Naan aval illai 8

Naan aval illai 8

சுயநலமற்ற காதல்
இரவு நேரம் என்பதால் சாரதா இல்லத்தில் இருந்த குழந்தைகள் மற்ற பணியாளர்கள் எல்லோரும் அவரவர்கள் அறைக்குள் ஓய்ந்திருக்க, அந்த இடம் முழுக்க நிசப்தமாய் இருந்தது.
மாயா தீவிரமான சிந்தனையோடு வீட்டிற்குள் நுழைந்ததை கவனித்த அவள் தாய் யாழ்முகை “எங்க மாயா போனா? அதுவும் சொல்லாம கொள்ளாம” என்று கேட்க, அவள் பதிலுரைக்காமல் சோபாவில் சென்று அமர்ந்து கொண்டாள்.
பத்து கோடி… இன்னுமும் அவள் மனம் நடந்தவற்றை நம்ப மறுத்தது. 
ஜே நெட்வொர்க் எம்.டி டேவிடை சந்தித்ததும் அவன் அசால்ட்டாய் கையெழுத்திட்டு கொடுத்த பத்து கோடி மதிப்பிற்கான செக்கும் அவளை மொத்தமாய் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
இன்னும் மாயா அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 
அவ்வளவு பெரிய தொகையை தன்னை மட்டும் நம்பி டேவிட் தந்திருப்பது அவளுக்கு திகைப்பாகவே இருந்தது.
டேவிடுக்கு தன்னை யாரென்றே தெரியாது. அதுவும் தான் நடத்தி வருவது ரொம்ப சிறியளவிலான சேவை மையம்தான். அது தெரிந்தும் இத்தனை பெரிய தொகையை ஒரே தடவையாய் தந்திருப்பதெல்லாம் நம்புவதற்கு சிரமம்தான். 
அதோடு எந்த நம்பிக்கையில் இத்தனை பெரிய தொகையை கொடுத்திருப்பான் என்று கேள்வியும் மனதை துளைத்தது.
அப்போது யாழ் அவள் தோளினை குலுக்கி “ஏ மாயா…” என்று 
சத்தமாய் அழைக்கவும் அவள் நிமிர்ந்து பார்த்தாள்.
வீட்டிற்கு வந்துவிட்டோமா என்பதையே அவள் அம்மாவின் முகத்தை பார்த்த பின்பே உணர்ந்தாள். அப்போது சோபாவில் அமர்ந்திருந்த அவள் தந்தை 
“மாயா…” என்றழைத்தார்.
அவள் மெல்ல தன்னிலை மீட்டு கொண்டு அவர் புறம் திரும்பினாள். 
ஏறு நெற்றியும், வெண் தாடியுமாய், சிறு தொந்தியோடு அமர்ந்திருந்தார் மாதவன்.
“என்னாச்சு மாயா? வந்ததில இருந்து ஏதோ யோசனையிலயே இருக்க” என்று வினவ,
அவள் நடந்வற்றை எல்லாம் தந்தையிடம் பகிர்ந்து கொள்வதா என்று யோசிக்க அவரே மேலும் “என்னடா… பணத்துக்காக ரொம்ப அலைஞ்சிட்டிருக்கியா ?” என்றார்.
சிலருடைய சிகிச்சைக்காக பணம் ஏற்பாடு செய்ய அலைந்து கொண்டிருந்தாள் என்பது உண்மைதான். 
அது தெரிந்துதான் டேவிட் இந்த தொகையை கொடுத்திருப்பாரா .அல்லது இது இயல்பாக நடந்த நிகழ்வவா ? என்ற கேள்வியும் அவள் மனதில் நுழைந்து கொள்ள, மாதவனுக்கும் மகளின் மௌனம் திகைப்பாய் இருந்தது.
ஏதோ குழப்பத்தில் இருக்கிறாள் என்பதை புரிந்து அவளின் தாய்
மகளின் தோளைப் பற்றி “போ மாயா… நீ முதல்ல உன் ரூமுக்கு போய் ப்ரஷ் ஆயிட்டுவா? ” என்றார். 
அவளும் சிந்தனையோடு தன் பேகை தோளில் மாட்டியபடி மாடியில் இருந்த அவள் அறை நோக்கி சென்றவள், தலையை வாரி முடிந்து கொண்டு கண்ணாடியை பார்த்தபடி ‘அந்த டேவிடுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? ஏன் நம்ம கேட்காமலே இவ்வளவு பெரிய அமௌன்ட்டை தூக்கி கொடுக்கனும்’ என்று கேட்டு கொண்டாள்.
