Naan Avan Ilai 19(1)

download (6)-51929384

நான் அவன் இல்லை 19(1)

அந்த டைனிங் டேபிள் சம்பவத்திற்கு  பிறகு , கூட்டுக்குள் அடங்கியிருக்கும்  சிறு நத்தை போல,  தத்தை இவளும் தனக்குள் ஒடுங்கியே இருந்தாள் . ஏனோ வீராவிடம்  மட்டும் சகஜமாக  பேசும் மதுமதி … அவனை தவிர மற்ற அனைவரையும்  தவிர்த்தே வந்தாள். அதிலும் முக்கியமாக ஆதித்யாவை கண்டாலே ஓடி ஒளிந்து கொள்வாள்   . ஒரு வாரம் கழிந்தும் ஏனோ அவளால் அந்த இறுக்கத்தில்  இருந்து  சகஜகமான  சூழ்நிலைக்கு வர முடியவில்லை . ஆனால் ஆதித்யா  அவளை விடவில்லை .

அவளுக்கான ஆடைகளை கூட நேரம் ஒதுக்கி  தானே தேர்வு செய்து  வாங்கி கொடுத்தான் .. அவள் வேண்டாம் என்று மறுத்தாலும்  உணவு உண்ணும் பொழுது  அவளையும் தன்னோடு உணவருந்த வைத்தான் . ஆக  முடிந்தளவு அவளை தன்னோடு  நெருக்கமாக  பிணைந்து கொள்வதற்காக  தனக்கு கிடைக்கும் சொற்ப நேரத்தையும் அவளுக்காக   செலவிட்டான்.

ஆனால் அவளுக்கு தான் கூண்டுக்குள் மாட்டிக்கொண்டது போல மூச்சு  முட்டியது. அவளால் அங்கே இயல்பாகவே இருக்க முடியவில்லை .

தன் வீட்டின் உள்ளவர்களை எண்ணி மிகவும் வேதனை பட்டாள் … அர்ஜுன் , ஜுவாலா , இளமாறன் மற்றும் சந்தியாவின் நினைப்பு அவளை மிகவும் சங்கடப்படுத்தியது  .  கண்களில் இருந்து கண்ணீர் கேட்காமலே  சுரந்தது .

அப்பொழுது  யாரோ கதவை தட்டினார்கள் .

” வந்துட்டான்னா … என்ன புதுசா கதவை எல்லாம் தட்றான் …  டின்னருக்கு டைம் ஆகிடுச்சா என்ன?? பசிக்கவே இல்லை … சொன்னா கேட்கவும் மாட்டான்  ” என அலுத்து கொண்டவள்  … புறங்கையால் கண்ணீரை துடைத்தபடி … கதவின் அருகே சென்றவள் ,

” ச்ச மறந்து கதவை பூட்டிட்டோமா … திட்டுவானே ” என்று எண்ணியபடி  கதவை திறந்தாள் . 

“கதவை பூட்டிட்டு உள்ள என்ன பண்ணிட்டு இருக்க  ” சீறியபடி உள்ளே நுழைந்தான் ஆதித்யா .

” தூங்கிட்டேன் ” எரிச்சலுடன் கூறினாள் .

” பூட்டாம தூங்க வேண்டியது தானே “

‘ ஹ்ம் … சந்தேகத்துக்கு  ஒன்னும் குறைச்சல் இல்லை … அப்படியே தப்பிக்க விட்டுட்டாலும் தான் ‘ மனதிற்குள் திட்டியவள் .

” சாரி ” மெல்ல முணுமுணுத்தாள் .

”  உனக்கு தலையில அடிபட்டிருக்கு … காயம் சரியாகுற வரைக்கும் அடிக்கடி தலை சுத்து இருக்கும் .. நீ கதவை பூட்டிக்கிட்டு மயங்கி விழுந்துட்டன்னா .. உள்ள உனக்கு என்ன நடக்குதுன்னு எனக்கு எப்படி தெரியும் … ??அதனால தான் கதவை பூட்டாதன்னு சொல்றேன் …எனக்கு உன் மேல சந்தேகம் எல்லாம் இல்லை  ” மதியின் மனதை படித்தவன் …. அவள் கேட்காமலே தனது செயலுக்கு விளக்கம் கொடுத்தான் .

சட்டென்று நிமிர்ந்து   அவனது கண்களை பார்த்தவளுக்கு  அவன் கண்களில் உண்மையான அக்கறை தான் தெரிந்தது .  ஆனாலும் ஏனோ  மனம் நம்ப மறுத்தது . அவன் காட்டும் கரிசனம் கூட அவளுக்கு ஐயத்தை தான் கொடுத்தது .

