Naan Avan Ilai 24

download (4)-f8ecf2e4

Naan Avan Ilai 24

ஒரு சின்ன விண்ணப்பம் ,

நண்பர்களே அத்தியாயத்தை  படிக்கிறதுக்கு முன்னாடி இதை கொஞ்சம் படிச்சிட்டு உள்ள போங்க .

சாதாரணமான  நாம பயன்படுத்தும் கரன்சிக்கு வடிவம் உண்டு. அவற்றை நம்மால் பார்க்க முடியும்  … தொட்டு உணர முடியும்  ….ஆனால் கிரிப்டோகரன்சி (Cryptocurrency). எனப்படும் டிஜிட்டல்  கரன்சி  நாம பயன்படுத்தும்  கரென்சியில்  இருந்து முற்றிலும் மாறுபட்டது …. அதை உங்களால் பார்க்கவோ தொடவோ முடியாது  இவை அனைத்தும் இணையத்தில் உள்ள வாலட் களில் எண் (நம்பர்)வடிவத்தில் இருக்கும். இது போல கரன்சியை ஏற்றுக்கொள்பவர்களிடம் நீங்கள் வணிகம் வைத்து கொள்ளலாம்…. இணைய வர்த்தகத்தில் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும். bitcoins  , Dogecoin , Litecoin  இதெல்லாம்  கிரிப்டோகரன்சியில் இருக்கும் ஒவ்வொரு வகை .

சாதாரண நாம தினசரி  பயன்படுத்துகிற இணையத்தின்(இன்டர்நெட்) மறுபக்கம் தான் டார்க் வெப். இதை டார்க் நெட்  என்றும் அழைப்பர் … எவ்வளவு திறன் வாய்ந்த  ஸ்பெஷலிஸ்டாலும் காவல்துறையாலும் கூட கண்டறியமுடியாத பல சட்டவிரோத செயல்கள் டார்க் வெப் வாயிலாகத்தான் நடைபெறுகின்றன.

பெரும்பான்மையான இணைய குற்றங்கள் அனைத்தும் நடைபெறுகின்ற இடமாக டார்க் வெப் இருக்கிறது. சட்டவிரோத ஆயுதங்கள் … போதை பொருட்கள் போன்றவற்றை காவல்துறையின் கண்ணில் படாமல் விற்கவும் வாங்கவும் பயன்படுத்துகிற இடம் தான் இந்த டார்க் வெப். 

டார்க் வெப் என்பது கள்ளச்சந்தை போலவே இணையத்தின் கருப்பு பக்கம். டார்க் நெடில்  எண்ணற்ற  செர்வர்கள் மூலமாக  தகவல்கள் எல்லாம்  ஹை லெவல் அல்காரிதம் மூலமாக  என்க்ரிப்ட்  செய்ய படுவதால்   இணைய தளங்களை யார் பயன்படுத்துகிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பதனை அறிந்துகொள்ள முடியாது .

அதுக்காக பயன்படுத்தப்படும்  உலவி (பிரவுசர் ) தான்  Tor .

நண்பர்களே டார்க் நெட்டை பற்றி நான் அதிகம் கூற  தேவை இல்லை … நிச்சயமாக  அனைவரும் அதை பற்றி அறிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது …2018 அர்ஜுன் , விஷால் , மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான  இரும்புத்திரை என்னும் படத்தில் தெளிவாக கூறியிருப்பார்கள்  … அதில் சொல்லிய விஷயங்கள் அணைத்து மிகவும்  உண்மை தான் … ஆனால் இறுதியாக படத்தின்  நாயகன்.. வில்லனை கண்டுபிடிப்பது  போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும்  அது மட்டும் தான்  இன்று வரை சாத்தியம் இல்லாத ஒன்று . பார்ப்பவர்களுக்கு எதிர்மறை எண்ணம்  வர கூடாது என்பதற்காக அந்த காட்சி இடம் பெற்றிருக்கும்  … ஆனால் நிஜ வாழ்வில் டார்க் நெட்டின் மூலமாக நடைபெறும் குற்றங்களுக்கு இன்னும்  தீர்வு கிடைக்க வில்லை .

ஏன் என்று கெட்டால் ?

தமிழ் ராக்கர்ஸை தவிர இதற்கு சிறந்த உதாரணம்  வேறு கிடையாது . இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுபவர்கள்  … என்கிரிப்ஷன் (குறியாக்கம்) க்கு  பயன்படுத்தும்  அல்காறித்தம்  அனைத்தும் 256 பிட் கீ … அதை டீகிரிப்ஷன் (மறை குறியாக்கம் ) செய்ய வேண்டும் என்றால் .  எதிராளிகள்  எந்த  அல்காறித்தம்  பயன்படுத்தி  குறியாக்கம் செய்திருக்கிறார்கள்  என்று கண்டறிய வேண்டும் … அதை அறிந்து கொள்ள கணினிக்கே  இரெண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகும் அதற்குள்  அவர்கள் டோமேனை மாற்றிக்கொண்டு சென்று விடுவார்கள் .

நாம  தற்போது பயன்படுத்திக்கொண்டு இருக்கும் இணையத்தில் நாம  செய்யக்கூடிய ஒவ்வொரு செயல்களும்  அரசாலோ அல்லது கண்காணிப்பு தொழில்நுட்பம் கொண்டவர்களாலோ கணிகாணிக்க முடியும். அவ்வாறு யாராலும் கண்காணிக்க முடியாதபடி இணையத்தில் செயல்படவேண்டும் என நினைக்கிறவர்கள் பயன்படுத்துவது தான் இந்த டார்க் வெப்.  எனவே  குற்றம் செய்பவர்கள் மட்டும் தான்  டார்க் வெபை பயன்படுத்துவார்கள்  என்று நீங்க நினைத்தால் அது தவறு  மாறாக, தங்களின் ஆன்லைன் நடவடிக்கைளை யாரும் கண்காணிப்பதில் விருப்பம் இல்லாதவர்களும் கூட டார்க் வெப்பை பயன்படுத்துவார்கள்

இன்னும் ஒரு முக்கிய  செய்தி டார்க்னெட்டில் பயன்படுத்தப்படும் டார்(tor)என்னும் உலவி  பிளே ஸ்டோரில்  இலவசமாக   கிடைக்கின்றது  .

அதற்காக யாரும் அதை பயன்படுத்தி பார்க்கலாம்  என்னும் ஆவலில் களத்தில் இறங்கிவிடாதீர்கள்    … டார்க் நெடில் உங்கள் வாங்கி கணக்கு  , பாஸ்வோர்ட் போன்ற முக்கியமாக  விஷயங்கள்  திருடப்படும்  அபாயம் உள்ளது .

எனக்கு தெரிந்ததை  நான் சொல்லிருக்கேன் … இதுல ஏதும் விடு பட்டிருந்தால் … தவறு இருந்தால் , திருத்துங்கள் உங்களுக்கு தெரிந்த தகவல்களை   என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்

நான் அவன் இல்லை 24

அந்தி  சாயும்  வனத்தில்  தான்  பறிகொடுத்த  எதையோ   தேடுவது   போல் ,   தொங்கும்  மூங்கில் நாற்காலியில் தன் கை கால்களை குறுக்கி அமர்ந்தபடி    வானத்தை  வெறித்து  பார்த்துக்கொண்டிருந்தாள்  மதுமதி .

