Naan Aval Illai -23
Naan Aval Illai -23
பொய்மையும் வாய்மையிடத்து
டேவிட் அந்த பெண் மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்தான்.
“ஏன் இவ்வளவு அரகன்ஸா நடந்துக்கிறாங்க? அவங்களுக்கு என்ன பிரச்சனை ? ” என்று அந்த பெண் மருத்துவர் கேட்க டேவிட் பதில் சொல்ல முடியாமல் விழித்தான்.
அன்று அவள் சாக்ஷி. இன்றோ அவள் பிரபலமான மாடல் ஜென்னித்தா. அவளை பற்றிய விஷயங்கள் கசிந்தால் அது காட்டுத்தீப் போல் பரவவிடுமே என்ற எண்ணத்தில் அழுத்தமாய் மௌனம் காத்தான்.
அவன் எண்ணத்தை கணித்த அந்த மருத்துவர் மேலே எதுவும் கேட்காமல், “சரி அது போகட்டும்… அவங்க ஏதாவது சைக்காட்டிரிஸ்ட் கிட்ட டீர்ட்மன்ட் எடுத்துட்டு இருக்காங்களா ?!” என்று வினவ,
“நோ டாக்டர்.. அப்படி எல்லாம் இல்லை…” என்று திட்டவட்டமாய் மறுத்தான். அவன் சொல்லும் எதுவும் அவளின் இன்றைய பெயரை பாதிக்க கூடும்.
டாக்டர் ஆழமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு “ஒகே டேவிட்… நான் அவங்களுக்கு போட்டிருக்கிற இன்ஜெக்ஷனால அவங்க நல்லா தூங்குவாங்க… எழுந்த பிறகு நார்மல் ஸ்டேட்டுக்கு வந்திடுவாங்க” என்று உரைத்துவிட்டு மருந்து சீட்டில் சில மருந்துகளை அவனிடம் எழுதி கொடுத்துவிட்டு அகன்றுவிட்டார்.
இவர்களின் சம்பாஷணையை தள்ளி நின்று பார்த்திருந்த ரூபாவோ அதிர்ச்சியில் இருந்து மீளாமல் நின்றிருந்தாள்.
அந்த வீடு இந்த நொடி நிசப்தமாய் இருந்தாலும் சற்று முன்பு ஜென்னியின் ஆர்பாட்டத்தாலும் கதறாலும் அல்லோலகல்லோலப்பட்டு போனது.
ரூபாவால் ஜென்னியின் செய்கைகளை நம்பவே முடியவில்லை. எத்தனை பெரிய விஷயங்களையும் அசாதரணமாய் கையாளும் ஜென்னியா அது?
அவள் யோசனையோடு நின்றிருக்க,
டேவிட் அவளாக கேள்வி எழுப்பும் முன்னதாக முந்திக் கொண்டு “நீங்க கவலை படாதீங்க ரூபா… ஜென்னி எப்பையாச்சும் ரொம்ப ஸ்ட்டெர்ஸாகிட்டா இப்படி நடந்துப்பா… மத்தபடி ஒண்ணுமில்லை” என்று சமாளித்தான்.
ரூபா அவனிடம் “நீங்க வேணா புறப்படுங்க… நான் ஜென்னியை கூடவே இருந்து பார்த்துக்கிறேன்…” என்றவளிடம் தலையசைத்து மறுத்தவன்,
“வேண்டாம் ரூபா… ஐ வில் டேக் கேர்
ஆஃப் ஹர்… ” என்று சொல்ல அவள் அவனை வியப்பாய் பார்த்தாள்.
அவர்கள் உறவு வெறும் நட்புதானா என்ற சந்தேகப் பார்வை பார்த்தாள் ரூபா.
அவளின் அந்த பார்வை டேவிடுக்கும் பிடிப்படாமல் இல்லை.
ஆனால் அது குறித்தெல்லாம் அவன் கவலை கொள்ளவில்லை.
அன்று நடந்த விபத்திற்கு பிறகு அவளின் அனைத்திருக்கும் பொறுப்பாக அவனே நிற்க நேர்ந்தது.
