Naan aval illai 11

நிழலுலகம்
பிரம்மிப்பூட்டும் உயரமான அந்த கிறிஸ்துவ ஆலயம். 
அந்த ஆலயத்தில் திருமண ஏற்பாட்டின் காரணங்களால் வண்ணமயமான பூக்கள் அணிவகுத்திருந்தன. 
எல்லோரையும் பார்வையாலயே வசீகரித்திடும் அந்த பெண் சிவப்பு கம்பள விரிப்பில் அழகே உருவமாய் நடந்து வர, அவளின் வெண்மை நிற கவுன் தவழ்ந்த மேனிக்கு அவளை பின்தொடர்ந்தது.
பளிங்கு சிலையாய் வந்தவளின் முகத்தில் வெண்மை நிற வலைப் போன்ற துணி மறைத்திருக்க, இளவரிசி என்ற வார்த்தைக்கு குறைந்தவள் அல்ல.
அவ்விதம் கம்பீரமாய் நடந்து வந்தவள்
கோட் சூட் அணிந்து கொண்டிருந்த அவள் வருங்கால மணவாளன் அருகாமையில் வந்து நின்றாள்.
அவள் முகமோ அழகாய் மலர்ந்திருந்தது
அலங்கரித்திருந்த அவளின் முகத்தோடு அவள் சங்கு போன்ற கழுத்தை அலங்கரித்திருக்கும் இறுக்கமான அந்த ஆடம்பரமான வைர நெக்ல்ஸ் ஜொலிஜொலித்துக் கொண்டிருந்தது.
அந்த தம்பதிகளுக்கு இடையில் நின்ற பாதிரியார் அவர்கள் பரஸ்பர சம்மதம் கேட்டறிந்து கொண்ட கணம், அவளின் அழகிய விரலில் நட்சத்திரத்தையே எடுத்து வந்து அவள் விரலில் சூட்டியது போல் ஒற்றை கல்லில் மின்னும் அந்த வைர மோதிரத்தை அணிவித்து அந்த  ஆடவன் அவளை தன்னவளாக்கி கொண்டான்.
அதோடு அல்லாது மேன்னாட்டு பாணியில் அவள் மெல்லிய விரல்களுக்கு தன் இதழ்களால் முத்தம் பதிக்க வெட்கத்தால் சிவந்து குமிழ்ந்த அவள் கன்னம் அவள் அழகுக்கு பன்மடங்கு மெருகேற்றியது.
இறுதியாய் ‘தன்யா டைமன்ட் கலெக்ஷன்ஸ்’ என்று எழுதப்பட்டு அந்த விளம்பரப்படம் முடிவுற்றது.
புதிய சிந்தனை கலப்பில்லாத விளம்பரப்படம்தான் எனினும் அத்தனை வசீகரமாய் கவர்ந்திழுக்கும் அந்தபெண்ணின் முகப்பாவங்கள் ரசனையாய் காட்சிப்படுத்தப்பட்டிருக்க,. 
அவளோடு மின்னிக் கொண்டிருந்த வைரமும் அத்தனை சிறப்புக்குரியதாய் படமாக்கப்பட்டிருந்தது.
ராகவ் எத்தனை முறை அந்த விளம்பர படத்தை ஓட்டிப் பார்த்திருப்பானோ !
அவன் வியப்பு அடங்கவேயில்லை.
அந்த படத்தை அவள் முகம் தெரியுமாறு நிறுத்திவிட்டு, அந்த பெண்ணோவியத்தோடு ஓப்பிட்டுப் பார்த்தான்.
ஒரே ஒரு வித்தியாசத்தை கூட அவனால் கண்டறிய முடியவில்லை. 
நேர்த்தியாக வளைந்த புருவங்களும், சிலாகிக்க வைக்கும் விழிகளும், குழி விழும் கன்னங்களும், கூர் நாசியும், முத்து போன்ற பற்களும் என அவள் மீதான பார்வையை எடுக்காமல் ராகவின் விழிகள் அவளோடே கலந்துவிட்டன.
அவள்தான் இவளா?  இல்லை இவள்தான் அவளா? என்று ஆராய்ந்து   பார்த்து கொண்டிருந்தாலும் ,
உள்ளூர அந்த பெண்ணின் தோற்றத்தை விழி எடுக்க முடியாமல் ரசித்துக் கொண்டு இருந்தான். 
