mp2

mp2

மது பிரியன் 2

 

வீட்டிற்குள் இருந்த பாரிஜாதமும், இசக்கியம்மாளும், மதுராவின் அத்தை வீட்டார் அவளை அம்போவென விட்டுச் சென்றதைப் பற்றி விவாதித்திக் கொண்டிருந்தனர்.

“தினைக்குளத்துல இருக்கற மருது அத்தை சொல்லித்தான இந்தச் சம்பந்தம் தகைஞ்சது” பாரி தாயிடம் கேட்க

“அதுக்கு அவகிட்டபோயி என்னாத்தைக் கேக்கப்போற.  எதுனாலும் நாமதான் விசாரிச்சிருக்கணும்” இசக்கியம்மாள் தங்களின் மீதான குறையை மகளிடம் கூறினார்.

பாரி, “இப்டி இருப்பாங்கன்னு கனவுலகூட நான் நினைக்கலைம்மா.  பெத்தவங்க இல்லை.  நகைநட்டுன்னு எதுவும் செய்ய முடியாது.  கட்டுன சேலையோடதான் பொண்ணை அனுப்புவோம்னு சொன்னப்போகூட இப்டிச் செய்வாங்கனு தெரியலையே.  பொண்ணு ரொம்பத் தங்கமான புள்ளைனு சொன்னதை நம்பி, சட்டுன்னு பேசி முடிச்சி, கல்யாணம் வரை வந்தது தப்போன்னு இருக்குமா”

“நடந்ததை நினைச்சி இனி ஒன்னும் ஆகப்போறது இல்ல, பாரி.  இனி நடக்க வேண்டியதை, போயி பாரு” என இசக்கியம்மாள் தெளிவாய்க் கூறினார்.

“எந்த ஆதரவும் இல்லாத இடத்திலபோயி சம்பந்தம் பண்ணி, வேணானு வம்படியா நின்னவனை, புதைகுழியில புடிச்சுத் தள்ளிட்டோமோன்னு மனசு கிடந்து அடிச்சிக்குதும்மா” தனது வருத்தத்தைப் பாரி பகிற

“இன்னாருக்கு இன்னாருன்னு விதிப்படிதான் நடக்கும் பாரி”

“ஆமா, இவனுக்குன்னு எங்கிட்டு இருந்துதான் இப்டி வருவாளுகளோம்மா.  கள்ளைக் கண்டா நாயைக் காணோம், நாயைக் கண்டா கள்ளக் காணோங்கிற கதையாத்தான் எடக்கு மடக்கா எல்லாம் நடக்குது”  

“இதுக்கு முன்ன முடிச்சு வந்த புள்ளைக்கு, ஆளு பேருனு இருந்ததோட, பணங்காசுனு, சீரு சினத்தினு குறையில்லாமத்தான் கொண்டு வந்து இறக்குனாக.  ஆனா அது எல்லாம் தம்புட்டுக்கு பிரயோசனமில்ல.  நம்மையெல்லாம் அசிங்கப்படுத்தி, இவனை எவ்வளவுக்கெவ்வளவு கேவலப்படுத்தணுமோ, அவ்ளோ கேவலப்படுத்தி எல்லார் மூஞ்சிலயும் கரியப் பூசி விட்டுட்டுப் போவான்னு அப்பத் தெரியலையே.  அவளால எம்புள்ளை ரொம்ப சீப்பட்டுட்டான்.  அதுல மிரண்டு போனவனை மறுகல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கிறதுக்குள்ள மாமாங்கமே ஓடிப் போயிருச்சே” என மகனது கடந்த காலத்தை வருத்தத்தோடு பகிர்ந்த இசக்கி,

“அதுக்காக அவனை இப்டியே தனிமரமா விட்டுட்டுப் போனா நாளைப்பின்ன தனியொருத்தனா என்ன செய்வான்னுதான போகாத இடமெல்லாம் போயி பொண்ணு பாத்தோம்.  நல்ல சம்பாதனை இருந்தும் ஒன்னும் அமையலையே.  இரண்டாந்தரமா எவளும் பொண்ணு குடுக்க யோசிக்கிறாளுக. தங்கத்தை ஒரசிப் பாக்கறதைப்போல, என் தங்கத்தை ஒரசிப் பாத்து வேணானு சொன்னவளுகதான் எத்தனை பேரு” என இமைகளைத் தாண்டி வந்த நீரை சேலைத் தலைப்பில் துடைத்துக் கொண்டவர்,

