mp4B

mp4B

மது பிரியன் 4B

 

மதுராவிற்கு வீட்டிலேயே நேரம் சரியாகப் போனது.  வாரயிறுதியில் கணவனோடு கூடுதல் நேரம் செலவளிக்க எண்ணி ஆவலோடு காத்திருந்தவளுக்கு, திருமணமாகி வந்து நான்கு வாரங்கள் சென்றும் ஏமாற்றமே மிஞ்சியது.

விஜயிக்கு தனது கடந்த கால வாழ்வின் எச்சங்கள், இன்னும் ஆழ்மனதினை ஆட்சிசெய்து, அவனை மேலும் செயல்படவிடாமல் தடுத்தது.

பெண்களை விவரம் அறிந்த நாளாய், மதிப்பாய் நடத்தி, இடைவெளியோடு நின்று மரியாதை கலந்த பார்வையோடு பேசி வந்திருந்தான்.

ஆணாய் ஒரு பெண்ணுக்கு என்பதைவிட, தன் மனைவிக்கு சிறந்த கணவனாய், அவளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்கிற முனைப்போடு வளர்க்கப்பட்டிருந்தான். அப்படி வளர்ந்தவனுக்குள்,  கடமையும், உரிமையும் இருந்தும், ஏளனமாக தன்னை எள்ளலாக நிராகரித்த வலியும் வேதனையும், அவமானங்களை அள்ளிக் கொட்டி, தன்னை அசிங்கப்படுத்திய, பழைய நிகழ்வுகளையே மறந்து போனதாக சமீபகாலமாய் நினைத்திருந்தான்.

ஆனால் அது அழியாமல், எச்சமாய், மிச்சம் மீதி இன்னும் மனதிற்குள் இருந்ததை உணரும் நிலைக்கு, மதுராவுடனான திருமணத்திற்குப் பிறகு தள்ளப்பட்டிருந்தான். 

மதுராவைத் திருமணம் செய்யும் முன்புவரை, தான் முன்புபோல சாதாரண நிலைக்குத் திரும்பிவிட்டதாகவே நினைத்திருந்தான்.  ஆனால் அது அப்படியல்ல என்பதை திருமணத்தன்று மாலையிலேயே உணரும் நிலை விஜயிக்கு வந்திருந்தது.

மனித மனம் ஏற்கனவே நடந்த குறிப்பிட்ட நிகழ்வோடு, தற்போது நடக்கும் அதேபோன்ற நிகழ்வை ஒப்பிட்டுப் பார்த்து, இனிமையையோ, அமைதியையோ, துன்பத்தையோ, கவலையையோ அடைவது இயல்பான செயல்தானே.

மதுராவிற்கும், தனக்குமான திருமணத்தன்று, விஜயும் அதேபோன்றதொரு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தான்.

மீள முயன்றவனுக்குள் தோல்வியே மிஞ்சியது.  ஆகையால் தனது தோல்வியை வெளிக்காட்டாமல் இருக்கவே, அன்றே காரைக்குடிக்கு கிளம்புவதாக தன் வீட்டாரிடம் கூறிக்கொண்டு கிளம்ப எண்ணினான்.

ஆனால் அவர்களின் பிடிவாதம் வெல்ல, அங்கு சூழ்நிலைக் கைதியாய் கையறு நிலையில் மாட்டிக் கொண்டு சமாளித்தான்.

திருமணம் முடிந்து வந்தபின், மதுராவைப் படிக்க எடுத்துக் கொண்ட காலமாகவே விஜயிக்கு ஒவ்வொரு நாளும் சென்றிருந்தது.  அவனைப் பொறுத்தவரையில் கடந்து போன நாள்கள், அவன் மிகவும் ரசித்து, விரும்பி, உணர்வுகளோடு கலந்த காலமாகவே சென்றிருந்தது.

அத்தனை நினைவுகள் அவனுக்குள் மதுராவைக் கொண்டு பொக்கிசமாய் பாதுகாப்பாய், அவனுக்குள் வீற்றிருந்தது. மதுராவை அவனது உள்ளம் ஏற்றுக்கொண்டதை உணர்வு பூர்வமாகவே உணரத் துவங்கியிருந்தான். பணிகளுக்கான காலம் தவிர்த்து, இதர நேரங்களில் அவளின் நினைவுகள், அவனை முழுமையாக ஆட்கொள்ள, முன்பைக் காட்டிலும், தம்பதியருக்கிடையே ஒதுக்கம் குறைந்திருந்ததாகவே உணரத் துவங்கியிருந்தான் விஜய்.