அதே நேரம் தனது  அலுவலக  அறையில்  ஸ்டார் ஒன் கொடுத்த தகவலை ஆராய்ந்து  கொண்டிருந்த ஆதித்யா ,

” ஜித்தேரி பேருல பொருள்(ஆயுதம்)  … நமக்( ‘நமக்’ வடமொழியில் உப்பை குறிக்கும் … மாபியா குறியீடு மொழியில் போதை பொருளை குறிக்கும் )  எல்லாம் கை மாறியிருக்கு … ஆனா தயாளன் கேங்ல  யாருடைய  அக்கவுண்ட்டும் ஆக்டிவா  இல்லை …  மிருதுளா ஆதவன் அக்கவுண்டலையும்  தொழில் சார்த்த ட்ரான்ஸாக்ஷ்ன்ஸ்  மட்டும் தான் இருக்கு  …. இதெப்படி சாத்தியம் .?” என  தீவிர யோசனையில்  மூழ்கிருந்தவனுக்கு வெகு நேரமாகியும்  பதில் கிடைக்காமல் போக , கோபத்தில் கணினியின் திரையை  வேகமாக  மூடியவன். தன்னை ஆசுவாசப்படுத்தி கொள்வதற்காக  தன் அறையை விட்டு வெளியே வந்தான்  . விழிகள் மூங்கில் நாற்காலியில் அமர்ந்திருந்த  மதுமதியிடம் சென்றது   .

அவளை கண்ட மறுநிமிடம்  அவன் மனதில் இதுவரை இருந்த பாரம் எல்லாம் சட்டென்று காற்றில் கரைந்து  போக   …  மனம்  லேசானது .  விழிகள் பாவையை ரசனையுடன்  ஆராய்ந்தது … குங்குமமாய் சிவந்திருந்த வானத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் .  அவள்  முகத்தை பார்க்க முடியாததால்  அவளது உணர்ச்சிகளை அவனால் கணிக்க முடியவில்லை .

‘ நிச்சயம் அழுது கொண்டு தான் இருப்பாள் ‘ என்றதும் அவன் மனம் … ஆதித்யாவின்  மனம் கன்றியது … ‘ ப்ச் ‘ என நெற்றியை நீவியவன் …. அவள் வெறித்த வானையே தானும் பார்த்தான் .

தூரிகை  இல்லாமல் தீட்டப்பட்ட ஓவிய சிதறலாய் வானில் தெரிந்த காட்சியை கண்டான் !

‘ பியுட்டிபுல் ‘ தடித்த இதழ்கள் முணுமுணுத்தது .

மேகம் என்னும் மண மேடையில் அமர்ந்துகொண்டு  மணமகள் நிலவை கரம் பிடிக்கும் ஆவலுடன்  காத்திருந்த   மணமகன் சூரியன் … நேரம்  போக போக  தன்  காதலியை  காணாத ஏக்கத்தில் தன்  பிரகாசத்தை கொஞ்சம் கொஞ்சமாக  இழந்து , அவள் வருவாளா ?என்னும் ஏக்கத்துடன் மேற்கு திசையை பார்த்து கொண்டிருக்க ,

 இதோ  வந்துவிட்டேன் ! என  தன் அலங்கரங்களை முடித்துவிட்டு  தன் மேக தோழியர் புடை சூழ  வந்து கொண்டிருந்தாள் மண மகள் நிலா .

யுகம் யுகமாய் எறிந்துவிட்டேன்  இன்றாவது என்னை அணைத்து  என்  வெட்கையை தனிப்பாயா ? என   சூரியனும்  !

தினம் தினம்  குளிரில் நடுங்கிவிட்டேன்  இன்றாவது  என்னை கட்டி அணைத்து  உன்  கதகதப்பை  எனக்கு கொடுப்பாயா ? என  நிலவும்  !

ஒருவரை  ஒரு பார்த்து  காதலுடன் ஏங்கும் ஒரு உன்னதமான காதல் காட்சி !

எப்படி பட்ட  அரக்கனின் மனம் கூட இந்த காட்சியை பார்த்தால்  அலை பாயும் ! கவி எழுதும் !

ஆதித்யா  மட்டும்   என்ன  விதிவிலக்கா  ?  கண்களை இறுக்கமாக  மூடி  காட்சியை  தன் மனதில் படமாக வரைந்தான் . அப்பொழுது  அவனது அலைபேசி சினுங்க எடுத்து பேசியவன் ,” இதோ வரேன் ” என தன் அழைப்பை துண்டித்துவிட்டு … நீண்ட பெருமூச்சை  வெளியிட்டபடி  அங்கிருந்து வெளியேற .

வெகு நேரம் தன்னை யாரோ கண்காணிப்பதாய் உணர்ந்த மது சுற்றும் முற்றம் பார்த்து விட்டு தன் கண்களை உயர்த்திய பொழுது கைகளில் அலைபேசியோடு நின்றிருந்த  ஆதித்யாவை  கண்டாள் … மனதில் ஒருவித  படபடப்பு  வேகமாக பரவ  தன் பார்வையை  சட்டென்று அவனிடம் இருந்து விலகி  கொண்டவள் மீண்டும் வானத்தையே  கண்டாள் .

மேக கூட்டங்களின்  அரவணைப்பில்  சுகந்திரமாக  சுற்றி திரிந்த நிலவை  உக்கிரமாக  முறைத்தபடி  சூரியன்  நெருங்கி வருகிறான் !

அவனிடம் இருந்து நிலவை காக்க  மேகங்கள் அவனுடன் போரிட்டனர் !

நேரம் ஆக ஆக சுட்டெரிக்கும்  சூரியன்,   தன்னிடம் சண்டையிடும்  மேகங்களை  தன்  கதிர்களால்  வதைத்து கொண்டிருக்க , அதனை  கண்டு  மிரண்ட  மேகங்கள் எல்லாம் ஒவ்வொரு திசையில் ஓட  .     ஆங்காங்கே  உதிர துளிகள் என  , வானமே  ரத்தமென   காட்சியளிக்க  .. இப்பொழுது  தனிமையில்  நடுங்கிக்கொண்டிருக்கம்   நிலவை  வதைக்க எக்காள  சிரிப்புடன் நெருங்கி கொண்டிருந்தது  சூரியன்   . 

இந்த காட்சியை கண்டதும்  தன் விழிகளை  இறுக்கமாக மூடியவள்  தன் கரங்களால் தன் காதையும்   மூடி  கொண்டாள்  !

‘ என்ன ஒரு கோரமான காட்சி ‘ அவள் மனம் பதபதைத்தது!  

மதியால்  இன்னும்  நம்ப  முடியவில்லை  .

வெகுநேரமாக  பயத்தில்  நடுங்கியபடி  அமர்ந்திருந்தவள் மீண்டும்   நிமிர்ந்து  வானத்தை   பார்த்தாள்  .

சூரியன்  மெல்ல மெல்ல அஸ்தமித்து  கொண்டிருக்க,  வானம் இருண்டு கொண்டிருந்தது  .

பித்து பிடித்தது  போல உணர்ந்தவளுக்கு  அழுகையாக  வந்தது .

