MP18

MP18

துவாரகாவின் அந்தப் பெரிய சிவன் கோவில் மண்டபத்தில் முழு அலங்காரத்தோடு அமர்ந்திருந்தார்கள் கரிகாலனும் ரோஸியும்.

சங்கரன் அனைத்து ஏற்பாடுகளையும் காலதாமதம் இன்றிச் செய்திருந்தார். வீட்டுக்கு மகனையும் மருமகளையும் அழைத்து வந்த மறுநாளே நல்ல முகூர்த்த நாளாக இருந்ததால் சொந்த பந்தங்களை அழைத்துத் திருமணத்துக்கு ஆயத்தம் செய்திருந்தார்.

பட்டு வேஷ்டி சட்டையில் கரிகாலன் அமர்ந்திருக்க, அருகே முழு அலங்காரத்தில் ரோஸி. சுமித்ரா பார்த்துப் பார்த்து அலங்காரம் பண்ணி இருந்தாள். ரோஸியின் மறுப்பை அவள் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.
தில்லை வடிவு தம்பதிகளோடு பேசவில்லையே என்ற குறையைத் தவிர மீதமெல்லாம் சுபமாகத்தான் நடந்து கொண்டிருந்தன.

ரோஸிக்கு இந்தச் சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாம் புதிதாக இருந்தாலும் மகிழ்வுடனேயே எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டாள்.
‘ரோஸி! இப்படி பண்ணுறதுல உங்களுக்கு ஒன்னும் சங்கடம் இல்லையே?’ நேற்றே சுமித்ரா கேட்டிருந்தாள்.

‘இதுல என்ன சங்கடம் சுமித்ரா. சொல்லப்போனா உங்க அத்தான் முகத்துல தெரியுற சந்தோஷத்தைப் பார்க்கும்போது எனக்கு அவ்வளவு ஹாப்பியா இருக்கு.’
கணவன் முகத்தில் சதா வாடாமல் இருந்த புன்னகை அவள் மனதில் இருந்த குற்ற உணய்ச்சியைத் தடம் தெரியாமல் அழித்திருந்தது.

மாலை மாற்றி, தாலி கட்டி, மெட்டி அணிவித்து என அனைத்தும் முடிய தம்பதி சகிதம் எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார்கள்.

மாலையும் கழுத்துமாக நின்ற அப்பா அம்மாவைப் பார்த்த போது ரவிக்கு அத்தனை குதூகலமாக இருந்தது. விஜயேந்திரனின் தோள்களில் ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு கை கொட்டிச் சிரித்தான் பையன்.

“யோவ் கரிகாலா! உம் பையனுக்கு இருக்கிற ஆனந்தத்தைப் பாரு. யாருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியம்? அப்பா அம்மாவோட கல்யாணத்தைப் பார்த்துப் பயலுக்குச் சந்தோஷம் பிடிபடலை.” வேண்டுமென்றே நண்பனைக் கலாய்த்தான் அரண்மனைக்காரன்.

ஆனால் தன் நண்பன் இத்தனை பேசத் தான் பேசா விட்டால் அது கரிகாலனுக்கு அழகில்லையே. அவனும் பதிலுக்குத் தன் தோழனை வாரினான்.

“அது கிடக்கட்டும் ராஜா. நானும் காலையில இருந்து பார்க்கிறேன். பையனைக் கீழேயே விடாமா கையோட வச்சிருக்கீங்க. எதுக்கோ அடிப்போடுற மாதிரி இருக்கே!”

“அடப் போய்யா! நான் எதுக்கு அடிப்போடணும்? என் பொண்டாட்டி ஆர்டரே போட்டுட்டா. அதான் இப்போ இருந்தே ட்ரெயினிங் எடுக்கிறேன்.” சற்றும் வெட்கம் இல்லாமல் அத்தனை பேருக்கும் முன்னால் வைத்துப் போட்டு உடைத்தான் விஜயேந்திரன்.

கரிகாலன் வெடிச்சிரிப்புச் சிரிக்கப் பெரியவர்கள் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார்கள்.

“விஜீ…” பல்லைக் கடித்தபடி சுமித்ரா அழைக்கவும்,
“கரிகாலா! இங்கப்பாரு உம் மாமன் பொண்ணு என்னை மிரட்டுறதை.” அதையும் சத்தமாகவே சொன்னான் அரண்மனைக்காரன்.

அந்த இடமே கலாட்டாவாக இருந்தது. அன்றைய நிகழ்வின் கதாநாயகன், நாயகி யார் என்ற பாகுபாடு இல்லாமல் இரண்டு இளம் ஜோடிகளும் தங்களைத் தாங்களே கேலி பேசிக் கொண்டார்கள்.

