Mtn4

Mtn4

தாரிகவை சந்தியாவும் சர்மிளாவும் அழைத்து வர குனிந்த தலை நிமிராமல் நடந்து வந்தாள்.மனதுக்குள் இனம் புரியாத உணர்வு.அந்த சாக்லேட் பாய் தான் மாப்பிள்ளை என்று தெரிந்தவுடன் ஜிவ்வென்ற உணர்வு.

 

அவளிடம் அனுமதி கேட்காமலேயே வந்து குடியேறிய நாணம்.சந்தோஷம்,நாணம்,படபடப்பு என கலவையான உணர்வுகளின் பிடியினால் ஆட்கொள்ளப்பட்டுருந்தாள்.

 

பெண் பார்க்க முத்துசாமி சரசம்மாளின் மொத்தக் குடும்பமும் வந்திருந்தது.ஹாலின் நடுவில் இருந்த சோபாவில் கவிப்ரியன் அமர்ந்திருக்க ப்ரியனுக்கு இடப் புறம் சந்தியாவின் கணவன் கௌதமும் வலப்புறம் சர்மிளாவின் கணவன் நரசிம்மனும் அமர்ந்திருந்தனர்.

 

அதற்குப் பக்கத்தில் இருந்த நாற்காலிகளில் பெரியவர்கள் அமர்ந்திருந்தார்கள்.

 

விசாலாட்சி கொடுத்த காப்பித் தட்டை வாங்கியவள் எல்லோருக்கும் கொடுத்தாள்.ஆனால் ஒருவரைக் கூட நிமிர்ந்து பார்க்கவில்லை.வெட்கம் அவளை நிமிர்ந்து பார்க்கவிடாமல் தடுத்தது.

 

தாரிகா குனிந்து இருந்ததால் அவன் முகம் தெரியவில்லை.அவன் அணிந்திருந்த கருப்பு நிறப் பேன்ட் தான் தெரிந்தது.அவனிடம் காப்பியை குனிந்த தலை நிமிராமல் நீட்ட இரு நொடிகள் கழித்து அவன் கை நீண்டு வந்து காப்பியை எடுத்தது.இள நீல நிற முழுக்கை சட்டை அணிந்திருந்தவன் முழங்கை வரை அதை மடக்கிவிட்டிருந்தான்.

 

அனைவருக்கும் காப்பி கொடுத்தவுடன் தாரிகவை விசாலாட்சி உள்ளே அழைத்துச் சென்றார்.சந்தியாவும் சர்மிளாவும் ஹாலிலேயே உட்கார்ந்து கொண்டனர்.

 

உள்ள வந்தவுடன் தான் மனதிற்குள் ‘ச்சே..நிமிர்ந்து முகத்தை பார்த்திருக்கலாம்.அந்த கன்னக்குழி எவ்வளவு அழகா இருக்கும்.மிஸ் பண்ணிட்டோம்’ என்று நினைத்தாள்.

 

தன் எண்ணப் போக்கில் இருந்தவள் விசாலாட்சி சொல்லிக் கொண்டிருந்ததை கவனிக்கவில்லை.அவர் பேசுவதற்கு எல்லாம் மகளிடம் எந்தவொரு பிரதிபலிப்பும் இல்லாமல் போகவே அவளை உலுக்கியவர் “மாப்பிள்ளை பிடிச்சுருக்கா?” என்று கேட்க வெட்கத்துடன் தலையை ஆட்டிய மகளைப் பார்க்க அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.

 

‘என்னடா இது நான் மேல படிக்கணும்.இப்ப எதுக்கு எனக்கு கல்யாணம்.இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.அப்பாவ உள்ளே கூப்பிடுன்னு அடம் பிடிப்பான்னு பார்த்தா மாப்பிளையை பார்த்த உடனே ஓகே சொல்லிட்டா.நல்ல வேலை நமக்கு இவளை சம்மதிக்க வைக்குற வேலை மிச்சம்’ என்று மனதிற்குள் நினைத்த விசாலாட்சி ‘இனி தாரு வாழ்கை ரொம்ப நல்லா இருக்கும்’ என்ற சந்தோசத்துடன் வெளியே சென்றார்.

 

அவர் வெளியே சென்றவுடன் ராஜூ தாத்தா “தாருவ கூப்பிடு மாப்பிள்ளை கூட போய் பேசிட்டு வரட்டும்” என்று சொல்ல கார்த்திக் தான் போய் அவளை அழைத்து வருவதாகக் கூறி உள்ளே சென்றான்.

