mu-17
mu-17
அணைத்துக் கொண்டான்
பௌர்ணமி நாளில் நிலவு பூமியில் உதிக்கும் தருணத்தில் ஏற்படும் ஈர்ப்புவிசை காரணமாகக் கடல் அலைகள் ஓயாமல் ஆர்ப்பரிக்குமாம்.
அப்படித்தான் இருள் சூழ்ந்து கொண்ட அந்த இரவில் ஆனைமலைப் பிரதேசத்தில் நடுநடுங்க வைக்கும் குளிரையும் தாண்டி அபிமன்யுவின் சந்திப்பினால் ஓயாமல் அவளின் மனம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.
ஆனைமலையின் மலைச்சரிவில் நின்றுகொண்டிருக்கும் அந்த வீட்டின் பின்புற பால்கனிக் கதவைத் திறந்து குளிரினைக் கட்டுப்படுத்த மேற்போர்வையைப் போர்த்தி கைகளை இறுகிக் கட்டிக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தபடி அவள் நின்றுகொண்டிருந்தாள்.
அந்த சில்லென்ற உணர்வை அவள் தேகம் உணர்ந்தாலும் அபியின் நினைப்பு அந்த உணர்ச்சிகளை மறக்கடித்தது. படுத்தவுடன் உறங்கிப் போகும் அவள் விழிகள் இன்று ஏனோ அவளை தவிக்க விட்டு வேடிக்கைப் பார்க்கிறது.
அவன் யார் தனக்கு?அவனைப் பற்றி தனக்கு என்ன தெரியும்? ஏன் அவனைத் தவறாக சொன்னால் தனக்கு இத்தனை கோபம் வருகிறது? முதல் சந்திப்பிலேயே அவனுக்கும் தனக்கும் ஏதோ ஒரு உறவு இருப்பதாகத் தோன்றுவது ஏன்?
இவ்வாறு சமுத்திரத்தில் அலைகள் எழும்புவதைப் போல அவள் மனம் கேள்விகளாக எழுப்பி அவளைத் துளைத்து எடுத்துக் கொண்டிருந்தது. போதாக் குறைக்கு அவனை ஏமாற்றுவதால் அவளுக்கு ஒரு குற்றவுணர்வு ஏற்பட, சட்டென்று அவள் அந்த நினைப்பை எல்லாம் தடை செய்துவிட்டு அந்த அறையின் கண்ணாடியின் முன்பு வந்து நின்றாள்.
நைட் டிரஸ் அணிந்து கொண்டு மொத்தமாய் சுருட்டிக் கொண்டயிடப்பட்ட கூந்தல் இவற்றை எல்லாம் தாண்டி, அவள் கூர்மையாய்… அவளின் முகத்தை மட்டுமே உற்றுப் பார்த்தாள். குற்றம் குறையில்லாத அவளின் அழகைத் தாண்டி அவள் எப்போதும் கவனிப்பது எதற்கும் அச்சம் கொள்ளாத அவள் விழிகளையும் அவள் முகத்தில் பிரதிபலிக்கும் தன்னம்பிக்கையையும் தான். ஆனால் இன்று அவள் அகத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் அவள் விழிகள் சோர்வடைந்திருக்க… அவள் முகமோ தெளிவற்ற நிலையில் இருந்தது.
