MP7

MP7

மோகனப் புன்னகையில் 7

அரண்மனை கொஞ்சம் கலகலப்பாக மாறி இருந்தது. காரணம் வேறு ஒன்றுமல்ல. விஜயேந்திரனின் அத்தை கோதை நாயகியும் அவர் மகள் வளர்மங்கையும் வந்திறங்கி இருந்தார்கள்.

வானவன் சேதுபதியின் ஒரே தங்கை கோதை நாயகி. இரட்டை நாடி சரீரம். கௌரிபுரத்திற்குப் பத்து மைல் தொலைவில் இருக்கும் ஒரு ஜமீன் வம்சத்திற்கு மருமகளாகப் போயிருந்தார் கோதை நாயகி. 

ஆண் பிள்ளைகள் இல்லை என்பதால் அண்ணன் மகன் மேல் எப்போதும் பிரியம் ஜாஸ்தி. அண்ணனும் அண்ணியும் அந்தஸ்து கவுரவம் என்று பழமையில் ஊறிக்கிடந்த பொழுதுகளிலெல்லாம் பாரபட்சம் பாராமல் பழகுபவர் கோதை நாயகி.‌

அதற்குக் காரணம் அவர் கணவர். ஜமீன் வம்சத்தில் இருப்பவர்களும் மனிதர்கள் தான். அவர்களுக்கும் ஒரு நாளைக்கு மரணம் வரும் என்பார்.

மனிதர்களை மதிக்கத் தெரிந்த அந்த அத்தையையும் மாமாவையும் விஜயேந்திரனுக்கு நிரம்பப் பிடிக்கும். 

அந்தப்புரத்தில் அமிழ்தவல்லியின் அறையில் அமர்ந்திருந்தார்கள் எல்லோரும். எல்லோரும் என்றால் அதில் விஜயேந்திரனும் அடக்கம் அல்ல. அம்மாவின் அறைக்கு ஒரு வயதிற்கு மேல் விஜயேந்திரன் வந்ததில்லை. வர அனுமதியும் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தாலும் வந்திருப்பானா என்பது கேள்விக்குறி தான்.

அது அரண்மனையின் வழக்கம், பழக்கம். பெண்கள் எல்லோரும் அந்தப்புரத்தில் தான் இருப்பார்கள். ராஜ்ஜிய விவகாரங்களில் ஈடுபடுவதால் ஆண்களுக்கு எப்போதும் மாடிதான். விருந்தினர்கள் அறைகளும் மாடியில் தான் உண்டு.

வானவன் சேதுபதி இருந்தவரை அடிக்கடி ஊர் விவகாரங்களுக்காக அமிழ்தவல்லியும் ஆலோசனைகளில் கலந்து கொள்வார். மனைவியைக் காணக் கணவரும் அடிக்கடி அந்தப்புரம் வந்து போவார். அவர் தவறிய பிறகு அனைத்தும் ஓய்ந்து போனது.

“நம்ம அரண்மனை வாரிசு பண்ணி இருக்கிற காரியத்தைப் பார்த்தியா கோதை?” ஆதங்கத்தையும் தாண்டி அந்தக் குரலில் கோபம் கொப்பளித்தது.

“தப்புத்தான் அண்ணி.” இது கோதை நாயகி.

“எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு அவனுக்குத் தோணலையே!” 

இரும்பை விழுங்கிய அந்தக் குரலில் முகத்தை அடுத்த பக்கமாகத் திருப்பிக் கொண்டாள் வளர்மங்கை.

‘ஆமா! சொல்லிட்டாலும்… நீங்க சம்மதிச்சிட்டுத்தான் மறு வேலை பார்க்கப் போறீங்களாக்கும்! உங்களுக்கெல்லாம் அத்தான் தான் சரி.’ மனதுக்குள் தன் அத்தையை வறுத்தெடுத்தாள் பெண்.

அந்தஸ்து பேதம் பார்க்கும் அந்தக் கறார் அத்தையை அவளுக்கு எப்போதும் பிடிக்காது. விஜயேந்திரனுக்காக மட்டுமே இங்கு வருவாள். ஹீரோக் கணக்காக இருக்கும் தன் அத்தான் மேல் அலாதி மயக்கம் பெண்ணுக்கு. கூடவே வளர்ந்ததால் அந்த மயக்கம் எப்போதும் தப்பான சிந்தனைகளை நோக்கிப் போனதில்லை.

