MT – pre final

மாடிவீடு – 23

அமுதனின் வரவை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன்? ஆலமரத்தான் கூட எண்ணிப்பார்க்கவில்லை.

‘அமுதன் இங்கே இருக்கிறான் என்றால், என் அன்பு எங்கே?

அவளை எங்கோ அழைத்து சென்றுவிட்டு இவன் ஏன் இப்பொழுது தனியாக இங்கு வந்திருக்கிறான்?’ இப்படியான எண்ணம் தான் அழகு மனதில்.

“டேய்! என் அன்புவை என்னடா பண்ணுன?” கேட்டபடியே அவன் சட்டையைப் பிடித்தான் அழகு.

“என்ன அமுதா இதெல்லாம்?” எதுவும் தெரியாததுப் போல்  அவனைபார்த்துக் கேட்டார் ஆலமரத்தான்.

இப்பொழுது முழிப்பது அமுதன் முறையாகிற்று, ‘அன்பு எங்கே சென்றாள்? அவளுக்கு திருமணம் முடியவில்லையா? என்ன நடக்குது இங்கே?’

தன் சட்டையில் இருந்து, அழகு கையை மெதுவாக எடுத்து விட்ட அமுதன், ஆலமரத்தானை நோக்கினான்,

“அதுதான் அங்கிள் நானும் கேக்க வந்திருக்கேன். என்ன நடக்குது இங்க? அன்பு எங்க? அவளை எங்க வைச்சிருக்கீங்க? அன்னைக்கே நான் உங்க வீட்டை தேடி வரும்போதே என் அன்புவை எனக்கு தந்திருக்கலாமே, நாங்க எங்கையாச்சும் போய் பொழைச்சிருப்போமே? இப்போ அவளை காணும்னு என்கிட்ட கேட்குறீங்க? என்னதான் நடக்குது” ஒன்றும் புரியாமல் கேட்டான் அமுதன்.

‘என்ன அமுதன் முன்னமே அன்பை பெண்கேட்டு ஐயா வீட்டுக்கு போனானா? இப்போ ஐயாத்தேன் அன்பை ஒளிச்சி வச்சிருக்காங்களா?’

இப்பொழுது ஐயாவின் முகத்தைப் பார்த்தான் அழகு.

“ஐயா, நாந்தேன் நீங்க சொன்ன போலவே எல்லாம் செஞ்சேனே, இப்போ என் அன்புவை என்ன ஐயா பண்ணுனீக?

நீங்க சொன்ன போல ராவோடு ராவா அவளை கொன்னுட்டீங்களா?”

“அழகு என்ன பேசுத? தெரிஞ்சுதேன் பேசுறியா?” ஆத்திரமாக வினவினார் ஆலமரத்தான்.

‘என்ன சொல்லுறான் அழகு, அன்புவை அங்கிள் கொன்னுட்டாகளா? என்ன நடக்குது இங்க’ என்றபடி அவர்களையே பார்த்து நின்றான்.

“எல்லாம் தெரிஞ்சித்தேன் பேசுதேன், அமுதன் வீட்டுக்கு வந்ததை சொல்லாமலே, என்ன அழகா நாடகம் ஆடி, எங்க இனத்துல கைநனைச்சி, அவளுக்கு திடீர்னு ஒரு பையனைப் பார்த்ததும் எல்லாம் எங்க மேல இருக்க பாசந்தேன்னு நினைச்சேன், இப்போதேன் தெரியுது, உங்க கௌரவம் காக்க என் அன்புவை பலியாக்க எண்ணிருக்கீக.” கொஞ்சம் நிதானமாக ஆனால் அழுத்தமாக கேட்டவன் முகம் உடனே கோபத்தை தத்தெடுத்துக் கொண்டது.

“அழகு என்ன பேச்சு இது?” அவனைப் பார்த்து கேட்டார் அவர்.

மீண்டும் அவரது புரியாத தன்மையுடன் கூடிய கேள்வியை அவர் கேட்கவும், உண்மையாகவே அவனது கோபம் உச்சத்தை அடைந்தது.

“என் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்க நீ யாருய்யா?” கண்கள் சிவக்க கோபமாக கேட்டான் அழகு.

அழகுவின் இந்த கோபமுகத்தை யாரும் இதுவரை பார்த்திருக்கவில்லை.

சிறுவயதில் எடுத்து வளத்தார் என்பதற்காக மட்டுமே அழகு இதனை நாளும் அவருக்கு அடங்கி இருந்தான், ஐயா எது செய்தாலும் நல்லதுதான் செய்வார் என்ற எண்ணம் அவனுக்கு. அவனின் அப்பாவும் இதை சொல்லித்தான் அவனை வளர்த்தார்.

ஆனால் இப்பொழுது அவர் செய்வதை அவனால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. இனி அப்படி இருக்க அவசியமே இல்லை.