நாளடைவில் அந்த பொறுப்பு அவளின் மீதான உரிமையாக மாறிப் போனதை அவனே உணர்ந்திருக்கவில்லை.
ஜென்னியின் அறைக்குள் டேவிட் மெதுவாக நுழைய, அவள் அமைதியே உருவாய் உறங்கிக் கொண்டிருந்தாள். இல்லை, மயக்கநிலையில் இருந்தாள்.
ஆனால் சற்று முன்போ அவளை கட்டுபடுத்த முடியாமல் எல்லோருமே திணறி போக வேண்டியதாய் போனது.
அவளுக்கு நடந்தேறிய அந்த சம்பவம் அந்தளவுக்கான வலியும் ஏமாற்றத்தையும் அவளுக்குள் விதைத்திருந்தது.
அந்த நினைவிற்குள் தன்னையறியாமல் என்றாவது அவள் செல்லும் போது இப்படி உடைந்து கத்துவது அவ்வப்போது அரங்கேறிய ஒன்றும் கூட.
கடந்து இரண்டு வருடங்களாக அவளிடம் பெரும் மாற்றம் ஏற்பட்டிருந்தது.
ஆனால் மீண்டும் அத்தகைய உணர்ச்சிகளுக்குள் சிக்குண்ட ஜென்னியினை பார்க்க நேர்ந்தது, அவனுக்கே அதிர்ச்சிகரமாய் இருந்தது.
நேற்றிரவு அவளுடன் நடந்த வாக்குவாதத்தில் கோபித்து கொண்டு சென்றான். ஆனால் அதற்கு பிறகு அவன் மனம் அவளை பார்க்க எந்தளவுக்கு துடித்து போனது என்று அவனுக்கு மட்டுமே தெரியும். எந்த வேலையிலும் ஈடுபட முடியாமல் அவள் மட்டுமே விழிகளில் நின்றாள்.
அதுதான் காதலோ? !
அவனுக்கு தெரியவில்லை. கேட்டறிந்து கொள்ள நெருங்கிய நண்பர்களும் இல்லை.
ஆதலால் இந்த உணர்வை அவளிடமே பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றே வந்தான்.
அப்போது அவன் கார் வெளிவாயிற்குள் இருந்த நுழைந்த கணத்தில் ராகவின் கார் வெளியேறியதை பார்க்க நேர்ந்தது.
இவன் எதற்கு இங்கே வர வேண்டும் என்ற கேள்வி எழ, எதிரே ஜென்னி நிற்பதை பார்த்து காரை நிறுத்தினான்.
முகம் துவண்டு அதிர்ச்சியில் நின்றிருந்தவளை அச்சத்தோடு பார்த்தவன், அவளருகாமையில் வந்து “ஜென்னி” என்று அழைக்க அவள் மூச்சுவிட முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.
“ஜென்னி என்னாச்சு?” என்று பதறும் போதே அவள் மயக்க நிலையில் அப்படியே தரையில் சரிய டேவிட் அவளை தாங்கி கொண்டான்.
அவளை பதட்டத்தோடு தன் கரத்தில் தூக்கிவந்து வீட்டிற்குள் நுழைய ரூபாவும் பதறிப் போனாள்.
அவளை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு ரூபாவை தண்ணி எடூத்து வரச் சொல்லி பணித்தான்.
ஜென்னியின் முகத்தில் தண்ணீர் தெளிக்க விழிகளை சுருக்கி எழுந்தாள்.
எழுந்தவுடன் அவள் முற்றிலும் வேறு பரிமாணத்திற்கு மாறியிருந்தாள்.
அவள் டேவிடை கவனிக்காமல் சத்தம் போட ஆரம்பித்தாள். ரௌத்திரமாய் மாறி பக்கத்திலிருந்த பொருட்களை எல்லாம் தூக்கியெறிந்து “போ” என்று கத்தியவள், “என்னை விடுங்க” என்று தொடர்ச்சியாய் கத்த ஆரம்பித்தாள்.
அவளை கட்டுக்குள் கொண்டு வர முடியாத சூழ்நிலையில் மருத்துவருக்கு அழைக்க, அவர்களும் அவளை அமைதியடைய செய்ய ரொம்பவும் முயற்சித்தனர்.
