mu11

mu11

17

குற்றவுணர்வு

அக்னீஸ்வரி அரண்மனையை விட்டு புறப்பட்டு பின் தன் பெற்றோர் வீட்டிற்குச் செல்ல விருப்பமில்லாமல் நீலமலையில் உள்ள குடிலுக்கு சென்றாள். அங்கே உடலாலும் மனதாலும் சோர்ந்து காணப்பட்ட சுவாமிநாதரைப் பார்த்ததும் அவளுக்கு கண்ணீர் ஆறாய் பெருகியது.

சுவாமிநாதன் தன் இரு பிள்ளைகளையும் இழந்து இத்தகைய துயருக்கு ஆளாகியதற்கு தானே காரணம் என வேதனையும்  கொண்டாள். அவளுக்குள் குற்றவுணர்வு மலையென வளர்ந்து நிற்க அவரை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தன்னுடையது என எண்ணி பொய்யான வார்த்தைகளைக் கூறி அவருக்கு சமாதானம் கூறினாள்.

“நீங்கள் ஒன்றும் வருத்தம் கொள்ள வேண்டாம் மாமா… என் தந்தை… அரசர் வந்ததும் இது குறித்துப் பேசி அவரை விரைவில் விடுவித்து விடுவார்” என்று அக்னீஸ்வரி உண்மையே இல்லாத வார்த்தைகளை கூறி அவருக்கு நம்பிக்கை தந்தாள். உண்மையை விட ஒரு பொய் நலம் பயக்குமெனில் அதைச் சொல்வதில் தவறொன்றுமில்லை என்று எண்ணிக் கொண்டாள்.

சுவாமிநாதருக்கு தன் மருமகளின் வார்த்தைகள் நம்பிக்கையைக் கொடுக்க அவர் கொஞ்சம் தெளிவுப் பெற்றபடி,

“நீ சொல்வது சரிதான்… எனக்கும் அரசரின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது… அதே சமயத்தில் இளவரசர் மீதும் நான் அபார நம்பிக்கைக் கொண்டுள்ளேன்… இளவரசர் எப்போதும் தவறிழைக்கவே மாட்டார்” என்று உரைக்க அக்னீஸ்வரி அந்த வார்த்தைகளைக் கேட்டு மனம் நொந்து வாடினாள்.

நடக்கும் எல்லா பாதகச் செயலுக்கும் அந்த ருத்ரதேவன்தான் காரணம் என்று எவ்வாறு உரைப்பது? அதை யாராவது நம்புவார்களா? என்று எண்ணி அவளுக்குள்ளேயே தவிப்புற்றாள்.

 

இவர்கள் இருவரின் பொய்யான நம்பிக்கை பரிமாறுதல் ரொம்பவும் சில நாழிகைகளில் பொய்யாய் போனது. விஷ்ணுவர்தனின் மரணச் செய்தியை குதிரை மீது வந்த வீரன் உரைத்துவிட்டுச் சென்றான். ருத்ரதேவன் கட்டிய பொய்யான கதைகளையும் சேர்த்து உரைக்க அதை அவர்கள் நம்பவில்லை.

சுவாமிநாதர் தன் மகனுக்கு நேர்ந்த அநியாயத்தை எண்ணி கண்ணீர்விட்டுக் கதறினார். அக்னீஸ்வரி ஒருவாறு நடக்கப் போவதை யூகித்திருந்தாள்.  ஏற்கனவே இதைப் போன்ற மரணச் செய்தியை எதிர்கொண்டு வேதனையுற்றிருந்த பொழுது, விஷ்ணுவர்தன் தன் கண்முன்னே வந்து நின்ற காட்சி இப்போதும் அதே எதிர்பார்ப்பை அவளுக்குள் தோற்றுவித்தது.

மீண்டும் அவன் உயிர்த்தெழுந்து வரப் போவதில்லை. அவளின் விழிகள் அவனை இனி காணப் போவதில்லை. இந்த உண்மையை ஏற்றுக் கொள்வது கடினமாயினும் அதுவே நிதர்சனம். அந்த ருத்ரதேவன் தன் மீது கொண்ட சினத்தைத் தன் கணவனின் மீது காண்பித்துவிட்டான் என்பதை உணர்ந்து கொண்டாள். அவளின் ஆசைகளும் ஏக்கமும் கண்ணீராய் கரைய, அவள் தேகம் உணர்வுகளைத் தொலைத்து வெறும் கடமைக்கென உயிரை சுமந்தது.