‘மனசில கூட ஒன்னும் நினைக்க முடியல மாயாவி மாயாவி ‘ மனதிற்குள்  திட்டினாள் .

” ஏன் டல்லா இருக்க உடம்புக்கு ஏதும் பண்ணுதா ” அக்கறையாக தான்  கேட்டான் … ஏனோ அவனது குரல் அவளது மனதை தொடவில்லை .

” இல்லை … நல்லா தான் இருக்கேன் “ஓட்டுதல் இல்லாமல் பதிலளித்தாள் .

” இன்னும் உனக்கு ட்ரெஸிங் பண்ண தாரா வரலையா ” நெற்றியை பார்த்தபடி கேட்டான் .

” இல்லை ” என்றாள் .

” சரி நீ  ஃப்ரெஷ் ஆகிட்டு வா ” என்றவன் … உடனே வீராவுக்கு அழைப்பு விடுத்தான் .

அவன் பேசி முடித்த அடுத்த ஐந்து நிமிடங்களில் கதவை தட்டும் சத்தம் கேட்க . அப்பொழுது பார்த்து குளியல் அறையில் இருந்து முகத்தை துடைத்த படி வெளியே வந்த மதி ,

” நீங்க இருங்க நான்  யாருன்னு பார்க்கிறேன் ” என கதவை திறந்தாள்   .

” என்ன உள்ள வர வேண்டாமா?? வாசலை அடச்சிட்டு நிக்கிற ” என முறைத்தபடி    உள்ளே வந்தாள் தாரா . 

” என்ன பார்த்துட்டு இருக்க உக்காரு ” என அதட்டியவள்  வேகமாக காயத்தில் இருந்த  பழைய கட்டை பிரிக்க  … வலி தாங்காமல் ‘ ஆ ‘ என்று மதி கத்தியே விட்டாள்.

அதுவரை தாராவின்  நடவடிக்கைகளை பொறுமையுடன் பார்த்து கொண்டிருந்த ஆதியின் பொறுமை அனைத்தும் காற்றில் பறந்து போக   அடுத்த நொடி ,

” தாரா  ” என அந்த அறையே அதிரும் படி அவன் அழைத்ததில் அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்த்த தாராவின்  விழிகள் ஆதித்யாவை கண்டத்தில் பயத்தில் விரிந்தது .

ஆதித்யா மதியின் அறையில் இருப்பதை அறிந்திராத தாராவுக்கு அவனை அங்கே கண்டதும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது ..குத்தீட்டி போல அவளை துளைத்த அவனது பார்வையை கண்டு அவளுக்குள் நடுக்கம் பிறந்தது .உடம்பெல்லாம் சில்லிட்டு போய்விட … மிரண்டு போய் நின்றாள் தாரா.

” என்ன பண்ணிட்டு இருக்க ” எரிந்து விழுந்தான் .

” என்னாச்சு ஆதி ” ஒன்றும் தெரியாதது போல மெல்ல கேட்டாள்.

உடனே தன் கரம் உயர்த்தி தடுத்தவன் ,” கால் மீ சார் ” – என்கிட்ட உனக்கு எந்த   உரிமையும் இல்லை    என்பதை  மூன்றே  வார்த்தையில் உணர்த்தினான் .

” ஆதி ப்ளீஸ் … ” என  அவனது சீற்றம் கண்டு பதறிய மதி ,  எங்கே கோபத்தில் தாராவை ஏதும் செய்து விடுவானோ என்று அனிச்சையாக  அவனது கரங்களை பற்றினாள் . 

அடுத்த நொடியே அவனது முகத்தில் இருந்த கோபம் எல்லாம் மந்திரம் போட்டது போல மறைந்துவிட .  அதை கண்ட  தாராவுக்கு தான் ஆத்திரமாக இருந்தது .

‘ எத்தனை வருஷமா ஜித்தேறியில் இருக்கிறேன் …எனக்கில்லா உரிமை இந்த துரோகிக்கு மட்டும் இருக்கிறதா ? அப்படி எந்த விதத்தில் இவளை விட நான் குறைந்துவிட்டேன்…  ‘ அவமானத்தில் தாராவின்  முகம் சிவந்துவிட்டது  .

” யஸ் சார் ” அழுகையை  அடக்கிய  தாராவின் குரல் தழதழத்தது.

” அவளுக்கு வலிக்க கூடாது … புரியுதா ” ஆதித்யாவின் எச்சரிக்கும் குரலில்  இப்பொழுது கோபம் கொஞ்சம் குறைந்திருந்தது .

