MT 5

MT 5

மாடிவீடு – 5

காலமே எழுந்த அழகு எப்பொழுதும் போல் ஐயா வீட்டை நோக்கி சென்றான்.

இன்று ஏனோ வாசலில் ஆலமரத்தான் அமர்ந்திருந்தார்.

“அழகு”

“சொல்லுங்கய்யா”

“இன்னைக்கு தமிழு கோவிலுக்கு போகுதாம்… அவளுக்கு பள்ளிக்கூடம் லீவு. நீ எட்டுமணி வாக்குல வா, நாம ஒரு இடத்துக்கு போகோணும்”

“சரிங்கைய்யா” என்றபடி திண்ணையில் இருந்த வாளியை எடுத்துக் கொண்டு பால் கறக்கச் சென்றான்.

பாலை கறந்து மீண்டும், திண்ணையில் வைத்தவன் வீடு நோக்கி சென்றான்.

தன் வீட்டு வாசலில் யாரோ இருப்பதுப் போல் தெரிய நடையை எட்டிப் போட்டான். அங்கு தெரு விளக்கு என்று எதுவும் கிடையாது. வீட்டில் உள்ள குண்டு பல்பு மட்டுமே. அதிலும் அழகு வீட்டில் ஒரே ஒரு குண்டு பல்பு மட்டுமே உண்டு.

ஒரு ரூம் மட்டும் தான் அதை தான் சமையலுக்கு என்று இரண்டாகப் பிரித்திருப்பான். குண்டு பல்பு சமையல் அறையில் தெரியாது. அந்த நேரம் சின்ன மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றிக் கொள்வார்கள்.

இப்பொழுது தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது யாரோ அமர்ந்திருந்ததுப் போல தெரிந்தது. அருகில் சென்று பார்த்த பிறகு தான் தெரிந்தது அது லிங்கம் என,

“என்னடே காலம்பர இங்கன வந்திருக்க”

“ஒன்னுமில்ல அழகு. சும்மாத்தேன்?”

“சரி நீ இங்கனயே இரு. நான் கஞ்சி காச்சு கொண்டு வரேன்” என்றவன் சத்தம் வராமல் மெதுவாக வீட்டின் உள்ளே நுழைந்து மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றி அடுப்பை பற்றவைத்தான்.

தன் தங்கையின் தூக்கம் கெட வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் பல்ப் போடாமல் விளக்கை ஏற்றினான்.

ஆனால், அந்த சிறு சத்தத்திற்கே அன்பு எழுந்துக் கொண்டாள். எழுந்தவள் விளக்கை போட,

“என்ன அன்பு, அண்ணே உன்னை தொந்தரவு பண்ணிட்டனா? நான் வேணா வெளிய போய் கஞ்சி காச்சவா? நீ இன்னும் செத்த நேரம் தூங்குதியா?”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம்… நா இப்போ வளந்துட்டேனாக்கும்… நீ கஞ்சி காயி, நா பெருக்கி கோலம் போட்டு வரேன்” என்றவள் வாளியையும், துடப்பத்தையும் எடுத்துக் கொண்டு வெளியில் சென்றாள்.

அவள் பெருக்கி, தண்ணீர் தெளிக்க. லிங்கம் சின்னதாக கோலம் போட்டுக் கொண்டான்.

அதற்குள் அழகுவும் கஞ்சி காய்த்து, மூன்று கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு வந்தான்.

ஒன்றை லிங்கம் கையில் கொடுத்தவன், மற்றொன்றை அன்பு கையில் கொடுக்க, அதை அருகில் வைத்து விட்டு பல் விளக்கி வர பின் பக்கமாய் நகர்ந்தாள் அன்பு.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் “லிங்கம், அன்பு நல்லா வளந்துட்டுல… சின்ன பிள்ளையா ஆத்தா, என் கையில கொடுத்துட்டு போச்சி. இப்போ வரைக்கும் குழந்தையாத்தேன் தெரிஞ்சுது. இன்னைக்குனா பெரிய பிள்ளையாட்டும் நடந்துக்குது. அது துணிய அதுவே துவைச்சு போட்டுருக்கு. நான் வளந்துட்டேன்னு சொல்லாம சொல்லுதோ?”

“உனக்கு இன்னைக்கு என்னடே ஆச்சு. காலம்பரே ஒழத்துத?”

