Naan Avan Ilai 21

download-3e87dbc3

நான் அவன் இல்லை 21

நீண்ட நேர பயணம் நிசப்தமாகவே கழிந்து கொண்டிருக்க … மதிக்கு தான் படபடப்பாகவே இருந்தது . ஆதித்யாவை பற்றி நினைக்க நினைக்க எரிச்சல் தான் வந்தது .

வெகு நேரமாக  சாலையிலே கவனமாக இருந்த வீராவின்  பார்வை இப்பொழுது மதியின் மீது விழுந்தது … ஆனால் அவள் கவனம்  அவன் மீது விழவில்லை …கடுமையான  முகத்துடன் கை விரல்களை  பிசைந்து கொண்டு  கண்ணாடியையே  வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“ரொம்ப வலிக்குதா … ஹாஸ்ப்பிட்டல்  நெருங்கிட்டோம்  சீக்கிரமா போயிரலாம்  என்ன?” கவலையுடன்  கூறினான் .

நிமிர்ந்து வீராவின் கண்களை  பார்த்தாள்.. அவனுடைய விழிகளில் தெரிந்த உண்மையான  பாசம்  அவள் மனதை வருடியது .

பேசாமல் உண்மையை சொல்லிவிடுவோமா  என்று எண்ணினாள் … சொன்னால் மட்டும் ஆதித்யாவை மீறி தன்னை காப்பாற்றிவிடுவானா  என்ன ? என்றது மனம் .

‘நம்பி நம்பி ஏமாந்தது போதும்’ என்று மனதிற்குள் முடிவெடுத்தவள் … தனக்குள்  இருக்கும் உணர்ச்சிகளை  அழுந்த துடைத்தபடி  அவன் முகத்தை பார்த்து …. விரக்தியான புன்னகையை அவனுக்கு  பதிலாக கொடுத்தாள் .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

தன் தந்தையிடம்  வீராப்பாக பேசிவிட்டு தனது நண்பன் மதனின்  கோர்ட்டர்ஸ்க்கு வந்த அர்ஜுனுக்கு  ,   எப்படி? எங்கே? இருந்து தன் விசாரணையை தொடங்குவது என்பதே மிகவும் குழப்பமாக  இருந்தது . சுற்றி சுற்றி மனம் ஒரே இடத்தில் வந்து நிற்க .. ஆத்திரம் அடைந்தவன் … நாடியது என்னவோ போதையை  தான் . ஆக இரவு  குடித்த மதுவின் விளைவால் மறுநாள் காலை நேரம் கழித்து எழுந்தவனுக்கு  தலை விண்ணு விண்ணென்று  வலித்தது . அப்பொழுது பார்த்து   வாசலில் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்க எரிச்சலில் தன் நெற்றியை நீவியபடி  வந்து கதவை திறந்த அர்ஜுனை  இரு மலர் கரங்கள்  இறுக்கமாக  அணைத்திருந்தன.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கார் மருத்துவமனை வளாகத்தில் அடைந்ததும் தன் இருக்கையில் இருந்து இறங்கி வந்த  வீரா மதிக்கு கதவை திறந்து விட ,

“அதுக்குள்ள வந்துட்டோமா?!” என வீராவிடம் கேட்டபடி கீழே இறங்கினாள் மதுமதி .

“ஆமா வந்துட்டோம்  …வா ” என்று அவளை அழைத்து கொண்டு உள்ளே சென்றான் .

காட்டுமிராண்டி  கூட்டத்தில்  இருந்து விடுதலை பெற்ற உணர்வோடு  நடந்த மதுவால் , அந்த அசுர வனத்தில் இருந்து தாம்  தப்பித்து வந்துவிட்டோம் என்பதை  இன்னுமும் நம்ப  முடியவில்லை … சுகந்திர காற்றை மகிழ்ச்சியோடு  சுவாசித்தவள்,

‘இது எந்த ஏரியா … ?சிட்டி மாதிரி தெரியலையே  இங்க இருந்து எப்படி ஊருக்குள்ள போறது …? வீராகிட்ட இருந்து தப்பிக்க முடியுமா ? ஒருவேளை மாட்டிக்கிட்டா என்ன அந்த அரக்கன் ஆதித்யா  என்ன பண்ணுவான்னு தெரியலையே?’ என ஆதித்யாவை  எண்ணி மனதில் பயம் கொண்டவள் மறுநொடியே,

‘இதே மாதிரி வாய்ப்பு அடிக்கடி வராது மதி ஏதாவது பண்ணி தப்பிச்சிரு .’ என தன்னை தானே தேற்றியவள் .