“இப்போ என்ன பண்ணப்போறீங்க அண்ணி?” கொஞ்சம் கலவரத்துடன் தான் கேட்டார் கோதை.

“இனி நான் பண்ண எதுவுமே இல்லை கோதை. உன்னோட மருமகன் சபையில வெச்சு வாக்குக் குடுத்துட்டான். அதை இனி மீற முடியாது. அரண்மனையோட வாக்கு அது. குடுத்தாக் குடுத்தது தான். இனி ஆக வேண்டியதைப் பார்ப்போம்.”

“சொல்லுங்க அண்ணி.”

“என்னால எதையும் முன்னின்று பண்ண முடியாது. அதனால முறைப்படி அந்த வீட்டுக்கு நீ ஒரு தரம் போய் வந்திரு.”

“சரிங்கண்ணி.”

“மாப்பிள்ளை எப்போ வர்றாங்க?”

“நீங்க தேதி குறிச்சதும் வர்றேன்னு சொன்னாங்க.” 

“அப்போச் சரி.” பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு பக்கத்து அறையில் ஓய்வெடுத்துக் கொண்டார்கள் அம்மாவும் மகளும். விஜயேந்திரன் இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை.

“ஐயா வந்ததும் ஒரு வார்த்தை சொல்லு கங்கா.” கங்காவிடம் சொல்லிவிட்டுக் கொஞ்ச நேரம் கண்ணயர்ந்தார் கோதை நாயகி.

சற்று நேரத்திற்கெல்லாம் கங்கா தகவல் சொல்லத் தன் உடம்பைத் தூக்கிக் கொண்டு மாடி ஏறினார் அத்தை. கூடவே அத்தை மகள் ரத்தினம்.

“ஏன்டாப்பா! இந்த அத்தையைப் பார்க்க நீ அங்க வரமாட்டியா? நான் தான் மாடியேறணுமா?”

“அடடே! அத்தை வா வா.” மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நடந்து வந்தவரைக் கைப்பிடித்து கட்டிலில் அமர வைத்தான் விஜயேந்திரன்.

“ம்க்கும்…” ரூம் வாசலில் நின்று கொண்டு வேண்டுமென்றே வளர்மங்கை தொண்டையைச் செரும,

“அத்தை இங்க இப்போ ஏதோ ஒரு சத்தம் கேட்டுதில்லை.” அத்தை பெண்ணைச் சீண்டவென்றே அங்குமிங்கும் தேடினான்.

“அத்தான்…” பின்னாலிருந்த படியே சிணுங்கினாள் பெண்.

“அடடே! வளர் மங்கை. நீயும் வந்திருக்கியா? இதுக்குத்தான் உன்னை நான் அடிக்கடி வளர் மங்கை… இன்னும் கொஞ்சம் வளர் மங்கை ன்னு சொல்லுறேன். நீதான் வளராம இன்னும் இருக்க. பார்த்தியா? இப்போ அத்தானுக்கு நீ நின்னது கூடத் தெரியலை.”

“பொய். நான் ஒன்னும் அத்தனை குள்ளம் கிடையாது. நீங்க தான் ஒட்டகச்சிவிங்கி மாதிரி வளர்ந்திருக்கீங்க. பார்ப்போமே, உங்க சுமித்ரா எப்படி இருக்காங்கன்னு.” விளையாட்டாகப் பெண் சொல்ல அங்கே சட்டென்று ஒரு அமைதி நிலவியது.

“என்னப்பா விஜயேந்திரா? இப்படிப் பண்ணிட்ட? அம்மாக்கிட்ட தான் சொல்லலை. அத்தைக்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா?” நிஜமான அக்கறையோடு கேட்டார் அத்தை.

“சொல்லக் கூடாதுன்னு இல்லை அத்தை. எங்கேயும் எந்தத் தப்பும் நடந்திடக் கூடாதுன்னு தான் சொல்லலை. உனக்குத் தெரிஞ்சா ஏன் எங்கிட்ட சொல்லலை ன்னு அம்மா உன்னைக் கோபிப்பாங்க. அது உனக்கும் தர்ம சங்கடம் இல்லையா?” சொன்னவன் அத்தையின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான்.

“அத்தை மடி மெத்தையடி…” வேண்டுமென்றே வம்பு வளர்த்தாள் மங்கை. 

