மோகனப் புன்னகையில் 1

1990, ‘கௌரிபுர வாசல் அரண்மனை’

‘க்ளிக் க்ளிக்’ தொண்ணூறுகளில் பிரசித்தமான காமெராக்கள் அங்குமிங்கும் பளிச்சிட்டு அந்த அரண்மனையின் அழகை உள்வாங்கிக் கொண்டிருந்தன. அன்று அத்தனை கூட்டம் இருக்கவில்லை. நான்கைந்து பேர் நின்று ரசித்துப் பார்த்திருந்தார்கள். ஸ்டீஃபனும் ஒவ்வொரு இடமாக அந்த அரண்மனையைச் சுற்றிப் பார்வையிட்டான்.

கன்னியாகுமரி மாவட்டம். திருவனந்த புரம் செல்லும் வழியில் கௌரிபுரம் எனும் ஊரில் அமைந்திருந்தது அந்த அரண்மனை.

ஒவ்வொரு தூண்களும் அத்தனை விசாலமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தூண்களுக்கு நடுவே தொங்கிய தூண்டா விளக்கு ஒரு குதிரை வீரன் வடிவில் அத்தனை அழகாக இருந்தது.

தன்னைக் கடந்து போனவர் இந்த அரண்மனையில் வேலை செய்பவர் போல தோன்றவும் சட்டென்று அழைத்தான் ஸ்டீஃபன்.

“சார்!”

“சொல்லுங்க தம்பி.” வெள்ளை வேட்டி சட்டையில் தலையிலிருந்த நான்கைந்து முடிகளை எண்ணெய் வைத்துப் படிய வைத்திருந்தார் மனிதர். முதுமை முழுதாகத் தெரிந்தது அவர் முகத்தில்.

“இல்லை… இங்க ‘விஜயேந்திர சேதுபதி’ ங்கிறது…” ஸ்டீஃபன் முடிக்காமல் தொக்கி நிற்க அந்த மனிதர் அவனை மேலும் கீழுமாகப் பார்த்தார்.

“தம்பி வெளியூரா?”

“ஆமா சார். எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”

“பார்த்தாலே தெரியுது. இந்த சுற்றுவட்டாரத்துல இருக்கிற யாரும் தம்பியை இப்படிப் பெயர் சொல்லிக் கூப்பிட மாட்டாங்க.” அந்தக் குரலில் இனி நீயும் அப்படி அழைக்காதே என்ற கண்டிப்புத் தெரிந்தது.

“சாரி சார். எனக்குத் தெரியலை. இனிமே கவனமா நடக்கிறேன்.”

“சரி… எதுக்குத் தம்பியைப் பத்தி விசாரிக்கிறீங்க?” இதுவரை நேரம் இவர்கள் உரையாடலிலிருந்து இவரால் விளிக்கப்படும் ‘தம்பி’ தான் விஜயேந்திர சேதுபதி என்று ஸ்டீஃபனுக்குப் புரிந்திருந்தது.

“சார் நீங்க யார்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” இது ஸ்டீஃபன்.

“நான் இந்த அரண்மனையோட கணக்கர் தான். நீங்க தயங்காமச் சொல்லுங்க தம்பி.”

“சார்! என் பெயர் ஸ்டீஃபன். கானடால இருந்து வர்றேன். உங்க தம்பியோட படிச்சவங்க ஒருத்தர் தான் என்னை இங்க அனுப்பி வெச்சாங்க. அவங்க பெயர் கரிகாலன். உங்க தம்பிக்கு அவங்களை நல்லாத் தெரியுமாம்.”

“அப்படியா? அடடா! இவ்வளவு நேரமும் இதைச் சொல்லாம இருந்திட்டியேப்பா. தம்பிக்கு வேண்டப்பட்ட வங்களா! உள்ளே வாப்பா.” அதன் பிறகு அவர் தோரணையே மாறிப்போனது.