“அந்த ராஜாவை கொன்னதுப் போல எந்தங்கச்சியையையும் என்ன பண்ணுனீக சொல்லுங்க” ஆவேசமானான் அவன்.

“சிலுக்கு அக்கா ஆசைபட்டாங்கன்னு அவக குடும்பத்தையே அழிச்‌சீங்களே அதே போல் என் அன்புவையும் அழிச்சிட்டீங்களா?”

இப்பொழுது எல்லாரும் ஒரே முகமாக ஆலமரத்தானை பார்த்திருந்தனர். இந்த செய்தி புதியது!

அமுதா அப்படியே திகைத்து நின்றுவிட்டாள்.

அதே நேரம் அன்புவை தேடி சென்றவர்கள் எல்லாரும் அவள் இல்லாமல் திரும்பி வர ரவுத்திரமானான்.

“சொல்லுய்யா… சொல்லு… என் அன்புவை என்ன பண்ணுன” அவரின் பட்டு சட்டையில் இருந்தது அவன் கை!

யாரும் அழகுவை தடுக்க முன்வரவில்லை. அமுதன் கூட அப்படியே தான் பார்த்திருந்தான். அவனுக்கு எதுவோ புரிவது போல் இருந்தது ‘ஒருவேளை அன்பு என்னை தேடி ஹாஸ்பிட்டல் சென்று விட்டாளோ?’ சின்ன யோசனைதான் அப்படியே நின்றுவிட்டான்.

ஆலமரத்தான் கொடியவர் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் இப்பொழுது மிகவும் கொடியவராக எல்லார் கண்களுக்கும் தெரிந்தார்.

யாருக்கும் தடுக்கும் எண்ணம் வரவில்லை. ஆலமரத்தான் இதே போல் சின்ன சின்ன விஷயங்கள் செய்வார் என்று தெரியும், ஆனால் ஒரு உயிரை கொல்லும் அளவுக்கு போயிருக்கிறார் என்றால் அவர் எத்தனை கொடியவராய் இருப்பார்.

“அழகு, என்ன பண்ணுற நீ? அப்பா சட்டையில் இருந்து கையை எடு” என்றபடி அழகுவை தடுத்தது வேறு யாருமில்லை தமிழே தான்.

அப்பொழுது கூட்டத்தில் கை தட்டும் சத்தம் கேட்க, ஒரு சேர எல்லாரும் திரும்பிப் பார்க்க, கைகளை தட்டியபடி வந்துக் கொண்டிருந்தாள் சிலுக்கு.

ஆலமரத்தானை நேருக்கு நேர் பார்ப்பதற்காக பல வருடங்களாக சமயம் பார்த்துக் கொண்டிருந்தாள் சிலுக்கு.

இன்று அந்த வாய்ப்பு கிடைப்பதாக எண்ணியவள், கோவிலில் இருந்து குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்தவள் அழகு வீட்டை நோக்கி இதோ வந்தேவிட்டாள்.

“என்ன தமிழ் புருசனுக்கு சப்போர்ட் பண்ணாம, உங்கப்பனுக்கு சப்போர்ட் பண்ணுத?” என்றபடி அழகு அருகில் வந்து நின்றாள் சிலுக்கு.

அழகின் கை தானாக, அவரின் சட்டையில் இருந்து நகர்ந்தது.

அவனின் தவறு கண்முன்னே விரிந்தது!

“என்ன சொல்லுற நீ?” அதிர்ச்சி விலகாமல் உறுமலாக கேட்டார் ஆலமரத்தான்.

“என்ன புரியலியா? இங்காரு” கேலியாக தமிழ் கழுத்தில் இருந்த தாலியை வெளியே எடுத்துக்காட்டினாள் சிலுக்கு.

ஆலமரத்தானுக்கு கோபம் தலைக்கேறியது.

‘கன்னிபெண் கழுத்தில் தாலியா?’ அதிர்ச்சி விலகாமல் ஒருவரை ஒருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டனர்.

‘ஐயா மகளா இப்படி!’ பின்னால் பேசிய சத்தம் ஆலமரத்தான் காதுகளில் விழுந்து அவமானத்தில் இதயம் கொதித்தது.

ஆலமரத்தான் முகம் ஒருமாதிரி சுருங்கியது.

“என்ன தைரியம் இருந்தா என் பொண்ணுக்கு நீ தாலிகட்டிருப்ப?” உறுமலாக அழகு சட்டையை கொத்தாக பிடித்து அவனை அடிக்க போக, சிலுக்கு வந்து மறைத்தபடி நின்றாள்.

சிலுக்கு அவர் முன்னே வரவும் அவர் கை தானாக கீழிறங்கியது. ஏனோ அவளின் முன்னே பேச அவரால் முடியவில்லை.

