Mu-9

Mu-9

13

ருத்ரனின் சூழ்ச்சி

அக்னீஸ்வரியை சந்தித்து விட்டுப் புறப்பட்ட விஷ்ணுவர்தன் தன் குதிரையின் மூலமாக விரைவாக ஆதுர சாலைக்கு சென்றடைந்தான். அங்கே சுவாமிநாதன் கவலையில் இருந்து மெல்ல மீண்டவராய் பழையபடி வரும் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தார்.

விஷ்ணுவர்தனும் அவருடன் துணைக்கு உதவி புரிந்து கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் அவன் என்ன கணித்தானோ அது நிகழக் காத்திருந்தது.

ஆதுர சாலையை ஆரைநாட்டு படைக் காவலர்கள் முற்றுகையிட்டனர். என்னவென்று எல்லோரும் குழப்பமும் பதட்டமும் அடைந்த நிலையில் அந்தக் காவலர்கள் விஷ்ணுவர்தன்… ராஜத்துரோகம் செய்ததாகவும் அரசாங்கத்திற்கு எதிராக வேற்று நாட்டரசுடன் கைக் கோர்த்து ஆரை நாட்டு சாம்ராஜ்யத்தை கவிழ்க்க செயல்பட்டான் என்று பழி சுமத்தி கைது செய்தனர்.

 எல்லோருமே விஷ்ணுவர்தன் அவ்வாறு செய்ய மாட்டான் என்று அவனுக்குப் பரிந்து கொண்டு வர, “இது இளவரசரின் ஆணை” என்று வந்தவர்களின் தலைமைக் காவலன் உரைக்க யாருமே ஒரு வார்த்தை கூட பேசாமல் ஸ்தம்பித்தனர். தன் மகன் மீது இத்தனை அபாண்டமான பழியைச் சுமத்தியது இளவரசர் என்பதை சுவாமிநாதன் நம்பமுடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

 நடப்பது என்னவென்று யாருமே புரிந்து கொள்ள முடியாத நிலையில், விஷ்ணுவர்தனுக்கு மட்டும் நிகழ்பவை ருத்ரனின் சூழ்ச்சி என்பது தெள்ளத்தெளிவாய் புரிந்தது. எந்த வித எதிர்ப்புமின்றி காவலர்களோடு விஷ்ணுவர்தன் சென்றான். அந்த இருள் சூழ்ந்த கதிரவனின் கதிர் வீச்சுகள் நுழையாத கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டான். அவன் இதனால் அச்சம் கொள்ளவில்லை எனினும் அவன் மனம் வேதனை கொண்டது அக்னீஸ்வரிக்காக மட்டும். அவள் இந்தச் செய்தி அறிந்து என்ன நிலைமையில் இருக்கிறாளோ என்று அவன் மனம் சொல்லிலடங்கா வேதனையில் ஆழ்ந்தது.

அக்னீஸ்வரியின் செவிக்கு இந்தச் செய்தி சென்றடைந்த போது அவள் வேதனைக் கொள்ளவில்லை. அதற்கு மாறாய் சினம் கொண்டு ஆர்ப்பரித்துக்  கொண்டிருந்தாள். என் கணவர் நிச்சயம் அத்தகைய காரியங்களில் ஈடுபடமாட்டார் என்று அவள் தன் குரலை உயர்த்தி வீட்டில் உள்ள அவள் குடும்பத்தாரிடம் வாதிட்டுக் கொண்டிருந்தாள்.

கோட்டை காவலாளியாக இருக்கும் அவளின் தந்தை சோமசுந்தரர் தன் மகளிடம், “உன் கணவனை கைது செய்ய சொல்லி ஆணைப் பிறப்பித்தது இளவரசர்… ஆதலால்  யாருமே எதுவும் பேச முடியாத நிலையில் இருக்கிறோம்” என்றுரைத்தார்.

