MT 8

MT 8

மாடி வீடு – 8

இன்றில் இருந்து அன்பு, ஐயாவின் வீட்டுக்கு வேலைக்கு செல்லப் போகிறாள். ஐயா வீட்டில் சின்ன சின்ன வேலையும், ஊருக்கு புதிதாக வந்திருக்கும் வாத்தியாருக்கு சாப்பாடு கொண்டு கொடுப்பதுவும் தான் அன்புவின் வேலை.

“அண்ணே சீக்கிரம் வா கோவிலுக்கு போயிட்டு ஐயா வீட்டுக்கு போவோம்”
அவள் அழைக்க, இருவரும் வீட்டை நன்றாக சாத்தி விட்டு, மதனியிடம் கூறி வெளியில் வந்தனர்.

“அன்பு, அம்மா என்ன சொன்னாலும் செய்யோணும், அவக கோவத்துல எதுனா வைதாக் கூட அவககிட்ட ஒன்னும் சொல்லாத கண்ணு, அண்ணே கிட்ட எதுனா சொல்லு அண்ணே பாத்துகிடுத்தேன்”

“இதெல்லாம் நீ சொல்லணுமா? நான் உன் தங்கச்சிண்ணே”

அண்ணனுக்கு சளைக்காத தங்கையவள். தங்கை தலையை பாசமாக வருடிய அழகு, அவளுடன் கோவிலில் நுழைந்தான்.

அங்கிருந்த திண்டில் அமர்ந்து, கல் அடுக்கி வேண்டுதல் வைக்கும் பொழுது, அவர்களை நோக்கி சிலுக்கு வந்தாள்.

அங்கிருந்த தூணில் சாய்ந்து அமர்ந்து பழத்தை உண்ண ஆரம்பித்தாள்.

கொஞ்சமாய் மனநலம் பாதிக்கப்பட்டவள். அப்படி சித்தரிக்கப்பட்டவள். அந்த கோவில் விட்டு எங்கும் வரமாட்டாள் அவள். யாரையும் தொந்தரவும் செய்யமாட்டாள். கொடுத்ததை உண்டு அமைதியாக அங்கு படுத்துக் கொள்வாள்.

ஆலமரத்தானின் உறவுக்காரி. ஊரில் நடந்த தகராறில், ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவள்.

சிந்தாமணி… நிறைய முத்து உள்ள கொலுசை போட்டுக் கொண்டு அங்கும் இங்கும் சுற்றுவாள். இதுவே அவளுக்கு “சிலுக்கு” என்ற பெயரை பெற்று தந்தது.

வாலிப வயதில் அத்தனை அழகாக இருப்பாள். ஊரில் அவள்சோட்டுப் பெண்களை ஊர் கிணற்றில் தண்ணீர் எடுக்க அழைத்து செல்வது அவள் தான். தைரியசாலியும் கூட, ஆனால் காதலில் அநியாயமாக கோழையானவள்.

அவளுக்கு என்ன ஆனது? அவள் காதலன் எங்கே? இப்படியான கேள்விகள் மட்டுமே ஊரில் உலா வந்தவை. அதற்கான பதில் அவள் மட்டுமே அறிந்தது. நாளடைவில் அதுவும் மறைந்துப் போயின.

யார் என்ன சொன்னாலும் கேட்காமல் அழகை தன் வீட்டில் அழைத்து செல்லும் பாரதி கண்ட புதுமை பெண்.

அவளைக் கண்டு, அவள் நிலைக் கண்டு கண்ணில் வந்த கண்ணீரை துடைத்தவன் கோவிலை விட்டு வெளியில் வந்தான்.

“என்ன அழகு, அன்பு உன் கூட வேலைக்கு வருதோ?” பூக்காரப் பாட்டி கேட்டுக் கொண்டே கோவில் வாசலில் பூக்கூடையுடன் அமர்ந்தார்.

“ஆமா, பாட்டி அங்கத்தேன் கூட்டிட்டுப் போறேன்?”

“மணி பத்தாச்சி இப்பத்தேன் வாரீக?” அன்பு தான் கேட்டிருந்தாள்.

