மோகனப் புன்னகையில் 9
மனைவி தன்னைப் பார்த்து விட்டாள் என்று தெரிந்ததும் உள்ளே வந்தான் விஜயேந்திரன். கை தானாக அவளிடம் பூவை நீட்டியது.
“பிடிச்சிருக்கா?”
“எது?” அவள் கண்களில் லேசாக ஒரு சலனம் வந்து போனது.
“எல்லாமே தான்.” இப்போது அவன் சின்னதாகப் புன்னகைத்தான்.
“ரெண்டு தரம் தான் பார்த்திருக்கேன்னு நேத்து ராத்திரி ரொம்ப வருத்தப் பட்டீங்க. இப்போ என்ன சொல்லுறீங்க?” ஓவியத்தைக் கண்களால் காட்டியபடி அவன் கேட்க அவள் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது.
“நீங்களே வரைஞ்சீங்களா?”
“ம்…”
“ரொம்ப நல்லா இருக்கு.” அவள் விரல்கள் ஓவியத்தில் இருந்த அவள் முகத்தைத் தடவிப் பார்த்தது.
“பூவை வெச்சுக்கலாமே.”
“இல்லை… முடியை…” குளித்து முடித்தவள் பின்னல் போடாமல் நேரே நந்தவனத்துக்கு வந்திருந்ததால் பூவை வைத்துக் கொள்ள அவளால் முடியவில்லை.
“எங்கூட வா அம்மு.” அவளை அழைத்துக் கொண்டு லைப்ரரிக்கு நான்கு அறைகள் தாண்டி இருந்த ஒரு விசாலமான ரூமிற்குள் சென்றான் விஜயேந்திரன்.
“இது என்னோட ரூம். நீங்க இங்க எப்போ வேணும்னாலும் வரலாம்.” அவன் சொல்லவும் அவள் தலை தானாகக் குனிந்து கொண்டது. வந்த புன்னகையை அடக்கிக் கொண்டான் விஜயேந்திரன்.
“ட்ரெஸ்ஸிங் டேபிள் அங்க இருக்கு. பூவை வெச்சுக்கோ அம்மு. நான் குளிச்சிட்டு வந்தர்றேன்.” அவளுக்குத் தனிமை கொடுத்தவன் டவலோடு அங்கிருந்த பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டான். சுமித்ரா கொஞ்சம் நிதானமாகச் சுவாசித்தாள். அவன் பக்கத்தில் நிற்கும் போது சொல்லத்தெரியாத ஒரு படபடப்பு அவளை ஆட்டி வைத்தது.
அவளுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அறையைப் போல இரு மடங்காக இருந்தது விஜயேந்திரனின் வாசஸ்தலம். சுவரின் ஒரு பக்கத்தில் கொஞ்சம் பெரிதாக ஒரு ஃபோட்டோ. ஃப்ரேம் போடப்பட்டு மாட்டப்பட்டிருந்தது. ராஜ உடையில் ஒரு வயதானவர். விஜயேந்திரனின் முன்னோர்கள் போலும். ஆளுயர ஜன்னல். கெட்டியான திரைச்சீலை. திரையோடு கூடிய பெரிய கட்டில். கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த டேபிளில் இரண்டு ஆங்கில மேகஸின்கள். இந்தியப் பொருளாதாரம் பற்றிப் பேசின.
ரூமின் பெரும்பகுதியை மர வேலைப்பாடுகள் தான் அலங்கரித்திருந்தன. தரையில் வெள்ளையும் கறுப்புமாக மாறி மாறி அடுக்கப்பட்டிருந்த பெரிய டைல்ஸ். சுவரிலும் பூ அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட ‘வால்பேப்பர்’.
தலைக்கு மேல் நீண்ட சங்கிலியில் கோர்க்கப்படிருந்த அழகான ஷாண்டலியர். கண்ணாடிக் குடுவைகளைக் கோர்த்து மூன்றடுக்காக பிரமிட் ஷேப்பில் வைக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கே கண்ணாடிச் சரங்கள் அழகிய வளைவுகளாகத் தொங்கிக் கொண்டிருந்தன.
எல்லாவற்றையும் பார்வையிட்ட படி கூந்தலைச் சீவிப் பூவை வைத்துக் கொண்டாள்.
