Naan aval illai 10

Naan aval illai 10

பெண்ணோவியம்
ராகவ் சொன்னபடியே சில கைத்தேர்ந்த திறமையான ஓவியர்களை ஏற்பாடு செய்திருந்தான். 
அவர்கள் எல்லோருமே கற்பனையில் விவரிக்கும் முகத்தை வரைந்து கொடுக்கும் ஆற்றல் படைத்தவர்கள்.
அங்கே இருந்த ஓவியர்களின் கற்பனை வளமும் சையத்தின் மனதிற்குள் வசிக்கும் முகமும் ஒரு புள்ளியில் இணைந்தால் மட்டுமே அவன் எண்ணியது சாத்தியப்படும். 
அவர்களிடம் சையத் தன் மனதில் உள்ள பெண்ணின் முகத்தை விவரிக்க விவரிக்க அதற்கேற்றாற் போல அமைப்புடைய முகங்களை அந்த ஓவியர்கள் வரைந்துக் காட்டினர். 
ஆனால் அந்த ஓவியர்களும் கூட அவன் நினைத்த மாதிரியான முகத்தை வரையவில்லை. எல்லோருமே சையத் கற்பனை செய்த உருவத்தை வரைய முடியாமல் சற்று தடுமாறிதான் போயினர்.
 இருந்தும் அவர்கள் அயர்ந்துவிடாமல் மீண்டும் விடாமல் முயற்சி செய்ய, 
இறுதியாய் சையத் எதிர்பார்த்த அந்த முகத்தை வரைந்திருந்தார் ஒருவர். 
அவன் எண்ணிய முகத்தை அந்த ஓவியர் வரைந்து தர, சையத் எந்தளவுக்கு ஆனந்தமடைந்தான் என்று சொல்ல வார்த்தைகளே இல்லை. உணர்ச்சி பெருக்கில் தன்னிலை மறந்து குதித்துவிட்டான். 
பின்பு மெல்ல நிதான நிலைக்கு அவன் மீண்டு வர, ராகவிற்கு அப்போது ஒரு சந்தேகம் உதித்தது.
“நீ முன்னாடியே இந்த பெண்ணை பார்த்திருக்கியா சையத்” என்று கேள்வி எழுப்ப
அவனால் சரியாக சொல்ல முடியவில்லை. ஆனால் பார்த்திருப்பதாகவே ஒப்புதல் கொடுத்தது அவன் மூளை.
“தெரியல ராகவ்… பார்த்திருக்கலாம்” என்று அந்த ஓவியத்தை பார்த்தபடியே பதிலுரைத்தான் சையத்.
ஆனால் எப்போது எப்படி என்று கேள்விக்குதான் விடை கிடைக்கவில்லை.
சில நேரத்தில் சில விஷயங்கள்  நம்மை அறியாமல் நம் ஆழ் மனதில் பதிந்துவிடும். அத்தகைய ஞாபகங்களை சேகரித்து வைத்துக் கொள்வதே சப்-கான்ஸியஸ் மைன்ட் என்கிறது அறிவியல்.
அவன் நினைத்த முகம் ஓவியமாய் வரையப்பட்டு விட, அடுத்த சிக்கல் படையெடுத்தது. 
அதுதான் அந்த பெண்ணை தேடும் படலம். 
ராகவ் பொறுமையிழுந்து தன் நண்பனிடம் அவநம்பிக்கையாக பேச ஆரம்பித்தான். 
“எனக்கென்னவோ இதே போல முகம் உள்ள பெண் கிடைக்கிறது கஷ்டம்னு தோணுது சையத்… இப்படியே தேடிக்கிட்டு இருந்தா உன்னோட இந்த ட்ரீம் ப்ரொஜக்ட்டை ட்ராப் பண்ண வேண்டி வந்திரும்” என்றான்.
“எனக்கு ஒன் மந்த் டைம் கொடுங்க ராகவ்” 
“ஒரு மாசத்தில இந்த மாதிரி முகம் இருக்கிற பெண்ணை கண்டுபிடிச்சிர முடியுமா?” ராகவ் இளக்காரமான பார்வையோடு கேட்க
“அல்லா விருப்பப்பட்டா… நிச்சயம் முடியும்” என்றான்.
“பார்க்கலாம்… உங்க அல்லா விருப்பப்படறாரான்னு” என்று ராகவ் உரைத்துவிட்டு, அவன் இந்த விஷயத்தை மொத்தமாய்  சையத் போக்கில் விட்டான். அவனுக்கு ஏனோ இந்த தேடலில் அந்த பெண் கிடைப்பாள் என்ற நம்பிக்கையற்று போனது.
