மாய வித்தை
மாயாவை மகிழ் ஆழமாய் ஒரு பார்வை பார்த்தான். 
அவனின் அந்த பார்வை அவளை நெருப்பிலட்டது போன்ற உணர்வை ஏற்படுத்த, அவஸ்த்தையோடு “நான் பேசின பேச்சுக்கு உங்ககிட்ட மன்னிப்பு கேட்க கூட எனக்கு தகுதி இருக்கான்னு தெரியல மகிழ்…” என்று அவள் சொல்லவும், அவன் இயல்பாய்  புன்னகையித்து
“நீங்க என்கிட்ட மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை… எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்லை” என்றான்.
மாயா யோசனைக்குறியோடு அவனை பார்த்திருக்க மேலும் தொடர்ந்தான்.
“என் கூட நெருங்கி பழகினவங்களே என்னை புரிஞ்சிக்கலன்னும் போது… ப்ச்… நீங்க எப்படி என்னை புரிஞ்சிக்க முடியும்… அதுவுமில்லாம சாக்ஷி உங்ககிட்ட அப்படி சொன்னதினாலதானே நீங்க என்கிட்ட கோபப்பட்டீங்க” என்றான்.
தன் குடும்பத்தாரிடம் அந்தளவுக்கு கோபத்தை காட்டியவன் இத்தனை நிதானித்து பேசுவதை பார்த்து அவளுக்கு வியப்பாய் இருந்தது.
அவன் வேதனையை புரிந்தவளாய் “சாக்ஷி ஏன் அப்படி சொன்னான்னு  தெரியல.. இல்ல அவ சொன்னதை நான்தான் தப்பு புரிஞ்சிக்கிட்டேனோன்னு தெரியல” என்றாள்.
அவன் மறுப்பாய் தலையசைத்தபடி “நீங்க தப்பாவும் புரிஞ்சிக்கல.. அவ தப்பாவும் சொல்லல.. அவ மனசில இருந்ததைதான் சொல்லியிருக்கா?” என்றான்.
“அப்படின்னா?” அவன் சொல்வதை சரியாய் புரிந்து கொள்ள முடியாமல் அவள் பார்க்க,
“அப்படின்னா… அவ என் காதலை புரிஞ்சிக்கல மாயா… இன்னும கேட்டா அவ என்னை நம்பல” அவன் குரலில் கோபம் தொனிக்க,
“அப்படி இருக்காது மகிழ்” என்று மறுத்தாள் மாயா.
“அப்படிதான்.. அவ என்னை நம்பல மாயா…  நம்பி இருந்தா… இப்படி எல்லாம் நடந்திருக்காது… அவளோட வாழனுங்கிற என் கனவை… என் காதலை எல்லாத்தையும் உடைச்சிட்டு போயிட்டா… இதுக்கு அவ என்னை உயிரோடு வைச்சி எரிச்சிருக்கலாம்”  என்று சொல்ல
மாயா அதிர்ந்தபடி “என்ன மகிழ்?  இப்படி எல்லாம் பேசிறீங்க” என்றவளை நிமிர்ந்து நோக்கினான்.
அந்த விழியில் ஓயாமல் அழுததினால் சிவந்திருக்க, கண்களுக்கு கீழே கருவளையம் சூழ்ந்திருந்தது.
“எனக்கு எல்லாரையும் விட அவ மேலதான கோபம்” என்று சொல்லும் போது அவன் விழிகளில் நீர் நிரம்பியது.
“நீங்க ரொம்ப இமோஷனலாகிறீங்க… கொஞ்சம் ரீலேக்ஸ் ஆகுங்க” என்று சொல்லும் போதே டிர்ப்ஸ் முடிந்திருப்பதை கவனித்தவள் “டிரிப்ஸ் முடிஞ்சிடுச்சு போல… நான் போய் நர்ஸை கூட்டிட்டு வர்றேன்.. நீங்க படுத்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு வெளியே ஓடினாள்.