“இத்தகைய மோசமான பழியை விஷ்ணுவர்தன் மீது இளவரசர் சுமத்த வேண்டிய அவசியமென்ன?!” என்று அவளின் மூத்த தமையன் கேள்வி எழுப்ப அக்னீஸ்வரி யோசனையோடு மௌமானாள். இந்தக் கேள்வி அவள் மனதை ஆழத் துளையிட்டு சில பயங்கரமான சிந்தனைகளை உதிக்கச் செய்தது.

‘தன்னை பழி வாங்க இத்தகைய வழியை இளவரசர் கையாள்கிறாரா?’ என்ற எண்ணம் தோன்ற, ‘ம்ஹும்… அப்படி இருக்காது… இளவரசர் அவ்வாறு செய்யக் கூடியவர் அல்ல… எங்கேயோ ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது’   என்று அந்த எண்ணத்தைப் பிரயத்தனப்பட்டு தவிர்த்தாள்.

அந்த நொடி அக்னீஸ்வரி தீர்க்கமாய் முடிவெடுத்து, “நான் அரசரைப் பார்த்து என் கணவர் குற்றவாளி இல்லை என்று புரிய வைக்கப் போகிறேன்” என்று தன் குடும்பத்தாரிடம் சொல்லிவிட்டு புறப்பட, சோமசுந்தரர் அவளைத் தடுத்து நிறுத்தினார்.

“இது அரசாங்க ஆணை… இது குறித்து இப்போது எதுவும் பேச முடியாது” என்றார்.

அவளின் தமையனோ, “சிறு பிள்ளைத்தனமாய் நடந்து கொள்ளாதே அக்னீஸ்வரி… நீ நினைத்த போதெல்லாம் அரசரைப் பார்க்க முடியாது” என்றான்.

இன்னொரு தமையனோ, “இளவரசரின் ஆணைக்கு எதிராய் நாம் ஒன்றுமே செய்ய முடியாது… இந்த மக்களுக்கு அவர் மீதான நம்பிக்கை அத்தகையது” என்றான்.

இப்படி எல்லோருமே அரசாங்கத்திற்கு எதிராக நிற்பது தவறென்று மாறி மாறி உரைத்தார்களே ஒழிய விஷ்ணுவர்தனைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் துளியளவும் இருப்பதாகத் தெரியவில்லை. அதற்குக் காரணமோ சோமசுந்தரத்தின் குடும்பம் அரசாங்கத்திற்கு ஊழியம் செய்தே பழகிவிட்டனர். சிறு துரும்பைக் கூட அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக நகர்த்த மாட்டார்கள். இப்போது விஷ்ணுவர்தன் மீது விழுந்த பழி தங்களின் வாழ்க்கைக்கும் பிரச்சனையாக வந்துவிடுமோ என அவளின் தமையன்மார்களும் தந்தையும் கூட பயந்தனர் என்றே சொல்லலாம்.

அக்னீஸ்வரி கோபத்தின் உச்சியில் நின்றபடி, “என் கணவருக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை… நீங்கள்   அரசாங்கத்தின்  மீது கொண்ட விசுவாசமே முக்கியம்… இல்லையா?” என்று கேட்டவள் மேலும்,

“எங்கே நீங்கள் கேள்வி கேட்டால் உங்கள் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற அச்சம்… அப்படித்தானே?! அநியாயத்திற்கு எதிராய் குரல் கொடுப்பவனே வீரன்… நீங்கள் எல்லாம் வீரர்கள் என்றே சொல்லிக் கொள்ளாதீர்கள்!” என்று அவள் உக்கிரமாய் உரைக்க அவர்கள் எல்லோரும் அதிர்ந்தனர்.

அப்போது அவளின் தாய் கண்ணாம்பாளோ , “அக்னீஸ்வரி” என்று கோபம் கொண்டு, “இப்படித் தந்தையையும் தமையன்மார்களையும் மதிப்பில்லாமல் பேசுவது ஓர் பெண்ணிற்கு அழகல்ல… வா உள்ளே செல்லலாம்… உன் கணவருக்கு ஒன்றும் நேராது… அப்படி எல்லாம் நம் அரசாங்கத்தில் அநியாயம் செய்துவிட மாட்டார்கள்” என்று அறிவுரை கூறினார்.