‘இவருக்குப் பூ என்றால் ரொம்பவும் பிடிக்குமோ? எதற்கு இவ்வளவு பூ?’ அங்கலாய்த்துக் கொண்டாலும் ஒரு புன்னகையோடு அவ்வளவு பூவையும் வைத்துக் கொண்டாள்.
பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் தன்னையும் அறியாமல் திரும்பிப் பார்த்தாள் சுமித்ரா.
இப்போது அந்த ரூமில் இருக்கும் அனைத்திற்கும் அவனே சொந்தக்காரன். சுமித்ரா உட்பட. இருந்தாலும் அவளைச் சங்கடப்படுத்தாமல் தோளை மூடிய டவலோடு வந்த அவன் கண்ணியம் சுமித்ராக்கு மிகவும் பிடித்திருந்தது.
அலமாரியைத் திறந்து ஒரு ஷேர்ட்டை அவன் எடுக்கவும், சுவரில் இருந்த ஃபோட்டோவை நோக்கிப் பார்வையைத் திருப்பினாள் சுமித்ரா.
“அது என்னோட தாத்தா அம்மு.”
“ஓ…”
“பிரிட்டிஷ் காரங்க மாதிரியே இங்கிலீஷ் பேசுவார்.” சிரிப்போடு சொன்னவன் ஒரு பெரிய ஆல்பத்தை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“பார்த்துக்கிட்டு இரு அம்மு. இதோ வந்தர்றேன்.” சொன்னவன் வெளியே போய்விட்டான். அவன் கொடுத்த ஆல்பத்தைப் பிரித்தாள் சுமித்ரா.
விஜயேந்திரனின் ஆல்பம் அது. சிறு வயது முதல் படிப்படியாக ஒவ்வொரு வயதிலும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தது. குழந்தையாக இருக்கும் போது குடும்பமாக எடுக்கப்பட்டிருந்த ஃபோட்டோக்கள். ஒரு வயதிற்கு மேல் நண்பர்கள் தான் அவனைச் சூழ்ந்திருந்தார்கள்.
அவளுக்குப் பரிட்சயமான அரும்பு மீசை முகம். ஒரு ஃபோட்டோவில் கரிகாலனும் நின்றிருந்தான். அவள் ஆல்பத்தைப் புரட்டிக் கொண்டிருக்கும் போதே இரண்டு பேர் மேஜை நாற்காலிகளை அந்த ரூமில் கொண்டு வந்து போட்டார்கள். பின்னாலேயே கங்கா உணவுப் பாத்திரங்களோடு வந்தாள்.
“இங்கேயே சாப்பிடலாம் சுமித்ரா.” விஜயேந்திரன் சொல்லவும் தலையை ஆட்டினாள் பெண். எல்லாவற்றையும் சரி செய்து விட்டு கொண்டு வந்த உணவுப் பொருட்களை மேஜையில் வைத்து இருவருக்கும் பரிமாறினாள் கங்கா.
அவள் பார்வை அடிக்கடி தன்னை மொய்க்கவும்,
“என்ன கங்கா?” என்றாள் சுமித்ரா.
“ரொம்ப அழகா இருக்கீங்கம்மா. பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு.” கங்கா சட்டென்று போட்டு உடைக்கவும் ஒரு மாதிரி ஆகிப்போனது சுமித்ராவிற்கு. சங்கடமாக விஜயேந்திரனைத் திரும்பிப் பார்த்தவள் தலையைக் குனிந்து கொண்டாள்.
“இங்கப்பாரு கங்கா! உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா எனக்கு முன்னாலேயே எம் பொண்டாட்டி அழகை ரசிச்சுப் பேசுவே நீ!” வேண்டும் என்றே அந்தப் ‘பொண்டாட்டி’ இல் அழுத்தம் கொடுத்தான் அரண்மனைக் காரன்.
“அம்மாவோட அழகை எங்களையும் கொஞ்சம் பார்க்க விடுங்க ஐயா. காலையில இருந்து நீங்க மட்டும் தானே பார்க்குறீங்க.” ஐயா கல்யாணக் களிப்பில் பேசவும் கங்காவும் விடாமல் பதில் சொன்னாள்.
