Naan Avan Ilai 19(2)

download (10)-882dc61c

Naan Avan Ilai 19(2)

நான் அவன் இல்லை 19 (2)

 ஆதித்யா சக்கரவர்த்தியின்  அலுவலக அறையில் ,

” சொல்லு தாரா என்ன விஷயம் ” – கணினியில் பதிந்திருந்த  தன்  பார்வையை அகற்றாமல் கேட்டான் .

” நான்  இனி  ஹாஸ்ப்பிட்டல் போகலாமா ?” – சிறு தயக்கத்துடன் கேட்டாள்.

” நான் உன்கிட்ட என்ன சொன்னேன் ?” என்று கேட்டான் அடங்கிய குரலில் .

” அவ உடம்பு சரியாகுற வரைக்கும் கூட இருக்க சொன்னீங்க “அவனது அடங்கிய குரலில் ஒளிந்திருந்த கோபம் அவளை மிகவும் அச்சுறுத்தியது .

” தென் “புருவம் உயர்த்தினான் .

”  இப்போ அவளுக்கு தான்  காயம் ஓரளவு சரியாகிடுச்சே   ” பயம் தான் ஆனாலும் , தயங்கி தயங்கி கேட்டுவிட்டாள்.

”  அவ ரொம்ப வீக்கா இருக்கா  … ஹெல்த்தி டயட் குடு … அவளை நல்லா பார்த்துக்கோ … காயம் முழுசா சரியாகுற வரைக்கும் நீ அவ கூட தான் இருக்கனும் …   … இட்ஸ் மை ஆர்டர் ” அழுத்தம் திருத்தமாக கூறினான் .

” ஓகே சார் ” என அங்கிருந்து கிளம்பியவளை தடுத்தவன் , 

” தாரா  இனிமே மதி கிட்ட ரூடா நடந்துக்கிட்ட இப்படி பொறுமையா  பேசிட்டு இருக்க மாட்டேன்  ?”சிவப்பேறியிருந்த விழிகள் அக்னியின் ஜுவாலையை நினைவூட்டின .

“சாரி சார் இனிமே அப்படி பண்ண மாட்டேன்  ” கண்ணீரை கட்டுப்படுத்தியதால்  தாராவின் குரல் உள்ளே சென்றது.

“ம்ம்  இதுவே கடைசி முறையா இருக்கட்டும் ” என்று கூறிவிட்டு அவளிடம் முகம் கொடுக்காமல் கணினியில்  மீண்டும் கவனமானான் .

தாரா சென்றதும் உள்ளே வந்த நாகா ,” ஆதி கிட்ட தட்ட ஒருவாராமா  கேட்டு பார்த்துட்டோம் … வாய திறக்க மாட்டிக்கிறான் … என்ன பண்றது ” என்றான் .

” சரி லாஸ்ட் சான்ஸ் … சொல்லலைன்னா  அடுத்தகட்ட ட்ரீட்ட்மெண்டை ஆர்மபிக்கலாம் ”  என்றவன் நாகாவுடன்  பேஸ்மெண்ட் அறைக்குள் நுழைந்தான். அவன் நுழைந்ததும்  அவனிடம் வந்த வீரா ,” அடிச்சதுல தலையில காயம் பட்டிருக்கு உடனே ட்ரீட்மெண்ட் குடுக்கலைன்னா  உயிர் பிழைக்கிறது கஷ்டம் தான் ஆதி”  என கூறி  மருத்துவரின் சான்றிதழை அவனிடம் நீட்டினான் .

அதை வாங்கி படித்த ஆதித்யா மீண்டும் அதை அவனிடமே கொடுத்து விட்டு… தலை தொங்கிய நிலையில் நாற்காலியில் அமர்ந்திருந்த மஹேந்திரனின் அருகில் வந்தான் .

கை கால்கள் பிணைக்கப்பட்டிருக்க கிழிந்த நாராக கிடந்தான் . அப்பொழுது அவனது தலை முடியை ஆவேசமாக பிடித்து தொங்கிக்கிடந்த  அவனது முகத்தை அவன் வழியில் அலற அலற அழுந்த  பற்றி நிமிர்த்திய ஆதித்யா ,

”  என்னை பாரு மஹேந்திரன் ” புயலை உள்ளடக்கிய குரலில் அழைத்தான் … மிகவும் சிரமப்பட்டு  தன் கண்களை திறந்தவன்  ஆதித்யாவை மிரட்சியுடன் பார்த்தான் .