“கொஞ்சம் நேரம் ஆகிட்டு புள்ள… ஐயா வயக்காட்டுல பூ பறிக்க நேரமாகிட்டு”

“சரிங்க பாட்டி” அவர்கள் கிளம்ப எத்தனிக்க,

“இந்தா புள்ள, மொத நாள் வேலைக்குப் போறவ, செத்த பூ வச்சிட்டு போ” என அவளிடம் கொடுக்க,

“இல்ல பாட்டி. நீ வித்துக்கோ. எனக்கு வேணாம்”

“இந்தா புள்ள சும்மா புடி. மொத போணி உங்கையால போனா நல்லாருக்கும்”

தன் சட்டை பையில் இருந்த ஐந்து ரூபாய் கொடுத்து, பூவை வாங்கி அன்பு கையில் கொடுத்தான் அழகு.

அன்பு, ஐயா வீட்டின் பின் பக்கம் செல்ல, அழகு தன் ஐயாவை அழைத்துக் கொண்டு வயலுக்கு சென்றான்.

#######
இன்று பள்ளிக்கு நேரமே கிளம்பினான் அமுதன். காலை சாப்பாடு எப்பொழுதும் போல் வாசலில் இருந்தது.
ஒரே ஒரு பெண் ஆசிரியர் மட்டுமே அங்கிருந்தார். அரசு ஆசிரியர் போலும். ஒரே வகுப்பறையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களை வைத்து பாடம் சொல்லிக் கொண்ருந்தார்.
மெதுவாக வகுப்பறைக்குள் நுழைய,
அவனைக் கண்டு சிரித்தவர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் என ஒரு பதினைந்து பேரை அவன் பின்னே அனுப்பினார்.
‘இதென்னடா இத்தனை பேர் தான் இருக்காங்க?’ எண்ணியவன் இன்னொரு அறைக்குள் நுழைய, மாணவர்களும் அவன் பின்னே சென்றனர்.
அதில் பத்து பேர் அங்கிருந்த மர பெஞ்சில் அமர, மீதி ஐந்து பேர் கீழே அமர்ந்துக் கொண்டனர்.
அவர்களை கண்டும் காணாதவன் போல், தான் கொண்டு வந்த பாரதியார் போட்டோவை அங்கு தொங்கவிட்டான்.
எல்லார் பேரையும் அறிந்துக் கொண்டவன். தான் அறிந்தவற்றை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
கொஞ்ச நேரத்தில் அவர்களுக்குள் சிறு சத்தம்.
கரும்பலகையில் எழுதுவதை நிறுத்தியவன், அவர்களைப் பார்க்க அமைதியாக இருந்துக் கொண்டனர்.
மீண்டும் கரும்பலகை பக்கமாய் பார்வையை திருப்ப, மீண்டும் அவர்களுள் சலசலப்பு. டக்கென்று அவர்கள் பக்கம் திரும்ப,
இப்பொழுது கீழே அமர்ந்திருந்தவன், தன் கையை சட்டென மஞ்சப்பையில் மறைத்துக் கொண்டான்.
“டேய் என்னங்கடா நினைச்சிட்டு இருக்கீங்க? நானும் பாத்துகின்னே இருக்கேன். ஓவரா பண்ணுறீங்க? டேய் என்னடா கையில எழும்பு” என்றபடி கையில் கம்பை எடுத்து அவனை நோக்கி வந்தான் அமுதன்.
“என்னடா அது”
“புளியங்கா சார்”
“புளியங்காவா? காட்டு பார்ப்போம்”
“இங்க கொண்டு வா அதை?”
அமுதன் கையில் கொடுத்தான் அவன்,
 கருப்பட்டி காய்த்த பொழுது, கடைசியில் கொஞ்சம் புளியையும் சேர்த்து காய்த்து வைத்திருந்தார் கருப்பட்டி காய்த்தவர்.
ஒரு நாள் முழுவதும் அதில் ஊற வைத்து, காலமே இவனிடம் கொடுத்து விட்டிருந்தார்.

