MT 11

MT 11

மாடிவீடு – 11

இன்று அவர்களின் ஊர் திருவிழா ஆரம்பம். ஒவ்வொரு வருடமும் அவ்வளவு சிறப்பாக நடக்கும். திருவிழா மொத்த பொறுப்பும் ஆலமரத்தானுடையது.

இந்த பத்து நாள் திருவிழாவில் ஊரே விழா கோலம் கொண்டிருக்கும். அந்த பத்து நாளும் அழகு ஆளுகளுக்கு அத்தனை கொண்டாட்டம் தான். தினவேளை சாப்பாடும் ருசியாக ஐயா வீட்டில் தான்.

ஒவ்வொரு நாள் திருவிழா இறுதியிலும் இரவில் பாட்டு, நடனம், பூஜை, திரைப்படம் என்று கோலாகலப்படும்.

“ம்மா” சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்த அமுதாவை அழைத்தபடி மேடைமேல் வந்தமர்ந்தாள் தமிழ்.

“என்னடி” தாளித்துக் கொண்டே தன் மகளிடம் கேட்டார்அமுதா.

அருகில் இருந்த கேரட்டை எடுத்த கடித்தபடியே “ம்மா, கோவில் திருவிழாக்கு நான் அன்பு கூடச் சேர்ந்து ராட்டு ஆடவா?”

“என்னடி அன்பு கூடவா!”

“ஆமாம்மா”

“ம்ம்… சரி”

“அம்மா அப்புறம்…”

“இப்போ என்னடி”

“கொஞ்சம் காசு வேணும்மா?”

“எதுக்குடி?”

“அது கடைத்தெருவெல்லாம் சுத்தோணும்” மெதுவாக இழுக்க,

“இங்காருடி, உங்க அப்பாருக்கு தெரிஞ்சா மனுசர் கடிச்சு குதறிருவார்”

“ஏம்மா, எல்லாரும் சுத்துவாக நான் மட்டும் வேடிக்கை பாக்கோணுமா?”

“நீ யார் கூடவும் போக வேணாம், என் கூடவே வந்துட்டு என் கூடவே வீட்டுக்கு வந்ரோணும், அங்கிட்டும், இங்கிட்டும்சுத்தாம அடக்க ஒடுக்கமா இருக்கோணும்”

“போம்மா, நான்கடைத்தெருவெல்லாம் சுத்தோணும்”

“இங்க பாரு தமிழ், நமக்குன்னு ஒரு மருவாதை இருக்கு, அப்பாருக்கு அது ரொம்பவே இருக்கு, ஏதாவது தப்பா அவர் காதுக்குப் போச்சு கொன்னே போட்டுருவார். என் கூடவே வரணும்னா வா, இல்லயா அப்பத்தா கூட இங்கனையே இரு”

“இதுக்குப் பேசாம நான் சின்னப் பிள்ளையாவே இருந்திருக்கலாம், சும்மா அங்க போகாத, இங்க போகாத, ஆம்பளை முகத்தைப் பார்க்காத, அப்படி இப்படின்னு சொல்லிட்டே இருப்ப… இப்படியே சொல்லிட்டு இரு ஒரு நாள் இல்ல ஒரு நாள் எவனையாவது இழுத்துட்டு ஓட போறேன்”

“அடியே சிறுக்கி பயபுள்ள, என்ன பேச்சு பேசுற நீ” கையில் வைத்திருந்த கரண்டியால் அடிக்கப் பாய,

“போம்மா நான் ஓடிப் போகப் போறேன்” அலறியபடியே தன் அறையில் கோவிலுக்குக் கிளம்பச் சென்றாள் தமிழ்.

“அடேய் சீக்கிரம் கிளம்புங்கப்பு, தேர் கிளம்பிட போகுது” வாசலில் அமர்ந்திருந்த அப்பத்தா அழகை விரட்டிக் கொண்டிருந்தார்.

“அட நீ சும்மா இரு அப்பத்தா, ஐயா போகமுன்ன தேரை எடுத்துருவாகளா அவக… எடுக்கத்தேன் விட்டுருவேனா?” மாட்டு வண்டியில் விரிப்பை விரித்தபடி அப்பத்தாவிடம் கேட்டுக் கொண்டிருந்தான் அழகு.