மகிழ் தன்னை ஆசுவசப்படுத்திக் கொள்ள முயன்றாலும் சாக்ஷியின் நினைவு அவனை காயப்படுத்தி கொண்டிருந்தது. 
அந்த சமயத்தில் உள்ளே நுழைந்த நர்ஸ் ட்ரிப்ஸை நிறுத்திவிட்டு அவனின் பிபியை சோதித்தவளிடம்  “யாரு என்னை ஹாஸ்ப்பெட்டல அட்மிட் பண்ணது சிஸ்டர்?” என்று வினவினான்.
“இப்ப போனாங்களே.. அவங்கதான்… பாவம்… உங்க பக்கத்துல நின்னுட்டு தேம்பி தேம்பி அழுதிட்டிருந்தாங்” என்று சொல்ல அவன் திகைத்தான்.
அவள் ஏதோ அக்கறையில் மருத்துவமனையில் சேர்த்திருக்கலாம். எதற்கு தேவையில்லாமல் தனக்காக அழ வேண்டும் என்று யோசித்திருக்கும் போதே மாயா அறைக்குள் நுழைந்தாள்.
அவள் கரத்தில் இருந்த டம்ளரில் ஆரஞ்சு ஜுஸ்.
அதனை அவனிடம் நீட்டியவள் “குடிங்க மகிழ்” என்றாள்.
“இதெல்லாம் குடிச்சி நான் உயிர் வாழ்ந்த என்ன சாதிக்க போறேன்” என்று விரக்தியான முகபாவத்தோடு மறுத்தான்.
“அப்படின்னா சாகப் போறீங்களா ?” என்று கேட்டு கொஞ்சம் அழுத்தமான கோபப் பார்வையை அவன் மீது வீச,
“வாழ விருப்பமில்லை” என்றான் நிதானத்து,
“நம்ம வாழ்க்கையில வர இழப்புகளுக்காகவும் ஏமாற்றத்துக்காகவும் வாழக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டா இந்த உலகத்தில யாருமே வாழ முடியாது… சாக்ஷி பத்தின நினைப்பில இருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளியே வரப் பாருங்க… இன்னும் கேட்டா.. பதினெட்டு வருஷம் நானும் சாக்ஷியும் ப்ரண்ட்ஸ்.. எனக்கும் சாக்ஷியோட மரணம் பெரிய இழப்புதான்..  அப்படி இருக்கும் போது இந்த ஒரு வருஷத்துல நானே அவ நினைவில இருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளிய வந்துட்டேன்… ஏன் உங்களால முடியாதா? ” என்று கேள்வி எழுப்பினாள்.
“என்னால முடியல மாயா… சாக்ஷியோட நினைப்பு என்னை அணுஅணுவா கொல்லுது” என்றான்.
“எனக்கு உங்க வேதனையும் வலியும் புரியுது… அதே நேரத்தில நமக்கு வர பிரச்சனைக்கும் இழப்புக்கும் மரணம் தீர்வில்லை… அப்படி மரணம்தான் தீர்வுன்னா சாக்ஷியை நீங்க காதலிச்சிருக்கவே முடியாதே” என்றாள்.
அவன் குழப்பமாய் பார்க்க அவள் தொடர்ந்தாள். 
“அஞ்சு வயசில அம்மா அப்பாவை இழந்து பார்வையிழந்து சொந்த பந்தத்தை எல்லாம் இழந்தாளே… அன்னைக்கே அவ செத்து போயிருக்கனும்… அப்படி போயிருந்தா சாக்ஷி உங்க வாழ்க்கையில வந்திருக்க மாட்டா? ” என்றதும் மகிழின் விழிகள் நீரை உகுத்தன.