அரண்மனையைச் சுற்றிப் பார்க்கும் சுற்றுலா வாசிகளுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த எல்லையைத் தாண்டி உள்ளே ஸ்டீஃபனை அழைத்துப் போனார் கணக்கர்.

இதுவரை அவர் கண்களில் தெரிந்த ஒதுக்கம் விஜயேந்திர சேதுபதியின் நண்பர் தனக்குத் தெரிந்தவர் என்ற வார்த்தையில் முற்றாக மாறியிருந்தது.

அந்த மனிதரின் நண்பனுக்கே இத்தனை மரியாதை என்றால் இந்தச் சுற்றுவட்டாரம் அவரை எத்தனை தூரம் மதிக்க வேண்டும்!

“வாங்க தம்பி. உட்காருங்க.” அவர் கைகாட்ட அமைதியாகப் புன்னகைத்தான் ஸ்டீஃபன். அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிகளைப் பார்த்த போது ஸ்டீஃபனுக்குத் தலை சுற்றியது.

அவசர அவசரமாக அவன் மனது அந்த நாற்கலிகளின் விலையை கனேடிய டாலரில் கணக்குப் போட்டது. லேசாக மயக்கம் வரும் போல இருந்தது.

“கங்கா!” உள் நோக்கிக் குரல் கொடுத்தார் கணக்கர். இரண்டு நிமிடங்களில் ஒரு பெண் கையில் காஃபியோடு வந்தாள்.

“இந்தத் தம்பி ஐயாவுக்குத் தெரிஞ்சவங்களாம். காஃபியைக் குடு.”

“சரிங்க கணக்கரே.” அந்தப் பெண் கண்ணியமான ஒரு புன்னகையோடு காஃபியை ஸ்டீஃபனிடம் கொடுத்தது.

“தான்க் யூ.”

“சரிங்க ஐயா.” அந்தப் பெண் நகர்ந்து போக அந்த ஒற்றைக் கப் அன்ட் சாசரில் விஜயேந்திர சேதுபதியின் செழுமை புரிந்தது ஸ்டீஃபனுக்கு.

“தம்பி ஒரு வேலை விஷயமா வெளியே போயிருக்காங்க. நான் பையனை அனுப்பி எங்க இருக்காங்கன்னு விசாரிக்கச் சொல்லுறேன். நீங்க காஃபியைக் குடிங்க தம்பி.”

“சரி சார்.” தொலைத் தொடர்பு வசதிகள் அத்தனை தூரம் அந்தக் கிராமங்களுக்கு அப்போது வந்து சேர்ந்திருக்கவில்லை.

கூடத்தில் பெரிதாக ஒரு ஃபோட்டோ மாட்டப்பட்டிருந்தது. ஜமீன்தார் தோரணையில் ஒருவர் பெரிய கடா மீசையோடு போஸ் கொடுத்திருந்தார். ஆனால் ஃபோட்டோவிற்கு மாலை போடப்பட்டிருந்தது.

‘இவர்தான் பெரியவர் போல இருக்கு. ஆனா மாலை போட்டிருக்கே? இது எப்போ நடந்தது?’ எண்ணமிட்ட படி காஃபியைக் குடித்தான் ஸ்டீஃபன்.

அந்த அரண்மனையின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஏதோ ஒன்று ரசிக்கும் படியாக இருந்தது. வெள்ளையும் கறுப்புமாகப் பெரிய கட்டங்கள் போட்ட மொசைக் தரை. ஜன்னல், கதவு எங்கிலும் அழகான வேலைப்பாடுகள். தேர்ந்த தச்சர்களின் உளி கொண்டு செதுக்கிய திருத்தமான அலங்காரங்கள்.

“கொஞ்ச நேரம் காத்திருங்க தம்பி. தகவல் அனுப்பியிருக்கேன்.” கணக்கர் வந்து சொல்ல தலையை ஆட்டினான் ஸ்டீஃபன். பயணக் களைப்பு உடலை ஓய்வெடுக்கச் சொல்லி உந்தியது. இருந்தாலும் பொறுமையாகக் காத்திருந்தான்.