“வேற வழியில்லாமத்தான் இந்தச் சம்பந்தத்தை பத்து நாளுல பேசி முடிச்சோம்.  அதுக்காக, இப்டி ஒட்டு ஒறவு இல்லாம, எனக்கென்னானு மூனாவது மனுச கணக்கா, சொல்லிக்காம கிளம்பிப் போவாளுகன்னு நினைக்கலையே” எனப் புலம்பினார்.

“நானுந்தான் அஞ்சு புள்ளைல இது பொட்டப்புள்ளையா பிறந்துறாதா, அடுத்தது பிறந்துறாதான்னே ஏமாந்துட்டேன்.  இந்நேரம் எனக்கு ஒரு பொம்பிளைப் புள்ளைய அந்த ஆண்டவன் குடுத்திருந்தா, ராசா மாதிரி இருக்கற எந்தம்பிய, என் வீட்டுக்கு மருமகனாக்கி அழகு பாத்திருப்பேன்.  அதுக்குத்தான் இந்தப் பாதகத்திக்கு குடுத்து வைக்கலையே” என பாரிஜாதம் கண்ணில் நீரோடு பேசினார்.

“அதுக்கு எல்லாம் பிராப்தம் வேணுமுடி பாரி”

“அது எனக்கு இல்லாமப் போச்சே” எனப் புலம்பியதோடு, “இல்லைனா அந்த அஞ்சனாவைத் தேடிப் போயிருப்போமா?”

“ஆளுக வந்து போயி இருக்காக.  இந்த நேரத்தில, எதுக்கு போனவ பேச்சு.  இனி இவதான் அவந் தலையெழுத்துன்னு ஆகிருச்சு.  நாமதான் சூதனமா அதுகளை வாழவச்சி அழகு பாக்கணும்.  ஆனாலும் இந்தப் புள்ளை நம்ம குடும்பத்துக்கு ஏத்த மாதிரித்தான் இருக்கும்னு மனசுக்குள்ள தோணுது” என தனது மனதை மகளோடு பகிர்ந்துகொண்டார் இசக்கி.

“வீட்டுக்கு வந்து பாக்க வரோம்னு சொன்னதுக்கு பதறிப்போயி அவங்கத்தை வேணானு சொல்லுச்சே, அப்பவே நாம சுதாரிச்சிருக்கணும்.  போனுல போட்டோ அனுப்பி விடுறேன்.  உங்களுக்கு எதுக்கு வீண் அலைச்சல்னு ரொம்பத்தான் நம்மமேல அக்கறைப்பட்டுப் பேசி, ஏமாத்திருக்கு” தான் ஏமாந்த கதையைக் கூறி மனதை ஆசுவாசப்படுத்தினார், பாரி.

“நிச்சயமானாலே பாதிப் பொண்டாட்டி! இவ தாலி கட்டிட்டே வந்திட்டா.  இனி போனதைப்பத்திப் பேச வேணாம்” என அங்கிருந்து எழுந்து, வீட்டின் நடுப்பத்திப் பகுதிக்கு வந்து எட்டிப் பார்த்தார்.

உள்ளூர் மக்கள் ஒன்றிரண்டு என வந்து சென்றவண்ணமிருந்தனர்.

………………………………………….

வெளியூர் வாழ்மக்கள் அனைவரும் சென்றிருக்க, உள்ளூர்வாசிகள் வருகை தொடர்ந்தபடி இருந்தது. மதுராவிற்கு தாகமாய் இருந்தது.  ஆனால் அவளாக வீட்டிற்குள் சென்று நீரை எடுத்துப் பருக தயக்கம்.  எது எந்த இடத்தில் இருக்கிறது என்பது தெரியாததே அவளின் தயக்கத்திற்கான முக்கிய காரணமாய் இருந்தது.