எப்போதுமே அவள் துவண்டு போகும் போது அவளின் தாரக மந்திரத்தை உரைப்பது அவளுக்கு வழக்கம். இம்முறையும் அதேப் போல,
“நான் ஏன் தேவையில்லாததை எல்லாம் யோசிச்சிட்டிருக்கேன்….. கம் அவுட் ஆஃப் இட்… இப்போ வந்த வேலைதான் முக்கியம்… அதுல மட்டும்தான் கவனம் செலுத்தணும்… எந்த காரணத்துக்காகவும்… என்ன தடங்கல் வந்தாலும் செய்ய நினைச்ச வேலையில் இருந்து… பின் வாங்கவே கூடாது… கமான் சூர்யா… உன் தைரியத்தை மட்டும் எப்பவுமே விட்டுடாத… நெவர்… அட் எனி காஸ்” என்று சொல்லி அவளை அவளே தெளிவுப்படுத்திக் கொண்டாள். அவள் உரைத்த கடைசி வாக்கியம்தான் அவளின் தாரக மந்திரம். இனி வரும் காலங்களில் அவளுக்கு இந்த தாரக மந்திரம் கொஞ்சம் அதிகமாகவேத் தேவைப்படலாம்.
இங்கே தன்னைத்தானே அவள் சூர்யா என்று அழைத்துக் கொண்டதன் மூலம் அவளின் உண்மையான பெயர் சூர்யா என்பது தெளிவாகிறது.
சூர்யாவே இனி நம் பாதையை தீர்மானித்து இந்தப் பயணத்தை வழிநடத்தப் போகிறாள். அது எத்தகைய கரடுமுரடான பாதையாக இருந்தாலும் நாமும் அவ்வழியிலேயே சென்றாக வேண்டும்!
சூர்யா இப்போது தன்னம்பிக்கை மிளிரும் அவளின் பிம்பத்தை ரசித்த பின் படுக்கையில் சென்று படுத்துக் கண்ணயர்ந்தாள்.
விடிந்துவிட்டது என்று அறிவிக்கப் பலவிதமான பறவைகள் ஒளியெழுப்பி அந்த இடத்தையே பரவசப்படுத்திக் கொண்டிருந்தன. அந்த மலைமகளை சூழ்ந்து கொண்ட பனிப்புகையை விலக்கியபடி ஆதவன் வானில் வண்ணமயமாக பிரகாசித்தான்.
விடியல் வந்த போதும் அந்த குளிர் உறக்கத்திலேயே ஆழ்ந்திருக்கச் சொல்ல, அபிமன்யு மட்டும் சூர்யோதயத்திற்கு முன்பாகவே எழுந்து தன் உடற்பயிற்சியை மேற்கொண்டான். நினைவெல்லாம் ஒரு புறம் அவளே நிரம்பி இருக்க, அவனின் உடல் தங்குதடையேதுமின்றி எப்போதும் போல அவன் செய்யும் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
அந்த வைத்திய சாலையில் உள்ள எல்லோருமே அந்த விடியற் பொழுதிலேயே தங்கள் தங்கள் வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட திருமூர்த்தி மூலிகை தோட்டத்தில் உள்ள சில மூலிகைகளைக் கண்ணை மூடி தியானித்து ஏதோ மந்திரம் உரைத்துவிட்டு அதனைப் பறிக்கலானர்.
அபிமன்யு எப்போதும் போல் குளத்தில் நீராடிவிட்டு கோவிலில் நின்று வணங்கி கண்மூடி தியானிக்கும் போது அவனை அறியாமல் இறைவனின் நினைப்பு அகன்று நேற்று அவளின் குரல் ஒலித்ததை எண்ணிப் புன்னகை புரிந்தபடி விழியைத் திறக்க, எதிரே அவளே நின்று கொண்டிருந்தாள்.
அவள் ஒரு வெண்மை நிற சுடிதார் அணிந்தபடி ஒற்றைப் பக்கமாய் சரிந்திருந்த சிவப்பு வண்ண துப்பட்டாவும் பின்புறம் அலையலையாய் பறந்து கொண்டிருக்கும் மென்மையான கூந்தலும் அந்த அழகிய பனி மூட்டமான விடியலில் அவன் கண்களுக்கு அவள் தேவதையாகவேத் தென்பட்டாள்.