அவளே மேலும் ‘இப்ப கேளு… ஏன் டேவிடுக்கிட்டயே கேட்டு தொலைச்சிருக்கலாம் இல்ல’ என்று தன்னைத் தானே கடிந்து கொண்டவள் தன் கப்போர்ட்டை திறந்து மாற்று உடையை எடுத்துக் கொண்டாள்.
அவள் மனம் ஏனோ டேவிடை பற்றிய சிந்தனையில் இருந்து வெளியே வரமாட்டேன் என்று அடம்பிடிக்க ‘யாருய்யா நீ ? இத்தனை நாளா எங்கய்யா இருந்த ?’ என்ற வினாவை உதிர்த்தபடி  தன் உடையை மாற்றிக் கொண்டிருக்க, சட்டென அவளின் அறைக்கதவு திறக்க, பதட்டத்தோடு  ‘ஆ ‘ என்று சத்தமாய் அலற, மகிழ் “சாரி சாரி” என்று சொல்லி கதவை மூடிவிட்டான்.
அவள் இதயமெல்லாம் படபடக்க வேகமாய் கதவை தாளிட்டுக் கொண்டாள்.
அந்த சத்தம் கேட்டு மாதவனும் யாழும் கீழ் இருந்தபடியே “என்னாச்சு மாயா? ” என்று கேள்வி எழுப்ப “ஒண்ணுமில்லை ஆன்ட்டி” என்று மகிழின் குரல் ஒலித்தது.
அதற்குள் மாயா நைட்டியில் மாறியிருந்தவள் கதவை திறந்து மகிழை முறைக்க, அவன் அவள் பார்வையை புரிந்து துணுக்குற்றான்.
“நான் நீ இருக்கன்னு தெரியாம” என்று தயங்க அவள் அறை வாசலில் நின்றபடியே “கதவை தட்டியிருக்கலாமே” என்றாள்.
“நீ கதவை லாக் பண்ணியிருக்கலாமே” என்க, அவள் பார்வை மாறியது.
ஏதோ சிந்தனையில் தான்தான் கதவை தாளிட மறந்தோம் என்ற நினைவு வர, அறை வாசலில் இருந்து மௌனமாய் விலகி நின்றாள்.
அவளை கடந்து சென்றவன் அவள் விழிகளை எதிர்கொண்டு “நீ நினைக்கிற மாதிரி நான் எதுவும் பார்க்கல” என்றான்.
“நான் கேட்டேனா? ” என்று கோபமாய் அவள் பார்வையை சுருக்க, அவன் புன்முறுவலோடு “நீ கேட்கலன்னாலும் நான் தெளிவுப்படுத்தனுமே” என்றான்.
அவன் புன்னகை அவளை வசிகரிப்பதை தவிர்க்க முடியாமல் முகத்தை அலட்சியமான பாவனையில் திருப்பிக் கொண்டான்.
மகிழ் தயக்கத்தோடு “நீங்க வெளியே போனிங்கன்னா நான் டிரஸ் மாத்திப்பேன்” என்றான்.
அவன் சொன்ன தோரணையில் அவள் ஒழுங்கெடுத்துவிட்டு விறுவிறுவென படிக்கெட்டிலிருந்து இறங்கி சென்று டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டாள்.
யாழ் மகளுக்கு இரவு உணவை பரிமாறியபடியே “எதுக்கு மாயா அப்படி கத்தின ?” என்று கேட்க மகிழை பார்த்துதான் அலறினோம் என்று எப்படி சொல்வது என்ற யோசித்தாள்.
“சொல்லு மாயா” என்று மீண்டும் அவர் கேட்க, தாயை பார்த்தவள் “பல்லியை பார்த்து பயந்துட்டேன்மா” என்றாள்.
“அப்படியா ?! நான் பார்க்கலயே” பின்னிருந்து மகிழின் குரல் கேட்க அவள் பார்வை அவன் புறம் சீற்றமாய் திரும்பியது. 
அவனோ அவள் கோபத்தை பொருட்படுத்தாமல் இருக்கையில் அமர்ந்தவன், தன் முன்னிருந்து பாத்திரத்தில் சப்பாத்தியை தன் தட்டுக்களுக்கு தானே இடம் மாற்றினான்.
