MT – 1
MT – 1
மாடி வீடு – 1
“கீச்…கீச்…” என்ற பலவிதமான பறவைகளின் கீச்சுக் குரலில் அந்த ஊரே விழித்தெழுந்தது… சூரியன் கொஞ்சமாய்த் தன் கதிர்களை வெளியிட்டுக் கொண்டிருந்த, புலர்ந்தும் புலராத காலை வேளை அது.
மெதுவா எழுந்து வந்த அழகேசன் தன் வீட்டு வாசலைப் பெருக்கிக் கொண்டிருந்தான். அது ஒரு நீளத் தெரு. மொத்தமே பத்து வீடுகளைக் கொண்ட தெரு. அந்தப் பத்து வீட்டில் மட்டுமே கீழ் சாதிகாரர்கள் வாழ்கிறார்கள். அங்கு வரிசையாக இருந்த வீடு எல்லாமே ஓலை வீடாக இருந்தது. பாதிச் செங்கல் வைத்துக் கட்டிய சுவரின் மேலே பனை ஓலை வேயப்பட்டு ஒரே போலவே காட்சியளித்தது. எல்லார் வீட்டு முன் புறத்தில் நீளத் திண்ணை இருந்தது.
அதிகாலையிலேயே சாணித் தெளித்து அழகான கோலம் போட்டு, திண்ணையில் சாணியை மொழுகி கொண்டிருந்தனர் பெண்கள். அந்தத் தெருவில் சாணித் தெளிக்காத வீடு என்றால் அது அழகு வீடு மட்டும் தான்.
அவன் அப்பா இருக்கும் வரை இதெல்லாம் செய்யமாட்டார். அவருக்கு அது பிடிக்கவும் செய்யாது. அவன் அம்மா போன பிறகு இதெல்லாம் அவன் பார்த்ததே இல்லை. மாலை நான்கு மணிவரை அப்படி வேலை செய்யும் மனிதர் அதன் பிறகு அவரைக் கையில் பிடிக்கவே முடியாது. ரெண்டு நாள் முன்னாடியே பத்திரமாக வைத்திருக்கும் கள் அவர் வயிற்றை நிரப்பி இருக்கும். அதனால் இதை எல்லாம் அவரிடம் எதிர் பார்க்க முடியாது. அவர் இந்த மண்ணை விட்டு மறைந்த பிறகு அவனே அந்த வேலைகளைச் செய்யப் பழகிக் கொண்டான். தங்கையை இதுவரை இப்படிபட்ட வேலையை அவன் செய்ய விட்டதில்லை. அவனுக்கு, அவள் எப்பொழுதும் ராணியே.
எல்லார் வீட்டுக் கோலத்தையும் பார்த்தவன், இப்பொழுதுத் தான் புதிதாக ஐயா தந்த கன்னு குட்டியின் சாணம் எடுத்து தெளித்தவன் அரிசி மாவை எடுத்து அவனால் முடிந்த கோலத்தைப் போட்டு வைத்தான்.
‘அன்பு எழுவதற்கு முன் ஐயா வீட்டுக்கு போயிட்டு வந்ரோணும்’ எண்ணியவன் வேகமாக ஐயா வீட்டை நோக்கி ஓடினான்.
‘ஐயா’ என்று எல்லாராலும் அழைப்படுபவரின் பெயர் ஆலமரத்தான். அந்த ஊரின் நாட்டாமை. அந்த ஊரின் பெரிய மனிதர். அந்தக் காலமே பல ஏக்கர் நிலபரப்பைத் தன் வசம் கொண்டு பல தொழிலாளர்களைத் தன் அன்பால் கட்டிப் போட்டிருக்கும் ஒரே ஒரு முதலாளி.
ஆலமரத்தான் வீட்டில் தான் அழகு வேலை செய்கிறான். முதலாளியின் விசுவாசி. வயலில் களை எடுப்பதில் இருந்து, அவரை எங்காவது அழைத்துச் செல்வது வரை அவன் வேலை தான்.
அவரின் மகளைப் பள்ளிக்குக் கொண்டு விடுவது அழகு வேலையே. காலையில் ஐயா வீட்டுக்கு சென்று பால் கறந்து அமுதாம்மாவிடம் கொடுத்து வருவான். அதன் பிறகு அவன் வேலை அனைத்தும் வெளியில் தான் இருக்கும்.
அழகேசனுக்குகென்று இருப்பது அவன் தங்கை அன்பரசி மட்டுமே!
