காலையில் சுமித்ரா கண்விழித்த போது விஜயேந்திரன் அருகில் இல்லை. ‘இத்தனை சீக்கிரமாக எங்கே போயிருப்பார்?’ யோசனையோடே காலைக்கடன்களை முடித்தவள் சமையற்க் கட்டிற்குப் போனாள்.
“கங்கா?”
“வாங்கம்மா. காஃபி கொடுக்கட்டுமா?”
“ஐயா மாடியில இருக்காங்களா?”
“ஐயா கிளம்பிப் போய்ட்டாங்களேம்மா!”
“போயிட்டாங்களா?”
“ஆமாம்மா. நீங்க அசந்து தூங்குறீங்க. தொந்தரவு பண்ண வேணாம்னு சொன்னாங்க.”
“ஓ…” கங்கா கொடுத்த காஃபியை வாங்கிய சுமித்ரா சமையலறைக்குப் பக்கத்தில் இருந்த திண்ணையில் அமர்ந்து கொண்டாள்.
உண்மையிலேயே விஜயேந்திரன் வேலையாகப் போயிருக்கிறானா? இல்லை… தன்னைத் தவிர்க்கிறானா?யோசனை மேலிட காஃபி இப்போது லேசாகக் கசந்தது.
நேற்று இரவு தன் அருகாமையைக் கணவன் நாடி இருந்தாலும் தான் பேசிய வார்த்தைகள் அவனைக் காயப்படுத்தி இருக்கும் என்று சுமித்ராவிற்கு இப்போது புரிந்தது.
அவள் அவனை வேண்டாம் என்று எப்போதும் சொல்லவில்லையே! சூழ இருப்பவர்களை எல்லாம் வதைக்கும் இந்தக் காதல் தான் வேண்டாம் என்று சொன்னாள்.
நான் பொதுவாகச் சொன்னதை எதற்கு அவர் தனக்கென்று எடுத்துக் கொள்ள வேண்டும்? மங்கைக்கும் ஸ்டீஃபனுக்கும் இந்தக் காதல் வேண்டாம் என்று சொன்னால், உனக்கு நான் வேண்டாமா என்று எதற்குக் கேட்க வேண்டும்?
கணவனை உடனேயே பார்க்க வேண்டும் போல மனம் கிடந்து தவித்தது. போதாததற்கு அந்த அம்மா வேறு சத்தம் போடுகிறார்கள். தலையைப் பிடித்துக் கொண்டாள் சுமித்ரா.
“கங்கா!”
“என்னம்மா?”
“ஐயா வேற ஏதாவது சொன்னாங்களா?”
“இல்லையேம்மா. காஃபி குடிச்சிட்டு சட்டுன்னு கிளம்பிட்டாங்க.”
“மத்தியானம் வருவாங்களாமா? இல்லை சாப்பாடு அனுப்பச் சொன்னாங்களா?”
“ஒன்னுமே சொல்லலைமா.”
“ஓ… பரவாயில்லை. நீ ஐயாக்குப் பிடிச்ச பக்குவத்துல நாட்டுக்கோழி, வாழைக்காய்ப் பொரியல், எண்ணெய் கத்தரிக்காய் எல்லாம் ரெடி பண்ணிடு கங்கா. நானும் வந்து ஹெல்ப் பண்ணுறேன்.” கணவனுக்குப் பிடித்த பதார்த்தங்களைப் பண்ணும் போது இப்போதெல்லாம் சுமித்ராவின் தலையீடு நிச்சயம் இருக்கும்.
“சரிம்மா. அது ஐயாக்குப் பிடிச்சது. எங்கம்மாக்குப் பிடிச்சதா என்ன பண்ணட்டும்?”
“ஐயாக்குப் பண்ணுறதே எனக்கும் போதும் கங்கா.”
“அது சரி. எங்கம்மாக்கு ஐயாவைத்தானே பிடிக்கும்.” கங்கா கேலி பேசவும் ஒரு சிரிப்போடு நகர்ந்து விட்டாள் சுமித்ரா.
அதே நேரம்…
கரிகாலன் வீட்டு வாசலில் காலிங்பெல் அடித்தது. காஃபி போட்டுக்கொண்டிருந்த ரோஸி ஆச்சரியத்தோடு கதவைத் திறக்க வந்தாள்.
‘யாராக இருக்கும்? அதுவும் இந்த நேரத்தில்?’ யோசனையோடு கதவைத் திறந்த பெண் மலைத்து நின்று விட்டாள்.
ஏனென்றால் அங்கே நின்றது சங்கரன்.
மாமனாரை அந்த அதிகாலையில் எதிர்பார்த்திராத ரோஸி அவரை வரவேற்க வேண்டுமே என்ற எண்ணம் கூடத் தோன்றாமல் உள்ளே ஓடினாள்.
அப்போதுதான் காலைக் கடன்களை முடித்துவிட்டு பாத்ரூமிலிருந்து வெளியே வந்த கரிகாலன் மனைவியின் முகத்தைப் பார்த்தான்.
“என்னாச்சு ரோஸி?” கேள்வி கேட்ட கணவனுக்குப் பதில் சொல்லும் நிலையில் மனைவி இருக்கவில்லை. அவன் கையைப் பிடித்தவள் எதுவும் பேசாமல் முன் வாசலுக்கு இழுத்து வந்தாள்.