சௌந்தர கொங்கனன் நாட்டிற்குத் திரும்பியதும் அவர் கேள்விப்பட்ட நிகழ்வுகள் எல்லாமே நம்ப முடியாத ஒன்றாய் இருக்க, ருத்ரதேவனின் வார்த்தைகள் அவரை நம்ப வைத்தது. அக்னீஸ்வரி கோபத்தில் அரசரைப் பார்க்க எண்ணிய போது அதற்கான அனுமதி கிடைக்கப்பெறவில்லை.

ருத்ரதேவன் அதற்கான எந்த வாய்ப்பையும் அவளுக்குக் கிடைக்கப்பெறாமல் செய்தான். ருற்றதேவனைப் பற்றி அக்னீஸ்வரி கூறும் எதையும் மக்கள்  காதில் வாங்கிக் கொள்ளவில்லை. மாறாய் எல்லோருமே விஷ்ணுவர்தனுக்கு எதிராகவே பேசினர். அவளுடைய முயற்சிகள் அனைத்தும் தோல்வியையே தழுவியது. ஏன்.. அவள் குடும்பத்தாரும் கூட இத்தகைய பெரிய அநியாயம் நிகழ்ந்த பின்னும் அரச வம்சத்தினரை எதிர்க்க தயாராக இல்லை.

நடப்பவை அனைத்தும் அக்னீஸ்வரியின் துணிவை தகர்த்துக் கொண்டே இருக்க, ‘யாருக்காக இனி வாழ வேண்டும்’ என்ற கேள்வி எழ தன் அறிவீனத்தால் மகன்களை இழந்து நிற்கும் சுவாமிநாதரைக் குறித்த எண்ணமும், தன்னாலேயே பெற்றோரை இழந்துவிட்ட அரங்கநாதனும் கண்முன்னே தோன்ற குற்றவுணர்வு அவளை மரணிக்கவிடாமல் தடுத்தது.

இவை எல்லாம் ஒரு புறமிருக்க ருத்ரதேவன் ஆதுரசாலையின் மீது பரப்பச் சொன்ன வதந்திகள் மக்களுக்கிடையில் வேகமாய் பரவியது. மக்கள் முதலில் பொய்யா உண்மையா என்ற சந்தேகம் கொண்டு, பின் உண்மையாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்து, நாளடைவில் உண்மையாகத்தான் இருக்கும் என்று எல்லோரும் அதனை ஊர்ஜிதப்படுத்திவிட்டனர்.

அக்னீஸ்வரிக்கு அரங்கநாதனைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமிருந்தாலும் தன் துரதிர்ஷ்டமான விதி அவனைப் பீடித்துவிடுமோ என்று பயந்தாள். ஆதலால் அவனை பெற்றோர் வீட்டிலேயே இருக்கும்படி விட்டுவைத்தாள்.

அக்னீஸ்வரி  நீலமலை குடிலில் இருந்தபடி சுவாமிநாதரை கவனித்துக் கொண்டாள். ஆதுர சாலை மீது ஏற்பட்ட அவப்பெயரால் இரவு பகல் பாராமல்  மக்கள் கூட்டம்  சூழ்ந்திருந்த இடம் இப்போது ஆளரவமின்றிக் காட்சியளித்தது.

சுவாமிநாதர் நடந்து கொண்டிருக்கும் பேரிழப்புகளைத் தாங்க முடியாமல் மனதளவில் ரொம்பவும் சோர்ந்து போனார். ஆனால் அக்னீஸ்வரியின் அக்கறையும் அன்பும் அவரின் துயரை ஓரளவு குறைத்திருந்தது.

அன்று நட்சத்திரங்கள் கண்களை சிமிட்ட இருள் நிலமகளைத் தம் பிடியில் சிறை வைத்தது. அந்த இரவு அக்னீஸ்வரியின்  வாழ்வை மொத்தமாக இருளில் ஆழ்த்தக் காத்திருந்தது.

அப்போது குடிலில் சமைத்தபடி அக்னீஸ்வரி சுவாமிநாதனிடம் அவளின் கோபத்தையும் ஆற்றாமையையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.

“எல்லோருமே எப்படி இத்தனை சுயநலம் கொண்டவர்களாய் இருக்கிறார்கள்… எத்தனை பேர் உங்களால் பயனடைந்து இருக்கிறார்கள்… ஆனால் இன்று ஒரு பிரச்சனை என்றதும் யாருமே துணை நிற்கவில்லை” என்றுரைத்தாள்.