இதெல்லாம் அவனுக்குமே தெரியும்தான்.  ஆனால் சாக்ஷி ஒரு நாள் கூட இவற்றை எல்லாம் சொல்லி சுயபச்சாதாபத்தை உருவாக்கி கொண்டதில்லை. அதை அவள் விரும்பவும் மாட்டாள். அந்த மனோதிடம்தான் அவளிடம் அவன் அதிகமாய் விரும்பியது. 
பார்வையில்லை எனினும் சாக்ஷியின் எதிர்காலத்தை குறித்த. கனவு அத்தனை வண்ணமயமானது. வாழ வேண்டமென்ற கனவும் ஆசையும் அவளுக்கு ரொம்பவும் அதிகம். ஆனால் விதி ஏன் அவள் ஆசைகளை நிராசையாய் மாற்றிவிட்டது. 
மனதளவில் வெதும்பி கொண்டிருந்தவனை கவனித்தவள் அவன் கரத்தில் கட்டாயப்படுத்தி அந்த ஜுஸ் கிளாஸை வைத்து “ப்ளீஸ் மகிழ்… குடிங்க” என்றாள் கெஞ்சலாக !
அதற்கு மேல் மறுப்பு தெரிவிக்காமல் அதனை குடித்தான்.
அதோடு அல்லாது மாயா அவனை சம்மதிக்க வைத்து சாரதா இல்லத்திற்கு அழைத்துவந்து தங்கவும் வைத்தாள்.
சாக்ஷி இருந்த அறை என்பதால் அவனும் அங்கே தங்க சம்மதித்தான். அந்த அறையிலிருந்த அவளின் வீணையை மடியில் கிடத்திக் கொண்டு அவன் அழுது நாட்கள் நிறைய.
ஆனால் நாட்கள் அப்படியே தொடர்ந்துவிடவில்லை. அந்த இடமும் அங்கே இருந்த அநாதவரான குழந்தைகளை பார்க்க, அவன் மெல்ல மெல்ல சாக்ஷியின் நினைப்பில் இருந்து மீண்டு வந்தான். அதோடு மாயாவும் அவனுக்கு ரொம்பவும் மதிப்புக்குரியவளாய் மாறியிருந்தாள்.
அந்த சமயத்தில்தான் ஜே டிவியில் வேலை செய்ய ஒரு வாய்ப்பு கிட்டியது மகிழுக்கு.
அந்த முயற்சியில் வெற்றியும் கண்டு, இன்று மகிழை தெரியாதவர்கள் யாருமில்லை என்றளவுக்கு அவன் நிகழ்ச்சி நடத்தும் திறமையின் மூலம் மக்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்திருந்தான்.
அந்த சமயத்தில்தான் மாயா தன் தோழியின் நினைவாக கண் பார்வையற்றவர்களுக்காக ஒரு சேவை மையத்தை தொடங்கினாள்.
அது ரொம்பவும் பெரிய விஷயம். அதை அவளால் ஏற்று நடத்த முடியாது என்று அவள் பெற்றோர் உட்பட அவநம்பிக்கை கொடுத்த போது  மகிழ்தான் அவளுக்கு உறுதுணையாய் நின்று, சாக்ஷி கண் பார்வையற்றவர்களுக்கான  சேவை மையத்தை நிறுவ பெரிதும் உதவினான்.
அவர்கள் இருவரின் நட்பு அதன் மூலம் ஆழமாய் மாறியது. 
அப்போதுதான் மாயாவிற்கு திருமணத்திற்காக மாதவனும் யாழும் மும்முரமாய் மாப்பிள்ளை தேட ஆரம்பித்தனர்.
அதுவும் மாயா உரைத்த கன்டிஷனோடு மாப்பிள்ளை பார்ப்பது எனும் போது அவர்களுக்கு அது ரொம்பவும் சுலபமாய் இல்லை.