“ரோஸி! என்னாச்சு? எதுக்கு இப்படி இழுத்துட்டு வர்ற?” கேட்டபடியே மனைவியின் இழுப்புக்குக் கதவு வரை வந்த கரிகாலன் அங்கு அப்பாவைக் காணவும் சர்வாங்கமும் அதிர அப்படியே நின்று விட்டான்.
“அப்…பா…” வாய் அழைத்தது. ஆனால் உதடுகள் பிரிந்தனவே ஒழிய சத்தம் வரவில்லை.
தன் எதிரே சிலையென நின்றிருந்த இருவரையும் ஒரு கணம் பார்த்த சங்கரன் தான் இறுதியில் வாய் திறந்தார்.
“நான் உள்ள வரலாமா கரிகாலா?”
“அப்பா! வாங்கப்பா… உள்ள வாங்கப்பா.” கண்ணீர்க் குரலில் வரவேற்ற கரிகாலன் அப்பா உள்ளே நுழைந்ததும் அவர் கால்களைக் கட்டிக் கொண்டு அழுது தீர்த்தான்.
இவர்களையே பார்த்திருந்த ரோஸி சுவரோடு சாய்ந்து நின்று கொண்டு தானும் கண்ணீர் வடித்தாள்.
“கரிகாலா! எந்திரி.‌ என்ன இது? சின்னப் பையன் மாதிரி பண்ணுறே? முதல்ல எந்திரின்னு சொல்றேன் இல்லை.”
“இல்லைப்பா. நான் பாவம் பண்ணி இருக்கேன். என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்கப்பா. உங்களுக்கும் அம்மாக்கும் தெரியாம இப்படியெல்லாம் பண்ணணும்னு நான் கனவுலயும் நினைச்சதில்லை ப்பா. ஆனா என் சூழ்நிலை அப்படி ஆகிப்போச்சு. என்னையே நம்பி நின்னவளை என்னால உதற முடியலைப்பா. சுமித்ராக்கு நீங்க எல்லாரும் இருந்தீங்க. ஆனா என் ரோஸிக்கு நான் மட்டும் தான் இருந்தேன் ப்பா. என்னைப் புரிஞ்சுக்கோங்க ப்பா.”
தன் கால்களைக் கட்டிக் கொண்டு பாவ மன்னிப்புக் கேட்கும் மகனின் தலையை வருடிக் கொடுத்தார் சங்கரன். சுவரோடு சுவராகச் சாய்ந்த படி தலை கவிழ்ந்து நின்றிருந்த மருமகளையும் திரும்பிப் பார்த்தார்.
அழகான சின்னஞ் சிறு குடும்பம். ஆசைப்பட்டு மணந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரும் தான் இணை என்று ஆண்டவன் போட்ட முடிச்சை யார் மாற்ற முடியும்?
“உன்னை மன்னிச்சதால தான் அப்பா உன் வாசல் தேடி வந்திருக்கேன் கரிகாலா. முதல்ல எந்திரி.” மகனை எழுப்பிவிட்டு ரோஸியைத் திரும்பிப் பார்த்தார்.
“ஏம்மா மருமகளே! இந்த மாமனார்க் கிழவன் முதல்முதலா உங்க வீட்டுக்கு வந்திருக்கேன். உட்காரச் சொல்ல மாட்டியா?” சங்கரனின் பேச்சில் திகைத்துப் போனாள் ரோஸி.
தன் மேல் விழ இருக்கும் பழியையும் கோபப் பார்வையையும் மட்டுமே எதிர்பார்த்திருந்தவள் இப்படி ஒரு அணுகுமுறையைச் சத்தியமாய் எதிர் பார்த்திருக்கவில்லை.
“உட்காருங்க… மாமா.”
“அட! எம் மருமகப் பொண்ணு எங்கூடப் பேசிட்டா கரிகாலா. ஏம்மா? அந்தக் குட்டிப் பையன் எங்க?” சூழ்நிலையை சகஜமாக்க இருவரிடமும் பேச்சுக் கொடுத்தார் சங்கரன்.
“தூங்குறான் மாமா. எந்திரிக்கிற நேரம் தான்.”
“ஓ… அப்படியா.”
“அப்பா!”
“சொல்லு கரிகாலா.”
“நீங்க இங்க வர்றது அம்மாவுக்குத் தெரியுமா?”
“உங்கம்மாக்குத் தெரியாம இதுவரைக்கும் நான் ஏதாவது பண்ணி இருக்கேனா? சொல்லிட்டுத் தான் வந்தேன்.”
“கோபப் பட்டாங்ளா?”
“அது தெரியலை. ஆனா அழுதா.”
“ஏம்பா?”
“அதை நீ வந்து கேளு.”
“அப்பா?”
“பையன் எந்திரிச்சதும் ரெண்டு பேரும் கிளம்பி எங்கூட நம்ம வீட்டுக்கு வர்றீங்க. அங்க எல்லாரும் உங்களுக்காகக் காத்திருக்காங்க.”
சங்கரன் சொல்லவும் ரோஸி சட்டென்று கணவனைத் திரும்பிப் பார்த்தாள். அந்தக் கண்களில் கலவரம் தெரிந்தது.
“அப்பா! ரோஸி…”
“ஏம்பா? ரோஸி தானே உன்னோட பிள்ளைக்கு அம்மா. உன்னோட சரிபாதி. அப்போ அந்தப் பொண்ணும் தான் கூட வரணும்.”