அவளின் வளைந்த புருவங்களுக்கு இடையிலான சிறு கறுப்பு நிறப் பொட்டைத் தவிர்த்து,பெயரளவில் கூட அலங்கரிப்பே இல்லாத அந்த வதனம் அவனைப் பேச்சற்று போகச் செய்ய,அது அவளின் உண்மையான ரூபமா இல்லை அவளின் நினைவால் தனக்குள் ஏற்பட்ட கற்பனையின் பிம்பமா என்ற சந்தேகம் உண்டானது அவனுக்கு.
அபிமன்யுவின் சந்தேகத்தைத் தெளிய வைக்கும் விதமாய் சூர்யா புன்னகையோடு, “என்ன மிஸ்டர. அபி… ஷாக்காயிட்டீங்க… இவ்வளவு காலையில என்னை நீங்க எதிர்பார்க்கலையோ?!”என்று கேட்க
அபிமன்யுவிற்கு இப்போது எதிரே நிற்கும் தோற்றம் பிம்பம் அல்ல என்று புரிந்தது.
அவன் அவளின் வசீகரமான புன்னகையால் கவர்ந்திழுக்கப்பட்டதால் பேச வார்த்தையின்றி தலையை மட்டும் அசைத்துவிட்டு கோவிலுக்குள் வைக்கப்பட்டிருந்த குங்குமத்தை புருவத்திற்கு இடையில் தீட்டினான்.
அவள் சிரித்துக் கொண்டே, “நீங்க பாட்டுக்கு இலையைப் பறிக்கிறேன் மூலிகையைப் பறிக்கிறேன்னு காலையிலேயே கிளம்பிப் போயிட்டா… தட்ஸ் ஒய்… நான் காலையிலேயே வந்துட்டேன்… ஐ டோன்ட் வான்ட் டு மிஸ் திஸ் சான்ஸ்… இன்னைக்கு நீங்க எனக்கு இன்டர்வியூ கொடுத்தே ஆகணும்” என்றாள்.
“நான் சொன்னா சொன்னதுதான்… கண்டிப்பா தர்றேன்” என்று அவனும் தலையசைத்து ஆமோதித்தான்.
இப்போது அபிமன்யுவும் சூர்யாவும் கோவிலிலிருந்து மெல்ல நடந்து வந்தபடி இருக்க அபி அப்போது சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவளிடம், “நேத்து உங்க கூட வந்தவர்… எங்க காணோம்?!” என்று கேட்டான்.
“ஷரத்துக்கு இந்த க்ளைமெட்டுக்கு நல்லா தூக்கம் வருதாம்… எழுப்பி எழுப்பிப் பார்த்தா எழுந்திருக்கிற மாதிரியே தெரியல… அதான் விட்டுட்டு வந்துட்டேன்… அப்படியே அவன் வந்தாலும் பெரிசா யூஸ் இல்ல… ஆனா இந்த பிளஸன்ட் மார்னிங்… இந்த இடம்… இந்த அழகான சூழ்நிலை… இதை எல்லாம் மிஸ் பண்ணிட்டு யாராவது தூங்கிப் பொழுதை வீணாக்குவாங்களா…
அதுவும் மும்பை மாதிரியான சிட்டில இருந்துட்டு இங்க வந்தா… போகவே மனசு வராது… இங்க இருக்கற ஒவ்வொரு செகண்டும் வெரி ப்யூட்டிபுஃல் மொமன்ட்ஸ்… ஐம் ரியலி என்ஜாயிங் இட்… இந்த அழகான இடத்தில இருக்கற நீங்க எல்லாம் ரியலி லக்கி” என்று அந்த இயற்கையான சூழ்நிலையை வர்ணித்து ரசித்தபடி அவள் நடந்து வந்து கொண்டிருக்க,
அபி உடனே “நீங்க மும்பையா…?!” என்று அவள் பேசியதைக் கவனித்து பளிச்சென்று கேட்டுவிட,
சூர்யாவிற்கு முகத்தில் லேசான தடுமாற்றம் ஏற்பட தான் எதையாவது உணர்ச்சிவசப்பட்டு உளறினோமா என்று ஒரு நொடி ஸ்தம்பித்து பின் சுதாரித்து கொண்டு, “யா… எங்க மேகஸினோட ஹெட் ஆஃபீஸ் மும்பைதான்” என்றாள்.