சுவாமிநாதரோ மனதைத் தேற்றிக் கொண்டபடி,  “நீ ஏனம்மா நடந்து முடிந்ததை எண்ணி கவலை கொண்டிருக்கிறாய்… ஏற்கனவே உனக்கு காய்ச்சல் வேறு… சிறிது நேரம் அமைதியாய் இரு” என்று மருமகளை சமாதானம் செய்தார்.

அவளும் அத்தோடு அமைதியாகிவிட மீண்டும் சுவாமிநாதன், “பங்குனி உத்திர திருவிழா அரங்கநாதன் கோவிலில் நடக்கிறது… நீயும் கோவிலுக்குப் போய்விட்டு உன் பெற்றோருடன் சில நாட்கள் தங்கிவிட்டு வரலாம் இல்லையா” என்றார்.

“அந்த அரங்கநாதனும் சரி… என் பெற்றோரும் சரி… என்னைப் பற்றி கவலை கொள்ளாதவர்… நான் எதற்கு அவர்களை சென்று பார்க்க வேண்டும்… அதுவும் இல்லாமல் நான் உங்களை விட்டு எங்கும் செல்ல மாட்டேன்” என்றவள் படபடவென பொறிந்து தள்ள,

“இந்த கிழவனுக்கு நீ காவலாக்கும்” என்று சுவாமிநாதன் கேட்கும் போதே, அக்னீஸ்வரி தலையைப் பிடித்தபடி தரையில் அமர்ந்து கொண்டாள்.

சுவாமிநாதன் அவள் கரத்தைப் பிடித்து நாடி பார்த்து, “அக்னீஸ்வரி! காய்ச்சல் அதிகரித்துக் கொண்டே போகிறது… நான் போய் பச்சிலை மருந்து பறித்து அரைத்துக் கொண்டு வருகிறேன்… நீ படுத்து ஓய்வெடு” என்று எழுந்து கொண்டார்.

“வேண்டாம் மாமா… இந்த இருளில் தாங்கள் எங்கும் செல்லாதீர்கள்… சாதாரண காய்ச்சல்தானே… விரைவில் சரியாகிவிடும்” என்று அவள் சொல்ல அவர் காதில் வாங்காமல், குடிலை விட்டு வெளியே சென்றபடி, “நான் இதோ வந்துவிடுகிறேன்” என்று மருந்து எடுத்துவரப் புறப்பட்டுவிட்டார்.

“வேண்டாம் மாமா!” என்று மீண்டும்  அவள் குரல் கொடுத்தாள். ஆனால் சுவாமிநாதன் வெளியேறி விட்டார். இந்த நிலையில் அக்னீஸ்வரிக்கு விஷ்ணுவர்தனின் நினைவு வந்தது.

தனக்கு என்ன நேர்ந்தாலும் துடித்துப் போய்… பார்த்துப் பார்த்து கவனித்துக் கொள்வான் என்ற எண்ணம் தோன்ற அவள் மனம் வேதனையில் உழன்றது.

நிறைய இழப்புகள் ஏமாற்றங்கள் வலிகள் என்று  குறுகிய நாட்களில் அக்னீஸ்வரி சந்தித்த அனுபவம் அவள் மனதை இறுகிப் போகச் செய்திருந்தது. எல்லோருக்கும் நன்மையே நினைத்த சுவாமிநாதர் மற்றும் அவரின் இரு மகன்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதியைக் குறித்து மக்கள் யாரும் கவலை கொள்ளவில்லை என்ற எண்ணம் ஒருவிதமான வெறுப்பை ஊன்றியது.

இப்படியாக அவள் வேதனையுற்று வாடிக் கொண்டிருந்த சமயத்தில் அக்னீஸ்வரியின் செவிகளில் புரவியின் கனைப்பு சத்தம் கேட்க அவளுக்கு ருத்ரதேவனின் நினைவு வந்தது. அந்தச் சத்தம் படபடப்பை ஏற்படுத்த, அக்னீஸ்வரி எதிர்பாராமல் ருத்ரதேவன் அந்தக் குடிலின் வாயிற் கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.

அக்னீஸ்வரிக்கு அவனைப் பார்த்ததும் கோபமும் வெறுப்பும் ஏற்பட இவன் எதற்கு இங்கே வந்திருக்கிறான் என்றெண்ணி குழப்பமுற்றாள்.