“இல்லைப்பா… அம்மாக்கு… ரோஸியை…”
“யார் என்ன சொன்னாலும், கோபப் பட்டாலும் எதையும் மாத்த முடியாது கரிகாலா. முடிவெடுத்துட்டீங்க. வர்றதைச் சமாளிக்கத் தானே வேணும்?”
“அது சரிதான் ப்பா. என்னை நீங்க எல்லாரும் எவ்வளவு வேணும்னாலும் திட்டுங்க. நான் தாங்கிக்குவேன். ஆனா ரோஸியை யாரும் எதுவும் சொல்லுறதை என்னால பொறுத்துக்க முடியாதுப்பா.”
“யாரு என்ன சொல்லப் போறாங்க கரிகாலா? உன்னோட அத்தையும் மாமாவும் உங்களைக் கூட்டிக்கிட்டு வரச்சொல்லி என்னை அனுப்பிட்டு அங்க இப்போ எதிர்பார்த்துக்கிட்டு இருப்பாங்க. பேசுறதா இருந்தா உங்கம்மா தான் ஏதாவது ரெண்டு வார்த்தை ஏடாகூடமா பேசணும். ஏம்மா மருமகளே! உங்க அத்தை ஏதாவது கோபமாப் பேசினா இந்த மாமாவுக்காக அதைக் கொஞ்சம் பொறுத்துக்கோ ம்மா.”
“ஐயோ மாமா! அத்தை என்னை எவ்வளவு வேணும்னாலும் திட்டட்டும். அது நியாயமும் கூட. நான் அதையெல்லாம் தாங்கிப்பேன். என்னால பிரிஞ்ச குடும்பம். இப்போதாவது ஒன்னு சேருதேன்னு நான் சந்தோஷம் தான் படுவேன்.”
கலங்கிய குரலில் தயங்கிய படி ரோஸி சொல்லவும் லேசாகப் புன்னகைத்தார் சங்கரன்.
“இப்போ என்ன சொல்ற கரிகாலா?” அப்பாவின் கேள்விக்கு மகன் புன்னகைத்தாலும் மனதில் சின்னதாக ஒரு சங்கடம் இருக்கத்தான் செய்தது.
தில்லை வடிவிற்கு ஒருவரை எந்த அளவு நேசிக்கத் தெரியுமோ அதே அளவு வெறுக்கவும் தெரியும்.
சற்று நேரத்தில் ரவியும் எழுந்து விட மகனின் குடும்பத்தைக் கையோடு துவாரகா அழைத்துச் சென்றார் சங்கரன். யாரின் எதிர்ப்பையும் சங்கடத்தையும் அவர் பொருட்படுத்தவில்லை. எப்போதும் மனைவியின் வார்த்தையை மீறமாட்டார். ஆனால் இன்று அதையும் அவர் கருத்திற் கொள்ளவில்லை.
வாழைக் குருத்துப் போல ஒரேயொரு பிள்ளை. அடுத்த முறை அவன் தாய் நாட்டிற்கு வரும் போது நாம் இருப்போமோ இல்லை போய் சேர்ந்து விடுவோமோ!
வாழ்க்கை இப்படி இருக்கும் போது எதற்கு இந்தக் கோப தாபங்கள்? அவர் எண்ணம் இப்படித்தான் இருந்தது.
வீட்டு வாசலில் வந்து நின்றவர் உள் நோக்கிக் குரல் கொடுத்தார். கரிகாலன் ரவியைத் தூக்கிய படி நிற்க பக்கத்தில் நின்றிருந்த ரோஸிக்கு உதறல் எடுத்தது.
“அம்மா செல்வி! வடிவை வரச்சொல்லு.” சங்கரின் குரல் கேட்கவும் வேமாக வந்தார் தமிழ்ச்செல்வி.
“இதோ! அண்ணி வர்றாங்க அண்ணா.” சொன்ன சில வினாடிகளில் தில்லை வடிவு கையில் ஆரத்தித் தட்டோடு வந்தார். அழுதிருப்பதை முகம் அப்பட்டமாகக் காட்டியது.
எதுவும் பேசாமல் அமைதியாக ஆரத்தி எடுத்து முடித்தவர் விழிகள் பேரனையே வட்டமிட்டது. ஒரு முறை மருமகளைப் பார்த்ததோடு பார்வையை விலக்கிக் கொண்டார். மறந்தும் மகனின் முகத்தை அவர் பார்க்கவில்லை.
“உள்ளே வாம்மா.” தமிழ்ச்செல்வியின் அழைப்பில் உள்ளே காலடி எடுத்து வைத்தாள் ரோஸி. கரிகாலன் முகத்தைப் பார்க்க அங்கே நிறைவானதொரு புன்னகை தெரிந்தது.
ஹாலிலேயே நம்பி அமர்ந்திருந்தார். கரிகாலனுக்கு இப்போது மாமனை ஏறெடுத்துப் பார்க்க அத்தனை சங்கடமாக இருந்தது.
ஆனால் கரிகாலன் மனதை அவர் எப்படிப் புரிந்து கொண்டாரோ, தானாகவே பேச்சை ஆரம்பித்தார்.
“வா கரிகாலா! வாம்மா.”