“உனக்கு என்னடா தெரியும் சின்ன பய, ஏலேய் சீக்கிரம் வாங்கலேய்”

“இரு… இரு… ஏன் இப்படிச் சத்தம் போடுற… அதேன் அழகு கூடவே இருக்கான்ல, சீக்கிரம் அங்க கூட்டிட்டு போயிருவான்” கூறியபடியே வெளியில் வந்தார் ஆலமரத்தான்.

“அப்பத்தா உன்கிட்ட பேசிட்டே இருந்தா, பொழுது போயிடும்… சும்மா சும்மா எதுனா பேசிகிட்டே இருக்காத… நாங்க நேரமே கோவிலுக்கு போகணுமா? வேண்டாமா?” கேள்வியை அப்படியே அவரை நோக்கி திருப்பியிருந்தான் அழகு.

“ஐயா சீக்கிரம் கிளம்புங்க”

“அம்மாடி தமிழ்” வீட்டின் உள்ளே பார்த்து குரல் கொடுத்தார் ஆலமரத்தான்.

“இதோ வந்துட்டேன்பா” புது புடவைக் கட்டி நீளகூந்தலில் நெருக்கமாகத் தொடுத்த மல்லியும், நெற்றியில் சுட்டியும், கழுத்தில் அட்டிகையும், இடுப்பில் ஒட்டியாணமும், கைகளில் தங்ககாப்பு என அழகுற புடவையை தூக்கியபடி துள்ளி வந்தாள் தமிழ்.

“அப்பத்தா போயிட்டு வாறேன்” அவரின் கன்னத்தைக் கிள்ளியபடி கொஞ்சினாள் தமிழ்.

“பாத்து போயிட்டு வா ஆத்தா” கன்னம் கிள்ளி கூறினார் அப்பத்தா.

எல்லாரும் வெளியில் வர, அவர்களை தடுத்து நிறுத்திய அழகு “அம்மணி இந்தப் பக்கமா வாங்க” என தமிழை தனியாக அழைத்தான்.

“எதுக்குடா அழகு?” ஆலமரத்தான் அவனை யோசனையாகப் பார்த்தபடி வினவினார்.

“இல்லைங்க ஐயா, அம்மணி சாமி மாதிரி இருக்காக, சாமியை வெளிய கூட்டிட்டு போகணும்னா சுத்தி போட்டு கூட்டிட்டி தானே போகோணும், வயசாகி இங்க ஒன்னு இருக்குன்னு தான் பேரு எல்லாம் நாதேன் பாக்க வேண்டி இருக்கு” அப்பத்தாவை ஓரகண்ணால் பார்த்து வைதபடியே ஒரு தேங்காயை எடுத்துத் தமிழ் முன் வந்து நின்றான் அழகு.

“ஆத்தா, இதைக் கொஞ்சம் பத்த வைங்க” தேங்காயில் சூடத்தை வைத்து, வத்திக் குச்சியை அமுதா கையில் கொடுத்தான் அவன்.

“காத்து, கருப்பு, லொள்ள கண்ணு, கொள்ளி கண்ணு, காட்டேரி கண்ணு எதுவும் எங்க அம்மணியை அண்டாம இருக்கோணும், மனசுக்கு புடிச்ச மவராசன் கூட ரொம்ப வருஷம் வாழோணும்” அழகு சுற்ற, அவன் சொல்லிய ஒவ்வொரு சொல்லுக்கும் முகத்தை மாற்றி மாற்றி அஷ்ட கோணலாகக் காட்சி தந்தவள், அவனின் கடைசி வாக்கியத்தில் அவனை முறைத்தாள்.

அழகையே மென்னகையுடன் பார்த்திருந்தார் ஆலமரத்தான். இவன் எப்படி இப்படி இருக்கிறான். தங்கள் குடும்பத்துக்காய் உயிரையே கொடுப்பான். அவனின் அன்பைக் கண்டு வியந்து நின்றிருந்தார்.

தமிழை முறைத்த அமுதா “இன்னும் சின்னப் பிள்ளை இல்ல நீ” அதட்டல் போட வாயை கப்பென மூடிக்கொண்டாள்.

தேங்காயை வாசலில் உடைத்தவன் வண்டியில் ஏறி கிளப்ப எத்தனிக்க,

“ஏன்டா அழகு, ஏன் இப்படி வர வர கிழட்டு பய மாதிரியே பண்ணுற” நாடியில் கை வைத்து யோசனையாகக் கேட்டார் அப்பத்தா.

