Naan Aval Illai- 20

Naan Aval Illai- 20

ஆழியின் ஆழம்

அவள் கோபத்தை பார்த்த டேவிட், “ஜென்னி காம்டவுன்” என்று அவளை அமைதியடைய முயற்சித்தான்.

ஆனால் அது சாத்தியப்படவில்லை.

அவள் மனமோ ஆர்பரிக்கும் கடலைப் போல கொந்தளித்துக் கொண்டிருந்தது.

டேவிட் அவள் எதிர்புறம் வந்து நின்று “ஏன் இவ்வளவு கோபம்… எது உன்னை இந்தளவுக்கு அப்சட்டாக்குது ஜென்னி?” என்று கேட்க,

“சாக்ஷி… சாக்ஷின்ற பேரு” என்று எங்கேயோ வெறித்தபடி அவள் சொல்லவும் அதிர்ந்தவன்,

“என்ன பேசிற ஜென்னி? சாக்ஷிங்கிறது உன் பேர்… அதுதான் உன் அடையாளம்… அதெப்படி நீ இக்நோர் பண்ண முடியும் ?!” என்று கேட்டான். 

அவனை நிமிர்ந்து நோக்கியவள் “சாக்ஷி இஸ் நோ மோர் டேவிட்… ” என்றாள்.

“வாட் நான்ஸென்ஸ் ? எப்படி உன்னால சாக்ஷியை இல்லன்னு சொல்ல முடியுது ?!”

“இல்லாத ஒண்ண இல்லன்னுதான் சொல்ல முடியும் டேவிட்”

“அப்போ நீ யாரு?” நேரடியாய் வந்த அவன் கேள்விக்கு தோள்களை குலுக்கியபடி “ஜென்னித்தா” என்றாள்.

“ஜென்னித்தா உண்மை இல்லை… சாக்ஷிதான் உண்மை”

“அந்த உண்மை எனக்கு வேண்டாம்” தீர்க்கமாய் வந்தது அவள் குரல்.

“அப்போ பொய்யாதான் வாழப் போறியா?”

“உண்மைக்குதான் இந்த உலகத்தில மதிப்பில்லையே… அப்புறம் பொய்யா இருக்கிறதில என்ன தப்பு…

ஏன்?…அந்த பொய்யை எனக்கு உருவாக்கி தந்ததே நீங்கதானே டேவிட்… எதுக்கு நீங்க அப்படி செஞ்சீங்க? ” என்ற அவளின் கேள்வி நேரடியாய் அவன் மீது பாய்ந்தது.

” உன்னை சாக்ஷியா வாழ விடமாட்டாங்களே… அதான்… என்னால வேறென்ன செய்ய முடியும் ?”

“செஞ்சிருக்கலாம்… என்னை நீங்க சாக விட்டிருக்கலாம்”

அவளை கூர்ந்து பார்த்தவன் “சாக விடவா… நொடிக்கு நொடி ஐ வான்ட் டூ லிவ்னு ஐ வான்ட் டூ லிவ்னு சொன்னியே.. மறந்திட்டியா ஜென்னி?!” என்று கேட்டவனிடம்,

“மறக்கல டேவிட்… அப்போ எனக்கு தெரியல… என் வாழ்க்கை இப்படி தடம் மாறி திசை மாறிப் போகும்னு”

“அப்போ எல்லா தப்புக்கும் நான்தான் காரணம்னு சொல்றியா?”

“நோ டேவிட்… எல்லா தப்புக்கும் ரெஸ்பான்ஸ்பிள் சாக்ஷிதான்… அவ உண்மையான காதலை நம்பல… அவளுக்கு பொக்கிஷமாய் கிடைச்ச நட்டை நம்பல… அவளுக்கு இந்த தண்டனை தேவைதான்… எவிரித்திங் இஸ் பிகாஸ் ஆஃப் ஹர்” அவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாய் பார்த்து

“ஹர்..ரா… ! நீ வேற யாரையோ பத்தி பேசிற மாதிரி பேசிட்டிருக்க” 

“எஸ்… அவ வேற யாரோதான் டேவிட்… நான் அவள் இல்லை…” என்றாள் அழுத்தமாக !

அவள் சொன்னதை கேட்ட டேவிடால் நம்ப முடியவில்லை.