“மாமா…” ஏதாவது தவறு செய்து விட்டுத் தனது அம்மான் முன்பாகத் தலை குனிந்து நிற்கும் சிறுவன் போல இப்போதும் தலை குனிந்து நின்றிருந்தான் இளையவன்.
“பழசையெல்லாம் மறந்து போ கரிகாலா. போதும்… அவமானப் பட்டது, அழுதது எல்லாமே போதும். இனியாவது எல்லாருமாக் கூடி நின்னு சந்தோஷமா இருப்போம்.”
அடைக்கல நம்பி பேசிக் கொண்டிருக்கும் போதே ஆரத்தித் தட்டை வெளியே ஊற்றி விட்டு வீட்டினுள் நுழைந்து கொண்டிருந்தார் தில்லை வடிவு. இதுவரை யாரோடும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.
“அம்மா!” மகன் அழைக்கவும் ஓர் நொடி தயங்கிய அவர் நடை மறு நொடி அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தது.
சட்டென்று கரிகாலன் மாமாவின் முகத்தைப் பார்க்க… ஒரு புன்னகையோடு கண்களை அழுந்த மூடித் திறந்தார் நம்பி.
“பொறுமையா இருப்பா. எல்லாம் கூடிய சீக்கிரம் சரியாகிடும்.” ஆறுதலுக்காகச் சொன்ன வார்த்தையாக இருந்தாலும் இப்போது அதை நம்புவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை கரிகாலனுக்கு.
********************
“அத்தை!” வீட்டிற்குள் நுழையும் போதே அழைத்தபடி உள்ளே நுழைந்தான் விஜயேந்திரன். ‘மங்களாபுரி’ வந்திருந்தான்.
“வா விஜயேந்திரா.” இது கண்ணபிரான்.
“அத்தை எங்க மாமா?”
“உள்ள தான் இருக்கா. என்னாச்சு ப்பா? ஏதாவது பிரச்சனையா?”
“லேடீஸ் ரெண்டு பேரு சேந்தாலே பிரச்சனை தானே மாமா. இதுக்கு நம்ம அத்தையும் அம்மாவும் விதி விலக்கா என்ன?”
“ஓ… விஷயம் கௌரிபுரம் வரைக்கும் வந்திடுச்சா?”
“வந்திருந்தா மட்டும் பரவாயில்லையே மாமா? என் வீட்டுக்காரியையும் இல்லை வம்புக்கு இழுக்குது.” விஜயேந்திரன் இதைச் சொல்லவும் கண்ணபிரானின் முகம் கோபத்தில் சிவந்தது.
“கோதை நாயகி!” அவரின் கர்ச்சனையில் பின் கட்டிலிருந்து அவசரமாக ஓடி வந்தார் மனைவி. முகத்தில் தெரிந்த பதட்டம் மருமகனைக் கண்டவுடன் வடிந்து போனது. ஒரு அலட்சியம் மட்டுமே இப்போது அந்தக் கண்களில் தெரிந்தது.
“நேத்து அரண்மனைக்கு வந்திருந்தியா அத்தை?”
“ஆமா! என்ன அதுக்கு இப்போ?”
“அம்மாக்கிட்ட என்ன பேசின?”
“ஏன்? உனக்கெதுக்கு அது?”
“நீங்க ரெண்டு பேரும் என்ன வேணும்னாலும் பேசுங்க. எனக்கு அதைப்பத்திக் கவலை இல்லை. ஆனா சுமித்ராவைப் பத்தி என்ன பேசின?”
“அந்தக் கனடாக் காரன் உம் பொண்டாட்டியோட சொந்தக்காரன் தான்னு சொன்னேன். ஏன் அதுல என்ன தப்பு இருக்கு? சுமித்ராக்கு அவன் சொந்தம் தானே?”
“மரியாதையாப் பேசு அத்தை. என்ன அவன் இவன்னு எல்லாம் பேசுறே? நாளைக்கே நீ சொல்லுற அவன் இந்த வீட்டுக்கு மருமகனா வரலாம். அப்போ எங்க கொண்டு போய் வெச்சுக்குவே இந்த முகத்தை?”
“என்னடா மிரட்டுறியா? வேணாம்னு சொன்ன பின்னாடியும் வெக்கம் கெட்டுப் போய் சொந்தம் கொண்டாடுறது தானே அந்தக் குடும்பத்தோட பழக்கம். அதுதான் இப்பவும் நடக்குது.”
“அத்தை! வார்த்தையை அளந்து பேசு. நீ பேசுறது எம் பொண்டாட்டியைப் பத்தி.” விஜயேந்திரனின் முகம் இப்போது பயங்கரமாக மாறிப் போனது. இருந்தாலும் விடாமல் தொடர்ந்தான்.
“குடும்பமா? ஸ்டீஃபன் சுமித்ராவோட குடும்பம் ன்னு உனக்கு யாரு சொன்னது? சரி அப்படியே இருந்தாலும் அந்தப் பையன் உம் பொண்ணு பின்னாடி வந்தானா? இப்போ இந்த நிமிஷம் நான் ஒரு ஃபோனைப் போட்டு… ‘ஸ்டீஃபன், இந்தக் கல்யாணம் நடக்காது. நீ உன் வேலையைப் பாருப்பா’ ன்னு சொன்னா அவன் கேப்பான். உம் பொண்ணு கேக்க மாட்டா. அதுக்குப் பின்னாடி வர்ற இழப்புகளைச் சந்திக்க நீ தயாரா?”