‘ இன்னும் எவ்வளவு தான் ஓடுவது? ‘

‘எப்படி இங்கே இருந்து தப்பிப்பது ?’ என கவலை கொண்டவள்  முழங்காலில்  முகம் புதைத்தபடி அமர்ந்திருந்தாள் .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&7

கனத்த மௌனத்தில் மூழ்கி இருந்த துரியனின் அலுவலக அறையில்  , ஆலோசனை குழு அமரும் அந்த நீளமான கண்ணாடி மேஜையில்  துரியனும்   ஆதித்யாவும்  எதிர் எதிரே அமர்ந்திருந்தனர் … அவர்கள் இருவருக்கும்  இடையே இருந்த அந்த நீண்ட  இடைவெளி மறைமுகமாக  இருவருக்கும் இடையில்   நிலவும்   பனிப்போரை  சுட்டிக்காட்டியது .

” இன்னைக்கு நீ ஜித்தேரியோட ரூல்ஸை  மீறியிருக்க  ஆதித்யா ”   விக்டரின்  அதிகாரமிக்க  குரல்,  நிலவிய  மௌனத்தை உடைத்தது .

” எனக்கு  சரின்னு பட்டத்தை தான் நான் செஞ்சேன் ” தலை நிமிர்ந்து பதிலளித்தான் .

” எங்க கிட்ட கலந்தாலோசிக்காம  நீ எப்படி ஒரு அரசு அதிகாரி மேல கை வைப்ப ” டேபிளை தட்டியபடி கத்தினார் … துரியனின் விழிகள் ஆதித்யாவின்  முகத்தை  விட்டு அகல வில்லை .

” அது  அரசு அதிகாரியோ … நானோ …..நீங்களோ எனக்கு தப்புன்னு  பட்டா தண்டனை கொடுப்பேன் .”

” ஆஹான் … இதுக்கு  ஜித்தேரி விதி படி துரியன்  உனக்கு  மரண தண்டனை கொடுக்கலாம்  தெரியும்ல ? ” நக்கலாக கேட்டார்   .

”  உயிருக்கு பயந்து வேலை செய்யிறவன் நான் இல்லை அது உங்களுக்கு தெரியும்ல ?” வாங்கிய அடியை சிந்தாமல் சிதறாமல் திரும்ப கொடுத்தான் .

“ஆதி …” என சீறிய விக்டரை  தன் கரம் உயர்த்தி தடுத்த துரியன் ,

” ஆதி நீ செஞ்சது தப்பு அதுக்கு சரியான விளக்கம்  குடு ” குரலை உயர்த்தாமல்  கேட்டான் துரியன் .

” விளக்கம் ! “என தன் கண்களை இறுக்கமாக மூடி ஆழமான மூச்சை வெளியிட்ட ஆதித்யா துரியனின் விழிகளை நேருக்கு நேராக சந்தித்து ,”தேட் கலப்ரிட்  ஒரு பொண்ணை கற்பழிச்சிருக்கான்  … கற்பழிப்புக்கு  ஜித்தேரியில தலையை வெட்டணும்ன்னு ஒரு ரூல் இருக்கு அதை தான் நான் செஞ்சேன் இந்த விளக்கம் போதுமா ?”

“ஆதி  ரிலாக்ஸ் … இதை பொறுமையா எங்க கூட பேசிட்டு செஞ்சிருக்கலாம்  … நீ பதவியில இருக்கிற போலீஸ் மேல கை வச்சிருக்க … இப்போ டிபார்ட்மெண்ட்ல  என்ன பண்ண போறீங்கன்னு  கேட்குறாங்க “

” அவ்வளவு தானே நான் பேசிக்கிறேன் … நீங்க  ரிலாக்ஸ்சா இருங்க போதுமா ” என்றவன் தன் இருக்கையில் இருந்து எழுந்துகொள்ள ,

” ஆதி இன்னும் நான் பேசி முடிக்கல ” என்று  துரியன் கூறியதும் … நாற்காலியில் அமர்ந்து  தன்  தலையை  அழுந்த கோதி ,

” பேசு கேக்குறேன் ” என்ற ஆதித்யாவின் குரலில் தான் அத்தனை கோபம் .

” ஏன் இவ்வளவு கோபம் ? பேசிட்டு இருக்கும் பொழுதே கோபப்பட்டா என்ன பண்றது?”

” அந்த பொறுக்கிக்காக நீங்க என்னை  கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க  … கோபப்படாம  என்ன பண்ண சொல்றீங்க? ” அவனுடைய விழிகளிலும்  வார்த்தையிலும் அனல்  பறந்தது .

” கம் ஆன்  ஆதித்யா …. உன்னை யாரும் கேள்வி கேட்கல …  ஒரு பிரச்சனை வந்திருக்கு  அதை சால்வ் பண்றதுக்காக  நாம பேசிட்டு இருக்கோம் . பிரச்சனையில் நீ சம்பந்தம் பட்டிருக்க  ஸோ விக்டர் உன்கிட்ட கேள்வி கேட்குறாரு தட்ஸ்  இட்…. சரி நாங்க எதுவும் பேசல நீயே  இதுக்கு ஒரு தீர்வு சொல்லு  ” என்று துரியன் கூறியதும் நீண்ட பெருமூச்சை இழுத்துவிட்டபடி சேரில் நன்றாக சாய்ந்து அமர்ந்த ஆதித்யா மெல்ல  தன் தலையை மேலும் கீழும் அசைத்து ,

” ஜித்தேரி வழக்க படி என்ன பண்ணுவீங்களோ அதையே பண்ணுங்க… உங்களுடைய முடிவு எதுவா இருந்தாலும்  ஏத்துக்கிறேன் ” – என்றான் தீர்க்கமாக .

” வாட் ” அதிர்ச்சியுடன் அவனை பார்த்தான் துரியன் .

” ஆமா கொலை பண்ணனுமா பண்ணிக்கோங்க  ” மீண்டும் கூறினான் ! இந்த முறை இன்னும் தீர்க்கமாக ! சிறு தடுமாற்றம் கூட இல்லாத உறுதியான அவன் குரல் , எந்த போலிஸுக்கும் அடங்க மாட்டேன் எத்தனை டான் வந்தாலும் எதிர்த்து நிற்பேன் … நானும் யாருக்கும் சலைத்தவன் அல்ல என அடித்து கூறியது .

ஜித்தேரியின்  விதிப்படி ,பொதுமக்கள், அரசு அதிகாரிகள், போலீஸ்,நீதிபதிகள் என யாரையும் தேவை இல்லாமல் கொலை செய்ய மாட்டார்கள் இல்லை கூடாது . முடிந்தவரையில் லஞ்சம் கொடுத்து அனைவரையும் விலைக்கு  வாங்கிவிடுவார்கள், வேறு வழியே இல்லை என்றால் தான் கொலை செய்வதெல்லாம் நடக்கும்  . ஆனால் அவ்வாறு  செய்ய வேண்டும் என்றால்  இவர்களுடன் தொழில் முறை நட்பு வட்டாரத்தில் இருக்கும்   மற்ற டான்களிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்க வேண்டும் . ஒரு டானுக்கு பிரச்சினைக்கொடுக்கும் அதிகாரியை மற்ற டான்களிடம் கலந்தாலோசிக்காமல்  கொலை செய்தால் , அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சம்பந்தப்பட்ட டானை கொன்றுவிடுவார்கள்.

