித்தான்.
ஏற்கனவே தான் இந்த ரேக்கை பார்த்த போது இப்படியில்லையே என்று ரகு அதிர்ந்தான்.
அன்று இரவு தன் தோழியை அழைத்து வந்தது நினைவுக்கு வர மனதிற்குள் ‘ஏ தமிழச்சி இது உன் வேலையா டி… பாவி’ என்று வெலவெலத்துப் போய் நின்றான்.
அப்போது வீரேந்திரன் “இந்த கேஸ்ல ஏதோ ஒரு சீக்ரெட் இருக்கு… மிஸ்ஸான ஓவியம்… அப்புறம் அந்த டைரி… இதுக்கெல்லாம் அந்த சீக்ரெட் தெரிஞ்சிருக்கலாம்… வாட்ஸ் தட் சீக்ரெட் ?.. அதை யாரோ மறைக்க முயற்சிக்கிறாங்க… இல்ல எடுக்க முயற்சிக்கிறாங்க… அதுக்காகவும் கொலை நடந்திருக்கலாம்” என்று சொல்ல “ம்ம்ம்… இருக்கலாம் ஸார்” என்றான்.
ரகுவிற்கு அந்த வழக்கை வீரேந்திரன் எடுத்து செல்லும் விதத்தை கண்டு வியப்பானான்.
வீரேந்திரன் அவனை பார்த்து “ஒகே ரகு…. கிளம்புவோம்” என்று அதிகாரமாய் சொல்லியபடி மீண்டும் அந்த அறையை நோட்டமிட்டவன் அவற்றை எல்லாம் தன் செல்ஃபோனில் படம்பிடித்துக் கொண்டான்.
ரகு முன்னே சென்றுவிட வீரேந்திரன் அந்த ரேக்கை கடந்து செல்லும் போது தரையில் ஏதோ மின்னிய உணர்வு. அதனை கவனித்தவன் உற்று பார்த்த போது அது ஒரு தங்க டாலர். சிங்க முகம் பொறிக்கப்பட்டிருந்தது.
அதனை உற்று பார்த்தவன் ‘யாரோடதா இருக்கும். ?.. தர்மாவோடதா… இல்லை குற்றவாளியினுடையதா ? எனிவே… இது பெரிய விட்னஸ்… ஆனா இதை எப்படி கவனிக்காம… இவ்வளவு நாளா? அந்த ரகு இந்த கேஸில என்னனதான் விசாரிச்சிருக்கான்… யூஸ்லெஸ்… இவன் எல்லாம் போலீஸ் ஆகலன்னு இப்ப யாரு அழுதா’ என்று ரகுவின் மீது எரிச்சலடைந்துவிட்டு அந்த டாலரை தன் பாக்கெட்டில் நுழைத்தவன் ரகுவிடம் கூட அதை பற்றி தெரிவிக்க விருப்பப்படவில்லை.
வாசலில் ரகு காத்திருக்க வீரேந்திரன் கமிஷனரிடம் கைப்பேசியில் பேசிக் கொண்டே வண்டியில் வந்து ஏறினான்.
“அந்த ஆர்ட்டிக்கல்லை நானும் படிச்சேன்… எனக்குமே ஷாக்கிங்காதான் இருக்கு… நானே நேர்ல போய் இதை பத்தி விசாரிச்சிட்டு உங்ககிட்ட பேசிறேன்” என்று உரைத்துவிட்டு அழைப்பை துண்டித்தான்.
இங்கயே இரண்டு நாட்கள் இருந்து இந்த வழக்கில் மேலும் விசாரணை புரியலாம் என்று எண்ணியிருந்த வீரேந்திரனுக்கு வேறு வேலையால் உடனே சென்னை புறப்பட வேண்டிய நெருக்கடி.
ஆதலால் மீண்டும் சென்னை திரும்பியவன் நேராய் பாரதி பத்திரிக்கை அலுவலகத்தின் வாசலில்தான் தன் போலீஸ் வாகனத்தை நிறுத்தினான்.