“ரொம்ப பசி ஆன்ட்டி… காலையில இருந்து எக்கச்சக்க வேலை” என்று யாழை பார்த்து சொல்லியபடியே சாப்பிடத் தொடங்கினான். 
யாழும் மகிழ் சொல்வதை கேட்டபடி டம்ளர்களில் தண்ணீரை நிரப்பினாள்.
மகிழ் சாப்பிடபடியே “நீங்களும் அங்கிளும் சாப்பிட்டீங்களா ?” என்று  கேட்க
அவரும் புன்முறுவலோடு “அதெல்லாம் எப்பவோ…” என்றார் 
அவன் அப்படியே மாயாவை நோக்க, அவள் சாப்பிடாமல் அமர்ந்திருப்பதை பார்த்தவன் “சாப்பிடலயா மாயா ?!” என்ற கேட்க நடந்த சம்பவங்களை பற்றி யோசித்திருந்தவளுக்கு சாப்பிடுவதில் ஆர்வமே இல்லை.
“எனக்கு பசிக்கல” என்றபடி அவள் எழுந்து கொள்ள, அவன் விடாமல் அவள் கரத்தை பற்றி இருக்கையில் அமர வைத்தவன்
“அதெப்படி பசிக்காம போகும்… சாப்பிடு” என்றான் மிரட்டலாக.
அவன் மீது கோபம் ஏற்பட்டாலும் அவன் சொல்வதை கேட்காமல் மீண்டும் எழுந்து சென்றால், அவன் பெற்றோர்களின் மனம் வருத்தப்படும். 
அதே சமயம் அவர்கள் இருவரின் உறவு பற்றிய கேள்வி எழும். அதனால் அமைதியாய் அமர்ந்து கொண்டு சாப்பிடத் தொடங்க, இந்த காட்சியை பார்த்து கொண்டிருந்த அவளின் பெற்றோருக்கோ அளவில்லா ஆனந்தம்.
எத்தனையோ அநாதரவான பெண்களுக்கு வாழ்க்கை அமைத்து தந்த புண்ணியத்தின் விளைவுதான் மகிழ் தங்களுக்கு மருமகனாய் அமைந்திருக்கிறான் என்ற மனதளவில் எண்ணி பெருமிதப்பட்டு கொண்டனர்.
ஆனால் மகிழ் மாயாவிடம் எடுத்துக் கொள்ளும் உரிமையெல்லாம் வெறும் நட்பு ரீதியானது மட்டுமே. வேறு எந்தவித உறவின் அடிப்படையும் இல்லை என்று அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். 
அது மாயாவுக்கு மட்டுமே தெரியும்.
திருமணமான மூன்று மாதங்களாய் சிறு சலனம் கூட இல்லாமல் அவளோடு ஒரே அறையில் இருக்கிறானே? எப்படி முடிகிறது அவனால் என்று மாயாவும் வியக்கவே செய்கிறாள். 
இரண்டு வருடங்கள் முன்பு மகிழை அவன் குடும்பத்தினர் எங்கங்கோ தேடிக் கொண்டிருந்தனர்.
அதே சமயம் சாக்ஷியின் இழப்பிலிருந்து மாயா மெல்ல மெல்ல அப்போதுதான் வெளியே வரத் தொடங்கியிருந்தாள்.
அன்று சாலையோரத்தில் மாயா நடந்து வந்து கொண்டிருக்க, ஓர் ஆடவன் அவள் வரும் வழியில் தன்னிலை மறந்து வீழ்ந்து கிடந்தான். எல்லோரும் லேசான முகச்சுளிப்போடு கடந்துச் சென்றனர். சிலர் திரும்பியும் கூட பார்க்கவில்லை.
ஆனால் மாயாவால் எல்லோரையும் போல கடந்து செல்ல முடியவில்லை. அங்கே நின்றிருந்தவர்கள் சிலரை அவனை எழுப்புவதற்காக உதவிக்கு அழைக்க, யாருமே வரவில்லை.
“அவன் குடிச்சிருப்பானும் இருக்கும்… எல்லாம் போதை தெளிஞ்சி அவனே எழுந்து போயிடுவான்” என்றனர். 