நாற்காலியில் அமர்ந்திருந்தபடியே சுற்றிலும் பார்வையை விட்டாள். வந்தவர்களுக்கு குளிர்பானங்களைத் தந்து உபசரித்தபடி இருந்த வசீகரனைத் தவிர வேறு சிறுபிள்ளைகள் அவ்விடத்தில் இல்லை.

விஜய், அவ்வூர் தலைவர் வந்து மணமக்களை ஆசிர்வதித்து கிளம்ப, அவரை வழியனுப்ப அவனும் வெளியில் சென்றிருக்க, துணிந்து வசீகரனை நோக்கி, “தம்பீ” என அழைத்தாள் மதுரா.

அதுவரை அங்கு வேடிக்கை பார்த்தவாறு நின்றிருந்தவன், மதுரா அழைத்ததும் அருகே ஓடி வந்தான்.

“என்ன அத்தை”

“தம்பி, எனக்கு குடிக்க தண்ணீ வேணும்” பாவமாய் கேட்டவளைக் கண்டவனுக்கு வருத்தம் வந்திருந்தது.  “இதோ எடுத்துட்டு வரேந்தை.  இங்க யாருக்கும் கூல்டிரிங்ஸ் வேணும்னு கேட்டா, இப்ப வந்துருவேன்னு சொல்லுங்க” என்றபடியே உள்ளே ஓடினான்.

சற்று நேரத்தில் கையில் சொம்புடன் ஓடி வந்தவனிடம் நீரை வாங்கிப் பருகியவள், “ரொம்பத் தாங்ஸ்பா”

“எனக்கு எதுக்குத்தை தேங்ஸ்லாம் சொல்லிக்கிட்டு” என சிரித்தவனிடம்

“ரொம்ப நேரமா தண்ணி தவிச்சது.  யாருகிட்ட கேட்டு வாங்கிக் குடிக்கறதுனு ஒன்னுமே புரியலை.  நல்ல வேளை நீ வந்து ஹெல்ப் பண்ண” என தனது நன்றிக்குரிய விளக்கத்தை வசீகரனிடம் பகிர்ந்தாள்.

“எதுனாலும் வசீனு கூப்பிடுங்கத்தை.  ஓடி வந்திருவேன்” எனச் சிரித்தவனிடம், மதுராவிற்கு ஒட்டுதல் வந்திருந்தது.

அதற்குள் அடுத்தடுத்து ஆட்கள் வர, அவர்களை வரவேற்று உள்ளே வருமாறு அழைத்தபடியே, மதுராவை நோக்கி வந்த விஜயைக் கண்டு,  வசீகரன் அவனது பணியை மேற்கொள்ள அங்கிருந்து அகன்று சென்றான்.

அதுவரை வசீயுடன் மதுரா பேசிக் கொண்டிருந்ததை, தண்ணீர் வாங்கிப் பருகியதை அனைத்தையும், வாயிலில் நின்றபடியே கவனித்திருந்த விஜய், பிறரின் முன் அமைதி காத்தவன், வந்தவர்கள் சென்றதும், “தாகமா இருந்தா எங்கிட்ட சொல்லியிருக்கலாம்ல” என மெதுவாக கேட்ட கேள்வியில், ‘உங்ககிட்டயா’ என்பதுபோல திகைப்பாய் பார்த்தவளிடம், “எங்கிட்டதான்” என்றான் கடினமாய்.

“…” தப்பு செய்த குழந்தையைப்போல விஜயை நோக்கியவளிடம், “வேற யாருகிட்டயும் போயி கேக்குமுன்ன என்னோட நினைப்புதான உனக்கு முதல்ல வந்திருக்கணும்” மதுராவிடம் மெல்லிய குரலில் பேசியபடியே, வாசலில் நின்றபடி விடைபெற்றவர்களுக்கு கைகூப்பி வழியனுப்பினான்.  வந்தவர்களை அதேபோல கைகூப்பி நின்ற இடத்திலிருந்தே வரவேற்றான்.