சுமித்ராவிற்குத் தான் என்னவோ போல் ஆனது. இவர்கள் பேச்சில் சாப்பிட முடியாமல் நெளிந்தாள்.
“சரி சரி… போனாப் போகுதுன்னு உனக்கு மட்டும் இன்னைக்கு கொஞ்சம் பர்மிஷன் தர்றேன். அம்மாவை நல்லாப் பார்த்துக்கோ.”
“எங்க ஐயா காத்திருந்தாலும் காத்திருந்தாங்க, சுத்தி வர இருக்கிற எட்டூரலயும் இல்லாத அழகியைப் புடிக்கத்தான் காத்திருந்திருக்காங்க. இதுக்குத் தான் காத்திக்கிட்டு இருந்திருக்காங்கன்னு எங்களுக்கெல்லாம் தெரியாமப் போச்சே!” கங்கா பிலாக்கணம் விரிக்க சுமித்ராவை ஓரக்கண்ணால் பார்த்தபடி சிரித்தான் விஜயேந்திரன்.
“நீ இப்படியே பேசிக்கிட்டு இருந்தா உன்னோட அம்மா சாப்பிட மாட்டாங்க. நீ ஓடு.” மனைவியின் சங்கடத்தை ரசித்தவன் கங்காவை விரட்டி விட்டான். அவளும் சிரித்தபடியே நகர்ந்து விட்டாள்.
“அடடா! என்ன இங்க இவ்வளவு சத்தம்?” கேட்டபடியே மூச்சு வாங்க வந்தார் கோதை நாயகி.
“சுமித்ரா, நீ இங்க இருக்கியா? நான் கீழே தேடினேன்.” சொன்னவர் கட்டிலில் தொப்பென்று அமர்ந்தார்.
“நான் தான் மேலே கூப்பிட்டேன் அத்தை. எல்லா இடத்தையும் சுத்திக் காட்டலாம்னு.”
“அதுவும் சரிதான். சுமித்ரா, சாப்பிட்டு முடிச்சிட்டு புடவையை மாத்திக்கோ மா. நகையெல்லாம் போட்டுக்கோ. விருந்தாளிங்க எல்லாம் வருவாங்க.” கோதை நாயகி சொல்லவும் தலையை ஆட்டினாள் சுமித்ரா.
“அத்தை! நான் சுமித்ராவை வெளியே கூட்டிட்டு போகலாம்னு பார்த்தேன்.”
“நல்லாப் பார்த்தே போ! இதுக்கே உங்கம்மா என்ன சொல்லுவாங்களோன்னு எனக்கு உள்ளெடுப்பு எடுக்குது. இதுல நீ வேற ராஜா.” பதட்டமாகச் சொன்னவர் கையோடு சுமித்ராவையும் அழைத்துக் கொண்டார்.
“இப்போ கூட்டிட்டுப் போனா எல்லாரும் போக ராத்திரி ஆகிடும் அத்தை.” பிடிவாதமாக நின்றான் மருமகன்.
“சும்மா இரு விஜயேந்திரா. உங்கம்மாக்கு யாரு பதில் சொல்லுறது? நாளைக்குப் போகலாம்.”
“நாளைக்கும் இதையே தான் சொல்லுவீங்க.”
“அப்போ ஒரு வாரம் கழிச்சுப் போ.” சொன்னவர் சுமித்ராவோடு நகர்ந்து விட்டார்.
கோதை நாயகியின் இழுப்புக்கு அவர் பின்னோடு போனவள் விஜயேந்திரனைத் திரும்பிப் பார்த்தாள். பொம்மையைப் பறிகொடுத்த குழந்தையைப் போல போகும் மனைவியையே பார்த்திருந்தான் விஜயேந்திரன்.
**********
மாடியிலிருந்து இறங்கி வந்த சுமித்ராவும் கோதை நாயகியும் அமிழ்தவல்லியின் ரூமைத் தாண்டும் போது கதவு திறந்தது. வெளியே வந்தவரின் பார்வை சுமித்ராவைத் துளைக்கவும் ஒன்றும் புரியவில்லை இளையவளுக்கு.
“இது என்ன புதுப் பழக்கம் கோதை?”
