mp4A

mp4A

மது பிரியன் 4A

 

விஜயரூபன், தனது கல்வியில் சிறந்து விளங்கியவனாக இருந்தாலும், இதர விசயங்களில் அமைதியாக இருக்கும் பண்பினாளன்.  ஊருக்குள் இருந்தவரை மட்டுமல்லாமல், படித்து, வேலைக்குச் சென்ற பிறகும், ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான குணத்தை பெற்றிருந்தான்.

ஆரம்பத்திலேயே அரை லகரத்திற்கு நிகராய் ஊதியம் பெற்றாலும், அலட்டல் இல்லாதவன்.  மனிதர்களை அவர்களின் வயதிற்காகவும், நடத்தைக்காகவும் மதித்து மரியாதையுடன் நடத்தக் கூடியவன்.

சிறுவர்களைக்கூட வாடா, போடா எனப் பேசாமல், ‘வாங்க தம்பி’ என மரியாதையுடன் அழைத்து, அன்பாகப் பேசக் கூடியவன்.

நடுத்தர வர்க்கத்தில் பிறந்தவனானாலும், அவனுடைய அவசியத் தேவைகளுக்கு பெருங்கஷ்டப்படாதவன்.  பெற்றோருக்கு ஒற்றை ஆண்பிள்ளையாகப் பிறந்ததாலும், நீண்ட இடைவெளிக்குப்பின் பிறந்தவனாதலாலும், பாரிஜாதத்தைவிட நன்றாகவே குறைகள் தெரியாமல் அவனை வளர்த்திருந்தனர்.

பாரிஜாதமும், நீண்ட காலத்திற்குப்பின் பிறந்த தனது தம்பியை பாசத்தோடு நன்றாகவே பார்த்து வளர்த்திருந்தாள்.  பெற்றோர் விவசாயப் பணிகளுக்கு இடையே இருக்கும் காலங்களில், தம்பியை கண்ணும் கருத்துமாய் கவனித்துக் வளர்த்திருந்தாள் பாரி.

தாயைவிட, அதிகம் தமக்கையின் ஆதரவிலும், அன்பிலும் விஜய் வளர்ந்திருந்தான் என்று கூறினால் அது மிகையன்று.

இளவயதிலுமே ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி, படிப்பைத் தவிர வேறு எதையும் சிந்திக்காதவன். சில இளம்பருவ வயது சிறார்களைப்போல, பெண்களின் பின்னே சுற்றுவது, சீட்டி அடிப்பது, பெண்ணை உடல்கூசும் வண்ணம் பார்ப்பது, வர்ணிப்பது, கனவில் மிதப்பது என்றில்லாமல், பெண்களைக் கண்டால் மரியாதை தந்து ஒதுங்கிச் செல்லக்கூடிய பண்பினை சிறுவயது முதலேப் பெற்றிருந்தான் விஜய்.

ஊரில் யார் என்ன வேலையைக் கூறி, செய்து தரமுடியுமா என்று கேட்டாலும், மறுக்காமல் செய்யக்கூடிய பரந்த மனப்பான்மை உடையவன்.

ஒழுக்கமும், உயர்பண்புமாய் வளர்ந்தவன். படிப்பிலும் மிகுந்த அக்கறையோடு இருக்க, நல்ல மதிப்பெண்களைப் பெற்று, பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்து, பல்கலைக் கழக தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தவன். அடுத்து உதவிப் பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்ததோடு, அத்தேர்விலும் வெற்றிபெற்று, எந்த லஞ்ச லாவண்யத்திற்கும் இடம் கொடாது, தனது மதிப்பெண்களை மட்டுமே தகுதியாகக் கொண்டு அரசுப்பணிக்கு வந்திருந்தான்.

