அதிர்ச்கரமான தகவல்

சூர்யாவைக் கோவிலில் சந்தித்துவிட்டு வந்த அபிமன்யு அப்போது கொஞ்சம் முக்கியமான வேலையில் ஈடுபட்டிருந்தான் என்றே சொல்ல வேண்டும். அவன் அம்மா சுகந்தியின் கோபத்தை எப்படியாவது குறைக்க முயன்று கொண்டிருந்தான்.

அவன் வீட்டிற்கு வந்தே ஐந்து மாதங்கள் உருண்டோடிவிட்ட நிலையில் அவள் கோபம் கொள்ளாமல் என்ன செய்வார்? அவனின் யுக்திகள் ஒன்றும் பலிக்காமல் போகத் தன் அம்மாவிற்கு சமையலறையில் உதவுகிறேன் பேர் வழி என்று தன்னால் இயன்ற வரை தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க சுகந்தி கோபம் கொண்டவராய், “முதல்ல நீ கிச்சனைவிட்டு வெளிய போ அபி” என்றார்.

“ம்ம்ம்… நீங்க இப்படியே பண்ணிட்டிருந்தீங்க நான் திரும்பியும் வைத்திய சாலைக்குப் போயிடுவேன்… அப்புறம் நீங்கதான் வருத்தப்படுவீங்க… பார்த்துக்கோங்க” என்று கடைசி மிரட்டல் அஸ்திரத்தை அவன் கையாள சுகந்தியின் கோபம் கறைந்து கண்ணீர் பெருக நின்றவரை மீண்டும் அருகில் அணைத்தபடி, “சும்மா சொன்னேம்மா… அதுக்குள்ள அழுதுட்டீங்களா?” என்று சமாதானப்படுத்தினான்.

சுகந்தி அவன் வைத்திய சாலைக்குப் போகிறேன் என்று சொன்னதற்காக கண்ணீர் வடிக்கவில்லை. அபிமன்யு குறித்த வேறு சில விஷயங்களே அவளை வேதனைப்படுத்தி கண்ணீர் வரவழைத்துவிட்டது. அது என்ன விஷயம் என்று வேறு யாரிடமும் அவள் இதுவரை பகிர்ந்து கொண்டதில்லை.

ஒருவாறு சுகந்தி மகனின் அரவணைப்பாலும் ஆதரவாலும் சோகம் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்ப இருவரும் ஆர்வமாய் சமையலில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த சமயத்தில் அர்ஜுன் அவர்களைத் தேடிக் கொண்டு வந்தபடி, “சார் இங்கதான் இருக்கீங்களோ?” என்று அபிமன்யுவை நோக்கி எகத்தாளமாய்  கேட்டான்.

“பரவாயில்லையே… ஹாஸ்பிடல்ல இருந்து சீக்கிரம் வந்துட்ட… இரு காபி போடுறேன்” என்று சொன்னவரை நோக்கி அர்ஜுன், “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… உங்க செல்ல மகன் என்ன பண்ணான்னு கேளுங்க” என்றான் கோபத் தொனியில்.

சுகந்தி புரியாமல் தலைத்தூக்கி சமிக்ஞையால் என்னவென்று வினவ அபிமன்யு தோள்களைக் குலுக்கியபடி தெரியாது என்று தலையசைத்தான்.

அர்ஜுன் மீண்டும் அழுத்தமாக, “யாருடா அந்தப் பொண்ணு ?” என்று கேட்க அபிமன்யு தெரியாதவன் போல, “எந்தப் பொண்ணு?” என்று வினவினான்.

“எந்தப் பொண்ணா… என்கிட்ட யாருன்னே தெரியாதுன்னு சொல்லிட்டு பைக்ல கூட்டிட்டுப் போனியே… அந்தப் பொண்ணு” என்று அர்ஜுன் விளக்கமளிக்க, அபிமன்யு சலனமற்று நின்றான்.