அழகு இருபது வயது வாலிபன். அன்புவோ பதினான்கு வயது சிறுமி. இன்னும் எழுந்து வரவில்லை.
இப்பொழுது தான் ஊரில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பை முடித்திருக்கிறாள்.
அதற்கு மேல் அவளைப் படிக்க வைக்கும் அளவு பணவசதி அழகுவுக்கு இல்லை. ஊரில் இருக்கும் பள்ளியில் கட்டணம் என்று எதுவும் கிடையாது, கூடவே ஒரு நேர சாப்பாடு அங்கேயே கிடைப்பதால் படிக்கச் சென்றாள்.
இனி, மேல் படிப்பு படிக்க வெளியூருக்குச் செல்ல வேண்டும் என்றால், அவர்கள் ஊரில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்று, அங்கிருந்து பஸ் ஏறி தான் செல்லமுடியும். பஸ்சில் செல்லும் வசதியும் அழகுவுக்கு இல்லை. ஐயா வீட்டுக்கு தான் அவளையும் வேலைக்கு அழைத்துச் செல்ல போகிறான்.
‘அழகு, அன்புவை வெளியூருல தமிழ் படிக்கிற பள்ளில படிக்க அனுப்புறியா?’ என்று கடமைக்காக அன்றே கேட்டுவிட்டார் ஆலமரத்தான்.
“இல்லிங்கைய்யா அன்புவை இனி படிக்க அனுப்பல, இங்க எதுனா வேலை இருந்தா சொல்லுங்க, அவளை வரசொல்லுதேன்” தன் கடமையில் சரியாக இருந்தான் அழகு.
அதன் பிறகு அவரும் எதுவும் கூறவில்லை. இவனும் அதைப் பற்றிப் பேசவில்லை. தன் வேலையை மட்டும் சரியாகச் செய்தான். தகப்பன் சொல்லியபடி ஐயா வீட்டுக்காய் உழைக்கிறான். இனியும் உழைப்பான்.
விடியற்காலையில் ஐயா வீட்டை நோக்கி வரும் அழகு, பாலை கறந்து வைத்து விட்டு, மாட்டை அழைத்துக் கொண்டு வயலில் கட்டி வருவான். எந்த வேலை கொடுத்தாலும் முகம் சுழிக்காமல் செய்வான். அவனின் அப்பா கற்றுக் கொடுத்த பாடம் அது… ஐயாவுக்கும் அழகு மேல் தனிப் பாசம் உண்டு இதற்காகவே அவர் எது சொன்னாலும் யோசிக்காமல் செய்வான்.
மறுபடி வீட்டுக்கு வந்து தங்கைக்காய் ஏதாவது சமைத்துக் கொடுப்பான். பெரும்பாலும் காலை உணவு பதனீர் கஞ்சியாகத் தான் இருக்கும். மாட்டை வயலில் கட்டி வரும் பொழுது அங்கிருந்து ஐயா ஜனங்கள் யாராவது பதனீர் கொடுத்தால் அதைக் காலை உணவுக்காகக் கஞ்சியாகக் காய்த்துக் கொள்வான். அரிசி மாவும், சிறுபயிரும் போட்டு காச்சும் கஞ்சி அந்தக் காலை நேரம் அமிர்தமாய் இருக்கும்.
இன்று வயலில் களை எடுக்கும் வேலை இருந்ததால், எல்லாரையும் அழைக்கச் செல்லவேண்டும்.
பால் கறந்து, வாசலில் பாலுக்காய்க் காத்திருந்த அம்மா கையில் கொடுத்தவன் மாட்டு வண்டியை கட்டி சென்று விட்டான். இனி அவனின் ஓட்டம் இரவு எட்டு மணிக்கு தான் நிற்கும். இடையில் நண்பர்களுக்காய் இரண்டு மணி நேரம் கிடைக்கும் அவ்வளவே.
ஐயா வீட்டு வாசலை தாண்டி அவர்கள் ஜாதிகாரர்கள் யாருமே உள்ளே நுழைய அனுமதி கிடையாது. இது ஊரில் எழுத படாத சட்டம். இப்பொழுது வர அதை மாற்ற யாரும் முயற்சிக்கவில்லை.
திருவிழா நாளில், அழகு ஜனக்காரர்களுக்கு விருந்து வைத்தால் பின் வாசல் வழியாகத் தான் செல்ல வேண்டும். அங்கு அவர்களுக்காய் நீள வராண்டா காத்திருக்கும்.