உண்மையில் மதுராவிற்கு, தான் செய்தது தவறோ எனும் எண்ணம் வந்திருந்தது. சட்டென கூம்பிப்போன முகத்துடன் மாறிப்போனவள், இயந்திரம்போல அடுத்து செயல்பட்டாள்.

மனைவியை கூர்ந்து கவனிக்காமலேயே அவளின் மனது புரிந்தவன், “இதுக்குப்போயி உம்முன்னு முகத்தை வச்சிக்காத.    நாந்தான் உன்னை ஏதோ சொல்லிட்டேன்னு, அக்கா வந்து எதாவது கேக்கும். பாத்துக்கோ” என மதுராவை எச்சரித்தான்.

தற்போதும் தலையை அசைத்து ஆமோதித்தவளிடம், “இனி எதுனாலும் எங்கிட்டதான் கேக்கணும், சொல்லணும். இப்டி தலையத் தலைய ஆட்டாம வாயத் திறந்து பேசணும்” என்றான் கட்டளையாய். ஆனால் அதில் கோபம் எதுவுமின்றி வந்தது.

தலையாட்டி ஆமோதித்தவள், ‘பாக்கத்தான் பயங்கரமா இருக்காங்க.  ஆனா சாஃப்டா பேசறாங்க’ என சற்றே இலகுவானாள்.

விஜயைப் பார்த்துதான் முதலில் பயம் வந்திருந்தது. அவனது புறத்தோற்றம் அப்டித்தான் அவளை நினைக்கச் செய்திருந்தது. தற்போதைய அவனது பேச்சில் சற்று பயம் குறைந்தாற்போல உணர்ந்தாள்.

அன்று இரவு அங்குதான் தங்க வேண்டும் என பாரிஜாதம் வலியுறுத்த, இரண்டு நாள்கள் மட்டுமே விடுப்பு எடுத்திருப்பதால் இன்றே காரைக்குடிக்கு கிளம்ப வேண்டும் என விஜய் பிடிவாதமாய் இருந்தான்.

“எல்லாத்துக்கும் கல்யாண அசதி இருக்கும். இப்போ கிளம்பினா, அங்க போக நைட் பத்து மணியாகிரும்.  அந்த நேரத்தில போயி வெளிய சாப்பிட்டுட்டு, வீட்டுக்குப் போக இன்னும் நேரமாகிரும்.  அதுக்கு இன்னைக்கு ஒரு நாளு இங்க தங்கியிருந்திட்டு, நாளைக்கு வெள்ளனத்தில காரைக்குடிக்குப் போ.  நாளைக்குப் போகறதுக்கு, யாரு உன்னை வேணானு சொல்றா” என தமக்கையும் பிடிவாதமாய் இருந்தார்.

நீண்ட நேர விவாதத்திற்குப்பின், இசக்கியம்மாளும் வந்து அவரது பங்காய், பாரிஜாதம் கூறியதையே கூற, வேறு வழியின்றி இருக்கச் சம்மதித்திருந்தான் விஜய்.

மதுராவிற்கு அந்தப் பாட்டியின் பேச்சில் மறைந்திருந்த விசயம் இன்னும் மனதில் ஓட, நம்பகமானவர்கள் எவரும் இல்லாத நிலையில் மனதிற்குள் வைத்தபடியே ‘யாருகிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்கலாம்’ என யோசித்தாள்.

கணவன் மாலையில் கூறியது நினைவில்வர, அன்று தனிமை கிட்டினால் அவனிடமே கேட்டுக் கொள்ளலாம் என அவளாகவே ஒரு முடிவிற்கு வந்திருந்தாள்.

…………………..

முதலிரவு அறைக்குள் கையில் பால் செம்போடு நுழைந்தவளை சட்டை செய்யாமல், கையில் லேப்டாப்புடன் ஏதோ வேலையாக இருந்தான் விஜய்.

