MS #3

MS #3

3

வாகனம் ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தை தொடுகையில் சில்லென்ற கடற்காற்று வீசியது. பிரம்மாண்டமான பொட்டிகளாக ஷாப்பிங் கடல்களோடு(கடைகளோடு) சேர்ந்த அழகு. இதை காணும் போதெல்லாம் ஒருவகையில் பிரமிப்பை தருமே தவிர, அவளது மனதிற்கு நெருக்கமாக இராது!

அவை வெறும் பிரம்மாண்டம்!

பண செழுமையை காட்டும் பிரம்மாண்டம்!

அவ்வளவே!

அதற்கும் மேல் அதன் மேல் நாட்டமிருந்ததில்லை கவின் மலருக்கு!

சிறு வயது முதல் அது போன்ற இடங்களை தவிர்த்து பழகியதால் வந்த ஒவ்வாமையா? அல்லது தாழ்வு மனப்பான்மையா?

எதுவென்று அவளால் பிரித்துணர முடியவில்லை. ஆனால் அந்த இடங்களை அவள் விரும்புவதில்லை. அது மட்டும் உண்மை!

அந்த படாடோபமான பங்களாவின் முன் தன் வண்டியை நிறுத்திவிட்டு ஹாசனுக்காக காத்துக்கொண்டிருந்தாள். தன்னோடு தானே வந்தான்? தனக்கு பின்னும் இவன் ஏன் வராமல் இருக்கிறான்? அவளுள் கேள்வி எழ, கை கடிகாரத்தை நாலாவது முறையாகப் பார்த்தாள்.

பல கேள்விகளை தாண்டி, அவளது அடையாள அட்டையை காட்டி, வாட்ச்மேன் இன்டர்காமில் உள்ளே தொடர்பு கொண்டு கேட்டு, அவளை அனுமதித்திருந்தான்.

தேவைதான்… அத்தனை பெரிய ரசிகர் படைக்கு சொந்தக்காரன். இந்த அலம்பல் கூட செய்யவில்லை என்றால் தானே ஆச்சரியம். இன்னும் இந்த ஹாசன் வந்தபாடில்லை.

வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு முகத்துக்கு கட்டியிருந்த முகமூடி, கைக்கு அணிந்திருந்த மாஸ்க் என்று அனைத்தையும் கழட்டி வண்டிக்குள் திணித்துவிட்டு நிமிர்ந்தாள்.

தனக்கு தேவையான விஷயங்களை இந்தரிடமிருந்து பெற முடியுமா? பிரச்சனை இல்லாமல் இந்த ஆர்டிகளை முடிக்க முடியுமா என்ற கேள்வி அவளது மனதுக்குள் ரீப்ளே ஆகிக்கொண்டே இருந்தது.

அவனது அந்த ஒற்றைப் பார்வையின் ஆழத்தை அவள் உணர்ந்திருந்தாள்.

அதன் அர்த்தம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அந்த பார்வையின் கூர்மை அலாதியானது.

வாகன நெரிசல்கள் இல்லாத சற்று அமைதியான தெரு அது. போஷ் என்று சொல்வார்களே… அது போல! பல்வேறு வகையான கார்கள் அந்த தெருவை ஆக்கிரமித்து நின்றுக்கொண்டிருந்தன. அவள் அறிய மாட்டாள், இவையிவை இந்திந்த வகை கார்கள் என்று. அதன் சொகுசையோ விலையையோ அறிய ஆர்வம் எழுந்ததில்லை. அதனால் அதன் பக்கம் அவளது ஆர்வப் பார்வை சென்றதில்லை.

ஆனால் தோட்டங்களின் மீது சொல்லவொண்ணா காதலுண்டு. அவளது வாழ்நாள் லட்சியம் என்னவென்றால், தோட்டத்தோடு கூடிய ஒரு குட்டி வீடு.

அது ஒற்றை படுக்கையறையாக இருந்தாலும் அதில் ஒரு குட்டித் தோட்டமாவது இருக்க வேண்டும், அவளைப் பொறுத்தமட்டில்! அது சென்னையில் தான் சாத்தியமாக வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அது எங்கு இருந்தாலும் சரி, அவளது குட்டி ஆசையும் அதுதான், மிகப் பெரிய ஆசையும் அது மட்டும் தான்.

இன்னொரு காரணமும் உண்டு அவளது இந்த ஆசைக்கு!