மிகவும் இளவயதிலேயே நல்ல மதிப்பான பணியில் அமர்ந்தவுடன், வழியக் கேட்டு அவனுக்கு பெண் தர முன்வந்த சம்பந்தங்கள் பல.  ஆரம்பத்தில் பெற்றோர் திருமணம் பற்றிய பேச்சை எடுத்ததும் விஜய், “இப்பதான்பா வேலைக்குப் போக ஆரம்பிச்சிருக்கேன்.  அதுக்குள்ள என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்.  இன்னும் ரெண்டு வருசம் போகட்டுமே” என்றதும், விஜயின் கூற்றில் இருந்த விசயம் அவர்களுக்கும் சரியெனப்படவே, பெரியவர்கள் ஒத்திபோட்டனர்.

ஆனால் வந்த சம்பந்தங்களை இப்போது திருமணம் வேணாம் என ஒத்திவைக்கும் எண்ணத்தில் மறுத்தாலும், “இரண்டு வருசஞ்செண்டு கல்யாணத்தை வச்சிக்குவோம்.  இப்போ பேசி முடிவு பண்ணிக்கலாம்” என தங்களின் பெண்ணை விஜயிக்கு கொடுக்க போட்டி போட்டுக்கொண்டு முன்வந்த சம்பந்தங்கள் பல.

அப்படி வந்த சம்பந்தங்களில், எதை விட, எதை சரியென முடிவு செய்ய, என உரிய முடிவினை எடுக்க முடியாமல் அவனின் பெற்றோரும் திண்டாடிப் போயினர்.

வருடம் இரண்டு கடக்கவே, அந்நேரத்தில் நல்ல அந்தஸ்தில் இருந்த சம்பந்தம் ஒன்று வந்தது. உலகநாதன் அந்த சுற்றுவட்டாரத்திலேயே பரம்பரை பணக்காரர்.  ஐந்து தலைமுறையாக தங்களின் நிலையை அடுத்தடுத்த முன்னேற்றப்பாதையில் கொண்டு வந்த கோடீஸ்வர குடும்பமது.

உலகநாதன் குடும்பத்தினை மறுக்க முடியாமல் என்பதைவிட தட்டமுடியாமல், விஜயின் இருபத்து ஐந்து வயதிலேயே திருமணத்தை பெரியவர்கள் கூடி நடத்தி வைக்கும் முடிவுக்கு வந்திருந்தனர்.

உலகநாதன், “பொண்ணுக்கு இன்னும் மூனு மாசத்துக்குள்ள, எங்க குடும்ப ஜோசியரு கல்யாணம் பண்ணச் சொல்றாரு.  எங்களுக்கு உங்க பையனை ரொம்பப் புடிச்சிருக்கு.  சொந்தத்திலயோ, முறையிலயோ வேற பொண்ணு எதுவும் அவருக்கு இல்லைனு கேள்விப்பட்டுத்தான், எம்பொண்ணை உங்க பையனுக்கு கட்டித்தர முன்வந்திருக்கோம்.  நீங்களும் ஒரு எட்டு, நம்பகமான எடத்துல ஜோசியம் பாத்திட்டு, ஜாதகம் ஒத்து வந்தா, இந்தக் கல்யாணத்தை வச்சிக்கலாம்னு பிரியப்படறோம்” என தாமாகவே முன்வந்து பெரியமனிதரான உலகநாதன் பேசியதைக் கேட்டு ஆரம்பத்தில் திகைத்துப் போனார்கள் பூரணசந்திரனும், இசக்கியும்.

அவரின் மகள் ஜாதகத்தை வாங்கவே ஆரம்பத்தில் யோசித்தனர்.  அந்தஸ்து வித்தியாசம், மடுவிற்கும், மலைக்குமான வித்தியாசமாய் இருப்பதை எண்ணி ஆரம்பத்தில் தயங்கினர்.

ஊரில் பெரியவர்களிடம் கலந்து கொண்டு விவாதித்தனர்.  ஊரில் உள்ளவர்கள், அனைத்திற்கும் தகுதியானவன் விஜய் என்பதால் இதுபோன்ற நல்ல சம்பந்தம் கைகூடியதாகக் கூறி, தம்பதியரைத் தேற்றியதோடு, “இந்தச் சம்பந்தம் கைகூடி வந்தா, உங்க வீட்டுக்கு மட்டுமில்லாம, நம்ம ஊருக்கே பெருமைதான்” என சிலாகிக்க, அத்தோடு மேலும் சில நல்ல வார்த்கைள் கூறி, அவர்களது தயக்கத்தை நீக்கியிருந்தனர்.