“உனக்குப் பொறாமை மங்கை. உன்னோட அம்மா மடியில நான் தூங்குறேன். அதேமாதிரி என்னோட அம்மா மடியில உன்னால தூங்க முடியாதில்லை? அந்தப் பொறாமை.”

“ஐயோ அத்தான்! நீங்க நான் வளரலைன்னு சொன்னதைக் கூடத் தாங்கிக்குவேன். ஆனா இப்போ சொன்னீங்க பாருங்க. அப்பப்பா!” உடம்பைச் சிலிர்த்து கண்களை உறுத்து விழித்து அவள் காட்டிய அபிநயத்தில் வாய்விட்டுச் சிரித்தான் விஜயேந்திரன். 

“ஆ… அந்தப் பயம் இருக்கணும்!”

“ஆமா, அதுக்கு வேற ஆளைப் பாருங்க.”

“அதான் பார்த்துட்டேனே மங்கை.”

“ம்… ம்… தப்பிச்சுட்டீங்க. உங்கம்மாவோட டெரர் லுக்கால எங்கிட்ட இருந்து நீங்க தப்பிச்சுட்டீங்க. இல்லைன்னா இந்த அரண்மனைக்கு மருமகள் நான் தான். பொழைச்சுப் போங்க.” 

“ஏய் மங்கை! கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா. என்னைப் பேச விடு.” 

“சரி சரி என்ஜாய்.‌ நான் அத்தானோட லைப்ரரியைப் பார்க்கிறேன்.” சொல்லிவிட்டு அதே தளத்தில் இருந்த லைப்ரரி அறைக்குப் போய்விட்டாள் வளர் மங்கை.

“என்னடா ராஜா இது? என்னால ஏத்துக்கவே முடியலை. உனக்கு நல்லாவே தெரியும். இந்த அத்தை அந்தஸ்து பேதம் பார்க்கிறவ கிடையாது. அதுக்காக ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்ணைக் கட்டுவாங்களா?” 

“ஏன் அத்தை? என்னாச்சு?”

“அடப்போடா! இதுக்கு மேல உங்கிட்ட எப்படிப் பேசுறது. இன்னொருத்தன் கூடக் குடும்பம் நடத்தினவளை எப்படிடா…” 

“நீ கண்டியா?”

“எதை?”

“அவ குடும்பம் நடத்தினத?” 

“இல்லேங்கிறியா?”

“சரி… அப்படியே நடத்தி இருந்தாலும் தான் என்ன இப்போ?” மருமகனின் கேள்வியில் முகத்தைச் சுளித்தார் கோதை நாயகி. அத்தை மடியிலிருந்து சட்டென்று எழுந்து உட்கார்ந்தான் விஜயேந்திரன். 

“இங்கப்பாரு அத்தை! முகத்தைச் சுளிக்கிறதா இருந்தா இப்போவே பொட்டியைக் கட்டிக்கிட்டு ஊருக்கு நடையைக் கட்டு. உன்னோட அண்ணன் பண்ணி வெச்ச வேலையால இன்னைக்கு வரைக்கும் கட்ட பிரம்மச்சாரியா சுத்திக்கிட்டுத் திரியுறேன். இதுக்கு மேலே யாராவது ஏதாவது பண்ணிக் குட்டையைக் குழப்பினீங்க… அப்புறம் தெரியும்.”

“என்னடா தெரியும்? எதுக்குடா எங்கண்ணனை இப்போ இழுக்கிற? அவர் இருந்திருந்தா உனக்கெல்லாம் இவ்வளவு தைரியம் வருமா?” கோதை நாயகியும் கோபப்பட்டார். அண்ணன் மகன் பண்ணி இருக்கும் காரியம் அவருக்கு அத்தனை ஏற்புடையதாக இருக்கவில்லை.

“நீதான் மெச்சிக்கணும் உங்கண்ணனை. பெரிய மனுஷன் பண்ணுற காரியமா பண்ணி இருக்காரு?”

“விஜயேந்திரா! என்னப்பா இப்படி அப்பாவை மரியாதை இல்லாமப் பேசுறே?” அத்தையின் ஆதங்கத்தில் கண்களை இறுக மூடித் திறந்தான் விஜயேந்திரன்.

“நடந்தது என்னன்னு தெரிஞ்சா நீ இப்படிப் பேசமாட்ட அத்தை.” என்றவன் சுருக்கமாகக் கடந்த காலத்தைச் சொல்லி முடித்தான்.