அவனை அத்தனை தூரம் காத்திருக்க வைக்காமல் யாரோ பேசியபடி உள்ளே வருவது கேட்டது ஸ்டீஃபனுக்கு. திரும்பிப் பார்த்தவன் தன்னை அறியாமல் எழுந்து நின்று விட்டான்.

வெள்ளை வேட்டி சட்டை. வேட்டியின் நுனியை ஒரு கையால் லேசாக உயர்த்திய படி கணக்கருடன் நடந்து வந்து கொண்டிருந்தார் அந்த மனிதர். படிய வாரிய தலை. கட்டுமஸ்தான தேகம். நடையே சொன்னது, அவர்தான் ‘விஜயேந்திர சேதுபதி’ என்று.

“கணக்கரே! கோயில் தர்மகர்த்தா கேட்கிறதைப் பண்ணிக் குடுத்திடுங்க. எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. தோப்பு வருமானத்துல அந்தக் கணக்கை சேர்த்திடுங்க.” ஆணைகள் இட்ட படியே நகர்ந்தது அந்த ஆழமான குரல்.

“தம்பி… இந்தப் பையன்தான் உங்களைப் பார்க்க வந்திருக்காரு.” சட்டென்று நடை நிற்க திரும்பிப் பார்த்தான் விஜயேந்திரன்.

“குட் மார்னிங் சார்.” ஸ்டீஃபனின் குட் மார்னிங்கில் லேசாக விஜயேந்திரன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. கணக்கரும் புன்னகைத்தார்.

“குட் மார்னிங். தம்பி எங்க இருந்து வர்றீங்க?” நிதானமாகக் கேட்டபடி ஸ்டீஃபனுக்கு எதிரே வந்து அமர்ந்தான் விஜயேந்திரன்.

“உட்காருங்க தம்பி.” அப்போதும் உட்காராமல் ஸ்டீஃபன் நின்றிருக்க நாற்காலியைக் காட்டினான் விஜயேந்திரன்.

“பரவாயில்லை சார்.”

“அட! உட்காருங்க தம்பி. எத்தனை நேரம்தான் இப்படியே நிக்கப்போறீங்க?” அந்த வற்புறுத்தலில் நாற்காலி நுனியில் அமர்ந்தான் ஸ்டீஃபன். தலையை அசைத்தபடி ஒரு புன்னகையோடு வெளியே போனார் கணக்கர்.

“ம்… இப்போ சொல்லுங்க.”

“சார்! நான் ஸ்டீஃபன். கானடாவில இருந்து வர்றேன்.”

“அப்படியா? நல்லது.”

“இந்தியாவில இருக்கிற அரண்மனைகள் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை பண்ணுறேன். அதுக்காகத்தான் இந்தியாவுக்கே வந்திருக்கேன். பக்கத்துல தான் ‘பத்மநாப புரம்’ அரண்மனையும் இருக்குன்னு சொன்னாங்க.”

“ம்… ஒரு ஆறு மைல் தொலைவில இருக்கு. நான் உங்களுக்கு என்ன உதவி பண்ணணும்னு எதிர் பார்க்குறீங்க?” கல்வியோடு சம்பந்தப்பட்டது என்பதால் உடனடியாக உதவிக் கரம் நீட்டினான் விஜயேந்திரன்.

“சார்… தங்கிறதுக்கு ஒரு இடம் வேணும். ஒரு வாரம் தான். பேயிங் கெஸ்ட்டா இருக்கிறேன். உங்ககிட்ட கேட்டா கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவீங்கன்னு சொன்னாங்க.” தயங்கித் தயங்கிப் பேசினான் ஸ்டீஃபன்.

“யாரு சொன்னாங்க?” ஒரு சிரிப்பினூடே வந்தது விஜயேந்திரனின் கேள்வி.

“கரிகாலன். உங்களுக்கு நல்லாத் தெரியும்னு சொன்னாங்க சார்.”