ஆனால் சுகந்தி ஆர்வம் கொண்டவளாய், “ஏதோ பொண்ணுங்கறான்… பைக்ல வேற கூட்டிட்டுப் போனேன்னு சொல்றான்… யாரு அபி?” என்று அவர் கேட்க அர்ஜுனும் கூட சேர்ந்து கொண்டு, “நல்லா கேளும்மா…” என்றான்.

“இப்ப அந்தப் பொண்ணு யாருன்னு உனக்குக் கண்டிப்பா தெரிஞ்சே ஆகணுமா?” என்று கேட்டான்.

“கண்டிப்பா தெரியணும்” என்று அர்ஜுன் உரைக்க அபி தன் தமையனை நோக்கி, “அது வேற யாரும் இல்ல… டாக்டர். ரம்யாவோட சிஸ்டர்” என்றான்.

இதைக் கேட்ட மாத்திரத்தில் அர்ஜுன் யோசனையோடு நிற்க சுகந்தி இப்போது அபிமன்யுவின் கவனத்தைத் தன் புறம் திருப்பி, “யாருடா ரம்யா ?” என்று வினவினார்.

அபிமன்யு தன் அம்மாவின் தோள்களைப் பிடித்தபடி,”இந்தக் கேள்வியை என்கிட்ட கேட்கக் கூடாதும்மா… அப்படியே திரும்பி உன் பெரிய புள்ள கிட்ட கேளு…” என்று உரைக்க சுகந்தி இரண்டு மகன்களுக்கிடையில் மாட்டிக் கொண்டு விழித்தாள்.

அபிமன்யு விடாமல், “கேளும்மா?” என்று செல்லமாக அம்மாவை விரட்ட சுகந்தி அர்ஜுனிடம் “ரம்யா யாருடா… உனக்குத் தெரிஞ்ச பொண்ணா?” என்று வினவினார்.

அர்ஜுன் அபிமன்யுவை முறைத்தபடி, “ரம்யா என்கூட வேலை பார்க்கற டாக்டர்… அவ்வளவுதான்” என்றான்.

சுகந்திக்கு நடப்பது புரியாமல் குழம்பியபடி இருக்க அபிமன்யு, “வெறும் உன் கூட வேலை பார்க்கற டாக்டரா?” என்று அர்ஜுனை அழுத்தமாய் கேட்க,

அவன் புரியாமல், “வேற என்னடா நான் சொல்லணும்னு நீ எதிர்பார்க்கற?” என்று தம்பியைக் கேட்டான்.

“உண்மையை சொல்லு அர்ஜுன்… டாக்டர். ரம்யாவை நீ லவ் பண்றதானே?” என்று கேட்ட நொடி அர்ஜுனோடு சேர்ந்து சுகந்தியும் அதிர்ச்சியடைந்தார்.

“இது என்னடா புது கதை” என்று சுகந்தி கேட்க அபி புன்னகையோடு, “புதுக் கதை இல்லமா… ரொம்ப பழைய கதை… உன் அருமைப் புதல்வன் இன்னும் எத்தனை காலத்திற்கு தான் மனசுல இருக்கிறக் காதலை மறைச்சு வைச்சுப்பான்னு தெரியல… பாவம் அந்த ரம்யா… போயும் போயும் ஊர் உலகத்துல வேற ஆளே இல்லாத மாதிரி உன் பிள்ளையை லவ் பண்ணிட்டு படாத பாடுபடுறாங்க…” என்று உரைக்க சுகந்தி ஆச்சர்யமாய் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அர்ஜுன் சந்தேகமாய் பார்த்தபடி, “உனக்கெப்படி அபி இந்த விஷயம் தெரியும்” என்று அபிமன்யுவை வினவ அப்போது அவன், “ரம்யாவோட சிஸ்டர் சூர்யா மூலமா தெரிஞ்சுக்கிட்டேன்” என்றான்.

அர்ஜுன் யோசித்தபடி நிற்க சுகந்தி அவனை நோக்கி, “தம்பி சொன்னதெல்லாம் உண்மையா அர்ஜுன்?” என்று கூர்மையாய் நோக்கியவளைப் பார்த்து பதிலுரைக்க முடியாமல் தவிப்போடு ஆமோதித்தான்.