ஆரம்பத்தில் தன் தந்தையிடம் கூட ஐயா வீட்டுப் பழக்கத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறான்.
“அவக எல்லாம் மேல் சாதிசனங்க அழகு. நாம அவகளுக்குக் கீழ இருக்கவக. நாம எப்பவும் அவகள கையெடுத்து கும்பிடுற சாதிசனம். அவக நமக்குச் சாமி மாதிரி, நாம அவகளுக்குச் செருப்பு மாதிரி. அதுக்குதேன் நமக்குப் பின் வாசலில் இடம்”
“யாருப்பா இப்படி எல்லாம் சொன்னது. நாமளும் அவகள போலத் தானே இருக்கோம். அவகள போல ரெண்டு கை, ரெண்டு காலு அப்படி இருகச்ச நாம மட்டும் ஏன் அவக முன்னாடி கைகட்டி நிக்கோணும்? கையெடுத்து கும்பிடோணும்” அவனுக்குப் புரியவே இல்லை.
“அது அப்படித் தான்யா… அவக வீட்டு விசேசத்துக்கும், நல்லது கெட்டதுக்கும் நம்ம சாதிசனம் வேணுமேன்னு தான் நமக்குக் குடிசை கட்டி இங்க தங்க வச்சுருகாக… நாம எப்போவும் அவகளுக்கு விசுவாசமாதேன் இருக்கோனும். ஒருகாலத்துல நாமெல்லாம் வீடு, வாச இல்லாம இருந்த ஜனம்யா… மழை வந்தாலும், வெயில் அடிச்சாலும் ஒரே இடந்தேன்.
இப்போ இருக்க இடமும், வீடும் தந்து, வேலையும் தந்து நம்மளை நல்லபடியாக வாழவைச்சிருக்கும் தெய்வம்யா அவரு”
“உன் குடிகார அப்பனையும் மதிச்சு, இங்க இருக்க வச்சுருக்காக அதுக்கு எப்போவும் நீயும், தங்கச்சியும் விசுவாசம இருக்கோனும்? உன்னாலையோ, உன் தங்கச்சியாலையோ உன் ஐயாவுக்கும், அவங்க குடும்பத்தாக்கும் ஒரு தலைகுனிவும் வரக்கூடாது. ஐயா என்ன சொன்னாலும் அவகளுக்குச் செய்யோனும், எப்பவும் அவகளுக்கு நீ உழைக்கோனும்” இப்படிக் கூறியே தான் அழகை வளர்த்தார் ராமசாமி.
அதிலிருந்து அழகு தன்னை ஐயா குடும்பத்துக்கே அர்ப்பணித்தான் என்றே கூறலாம். எல்லா வேலையும் அவனே செய்வான். சில நேரம் சிறு வயதிலையே அவன் அப்பா கூடச் சேர்ந்து வயகாட்டுக்கு சென்று களை எடுப்பான். எந்த வேலையும் முகம் சுழிக்காமல் செய்வான் அழகு.
அவன் ஒன்றும் வசீகரிக்கும் அழகன் கிடையாது. ஆனால் அவன் முகத்தில் எப்பொழுதும் ஒரு புன்னகை இருக்கும். அப்படி ஒன்றும் நிறமும் கிடையாது நம் மண்ணின் நிறம். உழைத்து இறுகி போன உடலைப்பு. அவனைப் பார்க்கும் யாரும் இருபது வயது என்று கணிக்க முடியாது. பார்பவர்களுக்கு அவன் தோற்றம் முப்பதைக் காட்டும். இதுவே அழகின் பிரதானம்.
@@@@@@@@@@@@@@@@@
சூரியனின் செங்கதிர்கள் ஊரில் நடுநாயகமாக இருந்த அரண்மனையின் மேல் விழுந்து எங்கும் பரவியது. அந்த அரண்மனை மிகப் பெரிய கோட்டை மதில் நடுவே வீற்றிருக்க, தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுதே அத்தனை அழகாக இருந்தது. அதிலும் அரண்மனையின் முகப்புப் பகுதியில் திண்ணையின் மேல் கம்பீரமாக நின்ற இரு ராட்சஸ கற்தூண்கள் மேலும் அழகூட்டியது.
அதைத் தொடர்ந்து வரும் முதன்மை வாசல் பிரமாண்டமான மர வேலைப்பாடுகளுடன் கூடிய பெரிய இரட்டைக் கதவையும், அதற்கடுத்துக் கருங்கற் தூண்களையும் கொண்டு கம்பீரமாக நின்றது.