விஜயைப் பொறுத்தவரை எல்லாம் சரியாகிவிட்டது என மற்றவர்கள் மட்டுமன்றி, அவனுமே அவ்வாறு நினைத்திருக்க, எதுவுமே இன்னும் சரியாகவில்லை என்பது நேரம் ஆகஆக உணர்ந்து கொண்டான்.

தப்பிக்க வழி தேடியவன், காரைக்குடி செல்வதாகக் கூறி கிளம்பினான்.  அதுவும் நடக்கவில்லை.  அதற்குமேல் அவனை அவனே ஏமாற்றிக் கொள்ள மடிக்கணினியோடு அமர்ந்துவிட்டான்.

பெண்ணோடு பேசினால் சரியாகும் என்றெண்ணித்தான் அவனாகவே அன்று முன்வந்து தனது உரிமையை நிலைநாட்டிப் பேசியிருந்தான்.  ஆனால் அது எல்லாம் போதவில்லை என அவனது மனமும், உடலும் உணர்த்த, தர்மசங்கடங்களைத் தவிர்க்க, விலகியிருக்க எண்ணினான்.  இன்னும் சிறு கால அவகாசம் எடுத்துக்கொண்டு, தன்னைச் சரி செய்து கொள்ளவே தனித்திருந்தான்.

பள்ளி மேல்நிலைக் கல்வியோடு எதுவும் படிக்கவில்லை மதுரா.

அத்தையின் மக்கள் கணினியோடு வேலை, பாட்டு கேட்பது, படம் பார்ப்பது, இன்னும் பிற பொழுதுபோக்கு என இருந்ததைப் பார்த்திருக்கிறாள்தான்.  ஆனால் அதைக் கண்ட பொழுதுகளில் அவளுக்குள்ளும் ஆசை இருந்தது.  அந்த கணினியை தானும் அவர்களைப்போல பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்பதே அது.

தற்போது கணவன் கையில் அதைக் கண்டதும், கணவனிடம் கேட்டு கற்றுக் கொள்ளலாம் என்கிற எண்ணமும் சேர, ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி அவள் மனதில்.

வந்தவளின் அரவத்தில் நிமிர்ந்து நோக்கியவன், “ரொம்ப டயர்டா தெரியறம்மா.  நீ தூங்கறதானா தூங்கு.  காலையில சீக்கிரமாக் கிளம்பணும்மா”

“சரிங்கப்பா” தலையை ஆட்டியவாறே கையில் இருந்த பாலை நீட்ட, அவளின் கேலி புரிய, “கொஞ்சம் டைம் குடு.  இன்னிக்கு ஈவினிங்தான் உம்பேரே தெரிஞ்சுது.  டக்குனு வர மாட்டிங்குது.  உன்னோட ஃபுல் நேம் என்ன?”

“மதுராகிணி”

“நல்ல பேரு.  நான் மதுரானு கூப்பிடவா?”

“உங்க இஷ்டம்”

அதற்குமேல் என்ன பேசுவது எனப் புரியாமல், பால் சொம்பை தன்னை நோக்கி நீட்டியவாறு நின்றவளிடம், “நீயே குடிச்சிரு.  நாளைக்கு அக்கா கேட்டா, ரெண்டு பேரும் குடிச்சோம்னு சொல்லிரு” என்றான்.

“நீங்கதான் குடிக்கலையே” என்றாள்.

நிமிர்ந்து அவளைப் பார்த்துச் சிரித்தவன், “அது உனக்கும் எனக்கும் மட்டுந்தான தெரியும்.  அப்போ நான் சொன்னதை அக்காகிட்ட சொல்ல மாட்டீயா”

“குடிச்சாத்தான குடிச்சீங்கனு சொல்ல முடியும்”

“சரி த்தா” என கையை நீட்டியவனிடம் செம்பை மதுரா கொடுக்க, வாங்கி ஒரு மிடறு பருகிவிட்டு, அப்படியே  அவளிடம் நீட்டியவன், “நீயே மிச்சம் வைக்காமக் குடிச்சிரணும்.  இப்ப ஓகேதான” தனது கட்டைவிரலை உயர்த்திக் காட்டிக் கேட்டான்.

