MP2

MP2

மோகனப் புன்னகையில் 2

அன்புள்ள அத்தான் கரிகாலனுக்கு,

ஸ்டீஃபன் எழுதிக் கொள்வது. நலம், நலமறிய ஆவல். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இந்தியா வந்து சேர்ந்தேன். வந்து இறங்கிய உடனேயே எங்கேயும் தாமதிக்காமல் நேராககௌரி புரம்வந்துவிட்டேன்.

ஊரை வந்தடைந்த கொஞ்ச நேரத்திலேயே உங்கள் நண்பரைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. மகிழ்ந்து போனேன். நான் சொல்வது சரியென்றால் நீங்கள் அப்போது பார்த்த மனிதர் இப்போது இல்லை. ராஜ களை முகத்தில் தாண்டவம் ஆடுகிறது

மிகவும் மரியாதையாகவும் பண்பாகவும் நடந்து கொண்டார்கள். என் அத்தானின் நண்பர் வேறு எப்படி இருக்க முடியும்?

உங்களைப் பற்றிச் சொன்ன போது அவருக்குச் சட்டென்று பிடிபடவில்லை. ஆனால்துவாரகாஎன்ற ஒற்றைச் சொல் அவரின் இன்றைய உள்ளத்தை எனக்கு அழகாகப் படம் பிடித்துக் காட்டியது

வாழ்க்கை உங்கள் நண்பரை நிறையவே வஞ்சித்திருக்கிறது என்றுதான் நான் சொல்வேன். இத்தனை வசதிகள் இருந்தும் ராஜ பின்புலம் இருந்தும் அவர் மனதில் மகிழ்ச்சி இல்லை என்றே தோன்றுகிறது

உங்களையும் உங்கள் மனைவியையும் விசாரித்தார். நான் உள்ளதைச் சொன்னேன். குழந்தைகள் உண்டா எனக் கேட்டார். அதற்கும் பதில் சொன்னேன். அதைக் கேட்கும் போது அவர் முகத்தில் அப்பிக் கிடந்த சோகத்தை என்னால் வர்ணிக்க முடியாது. கொஞ்சம் காலதாமதம் பண்ணி விட்டீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அரண்மனையிலேயே தங்க ஏற்பாடு பண்ணி இருக்கிறார். அதனால் சௌகரியக் குறைச்சல் எதுவும் இல்லை. அரண்மனையில் இருக்கும் வேறு யாரையும் என்னால் இதுவரை பார்க்க முடியவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் இன்னும் அமையவில்லை. பெரியவர் தவறிவிட்டார் என்று நினைக்கிறேன். படத்திற்கு மாலை போட்டிருந்தது.

ஊரில் பெரும்பாலும் தொலைத்தொடர்பு வசதிகள் இல்லை என்று நினைக்கிறேன். உங்கள் நண்பர் வீட்டில் இருந்தாலும் என்னால் உதவி கேட்க முடியாது. அடுத்து போஸ்ட் ஆஃபீஸில் தான் டெலிபோன் இருக்கிறதாம். வேலை செய்யும் பெண் சொன்னாள். அங்கும் சர்வதேச அழைப்புகள் சாத்தியமா என்று தெரியவில்லை. விசாரிக்க வேண்டும்

கடிதம் கிடைத்ததும் மேற்கண்ட விலாசத்திற்குப் பதில் போடுங்கள். எல்லோரையும் கேட்டதாகக் கூறுங்கள். மற்றவை நேரில். முடிக்கிறேன்.

அன்புடன் ஸ்டீஃபன்.

கடிதத்தை எழுதி முடித்த ஸ்டீஃபன் ரூமை விட்டு வெளியே வந்தான். காலை நேர ஏகாந்தம் மனதுக்கு இதமாக இருந்தது. ரூமை ஒட்டினாற் போல நீண்ட வராண்டா அமைக்கப் பட்டிருந்தது. அரண்மனையைச் சுற்றி பெரிதாகச் சுவர் எழுப்பி இருந்தார்கள். இருபது அடி உயரமும் மூன்று அடி அகலமுமாக இருந்தது அந்தச் சுவர். 