அபிமன்யு பெருமூச்சுவிட்டபடி, “எப்படியோ சம்மதிச்சுட்டியே?” என்று சொல்ல மீண்டும் சுகந்தி கோபத்தோடு அர்ஜுனை நோக்கி, “என்கிட்ட முன்னாடியே ஏன்டா சொல்லல?” என்று கேட்டாள்.

அபிமன்யு கிண்டலாய் சிரித்தபடி, “ஏன்மா… அவன் அந்த பொண்ணுகிட்டயே சொல்லல… இதுல உன்கிட்ட சொல்லலன்னு ஃபீலிங்ஸ் வேற… விடும்மா… முதல்ல இந்த மேட்டரை எப்படியாவது அப்பாகிட்ட சொல்லி சம்மதம் வாங்கு” என்றான்.

“அவன் சொல்ற மாதிரி அப்பாகிட்ட இப்ப சொல்ல வேண்டாம்… முதல்ல இதைப் பத்தி நான் ரம்யாகிட்ட பேசணும்” என்று அவசரமாய் மறுத்தான் அர்ஜுன்!

சுகந்தி என்ன செய்வதென்று புரியாத குழப்ப நிலையில் நிற்க அபிமன்யு தன் தமையனை நோக்கி, “மா… இவன் ரம்யாகிட்ட பேசுறதெல்லாம் இந்த ஜென்மத்துல நடக்காது… நீ முதல்ல அப்பாகிட்ட சொல்ற வழிய பாரு… இவன் கல்யாணத்துக்கு அப்புறமா வேணா பொறுமையா ரம்யாகிட்ட ஆரத்தீர பேசிக்கட்டும்” என்றான்.

இப்போது சுகந்தி தெளிவுபெற்றவளாய், “தம்பி சொல்றதுதான் சரி… உங்க அப்பாகிட்ட முதல்ல இத பத்தி நான் பேசுறேன்” என்றாள்.

அர்ஜுன் அபிமன்யுவைப் பார்த்து முறைத்தபடி, “நீ இப்படி அம்மாவை அவசரப்படுத்துறதைப் பார்த்தா எனக்காக செய்ற மாதிரி தெரியலியே… வேற ஏதோ விஷயம் இருக்கு… ” என்று அவன் தன் தம்பியை சந்தேகமாய் பார்க்க, சுகந்திக்கும் அதே எண்ணம் எழுந்தது.

இவ்வாறாக இவர்களின் உரையாடல்கள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் வெளியே இருந்து கேட்ட காரின் ஓசை சுகந்தியின் செவியில் வீழ்ந்தது. அந்தக் கணமே தன் கணவனின் வரவினை உணர்ந்த சுகந்தி வேகமாய் அங்கிருந்து அகன்றார்.

அர்ஜுன் இப்போது அபிமன்யுவைப் பார்த்து, “அபி… சமயம் பார்த்து நல்லா மாட்டிவிட்டுட்ட இல்ல” என்று கேட்க அபி புன்னகையோடு, “நீதானே ஆரம்பிச்ச… அதான் நான் முடிச்சு வைச்சிட்டேன்” என்று  இருவரும் சமையலறையில் இருந்து வெளியேறிப் பேசியபடியே அவர்கள் அறைக்குள் நுழைந்தனர்.

அர்ஜுன் மீண்டும் தெளிவு பெறமுடியாமல் அபிமன்யுவை நோக்கி, “டேய்… எனக்கு ஒரு உண்மையை சொல்லு… உனக்கு ரம்யாவோட சிஸ்டரை முன்னாடியேத் தெரியுமா? ” என்று கேட்டான்.

“ஏன் தெரியாம… எனக்கு நல்லா தெரியும்” என்றான் அபிமன்யு. கூடவே வசீகரமான புன்னகை அவன் முகத்தில் ஒளிர்ந்தது.