தான் அவளால் ஈர்க்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து சுதாரித்தவன் தன் நண்பன் சையத்தின் புறம் திரும்பி “ஏன் சையத் ?.. நீ இந்த பொண்ணை மனிசில வைச்சுதான் ஸ்கெட்ச் பண்ண சொன்னியோ?  இவளை உனக்கு முன்னமே தெரியுமா?” 
“இல்ல ராகவ்… இப்பவரைக்கும் இந்த பொண்ணை எனக்கு யாருன்னு கூட தெரியாது” மறுதலித்தான் சையத்.
“அதெப்படி? !! யாருன்னு கூட தெரியாத இந்த பொண்ணு உன் கற்பனையில இருக்க முடியும்… அதுவும் சின்ன மாற்றம் கூட இல்லாம” தன் சந்தேகம் தீராமல் அவன் மீண்டும் தன் நண்பனிடம் கேட்க,
“எனக்கு உண்மையிலயே இந்த கேள்விக்கான பதில் தெரியல… இந்த விளம்பரத்தை கூட என் செகரட்டிரி மதுதான் காண்பிச்சா?” என்று சொல்லி அவளை பார்வையால் சுட்டிக்காட்டினான்.
ராகவின் பார்வை அப்போது மதுவின் புறம் திரும்பியது. அவளோ ராகவையே ஆர்வமாய் பார்த்து கொண்டிருந்தாள். 
 எல்லாப் பெண்களுக்கும் அவன் மீதிருக்கும் ஈர்ப்புதான் அவளுக்கும். இத்தனை அருகாமையில் இருந்தாலும் அவனை இப்படி பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிட்டியதில்லை. சையத்தின் வீட்டோடடு இணைந்திருக்கும் அலுவலகத்தின்தான் வேலை. 
அவனுடைய அப்பாயின்மன்ட்ஸ் அலுவல் பொறுப்புகள் நடிகர்ளின் கால் ஷீட் போன்றவற்றை கவனித்து கொள்வாள். 
சையத் தேவைக்காக பேசுவானே ஒழிய, அதை தாண்டி இயல்பான புன்னகை கூட கிடையாது. இன்று யாரென்று தெரியாத பெண்ணுக்காக தன் இயல்பிலிருந்து மாறுப்பட்டு அவளை அப்படி கட்டிக் கொண்டு தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தியது  அதிசயத்திலும் அதிசயம்தான். 
சையத்தை எப்போதாவது ராகவ் பார்க்க வந்தால் எட்டி நின்று தன் அறையிலிருந்தே பார்த்து கொள்வாள். அவன் முதுகுப்புறம் தெரியும். இல்லையெனில் அவன் முகம் மட்டும் தெரியும்.
ஆனால் இன்றுதான் அத்தனை அருகாமையில் அவனை பார்க்கும் வாய்ப்பு அவளுக்கு கிடைத்திருக்க, அவன் ஆளுமையையும் கட்டுடலான தேகத்தையும் பார்த்து வியந்தபடி நின்றிருந்தாள்.
ராகவ் அவளை அழைத்துக் கொண்டிருக்க, அவள் சிந்தனை எங்கோ இருந்தது.
 சையத்தும் அவள் அப்படி நிற்பதை குழப்பமாய் பார்க்க இறுதியாய் ராகவ் அவள் முகதுக்கு நேராய் தன் விரல்களால் சொடுக்கவும் அவள் நிமிர்ந்து பார்த்தாள்.
ராகவ் அவள் எதிரே நிற்க  “சார்… ” என்று தடுமாறினாள்.
“வூ இஸ் ஷீ?” என்று அந்த விளம்பர படத்தை காண்பித்து அவளுக்கு ஏதாவது தெரிந்திருக்குமோ என்பது போல் கேட்க
“தெரியல சார்.. இந்த விளம்பரத்தை ஒரு ஹிந்தி சேனலில் பார்த்தேன்… அந்த முகம் சார் வைச்சிருந்த பெயின்டிங்ல இருந்த முகம் மாதிரியே இருந்துச்சு… அதான் சார்கிட்ட காட்டினேன்” என்றாள்.
ராகவ் அலுத்துக் கொண்டு “சரி ஒகே… நீ போ” என்று அனுப்பிவிட்டவன் தன் நண்பனின் புறம் திரும்பி “எப்படி இப்படி ஒரு ஆளை செகரட்டிரியா வைச்சிருக்க … சரியான யூஸ்லெஸ்” என்றான்.
சையத் நிதானத்தோடு “அதில்ல ராகவ்… அவ பாவம்… அவங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லை… ரொம்ப சின்ன பொண்ணு… அவதான் குடும்ப பொறுப்பை எல்லாம் பார்த்துக்க வேண்டிய நிலைமை… இரண்டு தங்கச்சிங்க வேற… அதான்…நார்மல் ஆபிஸ் வொர்க்தானே….. ” என்றான். 
