நான் அவன் இல்லை 27
தாராவிடம் நலம் விசாரித்துவிட்டு … ஆதித்யாவின் அருகில் வந்து அப்பெண்மணி அமர, அவர்களுக்குள் பரஸ்பர நலன் விசாரிப்புகள் நடந்தேறிக் கொண்டிருந்தது .
அப்பொழுது குழந்தை , ஆதித்யாவின் கழுத்தை கட்டிக்கொண்டு’ ப்ப்பா அப்பா ‘ என தன் கண்களை உருட்டியபடி ஏதேதோ கதைகளை பேசிக்கொண்டிருக்க … அவனும் குழந்தையை கொஞ்சியபடி அவள் சொன்னதுக்கெல்லாம் மகிழ்ச்சியாக தலையசைத்து கொண்டிருந்தான் .
‘ ப்பா அப்பா ‘ என்று குழந்தை ஆதித்யாவை அழைத்ததை பார்த்து மதிக்கு தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது .
‘ இந்த குழந்தை ஏன் இவனை அப்பான்னு சொல்லுது …. ??ஒருவேளை இது இவன் குழந்தையா இருக்குமோ … ?? அப்போ அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சா ?? இவ தான் இவன் வைஃப்பா ?? ச்ச இருக்காது தங்கச்சியா இருக்கும்? ஆனா டியர்ன்னு உரிமையா ஹக் பண்ணிகிட்டாங்களே ! டியர் எல்லாம் ஒரு விஷயமா மதி இதுல என்ன இருக்கு ? ‘ இப்படி ஏகப்பட்ட கேள்விகள் மதியை கலங்கடிக்க அவளது இதயம் தாறுமாறாய் அடித்து கொண்டது. சில மணிநேரத்திற்கு முன்பு அவனுடனான நிகழ்வை நினைத்து பார்த்தாள் .
‘ வைஃப் இருக்கும் போது நம்மகிட்ட ஏன் அப்படி நடந்துக்கணும்? குடும்பம் இருந்தா அவன் ஏன் உனக்கு ஒன்னுன்னா துடிக்க போறான் ?ஆனால் குழந்தை அவனை அப்பான்னு சொல்லுதே … கடவுளே இந்த விஷயத்திலையும் நம்மளை ஏமாத்திட்டானா ?? இல்லை இல்லை இருக்காது எல்லாத்துக்கும் ஒரு மனுஷனை சந்தேகப்பட கூடாது ‘ என குழம்பிய தன் மனதிற்கு எவ்வளவு ஆறுதல் அவள் கூறினாலும் அந்த குழந்தையையும் ,அவனையும்,அவன் அருகில் இருக்கும் அவளையும் பார்க்கும் பொழுது மதியின் மனத்திற்குள் ஒருவித நெருடல் இருந்து கொண்டே தான் இருந்தது .
அப்பொழுது நாகாவிடம் அருந்ததியின் உடல் நிலையை பற்றி விசாரித்த அப்பெண்,” இனி நெக்ஸ்ட் செக் அப் எப்போ நாகா ” என கேட்டாள்.
” நாளைக்கு கூட்டிட்டு போனும் சிஸ்”
” ஓகே ” என்றவளின் பார்வை மது மீது பட … அவள் கண்களாலே ‘ இது தானா அந்த பொண்ணு ‘ என்று நாகாவிடம் கேட்க … அவனும் ஆமாம் என்று செய்கை செய்தான் .
அவர்களின் சம்பாஷணையை மதி பார்த்து விட , அதை கவனித்த அப்பெண்ணின் விழிகள் ஆதித்யாவை குறும்புடன் பார்த்துவிட்டு மதி பக்கம் மீண்டது,
” ஹாய் ” அப்பெண் தான் மதுவோடு முதலில் பேசினாள் .
” ஹாய் ” மதுவும் பதிலுக்கு கூறினாள் .
” குழந்தை பேரு மித்ரா ..என் பேரு வெண்பா …” ஆதித்யாவின் கையை பிடித்தபடி கூறினாள் .
” ஓ ” மதிக்கு பேச்சு வர வில்லை … இயல்பாக இருப்பது போல கட்டிக்கொண்டாள் …. மதியின் முகமாற்றத்தை கண்டு உள்ளுக்குள் ரசித்த வெண்பா , அவளது முக வாட்டத்துக்கான காரணத்தை ஓரளவு யூகித்துக்கொண்டாள் .
பிறகு வீரா ,நாகா மற்றும் ஆதித்யாவை பார்த்து கண்ணடித்த வெண்பா அவர்கள் சுதாரிப்பதற்குள் ,
” உனக்கு ஒன்னு தெரியமா மது ” என ஆரம்பித்து ஆதித்யா பார்க்க அவனை கபடப்பார்வை பார்த்தபடி ” மித்ரா ஆதியோட பொண்ணு “…. என்று சொல்லி முடிக்கும் முன்பே தன் இருக்கையில் இருந்து எழுந்த மதியின் இதயம் சுக்கு நூறாக நொறுங்கி விட , துடித்து போனவளால் அதற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை … ஆதித்யாவையும் அவன் மடியில் இருந்த குழந்தையையும் பார்த்தவள் “ஏய் நான் இன்னும் சொல்லி முடிக்கலை நில்லு பா ..”என வெண்பா அழைக்க அழைக்க அது எதையும் தன் காதில் வாங்காமல் அங்கிருந்து சென்று விட்டாள் .
மதியின் செயல் வெண்பாவின் முகத்தில் புன்னகையை வரவழைக்க …தன்னை முறைத்து பார்த்து கொண்டிருந்த ஆதித்யாவிடம் ,
” ஏய் ஏன் பா இப்படி பார்க்கிற ?”
” ஏன் அப்படி சொன்ன ?” கோபமாக கேட்டான் .
” நான் மித்ரா ஆதியோட பொண்ணு மாதிரின்னு சொல்ல வந்தேன் அதுக்குள்ள அந்த பொண்ணு போய்டுச்சு ” என்று வெண்பா கண்ணடிக்க .
நாகாவும் வீராவும் செலாக புன்னகைக்க , பதிலுக்குசத்தமாக சிரித்த வெண்பா,
” ஷீ இஸ் வெறி பொஸசிவ் ஆதி ” என ஆதித்யாவின் காதில் குறும்பாக கூறினாள் .
” அவளுக்கா ! நீ வேற அதெல்லாம் ஒன்னும் இல்லை வெண்பா ” என்றவன் ,வெண்பாவிடம் காட்டிக்கொள்ளாவிட்டாலும் வெண்பா கூறியதை கேட்ட ஆதித்யாவின் இதழ்கள் லேசாக இசைய, அவன் மனதிற்குள் ஜில்லென்று இருந்தது .