ஆனால் மதுராவிற்கு அப்டித் தோன்றுமளவிற்கு விஜயைக் கொண்டு எந்த மாற்றமும் அவளின் திருமணத்திற்குப் பிறகான நாள்களில் நடக்கவில்லை.

அப்போதுதான் பிரேமா பேசியதும், அதைச் சாக்கிட்டு கணவனிடம் பேசினாள் மதுரா.

அவனோ, “எதாவது கண்டினியஸ் கவர்மெண்ட் ஹாலிடேஸ் வந்தாப் பாக்கலாம் மதுரா” என ஒரே வார்த்தையில் முற்றுப்புள்ளி வைத்திருந்தான்.

மதுராவும் காலண்டரை ஆர்வமாய் எடுத்துக் கொண்டு வந்து கணவனிடம் தர, அதை வாங்காமலேயே வரிசையாக இன்னும் என்னென்ன விடுமுறைகள், எப்போது வருகிறது என்பதையும், தொடர்ச்சியான விடுமுறைகள் எப்போது வரும் என்பதையும் பாராமலேயே ஒப்பித்தவனைக் கண்டு திகைத்து நின்றுவிட்டாள்.

அவன் கூறி முடித்ததும், ‘எல்லாம் தெரிஞ்சிட்டே ஒன்னுந் தெரியாத மாதிரி இவரு மாதிரியெல்லாம் நமக்கு நடிக்க வரவே வராதுப்பா.  சிவாஜியே தோத்துருவாரு போலயே இவருகிட்ட’ என மனத்தோடு வைத்துக் கொண்டு நகர்ந்துவிட்டாள்.

அதன்பின், பிரேமா கேட்டபோது கணவன் கூறியதைக் கூறி, பெருமூச்செரிந்தாள் மதுரா.

பாரிஜாதம் அவ்வப்போது பேசுவார்.  ஆனால் அதிகம் தம்பதியரைப் பற்றிய செய்தியை தன் மகன் மூலமாகவே தெரிந்து கொள்வார்.  சில நேரங்களில் பஞ்சவர்ணம் வாயிலாக கேட்டறிந்து கொள்வார். அதிலெல்லாம் எந்தக் குறையும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. 

வந்த நாள்முதல், மதுராவின் அத்தை சௌந்திரமோ, அவரின் மக்களோ மதுராவிற்கு அழைத்துப் பேசவே இல்லை.  மதுராவிற்கும் வருத்தமாகத்தான் இருந்தது.  ‘சனியன் தொலைஞ்சதுனு கல்யாணம் முடிஞ்சதும் என்னைத் தலைமுழுகிட்டாங்கபோல’ என தனக்குள் வைத்து மருகினாள்.

மதுரா அழைத்தும் அழைப்பை ஏற்கவே இல்லை.  தவறிய அழைப்புகளைப் பார்த்து, மீண்டும் யாரும் அழைக்கவும் இல்லை. தனது மனக்கலக்கத்தை யாரிடம் கூறி, அதிலிருந்து மீளுவது என்றே தெரியாமல் தவித்தாள் மதுரா.

இசக்கியம்மாள் எங்கும் வெளியில் செல்வதில்லை. இதுவரை மகனைப் பார்க்க விரும்பினால் ஊருக்கு வரச் சொல்லி பார்த்துக் கொள்வார். அவரும் “ஒரு எட்டு வந்துட்டுப் போங்க புருசனும் பொண்டாட்டியும்” என

“இந்த வாரம் சனி, ஞாயிறுல வரேன்” என்று கூறியே மூன்று வாரத்தைக் கடத்தியிருந்தான் விஜய்.

திருமணம் முடிந்து ஒரு மாதம் நெருங்குவதைக் கண்டு, விஜயும் ஊர்ப்பக்கம் வராமல் இருக்கவே, பாரி தானாகவே கிளம்பி காரைக்குடி வந்து ரெண்டு நாள்கள் தங்கும் உத்தேசத்தோடு வந்திருந்தார்.