அவன் முன்னே நிற்பது அவள் இல்லைதான். ஆனால் அதெப்படி சாத்தியமானது. தன்னுடைய மொத்த அடையாளத்தையும் தொலைத்து இன்னொருவளா குடிபெயர முடியுமா ?

சாக்ஷியின் நினைவுகளை எல்லாம் அவள் மறந்து விட்டாளா அல்லது ஒதுக்கி விட்டாளா ?

அந்த கோரமான விபத்து நடந்தப் பிறகு அவள் அதிலிருந்து மீண்டு வரவே அவளுக்கு ஒரு வருடம் பிடித்தது. யார் அவள் வாழ்க்கையை சிதைத்தது என்பதை அவள் அறிந்திராதுதான் கொடுமை.

ஆனால் அவள் அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வருவாளா என்று எண்ணும் போது தீடீரென்று வியக்கதக்க விதமாய் அவளே அதிலிருந்து மீண்டு வந்தாள்.

இரண்டு வருடத்தில் அவள் ஜென்னியென்ற அடையாளத்தை அவளுக்கே உரியதாக மாற்றிக் கொண்டாள். இனி அவளே ஜென்னி இல்லையென்று சொன்னாலும் இந்த உலகம் நம்பாதே. அந்தளவுக்காய் அந்த அடையாளத்தை அவளோடு பிணைத்துக் கொண்டாள்.

அபரிமிதமான அவளின் வளர்ச்சியோடு சாக்ஷி என்ற அடையாளம் கண்காணாமல் மறைந்து போனது.

ஆனால் அவள் இன்று சாக்ஷி என்ற ஒருவளே இல்லையென்று வாதிடுவதுதான் எதனால்?

ஆழியின் ஆழம் போல அவள் மனதின் ஆழத்தை அவனால் உண்மையிலயே அளந்து பார்க்கவும் முடியவில்லை. அறிந்து கொள்ளவும் முடியவில்லை.

யோசனையில் நின்றிருந்தவனிடம் “அதை பத்தி விடுங்க டேவிட்…. வாங்க உள்ளே போகலாம்” என்று இயல்பான தொனியில் அழைக்க,

“இல்ல ஜென்னி.. நான் கிளம்பிறேன்” என்று அவன் மேலே அந்த விவாதத்தை 
தொடராமல் முன்னேறி நடந்தான். 

“டேவிட் நில்லுங்க” என்று அவள் அழைத்தும் அவன் அதனை காதில் வாங்காமல் விறுவிறுவென தன் காரில் ஏறி புறப்பட்டுவிட்டான். 

ஜென்னித்தா அவன் அப்படி புறக்கணித்து செல்வதை பார்த்து கவலையுற, ரூபா பின்னோடு வந்து “என்னாச்சு ஜென்னி… டேவிட் சார் ஏன் கோபமா போறாரு ?” என்று கேட்க,

“கோபமா… சேச்சே அப்படி எல்லாம் இல்ல” என்று சமாளிப்பாய் சொல்லிவிட்டு திரும்பி நடந்தாள். 

“ஜென்னி… விக்டர் சார் கால் பண்ணாரு… அதை பத்தி சொல்லலாம்தான்” என்றபடி ரூபா அவளை பின்தொடர்ந்து வர

“என்ன சொன்னாரு ரூப்ஸ் ?” நடந்தபடியே கேட்டாள். 

“எப்போ மும்பை வர்றீங்கன்னு ?”

ஜென்னி பதில் பேசாமல் மௌனமாகிவிட

ரூபா அவளிடம் “டிக்கெட் புக் பண்ணிடட்டுமா?” என்று கேட்ட நொடி அவள் அவசரமாய் திரும்பி “நோ ரூப்ஸ்… எனக்கு இங்க சில கமிட்மென்ட்ஸ் இருக்கு… அதை முடிச்ச பிறகு போலாம்… நான் டேடிகிட்ட இதை பத்தி பேசிக்கிறேன்” என்றாள்.

“என்ன கமிட்மன்ட் ஜென்னி ?” ரூபா தெரிந்து கொள்ள கேட்க 

“நான் எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டுதான் செய்யனுமா ரூப்ஸ் ?!” 

“இல்ல ஜென்னி… ஜஸ்ட் டூ நோ” 

“எல்லா தெரியும் போது தெரியும்” என்று இறுக்கமாக சொல்லியபடி அவள் வீட்டின் வாயிலுக்குள் நுழைந்தாள். 