லாபமற்ற நிறுவனத்திற்காக இரவும் பகல் பாராமல் உழைக்கும் மாயாவின் மீது பலருக்கும் மதிப்பு ஏற்பட்டதே ஒழிய, வாழ்க்கை துணை என்றளவில் ஏற்றுக் கொள்ளும் பரந்த மனப்பான்மை உண்டாகவில்லை.
அவர்களின் தேடல் நீண்டுக் கொண்டே போக, மாதவனுக்கும் யாழ்முகைக்கும் ஒரு கட்டத்தில் மகிழை மாயாவுக்கு திருமணம் செய்வித்தால் என்ன?  என்ற எண்ணம் பிறந்தது.
மாயாவையும் மகிழையும் ஒன்றாய் அமரவைத்து அவர்கள்  மனோஎண்ணத்தை தெரிவித்தனர்.
இறுதியாய் முடிவை அவர்களிடமே விட்டிருந்தனர்.
மகிழ் மாயாவை நேர்கொண்டு பார்த்தவன் “என்னால சாக்ஷியை தவிர வேறெந்த பெண்ணையும் அப்படி ஒரு உறவோடு பார்க்க முடியாது.. இதெப்படியாவது நீங்கதான் உங்க அம்மா அப்பாகிட்ட சொல்லி புரிய வைக்கனும்” என்றான்.
“நீங்க வேணான்னு சொன்னா நிச்சயம் அம்மா அப்பா கம்பெல் பண்ண மாட்டாங்க… ஆனா ஏன் வேணான்னு சொல்லனும்” என்று கேட்டாள் மாயா.
அவன் அதிர்ந்தபடி “என்ன மாயா இப்படி சொல்ற?” என்று கேட்டான்.
“எனக்கு வேறு வழி தெரியல மகிழ்… எப்பவுமே சுயநலமா யோசிக்காத எங்க அம்மா அப்பாவோட ஒரே ஆசை என் கல்யாணம்… அதை நிராசையா மாத்த நான் விரும்பல… அதே நேரத்தில் சாக்ஷி சைட் ஸேவர் ஆர்கனைஷேனை நான் விட்டுக் கொடுக்க விரும்பல… நான் யாராவது தெரியாவதவங்களை கல்யாணம் பண்ணி அந்த ஆர்கனைஷேனை நடத்திறதில பிரச்சனை வந்துட்டா… வந்துட்டா என்ன?  வரும்… அந்த ரிஸ்கை நான் எடுக்க விரும்பல… அதனாலதான் சொல்றேன்…  நீங்களும் யாரையும் கல்யாண பண்ணிக்கிற ஐடியால இல்ல… ஸோ ஒரு நல்ல நண்பனாக என் கூட வாழ்க்கை பூரா இருந்துட்டு போங்க…” என்று மாயா தன் எண்ணத்தை தெளிவாகவும் தீர்க்கமாவும் உரைத்துவிட்டாள். 
மகிழ் புரியாத பார்வையோடு “உங்க அம்மா அப்பாவை ஏமாத்த சொல்றீங்களா ?” என்றான்.
“இதுல ஏமாத்த என்ன இருக்கு மகிழ்… கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த உறவை எப்படி பார்க்கனும்ங்கிறதெல்லாம் நம்ம தனிப்பட்ட விஷயம்…” 
“லாஜிக்கா அதெல்லாம் சரியா வராது… வேண்டாம்” என்றவன் அவள் சொல்வதை நேரடியாய் மறுத்தான். 
அதற்கு மேலாக அவளும் அவனிடம் இது குறித்து பேசவில்லை.
அவனின் மறுப்பு மாதவன் யாழின் மனதை வேதனைப்படுத்திய அதே சமயம் திருமணமே வேண்டாமென மாயாவும் பிடிவாதமாய் நின்றாள். 
உணர்வுரீதியான போராட்டம் பெற்றோர் மகளுக்கு இடையில் ஏற்பட்டு அந்த இல்லத்தில் தங்கியிருந்த எல்லோர் மனதிலும் அந்த வேதனை பீடித்து கொண்டது. 