“நீங்க குமரியா மாறிட்டீகல்ல? அதேன் நான் கிழவனா மாறிட்டேன். பேசாம போவியா” கிண்டலாகக் கூறியபடி வண்டியை கட்டினான்.

“ஆலமரத்தான் ஐயா வந்துட்டாக எல்லாரும் ஓடி வாங்க” ஆலமரத்தானுக்காகக் காத்திருந்த மக்கள் அவரின் மாட்டு வண்டி கோவிலில் நுழையவும் எல்லாரும் ஓடி வந்தனர்.

“பூசைக்கு எல்லாம் தயாரா இருக்கு வாங்கையா?”

அவரை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு உள்ளே நுழைந்து சாமியை வணங்க, பூசாரி பரிவட்டம் கட்டினார்.

அவர் கொண்டு வந்த தாம்பாளத்தை வாங்கி பூஜைகள் ஆரம்பித்தது.
மாட்டு வண்டியை ஓரமாகக் கட்டிய அழகு தன் தங்கையை நிிற்க சொன்ன இடத்தை நோக்கி நடந்தான்.

எத்தனை வேலைகள் இருந்தாலும், இந்த ஒரு நாள் மட்டும் அழகு, அன்புவுடன் இருந்தாக வேண்டும். அவள் கேட்பதை எல்லாம் அவன் கையால் வாங்கிக் கொடுக்க வேண்டும். இது அவளின் அன்பு கட்டளை.

நிறையக் கடைகள் நிறைந்திருந்தது. எல்லாவற்றியும் சுற்றிப் பார்த்தபடி சென்றான் அழகு.

“ஐயா இந்த மாலையைச் சாமிக்கு போடுங்க?” அவர் கையில் ஒரு மாலையைக் கொடுத்தார் பூசாரி.

சாமிக்கு மாலையை அணுவித்தவருடன் சேர்ந்து சாமியை வணங்கினர்.

பூஜை நல்ல படியாக முடிந்து தேர் ஊருக்குள் இறங்கியது. ஆலமரத்தான் தேர் முன்னே செல்ல, அமுதம்மாளும் அவர் பின்னே சென்றார்.

“ம்மா”

“என்னடி”

“நான் அன்பு கூடச் சுத்தி பார்க்க போகவா?”

“அடியே! என் கூடவே பேசாம வா, அங்கிட்டும் இங்கிட்டு போன வீட்டுல விளக்கமாறு பிய்யும்” எச்சரித்தார் தாய்.

அமைதியாக அவர் கூடவே நடந்தாள் தமிழ். தேர் ஊர்வலம் முடிந்து கோவிலில் நுழைய,

“ஐயா கொஞ்சம் பேசோணும்” என்றபடி ஆலமரத்தானை கோவில் ஆட்கள் அழைக்க,

“அமுதா, வண்டி பக்கத்துல தமிழைக் கூட்டிட்டு போ, இதோ வருகிறேன்” என்றபடி அவருடன் நடந்தார் அவர்.

“வா, தமிழ்” மகளின் கையைப் பிடித்தபடி நடந்து சென்றார் அமுதா.

அங்கு அழகு இல்லாமல் இருக்க… கண்களை எங்கும் சுழல விட்டார் அமுதா.

தூரத்தில் அழகு, அன்புவை அழைத்து வருவதைக் கண்டார்…

அவரை நோக்கி வேகமாக வந்தவன் “அம்மா வீட்டுக்கு போகலாமா?”

அன்பு அவர்களைப் பார்த்து நின்றாள்.

“எங்கடா போயிட்டு வார?”

“இல்லம்மா அன்பு கடைக்கு போகணும்னு சொல்லிச்சி அதேன்” தலையை சொறிந்துக் கொண்டான் அவன்.

“சரி கூட்டிட்டு போ… இங்கன நிக்க?”

“இல்லீங்கம்மா… உங்களை வீட்டுல விட்டுட்டு போலாம்னு”

“அதுவரை அன்பு இங்க நிக்குமா?”

“அவ செல்வி கூடாக்க நிப்பா”

“வேண்டாம் நீ கிளம்பு… ஐயா கோவிலுக்குள்ள போயிருக்காக… வர நேராவும்… நீ அவளை கூட்டிட்டு போய் அவளுக்கு வேண்டியதை வாங்கி கொடு” என்றபடி அவன் கையில் ஒரு நூறு ருபாய் நோட்டைத் திணித்தார்.