“தெரியலடே… பயமா இருக்கு… அன்புவை ஒரு நல்ல இடத்துல சேர்க்கோணும்… அவ ஆசைப்பட்டதெல்லாம் வாங்கி கொடுக்கோணும்… நான் இருக்கதே அவளுக்காண்டித்தேன்… ஆனா, அது எனக்காண்டி துட்டு சேக்குதுடே”

“என்னடே சொல்லுற?”

“ஆமாடே… என் கல்யாணத்துக்கு அது துட்டு சேக்குது. அதுக்கு பள்ளிக்கொடதுக்கு போகச்ச, அது எதுனா வங்கி திங்க குடுத்த துட்ட, அது எனக்கு சேக்குதுடா?”

நேற்று மாலை வீட்டை நோக்கி வரவும் அவள் சேர்த்து வைத்திருந்த காசை எண்ணிக் கொண்டிருந்தாள் அன்பு. ‘இனி ஐயா வீட்டுக்கு வேலைக்கு போய் அண்ணனுக்கு காசு சேர்க்கோணும்’ மெதுவாக கூறியபடியே பின்பக்கம் சென்றாள்.

அதை கேட்ட அழகு, அப்படியே திரும்பி நடந்தான். கொஞ்ச நேரம் வயலில் நேரத்தை கழித்தவன் மீண்டும் இரவு தான் வீட்டுக்கு வந்தான். மனது மிகவும் பாரமாகிப்போனது.
தங்கையை இன்னும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் மனம் பேராசைக் கொண்டது.

“அது உனக்கு கிடைச்சிருக்க ஆத்தாடா. அதேன் உன்னையே சுத்தி அதுக்கு நினைப்பிருக்கு?”

“அதேன் எனக்கு பயமா இருக்குடே… அதுக்கு எல்லாமுமா இருந்து அது ஆசை எல்லாம் நிறைவேத்திப்போடோணும்…”

“சரி… சரி… எல்லாம் பண்ணிப்போடலாம். அதேன் நானும் இருக்கேன்ல. அது எனக்கும் தங்கச்சித்தேன்” மென்னகையுடன் கூறினான் லிங்கம்.

“அண்ணே இன்னைக்கு சின்னம்மாக்கு லீவுதான. குளதாங்கரையில நாணல் போட்டு வந்திருக்கேன். நண்டு விழுந்திருக்கும். அப்படியே மீனும் பிடிச்சுட்டு வந்து சோறாக்கி தரட்டா. சுட சுட சாப்ட்டு வயலுக்கு போறியா?”

“இல்ல புள்ள. ஐயாக்கு ஏதோ வேலையிருக்காம். நேரமே வரச் சொன்னாக?”

“சரிண்ணே” கையில் கஞ்சியை எடுத்துக் கொண்டாள்.

“சரி அழகு, அன்பு நான் கிளம்புத்தேன். இன்னைக்கு ஐயா வயலுல மருந்தடிக்கணும்னு சொன்னாக நான் கிளம்புதேன்” எனக் கூறிச் சென்றான் லிங்கம்.

############

அழகு, ஐயா வீட்டுக்கு செல்ல, கையில் சிறு தூக்கு வாளியுடன் வாசலில் நின்றுக் கொண்டிருந்தார் அமுதா.

“அழகு இதை அமுதன் தம்பிகிட்ட குடுத்திரு?”

“சரிங்க ஆத்தா” என்றபடி கையில் வாங்கிக் கொண்டான்.

“வாடா” என்றபடி ஆலமரத்தான் முன்னே நடக்க, அவர் பின்னே சென்று வண்டியை கிளப்பினான் அழகு.

அமுதன் வீட்டின் முன் வண்டி நிற்க, அதிலிருந்து இறங்கிய ஆலமரத்தான் வண்டி அருகில் நின்றுக் கொண்டார்.

வேகமாக இறங்கிய அழகு ஓடி சென்று கதவை தட்டினான்.

“யாரு” என்றபடி கதவை திறந்தான் அமுதன். அங்கு ஆலமரத்தானை கண்டவன் அவரை நோக்கி ஓடி வந்தான்.

அவன் இந்த வீட்டிற்க்கு வரவுமே, அந்த ஊரில் உள்ள கேமராமேன்ஸ் (பாட்டிமார்கள்) சில வந்து அவனை விசாரித்து சென்றன.

தன்னை பற்றி சிறிய அறிமுகம் கொடுக்க, ஆலமரத்தானை பெருமையாக பேசி சென்றனர். அதனால் தான் ஆலமரத்தானை காணவும் ஓடி வந்தான்.