” என்னை விட்ருங்க  பாய் தெரியாம பண்ணிட்டேன் “கெஞ்சினான் .

“தெரியாம பண்றதுக்கு நீ என்ன குழந்தையா ??எங்க அந்த கமிஷனர்??… ” அவனது காயம் பட்ட தோள்களை இறுக்கமாக பிடித்து உலுக்கினான் ஆதித்யா   .

”  தெரியாது  பாய்  ” அவனது அலறல் ஒலி அறையெங்கும் எதிரொலித்தது .

” ட்ரீட்மெண்ட் குடுத்தாதான்  நீ உயிரோட இருப்ப …உனக்கு கடைசியா ஒரு வாய்ப்பு தரேன்….  உயிர் மேல ஆசை இருந்தா உண்மைய சொல்லு ??  ” என ஆதித்யாவுக்குள் இருக்கும் அசுரன்  மஹேந்திரனை  அச்சுறுத்தினான்.

” மன்னிச்சிருங்க பாய் … என்னை விட்ருங்க  எனக்கு குடும்பம் இருக்கு ” கெஞ்சினான் .

” மன்னிப்பு தானே கொடுத்துட்டா போச்சு ….. ! “என்று வன்மத்துடன் புன்னகைத்த ஆதித்யா ,

” அவன் இப்போ  எங்க இருக்கான்னு  மட்டும்  சொல்லு பத்திரமா  நானே உன்னை அனுப்பி வைக்கிறேன் ”  என்றான் 

” சொல்லு ” தன் பிடியின் அழுத்தத்தை அதிகரித்தான் ஆதித்யா .

” தெரியாது சார் “

” ஓ தெரியாது … சரி ” என சிரித்தான் …. ஆனால் அது சாதாரண சிரிப்பல்ல எதிரியை சிதைக்கும் கொடூரமான சிரிப்பு மஹேந்திரனின் கால்கள் நடுங்கியது . 

” போன மாசம் தான் உன் பையனுக்கு கல்யாணம் அச்சுல “

” ஆமா பாய் “

” ஏதாவது விஷேம் உண்டா ” உதட்டில் அதே சிரிப்பு எங்கும் செல்லாமல் அப்படியே இருந்தது … அந்த சிரிப்பு அந்த பார்வை அவனை மிகவும் அவமானப்படுத்தியது .

” இல்லை சார் “

” ஓ பையன் ரொம்ப ஸ்லோவோ … நீ கொஞ்சம் க்ளாஸ் எடுக்குறது ” கொடூரமாக கேட்டான் … மஹேந்திரனின் காதால் அதை கேட்க முடியவில்லை .

” சரி மருமக இப்போ வீட்ல தான இருப்பா “

” ஆமா …. பாய் ” திணறினான் … மூச்சு விடுவதற்கு கூட மிகவும் சிரமப்பட்டான் …  தொண்டை அடைத்துக்கொண்டது.

” வீரா போ போய் கூட்டிட்டு வா … ரொம்ப போர் அடிக்குது …. ரெண்டு நாள் போதும்…  மஹேந்திரன் நீயே வெயிட் பண்ணி கூட்டிட்டு போ என்ன ?” குரூரமாக கேட்டான் .

” மன்னிச்சிடுங்க பாய் ” கண்களை இறுக்கமாக மூடிகொண்டவனுக்கு உடம்பெல்லாம் கூசியது ….” வேண்டாம்  பாய்  விட்டுடுங்க ” என அழுதபடி ஆதித்யாவிடம் கொஞ்சினான் .

” அந்த பொண்ணுக்கும் உன் வீட்டு பொண்ணுங்க வயசு தான டா இருக்கும் …. உங்களுக்கெல்லாம் வெட்கமா இல்லை ?” என தன் கழுத்து நரம்பு புடைக்க கர்ஜித்தவனின் கரங்கள் மஹேந்திரனின் தாடையை உடைத்தது .