‘ஒரு போன் கிடைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்’ என்று சிந்தித்தபடி வீராவுடன் நடக்காமல் நின்ற இடத்திலே தேங்கி நிற்க ,

வீரா தான் “வா மதி” என்று  அவளது சிந்தனையை கலைத்தபடி அவளது கையை பிடித்துக்கொண்டு உள்ளே அழைத்து சென்றான் .

அவர்கள் இருவரும் உள்ளே சென்றதும்  தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்த ரிசெப்ஷனிஸ்ட் அவர்களை மரியாதையுடன்  அழைத்து சென்று  விஐபி அறையில் அமரச்செய்து  குடிப்பதற்கு  சூடான  காஃபியை பரிமாறியவள் ,

“சார் இன்னும் அஞ்சு நிமிஷத்துல  டாக்டர் வந்துருவாங்க … வேற எதுவும் வேணுமா சார்” என்று பணிவுடன் கேட்க .

“நோ தேங்க்ஸ் … டாக்டரை சீக்கிரமா வர சொல்லுங்க” என்றான் வீரா

“ஓகே சார்”  என்றபடி அந்த அறையில் இருந்து அந்த பெண் வெளியேறிய மறுநொடி மது வீராவிடம் ,

“உன்னை இவங்களுக்கு தெரியுமா!”ஆச்சரியத்துடன் கேட்டாள் .

“ம்ம் தெரியாம எப்படி இது எங்களோட ஹாஸ்ப்பிட்டல் …அதாவது ஆதித்யாவோட ஹாப்பிட்டல் …  நம்ம ஆளுங்களுக்கு  ஏதாவது அடிபட்டா இங்க தான் வருவாங்க … இங்க இருக்கிறவங்க எல்லாருமே நம்ம ஆளுங்க தான் … ஸோ வெயிட் பண்ணவே தேவையே இல்லை சீக்கிரமா பார்த்துட்டு  வீட்டுக்கு போய்டலாம் சரியா” என்று வீரா கூற ,

‘அச்சோ அவ்வளவு தானா?!  மீண்டும் அதே ராட்ச மாளிகைக்குள்  அடைபட வேண்டுமா !?’ மதுமதியின் மனம் மலர்வதற்குள் வாடியது .

“ஏன் ஒருமாதிரி இருக்க … ரொம்ப வலிக்குதா?” என்று வீரா கேட்கவும் .

“ஹெலோ வீரா” என்றபடி அங்கே வந்த ஆண் மருத்துவர் …வீராவின் கைகளை குலுக்கியபடி  ஒரு சில வார்த்தைகள்  பேசியவர்  வீராவை வெளியே இருக்குமாறு  கூறிவிட்டு  மதுமதிக்கு வைத்தியம் பார்க்க தொடங்கினார்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கண்ணீரும்  கம்பலையுமாக தன் மார்பில் முகம் புதைத்து  அழும் ஜுவாலாவை  கண்டு அர்ஜுனுக்கு சங்கடமாக இருந்தது .. பதிலுக்கு அணைத்து ஆறுதல் சொல்ல தயங்கிய  அதே மனம்  விலக்கி விடவும்  இடம் கொடுக்காமல் போக …ஒருவித கலவையான உணர்வுகளை உணர்ந்தவன் தனக்குள்ளே அதை அடக்கிக்கொண்டடு,

“இட்ஸ் ஓகே ஜுவாலா… எல்லாமே சரியாகிரும்” அழும் காரணத்தை ஓரளவு யூகித்துக்கொண்டு  அவளுக்கு ஆறுதல் கூறினான் .

ஓரளவு சமாதம் அடைந்தவள் … தான் இருக்கும் நிலையை உணர்ந்து தானாகவே அர்ஜுனை  விட்டு விலகி   ,  எதுவுமே பேசாமல் அமைதியாக நிற்க .

வெண்பஞ்சு போன்ற அவளது வதனம் தொடர் அழுகையால்  ரத்தமன சிவந்திருந்ததை கண்டவன் அவளை உள்ளே அழைத்து கதவுக்கு தாளிட்டுவிட்டு ,

“எதுக்கு இவ்வளவு கண்ணீர் ?….இப்போ எதுக்கு இங்க வந்த ?” அவள் குடிப்பதற்கு  தண்ணீரை கொடுத்துவிட்டு  அவள் அருகில் அமர்ந்தபடி கேட்டான் .