நேற்று முழுவதுமாக எடுத்த ஓய்வு உடம்பிற்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியைக் கொடுத்திருந்தது. மாடியில் இருந்த ஒரு அறையை இவனுக்குக் கொடுத்திருந்தார் விஜயேந்திரன். பக்கத்தில் பெரிதாக ஹால் போல இருந்த அறையில் லைப்ரரி இருந்தது.

அந்தப் பெண் கங்கா இரண்டு வேளையும் உணவை ரூமிற்கே கொண்டு வந்து கொடுத்தார். குறுக்கீடுகள் இல்லாத நிம்மதியான ஆழ்ந்த உறக்கம். 

ஸ்டீஃபன் நின்ற இடத்திலிருந்து கீழே பார்க்க ஒரு ஏக்கர் பரப்பளவில் நிலம் தெரிந்தது. முழுவதுமாக உயர்ந்து வளர்ந்த தென்னை மரங்கள் வரிசைகட்டி நின்றன. ஆங்காங்கே பெண்கள் சிலர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“சார்.” குரலில் திரும்பிப் பார்த்தான் ஸ்டீஃபன்.

“காஃபி.” கையில் காஃபியோடு நின்றிருந்தாள் அந்தப் பெண் கங்கா.

“தான்க் யூ. ஐயா எங்க இருக்காங்க?” காஃபியை வாங்கிக் கொண்டவன் கேட்டான்.

“ஐயா காலையிலேயே ஃபாக்டரிக்குப் போயிடுவாங்க. உங்களுக்கு ஏதாவது வேணும்னா கணக்கரைக் கேக்கச் சொன்னாங்க.” 

“ஓ… அவங்க எங்க இருக்காங்க?” 

“கீழே இருப்பாங்க.” சொல்லிவிட்டு நகர்ந்தாள் பெண். காஃபியை முடித்து விட்டு கீழே போனான் ஸ்டீஃபன்.

______________

இரவு உணவை முடித்து விட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் சுமித்ரா. வீட்டுக்கு முன்னால் இருந்த வேப்பமரத்தில் இருந்து சில்லென்று காற்று வீசியது. 

அவள் இந்த வீட்டிற்கு வந்த போது ஓரளவான உயரத்துடன் இருந்த மரம். இந்த ஐந்து வருட காலத்தில் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்தது.

சுமித்ரா இந்த வீட்டிற்கு வந்த பிறகுதான் சங்கரன் வீட்டை இன்னும் கொஞ்சம் விசாலப்படுத்திக் கட்டினார்.

மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் ‘வில்லிப்புத்தூர்’ தான் சங்கரனின் சொந்த ஊர். அத்தை தில்லைவடிவு. சுமித்ராவின் சொந்த அத்தை. அப்பாவோடு கூடப் பிறந்தவர்.

சுமித்ராவிற்குத் தன் அத்தையை ரொம்பவே பிடிக்கும். சங்கரன் மாமாவும் அருமையான மனிதர்தான். தன் அத்தையை அதிகம் பிடித்ததாலோ என்னவோ அவரைச் சார்ந்த அனைவரையும் சுமித்ராவிற்குப் பிடிக்கும்.‌ அதில் கரிகாலனும் அடக்கம்.  

சங்கரனின் பணி நிமித்தம் எப்போதும் அவருக்கு அலைச்சல் இருக்கும். வடிவும் கூடவே அலைவார். அதனால் கரிகாலனை சுமித்ரா வீட்டில் தான் விட்டு வைத்திருந்தார்கள்.

துவாரகாவில் இருந்த பள்ளிக் கூடங்களும் தரமான கல்வியை வழங்கியதால் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. தாய்மாமன் வீடு என்பதால் கரிகாலனுக்கும் எந்த வசதிக் குறைவும் ஏற்படவில்லை. 

