MP5A

MP5A

மது பிரியன் 5A

 

முறைப்பெண் உறவில் இருக்கும் பெண்கள், ஆசையோடு பேச வந்தாலோ, அல்லது கேலி, கிண்டல் என விஜயரூபனை நெருங்கும்போது, பதிலுக்கு வார்த்தை வளர்க்க விரும்பமாட்டான்.

“என்ன மச்சான், இந்தப் பக்கமா அதிசயமா உங்க காத்து வீசுது!” எனும் பெண்களிடம், மென்னகை இதழில் தோன்றத் துவங்க, அவர்களிடம் எந்த பதிலும் கூறாமல், புன்னகையோடு கடந்துவிடுவான்.

“படத்துல வர விஜயகூட பார்த்திரலாம்போல.  நம்ம மச்சான் விஜய பாக்கறது அத்தி பூத்தாப்புலதான்.  அவரு பேசுறது, குறிஞ்சி மலரு பூத்தாப்புலதான்!” என சிரிப்போடு கடந்தவர்களும் உண்டு.

ஆனாலும், விஜயரூபனை திருமணம் செய்து கொள்ளும் ஆவலில் ஊருக்குள் கனவுகளோடு இருந்த பெண்கள் ஏராளம்.  அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருந்தது.  நிறத்தில் எப்படி இருந்தாலும், குணத்திலும், ஒழுக்கத்திலும், காரியத்திலும் விஜயரூபன் சிறந்தவன் என்பதே அது.

பெண்களின் விருப்பம் அவனுக்கு அரசல்புரசலாய்த் தெரிந்திருந்தாலும்,  அப்பட்டமாய் விளங்கினாலும், அதை என்றுமே தனக்குச் சாதகமாக்கி, பெண்களிடம் அளவளாவுவது, பொழுது போக்கிற்காக எதையேனும் பேசுவது என எதையும் விரும்பாதவன்.

“மச்சான் பாத்தாலும் பாக்காத மாதிரியேதான் போவாங்க.  ஒரு வார்த்தை நின்னு பேசுனா, சொத்துல குறைஞ்சிரும்னு நினைக்கிறாகளோ!” என உள்ளூர் முறைப்பெண்கள் கிண்டல் செய்வார்கள்.

“அவுக படிக்கிற படிப்புக்கும், நமக்கும் ஏணி வச்சாலும் எட்டாதுன்னு, ஒதுங்கிப் போறாகளோ!” என சிலர் கேட்பர்.

“மச்சான் எங்க சுத்தி வேலை வாங்குனாலும், அதுலாம் ஒரு காலத்துக்குதான்.  கடைசியில இங்கதான வந்தாகணும். அத நினைப்பில வச்சிக்கிட்டு நாலு வார்த்தை பேசி சிரிச்சிட்டு போங்க. அதவிட்டுட்டு ரொம்பத்தான் பண்றீங்க” என சலித்துக் கொண்ட பெண்களும் இருந்தனர்.

“கட்டிக்கலைனாலும் பரவாயில்லை மச்சான்.  என்னை வச்சிக்கங்க!” என விஜய்யிடம் தனது அன்பை வெளிக்காட்டும் வழி தெரியாமல், குறுக்கு வழியை யோசித்து தங்களுக்கான வாய்ப்பை வரம்பு தவறிக் கேட்ட பெண்களும் உண்டு.

கல்லூரியில் படிக்கும்போதும், இதே நிலையை சிலரிடம் எதிர்கொண்டிருந்தாலும், அனைவரிடமும் பிடிகொடுக்காமல் நாசூக்காக விலகி வாழ்ந்தவன் விஜய்.