ஏன் என்றால் தலைமை பொறுப்பில் இருக்கும்  ஒரு அதிகாரியை கொலை செய்தால்  அரசு அதிகம் கவனம் செலுத்தும் , இதனால் சம்பந்தம் பட்ட நபருடன் சேர்ந்து அனைவரின்  தொழிலும் பாதிக்க படும் … இதெல்லாம் இவர்களை போன்ற கேங்ஸ்டர்களுக்கு   பெரிய பிரச்சனை ஒன்று இல்லை தான். ஆனாலும் தொழிலை பாதிக்கும்படியான பிரச்சனைகள் வருவதை விரும்ப மாட்டார்கள்    .

ஒரு காவல் துறை அதிகாரியையோ இல்லை  அரசு அதிகாரியையோ  கேங்ஸ்டர்கள் யாரும் கொலை செய்துவிட்டால் ,காவல் துறையினர்  நேரடியாக  அவர்கள் மீது   நடவடிக்கை  எடுக்காமல் ,அந்த குழுவின் தலைவருக்கு  தகவல் கொடுப்பார்கள் … இல்லையேல்   நேரடியாக  வந்து பேசுவார்கள்  இதற்கு முக்கிய காரணம்   ஏராளமான  அதிகாரிகள் , வழக்கறிஞர்கள்,நீதிபதிகள் ஏன் அரசியல்வாதிகள்  எல்லாம் மாபியாவின்  மாத  ஊதிய  பட்டியலில்  முதலில் இருப்பவர்கள் .

பின்னர் அந்த குழுவின் தலைவனே  கொலை செய்த மாபியா ஆளை  தீர்த்து கட்ட உத்தரவு கொடுத்து பிரச்சனையை காதும் காதும் வைத்தபடி  முடித்து விடுவார்.

இப்பொழுது துரியனும்  இப்படி பட்ட இக்கட்டான சூழலில் தான் மாட்டியுள்ளான் …  ஒரு பக்கம் நண்பன், இன்னொரு  புறம் ஜித்தேரியின்  நெறிமுறைகள் , மற்றொரு பக்கம்  அவனுக்கு கீழ் இயங்கும்  மாபியா குழுக்கள் …இன்னொரு புறம்  போலீஸ் . முடிவெடுக்க வேண்டிய நிலையில் அவன் .

நட்பா ? தொழிலா ?
துரியனின் ஒரு முடிவு அவனின் வாழ்கை பாதையையே மாற்ற போகிறது .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

துரியன் மற்றும் விக்டரை சந்தித்து விட்டு தான் வசிக்கும் இடம் திரும்பி இருந்த ஆதித்யாவுக்கு   அவனது பாதுகாவலன்  காரின் கதவை திறந்துவிட …வேகமாக இறங்கியவன் திகைத்து நின்றான்.

தன் மணி கடிகாரத்தை பார்த்தான் நேரம் ஒன்பதரை  என  காட்டியது … துரியனை  சந்திக்க அவன் கிளம்பிய பொழுது மணி ஆறு . ஆதித்யா செல்லும் பொழுது எந்த நிலையில் இருந்தாளோ அதே நிலையில் அமர்ந்திருந்தாள் மதுமதி . முகத்தில் சோகம் படித்திருக்க  ஏதோ கனவு  உலகில் இருப்பவள் போல அமர்ந்திருந்தாள்.ஏற்கனவே கோபத்துடன்  வந்தவனுக்கு  மதியின் பிடிவாதம் மேலும் கோபத்தை கொடுக்க  ,

” பிடிவாத காரி ” என்று தன் பற்களை கடித்தவன்  .

இன்று நடந்த சம்பவத்தை எண்ணி பார்த்தான் ….பெருமூச்சை வெளியிட்டு  தன் பின்னங்கழுத்தை அழுத்தி பிடித்தவன் ,

” இருக்கட்டும்  இறங்கி இறங்கி போறதுனால  தான்  ஓவரா பண்ணிட்டு இருக்கா … எதையும் யோசிக்காத ஆதி ” என்றவன் தன்னை தானே திடப்படுத்திக்கொண்டு  அங்கிருந்து நேராக தனது அலுவலக  அறைக்கு சென்றுவிட்டான் .

வெகுநேரமாக   தன் அறையில்  குறுக்கும்  நெடுக்குமாக  நடந்தவனின் சிந்தனை திடிரென்று பளிச்சிட …  மூடி ஓரம்கட்டிய    கணினிக்கு  உயிர் கொடுத்து … சில நிமிடங்கள்  ஏதேதோ கோப்புகளை  ஆராய்ந்து    கணினி திரையை மூடியபடி நிமிர்ந்த ஆதித்யா ,

” தீனா தயாளன்  நான் நினைச்சதை  விட நீ  ஸ்மார்ட்  தான் ” என கூறினான் , அவனது இதழ்  விஷம  புன்னகையில் வளைந்தது .

பின்பு ஸ்டார் ஒன்னுக்கு அழைப்பு விடுத்து இன்று இரவு  சந்திக்குமாறு  கூறிய ஆதித்யா தனது அலுவலக அறையில் இருந்து நேராக உணவு கூடத்திற்கு சென்றான்  .அங்கே மதி இல்லையென்றதும் இன்னும் அவள் தோட்டத்தில் தான் இருக்கிறாள் என்பதை புரிந்து  கொண்டான்  ..  தானே சென்று அவளை அழைத்து வரலாம் என எண்ணியவன்,  பின்பு எதையோ யோசித்து தன் பணியாளை அழைத்து ,

” மதி கார்டென்ல  இருப்பா கூட்டிட்டு வா … அப்படியே நாகா … வீராக்கும் தகவல் சொல்லிடு ” என்றான் .

சில நிமிடத்தில் வீராவும் , நாகாவும் வந்துவிட  மூவரும் மதிக்காக காத்திருந்தனர் .

சிறிது நேரம் கழித்து  அங்கே வந்த  மதி , யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் நாற்காலியில் வந்து அமர்ந்து கொள்ள …  வழமை போல மதிக்கும்  தானே உணவு பரிமாறிய  ஆதித்யா  சப்பாத்தியை வைத்து விட்டு,

” இந்த கிரேவி நல்லா இருக்கும் ” என பேச்சுக்கொடுத்தபடி அவள் தட்டில் , ஆதி கிரேவியை  ஊற்ற  … சில நொடிகள் தட்டையே வெறித்து பார்த்து கொண்டிருந்தவளுக்கு   சட்டென்று  அது   சிவப்பு நிற  குருதி  போல  தெரிய ,” நோ ..” என்று கத்தியவள்  வெடுக்கென்று  அவன் கையை  தட்டிவிட்டபடி  அங்கிருந்து எழுந்து நிற்க  ,

 ” என்ன நினைச்சிட்டு இருக்க … ?சாப்பாடை தட்டிவிடுற … உன்னை ” என ஆத்திரத்தில் தன் கைகளை ஓங்கியவன் ,   கண்களை தன் கைகளால்  மூடி கொண்டு பயத்தோடு  அழுது கொண்டிருந்தவளை  தன் தாடை இறுக சில நொடிகள் வெறித்து பார்த்தான் .
மிரண்ட மான் குட்டி போல நடுங்கி கொண்டிருந்தாள் ! அந்த நிலையில் அவளை பார்த்ததும் அவள் பயத்தை உணந்தவன் தன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு,

” இட்ஸ் ஓகே மதி ” என கூற …” சாரி சாரி ”  என கீழே சிதறி கிடந்த சாப்பாடை  பார்த்து திரும்ப திரும்ப  கூறியவள் அழுது கொண்டே  அங்கிருந்து  தன் அறைக்கு ஓடி விட்டாள் .