வீரேந்திரன் உள்ளே நுழைந்ததும் அவனின் கம்பீர தோற்றத்தையும் போலீஸ் உடையையும் பார்த்து அங்கே பணிபுரிபவர்கள் அனைவரும் கொஞ்சம் குழப்பமும் அச்சமும் கலந்த பார்வையோடு அவனையே பார்த்தனர்.
அங்கே இருந்த ஒரு பெண் வீரேந்திரனை நோக்கி “என்ன விஷயம்… எங்க எடிட்டர் இப்போ இங்க இல்லயே…” என்று பதட்டத்தோடு உரைத்தாள்.
அவன் நிமிர்வாய் நின்றபடி “நான் ஏசிபி ராஜ வீரேந்திர பூபதி… சப் எடிட்டர் ஆதியை பார்க்கனும்… ” என்று கேட்டான்.
உடனே அவனை குறித்த தகவல் ஆதிக்கு தெரிவிக்கப்பட்டு வீரேந்திரன் அறைக்குள் அனுப்பப்பட்டான்.
அவன் உள்ளே நுழைந்த மாத்திரத்தில் எதிரே வெள்ளை நிற குர்தி அணிந்து கொண்டு ஒரு இளம் பெண். ஆம் இளம் பெண்தான் ஆனால் பார்வையிலும் தோற்றத்திலும் நின்று அவனை வரவேற்ற தோரணையிலும் அத்தனை கம்பீரமும் ஆளுமையும் தெரிந்தது.
ஆதி என்ற பெயரில் இருப்பவள் ஒரு பெண்ணா என்று வியப்புக்குறியோடு அவளை அவன் விழி இடுங்க பார்க்க, அவளோ முகமலர்ச்சியோடு “ஐம் ஆதி… ஆதிபரமேஸ்வேரி” என்று தன் வலது கரத்தை நீட்டினாள்.
அவனும் வியப்பிலிருந்து மீண்டு கைகுலுக்கி “ஏசிபி ராஜ வீரேந்திர பூபதி” என்றான். இருவரும் தங்கள் இருக்கையில் அமர அந்த பெண்ணின் முகத்தில் துளியும் நடுக்கமோ பதட்டமோ காணப்படவில்லை என்பதை அவன் குறித்து கொண்டான்.
அவள் இயல்பான பார்வையோடு “நீங்க பார்க்கனும்னு கூப்பிட்டிருந்தா நானே உங்க ஆபிஸுக்கு வந்திருப்பேனே ?” என்றாள்.
“யாரை எங்க விசாரிக்கனும்ங்கிறது எல்லாம் என்னோட முடிவு… ” என்றபடி மேஜை மீதிருந்த நேம் பிளேட்டை பார்த்தவன் “ம்ம்ம்… உங்களுக்கு
இடைஞ்சல் இல்லன்னா கொஞ்சம் பேசலாமா மிஸஸ். ஆதி” என்று அனுமதியாக கேட்டான்.
“ஒய் நாட்… ஷுவர்”
வீரேந்திரன் யோசனையோடு ஒரு மேகஸீனை எடுத்து மேலே வைத்தவன், சில பக்கங்களை புரட்டி “இந்த ஆர்ட்டிக்கல் நீங்கதானே எழுதினது… அதுவும் தமிழ் நாட்டில நடந்த சிலை கடத்தல்கள் பத்தி புள்ளிவிவரத்தோட… எப்படி? ” என்று கேட்டான்.
“விசாரிச்சோம்… டீடைல்ஸ் கலெக்ட் பண்ணோம்… நியாயமா பார்த்தா… நீங்க செய்ய வேண்டிய வேலையை நாங்க செஞ்சிருக்கோம்” என்றாள். அந்த பார்வையில் ஒரு திமிர்.