“அதானே பார்த்தேன்… இரண்டு பேரும் அப்படியே கண்ணாலேயே பேசிக்கிட்டீங்களே?” என்று அர்ஜுன் விழி இடுங்கப் பார்க்க அபிமன்யு அவனை நோக்கி,

“நீ ஏன் இவ்வளவு யோசிக்கிற? நானே சொல்றேன்… எனக்கு அவளை ரொம்பப் பிடிச்சிருக்கு… பார்த்தவுடனே அவதான் எனக்குப் பொண்டாட்டின்னு நான் முடிவும் பண்ணிட்டேன்” என்றான்.

அர்ஜுன் அதிர்ந்து, “ம்ம்ம்… ஜெட் ஸ்பீட்தான்டா நீ… சரி இதைப் பத்தி அந்த பொண்ணுகிட்ட சொல்லிட்டியா?” என்று கேட்டான்.

அபி யோசனையோடு “அவ மனசுலயும் நான்தான் இருக்கேன்னு எனக்கு நல்லா தெரியும் அர்ஜுன்… ஆனா இப்போதைக்கு இதைப் பத்தி சூர்யாகிட்ட எதுவும் சொல்லப் போறதில்ல” என்றான்.

“ஏன்டா?”

“சூர்யாவால எனக்கு ஆக வேண்டிய வேலை ஒண்ணு இருக்கு அர்ஜுன்… இப்போ நான் அவகிட்ட லவ் பண்றேன்னு சொல்லிட்டு… அப்புறம் எதாச்சும் நான் டிமேன்ட் பண்ணா… அதுக்காகதான் நான் அவளை லவ் பண்றேன்னு சொன்னதா அவ தப்பா புரிஞ்சுகிட்டா… வீணா சங்கடம்… அதுவும் இல்லாம நான் இதை ரொம்ப ஜாக்கிரதையா ஹேண்டல் பண்ணனும்… நீயும் யார்கிட்டயும் இதைப் பத்தி எதுவும் சொல்ல வேண்டாம்” என உரைக்க அர்ஜுன் குழப்பத்தோடு,

“ம்ம்ம்… புரியுது அபி… நான் என் தொழிலையும் காதலையும் எப்படி பேலன்ஸ் பண்றதுன்னு யோசனையிலதான் என் மனசுல இருக்கிறதை ரம்யாகிட்ட சொல்லாம இருந்துட்டேன்… நீ சூர்யாகிட்ட என்ன டிமேன்ட் பண்ணப் போறேன்னு எனக்குத் தெரியல… பட் உங்க வருங்கால ரிலேஷன்ஷிப்புக்கு பாதிப்பு ஏற்படாம பார்த்துக்கோ” என்று தன் தம்பியின் தோள்களைத் தட்டி அறிவுரை கூற அவனும் தலையசைத்தான்.

****

அபி அர்ஜுனின் தந்தை வைத்தீஸ்வரன் திறமைசாலியான மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் என்பது முன்னமே தெரிந்ததே. அவருக்கு என்று தனி பெயர் புகழ் அங்கீகாரம் என அவரின் சிறப்பு உலகம் அறிந்தது.

சரியாக ஒரு வருடம் முன்னதாக ஈஷ்வருக்கு  மோசமான விபத்து நேர்ந்த போது இவர் மட்டும் அன்று சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால் அவன் உயிரைக் காப்பாத்தியிருக்கவே முடியாது. ஆனால் அத்தகைய உதவி செய்தவருக்காக ஈஷ்வர் விரைவில் தன் நன்றிக் கடனைத் தீர்க்கும் விதமாய் அவரின் மகனின் உயிரையே பலியாய் கேட்கப் போகிறான்.

வைத்தீஸ்வரனின் தோற்றமோ உயரத்தோடு கம்பீரமும் சேர்ந்திருந்திருந்தது. கூர்மையான விழிகளும் அவற்றிற்கு கீழான சுருக்கமும், அறிவைப் பிரதிபலிக்கும் மூக்குக் கண்ணாடியும்… தலை முழுவதும் நரைமுடியும் அவரின் வயதையும் முதிர்ச்சியையும் தெளிவாய் காட்டிக் கொண்டிருந்தது.