“இதெல்லாம் எப்போ நடந்தது ராஜா? எனக்குத் தெரியாதேப்பா?”

“நீயும் ஒரு பொண்ணை வெச்சிருக்கேல்ல அத்தை? நீயே சொல்லு. ஊர்ல இருக்கிற ஆயிரம் பசங்க உன்னோட பொண்ணைப் பார்ப்பாங்க. அதுக்காக உம் பொண்ணைக் குத்தஞ் சொல்ல முடியுமா? குத்தஞ் சொல்லுறவன் அவன் புள்ளையை இல்லை அடக்கி வெக்கணும்? அதை விட்டுட்டு ஊராம் பொண்ணை ஏசுறது எந்த வகையில நியாயம் அத்தை?”

“அதுவும் சரிதான்.” 

“சும்மா திட்டலை. பெரிய இடத்துப் பையனை பொண்ணை வெச்சு மயக்குறீங்களான்னு கேட்டிருக்காங்க. நாலு பேருக்கு முன்னால நாட்டியம் ஆடுற பொண்ணு தானேன்னு கேவலமாப் பேசி இருக்காங்க.”

“ஐயையோ!”

“நீ பொறுத்துக்குவியா? நம்ம மங்கையை யாராவது இப்படிப் பேசினா நீ என்ன பண்ணுவ?”

“வகுந்திருவேன்.”

“ஆ… ஆனா அவங்க எதுவுமே பேசலை. உங்க அண்ணன் கார் அரண்மனைக்கு வந்து சேர்றதுக்குள்ள அத்தைப் பையன் கையில மஞ்சள் கயித்தைக் குடுத்துக் கட்ட வெச்சிட்டாங்க. இல்லைன்னா அன்னைக்கே அவளைத் தூக்கி இருப்பேன்.” இளையவனின் வேகத்தில் அத்தை முகத்தில் கவலை தோன்றியது.

“ஒத்தைப் பொண்ணு. அவங்க வீட்டுல அவன் ஒரே பையன். பெத்தவங்க எப்படியெல்லாம் கனவு கண்டிருப்பாங்க. ஆனா நாலு சுவத்துக்குள்ள நாலே நாலு பேரை சாட்சியா வெச்சு அந்தக் கல்யாணம் நடந்திருக்கு.”

“அப்புறம் என்னாச்சு?” 

“ஒன்னா வளந்தவங்க. போதாததுக்குத் தாலி கட்டினவன் மனசுல வேற ஒரு பொண்ணு. அவன் பெருசா ஒரு கும்பிடு போட்டுட்டு நாட்டை விட்டே ஓடிட்டான். நல்லதா ஒரு வேலையைத் தேடிக்கிட்டு தான் காதலிச்ச பொண்ணையே அங்க கூப்பிட்டுக் கல்யாணமும் பண்ணிக்கிட்டான்.”

“ஐயையோ! அப்போ இந்தப் பொண்ணோட கதி?”

“அதோ கதிதான். உன்னோட அண்ணன் புண்ணியத்தால.”

“பாவந்தான் ராஜா.” 

“ஆனா நான் பாவம் பார்த்துக் கல்யாணம் பண்ணலை அத்தை. யார் கூடவாவது அந்தப் பொண்ணு நல்லா வாழ்ந்திருந்தா நான் ஒதுங்கிப் போயிருப்பேன். ஆனா இப்போ கையில குழந்தையோட நின்னிருந்தாலும் நான் இதையே தான் பண்ணி இருப்பேன் அத்தை.”

‘யப்பா! நல்ல வேளை. அப்படி எதுவும் நடக்கலை.’ அத்தையின் மனது மௌனமாக ஓலமிட்டது.

“சரி விடுப்பா விடு. நடந்தது நடந்து போச்சு. உனக்கு அந்தப் பொண்ணு தான்னு விதி முடிச்சுப் போட்டிருக்கும் போது யாரு என்ன பண்ண முடியும்”

“என்ன சொல்லுறாங்க உன்னோட அண்ணி?”

“அவங்களால சபையில முன்னிற்க முடியாதாம்.”

“நல்லது.”

“பொண்ணு வீட்டுக்கு என்னை ஒரு நடை போயிட்டு வரட்டுமாம்.”