அதை அவன் சற்றும் விரும்பவில்லை என்பது போல் தன் விரல்களை மடக்கி தன் பொறுமையின்மையை காண்பித்தபடி
“இந்த தகவல் எல்லாம் ஏன் போலீஸுக்கு நீங்க கொடுக்கல… இன்னும் கேட்டா நீங்க போடற நீயூஸ் குற்றவாளியை அலர்ட் பண்ணலாம்… தெரியுமா உங்களுக்கு… ?” என்றே சற்று அதிகார தொனியில் அவன் குரல் உயர்ந்தது.
ஆனால் அவள் அலட்டிக் கொள்ளாமல் “இப்படி சொல்றேன்னேன்னு தப்பா எடுத்துக்காதீங்க மிஸ்டர். பூபதி… பல முக்கியமான கோவில்களில் இருந்தே காணாம போன சிலைகளோட எண்ணிக்கை நூற்றுக்கணக்கில இருக்கு… நான் எழுதின தகவல் கொஞ்சம்தான்… இந்த தகவல் மக்களுக்கு போய் சேரனும்ங்கிறதுதான் என்னோட நோக்கம்… பட் போலீஸ்கிட்ட சொன்னா… வேற வினையே வேண்டாம்… அது குற்றவாளிகள் கைக்கே நேரடியா போயிடும்… மக்களுக்கு இதை பத்தி எல்லாம் தெரியாமலே போயிடும்” என்றதும் வீரேந்திரன் கோபம் அதிகமானது.
போலீஸ் டிப்பார்ட்மன்ட் பத்தி அவள் கூறுவதை கேட்டு சீற்றத்தோடு எழுந்து நின்று கொண்டவன் “இது ரொம்ப தப்பான ஹேட்டிட்டியூட்… போலீஸ் டிப்பர்ட்மன்ட்ல ஒவ்வொருத்தரும் உயிரை கொடுத்து வேலை செஞ்சிட்டிருக்கோம்… நீங்க ஏசி ரூம்ல உட்கார்ந்துட்டு ஈஸியா கமென்ட் பண்ணிட்டிருக்கீங்க…” என்றான்.
“ஜர்னலிஸமும் ஏசில உட்கார்ந்திட்டிருக்கிற வேலை இல்ல… அன் நாங்களும் உங்களை மாதிரி குற்றங்களை கண்டுபிடிக்க எவ்வளவோ ரிஸ்க் எடுக்கிறோம்… இன்னும் கேட்டா உங்க கையில ஆயுதம் இருக்கு.. எங்க கையில அதுவும்இல்ல” என்றாள்.
அவன் அவளை உற்றுநோக்கியபடி “பைஃன்… உங்க ஜர்னலிஸத்தை நீங்க பாருங்க… என் போலீஸ் வேலையை நான் பார்க்கிறேன்… ஒருநாள் இந்த போலீஸ் தயவு உங்களுக்கு தேவைப்படும் ஆதி… அப்போ பார்த்துக்கலாம்” என்றதும் ஆதிக்கு அவன் சொல்வதன் அர்த்தம் விளங்கவில்லை.
இருந்தும் “பார்க்கலாமே” என்று அவளும் சவலாய் உரைக்க தன் மனைவிக்கு இருக்கும் திமிர் அப்படியே ஆதியிடம் கண்டவன் தர்மா கேஸ் விஷயத்தை பற்றி கேட்கலாமா என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.
அப்போது வெளியேற கதவருகில் போனவன் சந்தேகமாய் திரும்பி “உங்களுக்கு தமிழச்சி பத்திரிக்கையில இருக்கிற செந்தமிழை தெரியுமா ?” என்று கேட்க அவள் “ம்ம்ம்… கேள்விப்பட்டிருக்கேன்… பட் பேசி பழக்கமில்லை” என்றாள்.