 

அவன் உள்ளே நுழைந்ததைக் கூட உணராமல் தாரு தன் எண்ணங்களின் பிடியில் இருந்தாள்.”ஹலோ மேடம்” என்றவன் அழைக்க திரும்பிப் பார்த்தவளிடம் “மாப்பிள்ளை பிடிச்சிருக்கா?” என்று கேட்க வெட்கப்புன்னகையுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

 

சிரித்துக்கொண்டே அவள் தலையை தடவிக் கொடுத்தவன் “மாப்பிள்ளை கூட தனியா பேசக் கூப்படறாங்க…வா” என்று சொல்ல “எனக்கு பயமா இருக்கு வேண்டாம்” என்றவள் சொல்ல “லூசு இதுக்கு போய் யாராச்சும் பயப்படுவாங்களா?போய் பேசு” என்றவன் அவள் கையை பிடிக்க இரண்டடி பின்னே சென்றவள் “ப்ளீஸ்..எனக்கு உண்மையாவே ரொம்ப பயமா இருக்கு தனியா பேச.எனக்கு தான் மாப்பிளையை பிடிச்சிருகுல்ல…நீயே போய் அதை அவங்ககிட்ட சொல்லிரு” என்று சொல்ல சிரித்தவன் விடாப்பிடியாக அவள் கையைப் பிடித்து வெளியே அழைத்துச் சென்றான்.

 

அப்பொழுதும் முகத்தை நிமிர்த்தாமல் நடந்து வந்தவளைப் பார்த்துச் சிரித்த கார்த்திக் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் “இப்படி எல்லாம் நீ குனிஞ்ச தலை நிமிராம வர்றத பார்த்து அவங்க உன்னை ரொம்ப அடக்கமான பொண்ணுன்னு நினைச்சுக்க போறாங்க” என்று சொல்ல அவனை முறைக்க தலையை நிமிர்த்த அதற்குள் ஹால் வந்திருந்தது.

 

“போ தாரு மாப்பிளைக்கு தோப்பை சுத்திக்காட்டு” என்று ராஜு தாத்தா சொல்ல கவிப்ரியன் எழுந்துவிட்டான்.அவன் முன்பு செல்ல தாரு அவனைப் பின்தொடர்ந்தாள்.

 

வீட்டில் இருந்து சற்றுத் தள்ளி தோப்பிற்குள் வந்தவுடன் ப்ரியன் நிற்க அவனைப் பின்தொடர்ந்து வந்தவளும் நின்றாள்.சிறிது நேரம் அவன் ஒன்றும் பேசாமல் நிற்க தாருவிற்குத் தான் அது இன்ப அவஸ்தையாக இருந்தது.

 

அவன் கண்ணை நேருக்கு நேர் பார்க்க முடியாததால் தலை குனிந்து நின்று இருந்தாள்.”ம்ம்கும்…” என்றவன் தொண்டையை செரும தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

 

“ரொம்ப அமைதியா இருக்க…பேச மாட்டியா?” என்றவன் கேட்க அவளுக்குத் தொண்டையில் இருந்து வார்த்தைகள் வரவில்லை.தலை குனிந்தபடியே அமைதியாக இருக்க “என்ன பிடிச்சிருக்கா?” என்றவன் கேட்க அதற்கும் குனிந்தபடியே ஆம் என்பது போல் தலையாட்டினாள்.

 

அவன் உதடுகளில் சிறிய புன்னகை உதிக்க “அப்புறம் ஏன் என்ன பார்க்க மாட்டேங்கிற?” என்று கேட்க நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் தலை குனிந்து கொண்டாள்.”நான் உன்ன பர்ஸ்ட் டைம் பார்த்தப்ப ரொம்ப தைரியமான பொண்ணுன்னு நினைச்சேன்.பட் நீ என்னோட பேஸ் கூட பார்க்க மாட்டேங்கிற?” என்று கேள்வியாய் நிறுத்த உடனே அவனை நிமிர்ந்து பார்த்தவள்

 

“என்ன இதுக்கு முன்னாடி நீங்க பார்த்திருக்கீங்களா?” என்று கேட்க பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு நின்றுகொண்டிருந்தவன் ஆம் என்பதாகத் தலையசைத்தான்.”எங்க?” என்றவள் கண்களை விரித்து கேட்க சிரித்தவன் “கோவில்ல நீ ஒரு தாத்தாகாக கடைக்காரன்கிட்ட பொங்கினியே அப்போ…அப்புறம் சுப்ரியா கூட கொஞ்சி கொஞ்சி விளையாண்டிட்டு இருந்தியே அப்போ” என்றவன் கண்களைச் சிமிட்டிச் சொல்ல வெட்கத்துடன் தலைகுனிந்து கொண்டாள்.

 

ஒரு முதியவர் 300 ரூபாய் மதிப்புடைய மாலையை கொஞ்சம் குறைத்துக் கேட்க கடைக்காரன் அவரைக் கொஞ்சம் தரக் குறைவாகப் பேசிவிட்டான்.அதனால் நம் தாருவிற்கு கோபம் வந்துவிட கடைக்காரனிடம் சண்டைப்போட்டுவிட்டாள்.

