naan aval illai -24

naan aval illai -24

அமிலமாய் தகித்தது

அது ஜே சேனல் நெட்வொர்க்கின் பெரிய அரங்கம் போன்ற ஓர் அறை. (Conference hall)

அந்த அறையில் மத்தியில் இருந்த நீளவட்ட மேஜை சுற்றி அந்த சேனலின் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் சிலர் அமர்ந்து விவாதம் நடத்திக் கொண்டிருக்க, அவர்களில் மகிழும் இருந்தான். 

அவர்களின் விவாதமோ நட்சத்திரங்களை வைத்து நடத்தப் போகும் பிரமாண்டமான கலைவிழாவை பற்றியது. 

ஆனால் மகிழின் நினைப்பெல்லாம் வேறெங்கோ இருந்தது. அவன் அந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாமல், ஆர்வமின்மையோடே அமர்ந்திருந்தான். அதை யாரும் கவனித்ததாகவும் தெரியவில்லை.

மகிழின் நினைப்பு முழுக்க மாயாவை பற்றிதான். அவள் நடந்து கொள்ளும் முறையை வைத்து பார்த்தால் அவள் தன்னை காதலிக்கிறாள் என்பது புரிய, மனம் ஏனோ அதை ஏற்றுக் கொள்ள மறுத்தது.

சாக்ஷியை தவிர்த்து வேறொரு பெண்ணை நினைத்துப் பார்க்க முடியுமா? !

அது ஒரு புறமெனில் மாயாவை மனைவியாய் பார்க்க முடியுமா என்ற கேள்வி?

எது எப்படியானாலும் அவளும் தன் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தவள். தன் துயர் துடைத்தவள். 

அப்படி இருக்க அவளின் ஆசையை நிராகரிப்பது நியாயமாகுமா ? ஆனால் காதல் என்பது நியாயம் அநியாயம் இவற்றிற்கெல்லாம் அப்பாற்ப்பட்டது.

நன்றிக்கடனுக்காக காதல் செய்ய முடியுமா?!

அவனின் மனதிற்குள் பெரும் போராட்டமே நிகழ்ந்து கொண்டிருக்க, “மகிழ் என்னாச்சு… ஏன் எதுவும் பேசாம அமைதியா இருக்கீங்க…?” என்று ஒருவர் கேட்க,

அந்த கணம் இயல்பு நிலைக்கு திரும்பியவன், “நத்திங்… நேத்து நைட் முழுக்க ஷுட்ல இருந்ததால… டிரவுஸினஸ்ஸா இருக்கு” என்றான்.

“மீடியால வொர்க் பண்றவனுக்கு நைட் & டே ஏதுப்பா ? ஷுட்டிங் லைட்லயே இருந்து… பகலும் இரவும் வித்தியாசமே இல்லமா போயிடுச்சு” என்று ஒருவர் சொல்ல, எல்லோரும் சிரித்து அவர் சொன்னதை சரியென்று ஆமோதித்தனர்.

மகிழும் அவர்களோடு புன்னகையித்தாலும், அவன் மனநிலை அவர்களோடு ஒன்றிப் போகவில்லை.

அங்கே தலைமையாய் இருந்த ஒருவர் மகிழை பார்த்து, “இப்பவே இப்படி சோர்ந்து போனா எப்படி? நீங்கதானே இந்த ப்ரோக்ரமுக்கு காம்பையிர்ங் பண்ண போறீங்க… இன்னும் நிறைய நிறைய வொர்க் இருக்கு மகிழ்” என்க, அவன் ஆச்சர்யத்தோடும் அதிர்ச்சியோடும் பார்த்தான்.

எல்லோருமே அவர் சொன்னதை கேட்டு மகிழின் கையை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

அவனோ தெளிவற்ற நிலையில் இருந்தான். 

இத்தனை பெரிய கலைவிழாவில் தான் தொகுப்பாளரா? 

குறுகிய காலத்தில் அமைந்த பெரிய வாய்ப்பு.

அவனால் முழுமையாக சந்தோஷம் கொள்ள முடியவில்லை. ஒருவித நம்பிக்கையமின்மை அவனை ஆட்கொண்டது. மனம் நிம்மதியற்ற நிலையில் இத்தகைய பெரிய பொறுப்பை ஏற்று முழு முனைப்போடு செய்ய முடியுமா என்ற சந்தேகம்தான் அவனுக்கு.