“அதில்லிங்கம்மா… உங்களை வீட்டுல விட்டுட்டு கூட்டிட்டு போறேனே, ஐயா வந்தா வைவாக…”

“நீ கூட்டிட்டு போ அழகு. வயசு புள்ள தனியா இருக்கணுமா?”

“சரித்தா, வா அன்பு” தங்கையின் கை பிடித்து அழைத்துச் சென்றான் அழகு.
செல்லும் அவனையே ஏக்கமாகப் பார்த்திருந்தாள் தமிழ்.

அந்த இரு பாச பறவைகளுடன் மூன்றாவது பறவையாக இணைய ஆசைக் கொண்டது மனது.

“வண்டில ஏறி உட்காருட்டி”

“ம்மா… நானும் அழகு கூடப் போறேனே, அவன் கூடப் போயிட்டு, அவன் கூடவே வாரேன், எங்கையும் சுத்தமாட்டேன்மா”

தன் மகள் திடீரென இப்படி கேட்கவும், அவள் முகத்தையே ஆழ்ந்துப் பார்த்திருந்தார் அமுதா.

பின் என்ன நினைத்தாரோ “சரி பாத்து பத்திரமா போயிட்டு வா, அழகு கூடாக்கவே போயிட்டு சீக்கிரம் வந்துப் போடு… அப்பாரு வரதுக்கு முன்னாடி இங்க வந்து நிற்கோணும்”

“சரிம்மா” என்றபடி தாயின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டு சென்றாள்.

செல்லும் மகளை பெருமை பொங்க பார்த்திருந்தார் அமுதா.

“அழகு… நில்லுஅழகு” அழைத்தபடியே அழகுவை நோக்கி ஓடினாள் தமிழ்.

“என்னங்கம்மணி” நடந்திருந்தவன் திரும்பி நின்று அவளிடம் கேட்டான்.

“நானும் வாரேன், என்னையும் சுத்தி பாக்க கூட்டிட்டு போ”

“வேண்டாங்க அம்மணி, ஐயா பார்த்தா வைவாக”

“அதெல்லாம் நான் அப்பாருட்ட சொல்லிக்கிடுதேன் என்னை கூட்டிட்டு போ” அவன் கையை பிடிக்க வர,

ஒரு அடி பின்னால் நகர்ந்த அழகு “அன்பு, அம்மணி கூட முன்னாடி போ, நான் பின்னாடி வர்றேன்” கூறியபடி துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டான். அவள் முகம் அப்படியே வருத்தத்தைக் காட்டியது.

ஆனாலும், அவனுக்கு அதை காட்டாமல் பின்னால் திரும்பி திரும்பி பார்த்து நடந்தாள் தமிழ். அன்புவோ அவளை பார்ப்பதும் ஒரு அடி பின்னால் நகர்வதுமாக நடந்து சென்றாள். அதை எல்லாம் தமிழ் கவனிக்கும் நிலையில் இல்லை.

“அழகு, ராட்டு போவோமா?”

“வேண்டாம் அம்மணி, ஐயா பார்த்தா வைவாக” மெதுவாக கூறினான் அழகு.

“போ அழகு, நான் எது சொன்னாலும், இப்போ எல்லாம் நீ கேட்கமாட்டுக்க?” முகத்தை சுருக்கிக் கொண்டாள்.

“அண்ணே… அவங்க தான் ஆசை படுறாங்கல்ல”

“சரி வாங்க” அவர்களை அழைத்துக் கொண்டு ராட்டை நோக்கி சென்றான் அழகு.
இருவரையும் ராட்டில் ஏற்றி விட்டவன். கீழே நிற்க, ஏறிய தமிழ் இறங்கிக் கொண்டாள்.

“என்னம்மணி”

“இல்ல அழகு நீயும் வா, அப்பத்தேன் நானும் ஏறுவேன்” பிடிவாதம் அவளிடம்.

“நீங்க ஆடுங்க, நான் பார்த்துட்டு இருக்கேன் தமிழ்”

“அண்ணே நீயும் வாண்னே… அப்போத்தேன் நல்லாருக்கும்” அன்பு சொல்ல அமைதியாக ஏறிக்கொண்டான்.

தமிழ், அழகு அருகில் அமர்ந்துக் கொண்டாள். ராட்டு மேலே செல்ல… பயத்தில் அவன் கையை பிடிப்பதுப் போல் பிடித்துக் கொண்டாள்.