“போயிட்டு வா அத்தை. என்னோட சுமித்ராவை ஒரு தரம் பார்த்துட்டு அதுக்கப்புறம் நீ இப்போ சொன்னதை எல்லாம் எங்கிட்டச் சொல்ல முடிஞ்சாச் சொல்லு.” சவால் விட்ட மருமகனின் கன்னத்தைக் கிள்ளினார் கோதை நாயகி.

“உங்கப்பா சொன்னதை அப்போ ஏன்டா தப்புன்னு சொல்லுற?”

“எதை?”

“உன்னை அந்தப் பொண்ணு மயக்கித்தானே வெச்சிருக்கா?” பெருங்குரலெடுத்து அத்தை சிரிக்க இப்போது வியேந்திரனின் முகம் சிவந்து போனது.

*************

முறைப்படி மாப்பிள்ளை வீட்டார் சுமித்ராவின் வீட்டுக்கு வந்திருந்தார்கள். எந்த வித ஆடம்பரமோ அரண்மனை அலட்டலோ இல்லாமல் பழகிய கோதை நாயகியை சுமித்ராவின் ஜனக்கட்டிற்கு அவ்வளவு பிடித்தது. 

‘அச்சாரம்’ போடுவது அங்கு வழக்கம் என்பதால் பாரம்பரிய நகைகளில் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார் அமிழ்தவல்லி. இது தான் பெண் என்று முடிவான பிறகு தனக்குப் பிடிக்காவிட்டாலும் அரண்மனையின் மருமகளுக்குரிய கவுரவத்தைக் கொடுக்க வேண்டியது தனது கடமை என்று உணர்த்தி இருந்தார்.

நகையைப் பார்த்த போது வடிவிற்கு மயக்கம் வந்தது. தன் அண்ணன் சுமித்ராவுக்காகச் சேர்த்து வைத்திருக்கும் அத்தனை நகைக்கும் இந்த ஒன்று ஈடாகும் போல இருந்தது.

சம்பிரதாயத்துக்காக எல்லாவற்றையும் பேசி முடித்து விட்டு அப்போதே தட்டையும் மாற்றிக் கொண்டார்கள். கோதை நாயகியே அனைத்தையும் முன்னின்று நடத்தினார். மங்கல காரியத்தில் அமிழ்தவல்லி கலந்து கொள்ளாததை யாரும் பெரிது படுத்தவில்லை.

எல்லா அமளி துமளிகளும் ஓய்ந்த பிறகு சுமித்ராவின் அறைக்கு வந்தார் கோதை. வாடாமல்லிக் கலரில் பட்டுடுத்தி தலை நிறையப் பூச்சூடி செஞ்சாந்துத் திலகமிட்டு அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்த போது கோதையின் கண்கள் கலங்கியது.

தன் அண்ணன் பண்ணிய காரியத்தால் எத்தனை சுமைகளைச் சுமந்திருக்கிறாள் இந்தப் பெண்? கொண்டு வந்திருந்த நகையை அவள் கழுத்தில் அப்போதே அணிவிக்க அதிலிருந்த வைரங்கள் அழகுக்கு அழகு சேர்த்தது.

‘இத்தனை அழகாக இருந்தால் என் மருமகனுக்குப் பித்துப் பிடிக்காமல் வேறு என்ன பிடிக்கும்?’ மனதுக்குள் சிரித்துக் கொண்டார் அத்தை.

“உக்காருங்க.”

“பரவாயில்லைம்மா. மனசுல எந்தக் குழப்பமும் இல்லாம அமைதியா இரு. எது நடந்தாலும் அது நல்லதுக்குத்தான். சரியா?”

“நான் உங்களை எப்படிக் கூப்பிடுறது?”

“சித்தி ன்னு கூப்பிடு.”

“இன்னும் ஒன்னும் கெட்டுப் போயிடல்லை சித்தி. உங்க வீட்டுல நல்ல புத்தி சொல்லி எல்லாத்தையும் நிறுத்தப் பாருங்க. என்னால இங்க எதுவும் பண்ண முடியலை.”

“ஏம்மா?”

“நல்லா வாழ வேண்டியவங்க. உங்க அரண்மனையோட அந்தஸ்துக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணைப் பார்த்துக் கட்டிக் குடுங்க. நான் எந்த வகையிலயும் அவங்களுக்குப் பொருத்தம் இல்லை.”

“ஆனா அவன் அப்படி நினைக்கலியே?”

“ஒரு பொண்ணுக்கு ஒரு தரம் தான் கல்யாணம் நடக்கும் சித்தி. அதுதான் அழகும் கூட.”