“ஏன் கரிகாலா? அப்போ இன்னைக்கு செகண்ட் ஃபர்ஸ்ட் நைட்டா?” ரகசியம் என்ற பெயரில் சற்றுச் சத்தமாகவே முணுமுணுத்தான் விஜயேந்திரன். ரோஸி சட்டென்று அப்பால் நகர்ந்து போனாள். முகம் சிவந்து போனது.

“அட! இது கூட நல்ல ஐடியாவா இருக்கே!” கரிகாலனும் சேர்ந்து ஓத ஆண்கள் இருவரும் உல்லாசமாகச் சிரித்தார்கள்.
எல்லோருமாக வீடு வந்து சேர விருந்து தயாராக இருந்தது.

சங்கரன் எல்லாவற்றிற்கும் ஏற்பாடு பண்ணி இருந்தார். மணமக்களை உட்கார வைத்து சுமித்ரா பரிமாற விஜயேந்திரன் ரவியை மடியில் வைத்துக் கொண்டு தானும் விருந்துண்டான்.

தமிழ்ச்செல்வியும் தில்லை வடிவும் அக்கம் பக்கமிருந்து வந்திருந்த சொந்தங்களைக் கவனித்த படி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள்.

உண்டு முடித்த பின் கையைக் கழுவுவதற்காக எழுந்த விஜயேந்திரன் தன்னைக் கடந்து சென்ற தில்லை வடிவை நிறுத்தினான்.

“அம்மா! இந்தப் பயலைக் கொஞ்சம் பிடிங்க. நான் கை கழுவிட்டு வந்து வாங்கிக்கறேன்.” விஜயேந்திரன் சொல்லவும் கரிகாலனுக்கும் ரோஸிக்கும் தூக்கி வாரிப் போட்டது. சுமித்ரா கூடக் கொஞ்சம் பயந்து போனாள்.

ஆனால் விஜயேந்திரன் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. குழந்தையை வடிவின் கையில் கொடுத்து விட்டு நகர்ந்து விட்டான். கணவன் பின்னோடு ஓடினாள் சுமித்ரா.
“என்ன விஜி இப்படிப் பண்ணிட்டீங்க? எங்கிட்ட ரவியைக் குடுத்திருக்கலாம் இல்லை.”
மனைவி ஊற்றிய நீரில் கையைக் கழுவியவன் அவள் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டான்.

“இல்லை அம்மு. வந்த நேரத்துல இருந்து பார்க்கிறேன். உங்க அத்தை கண்ணு ரவியைத் தான் சுத்திச் சுத்தி வருது. அவங்களாப் போய் அந்தக் குழந்தையைத் தூக்க அவங்க கோபம் இடம் கொடுக்கல்லை. ஆனா நாமளாக் குடுத்தா அந்த வாய்ப்பை அவங்க தவற விட மாட்டாங்க. நீ அமைதியா வேடிக்கை மட்டும் பாரு என்ன.”

சொல்லி விட்டுக் கணவன் நகர்ந்து விட, அப்படியும் இருக்குமோ என்று தோன்றியது சுமித்ராவிற்கு. அத்தையைத் தேடி வந்தவள் ரூமிற்குள் எட்டிப் பார்க்க… குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு செல்லம் கொஞ்சிய படி இருந்தார் தில்லை வடிவு.
வாயெல்லாம் புன்னகையாகிப் போனது சுமித்ராவிற்கு. சுமித்ராவின் முகத்தைப் பார்த்துக் கரிகாலன் கண்களால் ‘என்ன நடக்கிறது?’ என்று வினவ, கட்டை விரலை உயர்த்திக் காட்டிவிட்டு நகர்ந்து விட்டாள் சுமித்ரா. ரோஸியும் கரிகாலனும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள்.
ஒரு நான்கு மணி போல கூட்டம் அத்தனையும் கலைந்திருந்தது. வீட்டு மனிதர்கள் மட்டுமே அமர்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.
அரண்மனைக்காரன் பெரிய கலாட்டாப் பேர்வழியாக இருந்தான். கரிகாலன் நண்பன் என்பதையும் தாண்டி இப்போது உறவினன் ஆகிப் போனதால் கல்லூரி கலாட்டா முதற்கொண்டு அனைத்தையும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“அண்ணா!” இது ரோஸி. விஜயேந்திரனை அவள் அப்படி அழைக்கவும் கூடி இருந்த அனைவரும் ஒரு சிரிப்போடு பார்த்தார்கள்.
“ஸ்டீஃபன் உங்களை அண்ணா அண்ணா ன்னு கூப்பிட்டு எனக்கும் அப்படித்தான் கூப்பிட வருது. அப்படிக் கூப்பிடலாம் இல்லை அண்ணா?”
“தாராளமாக் கூப்பிடும்மா.”