சிறு வயது முதல் ஆசிரமத்தில் வளர்ந்தவளுக்கு, முதன் முதலில் தனியாக அறை எடுத்து தங்கியதே பெரிய சாதனை!

தன்னுடையது… தனது… தனக்காக வாங்கியது… தனக்காக மட்டுமே வாங்கியது என்பதெல்லாம் அவளை பொறுத்தவரை மிகப்பெரிய விஷயம்.

ஆசிரமத்தில் அவர்களுக்காக கொடுக்கப்படும் எதுவுமே புதியது கிடையாது. யாரோ ஒருவர் உபயோகித்து வேண்டாம் என்று தூக்கி எறிந்ததை வீணாக்கக் கூடாது என்று கொண்டு வந்து கொடுப்பார்கள். பெரும்பாலும் இதுதான் நடக்கும்.

அணியும் ஆடை முதல் உண்ணும் தட்டு வரைக்குமே பழையது தான்.

அப்போதெல்லாம் அது கிடைப்பதே பெரிய விஷயம். இதில் பழையது என்ன? புதியது என்ன? அவளைப் பொறுத்தவரை அனைத்தும் ஒன்றே.

ஆனால் படித்து வேலை வாங்கி, முதல் மாத சம்பளத்தில் ஆசிரம குழந்தைகள், பெரியவர், அவளுக்கு என புது துணியை வாங்கிக் கொடுத்து அணிந்த போது மனதுக்குள் அத்தனை சிலிர்ப்பு!

புது ஆடை… தன்னுடையது புதிய ஆடை என்ற சிலிர்ப்பில் கண்கள் கசிந்தது.

“அக்கா… புதுச்சட்டையாக்கா?” என்று ஆச்சரியமாக கேட்டு அணிந்த பிள்ளைகளின் முகத்தில் அவள் கண்ட ஆனந்தம்… சொல்லில் அடக்க முடியாதது!

அதிலும் முதன் முதலாக தனக்காக வாங்கிய வார்ட்ரோப்பை அவள் எத்தனை நாட்கள் தடவிப் பார்த்திருப்பாள்? அதன் வாசத்தை உணர்ந்து அனுபவித்து இருப்பாள்? புதிய விஷயங்களுக்கே உண்டான பிரத்யோக வாசனை!

அதை தொட்டு, தடவி, கண்களை மூடி அனுபவித்த போது ‘நானே வாங்கினேன்…’ என்ற கர்வம் அந்த தொடுகையில் மிளிர்ந்தது என்பதை வசு எத்தனை நாட்கள் சொல்லிக்காட்டி சிரித்திருப்பாள்? அந்த சிரிப்பும் கூட, தோழியை நினைத்து பெருமையாக சிரித்த சிரிப்பல்லவா!

ஆசிரமத்தில் கண்ணியமான வாழ்க்கை தான் என்றாலும், தனி பீரோவோ, கட்டிலோ, மெத்தையோ நினைத்தும் பார்க்க முடியாது. அப்போதெல்லாம் அதற்கு அவள் ஆசைப்படவும் இல்லை. ஆனால் அவற்றை எல்லாம் தன்னால் வாங்க முடியும் என்ற நிலை வந்த போது, உள்ளுக்குள் பொங்கிய மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அதற்கு ஈடான சரியான தமிழ் வார்த்தையே கிடையாது.

அது ஒரு அனுபவம் !

அது அனுபவித்து பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

அது போலவே தான் வீடும்!

சிறு வயது முதலே தன்னுடைய இடம் என்று சொல்வதற்கு எதுவுமே இருந்ததில்லை. தனக்கான மண் என்று இல்லாத போதுதான் அந்த மண்னை லட்சியமாகக் கொள்ள முடியும் போல!

அதுவும் தோட்டத்தோடு கூடிய குட்டி வீடு!

கண்டிப்பாக ஒரு நாள், தானே உழைத்து அந்த கனவை நனவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது கவினுக்கு.

அதிலும் அறைக்கு வெளியே சிறு தொட்டிகளில் குட்டி குட்டி செடிகளாக வளர்த்து வருபவளுக்கு, அந்த பிரம்மாண்ட தோட்டம் ஆச்சரியத்தை கொடுத்தது.