திருமணங்கள் பல சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட காலங்கள் போய், சில ரொக்கங்களிலும், எதிர்பார்ப்புகளிலும், ஆதாயங்களிலும் நிர்ணயிக்கப்படும் நிலைக்கு வந்திருப்பது உண்மையாகிப்போனது என்னவோ விஜயின் திருமணத்தில்தான்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மகளை, தங்களின் நீண்டகால ஆதாயத்திற்காக, படிப்பை இடைநிறுத்தம் செய்து, மகளை சிவகங்கை மாவட்ட நீர்ப்பாசன உதவிப் பொறியாளர் பணி நிலையில் சருகணி ஆற்றுப் பகுதியில் முக்கியப் பணியில் இருந்த விஜய்யிக்கு திருமணம் செய்து கொடுக்க முன்வந்த, அஞ்சனாவின் தந்தை உலகநாதன் ஒரு எதிர்பார்ப்போடுதான் அனைத்தையும் செய்ய முன்வந்திருந்தார்.

உலகநாதன் குடும்பத்தில், பணத்திற்கும், பொருளுக்கும் குறைவின்றி இருந்தாலும், படிப்பில் குறையாகிப்போன குடும்பமாய் இருக்க, பதவியில் அவரின் உற்றார்களோ, உறவினர்களோ, தனது இனத்தைச் சேர்ந்தவர்களோ இல்லாததால், அவர் எதிர்பார்த்த சில விசயங்கள் சில ஆண்டுகளாகவே கைகூடாமல் தொடர்ச்சியாக கைவிட்டுப் போயிருந்தது. அதனால் ஆதாயம் கைவிட்டுப் போனதைவிட, தங்களின் உரிமை கைவிட்டுப்போனதாக நினைக்கத் துவங்கியிருந்தனர்.

இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை இத்தனை கெடுபிடிகள் இல்லாததால், அனைத்தையும் பணத்தைக் கொண்டு சாதித்தவர்களால், தற்போது எதையும் அசைக்கக்கூட முடியாத நிலை உருவாகியிருந்தது.

பொதுச் சொத்துகளை எந்தக் கெடுபிடியும் இன்றி அனுபவித்துப் பழகிய பழக்கம் கைவிட்டுப்போனது, முறையாக குவாரி குத்தகையின்றி மணல் எடுப்பது, ஆற்றுப் படுகையில் சேமிக்கும் நீரில் உள்ள மீன்களை குத்தகை எடுக்காமலேயே பிடித்து விற்பது, நீர்ப்பாசனத்திற்கு தேவையான சேமிப்பு நீரை, தங்களது நிலங்களுக்கு மட்டும் பிறர் அறியாமல் பாய்ச்சுவது, அதனை ஷட்டர்கள் முறையாக பராமரிக்கப்படாதால், அல்லது அதிக வெயில் காரணமாக தேக்கிய நீர் சுட்டெறிக்கும் வெயிலால் வற்றியதாக அரசு அதிகாரிகளின் மூலம் கணக்கு காட்டப்பட்டது. அப்படிப் பெறப்பட்ட நீரைக் கொண்டு, அவ்வப்போது வேண்டிய நீரை நிலங்களுக்குப் பாய்ச்சி நல்ல அறுவடையை காலம் முழுமைக்கும் பெறுவது என ஒரு காலத்தில் ஆதாயங்கள் அக்குடும்பத்தில் நீண்டிருந்தது.

ஆனால் அவை அனைத்தும் தற்போது பகல் கனவாய் மாறி, சில கெடுபிடிகள் காரணமாய், தனது உரிமையைத் தொலைத்தாற்போல உலகநாதனை உணரச் செய்திருந்தது.  அவர் மட்டுமல்லாது அவர் வழியில் வந்த அவரது மகன்களும் அதையே நினைத்தனர்.

பணத்தை வாரியிறைத்தாலும், அவர்களுக்கு ஆதாயம் வரும்படியான விசயங்கள் முன்பைப்போல நடப்பதில் மிகுந்த தடைகள் இருந்தது.

வாரியிறைத்த பணத்தை, என்ன செய்தும் திரும்பப் பெற முடியாத சூழலுக்கு சில வருடங்களாகவே தள்ளப்பட்ட நிலையில், ஆதாயங்களும் கைவிட்டுப்போக, அதைப்பெற நீண்ட காலமாய் பல வழிமுறைகளைப் பின்பற்றி தோல்வியே மிஞ்சியிருந்தது.