‘மித்ரா அவன் குழந்தையா ? அப்படி என்றால் இவர்கள் ஆதித்யாவின் மனைவியும் குழந்தையும் … அப்போ ஏன் ? என்கிட்ட இவ்வளவு உருகனும் …. மனைவியை வைத்து கொண்டே என்னிடம் ச்ச எவ்வளவு தைரியம் இருக்கனும் ?’
‘ இன்னும் எவ்வளவு தான் ஏமாற்றுவான் ? ‘ மதியின் மனம் பற்றி எரிந்தது … அங்கிருக்க பிடிக்காமல் வெளியே ஓடி வந்த மதுவுக்கு கால்கள் வலுவிழந்து துவண்டு விட …. கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது … எங்கையாவது சென்று கத்தி அழவேண்டும் போல இருந்தது.
வேலையாட்களின் பார்வை தன் மேல் விழுவதை கண்டவள் கடினப்பட்டு தனது வேதனையை அடக்கிக்கொண்டு தன் அறைக்குள் புகுந்த மதி இதயமே வெடித்துவிடும் அளவிற்கு கதறி அழுதாள் . ஏதோ ஒன்று தன்னிடம் இருந்து முழுவதுமாக நழுவியது போன்ற உணர்வு அவள் மனதை உடைத்தது .
வேகமாக தன்னை கடந்து சென்ற மதியை பார்த்தபடி உள்ளே வந்த துரியன்,
” என்னாச்சு ஆதி அவ ஏன் ஓடுறா?? என்று ஆதித்யாவின் தோளை பிடித்தபடி அவன் பின்னால் நின்று கொண்டு கேட்டான் .
அப்பொழுது ஏற்கனவே சாப்பிட்டு முடித்திருந்த நாகா ..தாரா … வீரா மூவரும் துரியனுக்கு காலை வணக்கம் வைத்துவிட்டு அங்கிருந்து சென்று விட, ஆதித்யாவின் மடியில் இருந்த மித்ராவோ தன் தந்தையை கண்டதும் தாவி சென்று அவனது கரங்களுக்குள் அடங்கினாள்.
” அது ஒன்னும் இல்லை நான் பார்த்துக்கறேன் துரியா , நீ சாப்பிடுறியா ” என ஆதித்யா கேட்டதும் ,
” ஏய் மழுப்பாத … துரியன் ஆதித்யா பொய் சொல்றான் …அந்த பொண்ணுக்கும் ஆதித்யாக்கும் இடையிலே லவ்ஸ் போய்ட்டு இருக்கு. சீக்கிரமா கல்யாணம் பண்ணி வச்சிருங்க துரியன் இல்லைனா இவனே பண்ணிட்டு வந்திருவான் . மதி ஆதி பேர் பொருத்தம் கூட செமையா இருக்கு !” என வெண்பா அடுக்கிக்கொண்டே போக,”ஷாட் அப் ” என கத்திய துரியனின் முகம் அக்னி குண்டம் போல தகித்தது .
“யார் கூட யாரை இணைச்சு பேசிட்டு இருக்க ?” என தன் மனைவியிடம் சீறினான் .
” நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? ” என்ற தன் மனைவியை இடைமறித்த துரியன் ,
” நான் இன்னும் பேசி முடிக்கல” சுட்டு விரல் நீட்டி எச்சரித்தபடி தொடர்ந்தான் ,” அந்த தாயாளனோட பொண்ணை போய் நம்ம ஆதி கூட சேர்த்து வச்சு பேசிட்டு இருக்க … இதெல்லாம் ஜஸ்ட் டிராமா … அவ அப்பனை கண்டுபுடிக்கிறதுக்காக வேற வழியில்லாம ஆதி நடிச்சிட்டு இருக்கான் … நீ உன் இஷ்டத்துக்கு ஏதாவது பேசி தெளிவா இருக்கிறவனையும் குழப்பிராத ” கடுகை போல பொரிந்து தள்ளினான் .
அவனது ஆவேசத்தை கண்ட அவனது ரெண்டரை வயது குழந்தைக்கு என்ன புரிந்ததோ பயத்தில்’ ப்பா ‘ என அழுதபடி ஆதித்யாவிடம் சென்று தஞ்சம் அடைய ,
” எத்தனை தடவை சொல்ரது குழந்தை முன்னாடி கத்தாதன்னு ” மித்ராவை தன் மார்போடு அணைத்தபடி நண்பனை முறைத்தான் ஆதித்யா .
” நல்லா சொல்லு ஆதி .. பாப்பா சின்ன சத்தத்துக்கு ரொம்ப பயப்படுறா ” வெண்பா தன் பங்கிற்கு குற்றம் சுமத்த .
” ஏய் டாபிக் செஞ் பண்ணாத டி ” மனைவியிடம் எகிறினான் துரியன் .
” நீங்க பண்ணிட்டு இருக்கிறதை தான சொல்றேன் ” என்றாள் வெண்பா .
” டேய் ஆதி இவ இப்படி தான் லவ் ஜவ்வுன்னு உன்னை ஏத்தி விடுவா கவனமா இரு ” என துரியன் தன் நண்பனை எச்சரிக்க ,
“ஸ்டாப் இட் கைஸ் … ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு நீங்க ரெண்டு பேரும் ஏன் இவ்வளவு ரியாக்ட் பண்றீங்கன்னு எனக்கு புரியல .. … வெண்பா கொஞ்ச நேரம் அமைதியா இரு ..துரியா உனக்கு மீட்டிங் இருக்கு முதல்ல நீ கிளம்பு”ஆதித்யாவின் குரலில் இருந்த அமைதி மறைக்கப்பட்ட கோபத்தை இருவருக்கும் உணர்த்த .தன் குழந்தையின் உச்சியில் இதழ் பதித்த துரியன் முறைக்கும் தன் மனைவியை பார்த்தபடி அங்கிருந்து சென்றான் .
துரியன் சென்ற மறு நிமிடம் வெண்பா,
” ஹேய் ஆதி துரியனை விடு நீ சொல்லு உங்க லவ்ஸ் இப்போதைக்கு எந்த லெவல்ல இருக்கு ” கண்களை சிமிட்டியபடி கேட்டாள் .
” ப்ச் வெண்பா அதான் துரியன் எல்லாத்தையும் சொல்லிட்டான்ல அப்புறம் ஏன் அதையே கேக்குற “
“அவன் கிடக்கிறான் அவனுக்கு இதெல்லாம் புரியாது. கடிவாளம் கட்டின குதிரை மாதிரி ஜித்தேரி ஜித்தேரின்னு சொல்லிட்டு இருப்பான் .நீ சொல்லு ” விழிகளில் ஆர்வம் வழிய கேட்டாள் .