“வொர்க் பிளேஸ் மும்பையா… இல்ல சொந்த ஊரே மும்பைதானா?” என்று அவன் மீண்டும் கேள்வி எழுப்பினான்.
அத்தனை நேரம் இருந்த துறுதுறுப்பெல்லாம் அவளிடம் குன்றிவிட தான் இவனைப் பற்றி கேள்வி கேட்கலாம் என்று வந்தால் தன்னை இவன் கேள்வி கேட்கிறானே. எங்கேயாவது சிக்கிக் கொள்ளப் போகிறோம் என்ற எண்ணத்தோடு, “நான் பிறந்தது சென்னைதான்… பட் வளர்ந்தது வேலை பார்க்கிறதெல்லாம் மும்பை” என்று சுருக்கமாய் சொல்லி முடித்தாள்.
சூர்யாவின் சுருக்கமான பதிலும் அவளின் முகத்தில் ஏற்பட்ட மாற்றமும் நெருடலாய் தோன்ற மீண்டும் அபி அவளிடம், “உங்க பேஃமிலி எல்லாம் அப்போ மும்பையிலதான் இருக்காங்களா பூமிகா?” என்று கேட்டுவிட்டு அவளின் முகப்பாவனையை கூர்ந்துக் கவனிக்கலானான்.
சூர்யாவும் அவனின் சந்தேகமான பார்வையை அறிந்தபடி இதழ்களில் புன்னகை அரும்ப, “என்ன மிஸ்டர். அபி… நான்தானே உங்களை இன்டர்வியூ பண்ண வந்தேன்… இப்ப நீங்க என்னை கேள்வி மேல கேள்வி கேட்கறீங்க” என்று அவனை அதற்கு மேல் எதுவும் கேட்கவிடாமல் நிறுத்தினாள்.
அதோடு அவள் அவன் விழியை அவள் நேர் கொண்டு பார்க்க அவனால் அவள் குறித்த எந்தவொரு தீர்மானத்திற்கும் வர முடியவில்லை.
சூர்யா அவனின் எண்ணத்தை உணர்ந்த போதும் அதை முகத்தில் பிரதிபலிக்க விடாமல் அவனை நோக்கி, “மிஸ்டர். அபி… ஒரு சின்ன ரிக்வஸ்ட்…?!” என்று தயக்கத்தோடு கேட்க அவன் ரொம்பவும் இயல்பாக “ம்… சொல்லுங்க” என்றான்.
“உங்க புக்ஸ் கலெக்ஷன்ஸ் இருக்கற ரூமைப் பார்க்கலாமா?!” என்று அவள் ஆவலோடு வினவ,
அபிமன்யு அதிர்ச்சியாக அவளை நோக்கினான். அதற்குக் காரணம் இதுவரை அவன் புதிதாக யாரையும் அந்த அறைக்குள் அனுமதித்ததில்லை. எப்பொழுதாவது திருமூர்த்தியும் அர்ஜுனும் அந்த அறைக்குள் வருவதுண்டு. அந்த அறையைக் குறித்து திருமூர்த்தி அவளிடம் நேற்று உரைத்திருக்க வேண்டும்.
அவள் நுணுக்கமாய் ஒவ்வொரு விஷயத்தையும் கவனித்துக் கேட்பதன் மூலம் அவளின் அறிவுக்கூர்மையுயைத் தாண்டி ஏதோ ஒரு திட்டத்தோடு செயல்படுகிறாளோ என்று அவனுக்குத் தோன்றிற்று. இருந்தும் அவள் அப்படி கேட்டு மறுப்புத் தெரிவிக்க மனம் வராமல்,
“நான் இல்லாம அந்த ரூமுக்குள்ள யாரையும் அலோவ் பண்றதில்ல பூமிகா… ஒரு ட்வன்டி மினிட்ஸ்… சின்ன வொர்க்தான்… முடிச்சிட்டு வந்ததும் அழைச்சிட்டுப் போறேன்” என்றான்.