இறுதியாய் டேவிட் அவளை இறுக்கமாய் பிடித்துக் கொள்ள, அவர் மயக்க ஊசி போட்டு அவளை கட்டுக்கொள்ள கொண்டுவந்தார்.
அவள் தன்னிலை மறந்து சரிந்தாள்.
டேவிடின் உள்ளம் கொதித்து கொண்டிருந்தது.
அவளின் இந்த நிலைக்கு காரணமானவன் யாரென்று தெரியாமல் இருப்பதுதான் அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இன்று அவனுக்கு எழுந்த கோபம் அல்ல அது.
ஆரம்பத்திலிருந்தே அவளிடம் நடந்த நிகழ்வை பற்றி விளக்கம் கேட்க முனையும் போதெல்லாம் அவள் உணர்ச்சிவசப்படுவதும் மயங்கிவிழுவதமாய் இருந்ததால் டாக்டர் அந்த விஷயத்தை பற்றி இனி எப்போதும் அவளிடம் பேச வேண்டாம் என சொல்லியிருந்தார்.
ஆனால் இன்று யார் அவளிடம் இது பற்றி பேசியிருப்பார். எதனால் அந்த சம்பவம் அவளுக்கு நினைவுக்கு வந்திருக்கும்.
ராகவ் வந்து சென்றதை நினைவுப்படுத்தியவன் அவன் எதாவது பேசியிருப்பானோ என்று சந்தேகத்தபடி குறுக்கும் நெடுக்கவும் நடந்திருந்தவன் அவளின் முகத்தை கவனித்தான்.
அவனையும் அறியாமல் மற்ற சிந்தனைகளில் இருந்து விடுபட அவள் அருகில் இருக்கையை நகர்த்தி போட்டு அமர்ந்தான்.
முதல் முறை அவள் முகத்தை பார்க்கும் போது கூட இப்படிதானே பேச்சுமூச்சின்றி கிடந்தாள்.
ஆனால் அன்று அவள் விழிகள் அவளை பார்த்ததிற்கும் இன்று அவளை பார்ப்பதற்கும் அத்தனை வித்தியாசம்.
அவள் தன் வாழ்க்கை முழுதும் வரவேண்டுமென்ற எதிர்பார்ப்பு.
காதல் என்ற உணர்வு இப்படிதான் இருக்குமோ?
அன்று மருத்துவமனையில் அவள் தானாக அவன் கரத்தை பற்றிக் கொள்ள அவனுமே ஆதரவாய் பற்றி கொண்டதை இப்போது எண்ணிக் கொண்டான். ஆனால் இன்று உறவோடும் உரிமையோடும் பற்றிக் கொள்ள தோன்றியது.
மயக்கத்தில் இருந்தவளின் கரத்தை பிடித்துக் கொண்டு ‘ஜென்னி… வில்யூ மேரி மீ” என்று கேட்டான்.
அவன் சொன்னதை அவள் கேட்டாளோ ?
ஆனால் அவளும் ஏதோ உரைத்தாள். அந்த ஆழ்ந்த மயக்க நிலையிலும் அவள் “மகிழ்” என்று முணுமுணுக்க அது அவன் காதில் விழுந்து நெருப்பை தொட்ட குழந்தை போல அவள் கரத்தை விட்டு எழுந்துக் கொண்டான்.
ஜென்னியாய் வாழ்ந்தாலும் அவள் ஆழ் மனதில் சாக்ஷியாகதான் வாழ்கிறாள். அதுவும் மகிழின் மீதான அதே ஆழமான காதலோடு.
‘யூ ஸ்டில் இன் லவ் வித் மகிழ்?!’ என்று கேட்டு அவளை ஏக்கமாய் பார்க்க, விழி கலங்கி கண்ணீர் அவன் கன்னத்தை தொட்டுச் சென்றது.
அந்த கண்ணீர் அவனின் காதலுக்காக அல்ல. அவளின் காதலுக்காக.