அந்த நெருக்கடியான இடத்தில் அங்கு இவ்வளவு பெரியத் தோட்டத்தைப் பார்க்கையில் புருவம் உயர்ந்தது!

ஆனால் அந்த வீட்டின் பிரம்மாண்டமெல்லாம் அவளை ஆச்சரியப்படுத்தவில்லை. பயமுறுத்தவில்லை. ஆனால் தோட்டத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஹாசன் வந்தபிறகு உள்ளே சென்று கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அந்த பக்கமாகவே நின்றுக் கொண்டிருந்தாள்.

இவனென்ன வண்டியை உருட்டிக்கொண்டு வருகிறானா என்று மீண்டும் அவளது பார்வை கேட் பக்கமாக பாய்ந்தது. ‘அறிவு கெட்டவனே… இன்னும் எவ்வளவு நேரம் டா இங்கேயே என்னை காவ காக்க வைப்ப?’ மனதுக்குள் ஹாசனை ‘புகழ்ந்த’ படியே மீண்டும் தனது கை கடிகாரத்தை பார்வையிட்டவள், “மச்…” என்று சலித்துக் கொண்டாள்.

அவள் உள்ளே நுழைந்தது முதல், அவளது ஒவ்வொரு அசைவையும் ஒரு ஜோடிக் கண்கள் விடாமல் ஆர்வமாக படம் பிடித்துக் கொண்டிருந்தது.

முகத்தை முகமூடி போட்டு மறைத்துக்கொண்டு வாட்ச்மேனிடம் பேசியது, அடையாள அட்டையை காட்டிவிட்டு அதை நாசூக்காக கழுத்தில் அணிந்துக் கொண்டது, அதன் பின் உள்ளே வந்தவள்… ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு அவளது இன்னபிற கவசங்களை கழட்டி வண்டிக்குள் திணித்தது விட்டு நிமிர்ந்து தோட்டத்தை ஆர்வமாக பார்த்தது, அதோடு நான்கு முறை கடிகாரத்தை பார்த்து சலிப்பாக ‘உச்’ கொட்டி கொண்டது வரை ஒன்றையும் விடாமல் பார்த்துக் கொண்டிருந்தன, அந்த கண்கள்!

அந்த கண்களில் ஏதோவொரு சொல்ல முடியாத பாவம். அவ்வளவு சீக்கிரத்தில் எதையும் வெளிப்படுத்திவிடாத கண்கள் தான் அது. அந்த முகத்துக்கும் அந்த இறுக்கமான கண்கள் தான் ரொம்பவும் ஸ்பெஷலும் கூட.

அந்த கண்களில் தெரிந்த ஆர்வம் யாருமே எதிர்பார்க்கமுடியாதது.

எதுவும் பேசாமல் இன்டர்காமில் வாட்ச்மேனை அழைத்தது அந்த விழிகளுக்கு சொந்தமான கை!

“வெளிய யார் வெய்ட் பண்றாங்க?” அதிகாரமாக கேட்டது அந்த குரல்.

“சர்… பத்திரிக்கைகாரங்க போல இருக்கு… நீங்க வர சொன்னதா சொன்னாங்க… இப்பதான் பிஏ சர் கிட்ட இன்பார்ம் பண்ணேன்…” வெகு சிரத்தையாக அவன் கூற,

“ம்ம்ம்… தெரியும்… ஏன் இன்னும் அவங்க அங்கவே நின்னுட்டு இருக்காங்க?”

“அவங்களோட ப்ரெண்டுக்கு வெய்ட் பண்றாங்க போல சர்… அவர் இன்னும் வரலை…” என்று அவன் கூறிக்கொண்டிருக்கும் போதே ஹாசன் உள்ளே நுழைந்தான். அவனை மாடியிலிருந்து பார்த்த அந்தக் கண்கள்,

“சரி… சீக்கிரம் மேலே அனுப்பு…” என்றுக்கூறிவிட்டு வைத்தது அந்த குரல்.

அந்த குரலுக்கும் கண்களுக்கும் சொந்தக்காரன் இந்தர்!

இந்த்ரஜித்!

அவனே அழைத்து கூறியபின் அந்த வாட்ச்மேன் அவர்கள் இருவரையும் பார்த்த பார்வையில் டன் கணக்கில் மரியாதை கூடித் தெரிந்தது.