“அது… ராஜா தான் மேலே கூப்பிட்டிருக்கான் அண்ணி.” தடுமாறிய படி பதில் சொன்னார் கோதை நாயகி. சுமித்ராவிற்கு ஒன்றும் புரியவில்லை.
“ஆண்பிள்ளை அப்படித்தான் கூப்பிடுவான். நாம தான் இதையெல்லாம் கொஞ்சம் யோசிக்கணும்.” வார்த்தைகள் அத்தனை சரியாக வந்து விழவில்லை. கோதை நாயகியே கொஞ்சம் தவித்துப் போனார்.
அமிழ்தவல்லியின் சத்தம் கேட்டு மங்கை கூட ரூமிலிருந்து வெளியே வந்தாள். ஆங்காங்கே வேலை பார்த்திருந்தவர்கள் அரண்மனை அம்மாவின் குரலில் அங்கிருந்து நகர்ந்து விட்டார்கள். அதுவே வழக்கம் என்பது போல.
சுமித்ராவிற்கு என்ன நடக்கின்றதென்று புரியவில்லை. ஆனால் தன்னைப்பற்றித்தான் தனது மாமியார் ஏதோ தவறாகப் பேசுகிறார் என்று மட்டும் புரிந்தது.
‘ஆண்பிள்ளை கூப்பிட்டானா?’ என்ன மாதிரியான வார்த்தை இது? அந்த ஆண்பிள்ளை அவள் கணவன் என்பது இவருக்குத் தெரியாதா?
“இதுக்குத்தான் நம்ம தகுதிக்கு ஏத்தா மாதிரி பொண்ணு எடுக்கணும்னு சொல்றது.” நெருப்பை வாரி இறைத்து விட்டு நகர்ந்து விட்டார் அமிழ்தவல்லி. சுமித்ராவின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.
“அக்கா! நீங்க உள்ளே வாங்க.” ஓடி வந்த மங்கை சுமித்ராவின் கையைப் பற்றி அவள் ரூமிற்குள் அழைத்துச் சென்றாள். ‘தகுதி’ என்ற வார்த்தை சுமித்ராவை வெகுவாகக் காயப்படுத்தி இருந்தது.
“இந்தத் திமிர் பிடிச்ச அத்தை எப்பவுமே இப்படித்தான். நீங்க அழாதீங்க அக்கா. அத்தான் கிட்ட மாட்டி விர்றேன். அப்போ தெரியும் இவங்களுக்கு.” வன்மம் பாராட்டிய மங்கையின் கையைப் பிடித்துக் கொண்டாள் சுமித்ரா.
“பரவாயில்லை விடு மங்கை. உங்க அத்தான் கிட்ட எல்லாம் இதைச் சொல்ல வேணாம். ப்ளீஸ்.” சுமித்ரா கெஞ்சவும் அவள் கண்ணீரைத் துடைத்து விட்டாள் மங்கை. அதற்கு மேல் அதைப்பற்றி அங்கு யாரும் எதுவும் பேசவில்லை.
அன்றையப் பொழுது முழுவதும் விருந்தினர் கேளிக்கை என்றே கழிந்தது. விஜயேந்திரனை சுமித்ரா கண்ணாலும் காணவில்லை.
சுற்றி வர இருந்த ஊர்களின் ஜமீன்தார் வீட்டுப் பெண்கள் எல்லோரும் வந்த வண்ணமே இருந்தார்கள். மேல்தட்டு வர்க்கத்திற்கு ஏற்ற நடை உடை பாவனைகள்.
அமிழ்தவல்லி ஒரு ராணி போல அமர்ந்திருந்து அத்தனை பேரோடும் அளவளாவினார். சுமித்ராவிற்குத் தான் மூச்சு முட்டியது.
அந்தப் புரத்திலேயே பெண்களுக்குத் தனியாக பெரிய விருந்தும் பரிமாறப்பட்டது.
கங்காவும் இன்னும் சில பெண்களும் ஓடியோடி வேலை செய்த வண்ணமே இருந்தனர். சுமித்ராவிற்குக் கவலையாகிப் போனது. என்ன மாதிரியான வாழ்க்கை முறை இது? இவர்களுக்கு இதுதான் என்று வகுத்து வைத்தது யார்?