“அங்கிள் என்ன அங்கயே நின்னுட்டீங்க உள்ள வாங்க” வெளியில் வந்து கையை பிடித்து அழைத்து சென்றான்.

அவனைப் பார்த்து கம்பீர சிரிப்பை ஒன்றை உதிர்த்தவர். மீசையை நீவி விட்டபடி அவனுடன் நடந்தார்.

அவர்கள் வீட்டின் உள்ளே நுழையவும், வாசலில் தான் கொண்டு வந்த வாளியை வைத்தான் அழகு.

“என்ன வெளியவே நிக்குறீங்க? உள்ளே வாங்க?” அழகைப் பார்த்து அழைத்தான் அமுதன்.

“அவனுக்கு அதேன் அழகு தம்பி. இருங்க நான் அத எடுத்திட்டு வாறேன்?” என்றபடி ஆலமரத்தான் எழ, அவரை தடுத்து யோசனையுடன் வாளியை எடுத்து வந்தான் அமுதன்.

கைகளைக் கட்டியபடி அமைதியாக வெளியே நின்றுக் கொண்டான் அழகு. இதான் அவன் இடம். அது அவனுக்கு நன்கு தெரியும். அதனால் தான் என்னவோ ஐயா பேச்சில் கோபம் வரலைப் போல.

“உன் அப்பாரு எல்லாம் சொன்னான். திங்கள் கிழமையில் இருந்து பள்ளிக்கொடதுக்கு வந்துப்போடு” வாசலையே பார்த்திருந்த அமுதனைப் பார்த்துக் கூறினார் ஆலமரத்தான்.

“அங்கிள்”

“என்னடே அங்கிளு… நீ இங்கன ஸ்கூலுலதேன வேலைபாக்குறேன்னு உன் அப்பாருட்ட சொல்லிட்டு வந்திருக்க?”

“ஆமா அங்கிள்”

“அதேன், நீ இங்கனயே வேலை பார்த்துட்டு சாயந்திரமா தோட்டத்தை கவனி. எதுனா உனக்கு வேணும்னா அழகு பயலை ரோசனைப் பண்ணாமக் கேளு”

“சரிங்க அங்கிள்”

“மதியமும், ராவைக்கும் சாப்பாடு வீட்டுக்கே குடுதனுப்புத்தேன்” என்றபடி அவர் வயலை நோக்கி சென்றார்.

தோட்டத்தை நோக்கி அவர்கள் சென்றுக் கொண்டிருக்க, தூரத்தில் சில பெண்களும், வயலில் வேலை செய்பவர்களும் வருவதைப் பார்த்த ஆலமரத்தான்,

“அழகு, அங்க கூட்டமா வாரது நம்ம தமிழ் கூட போன புள்ளைங்க மாதிரியில்ல?”

“ஆமாங்க, அவங்களேத்தேன். ஆனா, ஏன்? இப்படி அல்லாருமா கூட்டமா வாராகளே தெரிலையே?” யோசனையாக கூறினான்.

அவர்களுக்கு நடுவே தமிழ் ஒளிந்து ஒளிந்து வருவது அவன் கண்களுக்கு தெரிந்தது…

தங்கள் அம்மணி  இப்படி வரக் காரணம் அவனுக்கு கொஞ்சமாக புரிந்துக்கொண்டாலும், தான் சொன்னால் நன்றாக இருக்காது எண்ணியவன் அவர்களின் பதிலையே எதிர்பார்திருந்தான்…

“அழகு, விரசா வண்டியை விடு” பதட்டமானார் மனிதர்.

“சரிங்கய்யா”

“காலையில் கோவிலுக்கு நல்லா தானே போச்சு, என்னாச்சுன்னு தெரிலையே, வெயில் வேற அடிக்குது, தலையில் முக்காடு வேற போட்டிருக்குது… எல்லாரும் கூட்டமா வாராக” படப்படப்பானார் மனிதர்.

“ஏத்தா என்னாச்சி?” அவர்கள் முன் வண்டியை நிறுத்தியவுடன் பரப்பரப்பாகக் கேட்டார்.

அவர்கள் அமைதியாகத் தலையைக் குனிய,

“சொல்லுங்கத்தா, கேட்கிறேன்ல?” படப்படப்பு உச்சத்தை தொட்டது.