இங்கே விவாதம் நிகழ்ந்து கொண்டிருந்த அதே சமயத்தில், அந்த அலுவலகத்தின் பிரமாண்டமான முகப்பில் ஜென்னி நுழைந்தாள்.

அவளின் உடலுக்கு கச்சிதமான நீளமான ஆரஞ்ச் ஸ்கர்ட் அணிந்து உயரமான காலணியோடு வந்தவள் ரிசப்ஷ்னிஸ்ட்டிடம்,

“ஐம் ஜென்னித்தா… உங்க எம்.டி யை மீட் பண்ணனும்” என்றாள்.

“ஸார் இப்பதான் கால் பண்ணாரு… நீங்க மேல டென்த் ப்ளோர் போங்க மேடம்” என்று அந்த ரிசப்ஷன்ஸிட் ஜென்னி செல்வதற்கான வழியை காட்டினார். 

ஜென்னி பத்தாவது மாடியில் இருந்த டேவிட் தாமஸ் எம்.டி என்ற கதவில் இருந்த தங்கநிறத்து பலகையை பார்த்துவிட்டு அனுமதி கேட்டு அறைக்குள் நுழைந்தார். 

டேவிடிற்கு அவளை பார்த்ததும் முகம் பிரகாசிக்க, ஜென்னியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

அதனை அவன் பார்வை குறித்து கொண்டாலும் கவனியாதவன் போல், “என்ன ஜென்னி ? ஆபிஸுக்கு வந்திருக்க, அதுவும் என்ட்ரன்ஸ்ல வந்துட்டு கால் பண்ற… பார்க்கனுன்னு சொல்லி இருந்தா நானே வந்திருப்பேன் இல்ல” என்றான். 

அவள் பதில் பேசாமல் அவனை முறைத்தபடி நின்றிருந்தாள்.

அவன் புரியாத பார்வையோடு, “என்னாச்சு ஜென்னி?” என்றவன் “சரி முதல்ல உட்காரு பேசுவோம்” என்றபடி தான் புரட்டிக் கொண்டிருந்த பைஃலை ஓரம் வைத்தான்.

அவள் அமர்ந்து கொள்ளாமல் கூர்மையான பார்வையோடு “நைட் வீட்டுக்கு வந்தீங்களா டேவிட்?” என்று கேட்டாள்.

இந்த கேள்விக்கு டேவிட் என்ன பதில் சொல்வதென்று புரியாமல் திகைத்தான்.

காலையில் அவள் மயக்கத்திலிருக்கும் போதே வீட்டிலிருந்து புறப்பட்டு வந்தவன், ரூபாவிடம் இரவு நடந்தவற்றை பற்றி பேச வேண்டாம் என்று அதிகாரமாய் 
சொல்லியிருந்தான்.

ஜென்னி அவன் முகத்தை கூர்ந்து பார்த்தபடி “ஏன் டேவிட் ? ! நான் நைட் ரொம்ப அரகென்ட்டா நடந்துக்கிட்டேனா? !” என்று கேட்டாள்.

“அப்படியெல்லாம் இல்ல ஜென்னி” என்று அவன் மறுக்க,

“பொய் சொல்லாதீங்க” என்றவள் கோபமாய் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

அவன் தன் இருக்கையிலிருந்து எழுந்து அவள் முன் வந்தவன் “இதெல்லாம் உனக்கு யார் சொன்னது ?” என்று வினவ,

“ஏன்? எனக்கு சுயமா புத்தி இல்லயா ?! எல்லா எனக்கே தெரியும்”

“ப்ச்… அதை பத்தி விடு ஜென்னி… நீ மும்பைக்கு எப்போ கிளம்பிற ?!” என்று அவன் பேச்சை மாற்ற

“நான் ஏன் மும்பைக்கு கிளம்பனும்?!” என்று கேட்டு கோபமாய் பார்த்தாள். 

“சொல் பேச்சு கேளு ஜென்னி… இங்க இருக்கிறதினால உனக்கு தேவையில்லாத டென்ஷன்தான்… அதுவும் இல்லாம நீங்க இங்க இருக்க வேண்டிய அவசியமென்ன? இங்க உனக்கு என்ன கமிட்மென்ட் இருக்கு” என்றான்.

“இருக்கு டேவிட்… நான் மிஸ்டர். சையத்தோட படத்தில கமிட்டாகலாம்னு இருக்கேன்”

அதிர்ந்து பார்த்தவன், “ஜென்னி… ஆர் யூ ஸ்ரீய்ஸ்” என்று கேட்டு சந்தேகமாய் பார்க்க

“யா ஐம்” என்று தீர்க்கமாய் உரைத்தாள்.