” நான் வேண்டாம்ன்னு தான் சொன்னேன் … கமிஷனர் சார் தான் “என அவன் சொல்லி முடிப்பதற்குள் அடுத்த அடி இடியென அவன் நெஞ்சில் விழ … நாற்காலியுடன் பின்னால் சரிந்தான் .

ஆதித்யா வீராவை நோக்கினான் … அடுத்த நொடி அவனது பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவன் மஹேந்திரனை மீண்டும் பழைய நிலையில் அமரவைத்தான்.

” நீ என்ன சொன்ன …! அவன் என்ன செஞ்சான்னு! எனக்கு தேவை இல்லை … அந்த பொறுக்கி எங்க இருக்கான் …சொல்லு?? ” பற்களை நறநறத்தான் .

” சொல்லிர்றேன்  பாய் … என்னை எதுவும் பண்ணிராதீங்க என் பொண்ணுக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகலை “என்றான் .

“ம்ம்ம் சொல்லு ” மிரட்டினான் .

” அவர் மச்சானுக்கு  ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு அங்க தான் …. ”  என மஹேந்திரன் சொல்லி முடிக்கும் முன்பே ….  ஆதித்யாவின் பிஸ்டலில் இருந்து வந்த தொடர் தோட்டாக்கள்  மஹேந்திரனின்  நெஞ்சில்  மாறி மாறி பாய்ந்தது .

சற்று முன் அந்த ஆண்ணை   வெறித்தனமாக வதைத்த,  ரத்த கறை படிந்த  அவன் கரம்….  இப்பொழுது வெறி அடங்கியதும்  அருவருத்தது .

‘ எனக்கு குடும்பம் இருக்கு … என் பொண்ணுக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகலை ‘ என்ற அவனது குரல் ஆதித்யாவின் செவியில் கேட்டுக்கொண்டே இருந்தது .

சில சமயம்   இப்படி அருவருப்பை அவன் உணரும் போது ” என்ன வாழ்க்கைடா  இது ” என்று நினைத்திருக்கிறான். அப்படி தான் இன்றும்  நினைத்தான் .

அவசரமாக  உடைகளை களைந்து விட்டு பாத்டப்பில்  இளம் சூடான நீரில் கண் மூடி அமர்ந்திருந்தவனுக்கோ மனதில்  ஒரு வெறுமை . அதற்கு காரணமும் அவனுக்கு தெரியவில்லை .கொலை ஒன்றும் அவனுக்கு புதிது இல்லை . இந்த வெறுமையும் புதிது இல்லை … ஆனால் இப்பொழுதெல்லாம் இது போன்ற காரியங்கள் செய்யும் பொழுது ஏனோ  வலித்தது . ‘ ஏன் தனக்கு மட்டும் இப்படி ?’ என்று யோசித்து கொண்டு இருந்தான் .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

வெகு நேரமாக  தோட்டத்தில் தனிமையில் ஏதோ சிந்தனையில் அமர்ந்திருக்கும் மனைவியை நெருங்கிய ஆதவன்   ,

” இன்னும் எத்தனை நாளைக்கு தான் அதையே நினைச்சிட்டு இருப்ப ப்ரீத்தா … முதல்ல உள்ள வா  சாப்பிட  டைம் ஆச்சு … மதியானமும் எதுவும் சாப்பிடலை ” என்றார் .

“எனக்கு  வேண்டாம்  பா … நீங்க போங்க “

” ப்ரீத்தா இது என்ன பிடிவாதம் “

”  பிடிவாதம் பண்றது நான்னா இல்லை நீங்களா… மது காணாம போய் ஒன்பது நாள் ஆகுது …. அவளை பத்தி ஒரு தகவல் இல்லை …  அர்ஜுன் இப்போ எல்லாம் நேரத்துக்கு  வீட்டுக்கு வர்றதில்லை  …நான் என்ன தான் பண்றது … எத்தனை நாளா கேட்டுட்டு இருக்கேன் பதில் சொல்லாம அமைதியா இருக்கீங்க   ” கண்ணீருடன்  கணவனை பார்த்தாள் . 