“பரிதாபமா இருந்தா உதவி செய்… வேண்டாங்கல… ஆனா வேலை கொடுத்து வைச்சிருக்கிறதெல்லாம் ரொம்ப ஓவர்” என்று தன் மனதில் உள்ளதை மறைக்காமல் வெளிப்படுத்தினான்.
இருவரும் நெருங்கிய நண்பர்கள் எனினும், சிந்தனைகளிலும் செயல்களிலும் முற்றிலும் மாறுப்பட்டவர்கள்.
துரியோதனன் கர்ணனின் நட்பு போல. இதுவும் கிட்டதட்ட அதே போல நன்றி கடனால் உருவெடுத்த நட்புதானே!
ராகவ் தாமதிக்காமல் தன் கைப்பேசி எடுத்து அழைத்தவன் “ஹெலோ மனோ..” என்று ஆரம்பித்து “தன்யா ஜுவல்ர்ஸ்ல வர விளம்பர பட மாடல் பத்தின டீடைல்ஸ் வேணும்… அதோட அந்த மாடலோட பெர்ஸனல் நம்பரும் வேணும்.. சீக்கிரம்” என்று அதிகரிகமாய் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
இருவருக்கும் அவள் யாரென்று தெரிந்து கொள்வதில் அத்தனை ஆவல். 
ஆனால் இந்த பெண்ணால்தான் அவர்களின் ஆழமான நட்பு உடைப்படும் என்று அவர்கள் யூகித்திருப்பார்களா என்ன ? 
 அவளின் வருகையால் அது விரைவில் நிகழப் போகிறது.
***********
அந்த இடம் முழுக்க ஆட்களின் பரபரப்பான நடமாட்டம். 
சுற்று முற்றும் எல்லோரும் தங்கள் தங்கள் வேலைகளில் அதீத கவனத்தோடு செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.
 உயர உயரமாய் லைட் அமைப்பது, அந்த இடத்தின் தோற்றத்தை மாற்றி செட் போடுவது, பல்வேறு இடங்களில் கேமராவை அமைப்பது, படம்பிடிக்கப்பட்டதை பார்ப்பதற்கான சில தொலைக்காட்சிகள், எல்லாவற்றையும் தாண்டி அங்கே உள்ள அனைவருக்கும் உணவு ஏற்பாடுகள் செய்யும் யூனிட் தொழிலாளர்கள் என அங்கே பலர்  வேலையில் ஈடுபட்டிருந்தனர். அது சினிமாவை போன்ற பெரிய நிழலுலகம். 
பிம்பங்களை காட்டி உண்மையென மக்களை நம்ப வைக்கும் விளம்பரப்பட ஷுட்டிங்.
 அந்த நிழலுலகத்தின் பிண்ணனியில் இதை போன்ற பல ஊழியர்கள் அந்த விளம்பர பொருளை அழகாய் காட்டவும் நிஜமென நம்ப வைக்கவும் பாடுபட்டுக் உழைத்து கொண்டிருக்கின்றனர் என்பது கண்ணுக்கு மறைவான ஒரு விஷயம்.
பரபரப்பான அந்த இடத்திற்குள் அந்த விளம்பர பட டைரக்டர் நுழைந்து ஏற்பாடுகளை சரி பார்க்க, அப்போது அந்த இடமே நிசப்தமாய் மாறியது.
 அவரின் கையசைவுக்கும் கண்ணசைவுக்கும் சிற்சில தவறுகளும் சரி செய்யப்பட, தன் அசிஸ்டன்ட் புறம் திரும்பி “ஜென்னி ரெடி” என்று கேட்கவும் அவன் வேகமாய் தலையசைத்துவிட்டு அவளை அழைத்து வர சென்றான். 
ஜென்னிதா.
அவளே அழகுதான். ஆனால் சினிமா உலகமோ அதற்குள் இருக்கும் எல்லோரையும் மேக்அப் என்கிற முகமூடியை போட்டுக் கொள்ள  விழைகிறதே.
அவளும் தன் இயல்பான அழகிற்கு  பன்மடங்கு மெருகூட்டியபடி ஒப்பனை செய்து கொண்டிருந்தாள்.