ஆனால் சையத் தன் நம்பிக்கையை இழக்கவில்லை. நிச்சயம் அந்த முகத்தை பார்ப்போம் என்று உறுதியாய் நம்பிக் கொண்டிருந்தான்.
இந்த காரணங்களாலயே மகிழ் எடுத்த பேட்டியில் ராகவும் சையத்தும் கதாநாயகியை பற்றிய விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பதாக உரைத்தனர்.
சையத் எந்த நம்பிக்கையில் அவளை தேடுகிறான் என்றெல்லாம் தெரியாமல்  அப்படி ஒரு தேடலை தொடர்ந்தான்.
அந்த தேடலுக்காக தினமும் அந்த பெண்ணோவியத்தை பார்த்து பார்த்து சையத் தன்னை அறியாமலே அந்த முகத்தோடு அவனுக்கு ஒரு இமோஷன்ல் பாண்டிங் ஏற்பட்டிருந்தது.
பார்க்காத பேசாத பழகிடாத ஒரு பெண்ணின் மீது தோன்றிய இந்த இனம்புரியாத உணர்வை காதலென்று சொல்லிவிட முடியாதே! 
இப்படி சையத் தன்னை தேற்றிக் கொண்டாலும் இந்த எண்ணம் அந்த
  முகம் கொண்ட பெண்ணை பார்க்கும் வரைதான். 
அப்படி பார்த்துவிட்டால் நிச்சயம் அந்த உணர்வு காதலாய் மாறவும் வாய்ப்பிருக்கிறது.
*******
காலை முதல் இரவு வரை  ஒயாத வேலையினால் டேவிட் ரொம்பவும் களைத்து போயிருந்தான்.
 சில மணிதுளிகள் ஷவரில் நின்றவன் ஒருவாறு தன் களைப்பு நீங்கி அறைக்குள் நுழைந்து உடைமாற்ற தன் அலமாரியை திறந்தான்.
எதச்சையாய் ஹேங்கரில் தொங்கிக் கொண்டிருந்த ஊதா நிற ஷர்ட்டை பார்க்க மூன்று வருடத்திற்கு முன்பு நிகழ்ந்த அந்த மோசமான சம்பவம் நினைவுக்கு வந்து அவன் மனதை அலைகழிக்க ஆரம்பித்தது.
கிட்டதட்ட மூன்று வருடம் கடந்துவிட்டதுதான்.
ஆனால் இன்றும் அந்த உடையை அணிவதற்கு அவனுக்குள் ஒரு தயக்கம். அதே நேரத்தில் அதனை வேறொருவருக்கு தரவோ அல்லது எடுத்து போடவும் மனம் வரவில்லை.
ஏன் என்று தெரியவில்லை. அது வெறும் அந்த சம்பவத்தின் தாக்கம் மட்டும்தானா ? 
 இல்லை என்று மறுத்தது அவன் மனம்.
அவள்தான் இவனுக்கு வாழ்க்கையின் நிதர்சனத்தை கற்று கொடுத்திருக்கிறாள்.  அவன் போதை பழக்கத்தை தெளிய வைத்திருக்கிறாள். அன்றோடு தன் குடிப்பழக்கத்தை விட்டவன்தான். இன்று வரை நாகரிகம் என்றளவிலான மீட்டிங்கில் கூட குடிக்க யத்தனித்ததில்லை.
இவ்வாறான எண்ணங்களில் மூழ்கியிருந்தவனை அவன் அறையின் போஃன் ஓலித்து திசை திருப்ப, அவன் அதன் ரிசீவரை எடுத்து தன் காதிற்கு கொடுத்தான்.
“நான் உன்கிட்ட பேசனும் டேவிட்… ரூமுக்கு வா” அவன் அப்பாவின் குரலில் அதிகாரமும் கோபமும் தொனித்தது.
அவர் என்ன கேட்க போகிறார் என்பதை முன்னமே யூகித்தவன் ஒரு சிவப்பு நிற டீஷர்ட்டையும் ட்ரேக்ஸையும் அணிந்து கொண்டு தந்தை அறைக்குள் நுழைந்தான்.
தாமஸ் வீல் சேரில் அமர்ந்திருந்தார். நடக்க முடிந்தாலும் அவரின் உடல் அவருக்கு ஒத்துழைக்க மாட்டேன் என்று சொல்ல அந்த சக்கர நாற்கலியே அவரின் துணைவனாய் மாறியிருந்தது.
கோபமாய் மகனை பார்த்தவர் “உன் மனசில என்ன நினைச்சிட்டிருக்க டேவிட்” என்று கேட்க அவன் இயல்பான முகப்பாவத்தோடு கைகட்டிக் கொண்டு தந்தையின் முகத்தை ஏறிட்டான்.