எடுத்து வந்தது குறைந்தாற்போலயே இல்லை.  என்ன செய்ய? ஒன்றும் விளங்காமல் “இவ்ளோவையும் என்னால குடிக்க முடியாது. எனக்கு பால் குடிச்சு பழக்கமும் இல்லை” என பாவமாகக் கூறினாள்.

“எப்டியாவது குடிச்சிரும்மா” என்றவனைப் பார்த்து பதில் பேச வாயைத் திறந்தவள் பேசுமுன், “சாரி.. மதுரா.  எப்டியாவது மிச்சம் வைக்காமக் குடிச்சிரு.  இனி உன்னை அம்மானு சொல்ல மாட்டேன்.  மாத்திக்கிறேன்.  அதுக்காக அப்பாலாம் வேணாமே”, என்று கெஞ்சலாய் கேட்க

“ம்ஹ்ம்..” என சிரித்தவளிடம், “வேலையிருக்கு.  நீ போயி படுத்துத் தூங்கு” என்றுவிட்டு, அடுத்து கணினியில் பார்வையைப் பதித்திருந்தான்.

படுக்கையருகே இருந்த டேபிளின்மீது கையில் இருந்த சொம்பை வைத்துவிட்டு, விஜயை பார்த்தபடியே அமர்ந்துவிட்டாள் மதுரா.

நேரம் போக, படுக்காமல் அப்படியே அமர்ந்திருந்த மதுராவைப் பார்த்தவன், “தூக்கம் வரலையா?”

“வருது”

“அப்போ தூங்க வேண்டியதுதான”

“…”

“எனக்கு சின்ன வேலை.  அது முடிச்சிட்டுத்தான் தூங்குவேன்”

“பரவாயில்லை.  அதுவரை நானும் வெயிட் பண்றேன்”

“ரொம்ப டயர்டாத் தெரியற மதுரா.  நீ படு”

கணவன் வற்புறுத்திக் கூறியதைக் கேட்டு தலையை ஆட்டியவள், சென்று படுத்தாள். அதன் பின்னேதான் விஜயரூபனுக்கு மூச்சு வந்தது.

ஆனால் நீண்ட நாள் எடுத்துக் கொள்ளாமல், தன்னை விரைவில் சீர் செய்து கொள்ளும் உத்வேகத்தோடு, கூகுளின் உதவியை நாடி, ஒவ்வொன்றையும் படிப்பதும், சிலவற்றைக் கண்டு முகம் சுழிப்பதுமாய் நேரம் போனது.

அத்தை வீட்டில் இருந்தவரை பாய் விரித்து தரையில் படுத்திருந்தவளுக்கு, அந்த கட்டிலில் சென்று படுத்ததுமே அயர்வினால் உறக்கம் தழுவியிருந்தது.

அடுத்து ஒரு மணித் தியலாத்திற்குப்பின் உறங்க வந்தவனுக்கோ, உறக்கம் வரவில்லை.

பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக மேலெழுந்து அவனை இம்சிக்க, தலைவலி வந்திருந்தது.

அதேநேரம் அவனருகே படுத்திருந்தவள் ஆழ்ந்து உறங்கினாலும், வாழ்த்துக் கூற வந்துவிட்டு, வம்பு பேசிய பாட்டியின் சொல்லையே நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு, அது அப்படியே கனவிலும் தொடர்ந்து வந்தது.

அடுத்தடுத்து காட்சியமைப்புகள் நீண்டது.

இதுவரை முகம் தெரியாத பெண்ணொருத்தி, விஜயை தன் கணவன் என்று சொல்வது போலவும், மதுரா மறுபுறத்தில் நின்றபடி, இல்லை இவர் என் கணவன் என அந்தப் பெண்ணிடம் வாதிடுவது போன்றும் கனவில் வர, அதனை ஏற்றுக்கொள்ள இயலாத மனத்தவள், சட்டெனப் பதறி எழுந்தாள்.