“என்ன காரியம்டி பண்ணிட்ட? இதுக்குத்தேன் உன்னை அப்படி வளத்தோமா?” கேட்டபடியே சரமாரியாக தமிழை அடிக்க ஆரம்பித்துவிட்டார் அமுதா.

சிலுக்கை தள்ளியபடி, “அவளை எதுக்கு அடிக்கிறீங்கமா, எல்லாம் நாந்தேன் பண்ணுனேன் என்னை என்ன வேணும்னாலும் பண்ணுங்க, அவகள ஒண்ணும் சொல்லாதீக?” அமுதாம்மாள் முன் வந்து நின்றான் அழகு.

“எங்க வீட்டுக்கு பொண்ணுக்கு நீ தாலிகட்டுவியா?” என்றபடி ஆலமரத்தான் ஆட்கள் சிலர் அழகை அடிக்க பாய, அவர்கள் முன் வந்து நின்றாள் தமிழ்.

“அழகு எதுமே பண்ணல, எல்லாம் நாந்தேன் பண்ணுனேன். எனக்கு அழகை பிடிச்சிருக்கு நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம்” பேச்சு இவ்வளவுதான் என்பது போல் கூறிவிட்டாள் தமிழ்.

அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டார் ஆலமரத்தான்.

“என்ன பேச்சு பேசுத நீ? உனக்கும் அவனுக்கு ஏணி வச்சா கூட எட்டாதுடி” கோபமாக கூறினார் அமுதாம்மாள்.

“ம்மா… அதேன் சொல்லிட்டேனே அவனை பிடிச்சிருக்கு கட்டிக்கிட்டேன்”

“அத்தை அப்பவே சொன்னாக, நாந்தேன் மடச்சி மாதிரி  அவக சொன்னதை கேட்காம இருந்தேன், நல்லா அசிங்கபடுத்திட்ட நீ…  நல்லாவே இருக்கமாட்டடி, நல்லாவே இருக்கமாட்ட, வாங்க போலாம்” ஆலமரத்தான் கையை பிடித்து இழுத்துக் கொண்டு செல்லமுற்பட்டாள் அமுதா,

சிலுக்கு பயங்கரமாக ஆலமரத்தானை அவமானபடுத்ததான் இங்கு வந்திருக்கிறாள் என்று அவளுக்கு தோன்றியது. அதற்கு முன் அவரை அங்கிருந்து நகர்த்த வேண்டும்.

இப்பொழுது ஆலமரத்தான் அமைதியாக இருப்பதற்குப் பின்னால் பயங்கரமான விளவு வரும் என்றும் அவளுக்கு நன்கு தெரியும். தமிழ் உயிரையும் எடுக்க தயங்கமாட்டார் என்பதும் அவளுக்கு தெரியும். அது தான் அவசரமாக ஆலமரத்தான் கையை பிடித்து இழுத்தாள் அமுதாம்மாள்.

“அடடே! இதுக்கே கிளம்பினா எப்படி மதனி… இன்னும் நீங்க பார்க்கவேண்டியது நிறைய இருக்கு” கூறியவள் முகத்தில்  ஆவேசமான சிரிப்பு.

கலக்கதுடன் ஆலமரத்தான் முகத்தைப் பார்க்க, இறுகிப் போய் நின்றிருந்தார்.

“இதோ நிக்குறானே அழகு, உனக்கு கொஞ்சமும் எட்டாத இனக்கார பையன். உனக்கு மருமகனாம்! காலம் எப்படி மாறுது பாத்தியா?” கேலி அவளிடம்,

“உனக்கு நியாபகம் இருக்கா? ராஜா…

என்னோட ஆசை காதலன்!

அவனோட வம்சந்தேன் உன்னோட மருமவனும். அவந்தேன் உன்னோட செல்ல மாப்பிள்ளை. இன்னொரு விஷயம் சொல்லடா? இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிவச்சதே நாந்தேன்.

சரித்திரம் திரும்பனும்ல? அதேன்!

ராஜாவை எப்படி துடிக்க துடிக்க என் முன்னாடி அடிச்ச. அதோட விட்டியா நீ, ஆளே இல்லாம பண்ணிடியே! நாங்க என்ன தப்பு பண்ணுனோம், ரெண்டு பேருக்கும் பிடிச்சது கல்யாணம் பண்ணிக்க ஆசைபட்டோம், ஆனா நீ எல்லாதையும் ஒரே நாளுல அழிச்சுட்ட.

என் வாழ்க்கையிலையே மறக்க முடியாத நாள்!

அவனை மறக்கவும் முடியாம, நல்லா வாழவும் முடியாம நான் போட்ட வேஷந்தேன் இந்த பைத்தியக்கார வேஷம்!

இதுக்கெல்லாம் காரணம் யாரு நீதேன்!