“நீ சரியான ஆளா இருந்திருந்தா அதைத் தானே பண்ணி இருக்கணும். அதை விட்டுட்டு யாரோ ஒரு பயலை இந்த வீட்டு மாப்பிள்ளையாக்க நினைக்கிறே.”
“நினைச்சது நானில்லை. உன்னோட பொண்ணு. அப்பக் கூட அந்தப் பையன் பக்குவமாப் புத்தி தான் சொல்லி இருக்கான். அதைத் தாங்கிக்க முடியாம மாத்திரை சாப்பிட்டது மங்கை. என்ன அத்தை? எல்லாம் மறந்து போச்சா?”
“புத்திக் கெட்டுப் போய் அலைஞ்சா அதுக்கு நாம நல்ல வழி காட்டுறதை விட்டுட்டு, உம் பொண்டாட்டிக்கு சப்போர்ட்டுக்கு நீ ஆள் தேடுறயா?”
“எம் பொண்டாட்டிக்கு சப்போர்ட்டா? எதுக்கு?”
“அதான் அரண்மனையில உங்கம்மா சுமித்ராவைக் கண்டுக்கிறதே இல்லையே. போனாப் போகுதுன்னு நீ கட்டின தாலிக்கு மரியாதை குடுத்து அங்க வாழ விட்டிருக்காங்க. இல்லைன்னா அதெல்லாம் அரண்மனையோட சம்பந்தம் பண்ணத் தகுதியான குடும்பமா?”
“பளார்!” கோதை நாயகி பேசி முடிக்கும் போது கண்ணபிரானின் கை மனைவியின் கன்னத்தில் இறங்கி இருந்தது.
“நானும் போனாப் போகுது… போனாப் போகுதுன்னு பார்த்தா… என்ன வாய் ரொம்பத்தான் நீளுது. எப்போ இருந்து இப்படித் தகுதி பார்க்கக் கத்துக்கிட்ட? யாரு சொல்லிக் குடுத்தா உனக்கு இதெல்லாம்?”
கண்ணபிரானுக்கு அத்தனை சுலபத்தில் கோபம் வராது. அதிர்ந்து அவர் பேசுவதே அரிது. அப்படியிருக்க இன்று அவர் காட்டிய முகத்தில் கோதை நாயகி அடங்கிப் போனார்.
ஆனால் விஜயேந்திரன் நொறுங்கிப் போனான். தன் பிரியத்திற்குரிய அத்தையின் வாயிலிருந்து இப்படியான வார்த்தைகளை அவன் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதுவும் தன் மனைவியைப் பற்றி!
சுமித்ரா வோடு எத்தனை இணக்கமாக இருந்த அத்தை, இன்று தன் மகள் என்று வரும் போது இப்படி மாறிப் போனாரே!
தான் எத்தனை காதல் சுமித்ரா மீது வைத்திருக்கிறேன் என்று தெரிந்த போதும் எப்படி இவரால் இப்படிப் பேச முடிந்தது? போனால் போகிறது என்று அரண்மனையில் என் சுமித்ராவை வாழ விட்டிருக்கிறார்களா? என்ன மாதிரியான வார்த்தைகள் இவை?
“விஜயேந்திரா!” மாமா தன் தோளைப் பற்றவும் அவரை நிமிர்ந்து பார்த்தான் அரண்மனைக்காரன். கண்கள் சிவந்து போயிருந்தன.
“உன்னோட அத்தை புத்தி கெட்டுப் போய் பேசுறா ப்பா. நீ மனசுல எதையும் வெச்சுக்காதே.”
“இல்லை மாமா. அவங்க எல்லாருமே நல்ல தெளிவான புத்தியோட தான் இருக்காங்க. நான் தான் புத்தி கெட்டுப் போயிட்டேன். சுமித்ரா அன்னைக்கே சொன்னா. ஏன்? ஸ்டீஃபன் கூடச் சொன்னான். இது சரிப்பட்டு வராது. குடும்பங்களுக்குள்ள வீணான பகை தான் வரும்னு. நான் தான் கேக்கலை. மங்கை நம்ம வீட்டுப் பொண்ணு. அவ கஷ்டப் பட்டிடக் கூடாதுன்னு நினைச்சேன் மாமா.”
“அந்த எண்ணம் தப்பில்லை விஜயேந்திரா.”
“தப்புன்னு அத்தை இப்போ நிரூபிச்சுட்டாங்களே மாமா.”
“அவ எம் பொண்ணை உசிரோட சாவடிக்க நினைக்கிறா விஜயா. அதுக்கு நான் ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன். கொஞ்சம் விஷயத்தை ஆறப்போட்டா நிறையக் காயங்கள் ஆற வாய்ப்பிருக்குன்னு நினைச்சேன். ஆனா அது தப்புன்னு இப்போப் புரியுது. கூடிய சீக்கிரம் எல்லாத்துக்கும் ஒரு முடிவு நான் கட்டுறேன். நீ இப்போ கிளம்பு ப்பா.”
இவர்கள் இத்தனை பேசும் போதும் கோதை நாயகி எதுவும் பேசவில்லை. அமைதியாகவே நின்றிருந்தார். விஜயேந்திரன் சொல்லிக் கொள்ளாமலேயே கிளம்பி விட்டான்.