“டேய் தம்பிப்பயலே… ஆக்டிவால வந்த நானே முன்னாடி வந்துட்டேன்… நீ என்னடான்னா ஆடி அசைஞ்சு வர்ற?” என்று கேலியாக கேட்க,

“ம்ம்ம் சொல்ல மாட்ட நீ?!  சிக்னல்ல நான் மாட்டினது கூட தெரியாம என்னமோ ப்ளைட் ஓட்டற மாதிரி பறந்துட்டு வந்துட்டு, என்னை சொல்றியா? பின்னாடி ஒரு சின்ன பையன் நம்மளை பாலோ பண்றானா இல்லையான்னு கூடவா பார்க்க மாட்ட சோப்பு?” என்று அவன் புலம்ப,

“ஏன்டா? நான் என்ன பொடனிலையா கண்ணை வெச்சுட்டு ஓட்ட முடியும்? ஒழுங்கா வாடான்னா… சிக்னல்ல ஏதாவது நல்ல பிகர் இருந்திருந்தா சைட் அடிச்சுட்டு நின்னுட்டு இருந்திருப்ப ஹ ஹ ஹாசினி…” என்று சரியாக அவனது நாடியை பிடித்திருந்தவள், உண்மையை பிட்டு வைத்துவிட, ‘ஹிஹி’ என்று சிரித்து மழுப்பினான்.

“சரி அதை விடு சோப்பு… இந்த ஆசாமி இப்படி பயம் காட்டி விடறார்?”

“யாரடா சொல்ற?” கேள்வியாக அவனைப் பார்க்க,

“அந்த ஸ்ரீநாத் தான் சோப்பு… என்னமோ தங்கமலை ரகசியத்தை நாம கேட்டுடுவோமோன்னு ஜாக்கிரதை, அது இதுன்னு… ரொம்ப சீன் காட்றாரு…”

“இந்த மாதிரி ஓவர் ஹைப் கொடுக்கறதும், அதை நாம கேட்டுக்கறதும் என்ன புதுசா ஹாசினிக் குட்டி… லீவ் இட்…” என்று சிரிக்க,

“அதானே…” என்றவன் அவனும் சிரித்தான்.

ஹெல்மெட்டை கழட்டி வண்டியின் மேல் வைத்து விட்டு ஞாபகமாக அவனது சிகை அலங்காரத்தை சரி செய்தவனை பார்த்த போது கவினுக்கு மீண்டும் புன்னகை மலர்ந்தது. இந்தர் அவனது பேவரிட் நடிகன்… நடிகன் என்பதை தாண்டி ஹாசனை பொறுத்தமட்டில் அவனொரு ஐகான்.

ஆனால் இந்நேரம் வரை அவள் தலையைக் கூட ஒதுக்கிக்கொள்ளவில்லை என்பது நினைவுக்கு வந்தது. ஆனாலும் அவள் அதைப் பற்றியெல்லாம் கவலைக் கொள்ளவே இல்லை. அலங்காரத்தை பற்றி என்று அவள் கவலைப்பட்டிருக்கிறாள்?

நலுங்கிய தோற்றம் தான்… அசதியாக இருந்தது தான்… சும்மாவே தலைமுடி காற்றில் நாட்டியமாடும்… இன்றைக்கு ஓவர் ஸ்பீடில் வந்தது வேறு… பரட்டையாகாமலிருந்தால் அதிசயம் தான் என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே,

“அதெப்படி சோப்பு… எனக்கு தெரியாம ரெப்ரெஷ் பண்ணியா? காலைல பார்த்த மாதிரியே பளிச்சுன்னு இருக்க?” என்று அவன் கிண்டலடித்தான். அந்த அளவு வெயிலில் அலைந்து கறுத்து போய் இருக்கிறாளாம்!

“போடா… போடா… உன்னை சைட்டடிக்கத்தான் உள்ள பொண்ணு வெய்ட்டிங்… நமக்கெல்லாம் எப்படி இருந்தாலும் ஓகே…” என்று அவள் பதிலுக்கு கிண்டலடிக்க,

“ஏய் உள்ள வெய்ட்டிங்ல இருக்கறது தென்னிந்தியாவின் கனவு கண்ணன் பக்கி… கொஞ்சமாவது உன்னை சரி பண்ணிக்க…” என்று அவன் அக்கறையாக கூற, கேலியாக அவனைப் பார்த்து சிரித்தாள்.