சுமித்ராவிற்கு ஆறு வயது பெரியவன் கரிகாலன். பெரிய கண்களோடு குடுகுடுவென ஓடித் திரியும் அந்தக் குட்டிப் பெண்ணை கரிகாலனுக்கு அவ்வளவு பிடிக்கும்.

‘அத்தான்’ என்று அழைத்தாலும் அவர்களுக்குள் அண்ணன் தங்கை பாசம் தான் மேலோங்கி நின்றது. பள்ளிக்கூடப் படிப்பை கரிகாலன் முடிக்கும் போது ஓரளவான பெண் சுமித்ரா.

பார்ப்பதற்கு அப்போதே அத்தனை அழகாக இருப்பாள்.‌ அந்தக் கண்களைப் பார்த்து மயங்காத இளவட்டம் துவாரகாவில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

கரிகாலனின் மாமா பெண் என்பதால் பள்ளிக்கூடத்தில் வாலிப வட்டம் கொஞ்சம் அடக்கிக் தான் வாசிக்கும். காலேஜ் படிப்பையும் மாமா வீட்டில் இருந்து தான் தொடர்ந்தான் கரிகாலன்.

வயதுக்கு வந்த பிறகு அழகே உருவாகி இருந்த சுமித்ராவைப் பாதுகாப்பதே கரிகாலனின் தலையாய பணிகளில் ஒன்றாகிப் போனது.

சின்ன வயதிலிருந்தே நாட்டியத்தில் நல்ல ஆர்வம் சுமித்ராவிற்கு. குடும்பத்தினருக்கும் அதில் மகிழ்ச்சியே என்பதால் வாய்ப்பாட்டும் பரதமும் சிறு வயதிலிருந்தே கற்க ஆரம்பித்து விட்டாள்.

பள்ளிக்கூடக் கலை விழாக்கள், கோயில் திருவிழாக்கள் எல்லாவற்றிலும் சுமித்ராவின் நடனம் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகிக் கொண்டிருந்த காலமது. 

‘மாமா! எதுக்கு சுமித்ராக்கு இதெல்லாம்? சும்மாவே பார்க்க அத்தனை அழகா இருக்கா. இதுல பட்டும், பவுடருமா இவ வந்து நின்னா பசங்க வாயைப் பொளக்குறாங்க. எனக்குப் பிடிக்கலை மாமா. அவளைச் சீக்கிரமாவே கட்டிக் குடுத்திடனும்.’ 

இப்படித்தான் எப்போதும் தன் அம்மானிடம் புலம்புவான் கரிகாலன். மிகவும் ஆச்சாரமான குடும்பம் என்பதால் கரிகாலனின் மனது எப்போதும் இப்படித்தான் யோசிக்கும். பின்னாளில் அது அவனளவில் மாறிப் போனதுதான் விந்தை.

“என்னம்மா? அத்தை மூஞ்சைத் தூக்கிக்கிட்டு திரியுறாளா?” கேட்டபடியே சுமித்ராவின் பக்கத்தில் வந்து அமர்ந்தார் சங்கரன். அவரின் குரலில் சிந்தனை கலைந்தாள் சுமித்ரா.

“நேத்துல இருந்து ஒரு வார்த்தை எங்கிட்டப் பேசலை மாமா.”

“சரி விடு. அவளோட கோபத்திலயும் ஒரு நியாயம் இருக்குத் தானே?”

“என்ன மாமா நீங்களும் இப்படிச் சொல்லுறீங்க?”

“வேற என்னம்மா சொல்ல? அந்தப் பயலோட பேசுறது அவளுக்குப் பிடிக்கலைன்னா நீ எதுக்கும்மா பேசுறே? தவிர்க்கலாம் இல்லை?”

“மாமா! அவர் உங்க பையன் மாமா. எப்படி உங்களால இப்படிப் பேச முடியுது?”

“அதே பையன் தானேம்மா என் நெஞ்சுல நெருப்பை அள்ளிக் கொட்டிட்டுப் போனான். அதை நீ மறந்துட்டியாம்மா?”