அப்பொழுது பின் தொடர போன ஆதித்யாவை  தடுத்த நாகா , 

” ஆதி லீவ்  ஹெர் … ரெண்டு நாள் போனா சரியாகிடுவா  ” என கூறி தன் உணவில் கவனமாக , அந்நேரம்  பணியாளை  அழைத்த வீரா கீழே சிதறி கிடந்த உணவை சுத்தம் செய்ய  சொல்லிவிட்டு அவனும் உணவில் கவனமாக , ஆதித்யாவுக்கு தான் மதியின் நினைப்பாகவே இருந்தது .

அனைவருக்கும் முன்பாக தட்டில் இருந்ததை  மட்டும்  ,  வீணடிக்க  மனம்  வராததால் விருப்பமே  இல்லாமல் உண்ட ஆதித்யா  …. இருவரிடமும் விடை கூட பெறாமல்  எழுந்து  வெளியே  சென்றுவிட்டான் .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அடிபட்ட மலர் போல தரையில் சுருண்டு கிடந்தாள்  மதுமதி … விழிநீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது .

‘ எங்க அப்பா  இருக்கீங்க …?   நரகத்துல  வந்து மாட்டிகிட்டேன் பா … பயமா இருக்கு  …வந்துருங்க பா …என்னை கூட்டிட்டு போங்க …  ப்ளீஸ் ‘  பல  வருடங்களுக்கு பிறகு  தன் தந்தையை எண்ணி  கதறினாள் மதுமதி .

சிந்தனைகள்  எங்கெங்கோ சென்று கடந்த பக்கங்களை புரட்டியது . அப்பொழுது மதுமதி பதினைந்து வயதே ஆன சிறுமி …. தன் அப்பா அம்மாவின் இளவரசி!

விவரம் அறிந்தத்தில் இருந்து தாயுடன் வெளிநாட்டு வாழ்க்கை ! தந்தை உலகம் சுற்றும் பிஸ்னஸ் மேன் .

வருடத்திற்கு இரெண்டு மாதங்கள் எவ்வளவு பெரிய பிஸ்னஸ் டீலையும் தூக்கி போட்டுவிட்டு குடும்பத்தினருக்காக செலவிடும் அற்புதமான தந்தை .

கஷ்டம் நஷ்டம் தெரியாது ! பசி துன்பம் அறிந்ததில்லை! கேட்க கூட தேவை இல்லை அவள் பார்த்தாலே போதும் அடுத்த நொடி அந்த பொருள் அவள் காலடியில் கிடக்கும் !

அது எப்படி வந்தது ? அதுக்கு பணம் ஏது ?என்றெல்லாம் ஒருநாளும் அவள் எண்ணியது கிடையாது .’நீ கேட்டா அப்பா கொடுப்பேன் … நீ ராஜாவோட மகள் … ‘ என தயாளன் சொல்லி சொல்லி வளர்த்தது . ஆகையால் அதை தாண்டி அவள் மூளை ஒருநாளும் வேறு விதமாய் சிந்தித்தது கிடையாது .

ஆக தனது பதினைந்து வயது வரை கஷ்ட நஷ்டங்கள் எதுவும் அறியாமல் …தாய் தந்தை என ஒரு சிறிய உலகத்துக்குள் மகிழ்ச்சியை மட்டுமே அனுபவித்து வந்த வெகுளி பெண்ணான மதுமதிக்கு , குண்டடி பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்த அவளது தாயின் உடல் அதுவரை அவள் அறியாத பல உண்மைகளை அவளுக்கு அறியவைத்தது .

அவள் தாயின் மரணத்திற்கு பிறகு கழிந்த ஒவ்வொரு நொடியும்  மதுமதிக்கு பித்து பிடிக்க வைத்தது .. தாய் தந்தை தவிர வேறு உறவுகவே தனக்கு இல்லை என்று நினைத்திருந்தவளுக்கு  … அருள் நிதியின் வருகை அதிர்ச்சி என்றால் … ‘ இனி இவர் தான் உனக்கு எல்லாம் … இவருடன் நீ இந்தியா செல்ல வேண்டும் ‘ என மரண படுக்கையில் கிடந்த அவளது தாய் கூறிய சொற்கள்  பேரதிர்ச்சியை கொடுத்தது .

மனைவியின் இறுதி சடங்கை முடித்த கையோடு  அவரது  கடைசி விருப்பப்படி அருள்நிதியின் கையில் மதியின் கரங்களை ஒப்படைத்துவிட்டு கப்பலில் ஏறவிருந்த தன் தந்தையை நோக்கி ஓடி சென்று இறுக்கமாக கட்டிக்கொண்ட மது ,

” அப்பா போகாதீங்க … நானும் உங்க கூடவே வரேன் ப்ளீஸ் … எனக்கு பயமா இருக்கு ” தேம்பி தேம்பி அழுதாள் . கண்களை இறுக்கமாக மூடி தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்ட தயாளன் ,மதியிடன் ,

” மது அப்பாக்கு ஒரு சத்தியம் பண்ணி குடு ” என்றார் , அவர் குரல் கனத்திருந்தது .

“என்ன அப்பா? ” தேம்பலுடன் கேட்டாள்.

” இனி நீ அப்பாவை நினைச்சு அழ கூடாது … சித்தப்பா உன்னை நல்லா பார்த்துக்குவான் … யாரு கேட்டாலும் அப்பா உயிரோட இல்லைன்னு தான் சொல்லணும் “

” ஏன் அப்பா அப்படி? “

” அப்பா சொன்னா கேட்கணும் , சத்தியம் பண்ணு ” தன் கைகளை நீட்டினார் .

” நானும் வரேன் பா “

“ம்ம்ம் ” பண்ணு ஒரே ஒரு அதட்டல் ! இதுவரை வாழ்நாளில் தன் தந்தையுடம் இருந்து அவள் கேட்டிடாத குரலை இப்பொழுது கேட்டதும் …  நடுங்கியே விட்டாள்.  மிரட்சியுடன் தன்னை பார்க்கும் தன் மகளை … ஏறிட்டவர் ,

” நீ யாரோட பொண்ணு ?” தன் மீசையின் நுனியை முறுக்கிவிட்டபடி கேட்டார் .

” உங்க பொண்ணு ” குரல் தழுதழுத்தது .

” ப்ச் … யார் பொண்ணு ?” மிரட்டினார் ! இதெல்லாம் மதுமதிக்கு மிகவும் புதிது .

” ராஜாவோட பொண்ணு ” நா குழறியது.

“ம்ம் அப்போ நீ யாரு ?”

” இளவரசி “

” இளவரசி அழலாமா ?”

” அழ கூடாது ” கண்ணீர் வழிந்தது .

” ம்ம் ” கண்களாலே அதட்டினார் … சட்டென்று கண்ணீரை துடைத்து கொண்டாள் .

” நீ கேட்டா ?”

” அப்பா குடுப்பாங்க ” தளிர் விரல்கள் மெல்ல நடுங்கியது .

” குட் ” பெருமிதத்துடன் மகளின் தலையை வருடிய தயாளன் . திரும்பி பார்க்காமல் சென்று விட .