” யஸ் சார்  ”  தலையசைத்தவள் மதிக்கு  கட்டை பிரித்து காயத்தை பரிசோதித்தாள்.

” எல்லாம் ஓகே தானே ” மதியின் முகத்தை பார்த்தபடியே  தாராவிடம் கேட்டான் .

” காயம் குறைஞ்சிருக்கு … இனிமே கட்டு போடணும்ன்னு அவசியம் இல்லை … மருந்து மட்டும் போட்டா போதும் .. காயம் ஆறிடும் ” என சன்னமான குரலில் கூறிய தாரா ,   மருந்தை  தன் கையில் எடுக்கவும்,  

” வேண்டாம் ! நான் பண்ணிக்கிறேன் நீ கிளம்பு ” என குரலை  உயர்த்தாமல்  அழுத்தமாக  கூறினான் ஆதித்யா .

” ஓகே சார் ” என கனனன்று வந்த கோபத்தை தனக்குள்ளே அடக்கிய தாரா , வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றாள்.

தாரா விட்டுச்சென்ற  முதலுதவி பெட்டியை திறந்தவன் அதில் இருந்த பஞ்சையும் ஆன்டிசெப்டிக் மருந்தையும் எடுத்து வந்து மதியின் அருகில் அமர்ந்தான் . இருவரின் பார்வையும்   மோதிக்கொண்டது  . அவள் பார்வையில்  தெரிந்த வலி அவனது மனதை பிசைந்தது ….  அவன் பார்வையில் தெரிந்த நெருக்கம் அவளுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தியது … ஏனோ அவனது பார்வையை மேலும் சந்திக்க முடியாமல்  தன் தலையை தாழ்த்தி  கொண்ட மதுமதி…  தனக்குள் பரவிய நடுக்கத்தை தவிர்ப்பதற்காக  தன் கரங்களை பிசைந்தபடி அமர்ந்திருக்க …   

” தாரா விஷயத்தை நீ ஏன் என் கிட்ட சொல்லல ? வீரா கிட்ட சொன்னதை என்கிட்ட சொல்லிருக்கலாமே ! ” ஆதித்யாவின்  கரகரத்த குரலில் தெரிந்த வருத்தம் அவளது மனதை தொட்டது .

சட்டென்று நிமிர்ந்த மதுமதியின்  விழிகள் ஆச்ச்சர்யத்தில் விரிந்தது …ஆதித்யா சக்கரவர்த்தி !  அரக்கனையே  கொல்லும் அரக்கன்  !  எதற்கும்  அஞ்சாதவன்  தன்னை எண்ணி வருத்தப்படுகிறானா ! மதியால் நம்ப முடியவில்லை … ஆனால்  அவன் பார்வை,  அதில் சட்டென்று தோன்றி மறைந்த வருத்தம்,  அதை கண்ட பிறகும் அவளால் நம்பாமல் இருக்க முடியவில்லை .

”  நானா  வீரா கிட்ட எதுவும் சொல்லல … ரெண்டு மூணு தடவை அவர் தான்  பார்த்துட்டாரு…  ” நிமிர்ந்து அவனது முகத்தை பார்த்து கூறினாள் .

சட்டென்று அவன் முகத்தில் ஒருவித புன்னகை  தோன்றியது …  ரசிக்கும் படியான புன்னகை தான் … அவளும் ரசித்தாள் தான் ஆனால்  மனதிற்குள் மட்டும் .

” உனக்கு வேண்டாம்ன்னா …. வேற யாரையும் அப்பாயிண்ட் பண்ணவா  ? ” காயப்பட்ட இடத்தை அவளுக்கு வலிக்காமல் சுத்தம் செய்தபடி கேட்டான் .

‘ ஏதோ இவரு ரொம்ப  சாஃப்ட் மாதிரி … மாத்தணும்ன்னா உன்னை தான் டா மாத்தணும்  ‘ தனக்குள் முணுமுணுத்தாள்.

” என்ன சென்ன ?” என்று அவன் கேட்டதும் பதறியவள்,

” தாராவே இருக்கட்டும்ன்னு சொன்னேன்  ” என சமாளித்தாள்.

” ம்ம்ம் தென் ஓகே … எல்லாம்  உன் இஷ்டம் தான் … உனக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னா தாராவே இருக்கட்டும் …உன் விருப்பத்தை மீறி இங்க வேற எதுவும் நடக்காது ”  அவளது முகபாவத்தை ரசிப்பதற்காகவே   ,  அடக்கப்பட்ட  சிரிப்புடன் வேண்டுமென்றே  கூறினான் .