“ஒன்னும் இல்லிங்கய்யா, நம்ம தமிழ் வயசுக்கு வந்துட்டு, அதேன் வீட்டுக்கு கூட்டிட்டு போறோம்” கூட வந்தவர்களில் ஒருவள் கூறினாள்.

கோவிலில் அமர்ந்திருந்த சிலுக்கிடம், தான் கொண்டு வந்த பழத்தை குடுத்த தமிழ் அங்கிருந்த திண்டில் அமர்ந்து கல் அடுக்கி வேண்டுதல் வைத்துக் கொண்டிருந்தாள்.

அவள் வேண்டுதல் எல்லாமே, அழகு தன் கூடவே இருக்க வேண்டும் என்பது தான்.

கல்லை அடுக்கி முடித்தவள். அங்கிருந்து கீழே இறங்கவும் வயிற்றை பிடித்து அப்படியே அமர்ந்துவிட்டாள்.

விஷயம் ஒரளவு பிடிப்பட, அவளை கவனமாக அழைத்து வர எண்ணினர்.

யார் முகத்திலும் விழிக்ககூடாது என்பது அவர்கள் அறிந்ததே… அருகில் வந்தவள் தன் துப்பட்டாவை கொடுக்க முகத்தை மூடியபடியே வந்தாள்…

இவர்கள் வருவதை வயலில் வேலை செய்தவர்கள் பார்க்க, கூடவே வந்தனர்…

இனி ஊரே ஒன்னுபட்டு விழா கொண்டாடும்… அதற்காக இப்பொழுதே ஒன்று பட ஆரம்பித்திருந்தனர்.

இப்பொழுது, அழகுவையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள்…

வேகமாக வண்டியை விட்டு இறங்கிய ஆலமரத்தான் “அடியாத்தி, நல்லக்காரியம் சொல்லிருக்கீக, ஏன் தாயி, ஆம்பள முகத்தைப் பார்க்கலல்ல?”

முகத்தை மூடி இருந்த துணியை விலக்கிய தமிழ், அழகை ஒரு நொடி பார்த்து, கண்களைச் சிமிட்டி முகத்தை மூடிக் கொண்டாள். இன்று ஏனோ வித்தியாசமாக அவள் கண்களுக்கு தெரிந்தான் அழகு.

மீண்டும் மீண்டும் அவனைப் பார்க்க துடித்தது கண்கள். அவன் கண்களுக்கு இன்று அழகாக தெரிந்தான் அழகு.

“இல்லங்கய்யா யார் முகத்தையும் பார்க்கேல”

வேகமாக வயலில் இறங்கிய அழகு, “நல்ல காரியம் சொல்லிருக்கீக பொண்டுகளா, நம்ம சின்ன அம்மணி, பெரிய அம்மணியா மாறிட்டாக” என்றபடி பிஞ்சு நெல்லை பறித்துத் தமிழ் கூட வந்த பிள்ளைகளிடம் கொடுத்தான். அவனுக்கு அத்தனை சந்தோசமாக இருந்தது.

முதல் நல்ல விஷயம் கூறியதால் இனிப்பு கொடுக்கிறான். பால் நெல் நன்றாக இருக்கும்.

முகத்தை மறைத்து இருந்த மெல்லிய துணியையும் தாண்டி தமிழ் கண்களோ அழகையே சுற்றி வருவதும், கீழே குனிவதுமாக இருந்தது.

“அழகு வண்டியை வேகமா திருப்புடா”

“சரிங்கய்யா”

“வா தாயி”

“டேய், மெதுவா நிறுத்துடா”

“பாத்து ஏறுங்கத்தா”

“டேய், பார்த்துடா பத்திரமா கூட்டிட்டு போ” அவசரபடுத்தினார் அவர்.

ஆலமரத்தானுக்கு கையும் , காலும் ஒடவில்லை. மகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். மனம் உறுதிக்கொண்டது…

“சரிங்கய்யா”

“வழில ஆருட்டையும் பேச்சு கொடுக்காம, விரசா கூட்டிட்டு போ, ஆத்தாகிட்ட சொல்லி, சொக்கார் (உறவுக்காரர்கள்) எல்லார் கிட்டையும் சொல்ல சொல்லு”

“சரிங்கய்யா, சொல்லுறேங்கய்யா”

“பாத்து, நல்லா வண்டியை புடிச்சுக்கோ ஆத்தா”

“சரிங்கய்யா” என்றபடி அவர்கள் கிளம்ப, பின்னால் அந்த ஊர் பெண்கள் நடக்க ஆரம்பித்தனர்.