வீட்டின் உள்ளே சென்று மேலே நாம் கொஞ்சம் அண்ணாந்துப் பார்த்தால் மரவேலைபாடுகள் கொண்ட, பார்ப்பதற்குப் பிரமிப்பூட்டும் வகையில் மரத்தினால் ஆன மேற்கூரை பல வகையான தாமரை பூக்கள் செதுக்கப்பட்டது போல் கண்ணைக் கவரும் வகையில் இருந்தது.
அதன் நடுநாயமாகக் குதிரைகாரன் விளக்கு என்று கூறப்படும் ஒரு வகையான விளக்குத் தொங்கியது. அவ்விளக்கு பார்பதற்க்கு பாய்ந்து ஓடும் குதிரை போன்று இருந்தது. இவ்விளக்கு முகப்பு வாசலுக்கு மேலும் அழகூட்டியது. நாம் எங்குத் திரும்பினாலும், நம் கூடவே திரும்பி திசையைக் காட்டும் அதிசய விளக்கு.
கீழே சுவற்றை விட்டு மூன்று அடி தள்ளி மரத்தினால் ஆன ராட்சஷ நாற்காலி இடம் பெற்றிருந்தது. அதன் அருகே ஒரே ஒரு கருங்கல்லினால் ஆன கட்டில் இடம் பெற்றிருந்தது. அதன் கீழே ஒரு நீள பாய் விரிக்கப்பட்டிருந்தது.
ஆலமரத்தா அவர் ஜாதிகாரர் யாரெனும் பார்க்க வந்தால் அந்தக் கல்கட்டிலில் அமர்வதற்குப் போடப் பட்டிருந்தது.
அதற்கடுத்த அறையில் சாப்பிட அமர்வதற்கான வட்ட கல் மேஜையும், கல் இருக்கையும் போடப்பட்டிருந்து. அதற்கடுத்து பல வேலைப்பாடுகளுடன் கூடிய மிகப் பெரிய ஊஞ்சல் ஒன்று தொங்கியது. அதில் அமர்ந்து தான் ஆலமரத்தான் கோவில் கணக்குகளைப் பார்ப்பதும், தன் மகளை மடியில் படுக்க வைத்து கொஞ்சுவதும் அந்த ஊஞ்சலில் தான்.
அதன் அருகே அமைந்திருக்கும் ராட்சஷ தூண் ஆலமரத்தான் தாயின் சாய்வு தூண். பெரும்பாலான நேரம் அவரின் இடம் அது தான்.
அப்படியே நேராக நாம பின் பக்கம் சென்றால் பல தூண்களை உடைய நீள திண்ணை இருந்தது. விழா நேரத்தில் கீழ் சாதிகாரர்களுக்கு விருந்தளிக்கும் இடமாம். இப்படி ஏகப்பட்ட நிலபரப்பை தன் வசம் கொண்டு மிகக் கம்பீரமாக நின்றிருந்தது ஆலமரத்தான் அரண்மனை.
காலம் காலமாகச் சட்டை போட்ட முதலாளிகள் அவர்கள். பாட்டன், முப்பாட்டன் என்று மிகச் சந்தோசமாக வாழ்ந்து, தொழிலாளிகளைப் போற்றிப் பாதுகாத்த அரண்மனை அந்த விடியற்காலமே மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
“அட… என்ன வேலை பாக்குற… சீக்கிரம் உரிச்சு போடுப்பா, சாயந்திரம் சந்தைக்கு அனுப்பனும்ல, இப்படி மசமசன்னு நிக்காதே… அழகு வரமுன்ன எல்லா வேலையும் முடிக்கோணும்” தேங்காய் உரித்துக் கொண்டிருந்த வேலைகாரர்களை வேலை ஏவியபடி வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்தார் முதலாளியம்மா அமுதாம்பிகா.
“அமுதா”
வெளியில் அமர்ந்திருந்து ஷேவ் செய்து கொண்டிருந்த ஆலமரத்தான் அவளை அழைத்தார்.
“இதோ வந்துட்டேங்க” அவரை நோக்கி ஓடி வந்தார் அமுதா.
கண்ணாடியில் அவள் முகம் தெரிய அதையே ஒரு நொடி பார்த்திருந்தார். பெரும்பாலான நேரம் காலையில் அவர் மனைவியின் முகத்தில் தான் அவர் கண்விழிப்பார். அதிலும் அந்தக் கண்ணாடியில், அவள் முகத்தைப் பார்ப்பதே அவருக்கு அத்தனை ஆனந்தம்!