ஏதேதோ எண்ணமிட்டபடி அன்று முழுவதும் அவளை உறுத்திக் கொண்டிருந்த கனமான பட்டுப் புவையையும் நகைகளையும் களைந்துவிட்டு குளியல் போட்டவள் மெல்லிய கரையிட்ட காட்டன் புடவை ஒன்றைக் கட்டிக் கொண்டாள்.
கூந்தலைத் தூக்கி கொண்டை போட்டவள் நந்தவனத்துக்குள் நுழைந்து கொண்டாள். ஏனோ அந்த இடத்தைத் தான் அவளுக்கு அவ்வளவு பிடித்திருந்து.
அந்தப்புரத்திற்கு அப்பால் தான் சமையல் கட்டு இருந்தது போலும். ஆரவாரம் அடங்காமல் இன்னும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
“சுமித்ரா!” அந்தக் குரலில் திரும்பினாள் சுமித்ரா. விஜயேந்திரன் தான் நின்றிருந்தான். அவன் வந்தால் நன்றாக இருக்கும் என்று அப்போதுதான் நினைத்திருந்தாள்.
நினைத்த மாத்திரத்தில் அவன் கண்ணெதிரே தோன்றவும் அவளுக்கு மகிழ்ச்சியாகிப் போனது. தன்னைப் பார்த்த மாத்திரத்தில் மலர்ந்த அந்த முகத்தை விஜயேந்திரனும் ரசித்துப் பார்த்தான்.
“இங்க சமையல்கட்டு எங்க இருக்கு?”
“என்னாச்சு சுமித்ரா?” மனைவியின் கேள்வியில் ஆச்சரியப்பட்டான் கணவன்.
“என்னை அங்க கூட்டிட்டுப் போறீங்களா?”
“எதுக்கு?”
“ப்ளீஸ்… கூட்டிட்டுப் போங்களேன்.” அவள் கெஞ்சவும் புன்னகைத்தவன்,
“வா.” என்றான். அந்தப்புரத்தின் மறுபக்கமாக இருந்தது சமையல்க்கட்டு. சுமித்ராவின் வீட்டை விடப் பெரிதாக இருந்தது அந்த இடம்.
பெரிய பெரிய அண்டாக்கள், அடுப்புகள், சமையலுக்குத் தேவையான காய்கறிகள் என அனைத்தும் நிறைந்திருந்தன. கங்காவோடு சேர்ந்து இன்னும் நான்கைந்து பெண்கள் அப்போதும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
விஜயேந்திரன் வாசலில் நின்று விட சுமித்ரா சமையல்க் கட்டிற்குள் நுழைந்தாள். அந்த நேரத்தில் அவளை அங்கு எதிர்பார்த்திராத பெண்கள் திகைத்துப் போனார்கள்.
“ஐயோ அம்மா! நீங்க இங்க என்ன பண்ணுறீங்க? ஏதாவது வேணுமா?” பதட்டமாக ஓடி வந்தாள் கங்கா. வெளியே ஐயாவும் நிற்கவும் கங்காவிற்கு நடுக்கமே வந்து விட்டது.
“ஐயா! ஏதாவது பிரச்சனையா? என்ன இந்த நேரத்தில இங்க வந்திருக்கீங்க?”
“நான் தான் உங்களையெல்லாம் பார்க்கணும்னு உங்க ஐயாக்கிட்ட சொன்னேன் கங்கா.” சுமித்ரா சொல்லவும் ஒன்றும் புரியாமல் விஜயேந்திரனைப் பார்த்தாள் கங்கா. அவன் ஒரு புன்னகையோடு மௌனமாகவே நின்றிருந்தான்.
“இன்னைக்கு சமையல் எல்லாம் யாரு பண்ணினாங்க கங்கா?”
“நாங்கதாம்மா.”
“அப்படியா! ரொம்ப அருமையா இருந்தது. எனக்கு அதை அப்பவே சொல்லணும்னு தோணிச்சு. ஆனா அத்தனை பேர் முன்னாடி எப்படி சொல்றதுன்னு தான் சொல்லலை.”