“நீங்க ஏன் வீட்டை விட்டு வந்தீங்க ?” விசும்பியபடி எதிர் கேள்வி ஒன்றை கேட்டாள் .

“ஜுவாலா நம்ம வீட்ல உள்ளவங்க பண்றது எதுவும் எனக்கு புடிக்கலை  … நான் இங்க இருக்கிறது தான் நல்லது … முடிவு பண்ணிட்டேன் “

“நீங்க இல்லாம என்னால அங்க இருக்க முடியல அத்தான்… ” என்றவள் அவன் புருவம் உயர்த்தவும் ,”மதியும் இல்லை இப்போ நீங்களும் இல்லை தனியா இருக்கிற மாதிரி இருக்கு” தன் காதலை மறைத்தபடி சமாளித்தாள்.

“சாரி ஜுவாலா என்னால திரும்ப வர முடியாது” என்றவன் அவளை பாவமாக பார்த்தான் .

“அத்தைக்காகவாது  வாங்க அழுதுட்டே இருக்காங்க ” தாய் தன்னை எண்ணி வேதனை படுகிறாள் என்று கேட்டதும்  அர்ஜுனின் மனதில் கவலை எழுந்தது தான் … ஆனால் அங்கே இருந்தால் பாசத்திற்காக  தன் கடமையை விலை பேச வேண்டியிருக்கும்  என்று எண்ணியவன்,

“அதெல்லாம் சரி வராது ஜுவாலா ….மது கேஸ் சால்வ் ஆகுற வரைக்கும் , என்  மனசுல உள்ள கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கிற வரைக்கும் என்னால அங்க வர முடியாது,  இனிமே என்ன அங்க வர சொல்லாத  ப்ளீஸ் ..” என உறுதியாக வர மறுத்துவிட …ஜுவாலாவின் முகம் தான்  அனிச்சம் மலராய் வாடிவிட்டது .

டேபிள் மீது இருந்து இன்னும் நீக்கப்படாத காலி மது பாட்டிலை கண்ட  ஜுவாலா,” குடிசீங்களா அத்தான்? ” என கேட்டாள் வருத்தத்துடன் .

” ம்ம்ம் என்னால முடியல ஜுவாலா … எனக்கு தெரியும் மதுக்கு இதெல்லாம் புடிக்கவே புடிக்காதுன்னு … ஆனா எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல …மது எங்க இருக்க நீ ? சீக்கிரமா வந்திரு ” என்றவன் கண்களில் இருந்த ஏக்கத்தை கண்ட ஜுவாலாவின் மனம் தான் மிகவும் அடிவாங்கியது .

‘மதுக்காக எதுவுமே வேண்டாம்ன்னு வந்துடீங்க …அதே மாதிரி  உங்களுக்காக  எல்லாத்தையும் உதறி தள்ளிட்டு,  நீங்க தான் வேணும்ன்னு வந்திருக்கிற  என்னையும் என் காதலையும்  ஏன் புரிஞ்சிக்க மாட்டிக்கிறீங்க …எப்பவுமே மது தானா .. ??ஆனா அவ தான் உங்களை காதலிக்கவே இல்லையே ‘ என்றவளின் மனம்  ஊமையாய் கதறியது.

“சரி எப்படி வந்த … ? வீட்ல எல்லார்கிட்டயும்  என்ன சொல்லிட்டு வந்த?” என கேட்டான் .

“அம்மா…  மாமா  ஆபிஸ் போய்ட்டாங்க … அத்தை …அப்பா கோவிலுக்கு போய்ட்டாங்க … மாறன் ஷூட்டிங்ன்னு  காலையிலே கிளம்பிட்டான் . நான் டாக்சி புடிச்சு வந்தேன் ” கண்களில் மீதம் இருந்த கண்ணீரை துடைத்த படி கூறினாள் .