“என்ன திடீர்னு ?”

“தெரியல… பண்ணலாம்னு தோணுச்சு”

“…..” அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இவள் இருக்கும் மனநிலையில் இது சரியாய் வருமா என்ற கவலை.

யோசனை குறியோடு நின்றிருந்தவனிடம் “என்ன யோசிக்கிறீங்க டேவிட்? இருக்கிற பிரச்சனையில இவளுக்கு இதெல்லாம் தேவையான்னு யோசிக்கிறீங்களா?”

அவள் சொன்னதை கேட்டு திகைத்தவன் “இல்ல ஜென்னி” என்று மறுப்பாய் தலையசைக்க,

“அப்புறம்… நான் சரியா ஆக்ட் பண்ணுவேனான்னா?!” என்று கேட்டாள்.

“ஜென்னி… இது உன் லைஃப்… இது உன் டெசிஷன் … இதுல நான் சொல்ல என்ன இருக்கு… உன் விருப்பம் என்னவோ அதை செய்” என்க,

“என் விருப்பமா ? ஹ்ம்ம்… என் விருப்பப்படி என் வாழ்க்கையில இதுவரைக்கும் என்ன நடந்திருக்கு டேவிட் ?!… அதெல்லாம் இல்ல… இது டைரக்ட்ர் சையத்தோட விருப்பம்… நேத்து வந்திருந்த போது இதை பத்தி அவர் என் கிட்ட பேசினாரு… அவர் கேட்ட விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது… ஸோ அந்த படம் பண்ணலாம்னு இருக்கேன்” என்றாள்.

“நேத்து… ஆக்டர் ராகவும் வந்தாரா?!” என்று கேட்டுவிட்டு அவளை ஆராய்ந்து பார்த்தான். 

அவள் தலையை மட்டும் அசைத்து ஆமோதிக்கும் போது , முகம் முற்றிலும் வேறு பரிமாணத்திற்கு மாறியது.

எத்தகைய உணர்வுகளை அவள் காட்டுகிறாள் என்பதை அவனால் கணிக்க முடியவில்லை.

அவனே மேலும் தயக்கத்தோடு “நீ டென்ஷனாகமாட்டேன்னா… நான் ஒரு விஷயம் கேட்கட்டுமா ?!” என்று கேள்வியாய் பார்த்தவனிடம், 

அவளே அவனிடம் “நேத்து எதனால அப்படி நடந்துக்கிட்டனுதானே கேட்கனும்?” என்க

‘ஆமாம்’ என்பது போல் தலையசைத்தான். 

“சிகரெட் ஸ்மெல்… உங்களுக்குதான் தெரியுமே ?! எனக்கு சிகரெட் ஆல்காஹாலிக் ஸ்மெல் எல்லாம் அலர்ஜின்னு”

“யாரு? அந்த ராகவ்… ஸ்மோக் பண்ணனா ?!” என்று கோபமாய் கேட்டான்

“ஹ்ம்ம்” என்று யோசனையோடு நின்றவளிடம் 

“நீ அந்த ராகவ்கிட்ட சொல்ல வேண்டியதுதானே” என்று சொல்லியபடி சீற்றமானான்.

“சொன்னேன் டேவிட்… அந்த இடியட் ராகவ் கேட்கல?!” என்றவளின் விழிகளும் உக்கிரமாய் மாறியது.

“நீ எதுக்கு அவனை வீட்டுக்கு இன்வையிட் பண்ண ஜென்னி… எனக்கு தெரிஞ்சு உன் மேலதான் தப்பு… அவனுக்கு எல்லாம் மரியாதையே தெரியாது… சினி இன்டிஸ்ட்ரீல தான்தான் எல்லாம்னு…. திமிரு தலைகணம்” என்று அவன் அதீத கோபத்தோடு பேச, ஜென்னி வியப்பாய் பார்த்தாள். 

இதை சொன்னதற்கே இவன் இத்தனை கோபம் கொண்டால், அவன் நடந்து கொண்ட விதத்தை அறிந்தால் என்ன செய்வான் ?

இவ்வாறு அவள் யோசித்திருக்கும் போதே டேவிட் அவளிடம் “ஸ்மோக் மட்டூம்தான் பண்ணானா இல்ல… வேறெதாவது அதை தாண்டி நடந்துச்சா?” என்ற கேட்டதும், 

அவள் உடனடியாக மறுப்பாய் தலையசைத்து “அதெல்லாம் இல்ல டேவிட்” என்றாள். 