அக்னீஸ்வரிக்கு யாருமே துணைக்கு நிற்காமல் ஆறுதல் மட்டுமே உரைத்துக் கொண்டிருந்தனர். அவளுக்குக் கடைசியாய் தன் கணவன் கூறிவிட்டுச் சென்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

‘நீ எப்போதும் எந்நிலையிலும் என்னவரினும் உன்  துணிவை விடக் கூடாது’

முன்னமே அவன் நிகழப் போவதை கணித்திருக்கக் கூடும். ஆதலாலேயே அவ்விதம் சொல்லி இருக்கிறான்.

‘நீ எல்லாவற்றையும் தாமதமாகவே புரிந்து கொள்வாய்’ என்று அவன் சொன்னதிலும் ஆழமான உண்மை உள்ளது. அவர் என் மீது கொண்ட காதலையும் தாமதாகவே புரிந்து கொண்டேன். அவருக்கு நேரப் போகும் ஆபத்தைக் குறித்தும் உணராமலே இருந்திருக்கிறேன். அக்னீஸ்வரியின் உள்ளம் குற்றவுணர்ச்சியில் தவித்தது.

ருத்ரதேவன் இப்படி எல்லாம் செய்யக் கூடியவனா என்ற கேள்வி எழுந்து மீண்டும் மீண்டும் அவள் மனதை துளைத்துக் கொண்டிருந்தது. அந்தச் சந்தேகத்தை தான் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் என்ன நேர்ந்தாலும் சரி அரசரை சந்தித்து தன் கணவர் குற்றவாளி இல்லை என்பதை தாமதமின்றி புரிய வைக்க வேண்டும் என்று எண்ணினாள்.

அக்னீஸ்வரி தன் குடும்பத்தாரிடம் கோபமாக, “உங்கள் எல்லோருக்கும் உங்கள் சுயநலமே பெரியது… நானே என் பிரச்சனையைப்  பார்த்துக் கொள்கிறேன்… யாருமே என் பின்னோடு வர வேண்டாம்… நானே அரசரைப் பார்த்து நியாயம் கேட்கிறேன்” என்று வேகமாய் புறப்பட்டு விட்டாள்.

அவளை எல்லோரும் சமாதானங்கள் சொல்லி தடுத்து நிறுத்திய போதும் அவள் யார் வார்த்தைகளையும் காது கொடுத்துக் கேட்பதாக இல்லை. யாருமே தன் பின்னோடு வரக் கூடாது என பிடிவாதத்தோடு சொல்லிவிட்டு தனியே முன்னேறிச் சென்றாள்.

“நம்மாலேயே அரசாங்க முடிவை எதிர்க்கமுடியாது எனும் போது… ஒரு பெண்… இவள் என்ன செய்யப் போகிறாள்?!” என்று அவள் மூத்த தமையன் ஏளனமாக உரைக்க இன்னொரு தமையனோ, “இந்த வாயாடி ஏதேனும் வம்பை இழுத்துக் கொண்டு வரப் போகிறாள்”  என்று உரைத்தான்.

அவர்கள் எல்லோருக்குமே அரசரும் இளவரசரும் தவறான முடிவை மேற்கொள்ள மாட்டார்கள் என்ற ஆழமான நம்பிக்கை இருந்தது. உண்மை அறிந்து விஷ்ணுவர்தனை சீக்கிரம் விடுவித்து விடுவார்கள் என்ற எண்ணத்தாலேயே அவர்கள்  நடக்கப் போகும் நிகழ்வின் தீவிரத்தை அறியாமல் அக்னீஸ்வரியை சமாதானம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் அவள் மனம் தன் கணவனுக்கு நேரப் போகும் ஆபத்தை ஒருவாறு யூகித்தது.