அவர் அதீத உக்கிரத்தோடு “உன்னை எம்.டியாக்கிட்டேன்… அதுக்காக என்னை கேட்காம உன் இஷ்டத்துக்கு நீயே  முடிவெடுப்பியா? ” என்று கேட்டு மகனை ஆழ்ந்து பார்த்தார்.
“எனக்கு புரியல டேட்… இப்போ என்ன  செஞ்சிட்டேன்னு இவ்வளவு டென்ஷன்” எதுவும் தெரியாதவன்  போல கேட்டு வைத்தான் டேவிட்.
அவர் கோபம் தலைக்கேற “பத்துக் கோடி உனக்கு விளையாட்டா போச்சா ?!” என்று அவர் கேட்கவும் அப்போதும் தன் இயல்பு நிலையில் இருந்த மாறாமல் “பணத்தை விளையாட்டா நினைக்கிறது நான் இல்ல… நீங்கதான்” என்றான்.
“வாட் டூ யூ மீன்?” 
“ஐ மீன் வாட் ஐ ஸே… பணத்தோடு மதிப்பு புரியாம அதை தேவையில்லாத விஷயங்களுக்கும் எல்லாம் பயண்படுத்திட்டிருக்கீங்க” என்றான். இப்போது அவன் குரலில் கோபம் வெளிப்பட, 
“ஷர்ட் அப் டேவிட்” என்று சீறினார் தாமஸ்.
அவன் அத்தோடு வாய் பேசாமல் நின்றுவிட, அவன் கோபம் அவன் விழிகளில் தெரிந்தது.
“நீ என்னை கேட்காம அவ்வளவு பெரிய அமௌன்ட்டை எப்படி டொனேட் பண்ணலாம்… ? அதுக்கான உரிமையாய் யாரு கொடுத்தது” அவர் கோபம் உச்சத்தை தொட்டிருந்தது. 
ஆனால் அவன் ரொம்பவும் நிதானமாக தன் தந்தையை நோக்கி  “உங்க பணத்தை கொடுக்கதான் நான் அனுமதி கேட்கனும் டேட்..  அது என்னோட தனிப்பட்ட பணம்… அதை நான் யாருக்கு வேணா கொடுப்பேன்… என்ன வேணா பண்ணுவேன்… அதை கேட்கிற உரிமை உங்களுக்கு இல்லை… காட் இட்” என்று  சொல்லியவன் தன் தந்தையோடு மேலே பேச விருப்பமின்றி அவரின் அறையை விட்டு வெளியேறினான்.
அவன் பதிலில் அவர் குழப்பமானார்.  மகன் சொன்னதை அவரால் ஏற்க முடியவில்லை. அவனின் நேர்மையை பற்றி அவருக்கு நன்காக தெரியும். 
 அவனுக்கென்று தனிப்பட்ட பணமா ?
எங்கனம் தனக்கு தெரியாமல் அவ்வளவு பெரிய தொகை அவனிடம் இருக்க முடியும்.
 அதற்கு வாய்ப்பே இல்லை என்று உறுதியாய் நம்பியவர் அடுத்த கணம் ராஜனுக்கு அழைத்தார்.
“சொல்லுங்க பாஸ்” என்றார் ராஜன். மகனிடம் பொறுப்பை ஒப்படைத்தாலும் தன் விசுவாசியை அவன் கூடவே  வைத்து அவனை கண்காணிக்கும்படி சொல்லியிருந்தார்.
“ராஜ்… உடனே டேவிட் டொனேட் பண்ண அந்த டென் க்ரோர்ஸ் பத்தின டீடைல்ஸ் வேணும்.. செக் பண்ணிட்டு என் லைனுக்கு வா” என்றார். 
“இப்பவேவா பாஸ்”
“எஸ் ரைட் நவ்” என்றார் தாமஸ்.
ராஜன் அடுத்த கணமே அது குறித்த விவரங்களை சேகரிக்க முனைந்தார்.
அரைமணி நேரத்தில் ராஜன் தாமஸுக்கு அழைப்பு விடுக்க “ம்ம்ம்… என்ன ராஸ்யஜ்… செக் பண்ணிட்டியா?” ஆர்வமாய் அவர் வினவ  
“எஸ் பாஸ்… அந்த பணம் வேறொருத்தங்க மூலமா டேவிட் சாரோட அக்கௌன்டுக்கு டிரான்ஸ்பஃர் ஆகியிருக்கு”
“யாரு ராஜ்… அவ்வளவு பணத்தை டேவிடுக்கு அனுப்பினது”
“அது ஒரு பொண்ணோட அக்கௌன்ட்… நேம் ஜெனித்தான்னு வருது”
“வூ இஸ் ஜெனித்தா? !” வியப்போடு தாமஸ் கேள்வி எழுப்ப
“தெரியல பாஸ்… மே பீ சாரோட ப்ரண்டா இருக்கலாம்”
இந்த யூகத்தை தாமஸால் நம்பமுடியவில்லை. அவனுக்குதான் நட்பு வட்டாரமே கிடையாதே.