மாயாவின் மனம் இதனை ஏற்கவில்லை. அவன் உடல்நிலை குன்றிக் கூட வீழ்ந்திருக்கலாமே என்று எண்ணியவள், தானே அந்த ஆடவன் அருகில் சென்று உதவி புரிய அவனை சிரமப்பட்டு திருப்பினாள்.
அவள் உதடுகள் அதிர்ச்சியோடு ‘மகிழா?’ என்று கேட்டு திகைப்புற்றன.
அவனின் அந்த தோற்றத்தை அவளால் நம்பவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் அவன் மகிழ்தானா என்று கேட்டவளுக்கு ஆம், அவன் மகிழ்தான் என்று ஊர்ஜிதமானது.
ஆனால் அவன் இருந்து கோலத்தை பார்த்து அவள் கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தோட கனத்த மனதோடு அவனை மருத்துவமனையில் சேர்பித்தாள்.
அதோடு அவன் குடும்பத்தாருக்கும் தகவல் உரைத்தாள்.
அவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மாயாவிடம் வந்து நின்று “ரொம்ப பலவீனமா இருக்காரு… சாப்பிடாம தூங்காம இருந்தாருப்பாரு போல…” என்று சொல்லி மருந்து சீட்டு எழுதி கொடுத்தார்.
“மயக்கம் தெளிஞ்சதும் ஏதாச்சும் ப்ரூஃட் ஜூஸ் கொடுங்க” என்க, மாயாவும் தலையசைத்துவிட்டு அவன் இருந்த அறைக்குள் நுழைந்தாள்.
அவனோ மயக்க நிலையில் படுத்திருக்க, ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது. அவளால் அவனை அப்படி பார்க்க முடியவில்லை.
பெண்களை வசீகரிக்கும் ஆளுமையான தோற்றமும், புன்னகையோடே இருக்கும் முகம் அல்லவா அது. 
கலகலப்பாக பழகும் அவன் குணத்தையும் அவன் ரசனையான பேச்சிற்கு மயங்காதவர்கள் உண்டா ?
இவ்வாறு எண்ணியபடி அவன் அருகில் நின்றவளுக்கு “சாக்ஷி” என்ற அவனின் முனகல் சத்தம் கேட்டு மனதை பிசைந்தது. 
அந்த நொடி மாயா கட்டுபடுத்த முடியாமல் தன் இருகரங்களால் வாயை பொத்திக் கொண்டு அழத் தொடங்கினாள். அவனின் காதலை புரிந்து கொள்ளாமல் தவறாய் பேசிவிட்டோம் என்ற குற்றவுணர்வில் வேதனையுற்று வெதும்பினாள்.
அவள் அழுது தேம்ப நர்ஸ் அவளிடம் “உங்க ரீலேஷனாமா… ஏன் இப்படி இருக்காரு ?” என்று கேள்வி எழுப்ப பதில் சொல்ல அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. தலையை மட்டும் அசைத்து வைத்தாள்.
மகிழின் ஆழமான காதலை தான் புரிந்து கொள்ளவில்லை என்பதை விட ஏன் சாக்ஷியும் புரிந்து கொள்ளாமல் போனால் ? 
இந்த கேள்விக்கான பதில்தான் யாரிடமும் இல்லை.
மகிழின் குடும்பத்தினர் மருத்துவமனையில் அவன் இருந்த அறைக்கு வந்து சேர்ந்தனர். வேந்தன் மட்டும் மகிழை பார்க்க வராமல் வெளியே நின்று கொண்டான்.
அவர்கள் உள்ளே நுழைந்ததும் மாயா ஒதுங்கி பின்புறமாய் நின்றுக் கொள்ள, எல்லோருமே அவன் நிலையை பார்த்து அதிர்ச்சியுற்றனர்.
அவனின் தமக்கை எழில் “மகிழ்” என்று அழைத்து அவனை எழுப்பிவிட்டாள். 
மயக்கம் தெளிந்து எழுந்தவன் அவர்கள் முகத்தை எல்லாம் பார்த்து “நீங்கெல்லாம் யாரு… உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ?” என்று அலட்சியமான பார்வையோடு பேசுவதற்கு சக்தியில்லாமல் மெதுவாகக் கேட்டான்.