இரவு உணவின் போது தந்தை மகன்கள் அமர்ந்திருக்க சுகந்தி மூவருக்கும் பார்த்துப் பார்த்து பரிமாறினார். அதுவும் அபிமன்யுவுக்குதான் கவனிப்பு அதிகம். ஆனால் உணவு உண்ணும் வரை எதுவுமே பேசாத வைத்தீஸ்வரன் பின் உணவு முடித்து எழுந்து அறைக்குள் செல்ல இருந்த அபிமன்யுவைத் தன் கம்பீரமான குரலால் அழைத்து நிறுத்தினார்.

அவர் கண்களில் இருந்த கோபத்தைக் கவனித்தவன் பதில் பேசாமல் அமைதியாய் நின்றான்.

வைத்தீஸ்வரனுக்கு அபிமன்யுவின் மீது அதிக கோபமும் வெறுப்புமே இருக்க அத்தகைய எண்ணங்களோடு அவனை நோக்கி, “ஏன்டா இப்படி இருக்க… உனக்கு பொறுப்பே வராதா… நீ பாட்டுக்கு மூலிகை எடுக்குறேன்னு மலை குகைன்னு சுத்திட்டிருக்க… மாச கணக்கா வீட்டு பக்கமும் வர்றதில்ல… என்னதான்டா நினைச்சிட்டிருக்க உன்  மனசுல” என்று கேட்க அபிமன்யு மௌனமாகவே நின்றான்.

ஆனால் அவனின் மௌனத்தால் அவரின் கோபம் துளி கூடக் குறையவில்லை. மீண்டும் அபிமன்யுவை நோக்கி இன்னும் சினத்தோடு,

“நீ மட்டும் என் பேச்சை ஒழுங்கா  கேட்டிருந்தா டாக்டரா இருந்திருப்படா… தாத்தா பேச்சைக் கேட்கறேன்னு இப்படி உருப்படாம நிக்கிறதுதான் மிச்சம்… எங்க போற எங்க வர்றன்னு ஒன்னும் தெரியல… தாத்தா வைத்திய சாலையைப் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டிருக்கியே தவிர இதுவரைக்கும் என்னடா செஞ்சிருக்க?” என்று அவர் கேட்டுக் கொண்டிருக்க அபிமன்யு பதிலுரைக்காமல் நின்றிருக்க அர்ஜுன் கோபமாக, “நீங்க பேசுறது சரியில்லப்பா” என்றான்.

வைத்தீஸ்வரன் மேலும் கோபமாக,”அவனுக்கு செலவுக்கு நீதானே பணம் அனுப்புற…” என்று கேட்க அர்ஜுன் வார்த்தையின்றி அமைதியாய் நின்றான்.

இப்போது மீண்டும் அவர் அபிமன்யுவை நோக்கி, “எத்தனை நாளைக்கு நீ அர்ஜுன்கிட்ட பணம் வாங்கி செலவு பண்ணிட்டிருப்ப… அவன் உனக்கு பேருக்குதான் அண்ணன்… ஆனா இரண்டு பேருக்கும் ஒரே வயசுதான்” என்று உரைத்ததும் மீண்டும் அர்ஜுன் ஏதோ சொல்ல எத்தனிக்க அபிமன்யு வேண்டாமெனத் தலையாட்டினான்.

ஆனால் சுகந்திக்கோ மகனின் அவமானம் மனதை ரணமாக்க கணவரின் புறம் திரும்பி, “என்னைக்கோ ஒரு நாள் வீட்டுக்கு வர்ற பிள்ளையை இப்படி கரிச்சுக் கொட்டுறீங்களே!” என்று தவிப்புற்றார்.