“சரி வெயிட் பண்ணு ட்ரெஸ் மாத்திட்டு வரேன் …உன்னை நான் வீட்ல விட்டுட்டு    வெளிய போகணும்  கொஞ்சம் வேலை இருக்கு”

“ம்ம்ம் அதுக்காகவா வந்தேன் ” என்றவள் , “என்ன அப்படி பார்க்கறீங்க … முதல்ல இந்த காஃபிய குடிங்க …   நீங்க குளிச்சிட்டு வர்றதுக்குள்ள பிரேக் ஃபாஸ்ட்   ரெடி பண்ணிறேன்  ” என்றவள் தான்  கொண்டுவந்த கூடையை  திறந்து பிளாஸ்கில்  உள்ள சூடான காஃபியை  அவனிடம் நீட்டியவள் … கூடையை எடுத்துக்கொண்டு கிட்சனுக்குள் நுழைய ,

“ஜுவாலா எனக்கு எதுவும் வேண்டாம் நான் ஹோட்டல்ல  பார்த்துகிறேன்” என்றான் அர்ஜுன் .

“ம்ம்ம் ஹோட்டல் சாப்பாடு உங்களுக்கு புடிக்காதுன்னு எனக்கு தெரியாதா …? நீங்க  என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் அத்தான் . சோ போங்க போய் குளிச்சிட்டு வாங்க நான் அதுக்குள்ள எல்லாம் ரெடி பண்றேன் … சரி அத்தான் கிட்சன்  ,கிட்சன் மாதிரி இருக்குமா ?” என்று சமையல் அறையின்  கதவை திறந்தபடி  வினவினாள் .

“போன வருஷம் பால்காய்க்கும் போது உள்ள போனது … மதனுக்கு சமைக்கிற பழக்கம் கிடையாது …” என்றவனை தன் கரம் உயர்த்தி தடுத்தவள்..

“புரிஞ்சிருச்சு …நானே பார்த்துகிறேன்” என்றவளின் முகம் பாவம் கண்டு லேசாக புன்னகைத்த அர்ஜுன் குளிப்பதற்காக உள்ளே செல்ல … கிச்சன் கிடந்த கிடையை  கண்டவளுக்கு கண்கள் ரெண்டும்  இருட்டிக்கொண்டு வந்தது.

நீண்ட பெருமூச்சை  வெளியிட்டபடி  தூசி நிறைத்த சமயலறைக்குள் நுளைந்தவள் ,

“என்ன இது கிட்சன் கன்றாவியா இருக்கு?” என்று  தன் நெற்றியை  நீவியபடி தன் பணியை தொடங்கினாள் .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மதுமதியை பரிசோதித்த  மருத்துவர் வீராவை உள்ளே  அழைத்தார் .

“என்னாச்சு டாக்டர் சாதாரண தலைவலி தானே ?” அக்கறையோடு கேட்டான் .

“கொஞ்சம் அனிமிக்கா இருக்காங்க  இந்த மருந்து சாப்பிட்டா …ப்ளட்க்கும் நல்லது … தலைவலியும் சரியாகிரும் ” என்றவர் மருந்து சீட்டை வீராவிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார் .

“மருந்து வாங்கணும் மது … கவுண்டர் கொஞ்சம் கூட்டமா இருக்கு ..நீ இங்கையே இரு அதோ பக்கத்துல தான் இருக்கேன் எதுவும் வேணும்ன்னா கூப்பிடு . எங்கையும் தனியா  போகாத…..மாத்திரை போட்டா வலி போய்டும் … கொஞ்சம் கண்ணை மூடி சாஞ்சு உட்காரு  ” மதியின் எண்ணம்  அறியாமல் அவளிடம் பேசியவன் …மருந்து வாங்கும் இடத்திற்கு சென்றான் .

அவன் போகும் வரை இருக்கையிலே அமர்ந்து கொண்டவள் ….. சில நிமிடங்கள்  கழித்து அவன் இருக்கும் திசையை கவனித்தாள் … யாருடனோ அலைபேசியில் மும்முரமாக  பேசிக்கொண்டிருந்தான் .  முகம் பாவம் எதுவும் தூரத்தில் நின்று பார்த்தவளுக்கு  சரியாக பிடிபடவில்லை .

சில நொடிகள் அவனது அசைவை கவனித்தவள் அவன் கவனம் தன் பக்கம் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு ,

‘மன்னிச்சிரு வீரா  எனக்கு வேற வழி தெரியலை’ என மனதிற்குள் கூறிவிட்டு மறுபக்க  வாயிலை நோக்கி மக்களோடு மக்களாக கலந்தபடி  ஓடினாள் .