“டேய்… தம்பிப்பையா… நாம பேட்டி எடுக்க வந்தமா? இல்லைன்னா மாப்பிள்ளை பார்க்க வந்தமா? அடங்குடா ஹாசினி…” என்று சிரித்துக்கொண்டே கூறிக்கொண்டே சிட்அவுட்டை அடைந்தனர்.

அது பழைய மாடல் பங்களா. ஆனால் புதுப்பிக்கப்பட்டிருந்தது போல… ஜெயஷங்கர் படங்களில் வரும் பங்களாவை போல இருந்தது.

ஸ்ரீநாத் சிட்அவுட்டை ஒட்டிய அறையில் அமர்ந்திருந்தார். இவர்களைப் பார்த்தவுடன், வெளியே வர, இருவருமே சிநேகப் பூர்வமாக சிரித்து வைத்தனர்.

“ஒரு டூ மினிட்ஸ் ஹால்ல வெய்ட் பண்ண சொன்னார் சர்… இந்த பக்கமா வாங்க…” என்று வெய்ட்டிங் ஹாலுக்கு அழைத்து சென்றார் அவர்.

ஸ்ரீநாத்துக்கு வயது சுமார் நாற்பத்தி ஐந்துக்கு மேல் ஐம்பதுக்குள் இருக்கலாம். உடற்பயிற்சி வெகு சிரத்தையாக செய்வார் போல. பிட்டாக வைத்திருந்தார். நிதானமான நடை, நேர்கொண்ட பார்வை! நெற்றியில் கலையாத விபூதி. பளிச்சென்ற தெளிவான முகம். முதிர்ச்சியான பேச்சு. மொத்தத்தில் பார்த்தவுடன் மரியாதையாக வணங்க தோன்றும் தோற்றம்.

“சர்… உங்களுக்கு ஒரு பார்ட்டி பைவ் இருக்குமா?” ஹாசன் அவரது வாயை பிடுங்க, திரும்பி அவனைப் பார்த்து புன்னகைத்தவர்,

“ஐம்பத்தி ஆறு தம்பி…” என்று இயல்பாக அவரது வயதை கூற,

“சூப்பர் சர்… ரெகுலரா எக்சர்சைஸ் பண்ணுவீங்களோ?”

“ஆமா தம்பி… எப்பவுமே யோகா, வாக்கிங் கண்டிப்பா பண்ணிடுவேன்… இல்லைன்னா தம்பிக்கு பிடிக்காது…” என்று கூற,

“இந்தர் சாருக்கா?” ஹாசன் ஆர்வமாக கேட்டான். ஒரு செலிப்ரிட்டியை பற்றித் தெரிந்துக் கொள்ளும் ஆர்வம்.

பேசிக்கொண்டே அந்த ஆள் புதையும் சோபாவுக்குள் தங்களை புதைத்துக் கொண்டனர். அவ்வளவு மென்மை என்று மனம் ஒரு புறம் குரல் கொடுக்க, அந்த மனதை முறைத்தாள். ‘மனமே அடங்கு’ என்று அடக்கினாள். இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை பெரிய விஷயமாக்கக் கூடாது என்பது அவளது எண்ணம்!

“ம்ம்ம் ஆமா தம்பி… அவர் சரியான பிட்னஸ் மேனியாக்… வெளியூர் போனாக் கூட மினி ஜிம்மை தூக்கிட்டு போறவர்… மினிமமா வெய்ட்சாவது இருக்கும்… இல்லைன்னா போற ஊர்ல ஜிம்மை தேடித் போய்டுவார்… அப்படியும் இல்லைன்னா யோகா, ஜாகிங்காவது பண்ணியேயாகனும்… அவர் அளவு சின்சியரா செய்ய முடியாது தம்பி…” என்று இந்தரை பற்றி ஸ்ரீநாத் அளந்து விட்டுகொண்டிருக்க, கவின் பார்வையை சுழட்டினாள்.

பெரிய ஹால். ஒரு நான்கடி  நீளமிருக்கலாம் அந்த எல்ஈடி டிவி. ஹாலின் ஒரு மத்தியில் கம்பீரமாக வீற்றிருந்தது. அதோடு எளிமையாக வீற்றிருந்தது அவன் வாங்கிக்குவித்த ஷீல்டுகள். உடன் அவனது தந்தையின் ஷீல்டுகளும் இருந்தது போல.