“எதையும் நான் மறக்கலை மாமா. அத்தான் பண்ணினது தப்புன்னா அப்போ அத்தை பண்ணினதுக்குப் பெயர் என்ன மாமா? அத்தான் மனசுல இன்னொரு பொண்ணு இருக்கான்னு தெரிஞ்சும் தற்கொலை பண்ணிக்குவேன்னு மிரட்டி அத்தானைக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வெச்சது எந்த வகையில நியாயம் மாமா?” சுமித்ராவிற்கு மூச்சு வாங்கியது.‌ ஒரு சில நொடிகளில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள் மீண்டும் தொடர்ந்தாள்.

“அத்தான் ஆரம்பத்துல இருந்தே தெளிவாத்தான் இருந்தாங்க மாமா. அவங்க எங்கிட்ட எதையும் மறைக்கலை. எனக்கு நல்லது பண்ணணுங்கிறதுக்காக அவங்க ஆசையைக் குழி தோண்டிப் புதைக்கிறது எந்த வகையில நியாயம் மாமா?”

“அப்போ குடும்ப மானத்தை விட அவனோட ஆசைதான் அவனுக்குப் பெரிசாம்மா? அப்போ அப்பா அம்மா வார்த்தைக்கு எந்த மதிப்பும் இல்லையா?”

“இதுக்கு பதில் எங்கிட்ட இல்லை மாமா. இதை நீங்களோ இல்லை அத்தையோ அத்தானோட சட்டையைப் புடிச்சுக் கேக்கலாம். ஆனா என்னால முடியாது மாமா. ஒன்னா வளர்ந்தவளை இது காலம் வரை உடப்பொறப்பா நினைச்சவளை பொண்டாட்டியா என்னால பார்க்க முடியலைன்னு அவங்க சொல்லும் போது என்னால என்ன மாமா பண்ண முடியும்?”

“அதுக்காக? அவன் பண்ணினது சரின்னு சொல்லப் போறியா சுமித்ரா?”

“சரியா தவறான்னெல்லாம் எனக்குத் தீர்ப்புச் சொல்ல தெரியலை மாமா. எனக்குத் தெரிஞ்சதெல்லாம் ஒன்னே ஒன்னுதான். பிடிக்காத வாழ்க்கையில அத்தானைப் பிடிச்சு வைக்க என்னால முடியலை. இந்த வாழ்க்கை அவங்களுக்கு ஒட்டாது.”

“அப்போ எதுக்குடீ அவன் கட்டின தாலியை நீ இன்னும் கழுத்தில சுமந்துக்கிட்டு இருக்கே? தூக்கித் தூரப் போட வேண்டியது தானே?” பத்ரகாளி போல வந்து நின்றார் வடிவு.

அதுவரை மாமனும் மருமகளும் பேசிக் கொண்டிருந்ததை உள்ளிருந்த படியே கேட்டுக் கொண்டிருந்தவர் ஆவேசமாக வெளியே வந்தார். 

“அத்தை! புரிஞ்சு தான் பேசுறீங்களா நீங்க?”

“நான் எல்லாம் புரிஞ்சு தான் பேசுறேன். உன்னை வேணாம்னு சொல்லிட்டு அவன் எவளோ ஒருத்தியோட குடும்பம் நடத்திக் குழந்தையும் பெத்து வெச்சிருக்கான். நீ இன்னும் எதுக்காக அந்த ஒன்னுக்குமத்த தாலியைப் பிடிச்சிக்கிட்டுத் தொங்குற?”

“வடிவு! கொஞ்சம் அமைதியா இரு. இப்ப எதுக்கு இப்படி உணர்ச்சி வசப்படுறே?” மனைவியை லேசாக அதட்டினார் சங்கரன்.

“அத்தை! என் கழுத்துல இருக்கிறது உங்க மகனுக்கு வேணும்னா வெறும் மஞ்சக் கயிறா இருக்கலாம். ஆனா எனக்கு அப்படி இல்லை அத்தை.”