இதே வேதனை நீயும் படணும்ல? அதேன் சத்தம் இல்லாம காரியத்தை முடிச்சிபோட்டேன்!

நீ நினைக்கலாம் அவகளுக்கு கல்யாணம் பண்ணிவைக்க நான் யாருன்னு, அதே கேள்வியை நானும் இப்போ கேக்குதேன், ராஜாவை கொல்ல நீ யார்? உனக்கு யாரு அந்த உரிமையை தந்தா?

எங்களை அப்படியே விட்டிருந்தா உன் கண்ணுல படாமலே எங்காவது போய் வாழ்ந்திருப்போமே? எல்லாத்தையும் ஒன்னுமே இல்லாம பண்ணிட்டியே?

என் வாழ்க்கையை நீ கையில எடுத்தது போல, உன் பொண்ணோட வாழ்க்கையை நான் கைல எடுத்தேன். நான் நல்ல முடிவுத்தேன் எடுத்தேன். எப்பவும் உன் பொண்ணு நல்லா இருப்பா, ஆனா நான்?

இப்போ என்ன பண்ணுவ? அழகுவை கொன்னுருவியா?” சற்று யோசித்துவிட்டு,

“அவனை கொன்னா உன் பொண்ணுக்கு என் நிலமைத்தேன். அதை உன் கண்ணால பாக்கதுக்கு முன்ன நீயே தூக்குபோட்டு செத்திடு.

எப்படியும் நீ சாகமாட்ட? ஒருவேளை உன் பொண்ணை கொன்னுடுவியா? அது உன்னால முடியாது அவ உன் ரத்தமாச்சே?.

உன் ரத்தம் உனக்கு எப்பவும் பெருசுதேன். அதேன் என்னை விட்டு வச்சிட்டு என் ராஜாவை கொன்னுட்ட” கண்களில் கண்ணீர் துளி!

எல்லாரும் சிலுக்கையே அதிர்ச்சியாக பார்த்திருக்க, தமிழ், ஆலமரத்தானைப் பார்த்திருந்தாள், ‘அப்பாவா இப்படி பண்ணினார்?’

ஆலமரத்தான் கண்கள் மட்டும் தமிழையே பார்த்திருந்தது.

சிலுக்கை அவர் ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. எப்பொழுதும் அவர் பார்வைக்கு அவள் ஒரு பைத்தியக்காரி.

ஆனால், தமிழை நினைத்துதான் மனம் உலைக்களமாய் கொதித்துக் கொண்டிருந்தது. அவரின் அம்மா அடிக்கடி கோடிட்டுக்காட்டினார்தான். அதனால்தான் இருவருக்கும் உள்ள ஒற்றுமையை அமைதியாக எடுத்துக் கூறினார்.

கடுமையாக சொன்னால் மகள் கேட்டுக்கொள்ளமாட்டாளோ என்ற எண்ணத்தில் தான் மெதுவாக எடுத்துக் கூறினார்.

ஆனால் இப்பொழுது மனம் மிகவும் கொதித்துக் கொண்டிருந்தது. அப்பொழுதே நாலு போட்டு எடுத்து கூறியிருக்கவேண்டுமோ என்று.’

மகளின் செயலை அவரால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது.

அவர் மட்டுமல்ல அவர் சாதிசனமே ஏற்றுக் கொள்ளாது, இனி அவனை பார்த்து பயந்தவன் எல்லாம் அவர் முன்னே அவரையே ஏளனம் செய்வான். எப்படி இந்த ஊரில் தலைநிமிர்ந்து நடப்பது?

எல்லாம் இவளால் வந்தது, அப்படியே கழுத்தை நெறித்து கொன்று போடும் ஆத்திரம் வந்தது, ஆனால் சுற்றி ஊரார் இருக்க அடக்கி வாசித்தார்.

அவர்களை அப்படியே விட்டுவிடும் எண்ணம் மட்டும் அவருக்கு இல்லை. என்ன தைரியம் இருந்தால் தன் மகள் கழுத்தில் தாலி காட்டுவான் அவன். அவன் கட்டிய தாலியை வெட்கமே இல்லாமல் சுமந்து நின்ற தமிழ் மேல் கொலைவெறியே வந்தது.

அவருக்கு அவர் ஜாதியும், கௌரவமும் ரொம்ப முக்கியம். அது அவரது ரத்ததிலேயே ஊறி விட்ட கலாச்சாரம் அதை யாராலும் மாற்ற முடியாது. மாற்ற நினைத்தாலும் ஏதாவது ஒரு சந்தர்பத்தில், சமயத்தில் நானும் உள்ளேன் என தலையை நீட்டி விடும்.

அவர் இனம் அவருக்கு தன் தாயை போன்றது.