உள்ளே சென்றதும் முகப்பறையில் வைக்கப்பட்டிருந்த அந்த பூங்கொத்துக்கள் மீதுதான் அவள் பார்வைச் சென்றது. 

கண்ணை பறிக்கும் அழகான வண்ண நிற பூக்கள்.

அனைத்தும் திறப்பு விழாவின் போது அவளுக்கு கொடுக்கப்பட்டவை. 

ஒரு நொடி அவற்றின் மீது பார்வையை செலுத்துவிட்டு கடந்து செல்ல பார்த்தவள், மீண்டும் எதையோ கண்டு வியப்பில் அதன் புறம் பார்வையை திருப்பினாள்.

அங்கிருந்த சிவப்பு நிற பூங்கொத்தின் மீது அவள் விழிகள் குறி வைக்க, அவள் பார்த்தது அந்த பூங்கொத்தை அல்ல.

அந்த பூங்கொத்திற்கு இடையில் சொருகியிருந்த வீணை போன்றிருந்த க்ரீட்டிங் கார்டை! 

அதனை பார்த்தவள் திகைத்துப் நின்றுவிட ரூபா அவளிடம் “என்னாச்சு ஜென்னி?” என்று கேட்டாள்.

“இந்த ப்ஃளவர்ஸை யார் கொடுத்தது?” விழியை அதன் மீதிருந்த எடுக்காமலே கேட்டாள்.

“எல்லாத்தையும் நீங்கதானே ஜென்னி வாங்கினீங்க” 

‘நானா ! இதை எப்படி கவனிக்காம விட்டேன்’ மனதிற்குள் கேட்டுக் கொண்டவள் யார் இதை தன் கரத்தில் தந்திருப்பார்கள். 

அந்த முகத்தை நினைவுப்படுத்திப் பார்க்க முயன்று அது அவளால் முடியவில்லை.

யாரென்று யூகிக்க முடியாத கேள்வி இல்லை. ஆனால் அப்படி இருக்க கூடாதென்று அவள் உள்ளம் தவிப்புற்றது.

பதட்டத்தோடு அந்த வீணை போன்ற கார்டை கையில் எடுத்தாள். 

“வாவ் !! புது டிசைனா இருக்கு… யார் கொடுத்திருப்பா ?” என்ற கேள்வியோடு ரூபா வியப்புற,

ஜென்னியின் மனதில் படபடப்பு.

அதை செய்தவர்கள் தங்கள் கரத்தாலயே அதனை வடிவமைத்திருக்க கூடும். வீணை போன்ற பாணியில் அத்தனை அழகாய் கத்தரித்து நிறம் பூசி, பார்க்கவே கண்ணை கவரும் விதமாய் இருந்தது.

“ஓபன் தி கார்ட் ஜென்னி” ரூபா அவளிடம் சொல்லவும் திறந்து பார்க்கலாமா? என்ற போராட்டம் அவளுக்குள். 

அவள் கரம் அதன் உறுதியை இழந்து நடுக்கமுற, தடுமாற்றத்தோடே அந்த க்ரீட்டிங் கார்டை பிரித்தாள்.

பதட்டம் இருந்தாலும் அதில் என்ன எழுதியிருக்கும் என்ற ஆர்வமும் உள்ளுக்குள் எழும்பியது.

ஆனால் அவள் திறந்த மாத்திரத்தில் அந்த கார்டினுள் அமைக்கப்பட்டிருந்த ஒலிப்பதிவிற்குள் இருந்த குரல் பேசத் தொடங்கியது.

‘வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு

பூணும் வடம் நீ யெனக்கு,புது வரிம் நானுனக்கு

வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு

பான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு

வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு

பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு

வீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு

பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு

காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு’

இதை கேட்ட மாத்திரத்தில் உள்ளுக்குள் அவள் நொறுங்கிய உணர்வு. நான் வெளி வந்தே தீருவேன் என அவள் விழியை கடந்து வரும் கண்ணீர்.