” சரி இப்போ உனக்கு என்ன தெரியணும்  “

”  அவரை போய் பார்த்தீங்களா இல்லையா … மது விஷயத்துக்கு  என்ன சொல்றாரு “

” அவரை பார்க்க முடியலை … தகவல்  சொன்னோம்  …. என்கிட்ட பேசினாரு … மது விஷயத்துல  நாம யாரும் தலையிட கூடாதாம் …இதை விட்டு ஒதுங்கி இருக்க சொல்லிருக்காரு … எல்லாத்தையும்  அவர் பார்த்துக்குவாராம்  “

”  அவர் பார்த்துக்குவார்ன்னா எப்படி  “

” ப்ரீத்தா  அவர் மதுவோட அப்பா … பொண்ணு  மேல  நம்மளை விட அதிகமாவே அவருக்கு அக்கறை  இருக்கும் “

” அக்கறை இருந்தா ஒருநாள் வந்து பார்த்திருப்பாருல … அவருக்கு யார் மேலையும் அக்கறை கிடையாது… நம்ம எல்லாருடைய சாவையும் பார்த்தா தான் அவருக்கு நிம்மதி கிடைக்கும்  ” கண்களில்  இருந்து கண்ணீர் அனுமதியின்றி  இறங்கியது .

“ப்ரீத்தா  அவர் உன் அண்ணன்  என்ன தான் வெறுப்பு இருந்தாலும் அப்படி பேசாத …. இப்போ அவரோட உயிர் ஆபத்துல இருக்கு … கொஞ்ச நாளைக்கு அவரால வெளில வர முடியாது ..மத்தபடி பொண்ணு மேல அன்பு இல்லாம இருக்குமா? “

” அவர் அன்பு எது மேலன்னு எனக்கு நல்லா தெரியும் … சாகும் பொழுது  அண்ணிகிட்ட  மதுவை நல்லா பார்த்துகிறேன்னு  சொன்னேன் … இப்போ அவ எங்க இருக்கான்னு கூட தெரியல … ஏங்க அர்ஜுன் சொன்னானே  ஆதித்யா … அவரை போய்  பார்ப்போமா ?”

” அதெல்லாம் ரிஸ்க் ….  வீட்ல மது மட்டும்  இல்லை , இன்னும் மூணு பசங்க இருக்காங்க …  எல்லாத்தையும் தயாளன் பார்த்துக்குவாரு , அவர்   சொல்லாம  எதுவுமே நாம செய்ய முடியாது ப்ரீத்தா … இனிமே இதை பத்தின ஆர்க்யுமென்ட் நமக்குள்ள வர கூடாது ” என ஆதவன் தன் மனைவியை உறுதியாக எச்சரித்தார் .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

“தயாளன் மாமா … எங்க தான் இருப்பாரு …. நம்மளை கூட பார்க்க மாட்டேன்னு சொல்லிட்டாரு … பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு   ” என்றபடி கணவனின் அருகே வந்து அமர்ந்தார் மிருதுளா .

” ரொம்ப முக்கியம் அவன்  எப்படி இருந்தா என்ன … … பல வருஷம் கழிச்சு நிம்மதியா இருந்தோம்  … மறுபடியும் பிரச்சனை வந்திருச்சு … எல்லாம் அவனால தான் …  மது நல்ல படியா சீக்கிரமா வீட்டுக்கு வந்தா போதும் “

‘ எனக்கு அந்த சனியன் ஒழிஞ்சா போதும்ன்னு இருக்கு … இவருக்கு மது வந்தா போதுமாம்!  முட்டாள் மனுஷா .. உன் பொண்ணு வாழ்க்கையை பங்கு போட வந்தவ  அவ …. அது கொஞ்சமாவது புரியுதா  ‘ என மனதிற்குள்  திட்டியவள் .