அன்பு திருமணத்தை முடித்துவிட்டு உடனே தமிழ் திருமணத்தை முடிக்கத்தான் ஆலமரத்தான் எண்ணியிருந்தார்.

எல்லாவற்றையும் கெடுத்துவிட்டாள் இந்த பைத்தியக்காரி’ இப்படியாக இவர் யோசித்துக் கொண்டிருக்க,

அன்பு பிரச்‌சனையில் ஆரம்பித்து, இப்பொழுது அழகுவிடம் வந்து நின்றது.

“இப்போ என்னதேன் பண்ணுறது, எதுனாலும் பஞ்சாயத்துல வந்து முடிவெடுங்க” என ஊரில் இன்னொரு பெரியவர் கூற,

“என்னத்தையா இனி முடிவெடுக்கணும்? அவந்தேன் வேணும்னு அவ போய்ட்டாளே பிறகென்ன, இனி எனக்கும் அவளுக்கு எதுவும் இல்ல இப்பவே அத்துவிட்டுடுறேன்” என கத்தினார் ஆலமரத்தான்.

“அப்பா!” என அதிர,

அவளை ஏறெடுத்தும் பாராதவர் போல் நின்றுக் கொண்டார்.

“எதுனாலும் பஞ்சாயத்து வட்ட திண்ணையில் சூடம் அடிச்சு சொல்லுங்க” என அவர் கூற,

ஒரு நொடி கண்களை மூடித்திறந்தார் ஆலமரத்தான். எல்லாம் கையை மீறி சென்றுக் கொண்டிருக்கிறது. பெற்ற மகளே செல்லும் பொழுது இதெல்லாம் எம்மாத்திரம்.

சூடம் அடித்து சொல்வது என்றால் அந்த ஊருக்கும் அவர்களுக்கும் தொடர்பு இதோடு அத்துப் போகும். இத்தனை நாள் ஊருக்காக, ஜாதிக்காக என்று இவர் பார்த்து பார்த்து செய்ய, இப்பொழுது ஊரே அவரை தள்ளி வைக்கும் நிலை,

எல்லா கோபமும் அப்படியே தமிழ் மேல் திரும்பியது.

எல்லாரும் பஞ்சாயத்து நடக்கும் இடத்தை நோக்கி செல்ல,

ஆலமரத்தான் தோளில் கிடந்த டவலை எடுத்து உதறி மீண்டும் தோளில் போட்டுக்கொண்டு திண்ணையை நோக்கி நடக்க,

அழகுவும், தமிழும் அப்படியே திண்ணையில் அமர, சிலுக்கு அவர்களையே பார்த்தப்படி நின்றிருந்தாள்.

“அது வந்து…” என தான் ஊகித்த விசயத்தை அழகுவிடம் சொல்ல அமுதன் வாயை திறக்கும் நேரம்,

“அழகு” என அழைத்தபடி லிங்கம் அவர்களை நோக்கி வந்தான்.

“இங்க என்ன பண்ணுற அங்க வா, உங்களை கூப்பிடத்தேன் இங்க வந்தேன் அன்பு வந்துட்டா”

“இதோ இவங்கள” என அமுதனை கட்டிக்காட்டியவன், “பாக்கத்தேன் ஹாஸ்பிட்டல் போனா, நானும் பின்னாடியே போனேன்” என எல்லாம் கூறியவன் அவர்களை அழைத்துக் கொண்டு வட்ட திண்ணையை நோக்கி சென்றான்.

அங்கு கார் அருகில் பாண்டியின் கையை பிடித்தபடி அன்பு நின்றிருக்க, அழகு கண்கள் தானாக கண்ணீரை சுமந்திருந்தது. ‘தங்கை மனதை அறியாமல் போனேனே’ என்ற குற்ற உணர்ச்சியும் தலைத் தூக்கியது.

எல்லாரும் பஞ்சாயத்து முடிவை நோக்கி காத்திருந்தனர். எல்லார் முகங்களும் ஆலமரத்தானையே பார்த்திருந்தது.

ஆனால், அவர் யாரையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அப்படியே வானத்தை நோக்கி கைகளை பின்னால் கட்டியபடி நின்றிருந்தார்.

சிலுக்கு கண்கள் மட்டும் அவர் முகத்தையே அசையாமல் பார்த்திருந்தது. இந்த தலைக்கன  பதவி அவர் கையில் இருந்ததால் தானே அந்த ஆட்டம் ஆடினார் போகட்டும்.

எல்லாம் போகட்டும். அவரை விட்டு எல்லாம் போகவேண்டும் என்பது தான் சிலுக்குவின் எண்ணம். மனம் கொஞ்சம் திருப்தியாய் இருந்தது.

தலைவராக எல்லாருக்கும் பஞ்சாயத்து செய்தவரை இப்பொழுது குற்றவாளியாக நிறுத்தியிருந்தாள் அவர் மகள்.