அவன் மனம் அவள் சொல்வது உண்மையா என சந்தேகித்தாலும் அவளிடம் வற்புறுத்தி கேட்டு அவளுக்கு மேலும் மனஅழுத்தம் கொடுக்க அவன் விருப்பப்படவில்லை.

ஜென்னி அந்த நொடி வந்த வேலையை முடிந்ததென “ஒகே டேவிட்… நான் கிளம்பிறேன்… உங்களை பார்த்து பேசிட்டு போனோம்னு தோணுச்சு.. நேத்து நான் அவ்வளவு கலட்டா பண்ணிருக்கேன்… நீங்கதான் என்னை சமாளிச்சு கூட இருந்து பார்த்துக்கிட்டீங்கன்னு ரூப்ஸ் சொன்னா… நீங்க செய்ற உதவிக்கெல்லாம் நான் என்ன செய்ய போறேன்… இல்ல என்னைதான் செய்ய முடியும்” என்றவளின் விழிகள் நீரினை தேக்கி நிற்க, அதை தன் விரல்களால் துடைத்துக் கொண்டாள்.

“நான் அப்படி என்ன செஞ்சிட்டேன்… குடிச்சிட்டு வந்து உன்னை ஆக்ஸிடென்ட் பண்ணி என் சுயநலத்திற்காக உனக்கு நடந்த எதுவும் தெரியாம மறைச்சிருக்கேன்… உனக்கு நடந்த அநியாயத்துக்கு கூட கேள்வி கேட்க முடியாம பண்ணிட்டேன்…” என்றவன் குற்றவுணர்வோடு பார்க்க, 

“யாருன்னு தெரியாம யாரை கேள்வி கேட்க முடியும்?” என்றாள் விரக்தியோடு !

“நீ நினைச்சா முடியும்…” என்று திடமாய் உரைத்தவனிடம் அவள் பதில்பேசாமல் அழுத்தமான மௌனத்தோடு நிற்க, அவளுக்கு அந்த விஷயத்தை பற்றி விவாதிக்க கூட விருப்பமில்லை என்பதை உணர்ந்தான்.

சட்டென்று பேச்சு மாற்றியபடி “உனக்கு இன்னைக்கு வேறெதாச்சும் கமிட்மென்ட் இருக்கா ?” என்று ஜென்னியை நோக்கி கேள்விஎழுப்பினான்.

“ஏன் கேட்கிறீங்க ?”

“வெளியே போவோமா ? ரெஸ்ட்ரன்ட் பீச்… இப்படி எங்கயாச்சும் ?”

“இப்பவா ?!” என்று ஆச்சர்யமாய் அவள் கேட்க “ஹ்ம்ம்ம்” என்பது போல் தலையசைத்தான்.

நேற்றிலிருந்து அவள் மனநிலை சரியில்லை என்பதை உணர்ந்தே அவளை வெளியே அழைத்துப் போக கேட்டான்.

ஜென்னி சில விநாடிகள் யோசிக்க “ஹீரோயினி மேடம் அப்புறம் ஷுட்டிங் அது இதுன்னு பிஸியாகிடுவீங்க… இப்பவே போனாதா உண்டு” என்க,

அவள் புன்முறுவலோடு “ஒகே… போலாம்… பட் என் கார்” என்று தயங்க.

“டிரைவர்கிட்ட சொல்லி வீட்டில விட சொன்னா போச்சு… நானே உன்னை ஈவனிங் வீட்டில ட்ராப் பண்ணிடிறேனே”

“ஒகே டேவிட்… அப்போ போலாம் ?!”என்று அவளும் ஆர்வமானாள். 

“நீ முன்னாடி போய் பார்க்கிங்ல வெயிட் பண்ணு… நான் ஒரு சின்ன வொர்க்… முடிச்சிட்டு பின்னாடியே வந்திடுறேன்” என்க, அவளும் அவன் சொன்னது போல் முன்னே சென்றவள், லிஃப்டின் மூலமாக இறங்கிய சமயம் ஐந்தாவது மாடியில் நின்றது லிஃப்ட்.

தன் கைப்பேசியை கவனித்தபடியே லிஃப்டுக்குள் நுழைந்தான் மகிழ்.

அவன் சட்டென்று பார்வையை நிமிர்த்தி அருகில் நிற்பவளை பார்த்துவிட்டு திரும்பியவனுக்கு ஒரு நொடி இதயம் நின்றுவிட்டு துடித்த உணர்வு.