“எந்தக் கரிகாலன் ஸ்டீஃபன்?” விஜயேந்திரனின் முகம் சற்றே யோசனையைக் காட்டியது. அந்த முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்டீஃபன்.

“உங்க ஊருக்குப் பக்கத்துல ‘துவாரகா’ ன்னு ஒரு ஊர் இருக்காமே? அவங்களுக்கு அந்த ஊர்தான் சார்.”

‘துவாரகா.’

அந்த ஒற்றை வார்த்தையில் விஜயேந்திரனின் முகம் வெய்யிலில் வாடிய வெற்றிலைக் கொடி போல சோபையிழந்து போனது. வார்த்தைகளுக்காக அவன் கொஞ்சம் திணறுவது போல தெரிந்தது ஸ்டீஃபனுக்கு.

“கரிகாலன்னு சொன்னா உங்களுக்கு நல்லாத் தெரியும்னு சொன்னாங்க சார்.

“ம்… தெரியும் ஸ்டீஃபன்.” குரல் சற்றே கலங்கி இருந்ததோ?

“இப்போ கரிகாலன் எங்க இருக்கான்?”

“கானடால தான் சார்.”

“ஓ… ஃபாமிலி… ஐ மீன் மிஸஸ் எங்க இருக்காங்க? அங்க தானா?”

“ஆமா சார்.”

“குழந்தைங்க…”

“ஒரு பையன் இருக்கான் சார். ரெண்டு வயசாகுது.”

“ம்…” அந்த முகத்தில் தெரிந்த வலியை ஒரு நிமிடம் கையாலாகாத தனத்துடன் பார்த்திருந்தான் ஸ்டீஃபன்.

“கங்கா!” உள்ளே நோக்கிக் குரல் கொடுக்க காஃபி கொடுத்த பெண் மீண்டும் ஓடி வந்தாள்.

“ஐயா…”

“புத்தக அறைக்குப் பக்கத்துல இருக்கிற அறையை இந்த சாருக்கு ஏற்பாடு பண்ணிக் குடும்மா. இவங்களுக்கு எந்த அசௌகரியமும் வராம பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு கங்கா. இவங்க எனக்கு ரொம்ப வேண்டியவங்க.”

“சரிங்க ஐயா.” விஜயேந்திரனின் உத்தரவில் அந்தப் பெண் ஸ்டீஃபனை மரியாதையாகப் பார்த்தாள்.

“சார்! எனக்கு வெளியே எங்கேயாவது…” மேலே அவனைப் பேசவிடாமல் தடுத்தது விஜயேந்திரனின் புன்னகை.

“கரிகாலனுக்கு வேண்டியவங்கன்னு சொல்லிட்டீங்க. அதுக்கப்புறமும் நான் எப்படி உங்களை வெளியே தங்க அனுமதிக்க முடியும்?” விஜயேந்திரனின் கண்ணசைவில் கங்கா,

“வாங்க சார்.” என்றாள். எதுவும் பேசாமல் பின் தொடர்ந்தான் ஸ்டீஃபன்.

‘விஜயேந்திரா! வந்திருப்பது கரிகாலனுக்கு வேண்டப்பட்டவன் என்பதாலா உன் மனம் இத்தனை தூரம் இரங்குகிறது?’ மனச்சாட்சிக்கு பதில் சொல்ல விஜயேந்திரனால் முடியவில்லை.

×××××××××××××××

‘என்ன தவம் செய்தனை- யசோதா

எங்கும் நிறை பர ப்ரம்மம்…

பாடல் வரிகள் மீண்டும் மீண்டும் ஒலிக்க வித விதமான பாவங்கள் பிடித்தாள் சுமித்ரா. கோவிலில் கூடியிருந்த அத்தனை ஜனங்களும் அந்த நாட்டியத்தை கண்கலங்கப் பார்த்திருந்தார்கள்.