அருள்நிதியின் கரம் பிடித்து கொண்டு மும்பைக்கு வந்தவளுக்கு அனைத்தும் புதிதாக இருந்தது …. இதுவரை அவள் வாழ்ந்த உலகத்திற்கும் இப்பொழுது அவள் பார்க்கும் உலகத்திற்கும் பெரிய வித்யாசம் இருந்தது .

இவர்களின் பாசம் வேறு விதமாக இருந்தது … அருள்நிதியின் அரவணைப்பும் ப்ரீதாவின் அன்பும் அவளது மனக்காயத்தை ஓரளவு சரி செய்தது .
மிருதுளாவின் குத்தல் பேச்சு அவளுக்குள் இருக்கும் பொறுமையை வெளி கொண்டு  வந்தது . ப்ரீதாவின் வளர்ப்பு அவளுக்குள் இருக்கும் மென்மையை வெளி கொண்டு வந்தது . அருள்நிதியின் அரவணைப்பு சகிப்பு தன்மையை கற்று கொடுத்தது . இளமாறனின் சகோதரத்துவம் சுயமாய் சிந்திக்கும் திறனை கொடுத்தது .  அர்ஜுன் ஜுவாலாவின் பாசம் உனக்கு நாங்கள் இருக்கிறோம் என்னும் தைரியத்தை கொடுத்தது .

எல்லாம் இருந்தும் … அவளது மறைந்து போன தாய் மற்றும் , தன்னை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு தலைமறைவான  தந்தையின் நினைவுகள் ..அவள் மனதில் நித்தமும் புயலை வீசியது .

” அவர்கள் அனைவரும் யார் ? ஏன் தன் தாயை சுட்டார்கள் ? …  ஏன் தந்தை அவர்களை சுட்டார் ? அவர்கள் ஏன் தன் தந்தையை பழிவாங்கியே தீருவோம் என சவால் விட்டார்கள் ? ஏன் திடிரென்று நாம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டோம் “என பல கேள்விகள் அவளை விடாமல் துரத்தியது .

வீட்டில் ஒருவர் கூட தன் தந்தையை பற்றி பேசாமல் இருப்பது மதிக்கு குழப்பத்தை  கொடுக்க …. தன் மனதில் உள்ளதை   யாரிடமும் பகிர  முடியாமல் மிகவும் வேதனை அடைந்தவள்  இதற்கு மேல் பொறுக்க முடியாமல் ஒருநாள்  மனம் விட்டு  அருள் நிதியிடம்  பேசினாள் .

” நான் வந்து ஒரு வருஷம் ஆக போகுது  இப்போ வர இந்த  வீட்ல என் அப்பா பத்தி யாரும் பேச மாட்டிக்கிறாங்க  … நீங்க யாரும் எங்களை பார்க்க கூட வந்ததில்லை …. ஏன் போன்ல கூட பேசினது இல்லை … ஏன் ” இதை கேட்கும்  பொழுது மதி பதினாறு வயது பெண் . இந்த கேள்வியை  மதியிடம் இருந்து கொஞ்சமும் எதிர்பார்க்காத  அருள்நிதிக்கு  அவளுக்கு என்ன   பதில் சொல்வது என்பது புரியவில்லை .

சொல்ல வேண்டும் என்றால்  ஆரம்பத்தில்  இருந்து அனைத்தையும் கூற வேண்டும் .

ஆனால் அதையெல்லாம்  அவளிடம் எவ்வாறு பகிர முடியும்  ?

தந்தையை பற்றி தெரிந்து கொள்ளும் உரிமை அவளுக்கு இருக்கின்றது ஆனால் , சொல்லும் நிலையில் அவர் இல்லையே!

சில ரகசியங்கள் ரகசியமாக இருக்கும் வரை தானே அனைவருக்கும் நல்லது … வெளி வந்துவிட்டால் வாழ்க்கை நரகமாகிவிடுமே ! என கடந்தகாலத்தை சில நேரம் புரட்டிப்பார்த்தவர் மதியிடம்,

” உன் அப்பா தொழில் எனக்கும் ப்ரீத்தாவுக்கும் புடிக்கல .. போதாக்குறைக்கு  அதில ஆபத்து அதிகமாக  இருந்துச்சு ஸோ  நாங்க  ப்ரீத்தா கல்யாணத்துக்கு  அப்புறம் தனியா வந்துட்டோம் … அவரும்  நீ பிறந்தத்துக்கு  அப்புறம் உங்க அம்மாவையும் உன்னையும் வெளிநாட்டுல விட்டுட்டாரு . பசங்களுக்கு தெரிஞ்சா நல்லா இருக்காது என்பதுனால  அவங்க கிட்ட இதெல்லாம் சொன்னதில்லை …. குடும்ப தகராறு காரணமா பேச்சு வார்த்தை இல்லைன்னு சொல்லிருந்தோம் அவங்களும் சின்ன வயசுல இருந்து பார்த்ததில்லை என்பதினால பெருசா கேட்டுக்கிட்டதில்லை ” என்றார் சொல்ல வேண்டிய உண்மைகள் பலவற்றை மறைத்தபடி .

” அத்தை யாரையுமே வெறுக்க மாட்டாங்க , அவங்களுக்கே புடிக்கலைன்னா அப்பா அவ்வளவு மோசமானவரா! அப்படி எண்ண பிஸ்னஸ் பன்றாரு? உங்களுக்கு பிடிக்காத மாதிரி …. ஏன் அவங்க அம்மாவை கொலை செஞ்சாங்க ?” – கேட்கும் பொழுதே அவளது மனம் வலித்தது .

” ————————- ” ‘ ஆம் ‘ என சொல்லி அவள் மனதை உடைக்க அருள்நிதிக்கு விருப்பம் இல்லை ,  என்பதால் மெளனமாக இருந்தார் . ஆனால் அவர் மௌனம் அவளை இன்னும் வதைத்தது .

” சொல்லுங்க சித்தப்பா “

”  கோல்ட் பிஸ்னஸ் தான் … இல்லீகளா கடத்துவாரு… அதுல ரெண்டு க்ரூப்புக்கும் நடுவுல உள்ள பிரச்சனைல உன் அப்பாவுக்கு பதிலா தப்பா உன் அம்மாவை சூட் பண்ணிட்டாங்க ” என மேலோட்டமாக கூறினாரே தவிர தயாளனின் கொடூரங்களையோ அவர் இன்று வரை செய்து கொண்டிருக்கும் இழிவான பிஸினஸை பற்றியோ அவர் மூச்சு விடவில்லை .

” அப்பா கடத்தல் வேற பண்ணுவாரா அப்போ அவரு நிஜமாவே அந்த ஆளை கொலை பண்ணிருக்காங்களா ? அதுக்கு தான் அவங்க பழிவாங்க வந்தாங்களா?” மதியின் அதரங்கள் துடித்தது .

“மதி அழாத டா .. உன் அப்பாவோட உலகம் வேற அங்க இருக்கிறவங்க எல்லாருமே அப்படி தான் … அது அவருடைய தொழில் , மற்றபடி அவர் அப்பாவி பொது மக்களுக்கு எந்த தீங்கும் செஞ்சதில்லை “மூச்சு திணற திணற அழுது கொண்டிருப்பவளை தேற்ற வழி தெரியாமல் பொய் கூறியிருந்தார் .

” என் அம்மாவுக்கு இதெல்லாம் தெரியுமா ?”

” ம்ம்ம் ” தலையசைத்தார் .