புளி, மாம்பழம்  இப்படி எதாவது போட்டு காய்த்துக்கொடுப்பார்…

புளி கோரையில் கருப்பட்டி பிடித்து ஒரு வாசத்தை வீசியது. இலையில் பொதிந்து வைத்திருந்ததில் கருப்பட்டி உருகி இலையோடு ஒட்டி இருக்க அவன் நாக்கில் எச்சிலை வழியவைத்தது.
இலையில் இருந்து ஒரு புளியை எடுத்தவன், அப்படியே வாயில் வைத்து சுவைத்தான். புளிப்பும், இனிப்பும் கலந்த புளி அவன் நாவில் அமிர்தமாய் கரைந்தது.
‘யப்பா… என்ன ஒரு டேஸ்ட்’ சிலாகித்தது நாவு.
###############
சாயங்காலம் எப்பொழுதும் போல் வயலுக்கு சென்றான் அமுதன்.
பச்சை பசேல் என்று இருந்த வயல் வெளிகள் அவனை வா வா என அழைத்தது.
என்ன சுகமான காற்று! இடுப்பில் கைகளை வைத்து சுகமாய் அந்த மாசு மருவற்ற காற்றை ஆழ மூச்செடுத்து சுவாசித்தான் அமுதன்.
அந்த காற்றில் நெல்மணிகள் அங்கும் இங்கும் ஆட, தலையாட்டி பொம்மைகளை நினைவு படுத்தின.
அதுகளுக்கு என்ன ஒரு ஆனந்தம்… ஆனந்தமாய் நர்த்தனம் ஆடுகின்றன…
கூட்டம் கூட்டமாய் செல்லும் பறவைகள் கூட எத்தனை அழகு!
இயற்கை எழிலில் இதயத்தை பறிக் கொடுத்தான் அமுதன்.
பட்டணத்தில் என்ன இருக்கிறது. சொர்க்கமே இங்குதானோ?
புல் பூண்டு முளைக்காத தார் ரோடு, அந்த ரோட்டை சுற்றி பெரிய பெரிய கட்டிடங்கள். அங்கு என்ன இருக்கிறதென்று அப்பா அங்கு சென்றார்.
அந்த கோர புளி என்ன ஒரு சுவை… என்ன பணம் கொடுத்தாலும், பட்டணத்தில் அந்த சுவை உண்டா? கண்ணுக்கு குளிர்ச்சியா அங்க என்ன இருக்கு?
அந்த வறட்சியில் வாழ்ந்து விட்டிருந்த அமுதனை, இந்த பசுமையான போர்வைகள் இருகரம் நீட்டி அணைத்துக் கொண்டன.
மாமரத்தில் குயில் ஓன்று பாடியது… அது துணையை பாடி அழைப்பதுப் போல் தெரிந்தது அவன் கண்களுக்கு.
கால்வாயில் தண்ணீர் சலசலவென ஓடியது. சலங்கை முத்து கொலுசணிந்த பாதங்கள் கொண்ட பெண் ஓடியது போல் இருந்தது!
வளமான வயல் வெளிகள் கண்ணுக்கு குளிர்ச்சி தந்தன.
இத்தகைய அழகை அமுதன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, தூரத்தில் அவனின் பேரழகைக் கண்டான். அந்த கன்னுக்குட்டியை கையில் பிடித்து வேகமாக செல்வது யாராக இருக்கும்.
‘அவள் தான் அவளே தான்’ வாய் மெதுவாக ‘கன்னுகுட்டி’ சொல்லிக் கொண்டன.
காந்தம் போல் அவள் இழுக்க பின்னே ஓடினான்.
“கன்னுக்குட்டி” சத்தமாய் அழைத்து அவள் பின்னே ஓடினான்.
ஒரு நொடி நின்றுப் பார்த்தவள், இன்னும் வேகமாய் சென்று விட்டிருந்தாள்.
பேர் இன்னும் அவனுக்கு தெரியவில்லை. பேசிய இரண்டு நாளில் பேர் கேட்கும் எண்ணமும் வரவில்லைப் போலும்.

அவனே அவளுக்கொரு பேர் வைத்துக் கொண்டான்

“கன்னுக்குட்டி“ என்று.
அப்படியே அவள் பின்னே ஓடியவன், வயலை விட்டு வெளியில் வந்திருந்தான்.

அப்படியே அங்கு நின்று சுற்றி எங்கும் பார்த்தான்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவளைக் காணவில்லை.. வாழை தோப்பு தான் கண்ணில்பட்டது.
சோகமாக வீட்டை நோக்கி திரும்பி நடந்தான்.

@@@@@@@@@@@@

செல்வி கடைக்குச் சென்றுவிட்டு வீட்டை நோக்கி, வந்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு எதிரே லிங்கம் வந்துக் கொண்டிருந்தான்.

“ஏ செல்வி நில்லு புள்ள” அதிகார குரல் வேறு.

“என்ன?” முறைப்புடனே அவனை நோக்கினாள் செல்வி.

“ஏ புள்ள… இந்த மச்சானை எப்போ கட்டிக்க போறவ?”