மகிழோடு அவளை சேரவிடாமல் போனதற்கு தான்தான் காரணம் என்ற குற்றவுணர்வில் வெளிவந்த கண்ணீர்.
அன்று மட்டும் தான் குடித்துவிட்டு காரை ஓட்டியிருக்காமல் இருந்திருந்தால் இப்படி எல்லாம் நேர்ந்திருக்காது. இந்நேரம் மகிழும் சாக்ஷியும் கணவன் மனைவியாக இருந்திருப்பார்கள்.
எல்லாவற்றையும் தான்தான் கெடுத்துவிட்டோம் என்று தலையில் அடித்து மனதிற்குள்ளேயே அதை எண்ணி மருகலானான்.
அன்று சாக்ஷியை மருத்துவமனையில் இருந்து விட்டு வந்த பின் அவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என கேட்பதற்காகவே தன் தந்தையின் அறைக்கு சென்றான்.
அங்கே அவரோ அவன் எண்ணத்திற்கு முற்றிலும் நேர்மறையாய் கைப்பேசியில் மும்முரமாய் பேசி கொண்டிருந்தார்.
“அந்த பொண்ணு இனிமே பிழைக்க மாட்டா… அவ செத்தாலும் நமக்கு பிரச்சனைதான்… போஸ்ட்மார்ட்டம் அது இதுன்னு போனா வம்பு… அவளுக்கு என்ன நடந்ததுன்னே தெரியாத மாதிரி பாடியை சிதைச்சிருங்க”
“…….”
“ப்ச்… அவளை டிஸ்போஸ் பன்னா கூட அது கேஸா மாறும்… அந்த ரிஸ்கே வேண்டாம்…”
“…….”
“அடுத்த முக்கியமான விஷயம்… எந்த சீசிடிவி புட்டேஜ்லயும் என் சன் டேவிட் கார் தெரிய கூடாது… அந்த பொண்ணு ஏதாவது லாரி ஆக்ஸிடென்ட்ல செத்த மாதிரியும்… ஸ்பாட் டெடுன்னு நீயூஸ் போடுங்க… ஹாஸ்பெட்டில டேவிட் அவளை சேர்த்ததுக்கான ப்ரூப் கூட இருக்க கூடாது” என்று பேசிக் கொண்டிருப்பதை கேட்டு அதிர்ந்தவன், அவரிடம் இது பற்றி பேசவோ வாக்குவாதம் புரிவதோ உபயோகமில்லை என்று தெளிந்தான்.
தான் என்ன செய்ய வேண்டுமென சிந்தித்தவன், அந்த கணமே தன் தந்தை அறியாமல் பின் வாசல் வழியாக தோட்டத்தை அடைந்து மதில் மேல் ஏறி குதித்தான்.
அவன் மனமெல்லாம் ‘ஐ வான்ட் டூ லிவ்’ என்று திடமாய் உயிரை பிடித்துக் கொண்டிருந்த அந்த பெண்ணை மட்டுமே மனதில் நிறுத்திக் கொண்டது.
தன் தந்தை நிச்சயம் அவள் உயிர் பிழைப்பதற்கு விடமாட்டார். கொன்றுவிடுவார். அதற்கு தானே முதல் மூல காரணமாய் அமைந்துவிடுவோம்.
அப்படி நடக்கவிடக் கூடாது.
இப்போதைக்கான அவனுடைய ஓரே நம்பிக்கை இறைவன் மட்டுமே.
அவரின் துணை இருந்தால் போதும்.
அந்த பெண்ணின் உயிரை காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையோடு, ஒரு ஆட்டோ பிடித்து
மருத்துவமனையை அடைந்தவன், கார் பார்க்கிங்ல் இன்ஸ்பெக்டரும் அவன் தந்தையின் காரியதரிசி ராஜனும் பேசிக் கொண்டிருந்ததை பார்க்காதது போல் உள்ளே நுழைந்தான்.
அவளுக்கு எதுவும் நேர்ந்திருக்க கூடாதே என்ற எண்ணத்தோடு அவள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு செல்ல, வெளியில் நின்றே அவளுக்கு செய்ற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்ததை பார்த்தான்.