எண்பதுகளில் சூப்பர் டூப்பர் ஹிட்களை கொடுத்த தயாரிப்பாளர்  சிவசந்திரனின் வாரிசு தானே இந்தரஜித்!

தயாரிப்பாளரின் வாரிசு என்ற முத்திரையோடு அலுங்காமல் குலுங்காமல் வந்தவன் என்று நினைத்துக்கொண்டாள்.

ஒரு சிலருக்கு வெற்றிகள் என்பது எழுதி வைக்கப்பட்ட ஒன்றாகி விடுகிறது. இந்தர் அந்த கேட்டகரி என்று தான் தோன்றியது. அதனால் தான் யாரைப் பற்றிய கவலையும் அவனுக்கு இல்லை போல. மனம் போன போக்கில் வாழ்வது மட்டுமல்லாமல் பல பெண்களையும் சீரழிக்கிறான். இதற்கு ஒரு முடிவு கட்டாவிட்டால் தன் பெயர் கவின்மலர் இல்லை என்று சூளுரைத்தாள்.

பேசிக்கொண்டிருந்த ஸ்ரீநாத் திடீரென அமைதியாகிவிட, அழுத்தமான காலடிகளோடு அந்த ஹாலின் இன்னொரு கதவின் வழியாக இந்தர் வெளிபட்டான்.

மீண்டும் அதே கூரிய பார்வை… அவளைத் துளைத்தது.

அதிலும் அவளை மட்டுமே துளைத்தது போலத்தான் உணர்ந்தாள்!

எதற்காக?

“சர்… ஐ ம் ஹாசன் அண்ட் இவங்க கவின் மலர்… மக்கள் குரல்ல இருந்து வர்றோம்…” என்று அவனுக்கு கை கொடுக்க, அழுத்தமாக அவனது கையை பற்றி விடுவித்தான். இவளுக்கு ஒரு வணக்கம்!

ஆச்சரியமாக பதிலுக்கு வணங்கினாள்!

இதுதான் சாக்கென்று கை கொடுக்காமல் வணங்கினானே! அதுவே அவளுக்கு ஆச்சரியம் தான். ஆனால் இது காரணத்திற்காக அவனை விட்டுவிடவெல்லாம் முடியாது. அவன் செய்த துரோகங்களுக்கும் ஏமாற்று வேலைகளுக்கும் பதில் கூறியே தீர வேண்டும். அது எத்தனை பெண்களுக்கான தீர்வு படலம்!

தன்னெதிரில் இருப்பவன் அவ்வளவுப் பெரிய ஸ்திரீலோலனா?

அவளால் நம்பவே முடியவில்லை. ஆனால் அவளிடம் ஆதாரங்கள் உள்ளனவே!

அதிலும் உயிருள்ள ஆதாரங்கள்!

“ம்ம்ம்… எஸ் மிஸ் கவின்…” என்று அவன் அழைக்கவும் தான் ஸ்மரணை வந்தது. அதுவரை அந்த ஆதாரங்களின் நினைவில் தன்னை மறந்த குழப்பத்தில் இருந்தாள் கவின் மலர்.

“வணக்கம் இந்தரஜித்…” தன்னை சுதாரித்துக் கொண்டு ஒட்டிவைக்கப்பட்ட புன்னகையோடு முகமன் கூற, ஒரு நிமிடம் அவனது முகம் திகைத்து மீண்டது.

இதுவரை அவனது முழு பெயரைக் கொண்டு அவனை யாரும் அழைத்தது இல்லை. பாதிப் பெயரோடு ‘சர்’ என்பதும் கட்டாயமாக இணைந்திருக்கும். ஸ்ரீநாத் பார்க்கும் பார்வையிலேயே எதிரில் இருப்பவர் தன்னை சுதாரித்துக் கொள்வார்

ஸ்ரீநாத் ஒரு நொடி பதட்டமாகி அவனது முகத்தை பார்க்க, அவனோ சாதரணமாக கவினை பார்த்துக் கொண்டிருந்தான். ‘உப்ப்ப்’ இழுத்துப் பிடித்த பெருமூச்சை வெளியே விட்டார் ஸ்ரீநாத்.

“வணக்கம்…” என்று சிறு புன்னகையோடு அவன் பதில் முகமன் செய்தான்.