சிவப்பு நிற மயிலிறகுகள் வரைப்பட்டிருந்தத வேலைப்பாடுகள் அமைந்த லெகங்கா, அதன் பச்சை நிற மேலங்கம் அவள் ஒற்றை புற மார்பகத்தை மறைத்திருக்க, அவள் உயரத்திற்கு அந்த ஆடை அவளை கம்பீரமாக காட்டிக் கொண்டிருந்தது.
 அவள் கழுத்தை நிறைக்கும் ஆடம்பர தங்க நெக்லஸ் ,அவள் காதில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் தோடோடு இணைந்த அடுக்கு நிற மாட்டல் என அவையெல்லாம் அவளின் அழகுக்கு அத்தனை பொருத்தமாய் பிரம்மிப்பாய் பார்வையை ஈர்த்தது. 
அவள் நேரத்தை கடத்த அவள் கையில்  புத்தகத்தை ஏந்தி படித்திருந்தாள்.
சிட்னி ஷெல்டனின் ‘டெல் மீ யுவர் டீர்ம்ஸ்’ புத்தகம்தான் அது.
 அதற்குள்ளேயே மூழ்கியிருந்தவளிடம் அவளின் செகரட்டிரி “ஷாட் ரெடி மேடம்” என்றதும் நிமிர்ந்தவள் அந்த நொடி கண்ணாடியில் அவளை அவளே பார்த்துக் கொண்டாள்.
அருகிலிருந்த ஒப்பனையாளர் லேசாக டச் அப் செய்ய, அந்த கனமான லெகங்காவை தூக்கி கொண்டு நடந்து ஷூட் நடைப்பெறும் இடத்திற்கு பொறுமையோடு வந்தடைந்தாள்.
அந்த விளம்பரபட இயக்குனர் அவளை பார்த்து வரவேற்பாய் புன்னகையிக்க, அவளும் அதே போன்ற ஒரு புன்னகையை வீசினாள்.
ஏற்கனவே அந்த விளம்பர காட்சி குறித்து அவளுக்கு விவரிக்கப்பட்டு விட்டதால், அவளும் தயார் நிலையில் அந்த காட்சியில் நடிக்க தொடங்கினாள்.
******-
ராகவின் செகரட்டிரி மனோ சையத்தின் வீட்டில் நின்றிருந்தான். 
அவர்களிடம் விளம்பர படத்தில் பார்த்தவளை பற்றிய தகவலை உரைத்துக் கொண்டிருந்தான். 
“அவங்கதான் தன்யா ஜீவல்லர்ஸோட பிராண்ட் அம்பேஸ்டர்… மிஸ். ஜென்னித்தா… மும்பையில இருக்கிற ஒன் ஆஃப் தி பிக்கஸட் ஜீவல்லரி ஷாப் இன் இந்தியா…ரீஸன்ட்டா நிறைய விளம்பரம் பண்ணிட்டிருக்காங்க… எல்லாமே  ஹிந்திலதான்… நிறைய பாலிவுட் மூவிஸ் அவங்கள புக் பண்ண கேட்டிட்டிருக்கங்களாம்… பட் ஷீ இஸ் நாட் தட் மச் இன்டிரஸ்டட் இன் ஆக்டிங்…  ஸோ எதிலயும் இதுவரைக்கும் கம்மிட் ஆகல… முக்கியமான விஷயம்… அவங்க பாஃதர் மும்பையில பெரிய பிஸ்ன்ஸ் மேன்… மிஸ்டர். விக்டர்” என்று அவன் அவளை பற்றிய விவரங்களை சொல்ல, இருவரின் முகத்திலும் வித்தியாசமான  மாற்றங்கள் நிகழ்ந்தது.
அந்த மாற்றத்தில் பதட்டம் பயம் ஏமாற்றம் அல்லது குழப்பம் என எல்லாமுமே கலந்திருந்தது
இத்தனை நாளாய் ஓட்டியிருந்த நம்பிக்கை சையத்தின் மனதை விட்டு விலகிச் செல்ல “இந்த ஜென்னித்தா நம்ம படத்தில புக் பண்ண முடியும்னு உங்களுக்கு தோணுதா ?” என்று வினவ
 “ஜென்னிதாதான் உன் படத்தோட  ஹீரோயின் சையத்… பிக்ஸ் பண்ணிக்கோ” என்று உறுதியளித்தான் ராகவ். 
சையத் சந்தேகமாக “அதெப்படி ராகவ்…  பாலிவுட்கே ஒகே சொல்லன்னா… நமக்கெப்பிடி” எனறு கேள்வி எழுப்ப, அவன் சந்தேகம் நியாயமானது. பல மொழி நடிகைகளும் பாலிவுட்டில் நடித்து பெயர் பெறுவதை கனவாகவே கொண்டிருக்க, அந்த வாய்ப்பை அவள் வேண்டாமென்று உதறி தள்ளுகிறாள் எனில் தமிழில் நடிக்க எப்படி சம்மதிப்பாள் ?