அதனால் தற்போது தன்வீட்டுப் பெண்ணை விஜய்யிக்கு திருமணம் முடித்துத் தரும் நிலையில், தனக்காக தன் மருமகன் எதையும் நாசூக்காகச் செய்வார் எனத் தப்புக் கணக்குப் போட்டிருந்தார் உலகநாதன்.

வருமானம் என்பதைக் காட்டிலும், தங்களின் அந்தஸ்தை நிலைநிறுத்த, மருமகனை பகடையாக்க நினைத்திருந்தார்.

தங்களின் ஆணாதிக்க மனப்பான்மை மற்றும் வீட்டுப் பெண்களை அடிமையாக நடத்திப் பழக்கப்பட்ட குடும்பத்தில், தனது குலக் கொழுந்தே ஆனாலும் அவர்களின் விருப்பங்களை கேட்பது, மூத்தவர்களுக்கு அவமரியாதை எனக் கருதி, தனது ஒற்றை மகளான அஞ்சனாவுடன் எதையும் கலந்து கொள்ளாமலேயே, தங்களின் எதிர்கால நலன்கருதி மகளின் திருமணத்தை தங்களின் விரும்பம்போல முடிவு செய்திருந்தனர்.

திருமணத்திற்குப்பின் சில விசயங்களை தன் உயிரே போனாலும் துணிந்து செய்யத் தயங்கும் குடும்பமாய் பூரணசந்திரன் குடும்பத்தை இனங்கண்டே, அவரின் மகனான விஜய்யை தங்கள் வீட்டு மருமகனாக்க தெரிவு செய்ய முடிவு செய்தனர்.

குடும்ப உறவுகள் சிதைவதை, வேறு ஏதேனும் பூசல்களுக்கு இடங்கொடாத குடும்பமாய் பூரணசந்திரனைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தார் உலகநாதன்.

ஆகையினால் தனது மகளை திருமணம் செய்து கொடுப்பதன் மூலம், தங்கள் இரு குடும்ப உறவுகளுக்கிடையே உறவுமுறையைச் சரியாகப் பேண வேண்டிய அவசியத்தை உணர்ந்தவர்கள், தான் இடும் எந்த காரியத்தையும் தயங்காது, முரண்பட்டு நிற்காமல், தங்களோடு இணைந்து செய்வார்கள் என நினைத்திருந்தார்.

இதை எதையும் அறியாத விஜய், எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாதபோதும், வழமையான புது மணமகனுக்குரிய உணர்வுகளோடு, திருமணத்திற்கு இயல்பாகத் தயாராகியிருந்தான்.

அஞ்சனா, தனது பிடிவாதத்தால் அக்குடும்பத்தின் முதல் பட்டாதாரியாக வேண்டிய முனைப்போடு கல்லூரியில் அடியெடுத்து வைத்துப் படித்துக் கொண்டிருந்தாள்.

“பசங்களே பன்னெண்டுதான் படிச்சானுங்க.  பொட்டைக் கழுத படிச்சு என்ன செய்யப் போற. எப்டினாலும், அடுப்படியிலதான் முக்காவாசி நேரம் இருக்கப் போற.  அரை செலவு சாமான் வாங்க, வீட்டு வரவு, செலவு கணக்கு தெரியற அளவுக்குத்தான் படிச்சிட்டியே.  இன்னும் படிச்சி என்னாடீ செய்ய? நானெல்லாம் அப்ப மூனாப்புதான்.  இப்பத்தான் பொண்டுக பன்னெண்டு வரை படிக்கறேன்னு, பொஸ்தகத்தோட தெரியறாளுங்க.  அப்படியும் ஒரு விவஸ்தையும் தெரியாமத்தான் இருக்காளுவ” எனத் தடைசெய்த உலகநாதனின் தாயை சமாளித்து, பட்டம் பெறும் முனைப்போடு படித்துக் கொண்டிருந்தவள், தனது திருமணப் பேச்சால் மீண்டும் களையிழந்து போயிருந்தாள்.

பழைய நினைவுகள் மனதில் எழ, யாரின் உதவியை நாடலாம் என யோசித்து, அப்படி யாரும் தனக்கு ஆதரவாய் குடும்பத்தில் இல்லாததை நினைத்து துவண்டு போயிருந்தாள்.