வீரேந்திரன் மனதில் ‘இது உண்மையா பொய்யா ?!’ என்று சந்தேகத்தோடே வெளியேறினான். ஆதியின் சந்திப்பும் அந்த ஆர்ட்டிக்கலும் இந்த வழக்கில் ஏதோ ஒரு பெரிய திருப்புமுனையை கொண்டு வர போகிறது என்று அவன் உள்ளுணர்வு சொல்லிற்று.
**********
காதல் மோகம்
அந்த நாள் முழுக்க வலி ஒருபுறமும் தனிமை மறுபுறமும் தமிழை வாட்டி வதைத்தது.
பூஜை என சென்ற சந்திரா கோவிலில் இருந்து திரும்பியபாடில்லை. கேட்டால் நாளைதான் வருவார் என வேலையாள் உரைக்கவும் அறையில் தனியே அடைந்து கிடப்பது அவளுக்கு நரகமாயிருந்தது.
வெளியே கார்டனில் சிறிது நேரம் நடந்தாள். பின்னர் இருள் சூழ்ந்திட அறைக்குள் நுழைந்தவள் அப்போதுதான் ஓயாமல் அடித்த கைப்பேசியை கவனித்தாள்.
அந்த தொலைப்பேசி எண் யாருடையது என அவள் பதில் அழைப்புவிடுக்க எதிர்புறத்தில் ஒலித்த குரலை கேட்டதும் “ஆதி” என்றழைத்து பிரகாசமானாள்.
“ம்ம்ம்… மேடம் எப்படி இருக்கீங்க… போஃனை எடுக்க கூட நேரமில்லை… ரொம்ப பிஸி”
“பிஸியா… நீ வேற… வெட்டியா இருக்கேன்… போரடிக்குது”
“கல்யாணம் ஆன இரண்டாவது நாளே இவ்வளவு சின்ஸியர் சிகாமணியாய் உன் வீட்டுக்காரர் வேலை பார்த்துட்டிருந்தா உனக்கு போரடிக்கதானே செய்யும்…” என்று சொல்லி ஆதி புன்னகையிக்க “ஆதி ப்ளீஸ்” என்றவள் பின் “நீ சொல்றதை பார்த்தா… ஏசிபி உன்னை பார்க்க வந்தாரா ?” என்று தமிழ் ஆதியிடம் கேட்க,
“ம்ம்ம்?”
“தர்மா கேஸ் பத்தி விசாரிச்சாரா?” என்று தமிழ் யூகிக்க
“தர்மா பத்தி எதுவும் கேட்கல… சிலை கடத்தல் கட்டூரை பத்திதான் கேட்டாரு” என்றாள்.
“ஹ்ம்ம்… அவன் மனசில ஏதோ திட்டம் வைச்சிருக்கான்… அவன்கிட்ட நம்ம சிக்க கூடாது… அதனால்தான் அந்த கட்டூரையா இப்ப போட வேண்டாம்னு சொன்னேன்… நீதான் கேட்கல”
“இல்ல தமிழ்… அந்த கட்டூரையை நான் போடக் கூடாதுன்னு நிறைய மிரட்டல் கால்ஸ்… அதான் போட்டேன்… நாளைக்கு நம்ம நிலைமை எப்படி இருக்கும்னு சொல்ல முடியாதே”
தமிழ் மொத்தமாய் சிந்தனையில் மூழ்க ஆதியே மேலே தொடர்ந்தாள்
“இன்னொரு விஷயம் தமிழ்…ஏசிபி உன்னை எனக்கு தெரியுமான்னு கேட்டாரு ?!”
தமிழ் பதட்டத்தோடு “அய்யோ… தெரியாதுன்னுதானே சொன்ன ???” என்று கேட்க
ஆதி “ஆமா… பழக்கமே இல்லன்னு சொல்லிட்டேன்” என்று சொன்னதும் தமிழ் நிம்மதியடைந்தாள்.