“கல்யாணம், விருந்து எல்லாம் சரி. கச்சேரி எங்க அண்ணா? பெரிய டான்ஸரை வீட்டுக்குள்ள வெச்சுக்கிட்டு நீங்க இப்படி அநியாயம் பண்ணக் கூடாது அண்ணா.”

“ஹா… ஹா… என்ன ராஜா? இதுக்கு உங்க பதில் என்ன?” மனைவியின் பேச்சை ரசித்த கரிகாலன் சிரித்தபடி கேட்டான்.
வீட்டிலிருந்த அத்தனை பேரும் விஜயேந்திரனை ஆவலாகப் பார்க்க, அவனோ மனைவியைச் சங்கடமாகப் பார்த்தான்.

சுமித்ராவின் நாட்டியம் பார்த்து மூன்று மாதங்களுக்கு மேல் கடந்து போனதால் அத்தனை பேரின் முகத்திலும் ஆவலே தெரிந்தது.

“சுமித்ராவோட டான்ஸ் பத்தி அத்தான் நிறையச் சொல்லி இருக்காங்க. ஆனா நான் பார்த்ததே இல்லை அண்ணா. அதனால தான் கேட்டேன். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. பிடிக்கலைன்னா…”
“ஐயையோ! அப்படி இல்லைம்மா. சுமித்ராக்கு ஓகே ன்னா எனக்கும் ஓகே தான்.” அவசரமாகப் பதில் சொன்னான் விஜயேந்திரன்.

“சுமித்ரா… ப்ளீஸ். எனக்காக ஒரேயொரு முறை.” ரோஸி கெஞ்சவும் சுமித்ரா கணவனின் முகம் பார்த்தாள். அவன் ஒரு புன்னகையோடு தலையசைக்கவும் ஆயத்தமானவளைத் தடுத்தான் கரிகாலன்.
“சுமித்ரா பாடல் தெரிவு நேயர் விருப்பம்.”
“சரி அத்தான். சொல்லுங்க, என்ன பாட்டு?”

“உன்னோட அந்த மஞ்சள் கேசட் இருக்கில்லை…” கரிகாலன் இழுக்கவும் சத்தமாகச் சிரித்தாள் பெண்.

“பரவாயில்லையே, அத்தானுக்கு அதெல்லாம் கூட ஞாபகம் இருக்கே!”
மனைவியின் குறும்புப் பேச்சில் சுவாரஸ்யம் பிறந்தது அரண்மனைக்காரனுக்கு.
“அது என்ன மஞ்சள் கேசட் சுமித்ரா?”

“அதுவாங்க, ப்ராக்டீஸ் பண்ணுறதுக்காக நிறைய பாட்டுக்கள் ரெக்கார்ட் பண்ணி வெச்சிருப்பேன். அதுல அந்த மஞ்சள் கேசட்ல இருக்கிற பாட்டு அத்தானுக்கு ரொம்பப் பிடிக்கும். அப்போக் காரணம் புரியலை. ஆனா இப்போதானே புரியுது.”

“ஓஹோ! அப்படியென்ன பாட்டு அது? நம்ம புது மாப்பிள்ளைக்குப் பிடிச்ச பாட்டு?”

ஒரு நமுட்டுச் சிரிப்போடு உள்ளே போன சுமித்ரா அந்தக் கேசட்டைக் கண்டுபிடித்து எடுத்து வந்தாள். இளையவர்கள் பேச்சைக் கண்டும் காணாமல் அமர்ந்திருந்தார்கள் பெரியவர்கள்.

தில்லை வடிவு தன் பேரனோடு வேறொரு உலகத்தில் இருந்தார். அவர் மோன நிலையை யாரும் கலைக்கவில்லை.
‘நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா… தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்…

பாடல் தொடங்கியது முதல் முடியும் வரை அரண்மனைக்காரனும் மனைவியும், கரிகாலனையும் ரோஸியையும் ஒரு வழி பண்ணி விட்டார்கள்.

ஆட்டம், பாட்டம், கேலி, கும்மாளம் எனப் பொழுது இனிமையாகக் கழிந்து கொண்டிருந்தது. சற்று நேரத்தில் அடைக்கல நம்பியின் வீட்டு வாசலில் வந்து நின்ற அந்தக் காரின் சத்தத்தில் எல்லோரும் வாசலைத் திரும்பிப் பார்த்தார்கள்.

கண்ணபிரான் வந்து கொண்டிருந்தார். சுமித்ராவின் திருமணத்தில் அனைத்தையும் முன்னின்று நடத்திய மனிதர் என்பதால் வீட்டுப் பெரியவர்கள் அத்தனை பேரும் வாசல் வரை சென்று வரவேற்றார்கள்.

கண்ணபிரானை அங்கே அப்போது சுமித்ரா எதிர்பார்க்கவில்லை. கணவனைத் திரும்பிப் பார்க்க அவன் முகம் அமைதியாக இருந்தது.