” அதுக்கு அவ உயிரோட இருக்கணும்ல “

” ஏய் உன் வாயில நல்லா வார்த்தையே வராதா … இருக்கும் பொழுதும்  அந்த பொண்ணை நீ சும்மா விடல …இப்பவும் எதாவது சொல்லிட்டே இருக்க … எனக்கு என்னவோ மது விஷயத்துல உன் மேல தான் சந்தேகமா இருக்கு .. நீ ஏதும் பண்ணிட்டியா டி “

” அதுசரி எனக்கு வேற வேலை இல்லை பாருங்க … நான் என்ன உங்க அண்ணனை  மாதிரி  கொலை … கள்ள கடத்தல் பண்றவன்னு  நினைசீங்களா “

” உனக்கும் என் அண்ணனுக்கும்  உள்ள ஒரே வித்யாசமே  அது மட்டும் தான்…. நீ அந்த மாதிரி இழிவான காரியம் எல்லாம் பண்ண மாட்டன்னு நான் நம்புறேன்… மது விஷயத்துல நம்மளையும் தலையிட கூடாதுன்னு  சொல்லிட்டாரு … எனக்கு என்ன பண்றதுண்ணே தெரியல  ”  என்றவர் மதுவை எண்ணி வருத்தத்துடன் இருக்க .

‘ நீ அந்த மாதிரி இழிவான காரியம் எல்லாம் பண்ண மாட்டன்னு நான் நம்புறேன்’ என்ற அருள்நிதியின்  வார்த்தையிலே மூழ்கி இருந்த மிருதுளாவின் கரங்களில் ,  ரத்த கறை  இருப்பது போன்ற பிம்பம் சட்டென்று தோன்றி மறைந்தது …. ஆனால் அது எதுவும் மிருதுளாவை  அசைக்க வில்லை … சில நொடி பதறியவர்   பின்பு தன்னை இயல்பாக காட்டிக்கொண்டார்   .

‘ அப்பன் பொண்ணு ரெண்டு பேரும் போனா தான் நாம சொத்தோட   நிம்மதியா இருக்க முடியும் ‘ என்று எண்ணியவரின்  முகத்தில் தெரிந்த வக்கிரம்  அருள்நிதியின் பார்வையில் இருந்து வழக்கம் போல தப்பியது .

அறியாமல் தவறிழைக்கும் கரங்கள் தானே பழி பாவத்துக்கு அஞ்சும் … அறிந்தே  தவறிழைக்கும்  கரங்களுக்கு  பழி என்ன ?? பாவம்  என்ன ??  அது போல் தான் மிருதுளாவும்  பழி பாவத்துக்கு அஞ்சும் நிலையை எப்பொழுதோ   கடந்திருந்தார் .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

குளித்துவிட்டு  இடையில் டவலுடன் வந்தவன் கண்ணாடி முன்னே நின்று தலையை துவட்ட , அவன் வாசல் கதவு  தட்டப்பட்டது .  தட்டியது  வேற யாரும் இல்லை  நாகா தான் .

நாகாவின் குரல் கேட்டதும் அவனை உள்ளே அழைத்த ஆதித்யா .

” இன்னும் தூங்கலையா ?” என்று கேட்டான் .

” கொஞ்சம் பேசணும் ” என்று சொல்ல … அவனோ தலையை துவட்டிய டவலை ஒரு ஓரமாக வைத்துவிட்டு ,

” ம்ம் சொல்லு ” என்று  அவன் எதிரே வந்து அமர்ந்தான் .

” அத்தை உன்னை கேட்டாங்க … “

” நீ என்ன சொன்ன ?”

” கொஞ்சம் பிசியா இருக்கான் …. அடுத்த வாரம் வருவான்னு சொன்னேன்  “

” அருந்ததி , ஆர்த்தி எப்படி இருக்காங்க  “

” அருந்ததி நல்லா இருக்கா … ஆர்த்தி நல்லா இல்லை ” – சட்டென்று ஆதித்யாவின் பார்வை மாறியது .

” டென்ஷன் ஆகாத … அவ கொஞ்சம் அப்செட்டா இருக்கா … நான் கேட்டேன் சரியா பதில் சொல்லலை … அப்புறம் ஒரு விஷயம் , ஆர்த்திய  அர்ஜுனும் இளமாறனும்  காஃபி  ஷாப்ல மீட் பண்ணிருக்காங்க … அவ ஏதோ கோபமா கிளம்பி போயிருக்கா அதுக்கப்புறம்  இளமாறனும்  ஆர்த்தியும் மீட் பண்ணிக்கலை “

” அந்த அர்ஜுனையும் …. இளமாறனையும் ஏதாவது செய்யணும் போல வெறி வருது ” என ஆதித்யா கோபத்தில் பற்களை கடித்தான் .