 

“என்ன பத்தி என்ன எல்லாம் தெரியும்?” என்று கேட்க அவளுக்கு உள்ளுக்குள் பக் என்றிருந்தது.அவள் பதில் பேசாமல் இருக்க “அப்போ எதுவும் தெரியாதா?” என்றவன் கேட்டதற்கு தலையசைத்தாள்.

 

“அட்லீஸ்ட் என் பேரு?” என்று கேட்க இல்லை என்பதைப் போல் தலையசைத்தாள்.”ரொம்ப நல்லது” என்றவன் சலித்துக்கொள்ள “எனக்கு நீங்க வர்றதப் பத்தி யாருமே சொல்லல..காலைல நீங்க எல்லாரும் வந்ததுக்கு அப்புறம் தான் சொன்னங்க” என்று தயங்கித் தயங்கி சொல்ல

 

“சரி என்ன பத்தி எல்லாம் வீட்ல இருக்கவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டு என்கிட்ட சொல்லு…இப்போ நம்ம போலாம்.வந்து பத்து நிமிஷம் ஆச்சு” என்றவன் நடக்கத் தொடங்க

“எப்படி உங்ககிட்ட பேசுறது?” என்றவள் கேட்டுவிட்டு நாக்கைக் கடிக்க சிரித்தவன் “என் நம்பர் சொல்லற நோட் பண்ணிக்கோ” என்றான்.”நான் போன் கொண்டு வரல.என் நம்பர் சொல்லற நீங்க ஒரு மிஸ்ட் கால் கொடுங்க” என்றவள் தன் எண்ணை அவனிடம் சொன்னாள்.

இருவரும் உள்ளே செல்லும்பொழுது உறுதி வார்த்தை எப்பொழுது வைக்கலாம் என்பது பற்றி பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.ப்ரியன் பெரியவர்களுடன் அமர்ந்து கொள்ள தாரிகவை சந்தியாவும் சர்மிளாவும் உள்ளே அழைத்துச் சென்றனர்.

 

சந்தியா சர்மிளா உடன் சென்ற தாருவை பின் தொடர்ந்து வந்த சரசம்மாள் “ரொம்ப அழகா இருக்கடா.சுப்ரியா கூட நீ விளையாண்டுட்டு இருந்தது பார்த்தப்பவே  எனக்கு உன்னை ரொம்ப புடிச்சு போச்சுஎன்று சொல்ல  சந்தியா “ஆமா தாரு அம்மாதான் உன்னை ப்ரியனனுக்கு கேட்கலாம்னு அப்பா கிட்ட சொன்னாங்கஎன்று சொல்ல தாருவிற்கு தன் மாமியாரை மிகவும் பிடித்து விட்டது.  

உறுதி வார்த்தை ஒரு மாதம் கழித்து வைத்து கொள்ளலாம் என்றும் மீண்டும் ஒரு மாத இடைவேளியில் நிச்சயதார்த்தம் வைத்துவிட்டு இரண்டு மாதங்கள் கழித்து திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவானது.

 

பேச்சு வார்த்தை முடிந்தவுடன் மாப்பிள்ளை வீட்டார் கிளம்ப தாருவையும் வெளியே அழைத்தனர்.அனைவரும் அவளிடம் சொல்லிவிட்டுக் கிளம்ப ப்ரியன் ஒரு சின்னத் தலையசைப்புடன் அவளிடம் விடைபெற்றான்.ஒரு புன்னகையுடன் அவனுக்கு விடைக் கொடுத்தவள் பின்பு தன்னறைக்கு வந்தாள்.

போனை எடுத்து அதில் வந்திருந்த நம்பரை சேவ் செய்தவளுக்கு அப்பொழுது தான் தன் தந்தை தன்னிடம் கூறாமல் இந்த ஏற்பாட்டை செய்துள்ளார் என்ற ஞாபகம் வர

 

‘ஏன் டி அந்த சாக்லேட் பாய்ய பார்த்தவுடனே எல்லாமே மறந்துட்டியா?’ என்று மனசாட்சி கேள்வி கேட்க அதை ஒதுக்கித் தள்ளியவள் தன் தந்தையின் வரவிற்காக ரூமில் கோபத்துடன் காத்திருந்தாள்.  

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

‘யார்கிட்ட நம்ம சாக்லேட் பாய் பத்தி கேட்கிறது?இந்த அம்மா அப்பாக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை.மாப்பிள்ளை பத்தி ஏதாச்சும் ஒரு டிடைல்ஸ் சொன்னாங்களா?சாக்லேட் பாய் பத்தி டிடைல்ஸ் ஏதாச்சும் தெரிஞ்சா கூட இதை ரீசன்னா வைச்சுட்டு போன் பண்ணி பேசலாம்’ என்று மனதிற்குள் புலம்ப கார்த்திக் வந்து அவளை சாப்பிட அழைத்தான்.