“யா பைஃன்… கேரி ஆன்… அதுவரைக்கும் நான் இந்த அழகான லொகேஷன்ல போட்டோஸ் எடுத்துட்டு இருக்கேன்… அதுவும் இல்லாம நேத்து மீட் பண்ண ஃபிரண்ட இன்றைக்கும் வர்றாரான்னு… பார்க்கப் போறேன்” என்று அவள் அந்த குரங்கை நினைவுப்படுத்த, அபி உடனே வாய்விட்டு கலகலவென சிரித்துவிட்டான்.
அபிமன்யு சென்ற நொடி சூர்யா அவன் ஏன் அந்த அறைக்குள் அழைத்துச் செல்ல இவ்வளவு யோசிக்கிறான் என்று எண்ணமிட்டாள். அவனிடம் தான் ரொம்பவும் சாமர்த்தியமாக எப்படி கேள்வி எழுப்புவது என்று தீவிரமாய் சிந்தித்தாள். எப்படி அவன் வாயிலிருந்து நாம் தெரிந்து கொள்ள நினைக்கும் விஷயத்தை வாங்குவது என மனதிற்குள்ளேயே வரையறை செய்து வகுத்துக் கொண்டிருந்தாள்.
அவ்வாறு அவள் யோசனையில் மூழ்கிய காரணத்தால் சுற்றி இருக்கும் அந்த அடர்ந்த மரங்களும் செடி கொடிகளும் அருகாமையில் இருந்த அந்த அழகிய குளமும் அவள் பார்வையில் படவேயில்லை. அவளோ தான் எண்ணியதை செயல்படுத்துவது எப்படி என்பது குறித்தே கவனமாயிருக்க, வீசிய காற்றில் அவளின் மேல் இருந்த துப்பட்டா வேகமாய் பறந்து சென்று அருகில் இருந்த குளத்தில் வீழ்ந்துவிட, “அச்சச்சோ!!” என்று சொல்லியபடி தலைமீது கை வைத்துக் கொண்டாள்.
இப்போது தான் அதை எடுக்கவில்லை என்றால் அது தன் கைக்கெட்டாமல் சென்று விடுமோ என எண்ணமிட்டுக் கொண்டு மெல்ல அந்த பரந்த குளத்தின் படிக்கட்டுகளில் மெல்ல மெல்லப் பொறுமையாக இறங்கினாள்.
அவளின் பாதங்கள் எல்லாம் அந்த நீரின் குளிர்ந்த தன்மையில் சிலிர்ப்பை உண்டாக்க வெகுஜாக்கிரதையாக தண்ணீரில் மிதந்த துப்பட்டாவை அமர்ந்த வாக்கில் எட்டிப் பிடித்தாள்.
சூர்யா எழுந்து நின்றபடி துப்பட்டாவினை பிழிந்து உதறியவள் அதைத் தோள் மீது போட்டுக் கொண்டு திரும்பி படிக்கட்டுகளில் ஏற, அப்போது அபிமன்யு அவளைத் தேடிக் கொண்டு வந்தான்.
“பூமிகா… என்னாச்சு?” என்று குளத்தின் படிக்கட்டுகளில் அவள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகக் கேட்டான்.
“நத்திங்… துப்பட்டா விழுந்திடுச்சு” என்று சொல்லி அந்த படிக்கட்டின் மீது தடுமாறிக் கொண்டு ஏற முற்பட்டவளை நெருங்கியபடி, “பார்த்து” என்று தன் கரத்தை உதவிக்கு நீட்டினான்.