“வாங்க வாங்க. உள்ளே வாங்க. வீட்டுல எல்லாரும் சௌக்கியமா?” இது அடைக்கல நம்பி.
“எல்லாரும் சௌக்கியமா இருக்காங்க. வீட்டுல ஏதாவது விசேஷமா? எல்லாரும் கூடி இருக்கீங்க?” பார்வையைச் சுழல விட்ட கண்ணபிரான் சம்பிரதாயத்துக்காகக் கேட்டார்.

“தங்கை பையன் கனடாவில இருந்து வந்திருக்கான். அதான் விசேஷமே.” நம்பி சுருக்கமாகப் பேச்சை முடித்துக் கொண்டார்.
“நல்லதாப் போச்சு. குடும்பத்துல அத்தனை பேரும் கூடி இருக்கீங்க. விஜயேந்திரனும் இருக்கான். அப்போ நான் சரியான நேரத்துக்குத் தான் வந்திருக்கேன் போல.”
“சொல்லுங்க ஐயா. வீட்டுல ஏதாவது விசேஷம் வெச்சிருக்கீங்களா?” சங்கரனும் ஒரு புன்னகையோடு விசாரித்தார்.

“விசேஷம் வெக்கணும். அதுக்காகத் தான் உங்களை எல்லாம் பார்க்க வந்திருக்கேன்.”
“தாராளமாச் செய்யலாம் ஐயா. கொண்டான் கொடுத்தான்னு எதுக்கு இருக்கோம். எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுப் பண்ணிட மாட்டோம்.”

“உங்க வார்த்தைகளைக் கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா நான் நடக்கப்போற விசேஷத்தை உங்ககிட்ட சொல்ல வரலை. விசேஷத்தையே நடத்த உதவி கேட்டு உங்ககிட்ட வந்திருக்கேன்.”
சங்கரனும் நம்பியும் ஒரு குழப்பத்தோடு ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள்.
“புரியலை ஐயா.”

“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணு கேக்குறது தான் நம்ம பக்க வழக்கம். அதையெல்லாம் பாக்குற நிலைமையில நான் இப்போ இல்லாததால உங்க வீடு தேடி வந்திருக்கேன் சங்கரன்.”

அந்த நொடியில் விஜயேந்திரன் நொறுங்கிப் போனான். தன் மாமா எத்தனை கம்பீரமானவர் என்று அவனுக்குத் தெரியும். மங்கைக்காக அவர் இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசுவது அவனுக்கு வருத்தமாக இருந்தது.
“மாமா!” இப்போது விஜயேந்திரன் நம்பியை அழைத்தான்.
“சொல்லுங்க மாப்பிள்ளை.”

“என் அத்தை பொண்ணு மங்கையை கரிகாலனோட மச்சினன் ஸ்டீஃபனுக்குக் கேட்டுத்தான் மாமா வந்திருக்காங்க.”
விஜயேந்திரன் சட்டென்று விஷயத்தைப் போட்டு உடைக்க அந்த இடமே அமைதியாகிப் போனது. சில நொடிகள் யாரும் எதுவும் பேசவில்லை. யாருக்கும் எதுவும் புரியவும் இல்லை.

“நீங்க மனசுல நினைக்கிறதைத் தாராளமா எங்கிட்ட பகிர்ந்துக்கலாம் சங்கரன்.” கண்ணபிரான் சொல்லவும் மீண்டும் ஒரு முறை நம்பியைத் திரும்பிப் பார்த்தார் சங்கரன்.

“இதுல நிறையச் சிக்கல்கள் இருக்குது ஐயா. அதுதான் யோசிக்கிறோம்.”
“எதுவா இருந்தாலும் சொல்லுங்க சங்கரன்.”

“கல்யாணம் பேச வந்திருக்கீங்க. ஆனாலும் தனியாத்தான் வந்திருக்கீங்க.” வாழ்க்கை, வயது இரண்டும் கொடுத்த அனுபவம் சங்கரனை நிதானமாகப் பேசச் செய்தது. சங்கரனே இப்போதும் தொடர்ந்தார்.
“உங்ககிட்ட மறைக்க எங்க வீட்டுல எதுவும் இல்லை ஐயா. இதே போல ஒரு கல்யாணம் எங்க வீட்டுலயும் நடந்திருக்கு. சம்பந்தப் பட்டவங்களும் இங்கேயே இருக்கிறதால நான் இதைப் பத்திப் பேசுறது தப்பில்லைன்னு நினைக்கிறேன்.”
இப்போது சங்கரன் தன் மகனையும் மருமகளையும் திரும்பிப் பார்க்க அவர்கள் தலை தானாகக் குனிந்தது.