வந்த அன்றே அங்குள்ள குறைகள் அனைத்தும் பட்டவர்த்தனமாய் தெரியத் துவங்கியிருந்தது.  மதுராவிடம் அரசல்புரசலாய் சில வினாக்களைத் தொடுக்க, தர்மசங்கடமாய் அவளின் பதில்கள் அவரையும் சங்கடப்படுத்தியிருந்தது.

வேலை வேலை என்று விஜய், காலையில் சென்றால், இரவில் திரும்புவதையும், ஒரு நாள் வராமல் சிவகங்கையிலேயே தங்கியதையும் நேரில் கண்டு அத்தனை எரிச்சல் வந்திருந்தது. அங்கு இருந்து பேசினால், அது நன்றாக இருக்காது என எண்ணியவர் உடனே ஊருக்குக் கிளம்பும் உத்தேசத்திற்கு வந்திருந்தார்.

‘எப்பப் பாத்தாலும் இந்தப் பய வேலையையே கட்டிக்கிட்டு இருந்தா, இவனுக்கு புள்ளை எப்டிப் பொறக்கும்’ என அவர் தலையிலேயே அடித்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பியிருந்தார்.

அதற்குமேல் பொறுக்காதவர், ஊருக்குச் சென்றதுமே, தம்பிக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தார்.

“பொண்டாட்டிய நல்லாத் தாங்குறபோல” என எள்ளலாய் கேட்டார்.

“என்னக்கா சொல்ற?” புரியாமல் விழித்தான் மறுமுனையில் இருந்த விஜய்.

“பூவாது உம்பொண்டாட்டிக்கு வாங்கிக் குடுக்கிறியா! அதுவும் இல்லையா?” என நேரடியாகவே கேட்க

“அவகிட்டதான் செலவுக்கு காசு குடுத்திருக்கேனேக்கா.  வேணுனா வாங்கி வச்சிக்குவா! ஏங்கா என்னாச்சு” விஜயின் பதிலில் சட்டென எழுந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.

“தம்பி, காசு குடுத்தது எல்லாம் இருக்கட்டும். அதுக்காக நீ பூ வாங்கிக் குடுக்கக் கூடாதுன்னா இருக்கு” எனக் கேட்டார்.

“சரி, இனி வாங்கிட்டுப் போயிக் குடுக்கறேன்கா” என்று உடனே சமரசப் பேச்சாக வந்த விஜயின் பதிலைக்கண்டு,  தம்பியை அத்தோடு விடாமல், “நீ குடுத்த பணத்தை வீட்டுச் செலவுக்கு வச்சிக்கிருவா.  இல்லை வேற எதுக்காவது பயன்படும்னு பத்திரப்படுத்தி வச்சிருப்பா.  அதுக்காக, ஒரு பூ வாங்கிக் குடுக்கறதுல நீ குறைஞ்சாடா போயிருவ.  இது எதுவுமே தெரியாம உன்னை இப்டி வளர்த்த எங்களைத்தான் அவ மனசுக்குள்ளேயே திட்டித் தீக்கப் போறா”

யாரும் கூறாமலேயே முதல் திருமண வாழ்வில் உண்மையில் இதையெல்லாம் அவனாகவே ஆசையோடு செய்தவன்தான் விஜய். ஆனால் அப்போது நடந்த நிகழ்வுகள் நெருஞ்சி முள்ளாய் நெஞ்சில் பச்சை குத்தியதுபோல இருக்க, அந்த நினைவுகளிலிருந்து தன்னை மீட்கவே சில விசயங்களைச் செய்ய உந்திய மனதை அடக்கிக் கொண்டிருந்தான்.

“அப்டியெல்லாம் அவ உங்களைத் திட்ட மாட்டாக்கா” விஜய் மனைவிக்கு ஏற்றுக்கொண்டு பேச,

“பொண்டாட்டிய விட்டுக் குடுக்காம எங்கிட்ட மட்டும் பேசினா பத்தாது.  நீ அவமேல வச்சிருக்கற பாசத்தை, உன்னோட செயல்ல நீதான் அவளுக்குக் காட்டணும்.  உணர்த்தணும்.  அப்பன்னாதான் உனக்காக உசிரையே தரத் தயாராவா”

பாரிக்கு, தனது தம்பியின் முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததால் இன்னும் கலக்கமாகவே இருந்தது.  ஆகையால் தனது தம்பிக்கு தன்னாலான நன்மையைச் செய்ய எண்ணி இப்படியெல்லாம் பேசினார்.