கங்காவும் அங்கு நின்றிருந்த பெண்களும் ஆச்சரியப் பட்டுப் போனார்கள். அவர்கள் வழி வழியாக அந்த அரண்மனையில் வேலை பார்ப்பவர்கள். அவர்களுக்கு இது போன்ற வார்த்தைகள் புதிது. வேலை செய்வதற்கென்றே பிறந்தவர்கள் போல ஏவல்களுக்கே பழக்கப்பட்ட வாழ்க்கை அவர்களது.
“அம்மா!”
“அத்தனை ருசியா சமைச்சது மட்டுமில்லாம எல்லாரையும் ஓடியோடிக் கவனிச்சீங்க. யாருக்குமே புது இடம் எங்கிற கூச்சமே வராம பார்த்துக்கிட்டீங்க.” சுமித்ரா சொல்லவும் வாயெல்லாம் பல்லாகிப் போனது பெண்களுக்கு.
“நானெல்லாம் புதிய இடம்னா சாப்பிடவே சங்கடப்படுவேன். இன்னைக்கு எனக்கு அப்படித் தோணவே இல்லை கங்கா. ரொம்பவே தான்க்ஸ்.”
“சரிங்கம்மா.” கங்காவிற்கு கண்கள் எல்லாம் கலங்கிப் போனது.
“உங்க பசங்க எல்லாம் என்ன பண்ணுறாங்க கங்கா?”
“பள்ளிக்கூடம் போறாங்கம்மா.”
“குட். படிக்க வைக்கணும் கங்கா. அவங்க எல்லாம் நல்ல நிலைமைக்கு வரணும். உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் தயங்காம உங்க ஐயாக்கிட்ட கேக்கணும் சரியா?”
“சரிங்கம்மா.” தலையாட்டியவள் வலது கையால் சுமித்ராவிற்கு திருஷ்டி கழித்தாள்.
“ஐயா! எங்கம்மா எத்தனை அழகு பார்த்தீங்களா?” காலையில் சொன்ன அதே வார்த்தையை இப்போதும் கங்கா சொன்னாள். ஆனால் இப்போது அர்த்தம் தான் மாறுபட்டுப் போனது. விஜயேந்திரன் முகத்தில் புன்னகை வாடவில்லை.
“போகலாமா சுமித்ரா?” கணவனின் குரலில் அங்கிருந்தவர்களிடம் தலையசைத்து விடை பெற்றுக் கொண்டாள்.
“கொஞ்ச தூரம் நடந்துட்டு வரலாமா அம்மு?”
“ரொம்பவே லேட் ஆகிடுச்சே?”
“பரவாயில்லை டா. போயிட்டு வரலாம்.” அந்த முகம் ஆவலாகத் தன்னிடம் எதையாவது கேட்கும் போது மறுக்க மனம் துணியவில்லை சுமித்ராவிற்கு.
அரண்மனையின் தலை வாசலைக் கடந்து இரண்டு பேரும் வெளியே வந்தார்கள். வாசலில் நின்ற கூரக்காவைத் தவிர ஊரே அடங்கி இருந்தது.
“அப்புறம், இன்னைக்கு நாள் எப்படிப் போச்சு சுமித்ரா?” பொடி நடையாக நடந்த படி கேட்டான் விஜயேந்திரன். வேட்டியின் நுனியை ஒரு கையால் தூக்கிப் பிடித்தபடி அவன் நடப்பது பார்க்க அத்தனை கம்பீரமாக இருந்தது.
“ம்… விருந்தாளிகள் கூடவே போச்சு.” அவள் குரலில் சுவாரஸ்யம் இருக்கவில்லை.
“என்ன திடீர்னு சமையல்க்கட்டுக்கு விஜயம்?” அவன் கேட்கவும்,
‘ஆமா! விஜயேந்திரன் சகிதம் விஜயம்.’ மனதுக்குள் இப்படித் தோன்றவும் கள்ளமாகப் புன்னகைத்தாள் சுமித்ரா.
“மனசுக்குள்ள என்னவோ ஓடுற மாதிரித் தெரியுது!” அவன் அவளை இலகுவாகக் கண்டு கொண்டான்.
“ஒன்னுமில்லை.” சட்டென்று சிரித்தாள் மனைவி.
“அப்படித் தெரியலையே!” அவள் புன்னகை அவனையும் தொற்றிக் கொண்டது.