“இப்படியான கலப்புத் திருமணங்களை ஏத்துக்கிற மனப்பான்மை நம்ம இளைய சமுதாயத்துக்கு வேணும்னா இருக்கலாம். ஆனா நம்மைச் சுத்தி இருக்கிறவங்களுக்கு அந்தப் பக்குவம் இன்னும் வரலை ஐயா. அதுவும் நீங்க ஜமீன் பரம்பரை. எத்தனை பேருக்கு உங்களால பதில் சொல்ல முடியும்?”

“எனக்கு எம் பொண்ணோட உயிர் இதையெல்லாம் விடப் பெரிசு சங்கரன்.”
“ஓ…” அந்த வார்த்தைகளில் அனைவரின் வாயும் அடைத்துப் போனது.
“இந்த விஷயத்துல அரண்மனையோட முடிவு என்ன?‌ ஏன்னா எங்க பொண்ணு அங்க வாழுது இல்லையா? அதனால தான் கேக்குறேன் ஐயா.”
“விஜயேந்திரன் எப்பவும் எங்கூட நிப்பான். அதை மட்டும் தான் இப்போ என்னால சொல்ல முடியும் சங்கரன்.”
“ஓ… அப்போ இந்த விஷயத்துல எங்களால முன்னிற்க முடியாது ஐயா. நீங்க சம்பந்தப் பட்டவங்களோட பேசி முடிவு பண்ணிக்கோங்க.”

“என்ன சங்கரன் இப்படிச் சொல்லிட்டீங்க?”
“மன்னிக்கணும் ஐயா. ரொம்ப எதிர்ப்புகளுக்கு மத்தியில தான் எங்க பொண்ணு கல்யாணம் நடந்திருக்கு. இப்போ இந்த விஷயம் மாப்பிள்ளையோட அம்மாவுக்குத் தெரிஞ்சா அந்தக் கோபம் அத்தனையும் எங்க பொண்ணு மேலதான் திரும்பும். நாங்க அதையும் பார்க்கணும் இல்லை ஐயா? எங்க நிலைமையில இருந்து கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.”

மிகவும் தன்மையாகவே பேசினார் சங்கரன். ஆனால் கண்ணபிரானின் முகம் விழுந்து விட்டது. விஜயேந்திரனுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. யாருக்கென்று அவன் இப்போது பேசுவான்.

“மாமா!” விஜயேந்திரனின் அழைப்பில் அத்தனை பேரும் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள்.

“சொல்லுங்க மாப்பிள்ளை.” நம்பியின் குரலில் இப்போது அத்தனை கலக்கம் தெரிந்தது.

“என்னைத் தாண்டி சுமித்ராக்கு எந்தக் கஷ்டமும் வராது மாமா. அதுக்கு நான் இடம் குடுக்கவும் மாட்டேன்.”

“அப்படியில்லை மாப்பிள்ளை. இன்னைக்கு நம்ம வீட்டுல எல்லாரும் கூடி சந்தோஷமா இருக்கோம். ஆனா… கரிகாலன் மனசுலயும் சரி அந்தப் பொண்ணு முகத்திலயும் சரி அந்தச் சந்தோஷத்தை முழுசாப் பார்க்க முடியலை. அதுக்குக் காரணம் என்ன தெரியுமா? என்னோட தங்கை. வீட்டுல ஒருத்தர் பிரிஞ்சு நின்னாலும் அது வருத்தம் தான் மாப்பிள்ளை.”

“அரண்மனை தான் உங்களுக்கெல்லாம் இப்போப் பிரச்சினைன்னா நானும் எம் பொண்டாட்டியும் அந்த அரண்மனையில இருந்து வெளியேறிடுவோம்.”
“மாப்பிள்ளை!”

“இது வெறும் வாய் வார்த்தையில்லை மாமா. எனக்கு மங்கை ஸ்டீஃபனோட கல்யாணம் அந்த அவ்வளவு முக்கியம். அதுக்காக நான் எந்த எல்லைக்கும் போகத் தயார்.”

திட்டவட்டமாக அரண்மனைக்காரன் அறிவிக்க அங்கிருந்த அனைவரும் ஸ்தம்பித்துப் போனார்கள். அவர்கள் வீட்டு மாப்பிள்ளையே இத்தனை ஆணித்தரமாகச் சொன்ன பின் அவர்களுக்கு அதைத் தாண்டிப் பேச முடியவில்லை.

“ஐயா! அவசரக் கோலத்துல முடிவு சொல்ல எங்களால முடியலை.‌ நாங்க எல்லாருமாக் கூடிப் பேசி உங்களுக்கு ஒரு நல்ல முடிவாச் சொல்லுறோம். உங்க வீட்டுல சம்பந்தம் பண்ண எங்களுக்கு என்னைக்கும் கசக்காது. அதுக்கு நாங்க குடுத்து வெச்சிருக்கணும். ஆனா எங்க இடத்துல இருந்தும் நீங்க கொஞ்சம் யோசிச்சுப் பார்க்கணும்.”