வரும் வழியில் எல்லாருக்கும் விஷயத்தை அவர்களே கூறிவிடுவார்கள்.

ஆலமரத்தான் வயலில் இறங்கி நடந்தார். கைகளோ மீசையைச் சிரிப்புடன் நீவி கொண்டது.

*****************************

வாசலில் அமர்ந்திருந்து வெத்திலை இடித்துக்கொண்டிருந்த அப்பத்தாவை பார்த்தும் பாக்காதவன் போல்… வீட்டின் உள்ளே பார்த்து அமுதாவை அழைத்தான் அழகு.

“ஆத்தா… ஆத்தா…”

“ஏன்டா இங்கன ஒருத்தி இருக்கேன், நீ என்ன உங்க ஆத்தாவை கூப்பிடுற? என்னடா விஷயம்” வெத்தலையை வாயில் வைத்துக் குதப்பிக் கொண்டே கேட்டார் அப்பத்தா.

“விஷயம் இல்லாம இருக்குமா அப்பத்தா, உள்ளார போய் ஆத்தாவை வர சொல்லுக?”

வண்டியில் இருந்து தமிழ் கூடவே வந்த பிள்ளைகள் இறங்க, அவர்களைப் பார்த்துக் கொண்டே எழுந்தவர் ‘என்ன விஷயமா இருக்கும் ஊர் பொண்டுக வாராளுக’ எண்ணியவர்,

“டேய்” என அழைக்க,

“நீங்களே இவக கிட்ட கேளுங்க” சொல்லியவன் அங்கிருந்து நகர்ந்தான்.

அதற்கு மேல் அங்கு நின்றுக் கொண்டிருக்க இங்கிதம் தெரியாதவனல்ல அழகு. இனி இந்த இடத்தில் தனக்கு வேலை இல்லை என்று மாடுகளை வண்டியில் இருந்து அவிழ்க்க சென்றான். இனி அங்கு பெண்களுக்கான பேச்சு நகர்ந்து விட்டான்.

“அப்பத்தா உன் பேத்தி பெரிய மனுஷி ஆகிட்டா!”

“அடியாத்தி! ஏத்தா இந்த அரண்மனையில் இடம் இல்லன்னா, கோவில்ல போய்ப் பெரிய மனிஷியானியாக்கும்” கேட்டபடி எழுந்து திருஷ்டி கழித்தார் அப்பத்தா.

வெட்கத்துடன் முகத்தை அருகில் நின்றவளின் தோளில் மறைத்துக் கொண்டாள் தமிழ்.

பின் மெதுவாக “ஆத்தா, ஆம்பள யார் முகத்தைப் பார்க்கல்லேல?”

தமிழ் கண்கள் அப்படியே அழகு பக்கமாக நகர்ந்தது.

“என்ன இப்படிக் கேட்குறீக, பார்த்தா தான் என்னவாம்?” இழுத்தப்படியே வந்தவர்களில் ஒருவள் கேட்டாள்.

“அடி போடி இவளே, கட்டிக்கப் போறவனைத்தேன் முதல்ல பாக்கோணும், அதுக்குத் தான் சடங்கு முடிகிற வரை யார் முகத்தையும் பார்க்காம வச்சு, தாய்மாமனை பார்க்க சொல்லுவாக, ஏன்னா பரிசம் போடுறது அவன் தானே? இதெல்லாம் இந்தக் காலத்துச் சிறுக்கிகளுக்கு எங்கே தெரிய போகுது” சலித்துக் கொண்டார்.

“அடியாத்தி இம்புட்டு விஷயம் இருக்கா, நான் வேற அந்தக் காக்கா பயலை அன்னைக்குப் பாத்துப்புட்டேனே, எம்சிஆர் பொஞ்சாதியா ஆவமாட்டேனா? காக்கையனுக்கு நான் தான் பொஞ்சாதியோ” கவலைப் பட்டுக் கொண்டாள் அவள்.

“இவ எவடி கூறுகெட்டவ கணக்கா பேசுத? அவக சீமையில இல்ல பொண்ணு கட்டுவாக? உன்னை மாதிரி கறுப்பச்சியை எட்டி கூடப் பார்க்கமாட்டாக… அவகளுக்கு வெள்ளையா இருக்கவகளத்தேன் பிடிக்குமாம்” நாடியில் இடித்துக் கொண்டாள் இன்னொருவள்.