நடப்பதை எல்லாம் தள்ளி நின்று வேடிக்கை மட்டும் பார்க்க மகிழால் முடியவில்லை.
மாயா அவன் வாழ்க்கையை மாற்றியிருக்கிறாள். மாதவனும் யாழும் தங்களின் வாழ்க்கையை சேவைக்காகவே அற்பணித்தவர்கள். அவர்கள் வருத்தமுறுவதை  பார்த்தவனுக்கு தன் சுயநலத்தை அவர்களுக்காக விட்டுக் கொடுப்பதில் தவறில்லை என்று எண்ணி மாயா சொன்ன முடிவை ஏற்று அவளை திருமணம் முடித்துக் கொண்டான்.
ஆனால் அப்போதும் தன் வீட்டாரை அழைக்க அவன் சம்மதிக்கவில்லை. அவன் எத்தனை மாற்றம் பெற்றிருந்தாலும் அவர்கள் மீதான கோபம் மட்டும் துளியளவும் மாற்றமடையவில்லை. 
திருமணம் முடிந்த நாளில் இருந்து மகிழ் மாயாவிடம்  நண்பன் எனற எல்லைக்கோட்டை தாண்டி வரவேயில்லை. ஆனால் மாயாவின் மனம் அவன் புறம் மெல்ல மெல்ல சாயத் தொடங்கியிருந்தது.
ஆனால் அதை வெளிக்காட்ட முடியாமல் தவிப்புற்றாள்.
மகிழ் நட்பின் மீது அத்தனை மரியாதை கொண்டவன். அதற்கு சான்றாய் அவன் பலதடவை தன் தோழியாயிருந்த ஷாலினியை பற்றி சொல்லி அவள் தன நட்பை கலங்கப்படுத்திவிட்டதாக  வருந்தியிருக்கிறான்.
ஆதலால் அதே தவறை தானும் செய்து அவன் மனதை காயப்படுத்திவிட கூடாது என்று எண்ணிக் கொண்டவள் அவள் காதலை வெளிவரவிடாமல் தடை விதித்திருநதாள்.
அத்தகைய காதல் எண்ணம் அவளையும் மீறி உண்டாகும் போதெல்லாம் கோபத்தையும் வெறுப்பையும் காட்டி அந்த சிந்தனையை மறக்கடித்துவிடுவாள். 
ஆனால் எத்தனை நாளைக்கு இந்த முகமூடியை அவளால் அணிந்து கொள்ள முடியும். ஒரு நாள் அவளின் காதல் வெளிப்பட்டே தீரும். 
அப்போது மகிழ் அதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருப்பானா ?
காதல் மனதில் நுழைந்துவிட்டாலே அந்த காதலுக்காக நாம் உயிராய் நேசிக்கும் எந்த உறவையும் வெறுக்க வைத்துவிடும். அதுதான் மகிழுக்கும் நேர்ந்தது. 
விரைவில் மாயாவும் மகிழின் மீது கொண்ட காதலுக்காக அவள் ஆழமாய் நேசித்த ஒன்றை வெறுக்கும் நிலைக்கு தள்ளப்படப் போகிறாள். 
காதல் என்ற மாயாவித்தை யாரைத்தான் விட்டு வைத்தது. அது சையத்தின் மனதில் நுழைந்து ஆட்டுவிக்க ஆரம்பித்தது. 
இலட்சியம் ஒன்றே பிரதானம் என்று குடும்பத்தை கூட மறந்து ஓடிக் கொண்டிருந்தவனின் வாழ்க்கை முற்றிலும் வேறு பரிமாணத்திற்கு மாறியிருந்தது.
மஹாபலிபுரச் சாலையில் கடலை கம்பீரமாய் வெறித்து பார்த்தபடி இருந்த அந்த ஆடம்பரமான பங்களாவில்தானே இன்று சையத் வசிக்கிறான். 