இப்பொழுது எல்லாரையும் பார்த்து பேச ஆரம்பித்தார் பாண்டியன்.

“என்னை இந்த ஊரை விட்டு தள்ளி வச்சி இருபத்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகுது, இப்போ நான் இந்த ஊருக்குள்ள கால் வைக்க காரணம் என் மகன்.

அவன் காதல்!

நான் தவறவிட்ட என் காதலை எண்ணி நான் பலவருசம் நிம்மதி இழந்து, வேற எந்த ஒரு பொண்ணையும் மனசால கூட நினைக்காம இன்னைக்கு வரைக்கும் நான் அவளை மறக்க முடியாம இருக்கேன் அந்த தவிப்பு என் பையன் அனுபவிக்க நான் விடவேமாட்டேன்” எல்லாரையும் ஒரு முறை சுற்றிப் பார்த்தவர்,

“என்னடா இவன் மூச்சுக்கு முன்னூறு முறை என் மகன், என் மகன்னு சொல்லுற இவன் யாருன்னு பாக்குறீங்களா?

இவன் யாரு, என்ன இனம் எதுவுமே எனக்கு தெரியாது, அவளை மறக்க முடியாம இருந்த காலத்துல கடவுள் எனக்கு குடுத்த மகன். கோவிலில் கிடைத்த மகன் என் தங்க மகன்.

இந்த விசயம் கூட இவனுக்கு தெரியும், எல்லாம் சொல்லித்தேன் இவனை நான் வளர்த்தேன். அதேன் ஜாதி, மதம் பார்க்காம அன்பு மேல இவனுக்கு காதல் வந்திருக்கு.

ஊர் பெரிய மனுஷன் என்ற முறைக்கு நான் எப்பவோ  ஆலமரத்தானைப் பார்த்து கேட்டுட்டேன், ஆனா அவன் எண்ணல்லாமோ பேசிட்டான், செஞ்சிட்டான். பழசை பேசி ஒன்னும்  பண்ணமுடியாது…

அதை விட்டு தள்ளுவோம்…  அன்புவை முழுமனசா ஏத்துக்க ரெடியா எங்க குடும்பம் இருக்கும் பொழுது நான் வேற யாரை கேட்கணும்.” குரலை உயர்தியேதான் எல்லாரையும் பார்த்துக் கேட்டார்.

“ஊர் நியாயம் ஒன்னு இருக்குதே பாண்டியா? இன்னைக்கு நீ பெரிய மனசா பேசலாம், அதே போல எல்லாரும் இருக்கணும்னு அவசியம் இல்லையே. இந்த ஊர்ல இருக்கும் வரை ஊர் கட்டுப்பாடு ஒன்னு இருக்கு,

நீ சொல்லுற முறை எதுவும் எங்கூருக்கு சரிவராது. அப்படியும் உனக்கு உன் நியாயம்தேன் பெருசுன்னா, இன்னையோட அன்புவுக்கும் இந்த ஊருக்கும் உள்ள தொடர்பு முடிஞ்சுப் போச்சு.

அவ அண்ணனை தேடியும் வரக்கூடாது, இதுக்கு சம்மதம்னா அவளை கூட்டிட்டு போ. இனி இதே போல இந்த ஊருக்குள்ள நடக்க கூடாது” அந்த ஊரின் ஆலமரத்தானுக்கு அடுத்த படியாக உள்ள பெரியவர் கூற,

‘அவர்களை இந்த இடத்திலேயே வெட்டிப் போடாமல் என்ன பேசிட்டு இருக்கான் இந்த கிழம்’ கோபமாக எண்ணினார் ஆலமரத்தான்.

‘பஞ்சாயத்து முடியட்டும், இரவோடு இரவா எல்லாம்  முடிக்கிறேன்’ மனம் கொதித்துக் கொண்டிருந்தது.

“ஐயா! ஊடால பேசுதேன்னு மன்னிச்சிப்போடோணும், எனக்கு எப்பவும் என் தங்கச்சி முக்கியந்தேன். அவளை இந்த ஊரை விட்டு தள்ளிவச்சா, என்னையும் தள்ளிவச்சது போலத்தேன்,

அதே போலத்தேன் என் பொஞ்சாதியும்… எனக்கு ஆரும் வேண்டாம், அதே போலத்தேன் அவளுக்கும், அப்படியும் அவளுக்கு யாருனா வேணும்னா தாராளமா போகட்டும். நான் அவளை கட்டாயப்படுத்தமாட்டேன்” தன் பேச்சு முடிந்தது என்பதாக தலையை திருப்பிக் கொண்டான்.