 

‘பேசாம இவன்கிட்டே கேட்டறலாம்’ என்று நினைத்தவள் “கார்த்தி” என்று அழைக்க “என்ன டி இவ்வளவு பவ்யமா கூப்டற?என்ன விஷயம்?” என்று கேட்க “அது வந்து ப்ரியன்ன பத்தி டிடைல்ஸ் எல்லாம் சொல்லறியா?” என்று கேட்க

 

“என்னது ப்ரியன்னா? அப்படி எல்லாம் பேர் சொல்லிக் கூப்பிடக்கூடாது.மரியாதையா கூப்பிடு” என்று சற்று கண்டிப்பான குரலில் கூற தாருவின் முகம் அப்படியே விழுந்துவிட்டது.

 

“என்கிட்ட இப்படி பேசுனது பரவாயில்லை.பட் எல்லாத்துகிட்டயும் மாப்பிளையை பத்தி பேசுறப்போ மரியாதையா தான் பேசணும் ஓகே வா?” என்று சொல்ல அவள் சம்மதமாகத் தலையசைத்தாள்.

 

“சாப்பிட வராம ரெண்டு பேரும் உள்ளே என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்ற விசாலாட்சியின் குரலில் இருவரும் டைனிங் ரூமிற்குள் நுழைந்தனர்.சாப்பிடும் பொழுது அனைவரும் கல்யாண வேலைகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்க அப்பொழுதாவது அவனைப் பற்றி பேசுவார்கள் என்ற எதிர்பார்போடு காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

 

சாப்பிட்டு முடித்தவுடன் பத்மநாபன் கார்த்திக்கிடம் தொழிலைப்பற்றி ஏதோ கேட்க அழைக்க அவன் அவர் அறைக்குச் சென்றுவிட்டான்.அப்பொழுதே மணி ஒன்பது ஆகிவிட அதற்கு மேல் கார்த்திக்கிடம் பேசமுடியாது என்பதை உணர்ந்தவள் தன் அறைக்கு வந்து போனை எடுத்தாள்.

 

வாட்ஸ் ஆப்பைத் திறந்து அதில் அவன் டிபி பார்க்க பனிகளுக்கு இடையில் அவன்  நின்று கொண்டிருந்த போட்டோவை வைத்திருந்தான்.’ஓ இவங்க பாரின் எல்லாம் போயிருக்காங்களா.எந்த கன்ட்ரீயா இருக்கும்?’ என்று நினைத்தவள் அவனுடைய லாஸ்ட் சீன் பார்க்க அது ஆன்லைன் என்று காட்டியது.

 

‘பேசுவோமோ வேண்டாமா?’ என்றவள் மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கும் பொழுதே அவன் ஆப்லைன் சென்றிருந்தான்.”ச்ச” என்றவள் போனை கட்டிலின் மேல் போட்டுவிட்டு படுத்துவிட்டாள்.

 

ஒரு ஐந்து நிமிடம் கழித்து மெசேஜ் வந்ததற்கான சத்தம் வரவே எடுத்துப் பார்த்தவளின் உதடுகளில் மென்னகை பூத்தது.ப்ரியன் தான் “ஹாய்” என்று மெசேஜ் அனுப்பி இருந்தான்.

 

வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்ற உணர்வுடன் அவனுக்கு “ஹாய்” என்று பதில் அனுப்ப “என்னை பத்தி தெரிஞ்சிச்சா?” என்றவன் கேட்க ஒரு சோகமான ஸ்மைலியுடன் இல்லை என்று பதில் அனுப்பினாள்.

 

ஒரு சிரிக்கும் ஸ்மைலியை அவளுக்கு அனுப்பியவன் பின்பு “அட்லீஸ்ட் என் பேரு?” என்று கேட்க அதற்கும் இல்லை என்று பதில் அனுப்பினாள்.”நான் எதுவும் சொல்லமாட்டேன் நீ தான் கண்டுபிடிக்கணும்” என்றவன் சொல்ல “என்கிட்ட யாருமே உங்களைப் பத்தி பேசறது இல்லை.நானே எப்படி போய் கேட்கிறது.உங்களுக்கு என்னப் பத்தி என்ன தெரியும்?சொல்லுங்க பார்க்கலாம்…”என்றவள் கேட்க சிறிது நேரம் அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

 

“ஒருவேளை கோவிச்சுக்கிட்டாங்களோ  அதனால தான் மெசேஜ்க்கு ரிப்ளே அனுப்புலையோ?பேசாம சாரி கேட்டிடலாமா?”என்றவள் நினைத்துக்கொண்டு இருக்கும்பொழுதே    அவனிடமிருந்து கால் வந்தது.

 

 

error: Content is protected !!