நயமாக நம்பி எடுத்துச் சொல்லவும் அதைப் புரிந்து கொண்டார் கண்ணபிரான்.
“நான் யாரையும் தப்பா எடுத்துக்கலை நம்பி. எனக்கும் உங்க சங்கடம் புரியுது. கூடிய சீக்கிரம் ஒரு நல்ல முடிவாச் சொவ்லுங்க.” அத்தோடு கண்ணபிரான் விடைபெற்றுக் கொண்டார்.

கண்ணபிரான் வெளியேறவும் அதுவரை ரூமிற்குள்ளேயே இருந்த வடிவு வேளியே வந்தார். முகத்தை வைத்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

“மாப்பிள்ளை! இங்க என்ன நடக்குது?” கேள்வி நேரடியாக விஜயேந்திரனிடம் சென்றது. யாருக்கும் சரியான விபரம் தெரியாததால் நடந்தவற்றைச் சுருக்கமாகச் சொல்லி முடித்தான் அரண்மனைக்காரன்.
“அம்மா… பையன் மேல எந்தத் தப்பும் கிடையாது. எல்லாத்துக்கும் காரணம் மங்கை தான். அப்போவும் பையன் நல்ல புத்தி தான் சொல்லி இருக்கான். அதைத் தாங்கிக்க முடியாமத்தான் பொண்ணு இப்படிப் பண்ணிருச்சு.”

“ஓ… இவ்வளவு விஷயம் நடந்திருக்கா?” இது நம்பி.

“ஏம்மா… இதுல உன்னோட முடிவு என்ன?” சங்கரன் ரோஸியை நேரடியாகக் கேட்கவும் கணவனைத் திரும்பிப் பார்த்தாள் பெண்.
“எனக்கும் என் தம்பிக்கும் தனிப்பட்ட முடிவுன்னு எதுவுமில்லை மாமா. அத்தான் சொல்லுறது தான் கடைசி வார்த்தை. அத்தான் கட்டுன்னா அவன் தாலியைக் கட்டுவான். இல்லைன்னா இல்லைதான்.”

அந்தப் பதிலில் அங்கிருந்த அத்தனை பேரின் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி தெரிந்ததென்றால் வடிவின் முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது.

“அப்போ இப்ப முடிவு கரிகாலன் கைல தான் இருக்கு. நீ சொல்லு கரிகாலா. இந்தக் கல்யாணத்துல உனக்கு இஷ்டமா இல்லையா?” இது விஜயேந்திரன்.
“ராஜா! எனக்கு சுமித்ரா முக்கியம். அவளுக்கு எந்தக் கெடுதலும் வராம நீங்க என்ன பண்ணுறதா இருந்தாலும் எனக்குச் சம்மதம் தான்.”

“சரி. இந்தக் கல்யாணத்தை சுமித்ராவை மையமா வெச்சு நீங்க எல்லாரும் பேசுறதால இதுக்கு முடிவை நானே எடுக்கிறேன்.”
“மாப்பிள்ளை! எங்களை நீங்கத் தப்பா எடுத்துக்கப் படாது.”

“இல்லை மாமா. நான் யாரையும் தப்பா எடுத்துக்கலை. அதே போல நான் எடுக்கிற முடிவுகள்லயும் நீங்க யாரும் சங்கடப் படவும் கூடாது.” கொஞ்சம் காரமாகத்தான் வந்து விழுந்தது விஜயேந்திரனின் வார்த்தைகள்.
அதன் பிறகு மீண்டும் கலகலப்புத் தொற்றிக் கொள்ள இரவு உணவையும் அங்கேயே முடித்துக் கொண்டார்கள். அன்று மதியம் முதல் ரவி தில்லை வடிவின் வசமே இருந்தான்.

அழுது ஆர்ப்பாட்டங்கள் பண்ணாததால் யாரும் அதைக் கண்டு கொள்ளவில்லை. இப்போது கிளம்பும் நேரம் வரவும் ரோஸி மெதுவாக ரூமிற்குள் எட்டிப் பார்த்தாள்.
குழந்தை உறங்கிப் போயிருந்தான். வடிவு அவன் தலையை வருடிய படி இருந்தார். மருமகளின் தலையைக் காணவும் குழந்தைக்கு அணைவாக சாய்ந்து அமர்ந்திருந்தவர் எழுந்து உட்கார்ந்தார். ரோஸிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

“இல்லை… ரவியை…” தலையைக் குனிந்த படி இழுத்தாள்.

“ம்…” லேசாக வந்தது பதில். ஆச்சரியமா… ஆனந்தமா! எதுவென்று புரியாத நிலையில் குழந்தையை வந்து தூக்கப்போனாள் ரோஸி.