“முதல்ல எங்களோட வாழ்த்துக்களை சொல்லிக்கறோம்… உங்களோட வெள்ளிவிழா திரைப்பட கொண்டாட்டங்களுக்கு…”  என்றவளை குறுகுறுப்பாக பார்த்தவன்,

“நீங்க எப்பவுமே இப்படியா? இல்ல இப்படித்தான் எப்பவுமேவா?” என்று சிரிக்காமல் கேட்டவனை ஒன்றும் புரியாமல் பார்த்தாள்.

ஹாசன் தன்னுடைய புகைப்பட கருவியை வைத்து அவனது முக உணர்வுகளை தொடர்ந்துக் கொண்டிருந்தான். அவனுக்கு எப்போதுமே டெம்ப்ளேட்டாக புகைப்படம் எடுப்பது பிடிக்காது. எதிலும் உயிரோட்டம் இருக்க வேண்டும்… இயங்குபவையாக இருக்க வேண்டும், அதாவது கேண்டிட்டாக!

இந்தரை போகஸ் செய்துக்கொண்டு அவன் காத்திருக்க, அவனோ சிரிக்காமல் கவினை கிண்டலடிக்க, ஹாசனால் அவனது சிரிப்பை அடக்க முடியவில்லை. வேறு புறம் திரும்பிக்கொண்டு அவன் சிரிக்க, இருவரையும் புரியாத பார்வையோடு பார்த்தாள்.

“என்ன சொல்றீங்க?” என்று அவனிடமே புரியாமல் கேட்க,

“எனக்கு எப்பவுமே கேசுவலா பேசித்தான் பழக்கம்… இவ்வளவு கடுந்தமிழ் எனக்கு பழக்கம் கிடையாது…” அவன் கோபமாக கூறுகிறானா? அல்லது இயல்பாகத்தான் கூறுகிறானா என்ற குழப்பம் அவளது முகத்தில்!

“கடுந்தமிழா?” அய்யோவென்ற பார்வை கவினிடத்தில்!

“ஒரே வார்த்தை… கங்க்ராஜூலேஷன்ஸ்ன்னு முடிச்சு தான் எனக்கெல்லாம் பழக்கம்… எங்களுக்கு அதுதான் தமிழ்…” சிரிக்கவே சிரிக்காமல் கிண்டலாகக் கூற, அவனது அந்த இயல்பான பேச்சு உண்மையில் ஹாசனை மிகவும் வசீகரித்தது.

“வாவ்…” தன்னை மறந்து ஹாசன் சிரித்துவிட, கவின் திரும்பி அவனை கேவலமாக ஒரு லுக் விட, அவன் சட்டென்று வாயை மூடிக்கொண்டான்.

பின்னர் மீண்டும் இந்தர் பக்கம் திரும்பி,

“சாரி… எழுதி எழுதி அப்படியே பழகிடுச்சு…” என்றவளை,

“இட்ஸ் ஓகே… இன்டர்வியு ஸ்டார்ட் பண்ணலாமா?”

“கண்டிப்பா… ஆனா எங்க பக்கமிருந்து ஒரே ஒரு ரெக்வஸ்ட்… வைக்கலாமா?” என்று கவின் கேட்க,

“ம்ம்ம்… கேளுங்க!” என்று கால் மேல் காலிட்டு அமர்ந்தவனை பார்த்தபோது இருதயம் ஒரு நொடி நின்று பின் துடித்தது. அந்த தெனாவட்டான செய்கையில் அவனது ஒட்டுமொத்த ஆளுமையும் தெறித்தது!

லட்சக்கணக்கானவர்களின் கடவுள் அல்லவா அவன், கிட்டத்தட்ட! அந்த தன்னம்பிக்கையும் தெனாவட்டும் இயல்பானது போல!

அத்தனை கம்பீரம்… அத்தனை வசீகரம்… அத்தனை திமிர்!

இந்த வசீகரத்தை வைத்துதான் பெண்களை விட்டில் பூச்சிகளாக்குகிறானோ?

அது இவனது குற்றமா? இல்லை அந்த பெண்களின் குற்றமா?

சத்தியத்தில் அவ்வளவு தொலைவில் இருந்தபோதே அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாதவளுக்கு, இப்போது இவ்வளவு அருகில், உள்ளுக்குள் சற்று நடுங்கத்தான் செய்தது.

காரணம் என்னவென்றால் அவளது மனதுக்குள் இருந்த கள்ளம்!