********************
விஜயேந்திரனின் மனம் மிகவும் சங்கடப் பட்டது.‌ அத்தையின் வார்த்தைகளை அவனால் அத்தனை சீக்கிரத்தில் ஜீரணிக்க முடியவில்லை.
தங்கள் கல்யாணம் நடந்த போது எத்தனை அன்பாக சுமித்ராவிடம் நடந்து கொண்டார். இப்போது தனது மகள் என்று வரும் போது அத்தனையும் தலைகீழாக மாறிவிட்டதே!
சுமித்ரா கூட எத்தனை தரம் சொல்லி இருப்பாள். நான் எதையும் பொருட்படுத்தாமல் அவர் மகளுக்கு நன்மை செய்ய நினைத்தால் அடி மடியிலேயே கை வைத்து விட்டார்களே.
மனம் கிடந்து அலைபாய வேலைகளில் தன்னைப் புதைத்துக் கொண்டான் விஜயேந்திரன். வீட்டிற்குப் போகவும் ஏனோ ஒரு மாதிரியாக இருந்தது.
நிலைமை இங்கே இப்படி இருக்க, அங்கே சுமித்ரா அரண்மனையின் வாசலையே பார்த்தபடி இருந்தாள். மதியம் கூடக் கணவன் வீட்டிற்கு வராதது ஏதோ போல இருந்தது.
வழமையாக அவன் இருக்கும் இடத்திற்கு உணவு போகும். இன்று அது கூடச் செல்லவில்லை. கணக்கரைக் கேட்ட போது அவரும் கையை விரித்தார்.
கங்காவிற்கு சுமித்ராவைப் பார்க்கவே பாவமாக இருந்தது. ஒரு அலைப்புறுதலோடு பேருக்குக் கொறித்து விட்டு மாடியில் ஏதோ ஒரு பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தாள்.
‘அரண்மனையில இருக்கிற பெரியவங்க தான் இப்படி நடந்துக்கிறாங்க ன்னா இந்த ஐயாக்கும் என்ன ஆச்சு? எதுக்கு அம்மாவை இப்படிக் கஷ்டப் படுத்துறாங்க?’ மனதுக்குள் புலம்பிக் கொண்டாள்.
இரவு பத்தைத் தாண்டிய பிறகும் விஜயேந்திரன் அரண்மனை திரும்பியிருக்கவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் கண்களில் நீர் கோர்க்க அந்தப் புரத்தில் போய் அடங்கி விட்டாள் சுமித்ரா.
‘அப்படி என்ன கோபம் இவருக்கு என்மேல்?’
நான் பேசியது பிடிக்கவில்லையா என்றால் சொல்லித் திருத்த வேண்டியது தானே.‌ அதை விட்டு விட்டு எதற்கு இப்படி என்னை வதைக்க வேண்டும்?
அவரை விட்டால் இங்கே எனக்கு யார் இருக்கிறார்கள்? மனதுக்குள் புலம்பிய படி ஜன்னலோரத்தில் தலைசாய்த்து நின்றிருந்தாள் சுமித்ரா. அரண்மனையே இருளில் மூழ்கிப் போயிருந்தது.
“அம்மா!” கங்கா வின் குரலில் திரும்பிப் பார்த்தாள் பெண்.
“ஐயா வந்துட்டாங்க.”
“அப்படியா!”
“இப்போ தான் கார் வந்ததைப் பார்த்தேன். மாடிக்குப் போறாங்க.”
“மாடிக்கா?” இந்த நேரத்தில் மாடிக்குப் போனால் என்ன நடக்கும் என்று சுமித்ராவிற்குத் தெரியாதா என்ன? அம்மாவின் முகத்தில் யோசனையைக் காணவும் வாய் திறந்தாள் கங்கா.
“சுமித்ரா ம்மா. எல்லாரும் தூங்கிட்டாங்க. நீங்க இப்போ மாடிக்குப் போனா யாருக்கும் தெரியாது. போங்கம்மா. போய் ஐயா கூடப் பேசுங்க.”
“என்னோட நிலைமையைப் பார்த்தியா கங்கா? சொந்த வீட்டுல அவரோட பேசவே பயப்பட வேண்டி இருக்கு.”
“வீட்டுக்கு வீடு வாசப்படி தாம்மா. யாரு என்ன சொன்னாலும் உங்களை ஐயா எங்கேயும் யார்கிட்டேயும் விட்டுக் குடுக்க மாட்டாங்க. நீங்க வாங்கம்மா.”
பிடிவாதமாக சுமித்ராவை அழைத்துச் சென்ற கங்கா நந்தவனம் இருக்கும் வழியாகப் போகாமல் வேலை செய்பவர்கள் மாடிக்குச் செல்லும் வழியாக அழைத்துச் சென்றாள்.
“மேலே போங்கம்மா. மத்தியானமும் நீங்க சரியாச் சாப்பிடலை. ஐயாவோட பேசிட்டு என்னைக் கூப்பிடுங்க. மாடிக்கே சாப்பாட்டைக் கொண்டு வந்து குடுக்கிறேன். ஐயாவோட சேர்ந்தே சாப்பிடுங்க.”
திட்டங்கள் வகுக்கும் கங்காவையே இமைக்காமல்ப் பார்த்தாள் சுமித்ரா. இது என்ன மாதிரியான அன்பு! தான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று என்னைச் சார்ந்தவர்கள் நினைப்பது இயற்கை.