அவர்கள் வேதனையடைந்து  கண்ணீர் வடிக்க எழில் அவன் தலையை வருடி “ஏன்டா இப்படி பேசிற… நீ காணோம்னு நாங்கெல்லாம் எவ்வளவு பதறிட்டோம் தெரியுமா? ” என்றவளை பார்த்து விரக்தியாய் புன்னகையித்துவிட்டு,
“இனிமே என்னை காணோம்னு தேட வேண்டும் எழில்… பேசாம இந்த மகிழ் செத்திட்டேன்னு நினைச்சி தலைமுழுகிடுங்க” என்றான் நிதானத்தோடு!
எல்லோரும் “மகிழ்” என்று ஒரு சேர அதிர்ந்தனர்.
அவன் அவர்களின் அக்கறையை பொருட்படுத்தாமல் “எனக்கு உங்க யாரையும் பார்க்க விருப்பமில்லை… போயிடுங்க” என்று கரம் கோர்த்து கெஞ்ச அவர்களுக்கு அவனை எப்படி சமாதானம் செய்வதென்று புரியவில்லை.
“ஏன்டா எங்களை இப்படி புரிஞ்சிக்காம நடந்துக்கிற ?” என்று அவன் தாய் வள்ளியம்மை கேட்டபடி கண்ணீர் வடித்தார்.
“யாரு ? நானா புரிஞ்சிக்காம நடந்துக்கிறேன் ?” என்று மகிழ் கேட்க, யாரும் பதில் பேசவில்லை.
அவன் கண்ணீர் விட்டபடி “என்னை நீங்க யாராச்சும் புரிஞ்சிக்கிட்டீங்களா ? என் காதலை புரிஞ்சிக்கிட்டீங்களா? யாரும் புரிஞ்சிக்கல… என் பெஸ்ட் ப்ரண்ட் கூட புரிஞ்சிக்கல… ஏன் ? என் சாக்ஷியும் என்னை புரிஞ்சிக்காமலே போயிட்டாளே? ! அவளுக்கு இனிமே நான் எப்படி புரிய வைப்பேன்… அடி பைத்தியக்காரி நான் உயிருக்கு உயிரா உன்னை நேசிச்சன்டின்னு… ” என்று சொல்லி முகத்தை மூடி அழ
அவன் தந்தை கோபமானார்.
“அப்போ உனக்கு அந்த சாக்ஷிதான் முக்கியம்… பெத்து வளர்த்த எங்களை பத்தி எல்லாம் கவலை இல்ல” என்று அவன் தந்தை கேட்க
அவன் நிமிர்ந்து பார்த்து “ஆமாம்… எனக்கு அவதான் முக்கியம்” என்று அழுத்தமாய் உரைக்க பின்னிருந்து நின்று இந்த காட்சியை பார்த்து கொண்டிருந்த மாயாவுக்கு வியப்பாய் இருந்தது.
இந்தளவுக்கு கூட ஒருவனால் காதலிக்க முடியுமா? அவள் இல்லையென்று ஆனப்பின்னும் அவள்தான் முக்கியம் என்று சொல்லும்! அவனின் சுயநலமில்லாத காதலை சாக்ஷி புரிந்து கொள்ளாமல் போய்விட்டாளே? ! என்ற எண்ணத்தோடு மாயா தன் தோழிக்காக கவலையுற்றிருக்க
அந்த சமயம் பொறுமையிழந்த மகிழ் சத்தம்போட்டு கத்த ஆரம்பித்தான்.
“என் சாக்ஷியை வேண்டாம்னு சொன்ன யாரும் எனக்கு வேண்டாம்… போங்க” என்று குரலை உயர்த்த, அதற்கு மேல் அவனை சமாதானம் செய்ய மூடியும் என்று யாருக்கும் தோன்றவில்லை.
மகிழின் தந்தை சினத்தோடு “வா வள்ளி போலாம்… இனிமே நமக்கு இரண்டு புள்ளைங்கதான்” என்று சொல்லி விறுவிறுவென அந்த அறையைவிட்டு சென்றுவிட்டார்.
எழிலும் வள்ளியம்மையும்  எதுவும் பேச முடியாமல் இயலாமையோடு மகிழை பார்த்தபடியே அங்கிருந்து வெளியேறினர்.
மாயா மட்டும் அங்கயே நின்றிருக்க, மகிழ் அப்போதுதான் அவளை கவனித்தான். 
அவன் காதலை புரிந்து கொள்ளாமல் தான் ரொம்பவும் தவறாக பேசிவிட்டோம்.  நிச்சயம் அவன் தன் மீதும் கோபப்படுவான் என்று அச்சத்தோடு நின்றிருந்தாள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!