“அப்போ அவன் செவிட்டுல நாலு அறையை அறைஞ்சு அவனோட ஒழுங்கா நீ குடும்பம் நடத்தி இருக்கணும். அவன் சொன்ன உடனேயே அவனுக்கு செங்கம்பளம் விரிச்சு எதுக்கு அனுப்பி வெச்சே?”

“வேற என்ன அத்தை பண்ணச் சொல்லுறீங்க? மனசுல ஒரு பொண்ணை சுமந்துக்கிட்டு உன்னை என்னால என் மனைவியா பார்க்க முடியலைன்னு சொல்ற மனுஷனை என்ன பண்ணச் சொல்றீங்க?”

“அதான் முடியாதுன்னுட்டுப் போய்ட்டான் இல்லை? நீயும் தியாகச் செம்மல் மாதிரி வழியனுப்பி வெச்சுட்டே இல்லை? இனி உனக்கும் அவனுக்கும் ஒன்னுமில்லைன்னு ஆகிப்போச்சு தானே. தலையை முழுகிட்டு அந்தத் தாலியைக் கழட்டிரு.” தன் பிடியிலேயே நின்றார் வடிவு.

“அத்தை…‌ ஒரு பொண்ணோட கழுத்துல இருக்கிற தாலி இறங்கினா என்னைப் பொறுத்த வரைக்கும் அதுக்கு அர்த்தமே வேறே.”

“ஆமா! நான் அந்த அர்த்தத்துல தான் சொல்லுறேன். கழட்டிரு அந்தத் தாலியை. நான் பெத்து வளர்த்து உனக்கு ஆசை ஆசையாக் கட்டிக் குடுத்தது செத்துப் போச்சு.”

“அத்தை!” தன் கழுத்திலிருந்த தாலியை இறுக்கிப் பிடித்த சுமித்ரா அலறினாள். சங்கரன் முகத்தில் வேதனை பொங்க கண்களை அழுந்த மூடிக்கொண்டார். ஆனாலும் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை.

தன் மனைவி பேசிய வார்த்தைகள் தவறு என்று புரிந்தாலும் அவளின் ஆத்திரத்தில் இருந்த நியாயம் அவரின் வாயை அடைத்திருந்தது. இவை அத்தனையும் சுமித்ராவின் மேலுள்ள பாசம் தான் என்று சங்கரனுக்குப் புரியாதா என்ன?

மருமகளை முறைத்தபடியே உள்ளே போய்விட்டார் வடிவு. சுமித்ரா எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். அவள் ஆசுவாசப்படுத்திக் கொள்ள சற்று நேரம் கொடுத்த சங்கரன் மீண்டும் தொடர்ந்தார்.

“சுமித்ரா!” மாமாவின் அழைப்பில் திரும்பிப் பார்த்தாள் பெண். எதுவும் பேசவில்லை.

“உன்னோட வாழ்க்கை இப்படிக் கேள்விக்குறியா இருக்கிற வரைக்கும் உன் அத்தை இப்படித்தாம்மா பேசுவா.” சங்கரனின் பேச்சில் ஆச்சரியமாகக் கண்கள் விரித்தாள் சுமித்ரா.

“அதுக்கு?” கேள்வியையும் தாண்டி அங்கு ஆச்சரியமே மிதமிஞ்சி நின்றது. சங்கரன் தன் தாடையைத் தடவிக் கொண்டார்.

“இன்னும் எத்தனை நாளைக்கு நீ இப்படியே இருக்கப் போறேம்மா? உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணாமா?”

“ஏம் மாமா? இப்போ என் வாழ்க்கைக்கு என்ன குறைஞ்சு போச்சு? நீங்க இருக்கீங்க. அத்தை இருக்காங்க. என்னோட நாட்டியம் இருக்கு. இதை விட என்ன வேணும்?”