சிலையாய் நின்றிருந்தவளின் தோளில் கரம் பதித்த ரூபா “வாட் இஸ் இட் ஸேயிங் ?… ஐ டோன்ட் அன்டர்ஸ்டேன்ட்” என்று கேட்க,

ஜென்னி தன் உணர்வுகளை இறுக்கமாய் உள்ளூர பூட்டிக் கொண்டு “ஈவன் ஐ டோன்ட்” என்று அப்பட்டமாய் பொய் சொல்லிவிட்டு அவள் அறை நோக்கி விரைந்தாள். 

கதவை தாளிட்டுவிட்டு கார்டை படுக்கை மீது தூக்கி எரிய, அது திறந்து கொண்டு மீண்டும் அதே குரல் பேச…

தலை மீது கைவைத்து கொண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள். 

அவள் உயிராய் உணர்வாய் தினம் தினம் ஏங்கி ரசித்த அந்த குரல் இப்போதும் அவளை சிலிர்படைய செய்தது.

அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது பாரதியின் வரிகளா இல்லை அந்த வரிகளுக்கு உயிர் ஊட்டிய அவன் குரலா !!

எந்த குரல் அவள் உணர்வுகளை எழுப்பிவிட்டதோ ?!

எந்த குரல் அவளுக்குள் வேதியியல் மாற்றங்களை நிகழ்த்தியதோ ?!

அந்த குரல் இப்போதும் அத்தகைய வேலையை செவ்வனே அவளுக்குள் செய்தது.

சாக்ஷி .இல்லை என்று டேவிடிடம் முன் வைத்த அவள் வாதத்தை அவனின் குரல் ஒரே நொடியில் உடைத்தெறிந்தது. 

மனதிற்குள் அவள் பூட்டி வைத்திருந்த அவன் நினைப்புகளை வாரி இறைத்தது. 

நிறமில்லாத முகமில்லாத வெறும் உணர்வோடு மட்டுமே பதிவான நினைவுகள். 

அந்த நினைவுகளின் ஆழத்தை வெறும் வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது.

கண்பார்வை வந்த பின்னும் கூட அவனை பார்த்துவிடக் கூடாது என்ற அவள் உறுதியாய் நின்றாள். 

அவனுக்குள் ஆழமாய் பதிந்திருந்த அவன் குரல் மட்டுமே போதுமென்றிருந்தாள்.

இன்னும் அவள் நினைப்பில் அவன் இருக்கிறான் என அறிந்தப்பின் அவள் உறுதி தளர்ந்து போனது.

அவனை பார்க்க வேண்டுமென்ற ஆசை மலையாய் வளர்ந்து நின்றது.

பார்த்துவிடவே கூடாதென்ற அவள் பிடிவாதம் உடைந்து, அவனை சந்தித்து அணைத்துக் கொள்ள துடித்தது. 

இந்த கணம் கூட அவனை பார்ப்பது அவளுக்கு சிரமமல்ல. அவனும் ஒரு பிரபலம்தான்.

ஆனால் உயிரற்ற ஜீவனாய் பிம்பமாய் பார்க்க வேண்டுமா? 

அவனை உயிரும் உருவமாய் பார்க்க விரும்பியது அவள் மனம்.

அவள் அணைப்போட்டு தடுத்திருந்த அவளின் மொத்த உணர்வுகளும் தன் எல்லைகளை உடைத்து வெளிப்படுமாயின் அது காதல் என்ற நிலைப்பாட்டிற்குள் நிற்க இயலுமா ?

********
அவள் அந்த கார்டை பார்த்திருப்பாளா? மகிழின் மனம் அதை குறித்து மட்டுமே சிந்தித்திருந்தது.

தான் எதிர்பார்த்தது போல் அவள் சாக்ஷியாய் இருந்தால் தன் குரலும் வரியும் அதன் வலியும் அவளுக்கு பிடிப்படாமல் போகுமா?

ஆனால் அவள் சாக்ஷியாய் இல்லாமல் இருந்தால்…

ஏக்கத்திற்கும் குழப்பத்திற்கும் இடையில் சிக்கி கொண்டு தவித்தான். 

அவன் எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டிருந்தது.

அதுவும் நகைக்கடை திறப்புவிழாவில் ஜே சேனல் ரிப்போர்டரோடு அவனுமே போயிருந்தான். அவளை வேறொருவளாய் அவனால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. 

அவள் அலங்கார பதுமைப் போல இருந்தாலும் அவள் நடை உடை பாவனை என எல்லாம் சாக்ஷியின் சாயலையே பிரதிபலித்தது.