“அண்ணே… எனக்கு பாசி, வளையல், குஞ்சம், ஒட்டியாணம் எல்லாம் வாங்கி தாரேன்னு சொன்னியே” ராட்டில் இருந்து இறங்கியதும், ஓடி வந்து தன் அண்ணனிடம் கேட்டாள் அன்பு.

“வா வாங்கி தாரேன்” அன்புவை அழைத்துக் கொண்டு செல்ல,

“அழகு எனக்கும் வாங்கி தருவியா?” கேட்டபடி அவன் முன் வந்து நின்றாள் தமிழ்.

“உனக்கு இல்லாததா தமிழ் வா” அவளையும் அழைத்து சென்றான் அழகு.
தங்கை கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தான் அழகு.

“அழகு எனக்கு ஒரு வளையல் வாங்கி தரியா?” அவன் முகத்தையே ஆவலாக, ஒரு ஏக்கமாக பார்த்து கேட்டாள் தமிழ்.

அவளை பார்க்க சிறுவயதில், “ஆசை மிட்டாய் ஒன்னே ஒன்னு தா அழகு” என கேட்கும் குட்டி தமிழ் ஒரு நிமிடம் வந்துப் போனாள்.

“உனக்கு இல்லாததா அம்மணி, வா” அவளின் கையை பிடித்தவன், மனதில் ஆலமரத்தான் வந்து மிரட்ட அடுத்த நொடியே கையை விடுவித்துக் கொண்டான்.
இரண்டு கையிலும் அவன் வாங்கி தந்த கண்ணாடி வளையல் அழகாக ஓசை எழுப்பியது. அவனே அவள் அருகில் இருப்பதுப் போல் தோன்றியது.

“அன்பு வாறியா… கடை எல்லாம் சுத்துவோம்” அவள் முன் வந்து நின்றாள் செல்வி. அவள் அருகில் அவளுக்கு வாங்கிய பொருட்களை மஞ்ச பையில் சுமந்தபடி லிங்கம்.

“அன்பு, நீ இவங்க கூடாக்க போ, நான் ஐயாவை வீட்டுல விட்டுட்டு வாரேன்” கூறியவன்“அம்மணி வாங்க” அவளை முன்னால் விட்டு பின்னால் நடந்து வந்தான் அழகு.

“அழகு”

“என்னங்கம்மணி”

“இந்தா” கையை அவன் முன் நீட்டினாள் அவள்.
அவன் சிறு வயதில், கோவில் கொடை வந்தாலே கை நிறைய இந்த வாங்கி வைத்து ஆசையாக சாப்பிடும் ஆசை மிட்டாய் அவள் கையை நிறைத்திருந்தது.

“உனக்கு பிடிக்கும்னு ஆசையா கொண்டு வந்தேன் அழகு”
அவளை பார்த்து மெதுவாக சிரித்தவன் “இன்னும் இதை மறக்கலியா நீ” கேட்டபடியே ஒரு மிட்டாய் எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.

“எதையும் மறக்க மாட்டேன் அழகு, உன்னையும் மறக்க மாட்டேன்”

அவளை ஒரு பார்வை பார்த்தவன் வேகமாக நடையை எட்டிப் போட்டான்.

செல்வி, அன்பு, லிங்கம் மூன்று பேரும் அங்கு சைக்கிளில் நின்றிருந்த சேமியா ஐஸை வாங்கி சுவைத்தபடி சுற்றிக் கொண்டிருந்தனர்.

தூரத்தில் அவன்! வாயில் வைத்த ஐஸை தன் பின்னே மறைத்துக் கொண்டாள்.

அவள் கன்னிப் பெண் தான். ஆனால் இத்தனை நாள் கல் போல் இருந்தாள். ஆனால் அந்த கல்லிலே இப்பொழுது ஒரு சலனம் வந்து விட்டது. அவன் ஏற்படுத்தி விட்டான்!
கல்லையும் கனிய வைக்கும் சக்தி காதலுக்கு உண்டு!

எந்த ஆளையும் பார்த்து அவள் அஞ்சியது இல்லை. ஆனால் இன்று இவனை பார்க்க கண் கூசினாள்.

காதல் பெண்களிடம் நாணத்தை தூண்டி விடுகிறது. காதல் வசமான பெண் நாணமடைகிறாள். இப்பொழுது அன்பு அவனைக் கண்டு நாணமடைந்தாள். காதல் வந்து விட்டது தானே?