‘ திமிரு புடிச்சவன் ! வேணும்னே வெறுப்பேத்துற  மாதிரி பேசுறான் ‘ என்று நினைத்துப்பார்த்தபடி  நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்தாள் .ஆதித்யாவின்  விழிகள்  அவளை இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தது .

” திமிரு புடிச்சவனா நான் ! ” ஆதித்யாவின்  தணல் விழிகள் தகித்தது .

‘ ஐயோ சத்தமா சொல்லிட்டேனா …  பயங்கரமா  முறைக்கிறானே ….அன்னைக்கு மாதிரி முத்தம் எதுவும் குடுத்திருவானோ ?’ என பயந்து  மெத்தையில் அமர்ந்திருந்தவள் சட்டென்று எழுந்து நிற்க  ,

” உனக்கு எவ்வளவு தைரியம்  இருந்தா……. ” என சீறியபடி அவளை நெருங்கிய ஆதித்யா  ” சாரி …. ஐயம் சோ  சாரி … ”  என தன் மீன் விழிகளை  சுருக்கி மதி யாசித்ததும் … தன் கோபத்தை எல்லாம் எங்கோ பறக்க விட்டிருந்தான்    .

இப்பொழுது  மிரண்ட விழிகளும் மிரட்டும்  விழிகளும்  ஒன்றோடு ஒன்றாய் பிணைந்துகொள்ள … அங்கே வார்த்தைகள் உறங்கிப்போய்விட  ..மூச்சுகள் மோதிக்கொண்டன . அவர்களுக்குள் தேகம் தீண்டா ஊடல் ஒன்று அவர்கள் அறியாவண்ணம் இரகசியமாய்  ஊடுருவியது  .

அங்கே காற்றுக்கான  இடைவெளியும்  கூட குறைந்து கொண்டிருக்க … தன்னிலையை உணர்ந்த ஆதித்யா  … அவள் தன்னை பயத்தோடு  பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே சுத்தம் செய்யப்பட்ட அவளது காயத்திற்கு மருந்து பூசி முடித்தவன் ,அவளது காதாரருகே  குனிந்து ,

” இந்த மாதிரி பேசுறது இதுவே கடைசியா இருக்கட்டும் ” பொய்யாக  எச்சரித்தான் ஆதித்யா .

உதட்டை மடித்து கடித்தபடி தலை கவிழ்ந்தவள்  அவனை நிமிர்ந்து பார்க்காமல் , ஆமோதிப்பதாக  தலையை மட்டும் அசைத்தாள் .

கண்களில் இருந்து கண்ணீர் ஒரு மெல்லிய திரையாக திரண்டு அவளது  கன்னத்தை நனைத்தது . உடனே அவன் அறியாவண்ணம் துடைத்து கொண்டாள் . ஆனால்  அவன் தான் மாயாவியே மறைக்க முடியுமா அவனிடம் … அதை கண்டுகொண்டவன்  ,மதியிடம் மெல்ல நெருங்கி அவளது  முகத்தில் சரிந்து விழுந்த கற்றை குழலை  அவளது காதோரம்  ஒதுக்கி விட்டபடி ,

” இப்படியே  ரூம்குள்ள  அடஞ்சி கிடக்கணும்ன்னு அவசியம் இல்லை … கார்டன் இருக்கு … லைப்ரரி  இருக்கு … கொஞ்சம் பிரீயா  இரு ” என்றவன் … அடுத்து விழுவதற்காக அவள் விழியிலே காத்திருந்த   அவளது கண்ணீரை கீழே விழுவதற்குள்  துடைத்தவன் , 

மதி  சுதாரிப்பதற்குள் கண்ணீர் தடம் பதிந்திருந்த  அவளது கன்னத்தில் ,  தென்றலின் தீண்டல் போல  மெல்லிய முத்தம் ஒன்றை பதித்து … அவள் அதிர்ச்சியுடன் தன்னை பார்க்கவும்,

 “நான் எவ்வளவு சாஃப்ட்ன்னு  உனக்கு காட்ட வேண்டாம் ! … ரெடியா இரு .. இனிமே அடிக்கடி காட்றேன்  ” என்ற ஆதித்யா விஷமமாய் புன்னகைத்துவிட்டு  அறையை விட்டு  வெளியேறினான் . திகைப்பில் இருந்து மீள முடியாமல் சமைந்து  நின்றாள் மதுமதி .

– தொடரும்