” விடு இது நாம கெஸ் பண்ணினது தானே … “

” ஆர்த்தி மேல தான் கோபமா வருது … அவளுக்கு எப்படி புரியவைக்கிறதுன்னே தெரியல … இவளுக்கு லவ் பண்ண அந்த குடும்பத்து பையன் தான் கிடைச்சானா ??  “

” டென்ஷன்  ஆகாத ஆதி … விசாரிச்ச வர அவன் மேல எந்த பிளாக் மார்க்கும்  இல்லை  …. “

” அதனால தான் பொறுமையா இருக்கேன்  ” ஆதித்யாவின் முகம் கோபத்தில் சிவந்தது.

” ம்ம்ம் “

” நான் ஒன்னு நினைச்சா … வேற ஒன்னு நடக்குது …. ஆர்த்தி ரொம்ப சென்சிடிவ் … கோபத்துல நான் ஏதாவது பண்ண போய் ..அவ தப்பான முடிவு எதுவும் எடுத்திட கூடாது .” என ஆதித்யா எரிச்சலுடன் கூறினான் .

” பேசமா அத்தை  , அருந்ததி , ஆர்த்தி மூணு பேரையும் கொஞ்ச நாளைக்கு வெளியூர் அனுப்பி வைக்கலாமா …. ??அவங்களுக்கு இந்த ப்ராப்லம் எல்லாம் தெரியாம இருக்கிறது நல்லதுன்னு  நினைக்கிறன் “

” நானும் அதை பத்தி தான் யோசிக்கிறேன் … சீக்கிரமா ஒரு ட்ரிப்க்கு அரேஞ் பண்ணு ” என்றான் ஆதித்யா .

” தயாளன் பத்தி ஏதாவது நியூஸ் கிடைச்சிதா நாகா “

” இன்னும் இல்லை ஆனா சீக்கிரமா அவனை நெருங்கிடலாம் “

” சீக்கிரம் நாகா … நமக்கு டைம் இல்லை … இதை விட்டு சீக்கிரமா  நான் வெளிய வரணும் ” இயலாமையுடன் கூறினான்… நாகாவின் விழிகள் ஆதித்யாவை ஆச்சரியமாக பார்த்தது .

” இத்தனை வருஷத்துல நீ ஒரு விஷயத்துல முடிவெடுக்க முடியாம இருக்கிறதை நான் இப்போ தான் பார்க்கிறேன் … இதுக்கு தான் மதுமதி கூட எமோஷனலா  அட்டாச் ஆகாதன்னு சொன்னேன் … இப்போ பாரு அவ உன்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுறா “

” ப்ச் அவளை ஏன் இழுக்குற …  நான் அவகிட்ட இருந்து  உண்மைய தெரிஞ்சிக்கிறதுக்காக  ஜஸ்ட் டிராமா பண்றேன்…. மற்றபடி  எனக்கும் அவளுக்கும் எதுவும் இல்லை  ” 

” இல்லாம இருந்தா … எல்லாருக்கும் நல்லது ” என்றான் நக்கலாக  .

” வெளியே போறியா … ” என ஆதித்யா முறைக்க …  நாகா புன்சிரிப்புடன்  வெறியேறினான் .

‘ இப்போ  தான்  அவளை மறந்திருந்தேன்  …நியாபகப்படுத்திட்டான்  ‘ என்று முனங்கியவன் .

” என்ன ஆனாலும் சரி இன்னைக்கு அவளை பார்க்க போக கூடாது  ” என உறுதியாக  முடிவெடுத்து …  கணினியில் தன் கவனத்தை செலுத்திக்கொண்டிருந்த  ஆதித்யாவின் சிந்தனையில்  மதுமதி அடிக்கடி வந்து சென்றாள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அனைவரும் உணவு கூடத்தில்  உணவு உண்டு முடித்திருந்த நேரத்தில் , அசாதாரணமாக ஒலித்த தொடர் காலிங் பெல்  சத்தம் அனைவரையும்  சங்கடப்படுத்த … கதவை திறக்க சென்ற ஜுவாலாவை  தடுத்த இளமாறன் … தானே சென்று கதவை திறந்தான் .