” நீ நினைக்கிறது நடக்க வாய்ப்பே கிடையாது வெண்பா ” பட்டென்று கூறினான் .
” அப்போ ஆதாயத்தோட தான் அவ கிட்ட பழகிட்டு இருக்கியா?உனக்கு அவ மேல எந்த ஆசையும் இல்லையா ? ” என கோபத்துடன் வினவினாள் வெண்பா .
” தயாளனை அழிக்கிறதை தவிர எனக்கு வேற எந்த ஆசையும் இல்லை” என்ற ஆதித்யாவின் விழிகளில் தெரிந்த பழிவெறியை கண்டு அதிர்ந்தவள் ,
“அவனை கொலை பண்ணி என்ன சந்தோஷத்தை அடைய போற … இழந்த எதையுமே திரும்ப கொண்டு வர முடியாது ஆதி … வரதராஜன் போய்ட்டாரு தயாளன் செத்தா வரதன் ஒன்னும் எழுந்து வந்திற மாட்டாரு” என்ற வெண்பாவை பார்த்து விரக்தியாக சிரித்த ஆதி ,
‘ உனக்கு என்ன தெரியும் வெண்பா …கிட்ட தட்ட இருபது வருஷமா எனக்குள்ள எரிஞ்சிக்கிட்டு இருக்கிற பழிவெறி தயாளனோட ரத்தம் பார்க்காம அணையாது ‘ என தன் மனதிற்குள் கூறியவன் வெண்பாவிடம் ,
” இதை பத்தி இனிமே பேச வேண்டாம் வெண்பா ” என்றான் .
” உனக்கு நிம்மதியா வாழணும்ன்னு ஆசையே இல்லையா … இப்படியே இந்த நரகத்துலையே இருக்கனும்ன்னு முடிவு பண்ணிட்டியா .”
” என்னைக்கு இந்த கையில துப்பாக்கியை எடுத்தேனோ அன்னைக்கே அந்த ஆசையெல்லாம் போய்டுச்சு ” என்றவனின் கண்களில் கணப்பொழுதில் வலி ஒன்று தோன்றி மறைந்தது .
” அதெல்லாம் ஒன்னும் இல்லை … நீ மதுவை கல்யாண பண்ணிக்கிட்டு இதை விட்டு போ …அடுத்த நிமிஷம் துரியனும் வந்திருவான் ….அப்புறம் நீ மது உன் அம்மா உன் தங்கச்சி ….நான் துரியன் மித்ரா … நாகா அருந்ததி …அப்புறம் வீராவுக்கும் ஒரு கல்யாண பண்ணி வச்சிரலாம் … நிம்மதியா சந்தோஷமா யாருக்கும் பயப்படாம வாழலாம் ஆதி ” என்று வெண்பா கண்கலங்க கூறினாள் .
” இதெல்லாம் நடக்குற காரியமா வெண்பா, என்ன பேசிட்டு இருக்க? இது சினிமா இல்லை வாழ்க்கை “
” பயமா இருக்கு ஆதி … ஒவ்வொரு நாளும் பயமா இருக்கு … துரியனுக்கு ஏதாவது ஆகிருமோன்னு ஒவ்வொரு நிமிஷமும் திக்கு திக்குனு இருக்கு . அவன் கிட்ட சொன்னா புரிஞ்சிக்கவே மாட்டிக்கிறான் “
” எல்லாம் தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணிகிட்ட “
“அப்போ பயப்படல ,இதெல்லாம் புரியல ,இப்போ ரொம்ப பயமா இருக்கு … மித்ராவை நினைச்சா கவலையா இருக்கு … ஆனா நீ சொன்னா அவன் கேட்பான் ஆதி… நீ அவனை மாதிரி கிடையாது . அம்மா தங்கச்சிங்கன்னு குடும்பத்துக்காக இதுக்குள்ள வந்தவன் … நீ நினைச்சா துரியனுக்கு புரியவைக்கலாம் “
” வெண்பா உனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல …. பட் ஸ்டே ஸ்ட்ராங் ….துரியனோட வைஃப் இவ்வளவு வீக்கா இருக்க கூடாது ” என்றவன் குழந்தையை வெண்பாவிடம் கொடுத்துவிட்டு இருக்கையில் இருந்து எழுந்துகொள்ள ,
” ஒன்னு சொல்றேன் ஆதி துரியன் பேச்சை கேட்டு உன்னை நீயே ஏமாத்திக்காத “என்றாள் வெண்பா .
” நீயும் நடக்காத ஒன்னுக்காக ஆசை பட்டு உன்னை நீயே ஏமாத்திக்காத ” என்ற ஆதித்யா அங்கிருந்து சென்றுவிட … தன் மகளை ஒரு கரத்தால் இறுக்கமாக அணைத்து கொண்ட வெண்பாவின் இன்னொரு கரம் அவளது ஆலிலை வயிற்றை மென்மையாக வருடியது .
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மதியின் மனதிற்குள் யுத்தமே நடந்துகொண்டிருந்தது … நடந்த சம்பவங்களை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை …காயப்பட்ட இதயம் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போய் இருந்தது . எத்தனையோ நாள் கோபத்தில் இங்கே சாப்பிடாமல் இருந்திருக்கிறாள் ஆனால் அப்பொழுதெல்லாம் வராத மயக்கம் இப்பொழுது வந்தது … கண்கள் இருட்டிக்கொண்டு வர …. தலையை இரு கரங்களால் இறுக்கமாக பிடித்துக்கொண்டு தரையில் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள் .
தன் அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டும் அவள் நிமிர்ந்து பார்க்க வில்லை … அழுதபடி தரையில் அமர்ந்திருந்தாள்.
ஆதித்யா உள்ளே நுழைந்தான் … அவனை கண்டதும் கண்ணீரை துடைத்த மதுமதி சிரமப்பட்டு எழுந்து நின்று தன்னால் முடிந்தவரை தன்னை இயல்பாக காட்டிக்கொண்டாள் . அப்பொழுது அவனை பின்தொடர்ந்து வந்த பணிப்பெண் ட்ராலியில் இருந்து உணவுகள் அடங்கிய பிளேட்டை டீப்பாயில் வைத்து விட்டு ஆதித்யா கண்ணசைத்ததும் நகர்ந்து விட . மதுமதி அவன் முன்பு பலவீனமாக அழக்கூடாது என்று முயன்று சாதாரணமாக இருந்தாள்.