ஆனால் எந்தப் பந்தமும் இல்லாமல் இந்தப் பெண் என் நன்மையை மட்டும் நாடுகிறதே! கங்காவைப் பார்த்தபடியே படிகளைக் கடந்து மாடிக்குப் போனாள் சுமித்ரா.
கணவனின் ரூமில் லைட் எரிந்து கொண்டிருந்தது. கதவைச் சட்டென்று அவள் திறக்க, அப்போதுதான் குளியலை முடித்துக் கொண்டு பாத்ரூமிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தான் விஜயேந்திரன்.
“சுமித்ரா!” அவன் குரலே சொன்னது. அந்த நேரத்தில் அவளை அவன் அங்கு எதிர்பார்க்கவில்லை என்று.
“சாப்பிட்டீங்களா?” உணர்ச்சிகளைத் துடைத்த குரலில் கேட்டாள் மனைவி.
“இல்லை…”
“கீழே வாங்க. எடுத்து வைக்கச் சொல்லுறேன்.”
“ம்…” சுமித்ரா கடகடவென்று கீழே இறங்கிப் போய் சாப்பாட்டை அவளது ரூமில் தயார் பண்ணி வைத்தாள்.
சற்று நேரத்தில் கணவனும் வந்து விட எந்த விதப் பேச்சு வார்த்தையும் இல்லாமல் உணவு உள்ளே போனது. ஆசையாசையாக அவள் அவனுக்காகப் பார்த்துப் பார்த்துச் சமைத்திருந்த உணவுகளை விஜயேந்திரனும் கவனித்தான்.
உணவை முடித்து விட்டு அவள் நந்தவனத்திற்குள் போக முயல அவள் கரம் பிடித்துத் தடுத்தான் கணவன்.
“சுமி…”
“………..”
“எம்மேல கோபமா?”
“கோபப்படவும் ஒரு தகுதி வேணுமோன்னு இப்போ தோணுது.” இன்று முழுவதும் அவள் அவனுக்காக ஒரு எதிர்பார்ப்புடன் காத்திருந்த பொழுதுகள் அவளைப் பேச வைத்தது. விஜி என்ற அழைப்பை மனைவி தவிர்ப்பது விஜயேந்திரனுக்குப் புரிந்தது.
“என்ன பேசுறேன்னு புரிஞ்சு தான் பேசுறயா அம்மு.”
“புரியாம என்ன? நேத்து எனக்கு ஒரு மனக்கஷ்டம். வேற யார்கிட்ட என்னோட கஷ்டத்தை என்னால பங்கு போட்டுக்க முடியும்? அந்த எண்ணத்துல பேசிட்டேன். பேசின வார்த்தைகள் தப்பா இருந்திருக்கலாம். அதுக்காக இவ்வளவு பெரிய தண்டனையா?”
“அப்படியெல்லாம் இல்லை சுமி.” பேச ஆரம்பித்தவனைப் பாதியிலேயே கைநீட்டித் தடுத்தாள் சுமித்ரா.
“போதும்… நீங்க எனக்கு எந்த விளக்கமும் சொல்லத் தேவையில்லை. பகல் சாப்பிட வீட்டுக்கு வரலை. சாப்பாட்டையும் அனுப்பச் சொல்லலை. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?”
“என்ன அர்த்தம் இருந்தாலும் கண்டிப்பா நீ சொல்லுற அர்த்தம் இல்லை சுமி. இன்னைக்கு அத்தை வீட்டுக்குப் போயிருந்தேன்.”
“ஓ… ஏதாவது திரும்பவும் பிரச்சனையா?”
“ம்…” பதில் பேசாமல் யோசனையோடு நின்றிருந்த கணவன் அவளுக்குப் புதிதாகத் தெரிந்தான். முகத்தில் லேசான கவலை தெரிந்தது.
எல்லாப் பிரச்சனைகளையும் அனாயசமாகக் கையாளும் அரண்மனைக்காரன் இவனில்லையே!
“விஜீ…” அதற்கு மேல் சுமித்ராவின் கோபம், வருத்தம் அத்தனையும் இருந்த இடம் தெரியாமல் பறந்து போனது. கட்டிலில் அவனை அமரச் செய்தவள் தானும் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
“அத்தைக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லை சுமித்ரா. வார்த்தைகள் ரொம்பத் தப்பா வந்து விழுது. ஒரு கட்டத்துல பொறுக்க முடியாம மாமா இன்னைக்குக் கை நீட்டிட்டார்.”
“ஐயையோ!”
“ம்… எனக்கே ஒரு மாதிரியா ஆகிப் போச்சு. நல்ல வேளை, மங்கை வீட்டுல இல்லை.”
“ஓ…”
“இவ்வளவு விரோதம் பாராட்டுறவங்க வீட்டுல ஸ்டீஃபனுக்கு மரியாதை இருக்குமா ன்னு ஒரு எண்ணம் இருந்தாலும், மங்கையை நினைக்கும் போது பாவமா இருக்கு. அவளால இதைத் தாங்கிக்க முடியாது.”
“அதை அவங்க அம்மாவே புரிஞ்சுக்கலைன்னும் போது நாம என்ன பண்ண முடியும் விஜி?”