உணர்ச்சிகள் பொங்க விழியில் கசிந்த நீரோடு அவளை அவன் பார்க்க, ஜென்னி எந்தவித உணர்வுமின்றி இயல்பாகவே நின்றாள்.

அவன் பேச முடிந்தும் உமையாய் மாறிப் போக, அவள் பார்வையிருந்தும் தன் காதலனை அடையாளம் கண்டுகொள்ளமுடியாத குருடாக இருந்தால் என்றே சொல்ல வேண்டும். 

அவள் விழிகளுக்குதான் அவனை அடையாளம் தெரியாதே ! 

அவள் அவனை கவனியாமல் நின்றிருக்க அவளுக்கு தன்னை தெரியவில்லையா? என்ற வெதும்பிய அவன் இதயத்தின் குமறல் அவளுக்கு உண்மையிலயே கேட்கவில்லை.

முதல் சந்திப்பில் அறிமுகமில்லாமலே தன்னை அவள் அடையாளம் கண்டுகொண்டது நினைவுக்குவர, தான் பேசினால் அவளால் தன்னை அடையாளம் கண்டுகொள்ள முடியுமோ என்று தோன்றியது.

அந்த சில விநாடிகளில் தவிப்பின் உச்சக்கட்டத்திற்கே அவன் செல்ல லிஃப்ட் கதவு திறக்க, “சாக்ஷி” என்றழைக்க வெளிவந்த குரலை தடுத்தவன் “எக்ஸ்க்யூஸ் மீ” என்க, முன்னேறி சென்றவள் அப்படியே திகைத்து நின்றுவிட்டாள். 

அவள் காலுக்கு கீழே இருந்த பூமி நழுவிட்டது போன்றிருந்தது.

அவன் அவள் பின்னோடு நின்றபடி, “ஆர் யூ மிஸ். ஜென்னித்தா விக்டர்” என்று கேள்வி எழுப்ப, அவள் சாக்ஷியாய் இருந்தால் தன் குரலை நிச்சயம் அடையாளம் கண்டுகொள்வாள் என்ற நம்பிக்கை அவனுக்கு.

அவன் அப்படி கேட்டதும் அவளை அறியாமலே “எஸ்” என்றாள்.

அந்த ஒற்றை வார்த்தை வான்மழைக்காக ஏங்கிய பூமி மேல் பொழிந்த அமிலம் போல தகித்தது.

உயிரின் அடி ஆழத்தில் சென்று அவனுக்க வலிக்க, அவளுக்குமே அப்படி சொன்னது அத்தனை வலியாகத்தான் இருந்தது

மகிழ் அதற்கு மேல் அவளிடம் என்ன பேசுவான் ? 

அந்த நொடியே உடைந்து நொறுங்கி போன உணர்வுகளோடு அவளை கடந்து சென்றுவிட்டான். 

அந்த குரல் மகிழுடையது என்பது அவனின் அழைப்பிலேயே உணர்ந்துவிட்டவளுக்கு அவனை திரும்பி பார்க்க வேண்டுமென்ற தவிப்பு ஏற்பட்டாலும் அதற்கான தைரியம் எழவில்லையே! 

அருகிலேயே நின்றிருந்தவனின் முகத்தை கூட பார்க்காத அவளின் அலட்சியத்தை நொந்து கொள்வதா இல்லை அவன்தான் என்று அறிந்த பின் அவனை பார்க்க முடியாமல் நின்ற தன் தைரியமின்மையை எண்ணி வேதனை கொள்வதா?!

“சாக்ஷி” என்று அவன் அழைத்திருந்தால் நிச்சயம் அவள் திரும்பியிருப்பாள். ஆனால் அவன் ஜென்னித்தா விக்டரா என்று கேட்கும் போது அவளின் உணர்வுகளும் உடைந்துதான் போனது.

அவளை அறியாமல் ‘எஸ்’ என்று சொல்ல நேரிட்டதும், அவன் ஏமாற்றம் அடைந்து கடந்து சென்றதும் திட்டமிட்டு நிகழ்த்தபடவில்லை. 

அவை தானாகவே நடந்தேறியது.

ஜென்னி அங்கிருந்து ஒரு அடி கூட நகராமல் சிலையாய் நின்றுவிட்டாள்.

(Situvation song for this scene, given in the end of this update)

லிஃப்டில் இருந்து இறங்கிவந்த டேவிட் அவள் நிற்பதை பார்த்துவிட்டு “உன்னை பார்க்கிங்லதானே வெயிட் பண்ண சொன்னேன்.. ஏன் இங்கயே நிக்கிற ?” என்று கேட்க, அவள் திக்கு திசை தெரியாதவள் போல விழித்திருந்தாள்.