” எப்படி ?”

” அவங்களோடது லவ் மேரேஜ் … எல்லாம் தெரிஞ்சி தான் அவங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டாங்க … “

” அம்மா அப்பாவை இந்த மாதிரி பண்ண வேண்டாம்ன்னு சொல்லலையா ?” காலா ஜித்தேரியோட உரிமையான வாரிசு நீ ….இது உன் குடும்ப தொழில் என்று சொல்ல வெகு நேரம் ஆகாது,  ஆனால் அருள்நிதிக்கு மதுமதி அதை பற்றி தெரிந்து கொள்வதில் விருப்பம் இல்லை , எனவே

” அது அவங்களுக்கு இடையே உள்ள அண்டர்ஸ்டேண்டிங் ” என ஒரே வரியில் முடித்துவிட்டார் அருள்நிதி .

“நீங்களும் என் அப்பாவை வெறுக்குறீங்களா ?”-   ‘ஆம் ‘ என சொன்னால்  ஒருகாலத்தில் தயாளன்  செய்த தியாகத்தை மறந்த பாவி  என மனம் சபிக்கும் ! ‘ இல்லை ‘  என்றால் அவர் செய்த  குற்றத்தை  ஆராதிப்பது  போல ஆகிவிடும்  மனசாட்சி இடம் கொடுக்காது . பதில் தெரியாமல்  நீண்ட பெருமூச்சை  வெளியிட்டவர் ,

” அவர்  எங்களுக்காக  நிறைய கஷ்டம் பட்டிருக்காரு … என்னையும் என் தங்கச்சியையும்  வளர்கிறதுக்காக தான் அவர் இந்த தொழில் குள்ள வந்தாரு … அதுவே  அவரை வேற மாதிரி மாத்திடுச்சு …   …. நானும்  தங்கச்சியும்  எவ்வளவோ சொல்லி பார்த்தோம்  . ஆனா அவர் அதை விட்டு வெளிய  வரல ,   அதனால  நாங்க அவரை விட்டு வந்துட்டோம் .

 மதி  இந்த உலகத்துல  யாருமே முழுசா நல்லவங்க கிடையாது எல்லார்கிட்டயும்  ஒரு நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும் …. அதே மாதிரி தான்    உன் அப்பாவும் … இந்த உலகத்துக்கு அவர்  ரொம்ப மோசமானவர் தான்  . ஆனா  அவர் ஒரு நல்ல  கணவன் ஒரு நல்ல அப்பா  …. இந்த உலகத்துல  அவரை வெறுக்க நிறைய பேர் இருக்காங்க  ஸோ  நீ  அவரை வெறுக்காத  ” என்றார் .

அவர் சொன்ன வார்த்தைகள்   மதியின்  மனதை வெகுவாக மாற்றியது … ‘ தந்தைக்கு வெறுப்பை காட்ட ஏராளமானோர் இருக்கின்றனர் ஆனால் அன்பை நான் மட்டும் தானே கொடுக்க முடியும் ‘  என்று எண்ணியவள்  …  தன் மனதில் தந்தை மீது இருந்த கொஞ்ச வெறுப்பையும் தூக்கி போட்டுவிட்டு .. அவர் மனந்திரும்பி வருவதற்காக காத்திருந்தாள் . இன்னும் இருக்கிறாள் . குற்றவாளிகளின் குழந்தைகள் என ஒதுக்காமல் தேடி சென்று அவர்களுக்கு பாடம் சொல்லி தருவது … ஆதரவற்ற குடும்பத்திற்கு உதவி செய்வது எல்லாமே அவள் தந்தை செய்த பாவத்திற்கு அவள் செய்யும் சிறு பரிகாரம்.

ஆதனால் தான் அவளால் யாரையுமே அவ்வளவு சீக்கிரம் வெறுக்க முடியவில்லை .

ஆதித்யா பற்றி தெரிந்த பிறகும் அது அவளை பெரிதாக பாதிக்காததற்கு கூட இது தான் காரணம் . அவன் கெட்டவன் என்றாலும் சந்தித்த முதல் நாள் தனது உயிரை காப்பாற்றியதில் தொடங்கி தன் மானம் காத்தது என அவனது செய்கை ஒவ்வொன்றும் அவளை வெகுவாய் ஈர்த்தது . ஆனால் துரியனின் வருகைக்கு பிறகு நாளுக்கு நாள் அவனிடம் தெரிந்த மாற்றங்கள் எல்லாம் மதியின் நம்பிக்கையை உடைத்து கொண்டே இருக்க … நேற்று நடந்த சம்பவம் மதியை மிகவும் பாதித்து விட்டது .

‘இவனை போல தானே அப்பாவும் என் நம்பிக்கையை உடைத்தார்’ என அவள் மனம் அழுதது .

எத்தனையோ நாட்கள் ஜுவாலா , அர்ஜுன் இருவரும் அவர்களின் பெற்றோரிடம் இணக்கமாக இருப்பதை பார்த்து ,

‘ ஏன் தன் தந்தை நல்லவராக இல்லை … ?ஏன் இவர்களை போல என் வாழ்கை இல்லை …? ‘ என பலமுறை தன் தந்தையை எண்ணி எண்ணி கண்ணீர் வடித்தவள் …. இன்று ஆதித்யாவுக்காக கண்ணீர் வடிக்கிறாள் .

‘ ஏன் ஆதி நீ நல்லவனா இல்லை … அட்லீஸ்ட் என் மனசையாவது உடைக்காம இருந்திருக்காலாமே ‘ என மனம் நொந்து அழுதாள் .

ஆதித்யா ஒரு கேங்ஸ்டர் என தெரிந்த பிறகு கூட உடையாத அவள் மனம் இப்பொழுது உடைந்து நொறுங்கியது . அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை .

கடைசி வரை இப்படியே வாழ வேண்டிய நிலை வந்துவிடுமோ என்னும் அச்சம் அவளை விடாமல் துரத்த . வெகு நாட்களுக்கு பிறகு தன் தந்தையை எண்ணி ஏங்குகிறாள் .அவராவது வந்து தன்னை காப்பற்றி விட மாட்டாரா என கதறுகிறாள் .

தயாளன் தலைமறைவாகி கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் மேல் கழிந்து இருக்க .. இன்று வரை தயாளனின் இருப்பிடம் புதிராகவே இருக்கும் இந்த நிலையில் . மகளின் அழுகுரல் தயாளனின் செவியை சென்றடையுமா ?.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%5

‘நைட்  குயின்’ ( இரவுகளின்   ராணி  )  மும்பை   சிட்டியின்  புகழ்  பெற்ற  ஐந்து நட்சத்திர கேளிக்கை  விடுதி  …. அங்கே  மது  மாது  சூது  இவ் மூன்றுக்கும்  பஞ்சமே  கிடையாது  ….  அரைகுறை  ஆடையுடன்  வலம்  வரும்  அழகிகளுக்காகவே   வரும்  கூட்டத்தை  விரல்  விட்டு  எண்ண  இயலாது  …  பெரிய  பெரிய  பண  முதலைகளை  தொடங்கி  நடிகை  நடிகர்கள்  வரை  அனைவரும்  நைட் குயினுக்கு  அடிமைதான்  ….  மிளிரும்  வண்ண  விளக்குகள்   ….  மயக்கும்   வாசனை  ….  துள்ளளலான  இசை  …  கையில்  மதுபானத்துடன்  உலா  வரும்  அழகிகள்  …  ஆனால்  இது  எதுவும் ஆதித்யாவை  பாதிக்க  வில்லை  …  தனது டி ஷர்ட்டின்  ஹூடால்  தன் தலையை  மூடியிருந்தவன்    கூட்டம்  அதிகம்  இல்லாத  கார்னர்  டேபிளில்  சென்று  அமர்ந்தான்  .அவன் வந்த சில நொடிகளில்  ஸ்டார் ஒன்னும் அங்கே வந்துவிட …. கேளிக்கைகளை  ரசித்தபடி  இருவரின் சம்பாஷனையும்  தொடர்ந்தது .