அவனை எப்படி சிக்க வைப்பது என்ற ஆராய்ச்சிலேயே இருந்தவளுக்கு அவனது முகத்தை பார்க்கும் பொது சங்கடமாக இருந்தது தான் உண்மை.

ஆனால் இப்போது சுதாரித்துக் கொண்டாள்.

தவறுகளை சொல்ல முடியாத அளவு செய்துவிட்டு இவன் இவ்வளவு இயல்பாக உட்கார்ந்து பேச முடிகிறது என்றால், எந்த தவறையும் தவறியும் செய்யாத தான் ஏன் தயங்க வேண்டும்?

உண்மையை உரக்கச் சொல்வது தன் பணி… அந்த பணியை சரியாக செய்ய வேண்டும் என்று மனதுக்குள் தீர்மானமாக நினைத்தபடி,

“பெருசா எதுவுமில்லை… எங்களுக்கு வெளிப்படையான பதில்கள் வேணும்… அது உங்களால முடியுமா?” லேசாக புன்னகைத்தபடி அவள் கேட்டதில், சற்றே சவாலான தொனியும் தொக்கி நின்றதாக அவனுக்குப் பட்டது.

கண்களை குறுக்கிக்கொண்டு எதிரிலிருந்தவளை பார்த்தான்.

என்னவோ அவளிடம் அவனை ஈர்த்தது!

அனாவசிய அலட்டலில்லை! அவனைக் கண்டதும் வழியவில்லை! வீட்டிற்குள் நுழைந்தது முதல் முகத்தில் எந்தவொரு உணர்வு மாற்றமும் இல்லை. உணர்வுகளை காட்டவே மாட்டேன் என்று பிடிவாதமாக இறுகிக்கிடந்தது அவளது முகம். அவனது அந்தஸ்தை பார்த்து போலி மரியாதையை கொடுக்கவில்லை. ஆனால் என்ன? மரியாதைக்காக கூட ‘சர்’ இல்லை என்பதுதான் சற்று உறுத்தலான விஷயமாகப் பட்டது! ஆனால் அவளது இயல்பான ‘இந்த்ரஜித்’ அவனை திகைக்க செய்தது.

அவனுக்கு ஏனோ இந்த பெண்ணிடம் விளையாடிப் பார்க்கலாமா என்று தோன்றியது!

‘இந்த்ரஜித்’ என்ற அவளது அழைப்பை ‘இந்தர்’ ஆக்க முடியுமா? தனக்கு தானே கேட்டுக் கொண்டவனின் உதட்டில் கள்ளப் புன்னகையொன்று நெளிந்தது.

“ஆஹான்… எந்த அளவுக்கு நீங்க வெளிப்படையா கேக்க நினைக்கறீங்க?”

அமர்த்தலான குரலில் அவன் கேட்க, ஹாசன் தன்னுடைய கேமராவோடு தயாராக, கவின் தனது ரெக்கார்டரோடு சற்று முன்னே வந்து,

“எந்த அளவுக்குனா….” என்று சற்று யோசித்தவள், “விழாக்கள்ல நீங்க வேற யாரையும் பேசவே விடறதில்லைன்னு ஒரு குற்றச்சாட்டு… ரசிகர்கள்ங்கற பேர்ல ரவுடிகளை தூண்டி விட்டு உங்களுக்கு ஆதரவா கோஷம் போட வைக்கிறதா சொல்றாங்களே… அதைப்பத்தி என்ன சொல்றீங்க?” என்று கேட்டவள், அவனை நேராக கண்களைப் பார்த்துக்கொண்டே,

“உங்களுக்கும் நந்திதாவுக்கும் இருக்கற அபெர் தெரிந்ததுதான்… அதற்காக நீங்க இப்ப உங்க கூட நடிச்ச ஹீரோயினை ஒரு ஷெட்யூல் முடிஞ்ச நிலைல மாத்தணும்னு நீங்க சொன்னதால தான் ப்ரொடியுசர் மகேசனுக்கு ஹார்ட் அட்டாக் வந்ததா சொல்றாங்களே… அதைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்க?”

அவனது கண்களை பார்த்து சற்றும் தயங்காமல் கவின் கேட்க, ஹாசனும், ஸ்ரீநாத்தும் பதட்டத்தின் உச்சத்திற்கு சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!