“தூங்குற குழந்தை. உன்னால தூக்க முடியாது. அவனை வரச் சொல்லு.” ஆணையாக வந்த குரலில் விட்டால் போதுமென்று ஓடினாள் ரோஸி.
சற்று நேரத்தில் கரிகாலன் உள்ளே வரவும் ரோஸியும் பூனை போல பின்னோடு வந்தாள். மகனிடம் போகாமல் அம்மாவிடம் வந்தான் பிள்ளை.
“அம்மா!”
“………….”

“என்னோட பிள்ளை உனக்கு வேணும். உன்னோட பிள்ளை உனக்கு வேணாமா ம்மா?” குரல் கெஞ்சியது.
“என்னோட நம்பிக்கையை நாசம் பண்ணின எம் புள்ளை எனக்கு வேணாம்.”

“அதுக்குத்தான் அஞ்சு வருஷமாத் தண்டனை அனுபவிச்சேனே. இன்னுமா உனக்கு அந்தக் கோபம் தீரலை?”
“தண்டனை நீ மட்டும் அனுபவிக்கலை. நாங்களும் தான் அனுபவிச்சோம்.”
“சரி… தப்புத் தான். நான் பண்ணினது எல்லாமே தப்புத் தான். நான் என்ன பண்ணினா உன்னோட கோபம் ஆறும்? அதை மட்டும் சொல்லு ம்மா.”

“யாரும் எதுவும் பண்ண வேணாம். என்னை உதறிட்டு நான் வேணாம்னு போனவங்க தள்ளியே நில்லுங்க. ஏதோ… பெத்த பாசமா இல்லை ரத்த பாசமா தெரியலை. இந்தக் குழந்தை முகத்தைப் பார்க்கும் போது மனசு நிறைஞ்சு போகுது. முடிஞ்சா அதுக்கு அனுமதியுங்க. இல்லைன்னா… அதையும் என்னை விட்டுத் தூரப்படுத்துங்க.”

அந்த வார்த்தைகளில் ரோஸியின் கண்களில் நீர் நிறைந்தது. அது தனக்கான சாட்டையடி என்று அவளுக்குப் புரிந்தது. என் மகனை என்னிடமிருந்து பிரித்ததைப் போல என் பேரனையும் பிரித்து விடு என்கிறார்.

அமைதியாக மனைவி ரூமை விட்டு வெளியேற ஒரு பெருமூச்சோடு குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டான் கரிகாலன்.

அந்த ப்ளாக் அம்பாசிடர் அமைதியாக நகர்ந்து கொண்டிருந்தது. ரூமிற்குள் நிகழ்ந்தது அனைவரையும் பாதித்திருந்ததால் கனமான மௌனம் நிலவியது.

“விடு கரிகாலா.‌ எல்லாம் சரியாகிடும்.”

“அந்த நம்பிக்கையில தான் நான் இன்னும் இருக்கேன்.” வீடு வந்துவிடவும் கரிகாலனும் ரோஸியும் இறங்கிக் கொண்டார்கள்.
“என்ன கரிகாலா! பையனை நாங்க கொண்டு போகவா?”

“தேவையில்லை ராஜா. அதான் உங்க பொண்டாட்டி உங்களுக்கு ஆர்டர் போட்டு இருக்கா இல்லை. நீங்க அதை என்னன்னு பாருங்க.”

“ஹா… ஹா…” வெடிச் சிரிப்பு சிரித்த கணவனை முறைத்துப் பார்த்தாள் சுமித்ரா.
“விஜி… உங்களால இன்னைக்கு மானமே போகுது.” குறைப்பட்ட மனைவியின் கன்னத்தில் முத்தமிட்டவன்,
“அப்படியா!” என்றான். கார் வேகமெடுத்தது. பாதை வித்தியாசமாக இருக்கவும்,

“எங்க போறோம் விஜி?” என்றாள் சுமித்ரா.
“நாட்டியப் பேரொளியைக் கடத்திக்கிட்டுப் போறேன்.” கண் சிமிட்டினான் கணவன்.
சற்று நேரத்திலெல்லாம் கார் ஆர்க்கிட் தோட்டத்தின் முன்பாகப் போய் நின்றது.
“இப்போவே நேரம் பத்து ஆகப்போகுது விஜி.”

“நீங்களா இறங்குறீங்களா? இல்லை நானே அள்ளிக்கிட்டுப் போகட்டுமா? எப்படி வசதி?” கேட்டவனின் பார்வை நீ இறங்காவிட்டால் நான் சொன்னதைச் செய்வேன் என்று கட்டியம் கூறியது.

கூடாரங்கள் இருந்த பகுதிக்கு அவளை அழைத்துச் சென்றவன் அதில் ஒன்றைத் திறந்தான். இதமாக இருந்தது. மெல்லிய சந்திர ஒளியில் வாசமில்லா அந்த மலர்கள் பல வண்ணங்களில் மின்னியது.