“உனக்கு அப்படி ஒன்னு நடந்ததா என்ன?”

“ஊருக்குத் தெரியாம இருக்கலாம். ஆனா என் மனச்சாட்சிக்குத் தெரியும் சித்தி. அந்த வாழ்க்கையை எனக்கு விருப்பம் இல்லாமத் தான் திணிச்சாங்க. இருந்தாலும் அதை நான் மனப்பூர்வமாத் தான் ஏத்துக்கிட்டேன். என்னால இப்போ எப்படி?”

மேலே பேச முடியாமல் திணறிய பெண்ணைப் பாவமாகப் பார்த்தார் கோதை நாயகி. தன் அண்ணன் எத்தனை பெரிய தவறைச் செய்திருக்கிறார்.

எத்தனை அருமையான பெண். விஜயேந்திரனும் இவளும் பக்கத்தில் நின்றால் ஜோடிப் பொருத்தம் அள்ளிக்கொண்டு போகும். பிள்ளையும் குட்டியுமாக இன்று வாழ்ந்திருக்க வேண்டியவர்கள். ஆளுக்கொரு திசையில் தனித்து நிற்கிறார்கள்.

“இங்கப்பாரு சுமித்ரா. ராஜா உம்மேல பைத்தியமா இருக்கான். இத்தனை வசதி வாய்ப்புகள் இருந்தும் இன்னைக்கு வரைக்கும் ஒத்தையாத் தான் நிக்குறான். உன்னைக் கல்யாணம் பண்ணலைனா காலம் பூரா இப்படியே இருந்துருவான்னு தான் எனக்குத் தோணுது. அதனால வீணாப் போட்டு மனசைக் குழப்பிக்காம சீக்கிரமா அரண்மனைக்கு வந்து சேர்ற வழியைப் பாரு.” 

கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லி விட்டு எழுந்து போய் விட்டார் கோதை நாயகி. சுமித்ராவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

“அண்ணி…” அந்தக் குரலில் கலைந்தவள் நிமிர்ந்து பார்த்தாள். ரூம் வாசலில் ஸ்டீஃபன் நின்றிருந்தான்.

“உள்ள வாங்க ஸ்டீஃபன்.”

“பரவாயில்லை அண்ணி. உங்ககிட்ட இதைக் குடுத்துட்டுப் போகத்தான் வந்தேன்.” கையில் அவன் எதையோ வைத்திருக்க உள்ளே வரமாட்டான் என்று புரிந்து எழுந்து போனாள் சுமித்ரா.

“என்ன இது?”

“பிரிச்சுப் பாருங்க.” அவன் சொல்லவும் அழகாக மடிக்கப்பட்டிருந்த வண்ணக் காகிதத்தைப் பிரித்தாள் சுமித்ரா. ஒரு ஜோடிச் சதங்கைகள். ஆச்சரியமாக ஸ்டீஃபனைப் பார்த்தாள்.

“அண்ணா குடுக்கச் சொன்னாங்க.” சொல்லிய முகத்தில் ஒரு கேலிப் புன்னகை தவழ்ந்தது.

“அன்னைக்கு கோவில்ல நடனம் ஆடும் போது நீங்க கட்டியிருந்த சதங்கை ரொம்பக் கனமா இருந்ததாம். இது மெல்லிய மான் தோலால செஞ்சதாம். உங்ககிட்ட சொல்லச் சொன்னாங்க.” ஒவ்வொன்றையும் சொல்லும் போது சுமித்ராவின் முகத்தைக் கண்களால் ஆழ்ந்து படம் பிடித்துக் கொண்டான் ஸ்டீஃபன். அத்தனையையும் அண்ணனிடம் ஒப்புவிக்க வேண்டும் அல்லவா?

“இதுல விசேஷம் என்ன தெரியுமா அண்ணி?” 

“என்ன?” குரலே எழும்பவில்லை சுமித்ராவிற்கு.

“இதுல இருக்கிற ஒவ்வொரு மணியையும் ரெண்டு நாளா உக்காந்து அண்ணாவே கோர்த்தாங்க. 

ஸ்டீஃபன் சொல்ல சுமித்ராவின் கண்கள் லேசாகக் கலங்கிப் போனது. அந்தக் கண்ணீர் இளையவனை வெகுவாகத் திருப்திப் படுத்தியது.