காலையில் குளித்து அரக்கு நிற கண்டாங்கி புடவையும், மஞ்சள் தேய்த்த முகம், வட்ட பொட்டு, வகிட்டில் குங்குமம் என மங்களரமாக இருந்த மனைவியைப் பார்த்தவருக்குப் புத்துணர்ச்சி பெருகியது!
“தமிழ் பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டாளா?”
“ஆமா, போயிட்டாங்க”
“சரி… சரி… அழகு வந்துட்டானா? பக்கத்துக்கு ஊர் பஞ்சாயத்துக்குப் போகோணும் வண்டியை கட்ட சொல்லு”
“இன்னும் வரலைங்க. வயக்காட்டுல நிற்பான்”
“சரி… வரலைன்னா, யாரையாவது விட்டு கூட்டிட்டு வர சொல்லு”
“சரிங்க” என்றபடி அழகை அழைத்து வர ஆள் அனுப்பினார் அமுதா.
ஆலமரத்தான் – அமுதா தம்பதியர் காலம் காலமாக ஊரை தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் பெரியதனகாரர்கள்.
ஜாதியை மதிக்கும் மனிதர். கீழ் ஜாதிகார்களைத் தன் கையைக் கூடத் தொடவிடாத பிடிவாதக்காரர். இதில் அழகுவும் அடக்கம்.
இவருக்குத் தமிழரசி என்ற அழகான ஒரு மகள் மட்டுமே. இப்பொழுது தான் பத்தாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருக்கும் மங்கை.
தமிழைப் பள்ளியில் விட வேண்டும் என்று வயலில் இருந்து எட்டு மணிக்கு வருபவன், அவளைப் பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளியில் விட்டு வந்து. பத்து மணிவரை நண்பர்களுடன் அரட்டையில் கழித்து. அதன் பிறகு வீட்டுக்கு வந்து காலை உணவை உண்டு, மீண்டும் ஐயா வீட்டை நோக்கி ஓடுவான். இது அவனின் தினசரி வழக்கம்.
“டேய் மாப்பி… என்ன மகாராணியைக் குருகுலத்தில் விட்டு வந்து விட்டாயா?” அழகுவின் நண்பன் செம்பட்டை, தமிழைப் பள்ளியில் விட்டு வந்த அழகுவை பார்த்து எப்பொழுதும் போல் தன் கேலியை ஆரம்பித்தான்.
“செத்த நேரம் சும்மா இருக்க மாட்டியா நீ, அம்மணியைப் பத்தி எதுனா பேசுன, அந்தப் பரட்டை தலைக்குத் தீ வச்சு போடுவேன் பாத்துக்க” ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தான் அழகு.
“சரி… சரி… உன் அம்மணிய நா ஒன்னும் சொல்லேல ராசா… நம்ம செல்வி புள்ள வருது, கொஞ்சம் பேசிகிடுதேன்” பள்ளிக்கு சென்று கொண்டிருந்த செல்வியைப் பார்த்து குரல் கொடுத்தான்.
“என்ன புள்ள செல்வி, மச்சானை கண்டுக்காம போறவ?”
“ஆமாடா, நீ பெரிய மச்சானுத்தேன், நாங்க தான் கண்டுக்காம போறமாக்கும்”
“சரி… சரி… பள்ளிகொடத்துக்கா போறவ?”
“இல்லவ… மாடு மேய்க்க போறேன்?”
“கூட நானும் வரவா?” கண்ணடிக்க,
“நாங்க எருமைகளை மேய்கிறதில்லைவ, மேய்க்கும் போது சொல்லியனுப்புறேன் வாவே?” உரைத்தவள் நடையைக் கட்டினாள்.
“பாருடே செல்விபுள்ளைக்கு வந்த குசும்ப, மாமா உச்சா வருது பாவாடையை அவுத்து விடுன்னு வந்த புள்ள இந்தப் பேச்சு பேசுது. எல்லாம் நம்ம பள்ளிகூடத்துல இருக்க வாத்திசியைச் சொல்லோணும், அவக தான் இப்படி இவள்களை ஏவி உடுராள்க?” அத்தை பெண் பேசிய கடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தான் செம்பட்டை என்னும் லிங்கம்.
லிங்கமும், செல்வியும் அத்தை மக்கள். அவள் பெரிய பெண் ஆனதும் இருவருக்கும் திருமணம் என்று செல்வி பிறக்கவுமே வீட்டில் பேசி வைத்து விட்டனர். லிங்கம் தான் எப்பொழுதும் அவளை உரிமையாக வம்பிழுப்பான்.