எப்படியோ ஒளிந்து மறைந்து பின்பக்கம் வந்தவள் வெளியேறும்  பாதையை அறியவில்லை …. பதற்றத்தில் நெஞ்சம் தாறுமாறாய்  துடிக்க  சில நொடிகள் நிதானமாக சுற்றும் முற்றும்  தன் பார்வையை சுழலவிட்டாள்  … ஆம்புலன்ஸ் நிறுத்தத்திற்கு  அருகே இருக்கும் வாசலை  கண்டு கொண்டவள் வேகமாக வாசலை நோக்கி ஓடினாள் . அவள் ஓடி வருவதை கண்ட அம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் ,

“இங்க என்ன பண்ற என்னாச்சு ?” என்று வினவினார் .

“அண்ணன் என் கூட வந்தவங்களை  காணும் அதான் தேடி வந்தேன்” வாயில் வந்ததை அடித்து விட்டாள்.

“ஓ இங்க யாரும் இல்லை மா “என்றவர் அவளது பதற்றத்தை கண்டு ,

“ஃபோன் அடிச்சு எங்க இருக்காங்கன்னு கேளு மா” என்றார் . அப்பொழுது தான் அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது உடனே ,

“அண்ணா அவங்களுக்கு  கால் பண்ணனும் … ஆனா என்கிட்ட ஃபோன் இல்லை…  உங்க ஃபோன்  கொஞ்சம் தர முடியுமா  ” என்று பதற்றத்துடன் கேட்டாள்.

” இதோ பேசுமா ” என்றவர் தன் அலைபேசியை அவளிடம் நீட்டினார் .

” தேங்க்ஸ் அண்ணா ” என்றவள் …  தட்டு தடுமாறி  ஒருவழியாக  அர்ஜுனின் இலக்கத்தை  அழுத்திவிட்டு எதிர்பார்ப்போடு  காத்திருந்தாள்  .

வீராவிடம்  மாட்டிக்கொண்டுவிடுவோமோ என்கின்ற பதற்றத்தில்  நின்றவளுக்கு  அர்ஜுன் அழைப்பை ஏற்காமல் போனதும் அழுகை  வர ‘ அர்ஜுன் ப்ளீஸ் பிக் அப் ‘என கலங்கியவள்  மீண்டும் அர்ஜுனுக்கு அழைப்பு விடுத்தாள் .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

“அத்தான் ஃபோன்  அடிச்சிட்டே இருக்கு யாரா இருக்கும் … ?? யாருன்னு கேட்ருவோம் ” என்று அழைப்பை அட்டென்ட் செய்து… அலைபேசியை தன்  காதில் வைத்துக்கொண்ட ஜுவாலா ,காய்கறியை  வெட்டியபடி  ” ஹலோ ” என்றாள் .

“அர்ஜுன்….. அர்ஜுன்…. நான் மது …அர்ஜுன்  கேட்குதா… அர்ஜுன்  மது பேசுறேன்” எதிர்முனையில் பதற்றத்துடன் பிதற்றினாள் மது.

” மது “என முணுமுணுத்த ஜுவாலா .. மதுவின் அழுகை தன் காதில் விழ விழ அதிர்ச்சியில் உறைந்து போய்  பதில் பேசாமல் அப்படியே நிற்க  ….அப்பொழுது அங்கே வந்த அர்ஜுன் ஜுவாலா இருந்த கோலம் கண்டு திகைத்தவன் ,

“ஏய் ஜுவாலா என்ன பண்ணிட்டு இருக்க ” என்றபடி வேகமாக நெருங்க …அர்ஜுனை கண்டதும் பதறிய ஜுவாலாவின்  காதுக்கும்  தோளுக்கும்  இடையே இருந்த அலைபேசி கீழே விழுந்து உடைந்தது .

அலைபேசி  உடையும்  சத்தம் கேட்ட பிறகே  அதிர்ச்சியில் இருந்து மீண்ட  ஜுவாலா,

“சாரி சாரி அத்தான் தெரியாம பண்ணிட்டேன்” குற்ற உணர்வால் ஏற்பட்ட பதைபதைப்புடன்  ஏங்கி ஏங்கி அழுதாள்.  ஆனால் அவளால்  மது அழைத்திருந்ததை  மட்டும் அர்ஜுனிடம்  சொல்ல முடியவில்லை .