“சூப்பர்… அப்படியே மெயின்டெயின் பண்ணுவோம்… கால் பண்ணும் போது கூட நீ லேண்ட் லைன்னே யூஸ் பண்ணு”
“சரி… அந்த தர்மாவோட டைரி”
“என் ஆபிஸ்ல இருக்கு… நான் இன்னும் அதை படிக்கல… அந்த டைரி கைக்கு வந்ததில் இருந்து பிரச்சனை மேல பிரச்சனை… இன்னைக்கு ஆபிஸ் போலாம்னு பார்த்தா இடுப்பு பிடிச்சிக்கிச்சு…. முடியல” என்று அவள் சொல்லி முடிக்க ஆதி விடாமல் சிரிக்க ஆரம்பித்தாள்.
தமிழ் கோபத்தோடு “என் வலி… உனக்கு சிரிப்பா இருக்கா?” என்று கேட்டாள்.
ஆதி சிரித்தபடியே “அந்த ஏசிபி ரொம்ப விறைப்பா இருக்கும் போதே நினைச்சேன்… என்ன தமிழ்? ரொம்ப முரட்டுத்தனமா நடந்துக்கிட்டாரோ ?!” என்று பரிகாசமாய் கேட்க அவளோ தவிப்போடு,
“அய்யோ… ஆதி… நீ நினைக்கிற மாதிரி ஒரு மண்ணும் இல்ல”
“அப்புறம் எப்படி ?”
“அது வேற விஷயம்”
“என்ன விஷயம் ?”
“விழுந்திட்டேன்” என்று சொல்லி தமிழ் அலுத்துக் கொள்ள
“எங்கே இருந்து ?” என்று ஆதி நிறுத்தாமல் கேட்டாள்.
தமிழ் சலிப்பின் மிகுதியால் “ஹ்ம்ம்ம்ம்… பெரிர் போஸ்ட் கம்பத்திலிருந்து விழுந்திட்டேன்…” என்றாள்.
“போஸ்ட் கம்பமா… என்ன உளற நீ…”
“கடவுளே…. போதும் விடேன்..” என்று தமிழ் இறங்கி கெஞ்சவும்
“ஒகே ஒகே விட்டுடட்டேன்… டென்ஷனாகதே… நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு… உன் வீட்டுக்காரு ரொம்ப தீவிரமா இருக்காரு தர்மா கேஸ்ல… ” என்று சொல்லிக் கொண்டிருக்க தமிழ் மனதிற்குள் யோசிக்கலானாள்.
‘அந்த ஏசிபி காஞ்சிப்புரத்திற்கு போறதா இல்ல லெட்டர்ல எழுதியிருந்தான்’
அவள் உடனடியாய் ஆதியிடம் “ஏய் ஆதி… நீ அந்த ஏசிபியை எப்போ மீட் பண்ண ?!”
“இப்பதான் ஒரு அரைமணி நேரம் முன்னாடி இருக்கும்”
“இப்பவா ?” என்று அவள் அதிரும் போதே வாசலில் அவனின் வாகனத்தின் சத்தம்.
நடந்து சென்று ஜன்னலில் எட்டிப்பார்த்தவள் “அய்யோ… ஏசிபி” என்று அலறினாள்.
“என்னத்துக்கு இப்ப அலற்ற ?”
“நீ முதல்ல போஃனை வை… அந்த ஏசிபி வீட்டுக்கு வந்துட்டான்”
“அவர் உன் வீட்டுக்காரர்மா… வீட்டுக்கு வராம”
“வீட்டுக்காரனா… போலீஸ்காரன்… “
“சரி சரி போய் உன் போலீஸ்காரரை கவனி… நான் போஃனை வைக்கிறேன்” என்று ஆதி அழைப்பை துண்டிக்க வெளயே அவனின் குரல் அதிகாரமாய் ஒலித்து கொண்டிருந்தது.