வீங்கி சிவந்திருந்த அவளது வதனத்தை சிறிது நேரம் பார்த்த ஆதித்யாவுக்கு வெண்பாவின் வார்த்தைகள் நினைவிற்கு வர ‘ ம்ம்ம் போஸஸிவ் ‘ என மெல்ல அவனது தடித்த உதடுகள் முணுமுணுக்க … இரும்பு இதயம் மெல்ல அரும்பியது … சிறு மென்னகையுடன் அவளை பார்த்தவன் ,மனதில் ஆசையின் அலை அடித்தது .
துடிக்கும் இதயத்தை ஐவிரல் பதித்து அனுபவித்தவன் . மதியை வேண்டுமென்றே சீண்டி பார்க்க நினைத்து ,
” என்னாச்சு சாப்பிடாம பாதியிலே எழுந்து வந்துட்ட ” அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்டான் .
” புடிக்கலை ” நிமிர்ந்து பார்த்து முறைத்தாள் மதி .
” ஓ .. என்ன புடிக்கலை? ” அவள் அருகே உரசி கொண்டு நின்றபடி கேட்டான் .
” வெட்கமா இல்லை ச்ச “என முகத்தை சுளித்தவள் சட்டென்று அவனிடம் இருந்து விலகி நின்றாள் .
அவன் முகம் அனிச்சம் மலராய் வாடிவிட்டது … அவளது கோபம் நியாயம் தான் ஆனாலும் அவளது வார்த்தை அவனுக்கு வலியை ஏற்படுத்தியது . அதற்கு மேல் பேசி பிரச்சனையை வளர்க்க விரும்பாதவன் .
” மதி உன்கிட்ட பேசணும் அதுக்கு முன்னாடி வந்து சாப்பிடு ” என்றான். அவ்வளவு தான் ,
” ச்ச முதல்ல தள்ளி நில்லுங்க … எப்படி உங்களால என்கிட்ட இப்படி பேச முடியுது ஆதித்யா …. அசிங்கமா இல்லை என்னை என்ன நினைச்சிடீங்க?” பைத்தியம் பிடித்தவள் போல பயங்கர சத்தத்துடன் அவனிடம் கத்தினாள் .
” ப்ச் மதி ஐ கேன் எக்ஸ்பிளேயின் … மித்ரா ஒன்னும் ” சொல்லி முடிக்கவில்லை அவனது கன்னத்தில் அறைந்திருந்தாள் மதுமதி .
” மறுபடியும் என்னை ஏமாத்த எவ்வளவு துணிச்சல் இருக்கனும் ” என்று மனநோயாளி போல கத்தினாள் … அவனது நெஞ்சில் தன் கரங்கள் வலிக்க அடித்தாள்… இறுதியாக உடைந்து அழுதாள் … கழுத்து நரம்பு புடைக்கும் அளவிற்கு கோபத்தில் இறுகியிருந்த ஆதித்யாவின் கை முஷ்டி … அவளது கண்ணீரை கண்டதும் தளர்ந்து விட்டது .
அவளை சமாதானம் செய்வதற்கு முனைந்த ஆதித்யாவை அவனது அலைபேசி அழைத்தது. யார் என்று கூட பார்க்காமல் அலைபேசியை நிராகரித்தவன் மதுமதி மீது தன் கவனத்தை செலுத்தினான் .
” மதி நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை …” மீண்டும் அவனது அலைபேசி ஒலித்தது … யோசிக்காமல் நிராகரித்தவன் , மதியின் அருகே சென்று அமர்ந்தான் .
” ப்ளீஸ் வெளிய போங்க ” தெம்பில்லாமல் கூறினாள் .
” மதி ….” அவன் தொடர்வதற்குள் திரும்பவும் அலைபேசி ஒலித்தது யாரென்று பார்த்தான் ….பல்லை கடித்தபடி அட்டென்ட் செய்த ஆதித்யா ,” கட் பண்ணினா புரியாதா நாகா ” காட்டு கத்து கத்தினான் .
” ஆதி அது வந்து … ” என்ற நாகாவின் கரத்தில் இருந்த அலைபேசியை வாங்கியவர் ,
” ரொம்ப பிசியா பா … ” என்றார் நக்கல் குரலில் .
‘விக்டர் ‘என முணுமுணுத்த ஆதித்யா ,” சொல்லுங்க அங்கிள் ” என்றான் தணிந்த குரலில் .
” பேசணும் பா … முக்கியமான வேலை இருந்தா முடிச்சிட்டு வா வெயிட் பண்றேன் ” அதே நக்கல் குரலில் கூறினார் .
” இல்லை அங்கிள் உங்களை விட எதுவும் முக்கியம் இல்லை இதோ வரேன் ” என்றவன் அலைபேசியை அணைத்துவிட்டு மதியை பார்த்தான் … அவளிடம் ஏதோ சொல்ல வாயெடுத்தவன் பல்லை கடித்துவிட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறிவிட்டான்.
விக்டர் தேசாய் ஜித்தேரியில் மிக முக்கிய பொறுப்பான அட்வைசர் பொறுப்பில் இருப்பவர் . துரியனின் தந்தை வரதராஜன் தலைமை பொறுப்பை ஏற்றதற்கு பிறகு அவருக்கு மிகுந்த விசுவாசியாகவும் , அட்வைஸராகவும் வலது கையாகவும் வலம் வந்த விக்டர் …. வரதனின் மறைவிற்கு பிறகு துரியனுக்கு ஒரு ஆசானாக உறுதுணையாக இருந்து இப்பொழுது வரை துரியனை வழிநடத்தி வருகிறார் .
அட்வைசர் என்றால் ஆலோசகர் என்று பொருள். தலைவருக்கு ஆலோசனை சொல்லும் அறிவாளிகள், ராஜாக்கு மந்திரி போன்றவர்கள், சண்டை வந்தால் துப்பாக்கி, கத்தி எல்லாம் தூக்கிட்டு பெரும்பாலும் போகமாட்டார்கள். அரசியல்வாதி, போலீஸ் என அனைவருடனும் பேரம் பேசி சரிக்கட்டுவது, வியாபார ரீதியான மற்றவர்களிடம் உரையாடுவது . குழுவில் சண்டை வந்தால் சமரசம் செய்வது என சாத்வீகமான வேலை செய்வார்கள்.நிதியை நிர்வாகம் செய்வது இவர்களே.
(இந்த ஆலோசகர் பாத்திரங்களை நீங்க எல்லா திரைப்படத்திலும் பார்த்திருக்கலாம் உதாரணத்துக்கு நாயகனில் வரும் டெல்லிக்கணேஷின்”அய்யர்” பாத்திரம்.)