“சரி வா போலாம்” என்றவனை நிமிர்ந்து நோக்கியவள் பதிலேதும் பேசாமல் அவன் பின்னோடு நடந்தாள்.

அவர்கள் இருவரையும் ஒன்றாக செல்வதை அந்த அலுவலகமே ஆச்சர்யமாய் பார்த்திருந்தது. 

அதற்கு காரணம் எந்த பெண்ணையும் நிமிர்ந்து பார்க்காத டேவிடின் கண்ணியம். அதுவும் எந்த பெண்ணோடும் அவன் அப்படி சேர்ந்து போனதில்லை. எல்லோருடைய கற்பனை குதிரையும் அதிவேகமாய் பயணிக்க ஆரம்பித்தது. 

*********

வேந்தனின் வீடே அதிர்ச்சியில் 
அதிர்ச்சியில் மூழ்கியிருந்தது.

திருமணம் நடைப்பெற இன்னும் மூன்றே நாளே இருக்கும் தருவாயில் களிப்பில் மூழ்கியிருக்க வேண்டிய வேந்தனின் வீடு அதிர்ச்சியடைய காரணம் திருமணம் தடைப்பட்டு நின்றதுதான்.

வெகுநாட்களுக்கு பிறகு வீட்டில் நடைப்பெறும் விசேஷம் என எல்லோருமே ஆனந்தத்தில் மிதந்திருக்க, ஒரு நொடியில் எல்லாமே கனவாய் கலைந்து போனது.

வீட்டில் உள்ள எல்லோருக்குமே ஏமாற்றம் ஒருபுறமும் அவமானம் மறுபுறமும் வதைக்க, இப்படி ஒரு மகனை பெற்று வளர்த்ததிற்கு உயிரை விட்டாலும் 
பரவாயில்லை என்ற எண்ணம் தோன்றியது வேந்தனின் தந்தை ஞானசேகரனுக்கு. 

“எப்படி கல்லு மாரி நிற்கிறான் பாரு… பாவி… பாவி… இப்படி குடும்ப மானத்தையே வாங்கிட்டியேடா” என்று ஞானசேகரன் வேந்தனை கத்த ஆரம்பித்தார்.

வேந்தனின் முகமோ அடிப்பட்ட சிங்கம் போல அவமானத்தோடும் கோபத்தோடு கொந்தளித்திருந்தது.

தரையில் சரிந்து அமர்ந்திருந்த வள்ளியம்மை கண்ணீரோடு “எப்படிறா நீ எங்களுக்கு மகனா பொறந்த தொலைச்சே…” வெதும்பினார்.

என்ன சொல்லியும் மனம் ஆறுதலடையவில்லை.

அவனோ பதிலின்றி மௌனமாகவே நின்றிருந்தான். 

ஞானசேகரன் எழுந்து ” உன்னால எல்லோர் முன்னாடியும் என் மானமே போச்சே டா… பதில் பேசுடா… ஏன்டா இப்படி நிக்கிற” என்று கேட்டவர் ரௌத்திரமாய் அவனை அடிக்க ஆரம்பித்தார்.

ஒரு நிலைக்கு மேலே தன் பொறுமையிழந்தவன் அவர் கையை பிடித்து தடுத்து தள்ளிவிட்டான். 

“அப்பா” என்று எழில் அவரை தாங்கிக் கொண்டவள் வேந்தனிடம் “நீங்க நடந்துக்கிறது சரியில்ல ண்ணா…” என்று அவள் கோபம் கொள்ள “உன் வேலையை பார்த்துட்டு போடி” என்று சொல்லியவன் வீட்டை விட்டு விறுவிறுவென வெளியேறினான்.

ஞானசேகரனோ இதயத்தை பிடித்து கொண்டு அதிர்ச்சியில் அப்படியே சரிய எழில் அவரை பிடித்துக் கொண்டு “ப்பா” என்று கதறினாள். 

வள்ளியம்மை தாங்க முடியாமல் “என்னங்க… என்னாச்சு?” என்று கண்ணீரில் நனைந்தார். 

நடந்தவற்றை எல்லாம் ஒளிந்து நின்று பார்த்திருந்த புகழும் அவன் தம்பி தமிழும் பயந்து தன் தாத்தா அருகில் சென்று அழத் தொடங்க, எழிலின் கணவன் அருண் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்கும் ஏற்பாடுகள் செய்தான். 