எம்ஜிஆர் தீவிர ரசிகை அவள்.
இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டனர். இருவருமே அவரின் தீவிர ரசிகர்கள். எம்சிஆர் மாதிரி மணாளன் வேண்டும் என்று கனவு காணும் கன்னிகள்.

தமிழ் கண்கள் மீண்டும் அழகை சுற்றி வந்தது. மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சி பறக்க கண்களோ சிறு சிமிட்டலுடன் அவனையே பார்த்திருந்தது.

சின்னச் சிட்டின் கண்கள் தன்னையே மொய்ப்பதை கவனிக்காமல், வண்டியில் இருந்து மாடுகளை அவிழ்த்துக் கொட்டகையில் கட்டிக் கொண்டிருந்தான் அழகு. முகத்தில் வழிந்த வியர்வையைப் புறங்கையால் துடைத்து துடைத்து மாடுகளைக் கட்ட,

‘தான் அந்த வேர்வை துளிகளாக மாறமாட்டோமா?’ ஏக்கம் கொண்டது தமிழ் மனது.

“அடியாத்தி, அங்க என்னடி பார்க்க?” அருகில் நின்ற ஒருவள் கேள்வி கேட்க,

“அழகு பாவம்ல, இந்த வேகாத வெயிலில் ரொம்ப வேலை செய்யுது” கொஞ்சும் குரலில் கூறினாள் தமிழ்.

“இதென்னடி வம்பா போச்சு, அவுக தினமும்தேன் வேலை செய்யுறாக?

இன்னைக்கு என்ன புதுசா நீ கண்டுட்ட?”

“இன்னைக்குத்தேன் எல்லாம் புதுசா தெரியுறாக” கொஞ்சும் குரலில் கூறி முகத்தை மறைத்துக் கொண்டாள் தமிழ்.

“அங்க என்னடி குசுகுசு, வூட்டுகுள்ளாற கூட்டிட்டு போங்க” என்றவர்,

“அடியே அமுதா” எனத் தன் மருமகளைச் சந்தோஷத்தில் ஓங்கி குரல் கொடுத்து அழைத்தார் அப்பத்தா.

“சொல்லுங்கத்த” என்னவோ ஏதோ எனப் பதறியடித்து ஓடி வந்தார் அமுதா.

“நீ ஏன்டி இப்படிச் சாணில விழுந்து வாரி வந்திருக்க?” நாடியில் கைவைத்து யோசனையாகக் கேட்டார்.

“நீங்கதானத்த பாத்ரூம்ல வழுக்கி விழுந்தது போல் அலறுனீங்க”

“இவ எவடி, கூறுகெட்டவ? புள்ள பெரியமனுஷி ஆகியிருக்கா? எல்லாருக்கும் சொல்லி விடு போ, கீழே விழுந்தனாம் சந்தோசமா ஓடி வந்திருக்கா” முணுமுணுத்துக் கொண்டார்.

“சரிங்கத்த” புன்னகை முகத்துடன் வீட்டுக்குள் சென்றார் அமுதா.
அடுத்தகட்ட வேலைகள் அழகை சூழ்ந்து கொண்டது. அமுதா கடையில் சில பொருட்களை வாங்கி வர அழகை பணித்தார்.

வரும்பொழுது கையோடு பல பெண்மணிகளை அழைத்து வந்தான். வந்தவர்கள் கையில் அவர்கள் வீட்டில் உள்ள உலக்கையை எடுத்துக் கொண்டு வந்தனர்.

அவர்களுக்கு பின்னே வந்த உரல் அங்கிருந்த ஒவ்வொரு மரத்தின் கீழே வைக்க, மாட்டு வண்டியில் நெல் வந்துக் கொண்டிருந்தது.

அழகு வாங்கி வந்த பொருட்களை வீட்டின் வாசலில் வைத்துக் கொண்டு அவர்களை அழைத்து நின்றான். இதற்காகக் கூட அவன், அவர்கள் வீட்டு வாசலை மிதிக்கவில்லை.

தோழிகளுடன் அமர்ந்திருந்த தமிழரசியோ அழகை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

வேற்று ஜாதிக்காரனை வீட்டில் கூடக் கால் வைக்க விடாதவர்,

நடுக்கூடத்தில் அமர வைக்கும் மருமகனாக எப்படி ஏற்பார்? காலம் தான் பதில் சொல்லும்.

error: Content is protected !!