அவளும் அவனுக்கேற்ற பதிலை சொல்லி மூக்கை உடைப்பாள்.
“என்னடே காலம் காத்தாலே அத்தை புள்ளைக்குக் கொம்பு சீவுற?” டீ கடை அண்ணன் டீயை ஆத்திக் கொண்டே கேட்டார்.
“நீ வேறண்ணே, இப்போ ரெண்டு நாளா என்னைக் கண்டுக்கவேமாட்டேன்றா? என்னாச்சுன்னே தெரில போ?” சலித்துக் கொண்டான் அவன்.
“நீ இப்படியே விடாம அந்தப் புள்ள பின்னாடி சுத்து, சீக்கிரமே வயசுக்கு வர போகுது பாரு”
“என்ணண்னே சொல்லுதே?”
“ஆமாடே, வயசு பையன் இப்படிப் பொம்பள புள்ள பின்னாடி சுத்துனா அந்தப் புள்ள சீக்கிரமே வயசுக்கு வந்துரும்டே, எங்க அப்பத்தா சொல்லும்”
“அதெப்படிண்ணே, நாம பாக்குறது அந்தப் புள்ளைக்கே சரியா தெரியமாட்டுக்கு, இதுல எப்படி வயசுக்கு வருமாம்?”
“அட போடே, கோட்டிபய மாதிரி கேக்குத, அதெல்லாம் தெரியும்டே, நாம பாக்குறது அது கண்ணுக்கு, மூளைக்கு எல்லாம் தெரியுமாம். அப்படித் தான் சீக்கிரம் வயசுக்கு வருதாம்”
“ஆக, கண்ணு, மூளை தெரிஞ்சுத் தான் என் அத்தை புள்ள வயசுக்கு வருமா?”
“ஆமாடே… சின்னப் பய உனக்கு எங்க இதெல்லாம் தெரியும்”
“ஓ… அண்ணே ஒரு சந்தேகம்ணே?”
“எடே, லிங்கம் பேசாமக் கிட, ஏடாகூடமாக் கேக்காத, அண்ணே சுடு தண்ணிய மூஞ்சுல ஊத்திபோடும் அப்புறம் மண்டை மாதிரி மூஞ்சியும் செம்பட்டையாப் போயிரும் பாத்துக்க, அம்புட்டுத்தேன் நாஞ்சொல்லுவேன்?” எச்சரித்தான் அழகு.
“நீ கேளுடே லிங்கம். அண்ணே உன் சந்தேகத்தை தீத்து வைக்கதேன் இங்கிட்டு கடையை போட்டிருக்கேன்”
“அண்ணே விவரம் பத்தாம நீ இருக்க, அவன் மூஞ்ச பாரு”
“நீ சும்மா கிடடே… அண்ணே, நீ சொல்லு, அப்படித் தான் மதனியும் பதிமூனு வயசுல உன்னைக் கட்டிகிச்சா?”
“இதாம்ல உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்றது, பேசாம ஓடி போயிரு சுடு தண்ணிய மூஞ்சுல ஊத்தி போடுவேன் பாத்துக்க, வந்துட்டான் கோட்டிபய மாதிரி சந்தேகம் கேட்க” கடுகடுத்தபடியே வடையைத் தட்டி சட்டியில் போட்டார் கடைக்காரர்.
“கோச்சுகாதண்ணே, உம் தம்பி தானே கேட்குதேன்.” மெதுவாக உரைத்தான்.
அவர் சுடுதண்ணியை கப்பில் எடுக்க, அங்கு தொங்கிக் கொண்டிருந்த தேன்மிட்டாய் பாக்கெட்டை அத்து, அழகு கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினான் லிங்கம்.
“வாய வச்சுக்கிட்டுச் சும்மா இருக்க மாட்டியா? கோட்டிபய மாதிரி கேள்விக் கேக்குத?”
“அதெல்லாம் விடுடே, தீவிரமா அத்த புள்ள பின்னாடிச் சுத்துதேன், அத்தை மக ரத்தினத்தை வயசுக்கு வர வைக்குதேன்” சபதமெடுத்தான் லிங்கம்.
“நீ அந்தப் புள்ள கிட்ட அடிவாங்காமப் போமாட்ட” உரைத்தபடி தன் வீட்டை நோக்கி நடையைக் கட்டினான் அழகு.