“அவளுக்கு நீ வாங்கிட்டுப் போயிக் குடுத்தா அவ்வளவு சந்தோசப்படுவா தம்பி.  உம்மேல இன்னும் ஆசையும், அன்பும் வளரும்.  இப்டி எனக்கென்னானு வீசுன கையும், வெறுங்கையுமாவா இந்த ஒரு மாசமா வீட்டுக்குப் போற” என நன்றாகவே விஜயிடம் கேட்டுவிட்டார்.

தமக்கையின் பதிலில் உதித்த கேள்விகளைக் கேட்க முடியாமலேயே தனக்குள் புதைத்தான் விஜய். ‘அப்ப(முதல் திருமணத்தின்போது) நான் இதையெல்லாம் அவளுக்குச் செஞ்சேனே.  அப்ப ஏன் அவ எங்கிட்ட அப்படி நடந்துகிட்டா’ என்பது போன்ற கேள்விகள்.

அத்தோடு விடாமல், “கட்டி வந்தவ, உன் காலைச் சுத்தி வரணும்னா, அவளோட சின்னச் சின்ன ஆசையை நிறைவேத்திட்டாப் போதும்பா.  நீ அவமேல எவ்வளவு ஆசையும், அன்பும் வச்சிருக்கியோ, அதையே அவ உனக்குப் பல மடங்காத் திருப்பித் தருவா.  அதனால கஞ்சத்தனம் இல்லாம அவகிட்ட உன்னோட ஆசையையும், அன்பையும் காட்டு.  எல்லாத்தையும் மறைச்சா, அப்புறம் உனக்குன்னு எதுவுமே இருக்காது பாத்துக்கோ” என மிரட்டலாய்க் கூறியிருந்தார்.

முதல் திருமண நிகழ்வில், படிப்பாளி தம்பி, வாழ்க்கையிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுவிடுவான் என கண்டு கொள்ளாமல் விட்டது பெரும் பிரளயத்தையே உருவாக்கியிருக்க, தற்போது தானாகவே சில விசயங்களை முன்வந்து கூறத் துவங்கியிருந்தார் பாரி.

அதுவரை மதுரா உறங்கும்போது அவளை அணுஅணுவாய் ரசித்து, இன்புறும் மனம், அவள் விழித்தும் நத்தையாய் சுருண்டு கொள்வதை மட்டும் மாற்ற முடியாமல் தவித்திருந்தவன், அன்று தமக்கையின் அறிவுரையை ஏற்று, மகிழ்வோடும், எதிர்பார்ப்போடும், பூவோடு வீடு திரும்பியிருந்தான்.

மல்லிகைப் பூவுடன் வீட்டிற்கு வந்தவனைக் கண்ட மதுராவிற்கே விஜயின் செயலில் உண்டான மாற்றம் கண்டு ஆச்சர்யமாய் இருந்தது.

‘மல்லிகைப் பூ வாங்கியாந்து தரவே மாசம் ஓடிப்போச்சு.  இன்னும் அடுத்தடுத்து எல்லாம் நடக்க, இன்னும் எத்தனை வருசம் காத்திருக்கணுமோ, தெரியலையே’ என்பதாகவே இருந்தது மதுராவின் எண்ணம்.

அறைக்குள் இருந்தவளின் கையில் வைத்துத் திணித்த மல்லியை, ஆவலாய் பிரித்து கையில் எடுத்து, “ஏங்க, இதை அப்டியே எந்தலையில வச்சி விடுறீங்களா?” முகம் பூவாய் மலர்ந்திருக்க, தன்னிடம் வந்து கேட்டவளின் வதனத்தில் முத்தத்தை வாரியிறைக்கும் ஆவல் பொங்க, தன்னை அடக்கிக் கொண்டான் விஜய்.

“எனக்கு, பூ வச்சிவிட்டுப் பழக்கமில்லையே” விஜய் தயங்கி உரைக்க

“இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னயே, யாரு தலையிலயும் வச்சிவிட்டுப் பழகிட்டா வரமுடியும்” எனச் சிரித்தவள் “அப்டி யாரு தலையிலயாவது வைக்கப் போனா, முதுகுல டின்னு கட்டிருவாங்க” எனக் கூறிவிட்டு, “எனக்கு வச்சிவிட்டு, இனிமேதான் நீங்க பழகிக்கணும்” எனக் கூறினாள் மதுரா.