“இதை நீங்களே அண்ணிகிட்ட கொண்டு போய் குடுங்கண்ணா ன்னு சொன்னேன். அதுக்கு என்ன சொன்னாங்க தெரியுமா?” ஸ்டீஃபன் நிறுத்தக் கேள்வியாகப் பார்த்தாள் சுமித்ரா. 

“உங்களைப் பார்க்க வந்தா நீங்க இந்தக் கல்யாணத்தை நிறுத்தச் சொல்லி அண்ணாக்கிட்டக் கேப்பீங்களாம். நீங்க முதன்முதலா அவங்க கிட்ட கேக்குறதை அவங்களால மறுக்க முடியாதாம்.‌ அதனாலேயே அவங்க கல்யாணத்துக்கு முன்னாடி உங்களைப் பார்க்க வர மாட்டாங்களாம் அண்ணி.” 

இதைச் சொன்ன போது சுமித்ரா உறைந்து போனாள். இது என்ன மாதிரியான அன்பு! இதற்கு எனக்குத் தகுதி இருக்கிறதா? கண்கள் நிலைகுத்த நின்றிருந்தவளைக் கலைக்காமல் நகர்ந்து விட்டான் ஸ்டீஃபன்.

***************

“அத்தான், இது நியாயமே இல்லை. என்னையும் கூட்டிக்கிட்டுப் போகாம இப்போ வந்து சுமித்ரா சுமித்ரான்னு அவங்களைப் பத்தியே பேசுறாங்க.” சிணுங்கியபடி அத்தானிடம் புகார் வைத்தாள் மங்கை.

“அவளையும் கூட்டிக்கிட்டுப் போயிருக்கலாம் இல்லை அத்தை?”

“சும்மா இரு விஜயேந்திரா! வயசுப் பொண்ணை அப்படி எல்லா இடத்துக்கும் கூட்டிக்கிட்டுப் போனா நல்லாவா இருக்கும்?”

“ஏன்? என்னோட அத்தான் கட்டிக்கப் போற வீடுதானே. நான் வந்தா என்னவாம்?” 

“நான் உன்னை இன்னொரு நாளைக்குக் கூட்டிட்டுப் போறேன். இனி சுமித்ரா வீட்டுக்குப் போறதுக்கு ஆயிரம் வேலை வரும். அப்போ போகலாம். இப்போப் போய்த் தூங்கு.” மகளை விரட்டி விட்டார் கோதை நாயகி. அம்மாவை முறைத்துக் கொண்டே நகர்ந்தாள் மகள். விஜயேந்திரனின் ரூமில் அமர்ந்திருந்தார்கள்.

“அப்புறம், எல்லாம் நல்ல படியா முடிஞ்சுதா அத்தை?”

“ஆமா ராஜா. ரொம்ப நல்ல மனுஷங்க. மரியாதையா நடந்துக்கிட்டாங்க. எனக்குத் திருப்தியா இருந்திச்சு.”

“சுமித்ரா வைப் பார்த்தியா?” கேட்ட மருமகனைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்தார் அத்தை.

“ம்… பார்த்தேனே!” அத்தையின் கேலியில் விஜயேந்திரனும் புன்னகைத்தான்.

“இத்தனை ஆசை இருக்கிறவன் எங்கேயாவது கூப்பிட்டுப் பார்க்க வேண்டியது தானே!”

“ம்ஹூம்… அதெல்லாம் வேணாம். நீ மேலே சொல்லு அத்தை. என்ன சொன்னா?”

“இந்தக் கல்யாணத்தை நிறுத்தச் சொன்னா.” புன்னகை மாறாமலேயே சொன்னார் அத்தை.

“எதிர் பார்த்தது தான்.”

“விஜயேந்திரா! நீ ரொம்ப நிதானமா சுமித்ராவைக் கையாளணும் பா. அந்தப் பொண்ணுக்கு இதுவரை நடந்திருக்கிறது சாதாரண விஷயம் இல்லை. அதையெல்லாம் சட்டுன்னு தூக்கிப் போட்டுட்டு மனசை மாத்திக்கிற ரகம் இல்லை அந்தப் பொண்ணு.”

“………….” 

“நீ நிறையவே போராட வேண்டி இருக்கும்னு எனக்குத் தோணுதுப்பா. பொறுமையா இரு. ஆனாலும் பாவம் தான் நீ. எவ்வளவு அழகா இருக்கா! எனக்கே அள்ளிக்கலாம் போல தோணிச்சுது.” போகிற போக்கில் மருமகனின் கன்னத்தைக் கிள்ளிவிட்டுப் போனார் அத்தை. 