அதனை அவன் விழிகள் கூர்மையாக கணித்தும் கொண்டன.

அருகாமையில் செல்ல முடியாமல் அவளை தூரத்திலிருந்தே பார்த்துவிட்டு வந்து, மாயாவிடம் அந்த காட்சியை விவரித்து கொண்டிருந்தான்.

அவன் சொன்னதை கேட்பதில் அவளுக்கும் ஆர்வம் இருந்தது. 

அதே நேரத்தில் அவளை வர்ணிப்பதை ?

எந்த மனைவியால்தான் தாங்கிக் கொள்ள முடியும். 

பொறுமையிழந்தவள் நேரடியாய் அந்த எண்ணத்தை காட்டிக் கொள்ளாமல், “சாப்பிடிட்டு பொறுமையா பேசிக்கலாம் மகிழ்” என்று அவனை கட்டுப்படுத்தினாள்.

“நீ சாப்பிட்டியா மாயா?” என்று வினவ ‘அப்படியே ரொம்பதான் அக்கறை’ என்று மனதில் திட்டிவிட்டு

“நீங்க சாப்பிடுங்க… நான் அப்புறமா சாப்பிடிறேன்” என்றதும் 

“என்ன அப்புறமா? உட்காரு… சாப்பிடுவோம்… இருக்கிறதே இரண்டு பேரு… இதுல இந்த மேடம் தனியா சாப்பிடுவாங்களாம்” என்று அவளை உட்காரச் சொல்லி பணித்தான்.

“இல்ல மகிழ்… நான்” என்று தயங்கியவளை கரம் பற்றி அமர வைத்து அவனே தட்டில் பரிமாறி அவள் முன்பு வைத்தான்.

அவளுக்கோ சாப்பிட வேண்டுமென்ற எண்ணமே இல்லை. அவனின் திருப்திக்காக உணவருந்திக் கொண்டிருக்க

“ஆமா… ஆன்ட்டியும் அங்கிளும் எப்போ ஊர்ல இருந்து வருவாங்க… ” என்று மகிழ் கேட்க

“எல்லாம் அடூத்த வாரம் வந்திருவாங்க” என்றபடி அந்த உணவை விழுங்க முடியாமல் விழுங்கிக் கொண்டிருந்தாள்.

“நான் உன்கிட்ட சொல்ல மறுந்திட்டேன்… காலையில நகைக்கடையில எங்க அக்கா பையன் புகழை பார்த்தான்.. என்னம்மா வளர்ந்துட்டான் தெரியுமா? தூக்கி கொஞ்சனும்னு அவ்வளவு ஆசையா இருந்துச்சு… ஆனா கூட எங்க அண்ணா வந்திருந்தான்… அவன்கிட்ட வாய் கொடுப்பானேன்னு தள்ளியே நின்னுக்கிட்டேன்” என்று அவன் சொல்லிக் கொண்டிருப்பதை கேட்டவள்

“இவ்வளவு ஆசையை வைச்சுக்கிட்டு… எதுக்கு இந்த வீம்பும் பிடிவாதமும்…உங்க அண்ணன் கல்யாணத்தை சாக்கா வைச்சி… நாம பேசாம உங்க வீட்டுக்கு போயிட்டு வந்துடலாமா…?!” படபடவென மனதில் பட்டதை சொல்லிவிட்டாலும் அவன் கோபப்படுவானோ என பார்த்திருக்க, அவன் மூச்சை இழுத்துவிட்டு கொண்டு

“புரியாம பேசாதே மாயா… அவங்களோட சேரனும்னு நினைச்சிருந்தா நம்ம கல்யாணத்துக்கு கூப்பிடிற சாக்கில போய் பேசி இருக்க மாட்டேனா ?” அவன் குரலின் தொனியே அவன் இறங்கி வருகிறான் என்பது புரிய

அவள் அவனிடம் “கூப்பிட்டிருக்கலாம்… மகிழ்… நான் எவ்வளவு சொன்னேன்.. நீங்கதான் கேட்கல” என்றாள். 