அத்தகைய பெரிய பங்களாவின் தனியாக இருக்க சையத்திற்கு விருப்பமே இல்லை. ஆனால் ராகவ் அந்த பங்களாவை சையத்திற்கு பரிசாக அளித்திருந்தான். அந்த மரியாதை நிமித்தமாகவே அங்கே தங்கி கொண்டிருக்கிறான்.
அவன் தம்பி தங்கையும் அம்மாவும் என்றாவது ஒரு நாள் இந்த வீட்டில் வளைய வருவார்கள் என்ற எதிர்பார்போடு நாட்கள் கடந்து வருடங்களாக மாறிவிட்டன. அவனுக்குள் இருந்த நம்பிக்கை எல்லாம் கரைந்து போய் கொண்டிருந்தது.
அந்த சிறு வீட்டில் கிடைத்த இன்பமும் நிம்மதியும் இங்கே சையத்திற்கு கிடைக்கபெறவில்லை. அவன் அம்மாவின் கையால் சமைத்து உணவை இனி எப்போதாவது உண்ணுவோமா? இந்த ஏக்கம் அவன் மனதில் மலையாய் வளர்ந்து நின்றிருந்தது. 
இப்போதைக்கான அவனுடைய ஒரே ஆறுதலும் துணையும் சினிமாவும் ராகவின் நட்பு மட்டுமே.  அதுவும் இல்லாமல் போயிருந்தால் இந்த தனிமை அவனை பைத்தியமாகவே மாற்றியிருக்கும்.
சையத் தனிமையில் இருந்த  தப்பிக்கவே தொடர்ச்சியாய் படம் இயக்கி கொண்டிருந்தான் என்று கூட சொல்லலாம்.
ஆனால் இப்போது மூன்று மாதங்களாய் ஒரு இடைவெளி. அவன் கனவுப்படத்தை  இயக்குவதில் பல தங்கு தடைகள். 
முதல் தடை கதாநாயகியை முக்கியத்துவம் கொடுத்து எடுக்கும் பெரிய பட்ஜெட் படமென்றதும் தயாராப்பாளர்கள் எல்லோரும் பின்வாங்கினர். அப்போது நண்பனுக்கு துணைநின்று  படத்தை தானே தயாராப்பதாக முன்வந்தான் ராகவ். 
அந்த பிரச்சனை முடிவுக்கு வர அடுத்ததாய் கதைநாயகியை தேடும் படலம் தொடங்கியிருந்தது.
அந்த கதைக்கான கதாநாயகியை தேடி தேடி எல்லோரும் வெறுத்து போயிருந்தனர். அவன் கற்பனை செய்து வைத்திருந்த முகம் மட்டுமே அவனின் படத்திற்கு பொருத்தமான முகம் என்று பிடிவாதமாய் நின்றான் சையத்.
ராகவ் கூட இந்த விஷயத்தில் சையத்தை கடிந்து கொண்டான். 
“என்ன சையத்.. நிறைய திறமையான ஆக்டிரஸ் இருக்கும் போது இவ்வளவு பெரிய படத்துக்கு புது முகம் கொண்டு வரனும்னு நீ சொல்றது சரியில்லை” நேரடியாகவே தன் கருத்தை நண்பனிடம் வெளிப்படுத்தினான்.
“திறமையெல்லாம் நம்ம வளர்த்துக்கிறது.. ஆனா முகம் அப்படி இல்ல… நான் எதிர்பார்க்கிறது ஒரு யுனிக் பேஃஸ்… அதுல ஒரு ஈர்ப்பு இருக்கனும்… அந்த பொண்ணோட அய்ஸ் பேஃஸ் எல்லாமே அவ்வளவு கேச்சியா இருக்கனும்… அப்பதான் இந்த ஸ்க்ரிப்டுக்கு சரியா வரும்” 
“நீ தேடிற முகம் கிடைச்சு… நடிப்பு வரலன்னா “
“உங்களூக்கு என் மேல நம்பிக்கை இருக்கு இல்ல ராகவ்” சையத்தின் பதிலில் அவனின் பிடிவாதமும் உறுதியும் தெரிய வர, ராகவுக்கு வியப்பாக இருந்தது, இதுவரையில் அவனின் கருத்தை சையத் மறுத்து பேசியதே இல்லை. 