அவளின் வார்த்தையில் தேங்கிய மனம், சிலவற்றை யோசிக்கத் துவங்க, அவனது எண்ணம் மதுராவிடமிருந்து வெகுதூரம் தள்ளிப் போயிருந்தது.

அவளின் வார்த்தையைக் கொண்டே, அவளுக்கு தன்னை, தன் கடந்த காலத்தைத் தெரியவில்லையோ என்பதை சட்டென அனுமானித்திருந்தவனுக்கு, பாரமான பாறாங்கல்லைத் தூக்கி மார்பில் வைத்தாற் போலிருந்தது.

‘இவளுக்கு என்னோட பாஸ்ட் தெரிஞ்சுதான் கல்யாணம் பண்ண சம்மதிச்சாளா? இல்லை தெரியாம இன்னும் இருக்காளா? அப்டி தெரியாம பண்ணியிருந்தா!’ என மனம் அடித்துக் கொண்டது.

ஆனாலும் அவள் தன்னிடம் நீட்டிய மல்லியை, அவள் கூறியவாறு தலையில் சூட்டிவிட்டான். அவளின் அருகே நின்று, அவள் கூறியதைச் சரியாகச் செய்துவிட்டு, “சரியா வச்சிருக்கேனானு செக் பண்ணிக்கோ மதுரா” என்றான்.

ஆள் உயரக் கண்ணாடி அவர்களின் அறைக்குள் இருக்க, ஒரு பக்கமாய் நின்றவாறு, இருபுறமும் திரும்பிப் பார்த்தவள், தலையில் அவன் வைத்துவிட்ட பூவைத் தொட்டுப் பார்த்து, “வச்சிப் பழக்கமில்லைனு சொல்லிட்டு, நல்லா எக்ஸ்பீரியன்ஸ்டு மாதிரி அழகா வச்சிருக்கீங்க” என நின்றநிலையிலேயே முகத்தைத் திருப்பி கணவனைப் பார்த்துச் சிரித்தாள் மதுரா.

அவளின் நாணச் சிரிப்பில், தன்னை இழந்தவன், முதல் முறையாக, முதுகு காட்டி தன்னருகே நெருக்கமாய் நின்றிருந்தபடி, தன் சித்தம் கலங்கச் செய்தவளை, இதமாய் அவளின் பின்புறம், தன் மார்போடு இருக்க, இதமாய் அணைத்துக் கொண்டான்.

மல்லிகையின் மனம் நாசியை நிறைத்து, உடலெங்கும் பரவசமாய்ப் பரவிட, அவனது ஓய்ந்து போயிருந்த மனதை மீறி, அவளை அணைத்து, தனது சாபம் விரைவில் தீர, ஏங்கினான்.

அதேநேரம் பஞ்சவர்ணத்திடம், “எங்க அத்தை?” எனக் கேட்ட வசீயின் குரலில் இருவரும் நடப்பிற்கு வந்து விலகினர்.

அதுநாள்வரை அவளாகவே சொல்லி வைத்திருந்து, பூவை வாங்கி தலையில் சூடுவாள்.  அன்று அவள் வாங்கி வைத்திருந்ததை, அப்படியே வைத்துவிட்டு, கணவன் வாங்கித் தந்ததைச் சூடிய மகிழ்ச்சியிலும், தன்னவன் அணைத்த அணைப்பிலும், செல்கள் அனைத்தும் குஷியாக உணர, அடுத்த பணிகளைப் பார்க்க அறையைவிட்டு வெளியே சென்றிருந்தாள் மதுரா.

அவளோடு இருந்த இனிமையான நிமிடங்களைச் சுமந்தபடியே, தன்னை சரிசெய்து கொண்டு வந்து ஹாலில் தொலைக்காட்சியைப் பார்ப்பதுபோல, அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவன், வேலையாகத் திரிந்தவளை ஏக்கத்தோடு பார்த்திருந்தான் விஜய்.

இருவரின் வாழ்வில் மாற்றம் விரைவில் வருமா?

………………………………………………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!