யாரைப் பார்க்க மாட்டேன் என்று முகத்தைப் பார்க்காமல் தவிர்த்தாளோ இப்போது அவன் முன்னிலையில் தன் கணவனின் உயிருக்காக மன்றாட வேண்டுமா என்ற எண்ணம் அக்னீஸ்வரியைத் தவிப்புக்குள்ளாக்கியது.

நேரில் காணப் போகும் ருத்ரதேவன் முற்றிலும் மாறுபட்டவன். அன்று  அவள் மீது பூ மாரி பொழிந்தவன்…  இன்று அளவிட முடியாத அளவுக்கு அவள் மீது தான் கொண்ட வஞ்சத்தையும் வன்மத்தையும் கோபத்தையும் கொட்ட சமயம் பார்த்துக் காத்திருக்கிறான் என்பதை அவள் அறிவாளா?

அரண்மனை வாயில்

அக்னீஸ்வரி யாருடைய துணையுமின்றி அந்த ஆரை நாட்டு கோட்டையில் உயரத்தோடும் கம்பீரத்தோடும்  நின்று கொண்டிருக்கும்  அரண்மனையின் வெளிப்புற  வாயிலை அடைந்தாள். வீரர்கள் அரண்மனை வெளிப்புற பிரமாண்டமான சுவற்றை  சூழ்ந்தவாறு கையில் ஆயுதம் ஏந்தியபடி காவல் காத்துக்  கொண்டிருக்க, வாயிலின் கதவருகே இரு காவலர்கள் கம்பீரமாய் கையில் ஈட்டியை பிடித்துக் கொண்டு  யாரும் உள்ளே செல்லாதபடி தடுத்துக் கொண்டிருந்தனர்.

  அக்னீஸ்வரியோ அரசர் நிச்சயம் யாருக்கும் அநீதியான செயலை  செய்ய மாட்டார் என்று மனதில் அழுத்தமாய் எண்ணிக் கொண்டே அரண்மனை வாயிலை  வந்தடைந்தாள். ஆனால் அங்கே அவள் சந்திக்கப் போவது எத்தகைய மோசமான அனுபவம் என்பதை  அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அக்னீஸ்வரி வாயிலில் கம்பீரமாய் நின்றிருந்த காவலர்களை நோக்கி, “நான் அரசரை சந்திக்க வேண்டும்” என்று முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டு கேட்க, அந்த வீரர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து நகைத்துக் கொண்டனர்.

அந்த காவலர்களுள் ஒருவன், “யாரம்மா நீ… திடீரென்று அரசரை சந்திக்க வேண்டும் என்கிறாய்… எதற்காக நீ அரசரை சந்திக்க வேண்டும்?” என்று வினவினார்.

“என் பெயர் அக்னீஸ்வரி… என் கணவரை ராஜத் துரோகம் செய்ததாக குற்றம் சுமத்தி கைது செய்து அழைத்து வந்து விட்டனர்…  அத்தகைய செயலை என் கணவர் ஒரு போதும் செய்யக் கூடியவர் அல்ல” என்றாள்.

அந்த காவலாளியில் ஒருவன் அவள் சொல்வதைக் கேட்டு, “இதெல்லாம் அரசாங்க விஷயம் பெண்ணே!… இவற்றை எல்லாம் குறித்து பேசுவதே தவறு… உன் கணவர் குற்றம் செய்தாரா இல்லையா  என்பதை அரசர் அரசவையில் விசாரித்துத் தீர்மானிப்பார்… நீ இங்கிருந்து உடனடியாக செல்” என்றார்.

அக்னீஸ்வரி அவர்கள் வார்த்தைகளுக்கு செவி சாய்க்காமல், “நான் எதற்காக செல்ல வேண்டும்… என் கணவர் குற்றமற்றவர் என்று இப்போதே நான் அரசரை சந்தித்துப் புரிய வைக்க வேண்டும்…

இல்லையெனில் குற்றமற்றவரின் மீது  பழியை சுமத்தி சிறையில் அடைத்து வைத்திருக்கும் காரணத்தால்… ஆரை நாட்டை ஆளும் அரசருக்குமே அது   பெரும் தலைகுனிவை ஏற்படுத்தக் கூடும்” என்று சினத்தோடு உரைத்தாள்.