” இதெல்லாமே தயாளன் தான் பண்ணினான்னு எப்படி  இவ்வளவு உறுதியா சொல்றீங்க ….. வேற புது கேங் யாரும் பண்ணிருக்கலாமே ” என மதுபானத்தை சுவைத்தபடி கேட்டான் அந்த  ஆடவன் .

” ஜித்தேரி பெயரை யூஸ் பண்ணி பண்ற அளவுக்கு துணிச்சல் தயாளனை தவிர வேற  யாருக்கும்    கிடையாது ” என தன் அலைபேசியை  ஆராய்ந்தபடி  கூறினான் ஆதித்யா .

” ஆனா ஆஃப்லைன் அண்ட்  ஆன்லைன்  டிரான்ஸாக்ஷ்ன்ஸ்  எல்லாம்   க்ளியரா இருக்கே ” அந்த ஆடவனின் முகத்தில் குழப்பம் தெரிந்தது .

“என் கணிப்பு  சரியா இருந்தா  டார்க் நெட் ! டார்க் நெட்ல   உள்ள tor  பிரவுசர்  மூலமாக ஆயுதங்களையும்  , போதை பொருளையும்   ஆன்லைன்ல ட்ரேட்(வணிகம்)பண்ணிட்டு இருக்கான் …   ஸோ டிரான்ஸாக்ஷ்ன்ஸ்   டீட்டையில்ஸ்  கண்டு  புடிக்கவே முடியாது …. “என்றவனின் பார்வை அலைபேசியின் திரையை விட்டு அகலவில்லை .

“ஓகே வாட் அபவுட் மணி டிரான்ஸாக்ஷ்ன் ?” ஆர்வத்துடன் கேட்டான் அந்த ஆடவன்.

” எல்லாமே பிட் காயின்ஸ்  அதாவது டிஜிட்டல் கரன்சி  …. ஸோ  இதெல்லாம் வச்சி எதுவும் பண்ண முடியாது ” அவனது ஆர்வத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆதித்யாவின் பதில் .

” ஹாக்கர்ஸ் வச்சி  டீகோட் பண்ணலாமே ?” எதையாவது வைத்து தயாளன் இருக்கும் இடத்தை கண்டறிந்து விட முடியாதா ? என்னும் ஏக்கம் அந்த ஆடவனின் குரலில் விரவி கிடந்தது .

” இவங்க யூஸ் பண்ணிருக்கிறது  256bit லெவல்  எனக்ரிப்ஷன் (குறியீடு )டெக்னீக்  … டீகோட் பண்ண ஸ்பெஷல்  அல்காரிதம்(வழிமுறை)  வேணும் .. எல்லாம் இருந்தாலும் இவங்கள  ட்ரேஸ் பண்றதுக்கு  2  வருஷத்துல இருந்து 50  வருஷம் வர ஆகலாம் “

” மிருதுளா ஆதவன்  மூலமா  “

” வேஸ்ட் … அவங்க ஜஸ்ட் தயாளனோட  லீகல் பினாமிஸ் … அவங்களை புடிச்சு நோ யூஸ்  …முதல்ல அவங்கள புடிக்கிறதக்கு  எதுக்கு இத்தனை வருஷ போராட்டம்?  ” என கேட்டான் ஆதித்யா .

” அப்போ ஜித்தேரிக்கு  சொந்தமான பல கோடி மதிப்புள்ள  தங்கம் …   “

” தயாளனை  நெருங்குனாதான்  தங்கத்தை நெருங்க முடியும்… தயாளனை நெருங்க இப்போதைக்கு நமக்கு இருக்கிற ஒரே ட்ரம்ப்  கார்ட்  மதுமதி  “

“பெண்ணுக்காக ரிஸ்க் எடுப்பான்னு நினைக்கிறியாஆதித்யா “

” பெண்ணுக்காக இல்லைன்னாலும் பொன்னுக்காக கண்டிப்பா எடுப்பான் …  காலா ராவதோட எல்லா சொத்தும் அவருக்கு அப்பறம்  மாலினிக்கு தான் போயிருக்கும் … மாலினி இறந்ததற்கு அப்பறம்  மதுமதிக்கு போயிருக்கும்  ஸோ மொத்த சொத்துக்கும் ஒரே வாரிசு மதுமதி தான் . மாலினியோட  டெத்க்கு அப்புறம்  தயாளன் தலைமறைவாகிட்டான் … சொத்து இன்னும் மதி பேருல தான் இருக்கும்  ஸோ  கண்டிப்பா ரிஸ்க் எடுப்பான்   “

” டிஜிட்டல்  கரன்சி  டார்க்நெட் இதெல்லாம் ஓகே ஆனா  ட்ரான்ஸ்போர்டேஷன்   மும்பை போர்ட்(மும்பை துறைமுகம்) மூலமா தானே பண்ண முடியும் …ஆனா இப்போ வரைக்கு  மும்பை போர்ட்ல இருந்து ட்ரான்ஸ்போர்டேஷன்  நடந்துக்கான எந்த தடயமும் இல்லையே  … எப்படி ?”

” அதுக்கு  தயாளன்  மும்பைல இருக்கணுமே … ”  என ஆதித்யா சொன்ன மறுநொடி அந்த ஆடவனின் விழிகள்  ஆதித்யாவின்  விழிகளை கேள்விக்குறியோடு சந்திக்க … அந்நேரம் ஆதித்யாவின் அலைபேசியில் செக்யூரிட்டி அலாரம் அடித்தது . 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நீல கடல்  பௌர்ணமியின்  நிலவொளியில்  ஜொலித்து கொண்டிருக்க !

அந்த கண்கவரும் காட்சியை  கடக்கரையோரம்  அமர்ந்து கொண்டு ரசித்தபடி சில பேர்   !

கடல் அலையில் விளையாடியபடி பல பேர் … நெருப்பு மூட்டி  ஆட்டம் பாட்டம் என கொண்டாடியபடி  சில பேர் என மக்கள் கூட்டத்தினர் தங்களின்  துக்கம்  மறந்து தூக்கம் தொலைத்து  உற்ச்சாகம் பொங்க உல்லாசமாக  கனவுலகில்  மிதந்து கொண்டிருக்க .

கடற்கரையோரம்  இருந்த நீண்ட நெடிய  பேராலயத்தில் மட்டும்  அந்த இரவு நேரத்தில் சிறப்பு ஆராதனை கூட்டம் நடை பெற .

மக்கள் அனைவரும் உற்சாகமாக  தங்களின் கைகளை தட்டி இறைவனிடம்  பிராத்தனை செய்து கொண்டிருந்தனர்  போதகர் ஆல்வின்  டிசவுசா  தலைமையில் .

-தொடரும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!