“எதுவும் உன் பிள்ளையைக் கேட்க கூடாதோ?… நாளைக்கு உன் பிள்ளைங்களுக்கு பொண்ணு தேடுவ இல்ல… அப்போ புரியும்… ஒரு பிள்ளை டாக்டர்னு சொல்லுவ… இன்னொரு பிள்ளை சித்த வைத்தியன்னா” என்று கேட்டுக் கொஞ்சம் இளக்காரமானத் தொனியில் சொன்ன வார்த்தை  அபிமன்யுவை அதிகமாகக் காயப்படுத்தியது.

அவனைப் பற்றி பேசும் போது சரி. ஆனால் அவன் சித்த வைத்தியத்தைத்  தன் உயிருக்கும் மேலாய் நேசிக்கிறான். அதை குறை கூறும் போது அவனால் அப்படி இயந்திரகதியில் நிற்க முடியவில்லை.

“காலகாலமாய் நம்ம குடும்பத்துல எல்லோரும் சித்த வைத்தியம்தான் பார்த்துகிட்டிருந்தாங்கன்னு கொஞ்சம் நினைச்சுப் பாருங்க… நீங்களே இப்படி பேசுறது மனசுக்குக் கஷ்டமா இருக்கு” என்று தன் வலியை வார்த்தைகளால் விவரித்தான் அபிமன்யு.

ஆனால் அப்போதும் அவர் புரிந்து கொள்ளாமல்  மகனை உக்கிரமாய் நோக்கி, “வழிவழியாய் செஞ்சாங்கனு அதையே நாமளும் செஞ்சிட்டிருக்க முடியுமா அபி… மதிப்பு மரியாதை ஒரு பக்கம் இருந்தாலும் அந்தஸ்து பணம் இதெல்லாம்தான் ரொம்ப முக்கியம்… ரிசர்ச்ங்கற பேர்ல… நாலு புக் எழுதிட்டா அது பெருமையா?” என்று வினவினார்.

“பணம்தான் எல்லாத்துக்கும் பிரதானமா?”என்று அபி கேட்க

“ஆமாம்… அதில் என்ன உனக்கு சந்தேகம்… இந்த உலகத்துல பணம் ஸ்டேட்டஸ் இதெல்லாம் இல்லாம நமக்கு மதிப்பே இல்ல” என்றார்.

அபி அவர் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல், “எனக்கு அப்படி தோணலப்பா… பணம்ங்கறது வெறும் தேவைக்காகத்தான்… அதுவே எல்லாமும்னு சொல்லிட முடியாது…  இன்னைக்கு காலகட்டத்தில எல்லோரும் பணத் தேடலில் இறங்கிட்டாங்க… ஆனா அறிவுத் தேடலை நிறுத்திட்டாங்க… நான் அப்படி மெஷின் மாதிரி எல்லாத்தையும் தொலைச்சிட்டு பணத்து பின்னாடி ஓட விரும்பல…  நான் செய்ற வேலை எனக்கு ரொம்ப திருப்தியா இருக்கு… அதை விட வேற என்ன வேணும்…” என்றான்.

வைத்தீஸ்வரனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க இருவருக்கிடையில் வாக்குவாதம் முற்றிவிடுமோ என சுகந்தி அர்ஜுனை நோக்கி தன் பார்வையை வீசினாள். ஆனால் அர்ஜுன் அப்படி ஒன்றும் நடவாது என நம்பிக்கையோடுத் தலையசைத்தான். ஏனெனில் அபிமன்யுவிற்கு எந்த உணர்ச்சியை எப்படி கையாள்வதென்று நன்றாகத் தெரியும். அப்படி அவன் தந்தையிடம் எல்லை மீறிப் பேச மாட்டான் என அர்ஜுனிற்கு நம்பிக்கை இருந்தது.

வைத்தீஸ்வரன் மேலும் அபியை நோக்கி, “என்னடா பெருசா சாதிச்சிட்டன்னு திருப்தி அடைஞ்சிட்ட… நீ கேள்விப்பட்டிருக்கியா… ஈஷ்வர்தேவ்… கிரேட் பிஸ்னஸ் மேன்” என்று அவர் கேள்வி எழுப்ப அர்ஜுனும் அபிமன்யுவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துத் தங்கள் எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டனர்.