“ஒரு பொண்ணுக்கு இது மட்டும் போதாது சுமித்ரா. காசு, பணம், அந்தஸ்து, அத்தை, மாமா இதெல்லாம் ஒரு பொண்ணை முழுமைப் படுத்தாது சுமித்ரா.”

“நீங்க சொல்லப்போற அடுத்தடுத்த விஷயங்கள் என் வாழ்க்கையில ஒரு தரம் நடந்திருச்சு மாமா.”

“அதையெல்லாம் செல்லாக் காசாக்கிட்டு போயிட்டானேம்மா நான் பெத்த பாவி.” சங்கரனின் குரல் தழுதழுத்தது.

“மாமா! நான் சொல்லுறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. அத்தான் பண்ணினது தப்புத் தான். இல்லேங்கலை. ஆனா அதுக்காக நீங்களும் அத்தையும் இப்படி மாறி மாறிச் சபிக்கிறது நல்லா இல்லை மாமா. அத்தான் இப்போ தனி மனுஷன் கிடையாது. அவரை நம்பி ஒரு பொண்ணு இருக்கா. அவருக்குன்னு ஒரு குழந்தை இருக்கு. கொஞ்சம் பார்த்துப் பேசுங்க மாமா. மனம் நொந்து நீங்க பேசுறது பலிச்சிதுன்னா யாராலேயும் தாங்க முடியாது மாமா.” 

சுமித்ராவின் பேச்சில் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார் சங்கரன். 

“இதுக்கெல்லாம் முடிவு உன் கையில தான் இருக்கு சுமித்ரா.”

“மாமா, நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியுது. என்னோட கழுத்துல ஒரு தரம் தாலி ஏறிடுச்சு மாமா. என் வாழ்நாள் முழுதும் எனக்கு அது மட்டும் தான். வேற பேச்சுக்கே இடமில்லை. உங்க மனசுலயோ இல்லை அத்தை மனசுலயோ வேற நினைப்பு ஏதாவது இருந்தா தயவு செஞ்சு விட்டிருங்க. அது நடக்காது.”

உறுதியாகச் சொன்னவள் சட்டென்று உள்ளே எழுந்து சென்றுவிட்டாள். போகும் பெண்ணையே இமைக்காமல் பார்த்திருந்தார் சங்கரன். முகத்தில் கவலை மண்டிக்கிடந்தது.

_______________

விஜயேந்திரன் அமைதியாகக் கட்டிலில் சாய்ந்திருந்தான்.‌ மனம் மட்டும் கடந்த இரண்டு நாட்களாக அமைதியற்றுத் தவித்துக் கொண்டிருந்தது. 

அந்தப் பையன் வந்த நாளிலிருந்து ஏதோ ஒரு வெறுமை அவனைச் சூழ்ந்து கொண்டது. 

மனதிலிருந்து அவன் தூக்கிப்போட்ட, இன்று வரை அவன் மறந்து போய்விட்டதாக நினைத்திருந்த நினைவுகளெல்லாம் எழுந்து நின்று பேயாட்டம் போட்டன.

கண்களை இறுக மூடிக் கொண்டான். மூடிய கண்களுக்குள் இரு காந்த விழிகள் கண் சிமிட்டின. மையிட்ட அந்த விழிகள் கோவில் தூண் மறைவில் அவனை எட்டிப் பார்த்த கணம் இப்போதும் நினைவில் நிழலாடியது.

கட்டுக்கடங்காத மனம் வலிக்க வலிக்க அந்த இன்பமான நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தது. 

துவாரகாவில் தான் விஜயேந்திரனின் பள்ளிப் படிப்பு. அங்கு கிடைத்த நட்பு தான் கரிகாலன். வாலிப வயது. நண்பர்கள் கூடினால் அந்த இடமே அமர்க்களப்படும். 

விஜயேந்திரனின் அப்பா ‘வானவன் சேதுபதி’ சிற்றரசர்கள் வம்சம். மிகவும் அந்தஸ்துப் பார்ப்பவர். விஜயேந்திரன் அப்படி இல்லை என்றாலும் அப்பாவிற்காக ஒரு சில விடயங்களைக் கடைப்பிடிப்பான்.