அந்த வீரர்கள் இருவரும் அவள் பேசுவதைக் கேட்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். பின்னர் அங்கே இருந்த வீரர்களிடம், “இத்தனை தைரியமாய் பேசும் இந்த வாயாடிப் பெண் யார்?” என்று அவர்களுக்குள்ளேயே வினவிக் கொள்ள, அப்போது அவள் கோட்டை காவலாளி சோமசுந்தரத்தின் மகள் என்பது தெரியவந்தது.

இப்போது வாயிலில்  நின்றிருந்த மற்றொரு காவலாளி  அவளின் மீது கொஞ்சம் இரக்கம் கொண்டு, “இதோ பார் பெண்ணே!… உன் கவலை எங்களுக்கும் புரிகிறது….. ஆனால் இவ்விதம் நீ பேசுவதே தவறு… நான் சொல்வதைக் கேள்… இங்கிருந்து புறப்படு… உன் கணவருக்கு ஒன்றும் தவறாய் நேராது… நம் அரசர் தெரியாமலும் கூட யாருக்கும் அநீதி இழைக்க மாட்டார்” என்று பொறுமையாக அவளுக்குப் புரிய வைக்க முயன்றார்.

ஆனால் அக்னீஸ்வரியோ தன் பிடிவாதத்தை விடாமல்,

“என் கணவரை அரசர் கைது செய்ததே அநீதிதான்… என் கணவரும் அவர் தமையன்… தந்தை… என வழிவழியாக  எல்லோரும் வைத்தியத் தொழில் பார்ப்பவர்கள்… மக்களைப் பீடித்த பல மோசமான  நோய்களில் இருந்து காப்பதைத் தவிர்த்து… ராஜ துரோகம் செய்வதைக் குறித்து எல்லாம் அவர்கள் சிந்திக்க கூட மாட்டார்கள்” என்றாள்.

மீண்டும் அந்த காவலாளி அவளை நோக்கி, “உன் நிலைமை புரிகிறது… ஆனால் அரசரும் அரசியும் காலையில்தான் கட்டி நாட்டிற்கு சென்றிருக்கிறார்கள்… இப்போது இளவரசரும் அரண்மனையில் இல்லை… நீ யாரிடம் சென்று உன் கணவர் குற்றமற்றவர் என நிரூபிப்பாய்” என்று கேள்வி எழுப்பினான்.

அக்னீஸ்வரி குழப்பத்தோடு, “தாங்கள் பொய்யுரைக்கவில்லையே” என்று சந்தேகமாய் கேட்க

அந்த காவலர்கள், “நாங்கள் ஏனம்மா உன்னிடம் பொய்யுரைக்கப் போகிறோம்… நீ கவலை கொள்ளாமல் போ… உன் கணவருக்கு ஒன்றும் நேராது” என்று அவர்கள் அவளுக்கு தைரியம் கூறினர்.

ஆனால் அக்னீஸ்வரியோ ஏமாற்றமடைந்தாள். தான் இத்தனை தூரம் வந்தது பயனற்றதோ என்று எண்ணிக் கொண்டிருக்கையில், “ஆரை நாட்டின் இளவரசர் ருத்ரதேவன் வாழ்க!!!”” என்று வாழ்த்தொலிகள் தூரமாய் எழுந்தன.

அக்னீஸ்வரியின் மனம் அந்த சத்தத்தைக் கேட்டு படபடத்தது. அந்த வாழ்த்தொலி அருகாமையில் நெருங்கி வர கம்பீரத்தின் மறு உருவமாய் நிமிர்ந்து அமர்ந்தபடி ருத்ரதேவன் அரண்மனை வாயிலை நெருங்கி வந்தான். வாயில் காவலர்கள் வழியில் நிற்போரை  ஒதுங்கச் சொல்லிவிட்டு, அந்தப் பிரமாண்டமான மரத்தால் ஆன கதவை திறக்க, அதனால் ஏற்பட்ட சத்தம் செவியைத் துளைத்தது.