‘வெளியே செல்’ என்று குரல் எழுப்பக் கூட முடியாதவாறு அவளின் உடல் வலுவிழந்து இருந்தது.

18

கோபத்தீ

ருத்ரதேவன் தன் சிரத்தைத் தாழ்த்தி அந்தச் சிறிய வாயிலுக்குள் நுழைய, அக்னீஸ்வரி வாட்டமுற்று சுவற்றில் சாய்ந்தபடி சோர்வாய் அமர்ந்திருந்தாள்.

அவள் இதயம் அவனின் வருகையின் மூலம், பெரும் ஆபத்தின் வருகையை உணர்ந்து வேகமாய் துடிக்கத் தொடங்கியது.

அவளைக் கோபமும்  வெறுப்பும் ஆட்கொள்ள, அவனோ ஆணவமான  புன்னகையோடு அவளை நோக்கினான். அந்த குடிலில் பிரகாசித்துக் கொண்டிருந்த விளக்கு அக்னீஸ்வரியின் முகத்தை ஒளியூட்டியபடி இருக்க,

அவளின் நெற்றி திலகமின்றி வெறுமையாய் காட்சியளிப்பதைக் கண்டு அவனின் முகத்தில் வெற்றிக் களிப்பு ஏற்பட்டது. அவள் கணவனை இழந்து கைம்பெண்ணாய்  காட்சியளிப்பது அவனுக்குள் அத்தகைய களிப்பை ஏற்படுத்தியது போலும்!

அந்தப் புன்னகை அவளுக்கு மேலும் எரிச்சலை உண்டாக்க, அவள் சிரமத்துடன் எழுந்து நின்று, “இப்போது எதற்கு இங்கே வந்திருக்கிறாய்… உன் முகத்தைக் காண கூட நான் விருப்பப்படவில்லை… இங்கிருந்து சென்று விடு” என்றாள்.

ருத்ரதேவன் தன் புன்னகை மாறாமல் கம்பீரமாய் நின்று கொண்டு,

“நீ என் முகத்தைப் பார்க்க விருப்பப்படாவிடிலும்… நான் உன் வதனத்தைப் பார்க்க விருப்பப்படுகிறேனே அக்னீஸ்வரி” என்று சொல்லி வன்மமாகச் சிரித்தான்.

அவன் பார்வையும், அவன் உதிர்த்த வார்த்தைகளையும் கொண்டு அவனின் மனோ எண்ணத்தை அறிந்து கொண்டவள் அதிர்ந்து போய் நின்றாள். அவள் உடல் நலம் குன்றியிருந்த போதும் மனோதிடத்தை வரவழைத்துக் கொண்டு,

“எதற்கு நீ என்னைப் பார்க்க விருப்பம் கொள்ள வேண்டும்… உன்னால் நான் சந்தித்த இழப்பும் வலியும் வேதனையும் போதாதா… இன்னும் என் மீதான கோபமும் துவேஷமும் உனக்குத் தீர்ந்தபாடில்லையா?!” என்று வினவினாள்.

அவன் சத்தமாகச் சிரித்து, “நான் உன் மீது கொண்ட கோபமும் துவேஷமும் தீர்ந்தது… ஆனால் நான் உன் மீது கொண்ட காதல்… அதை எங்கனம் தீர்ப்பது அக்னீஸ்வரி” என்று சொல்லியபடி  அவன் அவளைப் பார்த்த பார்வை, அவளுக்குள் படபடப்பை உண்டாக்கியது.

அவள் அந்த உணர்வை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “உன் பார்வையும்  பேச்சும் என் மீது தீயை வாரி இறைப்பது போல் தோன்றுகிறது… ஏன் இப்படி என்னை மேலும் மேலும் வேதனைக் கொள்ளச் செய்கிறாய்” என்று அவள் வெறுப்பான பார்வையை அவன் மீது உமிழ்ந்தாள்.

ருத்ரதேவன் அவளின் வெறுப்பைக் கண்டு கர்வமாய் நோக்கியபடி,

“ஒ! இன்று நான் பேசுவது உனக்கு தீயை வாரி இறைக்கிறது… அன்று காதலோடு நான் உன் மீது பூமாரி பொழிந்தேனே… அவற்றை எல்லாம் நீ அடியோடு மறந்து விட்டாயா அக்னீஸ்வரி?!” என்றான்.