உறங்காமல் விழித்திருந்தவன், மதுரா பதறி எழுந்ததோடு, அவளின் முகமெங்கும் வியர்வைத் துளியோடு இருந்ததைக் கண்டு, “என்னம்.. மதுரா.   என்னாச்சு”

“…” சுற்றிலும் பார்த்தாள்.  கணவன் அருகில் படுத்திருப்பதைப் பார்த்தவள், நடப்பிற்கு வந்து, “ஒன்னுமில்ல! பயங்கரக் கனவு”

எழுந்து அருகே தண்ணீர் உள்ளதா எனப் பார்த்தவன், பாலிருப்பதைக் கண்டு, “சரி இதைக் குடிச்சுட்டுப் படு” என பால் சொம்பை எடுத்து நீட்ட

“இல்லை. எனக்குப் பால் வேணாம்” மறுத்தாள்.

“தண்ணீ எடுத்துட்டு வரச் சொல்லவா, அக்காவ”

“இல்லை.  எங்க போயி எடுக்கணும்னு எங்கிட்டச் சொல்லுங்க.  நானே போயி எடுத்துக் குடிச்சிட்டு வரேன்”

மனைவியை அழைத்துக் கொண்டு அறையைத் திறந்ததுமே, சற்று தூரத்தில் ஹாலில் படுத்திருந்த இசக்கி எழுந்து, “என்னய்யா வேணும்?”

“தண்ணீ வேணும்மா.  நானே போயி எடுத்துக்கறேன்” என அவன் முன்னே செல்ல, பின்னே மதுராவும் சென்றாள்.

இருவரும் ஒருமித்துச் சென்றதைக் கண்டதுமே, இசக்கியம்மாளுக்கு இழந்த சந்தோசங்களை மகன் பெறக்கூடிய காலம் வெகுதூரமில்லை எனும் மகிழ்வோடு மீண்டும் படுத்தார்.

நீர் அருந்தியதுமே, “அப்டி என்ன கனவு கண்ட?  முகமெல்லாம் வேர்த்து விறுவிறுத்துப் போச்சு” விஜய் வினவ

சொல்லுவோமா?  வேண்டாமா?  என ஒரு கணம் யோசித்தவள், “அது கெட்ட கனவு” என்றவள், “சாமி ரூம் எங்க இருக்கு?”

அவன் கையைக்காட்ட,  மதுரா அறைக்குள் செல்ல முயல, அதே நேரம் இசக்கி, “ஏந்தா, இந்நேரத்தில அந்த ரூமுக்குள்ள போற” என சப்தம் எழுப்ப

அதற்குமேல் அங்கேயே நின்றவள், விஜயைத் திரும்பி நோக்க, “ம்மா, விபூதி பூசிட்டு வந்திரும்மா” என

“இந்நேரத்தில எதுக்குத் தம்பி விபூதி” என அருகே எழுந்து வந்தார் இசக்கி.

மதுரா எதுவும் பேசாமல் நத்தையைப்போல தனக்குள் உணர்வுகளைச் சுருட்டிக் கொண்டு நிற்க, விஜய், “கனவு கண்டு பயந்து எழுந்துச்சுமா.  அதான்” என இழுக்க

சாமி அறைக்குள், தானே சென்று கையில் விபூதியோடு வெளியில் வந்தவர் மருமகளை நோக்கி, “நம்ம குலசாமி அங்காள பரமேஸ்வரி தாயி.  நல்லா வேண்டிக்கோ” என்றுவிட்டு, அவளின் நெற்றியில் திருநீறைப் பூசிவிட்டு, “ஆத்தா எல்லா நேரமும் உங்கூட துணையிருப்பா” என வாழ்த்தியபடியே, அவரின் கைகளை மேல்தூக்கிக் கும்பிட்டு பிரார்த்தனை செய்தவர்,  “விடியற நேரமாகப் போகுது.  போயி செத்த நேரம் கண்ணசருங்க” என அறைக்குள் அனுப்பிவிட்டார்.

அறைக்குள் நுழைந்த இருவருக்குமே உறக்கம் பறிபோயிருந்தது.