அந்தச் சமயத்தில் தவிப்போடு அக்னீஸ்வரியும் ஒதுங்கி நின்று கொள்ள இளவரசர் ருத்ரதேவன் படை வீரர்கள் சூழ வாயிலினுள் நுழைந்தான். அக்னீஸ்வரி அவனை நிமிர்ந்து நோக்கவில்லை எனினும் ருத்ரதேவனின் கூர்மையான பார்வை அவளைக் கண்டு கொண்டது. அவன் உள்ளே சென்ற சில நொடிகளில் அரண்மனையில் இருந்த ஒரு வீரன் வெளியே வந்து,

“பெண்ணே! உன்னை இளவரசர் அழைத்து வரச் சொன்னார்” என்க, அவள் முகம் இருளடர்ந்து போனது. அவள் உள்ளம் படபடக்க அப்படியே அசைவின்றி நின்றாள்.

அப்போது அங்கிருந்த காவலர்கள், “நல்லதாய் போயிற்று… இளவரசரே உன்னை அழைக்கிறார்… அவரிடம் உன் கணவனைப் பற்றி கூறு… அவர் நிச்சயம் உன் நிலைமை புரிந்து உனக்கு நியாயம் வழங்குவார்” என்று கூற அப்படி நடந்தால் அவளுக்கும் அது ஆனந்தம்தான்.

ஆனால் இளவரசரை எந்த முகத்தைக் கொண்டு எதிர்கொள்வது? அந்த கவலைதான் அவளுக்கு மேலோங்கி நின்றது. இருப்பினும் தன் கணவனைக் காப்பாற்ற வேண்டும் என்பதே முதன்மையானது என்ற முடிவோடு அவள் தன்னை அழைத்த வீரனின் வழிகாட்டுதலோடு அந்த பரந்துவிரிந்த அரண்மனைக் கோட்டைக்குள் நுழைந்தாள்.

இளவரசரை சந்திக்க வழிகாட்டியபடி அந்த வீரன் முன்னேறிச் செல்ல, அக்னீஸ்வரியின் மனம் இளவரசரை சந்திக்க லேசாக தயக்கம் கொண்டாலும், பின் தன் கணவன் குற்றமற்றவர் என்று நிரூபித்து விடுவிக்க வேண்டி தன் மனதை திடப்படுத்திக் கொண்டு மெல்ல நடந்து சென்றாள்.

அப்போது இதே ஆரை நாட்டு பிரமாண்டமான அரண்மனைக்கு சிறுவயதில் தந்தையுடன் வந்து பிரமித்து வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தது அவளுக்குத் தானாகவே நினைவுக்கு வந்தது. அன்று தான்  எதற்கு வந்தோம் என்று நினைவில் இல்லையானாலும் அந்தக் காட்சி ஆழமாய் அவள் மனதில் தங்கி இருந்தது.

கள்ளங்கபடமில்லாத அந்த சிறு வயதைத் தாண்டி தான் ஏன் வந்தோம்? இப்படி எல்லாம் வேதனை கொள்ளவா? பருவப் பெண்ணாய் பல்லாயிரம் கனவுகளோடு வண்ணத்துப் பூச்சியாய் சுற்றிவந்த போது இளவரசரைக் கண்டு பேதை மனம் ஏன் தவிப்புற்றது? ஏன் அவரும் தன் அழகில் மயங்கிக் காதல் வயப்பட வேண்டும்? அர்த்தமின்றி தானும் அவர் மீது ஆசை கொண்டு கனவுலகத்தில் சஞ்சரித்திருந்தோம்?