**********

ராகவ் தன் அறையில் நின்று குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான்.

மனோ அச்சத்தோடு “பாஸ்… நான் அப்பவே சொன்ன… நீங்கதான் கேட்கல” என்க,

அவனை எரிப்பது போல் பார்த்து “இன்னைக்கு டைரக்டர் நந்தக்குமார் படப்பூஜை இருக்குன்னு சொல்லி தொலைச்சிருக்கலாம் இல்ல இடியட்” என்று எடுத்துரைக்க,

“சொன்னேனே பாஸ்… நீங்கதான் நைட்டு முழுக்க ஜென்னி ஜென்னின்னு புலம்பிட்டு சொல்ல சொல்ல கேட்காம குடிச்சிட்டிருந்தீங்க”

“நான் என்ன பன்றது… என்னை அந்த ஜென்னி டார்ச்சர் பன்றாளே மனோ… ? கூப்பிட்டு வைச்சி அவமானப்படுத்திறா… அன்னைக்கு கூட சையத்துக்காகதான் ஹோட்டலுக்கே வந்தாளாம்… சொல்றா” என்றான்.

இதையேதான் இரவெல்லாம் புலம்பினான். மீண்டுமா ?காதில் இரத்தம் வடியாத குறை மனோவுக்கு.

மனோ அவனிடம் “பாஸ் அதை விடுங்க.. படப்பூஜைக்கு நீங்க லேட்டா வந்ததுக்கு நந்தக்குமார் சார் ரொம்ப வருத்தப்பட்டாரு… பார்த்தீங்க இல்ல” என்று தயங்கி உரைத்தவனிடம்

“ப்ச்… அதான் பூஜை நடந்துடுச்சுல்ல… அப்புறம் என்ன?” என்றவன்

மனோவை நெருங்கி “ஆமாம்… நான் நேத்து ஒரு கார் நம்பர் கொடுத்தேனா… அது யார்துன்னு கண்டுபிடிச்சிட்டியா ?” என்று ஆர்வம் மேலிட கேட்டான்.

“எஸ் பாஸ்” 

“யாருது ?”

“ஜே சேனல் எம்.டி டேவிட் தாமஸ்” என்று மனோ சொன்னதுதான் தாமதம்.

ராகவின் முகமெல்லாம் வெளிறி போனது.

அதிர்ச்சியோடு தன் படுக்கையில் அமர்ந்தவன் “அவனுக்கும் அந்த ஜென்னிக்கும் என்ன சம்பந்தம்?” என்று வினவ,

“இரண்டு பேரும் கிறிஸ்டியன்ஸ்… ரிலேஷனா இருப்பாங்களோ என்னவோ” என்றான் மனோ.

“அப்படி என்னடா மன்னாங்கட்டி ரிலேஷன்?” கொதித்தது அவனுக்கு. அவள் தனக்கு மட்டூமே வேண்டுமென்ற கொதிப்பு. 

“அது தெரியல பாஸ்”

“விசாரி… அவனுக்கும் இவளுக்கும் என்ன மாதிரி ரிலேஷன்னு விசாரி” என்றான். 

“என்ன ரிலேஷங்கிறது முக்கியமில்ல… அந்த டேவிட் நம்மல விட பெரிய ஆளு… மீடியா பவர், பொலிட்டிக்கல் பவர், இன்ட்ரனேஷன்ல நெட்வொர்க்கோட டை அப்னு.. அவங்க பேஃமிலி வேற ரேஞ்ச் .. நம்மெல்லாம் அவங்க கிட்ட போட்டிக்கு நிற்க முடியாது… நின்னா அது உங்க பேரையே ஸ்பாயில் பண்ணிடும்… பெட்டர் நீங்க அந்த ஜென்னியை” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னரே மனோவின் கன்னத்தில் அறைந்தான் ராகவ்.

“பாஸ்” என்று அதிர்ச்சியாய் மனோ கன்னத்தை பிடித்து கொண்டான்.

ராகவால் அவன் வாழ்க்கையில் எதையும் அத்தனை சுலபமாய் விட்டுத்தர முடியாது. ஆசைப்பட்டதை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறியும், தான்தான் எல்லாமுமாய் இருக்க வேண்டும் என்ற கர்வமும் இருந்தது. 

அதுவும் வெற்றியின் மீதும் புகழின் மீது தீராத காதல் அவனுக்கு.

அது ஜென்னியின் மீதுமே பற்றிக் கொண்டது.