ஒரு பெண் தன்னை காதலிகிறாளா இல்லையா? என்பதை அறியாமல் எத்தனை இளைஞர்கள் தவிக்கிறார்கள். இதோ அவர்களுக்கு ஒரு குறுக்கு வழி கிடைத்து விட்டது.

அந்த பெண் அவர்களைப் பார்த்து நாணமுற்றால், அவளும் அவனைக் காதலிக்கிறாள் என்று கண்டுக் கொள்ளலாம்

அன்பு, அமுதனைக் காதலிகிறாளா?

“ஆம்” என்று சொல்ல அவளுக்கு தைரியம் இல்லை. அந்த அளவுக்கு அவளும் வளரவில்லை. ஆனால்அவனைக் கண்டு இதோ நாணமுற்றுவிட்டாள்.

அவளுக்கு வயது என்ன (இந்த இடத்தில் பெண்கள் வயதை நாம் குறிப்பிடுவது தவறாகும்) இத்தனை வருடத்தில் அவள் தூக்கம் வராமல் புரண்டது உண்டா?

படுத்தால் காலையில் தான் கண்விழிப்பாள். அப்படி ஒரு தூக்கம் தூங்குவாள்.

அப்படிப்பட்டவள் இப்பொழுது தூங்கவே இல்லையே. ‘படுக்கையில் படுத்ததும் அன்றைய நினைவுகளை சிந்தித்துப் பார்’ என்று யாரோ ஒரு அறிஞர் கூறினாராம்.

ஒரு நாளும் சிந்திக்காதவள், அன்று சிந்தித்து விட்டாளே?

அவன் மோதி கீழே விழுந்தது, இவள் குளித்ததை அவன் பார்த்தது. அவன் வயிற்றில் கை வைத்து அமுக்கியது. இவன் அவளை பிடித்தது இப்படி எல்லாம் நினைத்து விட்டாளே?

அவன் பேண்ட் லூசாக்கியது, சட்டை விலக்கியது,

இத்தனையும் அவள் செய்தாளா? வெட்கம் வந்தது!

ஒரு ஆணை தொட்டு விட்டேனா? பெண்மை வியந்தது!

அனுபவம் புதுமை! அதுவும் இனிமை!

தூக்கம் பறிபோனது! கனவு கரைக் கண்டது!

கைகள் அவன் பிடித்த இடையை வருட! பிள்ளை வெளி வந்தது!

தன் அறியாமையை கண்டு சிரித்தாள்! தன் காதலைக் கண்டு தவித்தாள்!

இதோ அவனைக் கண்டு நாணமுற்றாள்! ஐஸை மறைத்தாள்!

இனி வேறன்ன காரணம் வேண்டும் அவள், அவனை காதலிக்க ஆரம்பித்து விட்டாள் என்று அறிய!

நடை தயங்கியது! அறிவு விழித்தது!

“செல்வி நீ கடைக்கு போ, நான் வீட்டுக்கு போயிட்டு வாறேன்?” தயங்கியது வார்த்தை! கள்ளம் ஏறிக் கொண்டது மனதில்!

“ஏன்… என்னாச்சு அன்பு” லிங்கம் தான் கேட்டிருந்தான்.

“சும்மாத்தேன்… இதை வீட்டுல வச்சுட்டு ஓடி வந்திடுறேன்”

“சரிம்மா… பாத்து போயிட்டு வா?” லிங்கம் விடை கொடுக்க,

தயங்கி, தயங்கி அவனைப் பார்த்து நடந்தாள் அன்பு.

கொஞ்ச தூரம் செல்லவும், அவன் அவள் பின்னே நடந்தான்.

“இங்க ஏன் வந்தீக?”

“அட! கோவிலுக்கு வந்தேன்?”

“என்னை ஏன் பார்த்தீக?”

“நீ ஏன் என்னைப் பார்த்த?”
அமைதியாக நடந்தாள்.

“அரசி சொல்லு, என்னை ஏன் பார்த்த?”

‘அரசியாமே?’ கள்ளத் தனமாய் மனது ரசித்தது!

“இங்க யாருனா பார்த்தா உங்களைப் பற்றி என்ன நினைப்பாக?”

“உன்னை ஏதாவது நினைத்தால் பரவாயில்லையா? என்னை பற்றி ஏன் கவலைப் படுற?”

பதில் சொல்ல தெரியாமல் திகைத்தாள்! ஆம். என்னை பற்றி நினைக்கவில்லையே? இது தான் காதலாம்! வியந்தாள்! தெளிந்தாள்!

error: Content is protected !!