“ஷ் ஏய் ஃபோனை  விடு ,அது போனா போகுது . முதல்ல உன் கைய பாரு …எவ்வளவு ரத்தம் வருது  … இதுக்கு தான் எதுவும் வேண்டாம்ன்னு சொன்னேன் … காய வெட்றேன்னு உன் கைய வெட்டிகிட்ட இங்க வா ” ரத்தம் வழியும்  இடத்தை அழுத்தி பிடித்துக்கொண்டு   அவளை மெல்ல அழைத்து வந்து  முதலுதவி செய்தான் .

“சாரி சாரி வேணும்ன்னு பண்ணல ” குற்ற உணர்ச்சியில்  தவித்தவள்  மீண்டும் மீண்டும் இதே வரிகளை கூறினாள் .

” ஏய் விடு … ஃபோன் தானே அது என் பெர்சனல் போன் தான் ஏற்கனவே  உடைஞ்சி தான் இருந்துச்சு …வேற வாங்கிக்கலாம்  … உன்னை விட அந்த  ஃபோன் ஒன்னும்   எனக்கு முக்கியம் இல்லை ….?? பாரு எப்படி வெட்டி வச்சிருக்கன்னு ” உண்மை தெரியாமல் அக்கறையோடு கூறினான் . 

‘உன்னை விட அந்த  ஃபோன் ஒன்னும்   எனக்கு முக்கியம் இல்லை’ என அர்ஜுன் கூறிய வார்த்தைகளை கேட்டவள் .. மது அழைத்திருந்ததை  மறைத்து அவனுக்கு துரோகம் செய்ததை எண்ணி மிகவும் வருந்தினாள் .

‘சொல்லிவிடு …மது பாவம் !’ என்றது கள்ளமற்ற  அவளது மனம் .

‘மது வந்துவிட்டால் அர்ஜுன் உனக்கு கிடைக்காமலே போய்விடுவான்  ! போனவள் போனதாகவே இருக்கட்டும் ! ‘ என்றது கபடம் நிறைந்த மூளை .

பாசமா ? காதலா ?

இரெண்டே  கேள்விகள் அவள் மனதில் புயலை கிளப்ப ,

‘என்னை மன்னிச்சிரு மது அர்ஜுனை மட்டும் என்னால விட்டு குடுக்க முடியாது’ என்று தன் மனதிற்குள் … வேகமாக  அர்ஜுனை அணைத்து கொண்டாள் .

‘மதுவின் பாவம் உன்னை சும்மா விடாது துரோகி !’ என அவளது மனசாட்சி  அவளை சபித்தது .

“சாரி அத்தான் தெரியாம பண்ணிட்டேன் …. …  ப்ளீஸ் மன்னிச்சிருங்க ” நடுங்கும் அவளது மென் குரலில் இடை இடையே  வந்து போன தேம்பல்கள் ஜுவாலாவின்  மனஉளைச்சலை  தெளிவாய் காட்டியது .

“விடு டி ..இதுக்கு போய் அழுதுட்டு … அழாத சரியா ” என அவளது கண்ணீரை துடைத்தான் அர்ஜுன் . 

‘சாரி அத்தான் நான் பண்ணினது பெரிய துரோகம் … ஆனா எனக்கு வேற வழி தெரியல … நீங்க எனக்கு வேணும் …நீங்க இல்லைன்னா நான் செத்துருவேன் கடவுளே மதுவுக்கும் எதுவும் ஆக கூடாது ,  அவ நல்லா இருக்கணும் … அத்தானும் என்னை வெறுக்க  கூடாது ‘  – என உருப்போட்டது அவளது மனம் ! அர்ஜுனுக்கு மட்டும்  இது தெரிந்தால்  காலத்துக்கு தன்னை  மன்னிக்க மாட்டான் என்பதை அறிந்திருந்த  ஜுவாலா மிகவும் சிரமப்பட்டு தன் உணர்வுகளை  தனக்குள்ளே புதைத்து கொண்டாள் .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

” ஜுவாலா … நான் மது கேட்குதா  … அர்ஜுன்  … கேட்….குதா … அ..ர்..ஜு..ன் ”     என மது சிக்கல் விழுந்த நூல் போல கோர்வையாக  பேச முடியாமல் திணறிக்கொண்டிருக்க அவளது கையில் இருந்த அலைபேசி பறிக்கப்பட்டது .

-தொடரும்