அந்தக் கண்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல அத்தனை அழகாக இருந்தது. பெரிய விழிகள். காது வரை நீண்டிருந்தது. பரதத்திற்கென விஷேடமாக வடிவமைக்கப்பட்டிருந்த அந்த மாம்பழ வண்ணப் பட்டுப்புடை சுமித்ராவை தேவமங்கை போலக் காட்டியது.

யசோதை குழந்தையாக இருந்த கண்ணனின் குறும்பைத் தாங்க முடியாமல் உரலோடு அவனைக் கட்டிப்போட்டதாகச் சொல்லப்படும் வரிகள் வருமிடத்தில் சுமித்ராவின் பாவம் வெகு சிறப்பாக இருந்தது. பார்த்துக் கொண்டிருந்த ஒன்றிரண்டு தாய்மார்கள் கண்களைப் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டார்கள்.

மேலும் இரண்டு கீர்த்தனைகளுக்கு அவள் அபிநயம் பிடித்து முடிக்க அத்தனை பேரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். அத்தனை பேரும் நிலத்தில் அமர்நதிருக்க முன் வரிசையில் இருந்த அந்தப் பெரியவரிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கினாள் சுமித்ரா.

“நீ தீர்க்காயுசா இருக்கணும்மா. சங்கரா! எத்தனை பெரிய திறமைசாலி உன்னோட மருமகள். இங்க செலவழிச்ச நேரத்துக்கு ஒரு ப்ரோக்ராம் பண்ணி இருந்தா நாலு காசு பார்த்திருப்பா. நான் கேட்டதுக்காக இவ்வளவு தூரம் வந்து என்னை கௌரவப் படுத்தினதுக்கு நான் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப் போறேன்!”

வேஷ்டி மட்டும் அணிந்திருந்து அங்க வஸ்திரத்தால் உடலைப் போர்த்தி இருந்த அந்தப் பெரியவர் கூறவும் புன்னகைத்தார் சங்கரன்.

“ஐயா! காசு பணம் எப்பவும் சம்பாதிக்கலாம். ஆனா உங்களை மாதிரிப் பெரியவங்களோட ஆசீர்வாதம் என் மருமகளுக்கு ரொம்ப முக்கியம் ஐயா.” லேசாகக் கலங்கியது சங்கரனின் குரல்.

“கவலைப்படாதே சங்கரா. கூடிய சீக்கிரமே அந்த பகவான் சுமித்ராக்கு நல்ல வழி காட்டுவான். நம்பிக்கையை விட்டுடாதே. நடக்கிறது எல்லாம் நன்மைக்குத் தான். உன்னோட சக்திக்கு மீறி மேலே இருக்கிறவன் உன்னை சோதிக்கப் போறதில்லை. அவன் மேல பாரத்தைப் போடு. எல்லாம் நல்லதாவே நடக்கும்.”

“உங்க வாக்குப் பலிக்கட்டும் ஐயா. நான் உத்தரவு வாங்கிக்கிறேன்.” அந்தப் பெரியவரை வணங்கி விட்டு காருக்கு வந்திருந்தார் சங்கரன். அதற்குள் சுமித்ராவும் உடைகளை மாற்றிக்கொண்டு வந்து சேர்ந்திருந்தாள்.

தொண்ணூறுகளில் மதுரையை அண்மித்திருந்த பகுதிகளில் சுமித்ரா மிகவும் பிரபலம். அவள் பரதநாட்டியம் நடந்தேறாத சபாக்கள் மதுரையில் இல்லை என்றே சொல்லலாம்.

இன்று நந்தவன புரத்தில் இருந்த கோவில் திருவிழாவின் இறுதி நாள். ஊர்ப் பெரியவர் சங்கரனுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்.அவர்களின் அழைப்பிற்கு சுமித்ராவும் மறுப்புச் சொல்லவில்லை.

“கிளம்பலாமா மாமா?”

“சரிம்மா.” இருவரும் ஏறக் கார் புறப்பட்டது. சங்கரன் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே வந்தார். அந்த அமைதியைச் சுமித்ராவும் கலைக்கவில்லை.