கதவருகில் போய் எட்டிப் பார்க்க அவன் சத்தமாய்
“இப்ப அம்மாவுக்கு கோவில் பூஜைதான் முக்கியமா போச்சா ?” என்று கேட்டவன் வேலைக்கார பெண்மணியை பார்த்து தமிழ் சாப்பிட்டாளா… தூங்கினாளா என்று அவளை பற்றியே அடுக்டுக்காய் கேள்விகள் கேட்டு விசாரித்து கொண்டிருந்தான்.
அவளுக்கு குழப்பமாயிருந்தது. ஒரு நேரம் தன் மீது அவனுக்கு அக்கறையே இல்லையோ என யோசிக்க வைத்தவன் இன்னொரு சமயம் அன்பையும் அக்கறையை பொழிந்து தள்ளுகிறான்.
அப்போதுதான் கவனித்தாள். அவள் தூக்கியெறிந்த மலர் வாடியிருக்க அவன் எழுதிய கடிதம் கசங்கியிருந்தது. அவன் வாங்கி வைத்திருந்த பரிசும் பிரிக்கபடாமல் படுக்கையின் கேட்பாரின்றிகிடக்க அவற்றை எல்லாம் பார்த்தால் அவன் மனம் வேதனை கொள்ளுமே என எடுத்து வைக்க எண்ணிய போதே கதவு திறக்கும் ஓசை.
அந்த சத்தம் அவள் இதயத்துடிப்பினை அதிகரித்து மத்தளம் கொட்டுவதை போல அவள் செவியில் கேட்க ‘தமிழ் நீ காலி’ என்று எண்ணி உறைந்து போய் நின்றவளை பார்த்த கணம் அவன் பின்னோடு வந்து இறுக்கமாய் அவளை அணைத்து கொண்டான்.
அத்தனை காதலையும் தவிப்பையும் அவன் அணைப்பில் உணர்ந்தாலும் அதை அனுபவத்திர முடியாமல் ‘இப்போ எப்படி எல்லாத்தையும் அவனுக்கு தெரியாம எடுத்து வைக்கிறது’ என்று எண்ணியபடி அவள் இடையை பூட்டியிருந்த அவன் கரத்தை விலக்க முயற்சி செய்து கொண்டிருக்க, அவனோ தன் கரத்தை இன்னும் இறுக்கமாய் பூட்டிக் கொண்டு அவள் காதில் கிசுகிசுத்தான்.
“ஐ லவ் யூ டி என் தமிழச்சிசிசிசிசி”
உணர்ச்சிபூர்வமாய் அவனில் இருந்து வெளிவந்த அந்த ஒற்றை வாக்கியம் அவளின் தேகத்தின் அத்தனை கோடானு கோடி செல்களிலும் எதிரொலித்து அவளை சிலாகிக்க வைத்திட, அவள் செயலிழந்து… சொல்லிழந்து… அவன் காதலோடு கறைந்து போனாள்.
இன்னது நிலைமை என அப்போது மறந்தும் போனாளே !
காதல் மோகம் தொடரும்…
(இந்த கதையில் இப்போது நுழைந்திருக்கும் ஆதி என்ற கதாப்பாத்திரத்தை என்னுடைய இரண்டாவது கதையான ‘ஆதியே அந்தமாய்’ படித்த வாசகர்களுக்கு தெரிந்திருக்கும். அந்த கதையின் நாயகி இந்த கதையில் நம் தமிழச்சியோடு இணைந்து பயணிக்க இருக்கிறாள்… ஆதலால் இன்னும் நிறைய சுவரஸியங்களோடு வாடி என் தமிழச்சி உங்களுக்காக… )
அப்புறம் அந்த பாட்டு மறந்துட்டனே.
(செந்தமிழ் நாட்டு தமிழச்சியே…) நம் நாயகனுக்கு இதைவிட ஒரு பாடல் அவளை வெறுப்பேற்ற இருக்க முடியுமா ?!!