“கரிகாலன் தரப்பில கூட இதுக்கு அவ்வளவு உடன்பாடு கிடையாது. ஆனா முன்னிக்கிறது நான் எங்கிறதால அவனும் மௌனமா இருக்கான். அந்த நம்பிக்கைக்கு நானும் நியாயம் பண்ணணும் இல்லையா சுமி?”
“கண்டிப்பா.”
“ஆமா… இன்னைக்கு ரோஸியைப் பார்த்தியா?”
“ம்ஹூம்… நீங்க வந்ததும் போகலாம்னு நினைச்சேன்.”
“சாரிடா. கண்டிப்பா நாளைக்குக் கூட்டிட்டுப் போறேன் என்ன?”
“ம்…” தலையாட்டிய மனைவியை இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டான் விஜயேந்திரன்.
“ரொம்ப நேரம் காத்திருந்தியா அம்மூ?”
“ம்… காலையில எந்திரிக்கும் போதே நீங்க பக்கத்துல இல்லை. நான் என்னன்னு எடுத்துக்கிறது? கோபம்னா ரெண்டு வார்த்தை திட்டுங்க. இல்லைன்னா உங்க மாமா பண்ணின மாதிரி ஒரு அடி வேணும்னாலும் குடுங்க. இப்படிப் பண்ணாதீங்க விஜி. என்னால நினைச்ச மாதிரி உங்களைத் தேடி வர முடியாது விஜி.”
தன் மார்பில் முகம் புதைத்துப் பிதற்றிக் கொண்டிருக்கும் மனைவியின் கன்னத்தைத் தடவிக் கொடுத்தான் கணவன். அத்தை பேசிய வார்த்தைகள் மனதை அறுத்தது.
இந்தப் பெண்ணைப் பார்த்து, அதுவும் தன் மனைவி என்றான பின் இப்படியெல்லாம் பேச அத்தையால் எப்படி முடிந்தது?
“விஜி…”
“ம்…”
“என்ன யோசனை?”
“எல்லாம் நாட்டியப் பேரொளியைப் பத்தித்தான்.”
“என்னவாம்?”
“அந்தக் குட்டிப் பயலைப் பார்த்ததுல இருந்து இந்தக் கண்ணுல ஒரு ஆசை தெரியுதே…” மேலே பேசாமல் வேண்டுமென்று ஒரு இடைவெளி விட்டான். சுமித்ராவின் கண்கள் ஆவலோடு விரிந்தது.
“அதைப் பத்தி யோசிச்சேன்.”
“அரண்மனைக்காரரோட முடிவு என்னவாம்?”
“அவரோட சுமித்ரா கேட்டு அவர் எதையும் மறுத்ததில்லையாம்.”
“ஓஹோ! அப்போ அரண்மனைக்காரரோட காதல் என்னாச்சாம்?”
“அது அப்படியே இருக்காம்… பத்திரமா.” மனைவியின் முகத்தைப் பார்த்து அழகாகப் புன்னகைத்தான் விஜயேந்திரன்.
“ஏன் விஜி? உங்கம்மா என்னைத் திட்டிட்டாங்களேன்னா?” ஆசையாகக் கேட்டவளின் கண்களை ஆழமாகப் பார்த்தான் கணவன்.
“சுமி… நீ ஒன்னை நல்லாப் புரிஞ்சுக்கணும். இந்த அரண்மனைக்காரன் எப்பவுமே மத்தவங்களுக்காக வாழுறவன் கிடையாது. வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க நினைக்கிறவன். அடுத்தவங்களுக்காக வாழுறதா இருந்தா எப்பவோ நான் கல்யாணம் பண்ணி இருப்பேன். என்னால அது முடியலை. என் மனசு முழுக்க இருந்தது நீதான் சுமித்ரா. எப்படி மத்தவங்களுக்காக என்னால உன்னை விட்டுக் குடுக்க முடியும்? இந்த மாற்றம் உனக்காக. என்னோட சுமித்ராவுக்காக.”
பேசும் கணவனையே விழி விரித்துப் பார்த்திருந்தாள் சுமித்ரா. அவன் கண்களும் அவள் முகத்தையே மொய்த்திருந்தன.
“என்னடா?” கேட்டவனின் இதழ்களை அவள் செவ்விதழ்கள் லேசாகத் தீண்டியது.
“என்ன லஞ்சமா?”
“இல்லை விஜி. நான் எங்கேயோ… இல்லையில்லை… என்னோட அம்மா அப்பா யாருக்கோ பெருசாப் புண்ணியம் பண்ணி இருக்காங்க விஜி. அதனால தான் இந்த அரண்மனைக்காரரோட காதல் எனக்குக் கிடைச்சிருக்கு.”
உணர்ச்சிகளின் வசத்தில் சிக்குண்டு திணறிய மனைவியை அணைத்துக் கொண்டான் கணவன்.
“நானும் தான் புண்ணியம் பண்ணி இருக்கேன் சுமி. இல்லைன்னா இந்தக் கண் ரெண்டும் என்னைத் தேடி வந்திருக்குமா?”
அந்தஸ்து பேதங்களை மறந்து அங்கு காதல் மட்டுமே அப்போது கவிதை பாடியது.
நாணங்கள் மறந்து போனாள் பெண்.
நாகரிகம் கடந்து போனான் ஆண்.
அவர்கள் இல்லறம் அன்று முழுமை பெற்றது.

உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே…
நீயில்லாமல் எது நிம்மதி? நீதான் என்றும் என் சன்னிதி…