‘அவனுக்கு உழைக்கும் பலன் இருக்கிறது, இனி யாரைப் பார்த்து பயப்படவேண்டும்? இருக்கிறவனுக்கு ஒரு வீடு, இல்லாதவனுக்கு பல வீடு… அதேபோலத்தேன் இந்த ஊர் இல்லன்னா இன்னொரு ஊர் அவ்வளவுதான். அதற்காக யாருக்கும் இனி அடிமையாக வாழ அவன் விரும்பவில்லை’

அழகுவின் இந்த பேச்சு ஆலமரத்தானுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

“தமிழ் நீ என்ன சொல்லுத, அவனுக்கு இந்த ஊரே வேண்டாமாம், உனக்கு உன் அப்பாரு வேணுமா? இல்ல…” அவர் இழுக்க,

“அப்பா” என மகள் அவரை அழைக்க,

“பெத்த தாயை எவனும் அடுத்தவனுக்கு கூட்டிக் குடுக்கமாட்டான்… எனக்கு என் தாய் முக்கியம்” என்றவர்,

அங்கு திண்ணையில் மேல் இருந்த சூடகத்தை எடுத்தவர் தீ ஏற்றி எல்லார் முன்னும் அதை அணைத்து, இவளுக்கும், எனக்கும் எந்த சமந்தமும் இல்லை’ என செயலால் கூறி அமுதாம்மாள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றார்.

அவரின் செயலை புன்னகை முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சிலுக்கு.

அவர்கள் எல்லார் முன்னிலையிலும் அன்பு – அமுதன் திருமணத்தை முடித்த பாண்டியன்.

நேராக வீட்டுக்கு சென்றவர் வீட்டு சாவியை எடுத்து அழகு கையில் கொடுத்து “இனி என்னோட சொத்து எல்லாமே உன் பொறுப்பு. நீ என் மருமகளுக்காக இந்த ஊரையே விட்டிருக்க… உன் திறமையை நீ ஏன் அடுத்தவனுக்கு குடுக்கிற, இதை உன் வயலா நினைத்து செய்” என்றவர், தமிழை நோக்கி,

“என்னை மன்னிச்சிடுமா… அவ்ளோ பெரிய வீட்டில் இருந்த உன்னை இந்த சின்ன வீட்டில் இருக்க சொல்லுறேன். உங்களையும் கையோடு அழைச்சிட்டு போக எனக்கும் ஆசைத்தேன் ஆனா உங்கப்பன் எவ்ளோ நல்ல பையனை மிஸ் பண்ணிட்டானேன்னு நினைக்கனும் அதுக்கு நீங்க கண்டிப்பா இங்க இருக்கணும், மேலும் பல பத்திரம்” கூறினார்.

லிங்கம் அருகில் வந்த அன்பு “ரொம்ப ரொம்ப நன்றிண்ணே” என்றவள் செல்வி கையை பிடித்து அழுத்த தோழிகள் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டனர்.

அழகு அருகில் மெதுவாக வர “அண்ணே” என்றவள் அவனை அணைக்க, அவளை தள்ளி நிறுத்தி கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து “நீ எப்பவும் ரொம்ப நல்லா இருக்கணும் அன்பும்மா, அண்ணே உன்னைப் பார்த்து பூரிச்சுபோற அளவு நீ நல்லா இருக்கோணும்” என, கண்ணீருடன் அவனுக்கு விடைக்கொடுத்தவள்,

தமிழ் கையைப் பிடித்து “அண்ணே சின்னம்மாவை நல்லா பார்த்துக்கோ”  என்றவர்கள் எல்லாரிடம் கூறிக்கொண்டு பட்டணம் நோக்கி சென்றுவிட்டனர்.

******************************

ஆலமரத்தான் வீட்டுக்கு செல்லும் முன்னே அப்பத்தாவுக்கு தகவல் போயிருந்தது.

“நான் அப்பவே சொன்னேன் என் சொல்லை எவன் கேட்டான். அவனை தகுதிப் பார்த்து வையின்னு சொன்னா கேட்காம, இப்போ பாரு ஓடுகாலி என் வம்சத்தையே தலை குனிய வச்சிட்டுப் போயிட்டா, என் சாதி சனம் என் முன்னாடி காறிதுப்ப வழிபண்ணிருக்கா… அவ நல்லாவே இருக்கமாட்டா?”

ஆலமரத்தான், வீட்டு வாசலில் கால் வைக்கும் பொழுதே தாயின் ஓலம் தான் அவரை வரவேற்றது.

“செத்துப் போனவளைப் பத்தி என்ன பேச்சு வீட்டுல, போ போய் வேலையைப் பாரு” என்றவர் அப்படியே வந்து ஊஞ்சலில் அமர்ந்துக் கொண்டார்.