விஜயேந்திரனை யாரும் அந்தச் சுற்று வட்டாரத்தில் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள். அரண்மனையில் வசிக்கும், பள்ளிக்கூடத்திற்கு ‘அம்பாஸிடர்’ இல் வரும் அந்த அரும்பு மீசைப் பையனை எல்லோருக்கும் ‘ராஜா’ என்று அழைத்துத் தான் பழக்கம்.

விஜயேந்திரனின் நண்பர்களும் நல்ல பின்புலம் உள்ள குடும்பத்துப் பையன்கள் தான். என்ன… ராஜா அளவிற்கா என்று கேட்டால் இல்லை என்பது தான் பதிலாக இருக்கும்.

நண்பர்களுக்குள் நல்ல புரிதலுடன் கூடிய ஒரு நட்பு இருந்தது. கரிகாலனுடன் ஒட்டுப் புல் போல வரும் அந்தச் சின்னப் பெண்ணை ஆரம்பத்தில் விஜயேந்திரன் பெரிதாகக் கவனத்தில் கொள்ளவில்லை. 

ஆனால் காலம் போகப் போக மொழுமொழுக் கன்னங்கள் வடிந்து பருவத்தில் அடியெடுத்து வைத்த அந்த மங்கையை அத்தனை சீக்கிரத்தில் புறக்கணிக்க விஜயேந்திரனால் இயலவில்லை.

நண்பனின் உறவுக்காரப் பெண் என்பதால் நண்பர்கள் எல்லோரும் கண்ணியமாகவே நடந்து கொள்வார்கள். ஆனால் ராஜாவின் பார்வை அவளை அடிக்கடி தொட்டு மீளும். 

அன்று கோவிலில் ஏதோ விசேஷம். ஏற்பாடுகள் பலமாக இருந்தது. வயலின் கச்சேரியும் ஏற்பாடு பண்ணப் பட்டிருந்ததால் கூட்டம் அலை மோதியது. 

விஜயேந்திரனுக்கு இன்றும் நன்றாக ஞாபகம் இருந்தது. அன்று அரக்கு நிறத்தில் புடவை கட்டியிருந்தாள் சுமித்ரா. பரதநாட்டிய உடையில் அவளை அன்று தான் முதன்முதலாகப் பார்க்கிறான்.

கொள்ளை அழகாக இருந்தாள் பெண். மஞ்சள் குளித்த முகத்தில் லேசான ஒப்பனைகளோடு அலங்கார பூஷிதையாக அவளைப் பார்த்த போது தொலைந்து போனான் விஜயேந்திரன்.

சொல்லப் போனால் சுமித்ராவோடு ஒரு வார்த்தை கூட அவன் இன்றுவரை பேசியதில்லை. ஆனாலும் அவனுக்குத் தெரியும். அவள் மொழி சொல்லாத கதைகளை அந்த விழி சொல்ல அவன் கேட்டிருக்கிறான்.

தூணில் சாய்ந்த படி நின்று கொண்டு நாட்டியத்தை அவன் ரசித்திருந்தான். ‘அலைபாயுதே கண்ணா…’ என்று அவள் அபிநயம் பிடித்தபோது அலைபாய்ந்தது யார்? 

ஏதேதோ எண்ணங்கள் அவனைப் புரட்டிப் போட தூக்கம் தொலைந்து போனது. வாழ்க்கை தனக்கு வைத்த சோதனைகளை நினைத்து வருந்தியவன் எப்போது கண்ணயர்ந்தான் என்று அவனுக்கே தெரியாது.

விதி ஒரு மூலையில் இருந்த படி விஜயேந்திரனைப் பார்த்துச் சிரித்தது.

மயில் பீலி சூடி நிற்கும் மன்னவனே…

மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே…

 

error: Content is protected !!