அவன் பெருமூச்செறிந்து “மூன்னாடியே அவங்க மேல இருந்த கோபம் எனக்கு குறைஞ்சிடுச்சு… ஆனா எனக்கு ஏனோ இந்த இல்லத்தை விட்டு போக மனசில்லை.. சாக்ஷியோட நினைப்போடவே நான் இங்கே இருந்துடலாம்னு… அவங்க கூட போய் சேர்ந்து என் சாக்ஷியோட நினைப்பை மறக்கடிக்க விரும்பல” என்றான்.

மீண்டும் சாக்ஷி. அவனின் ஒவ்வொரு அணுவிலும் அவள் நிலைப்பெற்றிருக்கிறாள்.

இயலாமையோடு பொறாமைப்படவே தோன்றியது அவளுக்கு.

அவன் சாப்பிட்டு முடித்து எழுந்தவன்,

“நீ ஒரு விஷயத்தை மறந்திட்டு பேசிற மாயா” என்றான்.

அவளும் எழுந்து கை அலம்பிக் கொண்டே “என்ன ? ” என்று கேள்வி எழுப்ப,

சுவற்றில் சாய்ந்து கைகட்டி நின்றவன் அவளை பார்த்தபடி “நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது உன் கமிட்மென்ட்காகவும் யாழ் ஆன்ட்டி மாதவன் ஆங்கிளுக்காகவும்… நான் அங்கே போனா… அவங்க நம்மல கூடவே இருக்க சொல்லிட்டா… ஒரு பக்கம் நம்ம பொய்யான ரிலேஷன்ஷிப்… இன்னொரு பக்கம் வயசான காலத்தில இந்த இல்லத்தோட பொறுப்பை ஆன்ட்டியும் அங்கிளும் தனியா பார்த்துக்க வேண்டியிருக்குமே..” என்க, அவள் வியப்பாகவே அவனை பார்த்திருந்தாள்.

அவனே மேலும் “என் பேஃமிலியை பார்த்துக்க எங்க அண்ணன் இருக்கான்… ஆனா இங்க யாரு இருக்கா… அதுவும் இல்லாம இந்த இல்லத்தில வளரவங்களுக்கு எல்லா விதமான சலுகைகளும் கிடைக்கனும்… உன்னோட ஸைட் ஸேவர் ஆர்கனைஷன் எந்த காரணத்தை கொண்டும் தடைப்பட்டு நின்றுவிடவே கூடாது மாயா… என் பேஃமிலியைவிட இதெல்லாம்தான் எனக்கு முக்கியம்” என்றவனை நெகிழிச்சியோடு பார்த்தாள்.

யாருக்காகவும் எதற்காகவும் அவனை விட்டுக் கொடுத்திரவே கூடாதென்பதில் அவள் மனம் தீர்க்கமானது.

அவனை ஆழமாய் பார்த்தவள் “இதே போல் ஸப்போர்ட்டிவ்வா எப்பவும் இருப்பீங்களா மகிழ் ?!” என்று அவள் நெகிழ்வோடு வினவ,

“எப்பவும் இருப்பேன் மாயா… டில் மை டெத்…” என்று அவன் சொன்ன மறுகணம் அவனை இறுக்கமாய் கட்டிக் கொண்டாள்.

“மாயா… என்னாச்சு?” என்று அவன் கேட்கும் போதே அவள் உடைந்து அழ, அவளை விலக்கி விட முடியாமல் தவித்தான்.

அவன் விலக்கிவிடாத போது அவளாக அவனின் ஸ்பரிசத்தை விட்டு பிரிய அவளுக்கு மனம்வரவில்லை.

மகிழுக்கு அந்த கணம் மாயாவின் மனநிலை குறித்து சந்தேகம் எழுந்தது. அதே நேரத்தில் அவளே நேரடியாய் வெளிப்படுத்தாமல் தான் அதனை கேட்டறிவதிலும் அவனுக்குள் தயக்கம். 

அவளின் நட்பை தான் தவறாக பார்த்துவிட்டதாக எண்ணிக் கொண்டால்….

அவளின் கண்ணீர் அவன் மனதை பிசைந்தது. 

கட்டுப்படுத்த முடியாமல் பொங்கிய உணர்ச்சிகளின் பிண்ணனியில் அவள் கொண்டிருப்பது என்ன என்பதை அவன் ஆராய முற்படாமல் அப்போதைக்கு அவளை ஆறுதல்படுத்த அவனும் அவளை அணைத்துக் கொண்டான்.

Comments Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!