தாமஸின் மனதில் நிறைய கேள்விகள் அலைப்பாய்ந்து கொண்டிருக்க, அவர் மௌனமாய் இருந்தார்.
 எதிர்புறத்தில் ராஜன் “பாஸ்” என்றழைக்க தன் சிந்தனையிலிருந்து மீண்டவர் “அந்த ஜெனித்தா பத்தின முழு விவரமும் எனக்கு வேணும் ராஜ்” என்றார்.
“ஒகே பாஸ்” என்று ஆமோதிக்க தாமஸ் அழைப்பை துண்டித்துவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தார்.
சில மாதங்களாகவே தன் மகனின் செயல்பாடுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை அவர் உணர்ந்திருந்தார். அதற்கான பிண்ணனியை இப்போது ஆராய தோன்றியது அவருக்கு.
**********
விடிந்து சில மணநேரங்களில் கடந்திருக்க, சூர்யனின் ஓளிகிரணங்கள் பிரகாசமாய் மின்னிக் கொண்டிருந்தது.
அந்த சமயம் சையத்தின் செகரட்டிரி மது அவனிடம் அவசரமாய் ஏதோ ஒரு தகவலோடு ஓடிவந்தாள்.
“என்ன மது ? ஏதாவது முக்கியமான விஷயமா ?” சையத்  கேட்கவும் அவள் முகமெல்லாம் புன்னகை வழிந்தோடியது.
“சார்… அது” என்று சந்தோஷத்தின் மிகுதியால் வார்த்தை வராமல் தத்தளித்து கொண்டிருந்தாள்.
“என்ன மேட்டர் மது… டைம் வேஸ்ட் பண்ணாம சீக்கிரம் சொல்லு…” என்றான்.
அவள் அவசரமாய் தன் கைப்பேசியை எடுத்து நீட்டி “இத பாருங்க சார்” என்றார்.
“ஏதாவது ட்விட்ர் மெஸஜா?” அலுப்பாய் கேட்டான். 
“இல்ல சார்… நீங்க பாருங்களேன்” என்றாள் புன்னகை ததும்ப.
 “ஏதாவது மொக்க மேட்டரா இருக்கட்டுமே… உனக்கு இருக்கு” என்று எரிச்சலாய் சொல்லி அலட்சியமாய் அவள் பேசியை வாங்கிப் பார்த்தான்.
பார்த்த மாத்திரத்தில் அவன் விழிகள் அகலவிரிந்தன.
சுழன்று கொண்டிருந்த உலகம் சையத்திற்கு மட்டும் அப்போது ஸ்தம்பித்து நின்றுவிட்டது. 
 அப்படியே திகைத்து நின்றவன்  மதுவை பார்த்து தன் வியப்பை வெளிப்படுத்திவிட்டு மீண்டும் அந்த அலைப்பேசியை உற்று கவனித்தான்.
இத்தனை நாள் அவன் வெறும் ஓவியமாய் பார்த்த முகம் அவன் கண்முன்னே உயிர் பெற்று நின்றது. 
ஆச்சர்யமா ? அதிசயமா ? என்னவென்று விவரிப்பான். அவனுக்குள் எழும்பிய உணர்வுகள் அவனால் விவரிக்க முடியவில்லை.
மதுவை கட்டிக் கொண்டு “தேங்க் யூ ஸோ மச்” என்று சொல்லி குதுகலித்தான். அவனின் சந்தோஷம் அப்போது தன் எல்லைகளை கடந்திருந்தது. 
வெற்றிகளையும் புகழையும் சந்திக்கும் போது கூட அவன் இந்தளவுக்கு உணர்ச்சிவசப்பட்டதில்லை. இரண்டு வருடமாய் சையத்ததிடம் பணி புரிந்து கொண்டிருந்த மதுவிற்கே அவனின் இந்த செய்கைகள் வியப்புக்குள்ளாக்கின.
 இந்த விஷயத்தை முதலில் ராகவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் பொங்கிற்று சையத்திற்கு.
தன் அலைப்பேசியிலிருந்து அவனுக்கு அழைப்புவிடுத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!