எல்லாமே திடீரென மறைந்து மாயையாகி விஷ்ணுவர்தனை மணம் புரிந்து கொள்ள நேரிட்டது. ஆழ் மனதில் பதிய வைத்த முகம் ஒன்றாய் இருக்க, வேறொருவனுக்குக்  கணவன் என்ற உறவையும் உரிமையும் தர எவ்வாறு முடியும்?

கணவனின் காதலையும் அன்பையும் புரிந்து கொண்ட போதும் உறவு கொள்ள முடியாமல் குற்றவுணர்வால் விலகி நின்று, பின் நிலைமை முற்றிலும் மாறி கணவன் என்ற உறவைத் தாண்டி அவனே தன் உயிராகவும் உறவாகவும்… ஏன் தன் உலகமாகவே மாறிவிட்டான்.

 அவன் தன்  நெற்றியில் முதன்முறை இதழ் பதித்த போது தன் பெண்மைக்குண்டான ஏக்கமும் காதலும் பன்மடங்கு பெருகி இருந்தது. இனி வரும் நாட்கள் எல்லாம் இன்பகரமானதாக இருக்கும் என்ற நிலையில் இப்போது காலம் மீண்டும் அவளைக் காயப்படுத்திப் பார்க்கவே எண்ணுகிறது.

இன்று அவனுக்காக அவள் மனம் ஏங்கித் தவிக்க, அவனையும் பிரித்து வைத்து விளையாடும் எத்தகைய விதி இது என்று எண்ணி அவள் தன்னைத்தானே நொந்து கொண்டாள். தான் துரதிஷ்டத்தின் மொத்த உருவமோ என எண்ணிய போது அவளின் விழிகளில் கண்ணீர் வழிந்தோடியது. அதனை அவசரமாய்  தன் முந்தானையில் துடைத்துக் கொண்டாள்.

வானில் சூரியன் நிலமகளை புறக்கணித்துவிட்டு விலகிச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தான். மாலை பொழுது மங்கிய வண்ணம் இருக்க அரண்மனைச் சுற்றிலும் தீப்பந்தங்களும் விளக்குகளும் சுற்றிலும் ஏற்றி வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. உள்ளே செல்ல செல்ல நிறைய மண்டபங்கள் இருந்தன. ஆயுதங்கள் நிரம்பிய மண்டபம், பல்லாயிரம் பேருக்கு உணவு தயாரிக்கும் இடம் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே கட்டிடங்கள் அமைக்கப்பட்டு இருக்க இவற்றை எல்லாவற்றிற்கும் நடுநாயகமாய் அரசக்குடும்பத்தினரின் அரண்மனை  நிமிர்ந்து நின்று பிரமிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

ஆனால் அந்தக் காவலாளி அரண்மனைக்குள் செல்லாமல் வலது புற பாதையில்திரும்ப, அங்கே பல வகையான மரங்கள் தூண்களென  வழியேற நின்றிருந்தன. அவளை அந்த அழகிய அரண்மனைத் தோட்டத்திற்குள்  அழைத்து வந்தான் அந்த வீரன். அங்கே சுற்றிலும் பூக்கள்  அந்தி நேர ஆழகை பறைசாற்றிக் கொண்டிருக்க, அல்லிக் குளத்தின் அருகில் நின்றிருந்த இளவரசரின் முன்னிலையில் சென்று அந்தக் காவலாளி அக்னீஸ்வரியை நிறுத்தினான்.

அங்கே ஒருவரும் இல்லாத தனிமையான சூழ்நிலையில் தனக்கே உரிய கம்பீரத்தோடு திரும்பி நின்றிருந்த ருத்ரதேவனிடம்  காவலாளி அக்னீஸ்வரியை அழைத்து வந்துவிட்டதாகத் தகவல் உரைத்துவிட்டு அவனும் சென்றுவிட்டான்.

ருத்ரதேவன் அனலாய் தகிக்கும் கோபத்தோடு அவள் புறம் தன் பார்வையை திருப்பினான்.

error: Content is protected !!