வீட்டு வாசலில் கார் நிற்கவும் வடிவு ஆரத்தித் தட்டோடு வெளியே வந்தார். இது எப்போதும் வாடிக்கை தான். ஊரின் ஒட்டு மொத்தக் கண்ணும் தன் மருமகள் மேல் இருப்பது போல் ஓர் எண்ணம் அவருக்கு.

“உள்ளே போம்மா.” ஆரத்தி எடுத்து முடித்தவர் சுமித்ராவிடம் கூற உள்ளே நுழைந்தாள். சங்கரன் ஏற்கனவே அவரின் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தார்.

அந்த வீட்டைப் பார்க்கும் போது வசதிக்கு எந்தக் குறைவும் இருந்தாற்போலத் தெரியவில்லை. ஆனால்… ஏதோ ஒன்று குறைந்தாற் போல தோன்றியது. ஒரு அமானுஷ்ய அமைதி.

சுமித்ரா உள்ளே நுழையவும் ஃபோன் அலறவும் சரியாக இருந்தது. ‘ட்ர்ரிங்… ட்ர்ரிங்…’ தரைவழித் தொலைபேசி சத்தம் போட்டது.

“ஹலோ.” இது சுமித்ரா.

“சுமித்ரா.”

“அத்தான்! சொல்லுங்க அத்தான். நான் சுமித்ரா தான் பேசுறேன்.” அவள் குரலில் கொஞ்சம் மகிழ்ச்சி தெரிந்தது.

“எப்படி இருக்க சுமித்ரா?”

“நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? குட்டி பையன் எப்படி இருக்கான் அத்தான்?” அவள் இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது ஆரத்தியைக் கொட்டி விட்டு வடிவு வீட்டினுள் வந்து கொண்டிருந்தார்.

“நல்லா இருக்கான் சுமித்ரா. அம்மா அப்பா ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க?”

“நல்லா இருக்காங்க அத்தான்.” அவள் ‘அத்தான்’ என்று சொன்ன மாத்திரத்தில் வடிவு கோபத்தின் உச்சிக்குப் போனார்.

“யாருடி ஃபோன்ல?” மனைவியின் குரலில் திரும்பிப் பார்த்தார் சங்கரன்.

“அத்தை… அது…  வந்து…”

“எதுக்குடி மென்னு முழுங்குற? உனக்கு மான ரோஷம், சூடு சொரணை எதுவுமே இல்லையா? அந்த நாசமாப் போனவன் தான் கூப்பிடுறான்னா உனக்கு அறிவு வேணாம்?”

“அத்தை! என்ன பேச்சு இது? அவர் உங்க பையன்!”

“இன்னொரு தடவை இப்படிச் சொன்னே… நான் மனுஷியா இருக்க மாட்டேன். யாருடி எம் புள்ளை? அந்தக் கடங்காரன் எம் புள்ளையா? அவனைப் பெத்ததுக்கு நான் மலடின்னு பெயர் எடுத்திருக்கலாம்.”

“வடிவு!” வெடித்துப் புலம்பிய மனைவியின் துயரம் பொறுக்கால் ஒரு அதட்டல் போட்டார் சங்கரன்.

“என்ன எதுக்குங்க அதட்டுறீங்க? இந்தா நிக்கிறாளே, இவளை அதட்டுங்க. வாழ்க்கையை வாழத் தெரியாம பைத்தியகாரி மாதிரி நிக்கிறாளே. இவளைத் திட்டுங்க.” வடிவு ஓவென்று ஒப்பாரி வைத்தார்.

“சுமித்ரா.”

“மாமா.”

“நீ உள்ளே போம்மா.”

“சரி மாமா.” அதுவரை தன் கையில் இருந்த ரிசீவரை அதன் தாங்கியில் வைத்தவள் ஒரு புன்னகையோடு உள்ளே போனாள். அவள் கழுத்தில் தொங்கிய தாலி அவளைப் பார்த்துச் சிரித்தது.

 

error: Content is protected !!