இதற்கெல்லாம் ராகவ் துளியளவும் அச்சப்படாமல் “நான் சம்மதிக்க வைக்கிறேன்” என்று கர்வமாய் உரைத்தான். 
அடுத்த கணமே தன் செகரட்டிரி  மனோவிடம் அந்த பெண்ணிடம் பேசுவதற்காக அழைப்புவிடுக்க சொன்னான்.
அவனின் அழைப்பு அவள் செல்பேசியில் ஒலிக்க எடுத்து பேசியது ஜென்னிதாவின் செகரட்டிரி ரூபா.
“மேடம் ஷுட்டிங்ல இருக்காங்க”  என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள்.
மனோவும் விடாமல் திரும்ப திரும்ப முயற்சி செய்து ராகவிடம் ஜென்னித்தாவை பேச வைத்துவிட முயன்றான். 
ஏனெனில் ராகவ் அவளிடம் பேசியே ஆக வேண்டுமென பிடிவாதமாய் நின்றான்.  
ஷுட்டிங் முடிவுற அவளை டைரக்டர்  பாராட்டி புகழ்ந்து தள்ளினர்.
“அச்சா ஷாட் ஜென்னி…”
“தேங்க் யூ”  என்று நன்றியுரைத்தவள்
பின்னர் உடையை மாற்றி ஒப்பனையை துடைத்துக் கொண்டு ஒரு கருப்பு நிற  ஸ்கர்ட்டுக்கு மாறினாள்.
அப்போது ரூபாவின் கையிலிருந்த அவளின் செல்பேசி சத்தம் போட்டது.
“வூ இஸ் தட் ரூப்ஸ்” கண்ணாடியை பார்த்தபடி   ஜென்னித்தா விசாரிக்க
  “கோலிவுட் ஸ்டார்… மிஸ்டர். ராகவ்… செகரட்டிரி” என்று சொல்ல.
“நாட் நவ் ரூப்ஸ்… ஐ வில் டாக் இட் லேட்டர்” 
ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் அவர்கள் சம்பாஷனை நிகழ்ந்து கொண்டிருந்தது. 
 ரூபா தயக்கத்தோடு “மேடம்… நீங்க ஷாட்ல இருந்த போதே அவங்க நிறைய கால் பண்ணிட்டாங்க… ” 
“ஸோ வாட் ?” 
“வீ பிரொடக்ஷன்ஸோட ஓனர் வாஸன் சாரோட ஒன்லி சன் மிஸ்டர். ராகவ் “
“ஸோ வாட் ரூப்ஸ்… அப்புறம் பேசிறன்னு சொல்லு” அலட்சியமாய் உரைத்தாள்.
ரூபா தயங்கியபடி அந்த அழைப்பை ஏற்க, இத்தனை நேரம் பேசியது ராகவின் செகரட்ரி மனோ. 
இம்முறை பொறுமையிழந்து ராகவே பேச, அவன் வார்த்தையில் அதிகாரம் தென்பட்டது.
“ஐம் ராகவ்… ஜென்னித்தாகிட்ட பேசனும்”
ரூபா செல்பேசியை நீட்டி “மிஸ்டர்.ராகவ் இஸ் இன் தி லைன்…” என்றாள்.
ஜென்னிதா எரிச்சலான பார்வையோடு பேசியை வாங்காமலே 
 “அகர் வோ பகவான் பி ஹோனா சுபே கால் கர்னே கேலியே போல் தோ” 
என்று அவள் உரக்க சொல்ல, அவள் சொன்னது எதிர்புறத்தில் லைனில் இருந்த ராகவின் காதிலும் விழுந்திருக்கும்.
அவள் விழ வேண்டுமென்றே அவ்விதம் உரைத்தவள் ரூபாவிடம் அழைப்பை துண்டிக்க சொல்லி கண்ணசைத்துவிட்டு  
அவளின் உயரைத்தையும் மிஞ்சும் உயரமான ஹீல்ஸ் அணிந்து கொண்டு அந்த ஒப்பனை அறையை விட்டு விறுவிறுவென வெளியேறினாள்.
அவள் சொன்ன வார்த்தையில் தெரிந்த வன்மையும் திமிரும்,  ராகவின் ரௌத்திரத்தை தூண்டிவிட்டது.