இன்னும் அவள் உயிரை ஏதோ ஒன்று பிடித்து வைத்திருக்கிறது என அதிசயத்தான்.
பின்னர் யார் கவனத்தையும் ஈர்க்காமல் மருத்துவரின் அறை நோக்கி விரைந்தான்.
அந்த சமயம் அவளுக்கு சிகிச்சை அளித்த பெண் மருத்துவர் காரசாரமாய் இன்னொரு மருத்துவரோடு பேசிக் கொண்டிருந்தார்.
“என்ன சரவணன் இதெல்லாம் ? நம்ம டாக்டர் தொழில் பார்க்கிறோமா இல்லை அடியாள் வேலை பார்க்கிறோமா?!” கோபமாய் வெடித்தது அவர் வார்த்தைகள்.
“வேற வழியில்லை மேடம்… டீன் சொன்னதைதான் சொன்னேன்… இந்த நீயூஸ் வெளியே தெரிய கூடாது… அப்புறம் போலீஸ் அது இதுன்னு கேஸாயிடும்… செக்யூரிட்டி ரீஸன் பத்தி நிறைய கேள்வி வரும்”
இந்த சம்பாஷணை நிகழ்ந்து கொண்டிருக்கும் போதுதான் டேவிட் கதவை தட்டி அனுமதி கேட்டு நுழைந்தான்.
அவனை பார்த்ததும் அந்த பெண் மருத்துவர் அவனை அடையாளம் கண்டுகொண்டார்.
“டாக்டர்… நான் கொஞ்சம் பர்ஸனலா உங்ககிட்ட பேசனும்” என்க, அவர் அவனை குழப்பமாய் பார்த்துவிட்டு அவருடன் இருந்த இன்னொரு மருத்துவரிடம் “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சரவணன்… பேசுவோம்” என்றதும் அவன் அறையை விட்டு வெளியேறினான்.
“என்ன விஷயம்?” என்று அவர் டேவிடை கேட்க
“அந்த பொண்ணு உயிர் க்யூராயிடுவாளா டாக்டர் ?!” அத்தனை ஆர்வமாய் விசாரித்தான்.
அவர் உடனே தன் டேபிள் மேலிருந்த ரிப்போர்ட்ஸை புரட்டியபடி “உங்க பேர் என்ன சொன்னிங்க?” என்று கேட்க
“டேவிட்” என்றான்.
“சேன்ஸ் இருக்கு டேவிட்” என்றதும் அவன் வியப்பாய் பார்க்க,
“எனக்கே ஆச்சர்யமாதான் இருக்கு… ஏதோ ஒரு ஹோப்ல அந்த பொண்ணு அவ உயிரை கெட்டியாய் பிடிச்சிட்டிருக்கா? ஆனாலும் ஸீர்யஸ் கன்டிஷன்தான்… ப்ரெயின்ல ஏதாவது ப்ளீடிங் இருக்கோம்னு தோணுது… ஸ்கேன் பண்ணி பார்த்தா தெரிஞ்சிரும்” என்று உரைத்துக் கொண்டிருக்கும் போதே,
“நீங்க எனக்கு ஒரு உதவி செய்யனும் டாக்டர்… ” என்று ஆரம்பித்தவன் தன் தந்தையின் திட்டத்தை குறித்து சொல்ல அவர் சீற்றத்தோடு எழுந்து கொண்டார்.
அவன் மேலும் “அந்த பொண்ணை காப்பாத்த நீங்கதான் ஹெல்ப் பண்ணனும்” என்றபடி எழுந்து நின்றான்.
“என்னால எதுவும் பண்ண முடியாது மிஸ்டர்… ஏற்கனவே எனக்கே தலைக்கு மேல பிரச்சனை…” என்க,
“டாக்டர் நீங்க அப்படி சொல்ல கூடாது… அந்த பெண் உயிர் பிழைச்சாலும் அவளை விடமாட்டாங்க”
“சாரி… என்னால ஒண்ணு பண்ண முடியாது… அவங்க அந்த பொண்ணை அனுப்பி சொல்லி கேட்டா நான் டிஸ்சார்ஜ் பண்ணி அனுப்பிடுவான்.. தேவையில்லாத பிரச்சனை எல்லாம் என்னால இழுத்து போட்டுக்க முடியாது” என்றவர் வாட்ச்சை பார்த்துவிட்டு “இன்னும் கொஞ்ச நேரத்தில என் ட்யூட்டி டைம் முடிஞ்சிரும்” என்று எழுந்து வெளியேற பார்த்தவரை வழிமறித்துக் கொண்டான்.