“நான் எதையும் மறக்கவில்லை…  நீ தான் உன் பண்பை மறந்து இப்படி புத்தி பேதலித்துப் போய் பிதற்றுகிறாய்” என்று  கோபத்தின் மிகுதியால் அவள் உரைக்க,

ருத்ரதேவன் சலனமின்றி அவளைப் பார்த்து, “ஆம்… புத்தி பேதலித்துவிட்டது… இன்றல்ல… என்று நான் உன் பிம்பத்தை நீரில் பார்த்தேனோ அன்று… அன்றே உன் மீது காதல் கொண்டேன்… பின் உன்னை உறவாக்கிக் கொள்ள முடியாத இயலாமையால்  கோபம் கொண்டேன்… இப்போது என் பண்பையும் மறந்து உன் முன்னே நிற்கிறேன்… என்ன செய்வது… வேறெந்த பெண்ணாலும் ஈர்க்கப்படாத என் மனம், முதல்முறையாக உன்னைக் கண்டே  காதலில் திளைத்தது… இன்று நீ என்னை விட்டு விலகிச் செல்கின்ற போதும்… என் மனம்  உன்னையே நாடுகிறது… இவ்விதம்  நான் ஓயாமல் உன் நினைவில்  மருக…  நீயோ… இப்படி என்னை புரிந்து கொள்ளாமல்… தவிக்கவிடுகிறாயே… நியாயமா அக்னீஸ்வரி!”  என்றான்.

ருத்ரதேவனின் வார்த்தைகளும் அவனின் எண்ணமும் அக்னீஸ்வரியின் தலையை கிறுகிறுக்கச் செய்ய, ஒருவிதமான கலக்கம் ஏற்பட்டு அச்சம் தொற்றிக் கொண்டது.

அவன் முகத்தை நேர் கொண்டு பார்க்காமல், “நான்  வேறொருவனின் மனையாளாக ஆகிவிட்டேன் என்று அறிந்தும்… எப்படி உன்னால் இவ்விதம் பேச முடிகிறது… உன்னைப் பார்ப்பது கூட பெரும் பாவம்… என் கண்முன்னே நிற்காமல் இங்கிருந்து சென்று விடு” என்று வாசற்புறம் கை காண்பித்து போகச் சொன்னாள்.

ஆனால் ருத்ரதேவன் அவளின் வார்த்தைகளைப் பொருட்படுத்தாமல், “நீ வேறொருவனின் மனையாள் என்ற எண்ணத்தை விட்டொழித்துவிடு… அவன்தான் என்றோ மடிந்துவிட்டானே” என்று சுலபமாய் உரைக்க,

அக்னீஸ்வரி உடனே விஷ்ணுவர்தனைப் பற்றி நினைத்து கண்கள் கலங்கினாள்.  அவள் மனதில் நிரம்பிய வேதனையோடும் ஆற்றாமையோடும்,

“என் கணவர் மடிந்து விட்டதால் எங்களுக்குள் இருக்கும் உறவு முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை… இந்தப் பிரிவு எங்கள் காதலைப் பொய்யாக்கிவிடாது…  என்னை பழிதீர்த்துக் கொள்ள அவரை நீ இல்லாமல் செய்துவிட்டால்… எங்களுக்குள் இருக்கும் உறவும்  அற்றுப் போய்விடும் என்று எண்ணிக் கொண்டாயா?

எந்நிலையிலும் அவர் மட்டுமே என்னுடைய உறவு… உன்னைப் போன்று அவர் என் அழகின் பால் ஈர்ப்புக் கொள்ளவில்லை… அவர் என் மனதை மட்டுமே நேசித்தார்… எங்கள் காதல் கண்களிலிருந்து தோன்றாமல்… மனதினால் உணரப்பட்டது… ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து கொள்… நீ என் கணவரை வீழ்த்தி விட்டதாக ஒரு போதும் பெருமிதம் கொள்ளாதே… அவரை நீ நேர்கொண்டு எதிர்கொள்ளாமல்… சூழ்ச்சி செய்தே கொன்றாய்… இல்லையெனில் என் கணவரின் மேன்மையான சிந்தனைக்கும்… புத்திக்கூர்மைக்கு முன்னே… நீ கால் தூசு கூட பெறமாட்டாய்” என்று அவள் அழுத்தமாய் உரைக்க,

ருத்ரதேவனின் கண்களில் கோபம் கனலென எரிந்தது. வேகமாய் தன் வாளை எடுத்து அவள் கழுத்தை நெருக்கியபடி நிறுத்தியவன்,

“நான் இந்த ஆரைநாட்டு இளவரசன்… அவன் ஒரு சாதாரண வைத்தியன்… போயும் போயும்  என்னை அவனோடு ஒப்புமை செய்ததே தவறு… இதில் என்னை நிந்தித்துவிட்டு அவனை உயர்த்திப் பேசுகிறாய்… இக்கணமே உன் நாவினைத் துண்டாக்கினால் என்ன?!” என்று கோபம் கொண்டு சத்தமிட்டான்.