அதன்பின் பூரணசந்திரனும், இசக்கியும் ஒருவழியாக மனதைத் தேற்றியதோடு, மகனின் நற்செயலுக்கும், ஒழுக்கத்திற்கும், அரசுப்பணி பெற்றதாலும் இந்த நல்ல சம்பந்தம் அமைந்ததாக எண்ணிப் பெருமை கொண்டனர்.

அதுவரை விஜய், தனக்கு வரவிருக்கும் மனைவியைப் பற்றியோ, அல்லது குடும்ப வாழ்க்கையைப் பற்றியோ எந்த எதிர்பார்ப்பும் இன்றி, அவனுண்டு, அவனது பணியுண்டு என இருந்தான்.

விஜயைத் தவிர, அவனது பெற்றோர், தமக்கை மட்டுமன்றி, அவனது ஊரில் உள்ளவர்களுக்குமே அவனைத் தேடி வந்து பெண் தர முன்வந்த, பரம்பரை பணக்காரரான உலகநாதனை எண்ணி மெச்சுதலாகவே உணர்ந்தனர்.

சுற்று வட்டாரத்தில், பதினெட்டுப்பட்டி கிராமங்களுக்குள் அந்தஸ்தில் முதலிடத்தில் இருப்பவர் உலகநாதன்.  அவருக்கு மூன்று மகன்களும், ஒரே ஒரு மகளும் மட்டுமே.

உலகநாதன் குடும்பத்தைப் பொறுத்தவரை, அந்தஸ்து மட்டுமே உயரிய விஷயம் என்கிற ரீதியில் வழிவழியாக, பணமும், பொருளும், நிலமும் உடைய குடும்பத்தில் மட்டுமே சம்பந்தம் வைத்துக் கொள்வார்கள்.

அப்படி இருந்தவர்கள், விஜயை கருத்தில் கொண்டு, தனது ஒரே மகளை, தானாகவே மணமுடித்துத் தர முன்வந்த செயலைக் கண்டு, அவனது ஊரில் உள்ள அனைவருக்குமே விஜயை எண்ணி பெருமையாக உணர்ந்த தருணமது.

விஜய் மட்டுமே, இயல்பாய் எப்போதும் இருப்பது போன்ற சாதாரண மனநிலையில் இருந்தான். 

மற்றவர்கள், “நம்ம விஜயிக்கு, எப்டிப்பட்ட சம்பந்தம்னு நினைக்கிறே.  பொண்ணு வீட்டுக்காரவங்க வசதிக்கு, நம்ம வாசல் வழியா நடந்து போறதையே கவுரவக் குறைச்சலா நினைக்கறவங்க, இன்னைக்கு நம்ம வீட்டுல பொண்ணு குடுக்க முன்வந்திருக்காங்கன்னா என்ன அர்த்தம்?  எல்லாம் நம்ம பயலோட குணமும், அவனோட அரசாங்க வேலையும் செய்யுற மாயந்தான் இது. இப்டி கெட்ட பழக்கம் இல்லாத, மரியாதை தெரிஞ்ச பயலை, அவங்க வலை வீசித் தேடிப் பாத்தும் கிடைக்காததாலதான், தேடி வந்திருக்கு இப்டியொரு சம்பந்தம். நம்ம ஆளுகளை அவங்களுக்கு சரிசமமா நிக்க வச்சே பேசாதவங்க, அப்படி வசதியில குறைஞ்சிருக்கிற நம்ம மாதிரி சாமான்ய குடும்பத்துல, இன்னைக்கு சம்பந்தம் பண்ற அளவுக்கு இறங்கி வந்திருக்காங்கன்னா, எல்லாம் நம்ம விஜய்யோட குணத்தையும், அவனோட புத்திசாலித்தனத்தையும் பாத்துதான்” என பெருமையாகப் பேசிக் கொண்டனர்.

அத்தோடு, பெண் பார்க்க, ஊரே லாரியில் சென்று இறங்கியிருந்தது.