“வழி விடுங்க மிஸ்டர்”
அவன் உடனடியாக மண்டியிட்டு கரம் கோர்த்து “ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் டாக்டர்… நீங்க மட்டும்தான் இப்போ எனக்கு உதவ முடியும்… அந்த பெண்ணோட உயிரை காப்பாத்தனும்…” என்று கெஞ்சியவனை பார்த்து அவரும் கரைந்து போனார்.
அவனின் மனிதநேயமும் பண்பும் அவரின் பிடிவாதத்தை அசைத்து பார்த்தது.
“ப்ளீஸ் எழுந்திரீங்க” என்று சொல்லிவிட்டு யோசனை குறியோடு அவனை ஆழ பார்த்து “இப்ப என்ன பண்ணலாம்னு சொல்றீங்க… அந்த பொண்ணுக்கு பதிலா வேற ஒரு உடம்பை கொடுக்கனுமா? இதெல்லாம் நடக்கிற காரியமா ?… இதே வயசில இறந்த போன பொண்ணுக்கு நான் எங்க போவேன்” என்று சொல்ல அவனுக்குமே அதற்கான வழி பிடிபடவில்லை.
இருவருமே வெகு நேரம் யோசனையில் ஆழ்ந்தார். ஒருவித அழுத்தமான அமைதி அந்த இடத்தை ஆளுமை செய்தது.
அந்த பெண் மருத்துவர் நிமிர்ந்து அமர்ந்தபடி “டேவிட் ஒரு வழி இருக்கு” என்றார்.
அவன் ஆர்வமாய் பார்க்க “மார்னிங்… இந்த வயசிலதான் ஒரு பொண்ணு மனநலகாப்பகத்தில இருந்து தவறி விழுந்து ஸ்ரீயஸ் கன்டிஷன்ல சேர்த்தாங்க… எவ்வளவோ ட்ரீட்மன்ட் கொடுத்தும் அந்த பெண்ணை காப்பாத்த முடியல… அந்த பொண்ணுக்கு ரீலேஷன்ஸ் யாரும் இல்ல… இந்த ஆக்ஸிடென்ட் பத்தி தெரிஞ்சா போலீஸ் கேஸாகி மனநலகாப்பாகத்தோடு பாதுகாப்பு மெய்ன்டனன்ஸ் பத்தி கேள்வி எழும். அந்த மனநலகாப்பாகமும் இதே ஹாஸ்பெட்டலோடதுதான்… ஸோ இந்த பிரச்சனை வெளியே தெரியாம அந்த பெண்ணோட பாடியை டிஸ்போஸ் பண்ணிடலாம்னு இப்பதான் வந்து சொல்லிட்டு போனாங்க.. பேசாம அந்த பொண்ணை மாத்திட்டா.. ஆனா. அதுல ஒரு சிக்கல் இருக்கு.. அந்த பொண்ணோட முகம்” என்று அவர் குழப்பமாய் அவனை பார்க்க
“இல்ல டாக்டர்… அவ்வளவு கீனா அந்த பொண்ணோட முகத்தை அவங்க பார்த்திருக்க முடியாது.. வேற பொண்ணை மாத்தி கொடுத்தாலும் நிச்சயம் அடையாளம் தெரியாது”
“கரெக்ட்தான்… அந்த பொண்ணோட தலையில சுத்தி பேன்டேஜ் கட்டி முகம் ரொம்ப தெரியாம கவர் பண்ணிடிறேன்…” என்றவள் அவசரமாய் தன் பர்ஸ் துழாவி ஒரு கார்டை எடுத்து நீட்டினார்.