நேற்று அவன் எண்ணியது நடந்திருந்ததால் அவனுக்கு அவள் மீதான இச்சை கொஞ்சமாவது தணிந்திருக்குமோ என்னவோ ?!

ஆனால் அது நடக்கவில்லையே. டேவிட் அந்த சமயம் பார்த்து வந்ததினால் அத்தனை அருகாமையில் சென்றும் அவன் நினைத்ததை அடைய முடியவில்லை.

ஆதலால் அவள் மீதான பித்து அவனுக்கு அபரிமிதமாய் அதிகரித்து போனது

இப்படி அவள் மீது பித்தேறி கிடக்கிறானே என மனோ ராகவை எண்ணி கவலையோடு பார்த்திருந்தான்.

ராகவோ அலட்சியமாக மனோவின் தோளில் கைப்போட்டு, “கோச்சிக்காதே மனோ… என் பிடிவாதம் உனக்கு தெரியும் இல்ல… அவ எனக்கு வேணும்… எந்த ரீஸனுக்காகவும் நான் அவளை விட்டு கொடுக்க மாட்டேன்… அந்த டேவிட் எவ்வளவு பெரிய கொம்பாயிருந்தாலும்… ஐ டோன்ட் கேர்… இன்னும் கேட்டா இப்பதான் … அவ மேலே இன்னும் இன்னும் எனக்கு இன்ட்ரஸ்ட் ஜாஸ்தியா வருது… ஏன்னா ஹெவி காம்ப்டீஷன் இல்ல ?” என்று சொல்லி பயங்கரமாய் சிரித்தான். 

மனோவிற்கு அச்சம் தொற்றிக் கொண்டது. இந்த எண்ணம் எங்கே கொண்டு போய்விடுமோ என்று.

ஆனானப்பட்ட இராவணன் துரியோதனன் விதியும் கூட ஒரு பெண்ணால் முடிவுற்றது.

ராகவ் மட்டும் விதிவிலக்கா என்ன ?

அவனின் அழிவை அவள்தான் எழுத வேண்டுமென்பது விதி. 

அதுவே அவன் வெற்றிக்கும் புகழுக்கும் முடிவுரையாய் மாறப் போகிறது.

**********

பிம்பம்

ராகவின் வாழ்க்கையில் அவன் மதுவை போன்ற போதை… அவனை நிலைத்தப்ப செய்து நாளை நிலையற்று போக வைத்துவிடும் போதை.

வேந்தனின் வாழ்க்கையில் அவள் காட்டாற்று வெள்ளம். கரைகளை உடைத்து அவனை காணாமல் போக செய்துவிடும் வெள்ளம்.

மகிழின் வாழ்விலோ அவள் மழை நீர். கொட்டி தீர்த்து அவனை குளிர வைத்து மகிழ வைத்தாலும் இன்று அவனை வானம் பார்த்த பூமியாய் வறண்டு போகவைத்த மழை. 

சையத்தின் வாழ்க்கையில் அவள் ஊற்றாய் சுரக்கும் சுனை நீர். பாலைவனமாய் இருந்த அவன் வாழ்க்கையை சோலைவனமாய் மாற்றிய சுனை.

டேவிடின் வாழ்க்கையில் அவள் கரையில்லா ஆழமான சமுத்திரம். அவனை பரவசப்படுத்தி பிரமிக்க வைத்தாலும் அவன் தாகத்தை தீர்க்க முடியாத சமுத்திரம்.

அவள் ஓர் ரூபம்தான். 

ஆனால் எல்லோரின் பார்வைக்கும்தான் அவள் வேறு வேறு பரிமாணமாய் மாறுபடுகிறாள். 

************

ஜென்னியோ செந்தூரமான மாலை நேர வானோடு தொலைதூரத்தில் கடல் இணைந்திருப்பதாய் காட்சியளிக்கும் அந்த பொய்யான பிம்பத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருக்க, டேவிடோ இமைக்காமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

இத்தனை நாளாய் அருகிலேயே இருந்தும் அவன் விழிகளை கவர்ந்திடாத அவள் அழுகு, இன்று அவனை காந்தமாய் ஈர்க்கும் மாயமென்ன என்று அவனுக்கு புரியவில்லை.

உயிரின் அடி ஆழத்தில் இருந்து அவளுக்காக அவன் உருகி மருகி கொண்டிருக்க, அவளோ அதனை உணராத ஜடமாகவே அமர்ந்திருந்தாள். 

Comments Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!