“இல்லை… சமையல்க் கட்டுக்குக்கு விஜயம்னு சொன்னீங்களா… நான் உங்க பெயரையும் அதோட சேர்த்துக்கிட்டேன்.” அவள் சொன்னதன் அர்த்தம் புரிய கொஞ்ச நேரம் தேவைப்பட்டது அவனுக்கு. புரிந்த போது வாய்விட்டுச் சிரித்தான்.
“மனுஷங்க எல்லாருமே ஏங்கிறது சின்னதா ஒரு பாராட்டுக்குத் தானே! அத்தனை கஷ்டப்பட்டு நாள் முழுக்க ப்ராக்டீஸ் பண்ணி ப்ரோக்ராம் பண்ணி முடிக்கும் போது யாராவது ‘எத்தனை அற்புதமா ஆடினே கொழந்தை’ ன்னு சொல்லும் போது பூரிச்சுப் போகுதே. அது மாதிரித் தானே அவங்களுக்கும்?”
“சரிதான், ஏன் அம்மு? இன்னைக்கு அம்மா ஏதும் சொன்னாங்களா?” பேச்சு வாக்கில் அவன் கேட்கவும் சுமித்ரா மிரண்டு போனாள்.
“இல்லையே… அப்படி ஒன்னும் இல்லையே.”
“ம்… அப்போ சரி.” நிதானமாகவே சொன்னவன் இன்னும் கொஞ்சம் தூரம் அவளோடு நடந்து விட்டு அரண்மனைக்குத் திரும்பினார்கள்.
“குட்நைட்.”
“சுமித்ரா!” நகர்ந்தவளைத் தடுத்தது விஜயேந்திரனின் குரல். திரும்பியவள் அப்படியே நின்றாள்.
“இஃப் யூ டோன்ட் மைன்ட்… இன்னைக்கு எங்கூடத் தங்கலாமே!” அந்தக் குரலில் அத்தனை ஆசை இருந்தது.
சுமித்ராவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. கேட்பவனின் கண்களில் எந்தக் கல்மிஷமும் தெரியவில்லை அவளுக்கு. தாலி கட்டியவனின் கண்ணியமான அழைப்பு.
உரிமை எடுக்காமல் நட்புக் கரம் நீட்டுபவனை மறுக்க அவளுக்குச் சக்தியும் இருக்கவில்லை.
ஆனால் அவன் அம்மா? அரண்மனையின் சம்பிரதாயங்களில் ஊறிப்போன அவருக்கு யார் பதில் சொல்வது? தகுதி இல்லாதவள் என்று இன்று சாதாரணமாகச் சொல்லி விட்டாரே.
“அம்மு… என்னோட ரூமுக்கு வர இத்தனை யோசனையா?”
“இல்லையில்லை… அப்படி இல்லை. இந்த அரண்மனைக்குன்னு சில சம்பிரதாயங்கள் இருக்கும் போல. அதை நான் உடைக்க வேணாமேன்னு பார்க்கிறேன். அவ்வளவு தான்.”
“அம்மா இன்னைக்கு என்ன சொன்னாங்க அம்மு?”
“தப்பா எதுவும் சொல்லலை. தெரியாததைக் கத்துக் குடுத்தாங்க.”
“எது? உன்னோட தகுதி என்னன்னு உனக்கே கத்துக் குடுத்தாங்களே, அதுவா?” விஷயம் அவன் காதுக்கு எட்டி இருக்கிறது.
“என்னோட பொண்டாட்டி என்னைப் பார்க்க எங்கூடப் பேச இங்க வரக்கூடாதுன்னா அந்தச் சம்பிரதாயம் எனக்குத் தேவையில்லை ம்மா.”
“சம்பிரதாயங்களையும் மரபுகளையும் உடைக்கிறது சிலருக்குக் கஷ்டமா இருக்கலாம் இல்லையா?” இதைச் சொல்லும் போது அவள் தலை தானாகக் குனிந்து கொண்டது.
“இப்போ நீ என்ன சொல்ல வர்ற அம்மு? எங்கூட வர்றியா? மாட்டியா?” அந்தக் குரலும் முகமும் அவளை வசியம் பண்ணியது. இதழ் பிரித்து அழகாகப் புன்னகைத்தாள். குஷியாகிப் போனான் விஜயேந்திரன்.