உண்மையில் தலைவருக்கு அடுத்து துணைத்தலைவர் அதாவது தளபதி இருந்தாலும் , இந்த ஆலோசகர் அவரை விட சக்தி வாய்ந்தவர்.ஆலோசகராக வர டானுக்கு நம்பிக்கையானவர்களா என்று மட்டும் பார்ப்பார்கள். பெரும்பாலும் டானின் பால்யகால நண்பர்களே ,ஆலோசகர்களாக வருவார்கள்.ஆனால் அவர்கள் தலைவருக்கு பின் தலைவராக பதவிக்கு வர முடியாது, திடீர் என தலைவர் செத்துவிட்டால் புது தலைவரை தேர்ந்தெடுக்க இவர்கள் உதவலாம், கடைசிவரைக்கும் ஆலோசகராக மட்டுமே தான் இருக்க முடியும் .
விக்டருக்கும் ஆதித்யாவுக்கும் இடையிடையே எப்பொழுதாவது கருத்து வேறுபாடு இருந்தாலும் … இருவருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பகையும் கிடையாது . அவர் இன்று எந்த வித முன் அறிவிப்பும் இன்றி ஆதித்யாவை காண அவன் வீட்டிற்கு வந்துள்ளார் .
அவருடைய இந்த திடீர் வரவு , அலைபேசியில் நக்கல் பேச்சு எல்லாம் ஆதித்யாவுக்கு சிறிதும் விருப்பம் இல்லை தான் …ஆனாலும் அவர் மீது அவன் கொண்டுள்ள மரியாதையின் காரணமாக அவரை வெகு நேரம் காத்திருக்க வைக்க விரும்பாதவன் உடனே சென்றான் .
” ஹாய் அங்கிள் வரேன்னு முன்னாடியே சொல்லிருக்கலாமே … ” கரங்களை நீட்டி உபசரித்தபடி கூறினான் .
” அப்போ வரணும்ன்னா அப்பாயிண்ட்மெண்ட்டோட வான்னு சொல்ற ” பதிலுக்கு கைகுலுக்கியபடி கூறியவர் பேச்சில் கோபம் இருந்தது .
” என்ன அங்கிள் நீங்க? நான் அப்படி சொல்லலை … சொல்லிட்டு வந்திருந்தா உங்களுக்காக நான் காத்திருந்திருப்பேன் … இப்போ பாருங்க நீங்க வெயிட் பண்ற மாதிரி ஆகிடுச்சே ” என்றான் தன்மையாக .
” நான் வெயிட் பண்ணினதும் நல்லதுக்கு தான் … நீ எவ்வளவு பிஸின்னு எனக்கும் தெரியனும்ல ” அடர்ந்த மீசைக்குள் ஒளிந்திருந்த உதடுகள் இகழ்ச்சியில் விளைந்தன.
அவரது பேச்சு போகும் திசையை புரிந்து கொண்டு ,” ஓகே … என்ன சாப்பிடுறீங்க ??” மடைமாற்றியபடி தன் பேச்சை தொடர்ந்தான் ஆதித்யா .
” இதோட மூணு பெக் முடிச்சிட்டேன் ஆதி … ” கையில் இருந்த மதுபான கோப்பையை உயர்த்தியபடி கூறினார் அவரது குரல் அவனை குற்றம்சாற்றியது .
” ஓகே அங்கிள் ஐயம் ரியலி சாரி உங்களை ஹர்ட் பண்ணனும் என்பது என்னுடைய இன்டன்ஷன் கிடையாது இருந்தாலும் ஐயம் சாரி .. சரி சொல்லுங்க என்ன விஷயம் ? என்னை பார்க்கிறதுக்காக வந்திருக்கீங்க … ஏதாவது முக்கியமான விஷயமா? ” தனது இருக்கையில் நன்கு சாய்ந்து அமர்ந்துகொண்டு வினவினான் ஆதித்யா .
“முக்கியமான விஷயம் தான் …. அதுக்கு முன்னாடி லெட்ஸ் ஹவ் அ ட்ரின்க் ” என்றவர் ஒரு கோப்பையில் சிவப்பு திரவத்தை ஊற்றியபடி கூறினார் .
” அங்கிள் யு னோவ் ஐ டோன்ட் ட்ரின்க் “- நான் குடிக்க மாட்டேன்னு உங்களுக்கு நல்லா தெரியுமே அங்கிள் என்ற ஆதித்யாவின் குரலில் சிறு இறுக்கம் தெரிந்தது .
” அட்டிக்ஷ்ன் ஆஃப் அ பர்சன் இஸ் மோர் டேஞ்சரஸ் தேன் டிராக்ஸ் ஆதி ” – போதைக்கு அடிமையாகுறதை விட மனுஷங்க கிட்ட அடிமையாகுறது ரொம்பவே ஆபத்தானது ஆதித்யா என்ற விக்டரின் புருவம் சுருங்கி முகம் இறுகியது .
அவர் யாரை குறிப்பிடுகிறார் என்பதை புரிந்து கொண்ட ஆதித்யாவின் முகம் இறுகியது ,” யு ஆர் ரைட் ரொம்ப சரியா சொல்றீங்க ஆனா இந்த ஆதித்யா யாருகிட்டையும் அடிமையாக மாட்டான் ” என்றான் அவரது பார்வையை நேருக்கு நேராய் பார்த்தபடி .
” ஆனா நான் வேற மாதிரி கேள்வி பட்டேனே ஆதித்யா ” அவனது விழிகளை உற்று நோக்கியபடி கூறினார் .
” ஹா ” சத்தமாக சிரித்தவன் ,” எனக்கு நீங்க வச்ச ஸ்பை சரி இல்லைனு நினைக்கிறன் ” நக்கலாக கூறினான் ஆதித்யா .
” ஸ்டார் ஒன்னை ரெண்டு தடவை மீட் பண்ணிருக்க போல ” என்றார் .
” அப்போ என்னை வேவு பார்க்கிறீங்க … என்னை நம்பலை அப்படி தானே “
” ஆதி இந்த உலகத்துல என் எதிரியை கூட நான் நம்புவேன் ஆனா காதலிக்கிறவனை மட்டும் நான் நம்பவே மாட்டேன்… நீ அவளை காதலிக்கிற ரைட் “
” காதலிக்கிறேனா! நானா !கம் ஆன் அங்கிள் … அங்க இருந்து பார்த்தா அப்படி தான் தெரியும் என் இடத்துல இருந்து பாருங்க அப்போ தான் எனக்குள்ள இருக்கிற பழிவெறி தெரியும் ” என ஆதித்யா கபடமாக புன்னகைத்தான் .
” கம் ஆன் ஆதி …. சோர்ஸ் ஃபையில டெலீட் பண்ண சொல்லிருக்க , எந்த அதிகாரத்துல அப்படி செய்ய சொன்ன ?ஏன் அவளை காப்பாற்ற நினைக்கிற ?”