அங்கே  கடுங்கோபத்தில் நின்றுக்கொண்டிருந்த  அர்ஜுனை பார்த்து இளமாறன்  திகைக்க … அவனோ இளமாறனை தாண்டி உள்ளே வந்தான் .

” அர்ஜுன் … டேய் ….கொஞ்சம் நில்லு டா “- அர்ஜுனிடம் தெரிந்த  ரௌத்திரத்தை கண்டு அவனது கோபத்தை மட்டுப்படுத்த இளமாறன்  அவனை தடுக்க முனைந்தான் .

” அப்பா எங்க?? எல்லாரும் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ?? ” கோபத்தில் தாயிடம் சீறினான் .

” என்னனு பொறுமையா சொல்லுப்பா?? ஏன் இவ்வளவு கோபமா இருக்க “

” ப்ச் அப்பாவை எங்கன்னு மட்டும் சொல்லுங்க ” தாயின்  அழுது வடிந்த முகம் கண்டு வருந்தியவன் … தன் கோபத்தை குறைத்து கொண்டு ” மா அப்பாவை வர சொல்லுங்க ” தன்மையாக  கூறினான் .

” சாருக்கு இன்னைக்கு தான் வீடு கண்ணுக்கு தெரிஞ்சித்தோ ” அலட்சியத்துடன்  அவன் முன்னே வந்து நின்றார் .

ஆதவனின்அலட்சிய  குரல் அர்ஜுனின் கோபத்தை மேலும் தூண்டி விட்டது ,

” நீங்க தான் என்  ட்ரான்ஸ்ஃபர்க்கு  ஏற்பாடு செஞ்சீங்களா ?? ”  அவர் விழிகளை நேருக்கு நேராக சந்தித்தபடி கேட்டான் .

” ஆமா அதுக்கென்ன இப்போ ” உன் கோபம் என்னை ஒன்றும் செய்யாது  என்பதை போல தன் கைகளை கட்டிக்கொண்டு  கூறினார் .

” ஏன் டட் அப்படி செஞ்சீங்க “

” நீ இங்க இருக்க வேண்டாம் … கொஞ்ச நாளைக்கு வெளியூர் போ “

” நான் போக முடியாதுன்னு சொன்னா “

” அர்ஜுன் நீ போய் தான் ஆகணும் … இந்த வீட்ல இருக்கணும்ன்னா  நான் எடுக்கிற  முடிவுக்கு எல்லாரும் கட்டு பட்டு தான் ஆகணும்…  “

”  கட்டுப்பட முடியாது “என  கத்தினான் .

“அப்போ வெளிய போ ” பதிலுக்கு ஆதவனும் சீறினார் .

” போறேன் … இனிமே வந்தா என்னன்னு கேளுங்க … மதுவை காணும்… நீங்களும் கம்ப்ளெயிண்ட்  குடுக்க மாடீங்க … என்னையும் தேட விட மாட்டிக்கிறீங்க … என்னனு கேட்டா..  என் கிட்ட  கோபப்படுறீங்க … நீங்க எல்லாரும் எதையோ என்கிட்ட இருந்து மறைக்க பார்க்கிறீங்க , கண்டு புடிக்கிறேன் … அப்புறம் நல்லா கேட்டுக்கோங்க மதுவை கண்டு புடிக்காம  நான் இந்த ஊரை விட்டு எங்கையும் போக மாட்டேன் ” என்று ட்ரான்ஸ்ஃபர்  லெட்டரை  ஆதவனின் கைகளில்  கொடுத்துவிட்டு  வேகமாக  வெளியேறிவனின்  பார்வை தாயின் முகத்தை வலியுடன்   பார்த்துவிட்டு  மீண்டது  .

” அர்ஜுன் எதுவா இருந்தாலும் பேசிக்கலாம் நீ போகாத “

” உயிரே போனாலும் நேர்மையா இருக்கனும்ன்னு நீங்க தான்  மா சொல்லி வளர்த்தீங்க  … இங்க நேர்மை இல்லமா !… நேர்மை இல்லாத இடத்துல என்னால இருக்க முடியாது … எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்  உங்களை கூட்டிட்டு போக நான் வருவேன் ” என்றவன் தன்னை கட்டிக்கொண்டு  அழும் தாயை விருப்பமே  இல்லாமல் தன்னிடம் இருந்து பிரித்துவிட்டு அங்கிருந்து சென்றான் .