அவர் மீண்டும் தங்கள் மகன்களை நோக்கி, “அவனுக்கு என்ன வயசிருக்கும்னு தெரியுமா?”என்று கேட்க அவனின் மொத்த வரலாறையும் இருவரும்  கரைத்துக் குடித்திருக்கிறார்கள்.

இருந்தும் அந்தக் கேள்விக்குப் பதில் தெரியாதவர்கள் போல் நிற்க வைத்தீஸ்வரனே மேலும்,”சரியா சொல்லனும்னா உன் வயசுதான் இருக்கும் அபி… யங் அன் எனர்ஜட்டிக் மேன்… யூ நோ… எவ்வளவு கம்பெனி?  உலகம் பூரா பிஸ்ன்ஸ்… ஃபார்மாசுட்டிக்கல் இன்டிஸ்ட்ரீஸ்ல உலகத்தில நம்பர் ஒன்… சிங்கிள் மேன்…

உலகத்தையே தன் உள்ளங்கையில வைச்சிருக்கான்னு சொல்லலாம்… என்ன புத்திசாலித்தனம்! என்ன டேலன்ட்! இவ்வளவு பெரிய உயரத்துக்குப் போன பிறகும் கூட போதும்னு இல்லாம இன்னும் இன்னும் சாதிக்கணும்னு நினைக்கிறான்… ஈஷ்வர் தேவ் மாதிரி ஆக  நீ கனவு கூட காண முடியாது…

ஆனா உன் வயசுக்கு ஏதாச்சும் கொஞ்சமாச்சும் சாதிக்கணும்ங்கிற எண்ணம் வேண்டாம்… இப்படி ஏனோதானோன்னு பிடிப்பே இல்லாத ஒரு வாழ்க்கை வாழ எப்படி உன்னால முடியுது” என்று அவர் அவனை நேரடியாக அவமானப்படுத்த,

அர்ஜுனுக்கு கோபம் பொங்கிக் கொண்டுவர அபிமன்யு தன் கைப்பிடியால் அவனை தன் கட்டுக்குள் வைத்திருந்தான். ஆனால் அந்த நேரத்திலும் அபிக்கு கோபம் எழாமல் தன் அப்பாவின் வார்த்தைகளைக் கேட்டு சிரிக்கவே தோன்றியது. இந்த உலகமே இன்று தலையில்தூக்கி வைத்துக் கொண்டாடுபவர்கள் இத்தகையவர்களே என்று எண்ணி சலிப்படைந்தான். அந்த நொடி வைத்தீஸ்வரனின் அறிவுரைத் தடைபடும் விதமாய் அவரின் கைப்பேசி ஒலித்தது.

அதில் ஒளிர்ந்த எண் அவரை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றதைத் தெரிவிக்கும் விதமாய் அவர் முகம் ஒளிவட்டமாய் பிரகாசித்தது. எந்த இடத்திலிருந்தாலும் ஈஷ்வர தேவ் எல்லோரையும் தன் கண்காணிப்பில் வைத்திருக்கிறான் என்பது உண்மைதானோ என்பது போல அவர்கள் அவனைப் பற்றி பேசிக் கொண்டிருந்த  சரியான தருணத்தில் அழைத்திருந்தான்.

வைத்தீஸ்வரன் ஆனந்த அதிர்ச்சியோடு அவனின் அழைப்பை ஏற்று குதூகலம் நிரம்பிய குரலால், “ஈஷ்வர் தேவ்… ஹன்ட்ரட் இயர்ஸ் பாஃர் யூ மேன்” என்று அவனுக்கு நூறு ஆயுளைக் கொடுத்து வாழ்த்துரைத்தார். அதன் விபரீதம் புரியாமல்!