“அப்பத்தா நீ இன்னும் எந்தக் காலத்தில இருக்க.  நம்ம வீடு பங்களாதான்.  நிறைய பணங்காசு, நகை நட்டுன்னு, விவசாயம் அது இதுன்னு ஓகோன்னு இருந்தாலும், ஊருக்குள்ள மாதிரி நம்ம வீட்டுப் பொண்ணுகளுக்கு படிப்பறிவு சுத்தமா இல்லை.  என்ன இருந்து என்ன செய்ய.  அவங்க முன்ன நாம பகட்டா இருந்தாலும், படிப்பு விசயத்துல அவங்களுக்குப் பின்னதான இருக்கோம்.  இது உனக்கு கண்ணுக்குப் படலை.  ஏன்னா இந்த காம்பவுண்டை விட்டு நீ வெளியே போயே பல வருசமாகுது. எல்லாத்துக்கும் நீ ஆளை உள்ளே வரவச்சு வேலை வாங்கற.  பணங் குடுக்கற இல்லைங்களே. ஆனா வெளியே போயி வந்து இருக்கறவுகளுக்குத்தான, நம்மளை இந்த ஊருக்குள்ள எப்டி நினைக்கிறாங்க, மதிக்கிறாங்கனு தெரியும்.  நான் ஸ்கூலுக்குப் போகும்போது நிறைய வாத்தியாருங்க இதைத்தான் சொல்லுவாங்க. ‘என்ன வசதியிருந்தும், நீ நல்லா படிச்சும் உங்க வீட்டுல இதுக்குமேல படிக்க வச்சாத்தான் இப்ப நீ எடுக்கற மார்க்குக்கு மரியாதை.  எப்டியும் உன்னை வீட்லதான் வச்சிருவாங்க.  நீ இம்புட்டு மார்க்கு வாங்குறதும் ஒன்னுதான், பெயிலானாலும் ஒன்னுதான்’ அப்டினுதான் எல்லா சாரும் எங்கிட்ட சொல்றாங்க” என தான் எதிர்நோக்கிய பிரச்சனைகளைப் பற்றிக் கூறினாள் அஞ்சனா.

ஆனாலும், உலகநாதன் தாயின் பேச்சைக் கேட்டு, மகளை மேற்படிப்பு படிக்க வைக்கத் தயங்கினார்.

அஞ்சனாவின் பள்ளித் தலைமையாசிரியர் எதேச்சையாக உலகநாதனைச் சந்திக்க, அந்நேரத்தில், “எங்க வீட்ல இதுக்குமேல படிக்க வைக்கமாட்டாங்க சார். நானெல்லாம் நீட்டு, கேட்டுன்னு எதுவும் எழுதவும் முடியாது.   அப்டியே எழுதினாலும், என்னைப் படிக்க அனுப்ப மாட்டாங்க சார்” அஞ்சனாவின் வருத்தமான பேச்சு நினைவில் வர, “உங்க பொண்ணுதான் இந்த வருசம் நம்ம பள்ளிக்கூடத்துல முத மார்க்கு எடுத்திருக்கு அய்யா, நீட்டெல்லாம் எழுத வைக்கலன்னாலும், அந்தப் புள்ளைய நீங்க ஒரு டிகிரியாவது படிக்க வைங்க.  நல்லா வரும் உங்க பொண்ணு” எனும் வார்த்தையைக் கேட்டே, வீட்டிற்கு வந்ததும், “நம்ம அஞ்சனா படிக்கட்டும்.  மேற்கொண்டு ஆகறதைப் பாரு பெரியவனே” என ஒருவழியாகச் சம்மதித்திருந்தார் உலகநாதன்.

அப்படி தான் வேண்டியது நிறைவேறுமுன், தனது திருமணப் பேச்சை எடுத்ததை மிகுந்த குழப்பத்தோடும், அதேநேரம் திருமணத்தை எப்டியாவது நிறுத்த வேண்டும் என்கிற முனைப்போடு விஜய்யை நேரிலோ, அலைபேசியிலோ சந்திக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

………………………………………………

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!