“நோ தேங்ஸ்… நானே ஏறி வந்திடுவேன்” என்று சொல்லி அவன் கையை நிராகரிக்க,அபிக்கு அவளின் நிராகரிப்பால் கோபம் உண்டாக,
‘திமிர் பிடிச்சவ… விழுந்தால்தான் இவளுக்கு புத்தி வரும்…’ என்று அவன் விளையாட்டுத்தனமாய் எண்ணிக் கொண்ட அதே சமயத்தில் சூர்யாவின் கால்கள் வழுக்கியபடி பின்னோடு இழுத்தது.
மறுகணமே அவள், “அபி” என்று அபயதிற்காக அவனை அழைக்க, அவன் உடனே தன் இடது கரத்தால் பின்னோடு சென்று குளத்தில் விழாமல் அவள் தேகத்தைத் தாங்கிக் கொண்டான்.
சூர்யாவோ அந்த சூழ்நிலையில் அவன் பிடியிலிருந்து நழுவினால் தான் தண்ணீருக்குள் வீழ்ந்து விடுவோமோ என்ற நிலையில் இருந்தாள். அபிமன்யுவின் கரத்தின் பிடி ரொம்பவும் இறுக்கமாய் அவளின் இடையை அணைத்துக் கொண்டிருக்க, அவன் தன்னை மறந்தான்.
காலங்கள் தாண்டி அவளுடன் ஏற்பட்டிருக்கும் அந்த நெருக்கத்தையும் இறுக்கத்தையும் அவன் மனம் லேசில் விட விரும்பவில்லை. அந்தத் தருணத்தை அவன் ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தான்.
அதேநேரம் தான் எண்ணமிட்டது நடந்த களிப்பில் அலட்சியமான புன்னகையோடு, ‘சொல் பேச்சைக் கேட்டியா?!’ என்று தன் விழிகளால் வினவி புருவத்தை உயர்த்தினாள்.
அவன் எண்ணத்தைப் படித்தவள் கோபத்தின் மிகுதியால் தான் இருக்கும் நிலையையும் மறந்து, ” லீவ் மீ” என்றாள்.
அபிமன்யு அவளின் வசீகரமான முகத்தின் ஈர்ப்பிலிருந்து மீளமுடியாமல் அவள் விழிகளைப் பார்த்தபடி, “ஆர் யூ ஷ்யுர்” என்று கேட்க,
“ப்ளீஸ்… கையை எடுக்கறீங்களா?” என்று அவள் கடுப்போடு உரைக்க, “ஒகே” என்று தன் கரத்தை உடனடியாக அவன் விலக்கிக் கொண்டான்.
சூர்யாவின் தேகம் பின்னோடு சாய… அவள் விழுந்துவிடப் போகிறோமோ என்ற அச்சத்தில் முன்புறம் அவன் சட்டையைப் பிடித்து தன்னைக் காத்துக் கொண்டாள். ஆனால் அபி அவளோடு சாயாமல் உறுதியாய் நின்று கொள்ள ஏறி வர முடியாமல் அவள் பாதங்கள் படிக்கட்டு முனையில் நின்று கொண்டிருந்தன.
“என்னையும் தண்ணிக்குள்ள தள்ற ஐடியாவா உனக்கு… விழறதா இருந்தா நீ மட்டும் விழு?!”என்று அவன் ஏளனத்தோடு கூற.
“யூ ஆர் ஸோ க்ரூவல்!” என்று அவள் அவனை அனலாய் பார்க்க, “அப்படியா?!” என்று அவன் ஏளனப்புன்னகையொடு கேட்டான்.
அவளோ அவனைப் பிடித்துக் கொள்ளவும் முடியாமல் விழவும் விருப்பமில்லாமல் பிடி நழுவுவதால், “இப்போ ஹெல்ப் பண்ணுவீங்களா… மாட்டீங்களா?!” என்று கேட்டு முறைத்தாள்.