” ஆதவன் என்ன பண்றீங்க …அவன் நம்ம பையன் … அவனை போக விடாதீங்க ” தந்தை மகனுக்கு இடையே நடக்கும் யுத்தம் கண்டு அதிர்ந்த ப்ரீத்தா கணவனிடம் கெஞ்சினார் .

” இது என் வீடு … பையன் தான் வேணும்ன்னா நீயும் போயிட்டே இருக்கலாம் ” உறுதியுடன்  ஒலித்த அவரது குரல் அனைவரையும் கட்டிப்போட … ப்ரீத்தா தான் உருக்குலைந்து போனார் .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

‘நோ ஆதி அவளை நினைக்காதே  ‘ என மூளை தீவிரமாக எச்சரித்தது …ஆனால் அவனது மனமோ  ‘ அவளது முகத்தை ஒரு நொடியாவது பார்த்துவிட்டு வா ‘ என்று முரண்டு பிடித்தது .

முடிக்க வேண்டிய வேலைகள்  வேறு  நிலுவையிலே நின்றது … ஆனால் ஒன்றையும் முடிக்க முடியவில்லை … இது போன்ற உணர்வுகள் எல்லாம் அவனுக்கு புதிது … தன் நிலையை எண்ணி எரிச்சல் அடைந்தவன் மடி கணினியை தூக்கி கட்டிலில்  வீசிவிட்டு … அறையில் குறுக்கும் நெடுக்குமாக  நடந்தான் .

‘ எப்படி  இருக்கான்னு தானே பார்க்க போற  .. பார்த்துட்டு வந்துட்டே இரு  ‘ என்றவன்  தனது கட்டுப்பாட்டையும் மீறி அவள் அறைக்குள் சென்றான் .

விடிவிளக்கின் வெளிச்சத்தில்  பாதுகாப்பற்ற  குழந்தையை போல மஞ்சத்தில் கால்களை குறுக்கிக்கொண்டு கண்மூடிக் கிடக்கும் மதியை  கண்டான் .அவளது  இந்த நிலையை கண்டு மிகவும் வருந்தியவன் … தயக்கத்துடன் அவள் அருகில் வந்து அமர்ந்தான் .சீரான மூச்சுக்காற்று அவளது ஆழ்ந்த உறக்கத்தை  உணர்த்தியது … வீங்கி சிவந்திருந்த வதனத்தில் கோடு கோடாய் காய்ந்து போன கண்ணீர் தடங்கள். இன்றும் அழுத்திருக்கிறாள் ! –  மனம் கனத்தது . இன்னும் நெருக்கமாக அவள் அருகில் சென்று அவளது மதி முகத்தை பார்த்தான் … அழுது வடிந்த முகம் தான்  ஆனாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என தோன்றியது .

சில மணிநேரத்திற்கு  முன்பு அவனது  இதழ்  தீண்டிய அவளது  கன்னத்தை இப்பொழுது     கற்றை கூந்தல் உரசிக்கொண்டு உறவாடியது . சிறு பொறாமையுடன் கேசத்தை காதோரம் ஒதுக்கிவிட்டபடி   ,

” நா உனக்கு திமிரு புடிச்சவனா ம்ம்ம்  ! ரொம்ப இடம் கொடுத்துட்டேன்  டி அதான் என் வீட்ல நீ நிம்மதியா  தூங்குற … நான் நிம்மதி இல்லாம  தவிக்கிறேன் … ” என்று  தன் இதழ் கடை ஓரத்தில்  முளைத்த சிறு  புன்னகையுடன் கூறியவன் .

மறுநொடியே அவளது மிருதுவான கன்னத்தில் அழுத்தமான முத்தத்தை பதித்து    அவளது நெற்றியோடு தன் நெற்றி வைத்து கண்களை இறுக்கமாக மூடி

” என்ன நடந்தாலும் … நான் என்ன செஞ்சாலும் … என் கூடவே இருப்பியா  மதி ?  “  என கேட்டான்  அவளது சுகந்தத்தை  சுவாசித்தபடி . 

-தொடரும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!