அக்னீஸ்வரி அவனின் அந்தச் செயலால் சிறிதும் அச்சம் கொள்ளாமல்,

 “நீ என் நாவைத் துண்டித்தாலும்… என் எண்ணமும் வார்த்தையும் பொய்யென்று ஆகிவிடாது… அதே நேரத்தில் நீ இந்நாட்டின் இளவரசன் என்று மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்துவதினால்… நான் உன் அதிகாரத்திற்கு அடிபணிவேன் என்று மட்டும் எண்ணிக் கொள்ளாதே… அது  கனவிலும் நிகழாது…  உன் கரங்கள் என் நாவைத் துண்டிப்பதை விட  என் சிரத்தை துண்டித்து விடட்டும்… அதுவே  நீ எனக்கு செய்யும் பெரிய உபகாரமாய் இருக்கும்” என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டு  ருத்ரதேவனின் கோபம் தணிந்துவிட, அவன் புன்னகை புரிந்து தன் வாளைப் பின்வாங்கினான்.

“உன் அகந்தையும்… நீயும் என் அதிகாரத்திற்கு ஆட்பட மாட்டீர்கள் என்று நான் நன்கு அறிவேன்… ஆனால் நானோ உன் அழகின் ஆட்சிப் பிடியிலே மீளாமல் சிக்கிக் கொண்டிருக்கிறேன்… எங்கனம் என் கரங்கள் உன்னை கொல்வது… நிச்சயம் அத்தகைய உபகாரத்தை நான் உனக்குச் செய்ய மாட்டேன்… நீ வேண்டுமானால் என் கரங்களுக்கு ஒரு உபகாரம் செய்” என்று கேட்டான்.

அக்னீஸ்வரி திடீரென்று அவன் கோபம் மறந்து முற்றிலும் மாறுபட்டவனாய் பேச, அவள் புரியாமல் மௌனமாய் நின்றாள். அவளின் விழிகள் புரியாமல் திகைப்பதைக் கவனித்தபடி அவன் மீண்டும் வன்மமான புன்னகையோடு தன் வாளை உறையில் இட்டுவிட்டு,

 “என் கரங்களுக்கு உன்  தேகத்தைத் தழுவும் பாக்கியம் கிடைக்கப் பெறுமா அக்னீஸ்வரி!” என்று சொல்லிவிட்டு அந்த தனிமையைப் பயன்படுத்தி ருத்ரதேவன் தன் வக்கிரமான எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ள அவளை நெருங்கி வந்தான்.

அக்னீஸ்வரி பதட்டம் நிறைந்த குரலோடு, “என்னை நெருங்கி வராதே… உன் எண்ணம் ஒரு நாளும் ஈடேறாது” என்று சொல்லியபடி விலகிச் சென்றாள்.

“உன் விருப்பம் இல்லாவிட்டாலும் என் எண்ணம் ஈடேறும் அக்னீஸ்வரி” என்று ருத்ரதேவன் அவளைத் தன் வசப்படுத்திக் கொள்ள தன் கைகளைப் பாய்ச்சினான்.

அக்னீஸ்வரி விலகி வந்து, “அப்படி ஒன்று நிகழ்வதற்கு முன்னதாக இந்த அக்னீஸ்வரி அக்னியில் கரைந்து போவாள்” என்று ஆக்ரோஷத்தோடு எச்சரித்தாள்.

ருத்ரதேவன் அவளின் வார்த்தையைப் பொருட்படுத்தாமல்  மேலும் அவன் பாதத்தை அவளை நோக்கி எடுத்து வைத்தபடி, “உன் அனிச்சம் மலர் போல இருக்கும் தேகமும்… அழகும்… அக்னிக்கு இரையாவதா… அதற்கு நான் ஒருபோதும் அனுமதியேன்” என்றான்.