“உன் திமிரையும் கோபத்தையும் என்கிட்ட காட்ட மாட்டேன் சொல்லு… நான் ஹெல்ப் பண்றேன் ” என்று அவன் நிபந்தனையாகக் கேட்க,
சூர்யா அவன் பேச்சைக் கேட்டு எரிச்சலோடு, “நோ தேங்க்ஸ்… இதுக்கு நான் தண்ணிலேயே விழலாம்” என்று அவள் தன் கரத்தை விட,
அபி உடனே அவனின் கரங்களால் அவளைப் பின்னோடு தாங்கிப் பிடித்து இடையை வளைத்து இழுத்து அவனின் மார்போடு அணைத்தபடி குளத்தை விட்டு வெளியே தூக்கி நிறுத்தினான்.
அபிமன்யுவின் அந்தச் செயலை எதிர்பாராமல் சூர்யா கொஞ்சம் அரண்டு போனாள். நியாயமாக அவன் மீது கோபமும் எரிச்சலும் ஏற்பட வேண்டிய நேரத்தில் சலனம் உண்டாகி அவனிடம் தன் பெண்மையின் கட்டுப்பாடு தளர்ந்து போய் விடுமோ என்ற அச்சம் உண்டானது.
சட்டென்று இறுக அணைத்திருந்த அவன் கரத்தை நீக்கியபடி நகர்ந்து நின்றாள். அவன் முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்காமல் அவள் பெண்மை தவிப்புக்குள்ளாக நாணம் என்ற உணர்வுதான் அவனிடமிருந்து அவளை விலகிவர வைத்தது. ஆனால் மனரீதியாய் அவள் அந்த அணைப்பை விரும்பினாள்.
மறுபுறம் அவன் தனக்கு உதவி செய்ய அப்படி செய்தானா இல்லை சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொண்டானா என்று அவள் எண்ணமிட்டுக் கொண்டிருக்க அவன் கிட்டதட்ட இரண்டையுமே செய்தான் என்றே சொல்ல வேண்டும்.
அபிமன்யுவிற்கு அவள் அப்போதே தன் கரத்தைப் பற்றிக் கொண்டிருந்தால் பாதுகாப்பாய் ஏறி வந்திருக்கலாம். ஆனால் அவளின் தலைகனத்தால் தவிர்த்து விட்டதற்காகவும் நேற்று இயல்பாகவே நடந்த விஷயத்திற்காக அவமானப்படுத்தியக் காரணத்திற்காகவும் அந்தச் சந்தர்ப்பத்தில் அவளின் திமிரோடும் கர்வத்தோடும் கொஞ்சம் விளையாடிப் பார்த்துவிட்டான்.
ஆனால் தான் செய்தது கொஞ்சம் அதிகம்தான் என்ற எண்ணம் தோன்றினாலும் அவள் மீது தனக்கு அழுத்தமான உரிமை இருப்பதாக ஒரு எண்ணம் அடிமனதில் நிலைத்திருக்க அவன் நடந்து கொண்டது தவறென்று அவன் கருதவில்லை.
சூர்யாவின் மனம் அவன் நடந்து கொண்டதை எண்ணி படபடப்பு அடங்காமல் இருக்க அபிமன்யு இயல்பான புன்னகையோடு,
“புக்ஸ் இருக்கற ரூமைப் பார்க்கணும்னு சொன்னீங்களே… போலாமா… நான் இப்ப ஃப்ரீதான்… நீங்க என்ன கேட்கணும்னு நினைக்கிறீங்களோ கேட்கலாம்” என்று நடந்தவற்றைப் பெரிதாகக் காட்டிக் கொள்ளாமல் அவளை புத்தக அறைக்கு அழைத்துவிட்டு முன்னாடி நடந்தான்.