உலகநாதனும் எந்தக் குறையுமின்றி, பெண் பார்க்கும் வைபவத்தை சிறப்பாகச் செய்திருந்தார்.

வந்த அனைவரையும் மரியாதையோடு வரவேற்று, உபசரித்து, அன்றைய தினம் முழுவதும் நடந்த செயல்களைப் பற்றி, அடுத்து வந்த ஒரு மாதமும் சிலாகித்துப் பேசும்படியாகச் சிறப்பாக திட்டமிட்டுச் செம்மையாகச் செய்திருந்தார்.

அஞ்சனாவும் அழகில் அப்சரஸ்ஸைத் தோற்கடிக்கும்படியாய் பளிங்குபோல பிரகாசமாய் இருந்தாள்.

ஆண்களுக்குத் தேவையான கம்பீரம் உடைய விஜயும், அழகியான அஞ்சனாவும் இணைந்தால், அவர்களின் திருமண வாழ்வு வசந்தமானதாக இருக்கும் என்ற பேச்சுகளுடன், திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததோடு, திருமண நாளை நிச்சயித்துவிட்டு, அவனது கிராமத்து மக்கள் நிறைவாய்த் திரும்பியிருந்தனர்.

விஜயை பெற்றவர்களுமே மிகவும் சந்தோசமாய் உணர்ந்த தருணங்கள் அது. “ஏன் இசக்கி, அவுக வசதிக்கு நல்லா சீரு, செனத்தினு குறையில்லாமச் செய்வாக போலத் தெரியுது.  நம்ம பய காரைக்குடியில இப்ப வாடகைக்குத்தான வீடு புடிச்சு இருக்கான்.  அதனால எனக்கு ஒரு யோசனைடீ” என மனைவியிடம் தனது எண்ணத்தைப் பகிர்ந்தார் விஜயின் தந்தை பூரணசந்திரன்.

“சொல்லுங்க.  என்ன செய்யணும்னு”

“ரெண்டு வருசமா அவனோட சம்பளம் பணத்தை எங்கிட்ட தந்தான்ல.  அதை அப்டியே பேங்குலதான் போட்டிருக்கேன்”

“அதுக்கும், இப்ப நீங்க சொல்ல வரதுக்கும் என்னங்க சம்பந்தம்”

“இருக்கு. காரைக்குடியிலதான நம்ம பயலும், அந்தப் புள்ளையும் இருக்கப் போறாக.  அங்கே இப்ப இடம் வாங்கி, சொந்த வீடு கட்டறதுலாம் நடைமுறைப்படுத்த நாளாகும்.  நெருக்குவட்டுல(திருமணத் தேதிக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில்) கல்யாணம் வரதால, அந்தக் காசோட, நம்ம வயல வித்து, அவுக இருக்க அங்கனையே ஒரு வீடு வாங்கிருவோமா?”

“நல்லா யோசிச்சு செய்யுங்க.  நம்ம காடு, கரையெல்லாம் இங்ஙனதான் கிடக்கு.  அவன் இன்னும் அங்கேயேதான் வேலை பாக்கணுமா?  இல்ல இங்கிட்டு மாத்தல் வாங்கிட்டு வரமுடியுமானு பாருங்க”

“அப்டிச் சொல்ல வரீயாக்கும்” என பூரணசந்திரன் முகம் பெயருக்கு எதிராக மாறியிருந்தது. 

கணவனின் தொய்ந்த முகத்தைக் கண்டவர், “வரமுடியாதுங்கற சூழ்நிலையோ, இல்ல அவன் இங்க வந்து இருக்க பிரியப்படலைனா, நீங்க சொல்ற மாதிரியே பண்ணுங்க” இசக்கி தனது சம்மதத்தை கூறியிருந்தார்.

அவ்வாறு பெற்றோரால் அவனுக்காக வாங்கப்பட்ட அதேவீட்டில்தான், விஜய் தற்போது மதுராவைத் திருமணம் செய்து அழைத்து வந்து குடும்பம் சகிதமாய் இருக்கிறான்.

……………………………………………………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!