அக்னீஸ்வரியின் மனம் அச்சம் கொண்ட போதும் அதை மறைத்துக் கொண்டு குரலை உயர்த்தியபடி, “என் மனதில்… நான் தேக்கி வைத்திருக்கும் கோபத்தீ உன்னை சுட்டெரிப்பதற்கு முன் இங்கிருந்து சென்று விடு ருத்ரதேவா!” என்று ஆவேசமானாள்.

ருத்ரதேவனோ அவளைப் பார்த்து பரிகசித்து சிரித்தபடி, “எங்கே… என்னை சுட்டெரித்துவிடு பார்ப்போம்” என்று மீண்டுமே அவளை நெருங்கினான்.

அவனிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள தீவிரமாய் யோசித்தாள். கூக்குரலிட்டு யாரையாவது பாதுகாப்புக்கு அழைக்கலாம் எனில் அவளுக்குத் தன் மாமனாரின் நினைவு வர, அவருக்கு ஏதேனும் ஆபத்து நேரிடுமோ என்ற அச்சம்  ஏற்பட்டது.

இனி தன்னால் யாருக்கும் தீங்கு நேரக் கூடாது என்று எண்ணியவள்… கண நேரத்தில் அந்த அறையில் பிரகாசித்துக் கொண்டிருந்த தீபத்தை கூரை மீது வீசினாள். அது வேகமாய் பரவ ஆரம்பிக்க ருத்ரதேவன் அதிர்ந்தபடி,

“என்ன அறிவீனமான செயல் செய்தாய் அக்னீஸ்வரி!” என்று சினத்தோடு அவளைக் கடிந்து கொண்டான்.

“அறிவீனமான செயலா… உன்னை அழிக்கவே இவ்விதம் செய்தேன்” என்றாள் வெற்றிக் களிப்போடு!

ருத்ரதேவனோ அதிர்ச்சியிலிருந்து மீண்டு, “இந்த நெருப்பு ருத்ரதேவனை சுட்டெரித்து விடுமோ… நிச்சயம் முடியாது… நீ அவசரத்தில் அறிவிழந்து செய்த செயலால் உன்  சௌந்தர்யம்தான் சாம்பலாய் போய்விடும்” என்றான்.

“போகட்டும்… இந்த அழகுதானே என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தது… அது இல்லாமலே போகட்டும்” என்று விரக்தியோடு அவள் உரைக்க ருத்ரதேவன் மேற் கூரை முழுவதும் தீ பரவிக் கொண்டிருப்பதை கவனித்தான்.

பின்னர் அவளை நோக்கி, “இப்போது கூட ஒன்றும் பாதகமில்லை… உன் அகம்பாவத்தை விடுத்து வெளியே வா… இல்லாவிடில் நீ இந்த நெருப்பில் எரிந்து சாம்பலாவது உறுதி” என்றான்.

“உன் வஞ்சகமான எண்ணத்தாலும் மோசமான  செயல்களாலும்  எனக்கு உண்டான பெரும் வலிகளும் வேதனைகளும் என் உணர்வுகளை என்றோ கொன்று புதைத்து விட்டது…  இனி இந்த தீ என் தேகத்தை  சுட்டெரிப்பதால் பெரிய பாதகம் ஒன்றும் நேரப் போவதில்லை” என்று அலட்சியமாய் உரைத்தாள்.

நெருப்பு மெல்ல மெல்ல அவர்களை சூழ்ந்து கொண்டு அந்த இடத்தை உஷ்ணப்படுத்திக் கொண்டிருந்தது. ஏற்கனவே அக்னீஸ்வரியின் தேகம் காய்ச்சலால் அனலென தகித்துக் கொண்டிருக்க, அங்கே பரவிக் கொண்டிருக்கும் நெருப்பு அவள் மேனியை மேலும் கனலென கொதிப்படையச் செய்தது.

ருத்ரதேவன் அவள் பிடிவாதத்தை மாற்ற முடியாது என அறிந்து கொண்டுவிட்டு, “இதுதான் உன் முடிவென்றால் அதற்கு நான் தடையாக நிற்கப் போவதில்லை… என்னையும் என் காதலையும் நீ நிந்தித்ததற்காக இந்தத் தண்டனை உனக்குக் கிட்டியது என்று எண்ணிக் கொள்கிறேன்… இம்முறை உன் விதியை நீயே தீர்மானித்துக் கொண்டுவிட்டாய் அக்னீஸ்வரி… என்ன… எனக்கு ஒரே ஒரு வருத்தம்… இந்த தீ உன்னை இரையாக்கிக் கொண்டால்…  எனக்குள் எரிந்து கொண்டிருக்கும் மோகத்தீ எங்கனம் அணைவது?” என்று கேள்வி எழுப்பினான்.