” ஏன்னா அவ இன்னோசென்ட் …அது உங்களுக்கும் தெரியும் … தயாளனோட பொண்ணு என்பதற்காக அவ கஷ்டப்பட வேண்டாம்ன்னு நினைக்கிறேன் “
” இந்த அக்கறை தான் எனக்கு பயமா இருக்கு ….முடிச்சிரு ஆதி … ஒரு நாளோ , ரெண்டு நாளோ , ஏன் எத்தனை மாசம் வேணும்னாலும் எடுத்துக்கோ … உன் ஆசை தீர அவளை அனுபவிச்சிட்டு விட்று … அப்போ தான் உன்னால டார்கெட் மேல போக்கஸ் பண்ண முடியும்”குரூரமாக கூறினார் .
” என்னை பத்தி என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?நீங்க என் கரக்ட்டரை கலங்க படுத்துறீங்க !” தான் அமர்ந்திருந்த நாற்காலியை வேகமாக பின்னால் தள்ளியபடி எழுந்து நின்ற ஆதித்யாவின் பார்வை விக்டரை சுட்டெரித்தது .
” ஒரு தடவை இல்லை நாலு தடவை உன் உயிரை பணயம் வச்சு அவளை காப்பாத்தியிருக்க … லவ் இல்லாம எப்படி ? ” அதே கோபத்துடன் அவனை வெறித்தார் விக்டர் .
” ஆதித்யா ! அலெஸேண்டரும் ஒரு மாவீரன் தான் , அக்கிலஸும் ஒரு மாவீரன் தான் ! ஆனா,
ஏன் நாம அலெஸேண்டரை இன்னைக்கு வர பெருமையா பேசுறோம் தெரியுமா ?
ஏன் அலெஸேண்டர் எந்த யுத்தத்திலையும் தோல்வியை சந்திச்சது இல்லைன்னு உனக்கு தெரியுமா ?
ஏன் அக்கிலஸ் ட்ராய் போர்ல தோல்வியை சந்திச்சான்னு தெரியுமா ?
காதல் ! தான் ரொம்ப நேசிச்ச பட்ரோகுலஸ் இறந்ததுக்கு அப்புறம் துக்கம் தாங்காம போர்க்களத்தை விட்டு வெளிய வந்தது தான் அக்கிலஸ் செஞ்ச மிக பெரிய தப்பு. தன்னுடைய சுய நலத்துனால தன்னை நம்பி வந்த வீரர்களுக்கு ஆபத்தை உண்டாக்குனது அக்கிலஸ் செஞ்ச பெரிய துரோகம் .
எப்போ ஒருத்தன் ஆசைக்கு அடிமையாகுறானோ அப்பவே அவனுக்கு தோல்வின்னு அர்த்தம் !
அவனால ஜெயிக்க முடியாது!
காதலும் பெண்களும் வலியை மட்டும் தான் குடுப்பாங்க ஆதித்யா . ஆனா தியாகம் தான் வெற்றியை தரும் !
சில விஷயங்களை அவ்வளவு சீக்கிரம் மறந்திர முடியாது ஆதி , மனுஷங்க வலிய மறந்திடலாம் ஆனா அது குடுத்த பாடத்தை மறக்க முடியாது .
நாம நடத்திட்டு இருக்கிறது மிக பெரிய யுத்தம் … இதுல நீ மட்டும் இல்லை , பலபேர் இருக்காங்க … நீ ஒருத்தன் செய்யிற தப்பு உன்னை நம்புறவங்களுக்கு நீ செய்யிற துரோகம் …இதுல ஒரு தாயோட கண்ணீர் இருக்கு … ஒரு நண்பனுடைய உயிர் தியாகம் இருக்கு …. ஒரு வீரனுடைய ரத்தம் இருக்கு .
இந்த யுத்தத்துல நீ யாரா இருக்க போற ஆசையை துறந்த வெற்றி நாயகன் அலெக்சாண்டராவா இல்லை காதலுக்காக தோல்வியை சந்திச்ச அகிலஸாவா நீயே முடிவு பண்ணிக்கோ … உன் மனசுல இருக்கிற சாஃப்ட் பீலிங்ஸ் எல்லாத்தையும் தூக்கி போடு … யார் மேலையும் அன்பு வைக்காத ! இங்க இருக்கிற எல்லாரையுமே உன் டார்கெட்டா பாரு ! உனக்கு நான் குடுத்த குறிக்கோள் மேல உன் கவனத்தை செலுத்து ” என்றார் தீர்க்கமாக .
” சீக்கிரமே இது எல்லாத்தையும் ஒரு முடிவுக்கு கொண்டு வரேன் ” பெரும் சூறாவளியை உள்ளடக்கிய ஆதித்யாவின் குரலில் இருந்த உறுதியை கண்டு திருப்தியாக புன்னகைத்தார் விக்டர் .
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஆதித்யா கோபமாக மதியின் அறையில் இருந்து கிளம்பியதை கவனித்த வீராவுக்கு மதியை எண்ணி கவலையாக இருக்க … சிறு தயக்கத்துடன் மதியின் அறைக்குள் நுழைந்தான் வீரா.
மெத்தை மீது கால்களை குறுக்கிக்கொண்டு படுத்திருந்தாள் மதுமதி ,அருகில் டீப்பாயில் இருந்த உணவு தட்டு அனைத்தும் அப்படியே இருக்க .
‘ ஊப் ‘ நீண்டு பெருமூச்சை வெளியிட்டபடி அவள் அருகில் வந்த வீரா,
” மது எழுந்து வந்து சாப்பிடு ” என்றான் .
” எனக்கு வேண்டாம் வீரா ” சோர்வுடன் எழுந்து அமர்ந்தபடி கூறினாள்.
” மது டைனிங் டேபிள்ல நடந்தது எதுவுமே உண்மை இல்லை …. ஆதித்யா பாய்க்கு இன்னும் கல்யாணம் ” என வீரா சொல்லி முடிப்பதற்குள் அவனை தடுத்தவள் ,
“என்னை சமாதானம் பண்ண சொல்லி அவன் உன்னை அனுப்பி வச்சானா ?”முகம் சிவக்க கேட்டாள் .
” மது என்னை நீ பேசவே விட மாட்டிக்கிற “இயலாமையுடன் கூறினான் .
” யார்கிட்டையும் நான் பேச விரும்பல … அதான் அன்னைக்கே பார்த்தனே உங்க எல்லாருடைய குணத்தையும் … இரக்கமே இல்லாம அந்த ஆள்கிட்ட ” என்றவளால் அதற்கு மேல் பேச முடியவில்லை . தொண்டை அடைத்துக்கொண்டு கண்ணீர் வழிந்தது .