ராகவ் அமைதியாகிட, சையத் அவனை நோக்கி “தப்பு எடுத்துக்காதீங்க ராகவ்… இந்த சப்ஜெக்ட் அப்படி” என்றதும் ராகவ்  இயல்பான முக பாவத்தோடு “நோ சையத்.. நாட் அட் ஆல்” என்றான்.
பின்னர் நண்பன் மனதை புரிந்தவனாய் “அந்த ஹீரோயின் கேரக்டர் எப்படிதான் இருக்கனும்” என்று கேட்டதும் சையத் ஆழ்ந்த சிந்தனைக்குள் சென்றான்.
அவன் மனதில் பதிந்திருந்த முகத்தை எப்படி விளக்குவான். 
“எனக்கு எப்படின்னு சொல்லத் தெரியல ராகவ்… க்ளியோப்பாட்ரா பத்தி தெரியுமா ?” என்று அவன் கேட்கவும் ராகவ் “கேள்விப்பட்டிருக்கேன்… பட் டீப்பா எல்லாம் தெரியாது” என்றான்.
“பொன்னியின் செல்வன் படிச்சிருக்கிங்ளா… அதுல நந்தினின்னு ஒரு கேரக்டர் வரும்” என்றதும். ராகவ் புன்முறுவலோடு “எனக்கு புக்ஸ் படிக்கிற பழக்கமே இல்லை… அதுவும் தமிழ்  சுத்தமா படிக்க வராது” என்றான். 
தமிழர்களாயிருந்தாலும் இப்படி சொலவ்து எல்லோருக்கும் ஒரு பேஃஷன். 
சையத் சிரித்துவிட்டு “நானும் அப்படிதான்.. ஆனா நந்தக்குமார் சார்தான் சொன்னாரு… கற்பனை வளம் அதிகமாகனும்னு நிறைய புத்தகங்கள் படிக்கனும்னு… அப்படிதான் நான் படிக்க ஆரம்பிச்சேன்…” என்றான்.
மேலும் அவனே “நான் சொன்ன இரண்டு கேரக்டருமே வரலாறுகளில் ரொம்பவும் வித்தியாசமானவங்க.. வசீகர தோற்றம் ஆளுமை புத்திசாலித்தனம் எல்லாமே இருக்கும்… எப்பேர்ப்பட்டவனை தன் காலடில கிடக்க வைச்ச பெண் க்ளியோப்பாட்ரா… போருக்கு வந்த ஆண்களை தன் அழகால கட்டிப் போட்ட பெண்… அதே மாதிரிதான் பொன்னியின் செல்வனோட நந்தினி கதாப்பத்திரமும்… இந்த இரண்டு பெண்களுக்கும் கேரக்டரை தாண்டி அந்த முகம் ஸ்பெஷல்” என்றான்.
இப்போது ராகவிற்கு சையதின் எண்ணம் ஒரளவுக்கு பிடிப்பட்டுவிட்டது. 
இருவரும் விவாதத்து கொண்டிருந்த பின் 
ராகவ் தன் நண்பனிடம் “பேசாம நீ எதிர்பார்க்கிற அந்த ஹீரோயின் முகத்தை  ஒரு எக்ஸ்பட்டை வர வைச்சி ஸ்கெட்ச் பண்ணா என்ன ?” என்றான்.
இந்த யோசனை சையத்திற்கும் பிடித்திருந்தது.

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!