ருத்ரதேவன் இவ்விதம் உரைக்க அக்னஸ்வரி அவனை எரிப்பது போல் சினம் கொண்டு பார்த்தாள். சூழ்ந்துக் கொண்டிருக்கும் தீயும் சரி அவள் தீப்பார்வையும் சரி அவனை எதுவும் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்க ருத்ரதேவன் தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற கர்வப்  பார்வையை அக்னீஸ்வரியின் மீது வீசியபடி,

“அந்த வைத்தியன் இறக்கும் தருவாயில் என்னிடம் ஒன்று சொன்னான்… மீண்டும் பிறவி எடுத்து வந்து அவன் என்னைப் பழி தீர்த்துக் கொள்வானாம்… அவன் சொன்னது போல் மீண்டுமே ஒரு பிறவி இருந்தால் நன்றாயிருக்கும்… அப்பிறவியில் மீண்டுமே உன்னை நான் சந்திக்க வேண்டும்… அப்போது உன் அகந்தையும் அழகையும் என் பாதுகைக்கு கீழே வைத்து… அடிமையாக்கிக் கொள்ள வேண்டும்” என்று சொல்லிவிட்டு கடைசியாய் அவள் வதனத்தைப் பார்த்து ஏக்கமுற்றபடி  அந்த நெருப்பை துச்சமாய் கடந்து வெளியேவந்தான்.

ருத்ரதேவன் தீக்குள் சிக்கிவிட்டானோ என எஜமானின் விசுவாசத்தால் அவனின் குதிரை தவிப்புற, அவன் அதை ஆசுவாசப்படுத்திவிட்டு தாவி ஏறி அவ்விடம் விட்டு காற்றென வேகமாக விரைந்தான்.

ருத்ரதேவன் கடைசியாக சொன்ன வார்த்தைகள் ஓயாமல் அவள் செவியில் ஒலித்துக் கொண்டே இருந்தன. அவளைச் சூழ்ந்து கொண்ட தீயை எண்ணி அவள் கவலை கொள்ளவில்லை. அவள் மனம் தீவரமாய் சிந்தித்தபடி,

“மீண்டும் ஜனனம் எடுப்பதா… அதுவும் ஒடுக்கப்பட்ட பெண் பிறவியாகவா… நான் பெண் என்ற காரணத்தாலேயே என் விருப்பங்கள் கேட்கப்படாமலே நிராகரிக்கப்பட்டுவிட்டன… அவனின் ஏமாற்றத்திற்கு நிகரான ஏமாற்றம் எனக்குமே இருக்கும் என்பதை உணராமல்… என்னையும் என்னைச் சுற்றியுள்ளவர்களையும் பழிதீர்த்துக் கொண்டுவிட்டான்… வரிசையாய் ஏமாற்றங்கள் ஒரு புறம் இருக்க… இன்று என் பெண்மையை தற்காத்துக் கொள்ள என்னை நானே எரித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது… நான் பெண் என்ற ஒரே காரணத்தினாலேயே இத்தகைய துன்பங்களுக்கு ஆட்படுத்தப்பட்டேன்… அப்படி விதியின் வசத்தால் இனி ஒரு முறை இப்பூவுலகில் பிறக்க நேரிட்டால்… அன்று பெண்மையின் ஆளுமையை ஏற்றுக் கொள்ளும்… பெண்மையை ஆணுக்கு நிகராய் மதிக்கும்… அவளின் விருப்பங்களையும் ஆசைகளையும் ஏற்கும்  சந்ததிக்கிடையில்  உயிர்த்தெழ வேண்டும்” என்று  அவள் சூளுரைக்க, அப்போது அந்த கோரத் தீ அவள் தேகத்தைத்  தன்னோடு பிணைத்துக் கொள்ள ஆவலாய் நெருங்கி வந்தது.

அக்னீஸ்வரியின் எண்ணம் பல சந்ததிகளைக் கடந்தே உண்மையாகப் போகிறது. அன்று சாம்பலாகிப் போனவள் பெண்மையின் ஆளுமையை ஏற்கும் சந்ததிகளுக்கிடையில்  மனதில் தேக்கி வைத்த அதே கோபத்தீயோடு உயிர்த்தெழுவாள்.

error: Content is protected !!