சட்டைப் பாக்கெட்டில் இருந்த அந்த மஞ்சள் கேசட்டை எடுத்து அவளிடம் நீட்டினான் அரண்மனைக்காரன்.
“விஜீ!”

“எப்படி அது? ‘மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச…’ அப்போ என்னைப் பார்த்தியே ஒரு பார்வை! அதை இப்போ பாரு சுமித்ரா.” அவன் குரலில் உலகத்துக் காதலெல்லாம் வழிந்தது. அவன் மயக்கம் பார்த்து அவள் விக்கித்துப் போனாள்.
“விஜீ…”

“ம்… உன்னோட விஜியை இன்னொரு தரம் அப்படிப் பாரு சுமி.” அவன் கிறக்கத்தில் மயங்கிப் போன பெண்ணின் கண்களில் அவன் இன்னொரு முறை கேளாமலேயே அந்த பாவம் வந்தது.

“சுமித்ரா!” அதற்கு மேல் விஜயேந்திரன் பேசவில்லை. நிதானமாக அவளை அவன் விடுவித்த போது ஏதோ ஒரு நிறைவு இருவருக்குள்ளும்.

“காலேஜ் நாட்கள்ல நான் எங்கேயோ இந்தப் பாட்டைப் பத்திப் படிச்சிருக்கேன் சுமி.”
“…………..” சட்டெனத் தீர்ந்த அவன் மயக்கம் இன்னும் அவளிடம் மிச்சமிருந்தது. மௌனித்தாள்.

“பாரதி அவன் கற்பனையில ரசிச்ச காதலியை நான் அப்போ நிஜத்துல ரசிச்சிருக்கேன் சுமித்ரா. ‘தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்’ ன்னு பாரதி சரணாகதி அடைஞ்சானே. கால்லயே விழுந்தானே. என்னோட நிலைமையும் அப்படித்தான் இருந்தது சுமித்ரா.”

அரண்மனைக்காரன் பேசப் பேச விழி விரித்து மொழி மறந்து கேட்டிருந்தாள் சுமித்ரா.

“பொன்னையே நிகர்த்த மேனி… மின்னையே நிகர்த்த சாயல்…”

மனைவியைத் தன்னை விட்டு ஓரடி தள்ளி நிறுத்தியவன் வாய்விட்டுப் பாடினான்.
“பாரதி அவனோட காதலிக்குப் பாடினானா? இல்லை என்னோட காதலிக்குப் பாடினானா சுமி? அவ்வளவு அழகாப் பொருந்துதே!”
“போதும் விஜி…”

“இல்லையே சுமித்ரா. சுகமுனிவருக்குப் பார்த்தது எல்லாமே ஈசனாகத்தான் தெரிஞ்ச தாம். அதுமாதிரித் தான் பாரதிக்கும் இருந்ததாம். நானும் அப்படித்தானே சுமித்ரா உணர்ந்தேன். இவ்வளவு காதலோட நான் காத்திருந்தப்போ நீ என்னை விட்டுத் தூரமாப் போனது எந்த வகையில நியாயம் சுமித்ரா?”

“விஜீ…” ஆரம்பித்த புள்ளியிலேயே மீண்டும் வந்து நின்ற கணவனை ஒரு கையாலாகாத் தனத்தோடு பார்த்தாள் சுமித்ரா.

அவன் காதல் பொங்கிப் பெருகும் வேளையிலெல்லாம் இதே புள்ளியில் வந்து நிற்பதே அவன் வாடிக்கையாகிப் போனது.
ஏதோ பேச வாயெடுத்த மனைவியைத் தடுத்தான் விஜயேந்திரன். அந்தக் கண்கள் அவளைப் பேசாதே என்று ஆணையிட்டது.

“வாழ்க்கையை முழுசா வாழணும் சுமித்ரா. நான் தொலைச்ச காதலை அணு அணுவா ரசிக்கணும். உன்னைப் பார்க்காம நான் அனுபவிச்ச வேதனையை உன்னைப் பார்த்துப் பார்த்து மறக்கணும்.”

“விஜீ…” கணவனை ஒரு தீவிரத்தோடு அணைத்துக் கொண்டாள் சுமித்ரா.
“மறந்திடுங்க விஜி. எல்லாத்தையும் மறந்திடுங்க.”

“முயற்சி பண்ணுறேன்.” சொன்னவன் எல்லாவற்றையும் மறக்க முயற்சித்தான். சுற்றம் சூழம் எல்லாம் மறந்து போனது.

யாதுமாகி நின்ற அவன் சுமித்ராவிற்குள் புதைந்து போனான் அரண்மனைக்காரன்.

error: Content is protected !!