முகம் மலர்ந்து போக அவளை அழைத்துக் கொண்டு போனவன் அவள் சம்பந்தப்பட்ட அனைத்தையும் கடை பரப்பினான்.
“நம்ம காதலுக்கு உலை வெச்சது இதுதான்.” ஒரு ஃபோட்டோவை அவன் காண்பிக்க அதை வாங்கிப் பார்த்தாள் சுமித்ரா.
எங்கோ ஒரு கோவிலில் அபிநயம் பிடித்தபடி இருந்தாள் பெண். மிகவும் இளமையாகத் தெரிந்தது முகம்.
“இது யாரு எடுத்தா?”
“நான் தான்.”
“ஓ…”
“ஸ்டுடியோ காரன் பிரிண்ட் போட்டுக் கொண்டு வந்து நேரா எங்க அப்பா கையில குடுத்துட்டான்.”
“………….”
“என்னைக் கூப்பிட்டு விசாரிப்பாருன்னு தான் எதிர்பார்த்தேன். ஆனா அவர் நேரா உங்க வீட்டுக்கு வந்துட்டார்.”
“……………”
“அவர் வந்தது எனக்குத் தெரியாது சுமித்ரா. தெரிஞ்சிருந்தா பின்னாடியே வந்திருப்பேன். கரிகாலன் தாலி கட்டினது, நீ உங்க அத்தை மாமாவோட போனது எதுவுமே எனக்குத் தெரியாது. நான் பாட்டுக்கு அப்பா கூப்பிட்டுக் கேட்டா எப்படி பதில் சொல்றதுங்கிற யோசனையிலேயே திரிஞ்சிருக்கேன், மடையன் மாதிரி.”
“தூங்கலாமா?” பேச்சை மாற்றினாள் பெண். அவன் வருந்துவது அவளுக்குப் பிடிக்கவில்லை.
“இன்னும் கொஞ்சம் பேசலாமே அம்மு. இதையெல்லாம் பாரு.” மீண்டும் அவன் கொஞ்சம் புகைப்படங்களைக் காட்டினான். கோதை நாயகி அவர்கள் வீட்டுக்கு வந்த அன்று ஸ்டீஃபன் எடுத்த படங்கள்.
“கடைசி ஒரு மாசமும் எனக்குத் துணை இந்தப் படங்கள் தான் அம்மு.” ஏதேதோ கதைகள் பேசினான் விஜயேந்திரன். கட்டிலில் அமர்ந்தபடி கொஞ்ச நேரம் கேட்டிருந்தாள்.
கட்டிலில் தலையைச் சாய்த்தபடி இன்னும் கொஞ்ச நேரம் கேட்டிருந்தாள். கடைசியாக அவளிடம் பதிலில்லாமல்ப் போகத் தூங்கிப் போயிருந்தாள். அவள் முகத்தை எட்டிப் பார்த்த விஜயேந்திரன் சிரித்தான்.
இருந்த வாக்கில் கட்டிலில் தலை சாய்த்திருந்தவள் உறங்கிக் கொண்டிருந்தாள். அலுங்காமல் அவளைத் தூக்கியவன் வாகாகப் படுக்க வைத்தான். அந்தக் குமரியின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.
தூங்கும் பெண்ணையே பார்த்திருந்தான் விஜயேந்திரன். அவன் ஆசைப்பட்ட சுமித்ரா… அவனோடு, அவன் அறையில். நினைக்கும் போதே பரவசமாக இருந்தது. எத்தனை நாள்க் கனவு இது! கனவாகிப் போன காதலி இன்று நிஜமாகவே அவனோடு இருக்கிறாள்… மனைவியாக.
‘என்னை ஏற்றுக்கொள்ள இவளால் முடியாதாமா? முடியாமல்த் தான் நான் கூப்பிடும் போதெல்லாம் இப்படி என்னோடு ஓடி வருகிறாளாமா? என் அம்மா அத்தனை சொல்லியும், முதலில் தயங்கினாலும் பிற்பாடு வந்து விட்டாள் தானே! இது எப்போது இவளுக்குப் புரியப் போகிறது?’
மனைவியின் முகத்தைப் பார்த்தபடியே விஜயேந்திரனும் உறங்கிப் போனான்.