அதோடு அவர்கள் சம்பாஷணை என்னவென்று தெரியாத வண்ணம் அவர் விலகி சென்றுப் பேசினார். அப்போது அர்ஜுன் எரிச்சலோடு, “போயும் போயும் அந்த ஈஷ்வர் தேவோட கம்பேர் பண்ணிப் பேசறாரு… ” என்று அபிமன்யு காதோடு உரைத்தான்.

அபிமன்யு அதைப் பற்றிக் கவலையில்லாமல், “ஈஷ்வர் சென்னைக்கு வந்திருக்கானா அர்ஜுன்?!” என்று கேட்க அர்ஜுன் வெறுப்பான தொனியில்,  “ஆமாம்… பெரிய தொழிலதிபர் முதன்முறையாக தமிழகம் வருகைன்னு நியூஸ்ல போட்டான்… ஆனா எதுக்கு வந்திருக்கான்னு ஒண்ணும் தெரியல” என்றான்.

அபிமன்யு குழப்பத்தோடு, “திரும்பியும் கொங்ககிரில ட்ரை பண்ண மாதிரி ஏதாச்சும்” என்று அவன் யூகிக்கும் போதே வைத்தீஸ்வரன் அளவில்லாத ஆனந்தத்தோடு மீண்டும் திரும்பி வந்து, “அர்ஜுன்! நாளைக்கு ஈஷ்வர்தேவ் நம்ம ஃபேம்லியை மீட் பண்ண வர்றாராம்” என்று உரைக்க இருவருமே ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

வைத்தீஸ்வரன் இன்பத்தில் திளைத்தபடி தன் மனைவியிடம் வரிசை கட்டி சில ஏற்பாடுகளை மேற்கொள்ள சொன்னார். அர்ஜுன் முகத்தில் வெறுப்பு படர்ந்திருக்க அபிமன்யுவின் முகத்தில் நெற்றி சுருங்கி குழப்பம் படர்ந்திருந்தது.

வைத்தீஸ்வரன் இரு மகன்களை நோக்கி, “நாளைக்கு ஈவ்னிங்… மறக்காம இரண்டு பேரும் இருக்கணும்… அட்லீஸ்ட் ஈஷ்வரைப் பார்த்துப் பேசின பிறகாவது உனக்கு பொறுப்பு வருதான்னு பார்க்கறேன்” என்று அபிமன்யுவை சுட்டிகாட்டியபடி உரைத்துவிட்டு அவர் விரைவாக அறைக்கு சென்றுவிட்டார்.

இத்தனை நேரம் அபிமன்யுவின் முகத்திலிருந்த அமைதியும் பொறுமையும் முற்றிலும் கறைந்து போய் கோபம் தலைதூக்கியது.

ஈஷ்வர்தேவ் காரணம் காரியம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டான் என்பது உண்மையெனில் நாளை இத்தகைய சந்திப்பை அவன் தன் தந்தையைப் பார்ப்பதற்காகவா மேற்கொள்ளப் போகிறான் என்று எண்ணமிட, அப்போது அபிமன்யுவாலும்  ஈஷ்வரின் எண்ணத்தை எடை போடுவது கடினமாயிருந்தது. ஆனால் நிச்சயம் அபிமன்யு கணிக்க முடியாத ஒரு அழுத்தமானக் காரணம் அதில் ஒளிந்திருந்தது.

நாளை ஈஷ்வர் தன் சந்தேகங்களைத் தெளிவுப்படுத்திக் கொள்ள சூர்யா அறியாமலே அவளை அபிமன்யுவின் வீட்டிற்கு அழைத்து வரப் போகிறான். மூன்று வித்தியாசமான உணர்வுகளும் ஒரு சேர சந்தித்துக் கொள்ளப் போகின்றன.

சூர்யன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர் கோட்டில் சந்திக்கும் போது கிரகணம் ஏற்படும். ஆனால் அது சூரியனை விழுங்கப் போகிறதா இல்லை சந்திரனை பாதிக்கப் போகிறதா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

 

error: Content is protected !!