“செத்துப் போனவளை ஏன்டா விட்டு வந்த? அப்படியே வெட்டிப் போட்டுட்டு வந்திருக்க வேண்டியதுதான? சந்தோஷமா நான் கட்டையை சாச்சிருப்பேனே… இ…” மேலும் ஏதோ பேசும் முன்,

“செத்தநேரம் சும்மா இருக்கியா நீ” கோபத்துடன் ஆலமரத்தான் கத்த,  அந்த நேரம் மட்டும் அமைதியாக இருந்தவர், அடுத்த கொஞ்ச நேரத்தில் மீண்டும் தன் புலம்பலை ஆரம்பித்தார்.

‘இந்த அத்தை செத்த நேரம் வாயை வச்சிட்டு சும்மா இருக்குதா, இந்த மனுஷன் என்ன பண்ண போறாரோ?’ கவலையாக ஆலமரத்தான் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் அமுதா.

அவருக்கு நன்கு தெரியும், ஆலமரத்தான் இப்படி அமைதியாய் இருக்கிறவர் அல்ல. என்ன செய்யப் போகிறாரோ? பயத்துடன் அமர்ந்திருந்தார்.

வாசலை தாண்டி வெளியே வந்தாலே வீட்டு வேலைக்கு வந்தவர்கள் அவரை  கேலியாகப் பார்த்ததுப் போல் இருக்க உடனே வீட்டுக்குள் அடைந்துக் கொண்டார்.

***********************

பாண்டியன் கிளம்பவும் சிலுக்குவும் கோவிலுக்கு கிளம்ப “அத்தை நீங்களும் எங்க கூடவே இருங்களேன்” என,

“இல்லை தமிழ் எ… எனக்கு அங்க கோவில்ல இருந்தாதேன் என் ராஜா கூட இருந்தது  போல இருக்கு” என்றவள் அப்படியே கிளம்பி சென்றுவிட்டாள்.

அப்படியே லிங்கமும் விடை பெற்று செல்ல, வீட்டில் அழகு தமிழ் மட்டுமே இருந்தனர்.

அழகு எப்பவும் போல் வீட்டில் இருந்ததை கொண்டு சாதம் செய்ய, அமைதியாக பார்த்திருந்தாள் தமிழ்.

அப்பொழுது தான் தமிழ் இன்னும் அவனிடம் பேசாதது நினைவில் வர,

“அம்மணி” என அழைக்க,

முகத்தை திருப்பிக் கொண்டாள் அவள்.

சாதத்தை தட்டில் இட்டு வந்தவன், பிசைந்து கையில் “அம்மணி இந்தாருங்க” என அவளின் வாய் அருகே கொண்டுப் போக,

“நான் பஞ்சாயத்துல பேசுனது கோவமா?”

“….”

“எனக்கு அந்த நேரம் என் அன்புவை தனியா விட மனசில்லை, இங்கன யாரும் வேண்டாம்னுத்தேன் அவ தனியா வீட்டைவிட்டு போனது, அதேன் எப்பவும் நான் உன்கூடவே இருக்கேன்னு அவகிட்ட சொல்லணும்னு தோணிச்சு, அதே போல உன்னை பத்தியும் எனக்கு நல்லாவே தெரியும். நானே வேண்டாம்னு சொன்னாக் கூட என்னைவிட்டுப் போமாட்ட, அதேன் அப்படி சொன்னேன்”

அவனைப் ஒரு நொடிப் பார்த்தவள், டக்கென்று அவன் கன்னத்தில் அறைந்து, “ஐ லவ் யூ” எனக் கூறி, அவனின் சட்டையைப் பிடித்திழுத்து அவன் மார்போடு சாய்ந்துக் கொண்டாள்.

நடு இரவுவரை ஊஞ்சலில் அமர்ந்திருந்த ஆலமரத்தான், மெதுவாக கதவை திறந்து வெளியே வந்தவர், அழகு வீட்டு தெருவை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

‘எத்தனை தைரியம் இருந்தா, அழகு இந்த வேலைப் பார்த்திருப்பான்’ இருவரையும் சும்மா விடும் எண்ணம் கொஞ்சமும் அவருக்கு இல்லை மனம் கொதித்துக் கொண்டிருந்தது.

அவன் வீட்டை அடைந்தவர், அங்கும் இங்கும் பார்வையை சுழட்டியவர், தான் கொண்டு வந்த தீக்குச்சியைப் பற்ற வைத்து அவன் வீட்டு ஓலைகூரை மேல் வீச, கொஞ்சம் கொஞ்சமாய் பற்றி எரிய ஆரம்பித்தது.

திருப்தியாக அதை பார்த்தவர் மீசையை முறுக்கி விட்டபடி, வேஷ்டியை தூக்கிக் கட்டிக் கொண்டு கம்பீரமாக நடந்தார்.

என் தாயை மாற்றானுக்கு கூட்டிக் கொடுக்கமாட்டேன் என்ற கர்வம் அவர் நடையில் இருந்தது.