மதுராவிற்கு தனியாக ஒரு ஆணோடு என்கிற தயக்கம் அறைக்குள் நுழைந்தபோது இருந்தாலும், ‘இனி இவருதான எனக்கு எல்லாமே. அதனால அய்யரவு இல்லாம, அவுகளோட சந்தோசமா இருக்கப் பழகிக்கணும்’ என அறைக்குள் நுழைந்தது முதலே உருப்போட்டிருந்தாள்.

அதனால் அவனோடு தற்போது பேசுவது, ஒன்றாக அறையில் இருப்பது லஜ்ஜையாகத் தோன்றவில்லை.

மேலும் அவளின் அத்தை சௌந்திரம், “என்ன நடந்தாலும் சரி,  அனுசரிச்சுப் போகக் கத்துக்கோ. இதுவரை உன்னைத் தூக்கிச் சுமந்தாச்சு.  இனியும் என்னால முடியாது.  அதனால அங்க இருக்கறவுகூட, எப்டி இருக்கணுமோ, அப்டி இருந்துக்கோ.  கண்ணைக் கசக்கிட்டோ, வயித்தைத் தள்ளிட்டோ, வேறு எதுக்கும் இந்தப் பக்கம் வரணும்னு மட்டும் யோசனை உம்மனசுல வரவே கூடாது.  ஆமா சொல்லிப்புட்டேன்” என்று தெளிவாய்க் கூறித்தான் மதுராவைத் திருமணத்திற்கு அழைத்து வந்திருந்தார்.

திருமணம் எனும் பந்தத்தைப் பற்றி அறியாதவள் இல்லை மதுரா.  ஆனாலும், தானாகவே எதையும் பேச, செயல்படுத்த பெண்ணுக்கே உரிய நாணம் தடுத்தது.  ஆனாலும் அவனுக்கான காத்திருப்புகளும் சுகமான சுமையாய் அவளுக்குள்.

ஒருவருக்கொருவர் தங்களை, தங்களது குடும்பத்தை அறிமுகம் செய்துகொண்டு, பேசத் துவங்கியிருந்தார்கள்.

எங்குமே நடந்திராது என நாம் எண்ணுவது, சில இடங்களில், சிலரின் வாழ்வில் நடந்தேறுகிறது.

விடியல்வரை பேச்சு நீண்டிருந்தது.

மதுராவின் கடந்தகாலத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டவன், தனது பணி, இருப்பிடம், பிறப்பிடம் பற்றி அவள் கேளாமலேயே கூறினான்.

அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கிடையே எழும் பேச்சாகவே விஜய், மதுராவுடன் உரையாடினான்.  அந்த வேற்றுமை, இடைவெளி மதுராவிற்குத் தெரியவில்லை. ஆனால் விஜயரூபனுக்குப் புரிந்தேயிருந்தது.  அவனைப் பொறுத்தவரையில், இருவருக்கிடையேயான இடைவெளியை, தயக்கத்தை, தடையை சிறிது சிறிதாகக் குறைக்க தனக்குத்தானே பயிற்சி மேற்கொள்கிறான் எனுமளவில் இருந்தான்.  அதை மதுராவிடம் கூறுமளவிற்கு பரந்த மனப்பக்குவம் இருந்தாலும், அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ என்கிற பெருந்தயக்கம் இருந்தது.

மற்றொன்று அவள், தான் ஏற்கனவே திருமணமானவன் என்பது தெரிந்துதான் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள் என இதுவரை எண்ணியிருந்தான்.

விஜயின் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருமே அவ்வாறுதான் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

பேச்சு நீண்டிருந்தது.

மதுராவின் மனதில் இருந்த கேள்விகளுக்கான விடையெதுவும் அவன் கூறவில்லை.  இன்னும் அவளால் பாட்டி கூறிய அந்தப் பெண்ணைப் பற்றிக் கணவனிடம் உரிமையோடு கேட்க முடியவில்லை. ஏதோ ஒரு தடை.  அது எதனால் என்பது மதுராவிற்கும் புரியவில்லை.

ஆனால் தெரிந்துகொள்ள உள்ளம் பரபரத்தது.

அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் வாய்க்குமா?

……………………………………………………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!