” மது நீ ஏதோ பெரிய குழப்பத்துல இருக்க … பொறுமையா விஷயத்தை சொல்லு ” என்றான் .
” முதல்ல தள்ளி நில்லு , உங்க கும்பல்ல யாரை பார்த்தாலும் எனக்கு சந்தேகமா இருக்கு , எல்லாருமே சந்தர்ப்பவாதிங்க …. என்னை என்ன வேணும்னாலும் பண்ணுவீங்க … நீயும் அப்படி தான் என்னை நம்பவைச்சு ஏமாத்தினாலும் ஏமாத்துவ … எப்படி பார்த்தாலும் நீயும் அந்த பொறுக்கியோட கூட்டாளி தானே” கண்களை விரித்து ஆவேசமாக சீறினாள் .
” நீ ஆதித்யா பாய் பத்தி ரொம்ப தப்பா புரிஞ்சிட்டு இருக்க … அவரை மாதிரி ஒரு நல்லவரை நான் இதுவரை பார்த்தது கிடையாது மது ..ஹீ இஸ் அ ஜெம் “
” ஷட் அப் …அவன் ஜெம்மா ?அவனா ? மிருகத்தை விட மோசமானவன் அவன் ” ஏற்கனவே ஆதித்யா மீது கடுங்கோபத்தில் இருந்தவள், வீரா ஆதித்யாவுக்கு ஆதரவாக கொடி பிடிக்கவும் … கோபத்தில் வீராவின் சட்டையை பிடித்து பொங்கிவிட்டாள் .
” மது என்னாச்சு ? ” மதியின் அதீத கோபத்தை கண்டு திகைப்புடன் கேட்டான் வீரா .
” ஒரு ஆள் உனக்கு அப்பா வயசு இருக்கும் அவரை கட்டிவச்சு … எவ்வளோ சித்திரவதை செஞ்சீங்க … அவர் வீட்டு பொண்ணுங்களை பத்தி தப்பா பேசலை …. ஆதித்யா எதுவுமே சொல்லல … போலீஸ்காரன்னு கூட பார்க்காம ஒருத்தனை மேலை இருந்து கீழ தள்ளிவிட்டு கொலை பண்ணல … இப்போ நான் சொன்னதெல்லாம் இல்லைன்னு சொல்லுவியா கம் ஆன் ஸ்பீட் அவுட் … ஏதோ ஜெம்ன்னு சொன்னியே ஜெம் இப்படி தான் அடுத்தவீட்டு பொண்ணுங்களை பத்தி தப்பா பேசுவாரா ? ஆதித்யா பேசினான் தானே இல்லை அதையும் இல்லைன்னு சொல்ல போறியா? ஹான் ?… நீங்க எல்லாம் மிருகத்தை விட மோசமானவங்க . உங்க கிட்ட பேசுறதே தப்பு …வெளிய போய்டு வீரா ” கோபத்தில் காட்டுக்கத்து கத்தினாள் மது .
” மது முழுசா எந்த விஷயமும் தெரியாம இப்படி நீ ரியாக்ட் பண்றது சரி இல்லை … அவனுங்க என்ன காரியம் செஞ்சாங்கன்னு உனக்கு தெரியுமா ? போதையில ஒரு அப்பாவி பொண்ணை துடிக்க துடிக்க நாசம் பண்ணிட்டானுங்க போலீஸ்காரனுங்க இப்படி தான் பண்ணுவாங்களா . அவனுங்களுக்கும் குடும்பம் இருக்குல்ல . இப்போ அந்த பொண்ணு பைத்தியம் புடிச்ச மாதிரி ஹாஸ்ப்பிட்டல்ல இருக்கா … அன்னைக்கு போனோமே அந்த ஹாஸ்ப்பிட்டல்ல தான் அந்த பொண்ணை அட்மிட் பண்ணிருக்காங்க …டாக்டர் ஆக வேண்டிய பொண்ணை இப்படி ஆக்கிட்டானுங்க . ஆதி பாய் தான் அந்த பொண்ணை படிக்க வச்சிட்டு இருக்காரு . இப்போ சொல்லு ஆதித்யா பண்ணினது தப்பா? சொல்லு மது நீ நினைக்கிற மாதிரி ஜித்தேரி கிடையாது …இங்க சட்ட திட்டங்கள் வெளியே இருக்கிறதை விட கடுமையா இருக்கும் . அதுவும் இந்த மாதிரி விஷயத்துல ஆதி பாய் இரக்கமே பார்க்க மாட்டாங்க .ஆதி ரொம்ப நல்லவரு மது ” என்றான் வீரா …ஆனாலும் மதுவின் மனதிற்குள் சிறு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது . ஏனோ அதை வீராவிடம் வெளிப்படையாக கேட்க முடியாமல் அவள் தவித்து கொண்டிருக்க ,
“வெண்பா அண்ணி துரியன் பாயோட மனைவி, மித்ரா அவங்க பொண்ணு … பாப்பாக்கு பேச்சு வராது…. யாரை பார்த்தாலும் அப்படி தான் சொல்லுவா மித்ராக்கு ஆதி பாய்ன்னா ரொம்ப புடிக்கும் …ஆதி பாய்க்கும் மித்ரான்னா உயிரு .. அண்ணி சும்மா உன் கிட்ட விளையாடினாங்க . மது நாங்க வாழ்ந்துட்டு இருக்கிறது நிழல் உலகம் தான் ஆனா அதுக்காக நாங்க நீ நினைக்கிற அளவுக்கு கேவலமானவங்க கிடையாது … எங்களுக்கும் குடும்பம் இருக்கு … தேவை இல்லாம எதையும் பத்தி யோசிக்காம இப்போவாவது வந்து சாப்பிடு ” அவள் மனதை படித்தவன் மது கேட்காத கேள்விக்கும் பதில் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான் .
அவ்வளவு தான் மதியின் மனதில் அப்படி ஒரு மகிழ்ச்சி …. தன் குடும்பம் , தந்தை என அனைவரை பற்றியும் மறந்துவிட்டாள் …. ஏன் அவனிடம் அடைபட்டு கிடக்கும் நிதர்சத்தனத்தை கூட மறந்துவிட்டாள். இப்பொழுது அவளது உலகம் மிகவும் சுருங்கி விட்டது அதில் அவளுக்கும் ஆதித்யாவுக்கும் மட்டும் தான் இடம் இருந்தது … மனம் புதிதாய் இறக்கை முளைத்த பறவை போல பறக்க, உடனே அவனை சந்திக்க வேண்டும் போல அவளுக்கு ஆசையாக இருந்தது .