“இது என் தோழியோட ஹாஸ்பெட்ல் கார்ட்… பக்கத்திலதான் இருக்கு… நான் அவங்ககிட்ட பேசிக்கிறேன்… நீங்க அங்கே இந்த பொண்ணை அட்மிட் பண்ணுங்க… ஆனா ஒரு விஷயம்” என்று நிறுத்தி அவன் முகத்தை கூர்மையாய் பார்கக
“சொல்லுங்க டாக்டர்”
“அது… நீங்க அந்த பொண்ணை யாருன்னு தெரியாதுன்னு சொல்ல வேண்டாம்… அது ரொம்ப ரிஸ்க்… ஸோ உங்க வொய்ஃப்னு சொல்லி அட்மிட் பண்ணிடுங்க”
“அதெப்படி டாக்டர்” அதிர்ச்சியோஞீ கேட்டான்.
“அந்த பொண்ணு குணமாகிறதுதான் இப்ப முக்கியம் டேவிட… ட்ரீட்மன்ட் நடக்கனும்… எந்த கேள்வி எழாம போலீஸுக்கு தெரியாம பண்ணணும்னா இதான் ஒரே வழி…” என்றார்.
அவனும் அவர் சொல்வதின் நிதர்சனம் உணர்ந்து சம்மதிக்க வேண்டியதாய் போனது.
பணமும் காசும் செய்ய முடியாததை அன்பால் செய்துவிட முடியும் என்ற டேவிடின் அந்த நம்பிக்கை பொய்யாய் போகவில்லை.
அந்த பெண் மருத்துவர் சொன்னது போலவே அந்த மனநலம் சரியில்லாத பெண்ணை ஒப்படைத்து சாக்ஷியின் அணிந்திருந்த வாட்ச் துணி டாலர் முதலியவற்றையும் கொடுத்துவிட்டார்.
சூழ்நிலை சாதகமாயிருந்த அதே நேரம் பாதகமாகவும் அமைந்தது. அந்த மனநிலை சரியில்லாத பெண்ணின் உடலை வைத்து ஒரு கோர விபத்து நிகழ்ந்ததாக போலியாய் ஒரு பிம்பத்தை உருவாக்கினர்.
அந்த உடல் மொத்தமாக சிதைந்து போனது.
சாக்ஷியை காணவில்லை என்று யாழ்முகை கொடுத்த புகாரின் விசாரணையில் அந்த சிதைந்த உடலை சாக்ஷி என நம்ப வேண்டியதாய் போயிற்று.
அதுதான் பெரிய துரதிஷ்டம்.
எல்லாம் விதியின் வசம் நிகழ்ந்து போனது.
டேவிடும் சாக்ஷியை மீட்டு வேறு மருத்துவமனையில் சேர்க்,
“பேஷண்ட் பெயர் என்ன ?” என்று கேள்வி கேட்க அப்போதைக்கு அவனுக்கு தோன்றிய பெயர்தான் ஜென்னித்தா.
“உங்க பேர் என்ன ? நீங்க என்ன ரீலேஷன் அவங்களுக்கு” என்று கேட்ட போது “என் பேர் டேவிட்… நான் அவங்களுக்கு ஹஸ்பெண்ட் ” என்ற அவன் மனம் விரும்பாத பொய்யை வேறுவழியில்லாமல் சொல்லி வைத்தான்.
‘பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.’
ஒரு பொய் சொல்வதால் குற்றமற்ற நன்மை ஏற்படுமெனில் அந்த பொய் உரைப்பதில் தவறில்லை என்ற எண்ணத்தினாலயே அன்று அப்படி ஒரு பொய்யை சொன்னான்.
ஆனால் அவன் அவளுக்கு வைத்த பொய்யான பெயர் உண்மையாய் மாறிப் போகும் என்றும், அந்த உண்மை அவள் வாழ்க்கையையும் காதலையும் பொய்யாய் மாற்றிவிடும் என்று எண்ணி செய்தானா என்ன?
எல்லாமே சூழ்நிலை காரணமாய் நடந்தேறியது.
ஆனால் அவளோ இன்னும் அந்த முடிந்து போன காதலை மனதில் சுமந்திருக்கிறாளே !