விஜயேந்திரனின் மனது பொங்கி வழிந்தது. இன்று முழுவதும் அவன் கேட்டது அவள் பெயரைத்தான். அத்தையின் விமர்சனத்தை அவன் மிகவும் ஆவலாக எதிர்பார்த்தான்.

தனக்கு மிகவும் பிரியமான அத்தை. அம்மாவை விட அத்தையைத் தான் அவனுக்கு நிரம்பவே பிடிக்கும். 

அவர் வார்த்தைகள் சுமித்ராவைச் சிலாகிக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினான். அது நிறைவேறிப் போனதில் திக்குமுக்காடிப் போனான். 

மாடியில் அறைகளைத் தவிர்த்து சின்னதாக ஒரு தோட்டம் இருக்கும். அங்கே போய் நின்று கொண்டு நிர்மலமான வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். 

ஒரு மாத இடைவெளியில் திருமணத்திற்கு நாள் குறித்திருந்தார்கள். இத்தனை நாள் காத்திருந்தது பெரிதல்ல. இந்த ஒரு மாதத்தை நெட்டித் தள்ளுவது தான் பெரும்பாடாக இருக்கப்போகிறது. 

‘சுமித்ரா…’ கண்களை மூடி வாய்க்குள் உச்சரித்துப் பார்த்தான். உடம்பெல்லாம் இனித்தது. கல்யாணத்தை நிறுத்த அவள் போராடுவது அவனுக்கு நன்றாகவே புரிந்தது. இருந்தாலும் அவள் மீது கோபம் வரவில்லை. இன்னும் இன்னுமென்று காதல் தான் பெருகியது.

“அண்ணா!” திடுக்கிட்டுத் திரும்பினான் விஜயேந்திரன். ஸ்டீஃபன் நின்றிருந்தான். 

“ஸ்டீஃபன் வா வா. குடுத்தியா?” ஆவலாகக் கேட்டான் பெரியவன்.

“ம்…‌குடுத்தேன் ண்ணா.”

“என்ன சொன்னா?”

“ஒன்னுமே சொல்லலை. ஆனா அந்தக் கண்ணு ரெண்டும் அப்படியே கலங்கிருச்சு ண்ணா.”

“நிஜமாவா?”

“அவங்களுக்கு உங்க மேலே கொள்ளைப் பிரியம் இருக்குது ண்ணா. காட்ட மாட்டேங்கிறாங்க. நடந்து போன நிகழ்வுகள், சாஸ்திரம், சம்பிரதாயம் இதெல்லாம் அவங்களைக் கட்டிப் போடுது ண்ணா. எல்லாத்தையும் உடைச்சிட்டு வெளியே வரத் தயங்குறாங்க.”

“ம்… புரியுது ஸ்டீஃபன்.” 

“அண்ணி அவ்வளவு அழகா இருந்தாங்க இன்னைக்கு. நிறைய ஃபோட்டோ எடுத்தேன். நாளைக்கு டவுனுக்குப் போய் பிரின்ட் போட்டுக் குடுக்கிறேன் ண்ணா. இந்த ஒரு மாசத்துக்கு உங்களுக்கு அது மட்டும் தான்.” சின்னவனும் கேலி பண்ணி விட்டுத்தான் நகர்ந்தான். 

எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டான் விஜயேந்திரன். சுமித்ரா சுமித்ரா என்று மனம் சதா ஜபம் செய்த வண்ணம் இருந்தது. கைகள் பரபரக்க லைப்ரரிக்குள் போனான்.

வீடே அமைதியில் உறைந்து கிடந்தது. தனது ஓவியங்களுக்கான உபகரணங்களை எடுத்துக் கொண்டவன் ஸ்டான்ட்டில் பேப்பரை மாட்டி விட்டு தன் பாட்டிற்கு வரையலானான். அவன் எண்ணங்களின் நாயகி எழிலோவியமாக உருவாகிக் கொண்டிருந்தாள்.

 

விண்மீனும் மேகங்களும் கண் தூங்கும் போது…

வாய்முத்தம் நீ சிந்தவா வாய்ப்புள்ள போது…

அடி நெஞ்சு தள்ளாடியே அலை பாயும் போது…

தலை சாய்வதேது…

 

error: Content is protected !!