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
காலையில் மனைவியிடம் தாறுமாறாய் கத்திவிட்டு சென்ற துரியனுக்கு சாயங்காலம் மனைவியை சந்திக்கவே தயக்கமாக இருந்தது . வேறு வழியில்லை சமாதானம் செய்து தான் ஆக வேண்டும் என்று எண்ணியபடி வீட்டிற்குள் நுழைந்தவன் மனைவியை தேடி அறைக்குள் நுழைந்தான் .
தான் உண்டு தன் வேலை உண்டு என அலைபேசியை பார்த்து கொண்டிருந்தாள் வெண்பா .துரியன் நுழைந்ததை கடைக்கண்ணால் பார்த்தும் அவள் கண்டுகொள்ளாமல் தன் காரியத்திலே கவனமாக இருந்தாள். வேண்டுமென்று அவளை உரசியபடி அவள் அருகில் வந்து அமர்ந்தவன் ,
” என்ன பார்த்துட்டு இருக்க ?”அலைபேசியை வாங்கியபடி கேட்டான் .
“ப்ச் என்ன வேணும் ? அதை குடுங்க “என்றாள் எரிச்சலோடு .
” ரொம்ப ஆர்வமா பார்த்துட்டு இருந்தியே அதான் நானும் பார்க்கலாமேன்னு கேட்டேன் … சரி நீயே வச்சிக்கோ ” என கையில் கொடுப்பதை போல கொடுத்தவன் வேண்டுமென்றே தவறி கீழே போட்டான் .
” என்ன பண்ணிட்டு இருக்கீங்க ” அலைபேசியை எடுத்தவள் கணவனை முறைத்து பார்த்தாள் .
” ஸா…ரி ” வேண்டுமென்றே ஸாரியை இழுத்து ராகம் போட்டபடி கூறியவனை மேலும் இறுக்கமாக முறைத்தவள் .
அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க அவளது கரம் பிடித்து தடுத்தவன் ,
” அதான் ஸாரி சொல்லிட்டேனே மில்கி … எங்க போற ?” என்றான் .
” எதுக்கு சொன்னீங்க ?” என்றாள் .
” ம்ம்ம் உனக்கு தெரியாதா ?”
” தெரியாது சொல்லுங்க தெரிஞ்சிக்கிறேன் ” கரங்களை குறுக்கே கட்டிக்கொண்டு கேட்டாள் .
” உன் ஃபோனை கீழே போட்டுட்டேன்ல அதுக்கு தான் ” என்றான் .
” அப்போ காலையில என்கிட்ட கத்துனது சாருக்கு தப்பா தெரியல அப்படி தானே .”
” தப்பு தான். வேணும்ன்னு கத்தல மில்கி ” அவனது குரல் இறைஞ்சியது.
” பாப்பா முன்னாடி இப்படி பிஹேவ் பண்ணாதீங்கன்னு எவ்வளவு தடவை சொல்றது …அவ பயப்படுறா துரியா “
” ஸாரி “
” இல்லை உங்களுக்கு எங்க மேல அக்கறையே இல்லை “
” ஏய் அப்படியெல்லாம் இல்லை டி … சின்ன விஷயம் டா நீ பெருசாக்கிட்டு இருக்க “
” ஆமா நான் அப்படி தான் ” கண்களில் இருந்து கண்ணீர் திரையிட்டது .
” ப்ச் வெண்பா இப்போ எதுக்கு அழுதுட்டு இருக்க “
” அப்படி தான அழுவேன் …. உங்களுக்கு என் மேல அன்பே இல்லை… கூடவே இருக்கேன்ல அதான் என் அன்பு உங்களுக்கு புரியல ….ஒருநாள் நான் இல்லாம போனாதான் உங்களுக்கு என் அன்பு புரியும் ” என்று அவள் சொல்லியே மறுநிமிடம் துரியனின் வலிய கரங்களுக்குள் சிக்கிக்கொண்டு சுவாசத்திற்காக திக்குமுக்காடினாள். முதலில் திமிறினாள்… பிறகு தன்னவனுடன் அடங்கினாள் …. நீண்ட நெடிய முத்தத்தில் தன்னை மறந்து சில நொடிகள் திளைத்தவள் பிறகு தன்னிலை உணர்ந்து அவனிடம் இருந்து விடுபட முனைந்தாள். அவன் விடவில்லை பிடியை இறுக்கமாக்கினான்.
” விடுங்க துரியன் “
” முடியாது டி… எதுக்கு அப்படி சொன்ன ?? ” தன் தாடையை அவளது கழுத்தில் வைத்து அழுத்தியபடி கேட்டான் .
” என் பேச்சை தான் நீங்க கேட்கவே மாட்டிக்கிறீங்களே “
” சரி கேட்டுட்டா போச்சு மில்கி ” அவள் எதை பற்றி பேசுகிறாள் என்பதை புரிந்து கொண்டவன் தன்னவளை மேலும் சங்கடப்படுத்த விடாமல் அவளை திசை திருப்பினான் .
” நான் என்ன சொல்றேன் நீங்க என்ன பண்றீங்க ?” கோபமாக அவனிடம் இருந்து விடு பட முயற்சித்தாள்.
” நான் என்ன பண்றேன் மில்கி ” இன்னும் நெருங்கி அவளை காதலோடு அணைத்துக்கொண்டவன் விஷம பார்வை பார்க்க … இருவருக்கும் இடையே தேகம் தீண்டா ஊடல் ரகசியமாய் ஊடுருவ ,இரு கண்களும் காதல் பேசியது .
அவனது கரங்கள் தன்னவளின் மேனியில் தன் உரிமையை நிலைநாட்ட …. அவனது இதழ்கள் அவளது இதழில் கவி எழுத ஆரம்பித்திருக்க …. இருவரும் முழு காதலோடு ஒருவரோடு ஒருவர் இணைந்து கொண்டார்கள் .
இன்பத்தின் எல்லை உயிர் தீண்டி ஓய்ந்த நிலையில் தன்னவனின் நெஞ்சில் நிம்மதியாக துயில் கொள்ள வேண்டிய வெண்பாவின் மனமோ குற்ற உணர்வால் வெந்து கொண்டிருக்க . துரியனோ வழக்கம் போல அவளது கோபத்தை தனது சின்ன சீண்டல்களால் மறக்கடித்து சூழ்நிலையை தனக்கு சாதகமாக மாற்றி தான் நினைத்ததை சாதித்து கொண்ட மகிழ்ச்சியில் மனைவியின் நெற்றியில் ஆசையோடு இதழ் பதித்து உறக்கத்தை தழுவினான் .
ஆனால் வெண்பாவின் மனம் ! அது படும் பாடு ! அவளது துயரம் !அதை அவன் அறியவில்லை .
-தொடரும்