அவன் நடந்ததைப் பற்றி கொஞ்சமும் பொருட்படுத்தாமல் பேசிவிட்டுச் சென்றது அவளுக்குள் பெருத்த கோபத்தை ஏற்படுத்தியது. இதுவே வேறொரு ஆடவனாய் இருந்திருந்தால் அவன் கன்னம் சிவந்து அந்த இடத்தையே ரணகளப்படுத்தி இருப்பாள். ஆனால் இவனை மட்டும் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற இயலாமையோடு கோபமும் அவள் பார்வையில் கலந்திருந்தது.
ஆனால் இப்போதைக்கு அவளுக்கு தான் வந்த காரியம் நடக்க வேண்டும் எனும் போது கோபப்படுவது உசிதமில்லை என்று அமைதியாக அவன் சென்ற திசை நோக்கி நடந்தாள்.
புத்தக அறை… அந்த அறையை அபிமன்யு திறந்ததும் அங்கே இருந்த அலமாரிகள் முழுக்க புத்தகங்கள் நிறைந்திருந்தது.
அங்கே பல்வேறு வகையான வைத்தியம் சம்பந்தப்பட்ட புத்தகங்களும் பல்வேறு நோய்கள் குறித்த புத்தகங்களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் கலந்திருந்தன. அதுமட்டுமின்றி எல்லாமே தனித்தனியாய் அலமாரிகளில் நேர்த்தியாய் அடுக்கப்பட்டிருந்த விதமும் அந்த இடத்தை நூலகம் என்றே தோன்றச் செய்தது.
அந்தப் புத்தகங்களோடு அக்னி என்ற பெயரில் அபிமன்யு எழுதிய புத்தகங்களும் தனி அலமாரியில் அடுக்கப்பட்டிருந்தது. அவைகளோடு தனியாய் கண்ணாடிக் கதவுகளுக்குள் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பாக வைத்துப் பூட்டப்பட்டிருந்தது.
சூர்யாவிற்கு அந்த அறையை பார்த்த பின் அத்தனை நேரம் அபிமன்யுவின் மீதிருந்த கோபமெல்லாம் முற்றிலும் மாறி மரியாதையாக உருவெடுத்தது. திருமூர்த்தி அபியைப் பற்றி சொன்ன புகழுரைகள் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. அவனின் புத்திக்கூர்மையும் திறமையும் அந்த இடத்தைப் பார்க்கும் போது தெளிவாய் விளங்க அவள் வியப்பில் ஆழ்ந்தபடி,
‘அபிமன்யுவைப் பத்தி எங்கேயோ இருக்கற ஈஷ்வருக்கு எப்படித் தெரிஞ்சிருக்கும்… ஏன் ஈஷ்வர் அபியைப் பத்தி விசாரிக்கச் சொல்லணும்… டீ7 ஆராய்ச்சியைப் பத்தி அபிக்கு என்ன தெரிஞ்சிருக்க முடியும்’ என்று சூர்யா தனக்குள்ளேயே கேள்விகளைக் கேட்டு விடையை ஆராய்ந்த அதே சமயத்தில்
“பூமிகா… பூமிகா!!” என்று அபிமன்யு அவளைப் பலமுறை அழைக்க அவளோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த காரணத்தால் அவன் அழைப்பை கவனிக்கவில்லை.
அப்போது அபியின் உள்ளுணர்வு மீண்டும் அவள் மீது சந்தேகத்தை எழுப்பியது. அவள் அந்த ஈஷ்வருக்கு உளவாளியாக இருப்பாளோ என்ற எண்ணம் தோன்ற அந்த எண்ணமே ஒரு வித வலியை ஏற்படுத்தியது.
இருப்பினும்… அவன் மனம், ‘அவள் நிச்சயமாக தவறானவள் அல்ல… அப்படி இருக்க முடியாது’ என்று அவளுக்காக வேண்டி அவனிடம் வாதிட்டது.