“ம்ம்… நல்ல மாட்டு கயிறா எடுத்து வாவே, ஐயா தோப்பு, மரத்துல கட்டிவைக்குத்தேன்”

“போ செல்வி… எப்பவும் என்னைத்தேன் நீ கோட்டி ஆக்குத… எப்போ என்னை கட்டிப்ப?”

“உன்னை கட்டிக்கோணும் அதான. கட்டிக்கிறேன் வா” என்றவள் இருகைகளையும் கொண்டு அவனை அணைத்து விடுவித்தாள்.

“இப்படி இல்ல… நான் உன் கழுத்தில் தாலிக் கட்டோணும்”

“கழுத்தில தானே வா கட்டிகிட்டாப் போச்சு” அவன் கையைப் பிடித்துக் கொண்டு தர தரவென இழுத்து சென்றாள் செல்வி.

“ஏ புள்ள. எதுக்கு இப்படி உன் மச்சாக்காரை இழுத்துட்டுப் போறவ?”
வழியில் நின்றிருந்த சில பெருசுகள் கேட்க,

“ஆங்… என்ற மச்சானைக் கட்டிக்க போறனாக்கும்” கூறியபடியே வேகமாக வீட்டை நோக்கி நடந்தாள்.
இவர்களுக்குள் எப்பொழுதும் இப்படி செல்ல சண்டைகள் நடக்கும் என்பது ஊரறிந்த விஷயம்.

வீடு வரை, அவனை இழுத்துக் கொண்டே வந்தாள் செல்வி.
சுற்றும், முற்றும் பார்வையை திருப்ப, தூரத்தில் கயிறு ஒன்று கிடந்தது.

அதை கையில் எடுத்தவள், அவன் அருகில் சென்று “கெட்டிமேளம், கெட்டிமேளம்” எனக் கூறிக் கொண்டு அவன் கழுத்தில் கட்டினாள்.

பாவமாக அவன் நின்றிருந்தான்.
“மச்சான்… நான் உனக்கு தாலி கட்டிட்டேனாக்கும்” சிரித்தபடியேக் கூறினாள்.

இவள் போட்ட கூச்சலில், “ஏன்டி கருவாடு வாங்கிட்டு வந்தியா? குழம்பு கொதிக்குது?” அதட்டலாக வெளியே வந்தார் செல்வியின் தாய் முத்தார்.

“இந்தா சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடு”

“என்னடி கோட்டி மாதி பேசுத?” அவளிடம் கேட்டவர், அப்பொழுது தான் லிங்கத்தைப் பார்த்தார்.

“இதென்னடா மாடு கட்டுற கயித்த கழுத்தில போட்டுட்டு கிடக்க?”

“மச்சாரு தாலிக் கட்டணும்னு சொன்னாரு, அதேன் நான் கட்டிப்போட்டேன்?”

“ஏன்டி ஒரு விவஸ்தையே இல்லையா? பொட்ட புள்ள மாதி இருக்கியா நீ, இப்படி இவன் கூட வம்பு பண்ணுத?”

அவளை திட்டியபடியே லிங்கம் கழுத்தில் இருந்த கயித்தை எடுக்க வர,

“விடுத்த, அவ என்கிட்டதேன் வெளாட முடியும் அதேன் விளாடுற. சும்மா போவியா?”

“உனக்கு இது தேவைத்தேன்” கூறியபடியே வீட்டின் உள்ளே நுழைந்தார் முத்தார்.

அவனைப் பார்த்து சிரித்தபடியே செல்வி வீட்டுக்குள் நுழைய, அவளை பார்த்தவன் சிரிப்புடன் அந்த செம்பட்டை பாய்ந்த முடியை கோதி, கழுத்தில் கிடந்த கயிற்றை கையில் எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான் லிங்கம்.

அடுத்த கொஞ்ச நேரத்தில் மீண்டும் செல்வி வீட்டை நோக்கி ஓடி வந்தான் லிங்கம்.

“என்ன மச்சான் கருவாட்டு குழம்பு வாங்க வந்தியா?”

“இல்லப்புள்ள… நம்ம அன்பு வயசுக்கு வந்திருக்காம்… அழகு சொல்லிச்சு… அதேன் சொல்லிப்போட்டு போகலாம்னு வந்தேன்”

“இரு மச்சான் நானும் வரேன்” என்றவள் அவனுடன் நடந்தாள்.

அடுத்து வந்த இரு நாட்களும் அழகு வீடு பரபரப்பாகவே இருந்தது.

error: Content is protected !!