Naan Avan Illai 11

download (17)-1a2e0d3e

Naan Avan Illai 11

நான் அவன் இல்லை 11

” என்ன  அத்தான் நீங்க …. அத்தைக்கு தான் உடம்பு சரியில்லையே,  ஏன்  இவ்வளவு கோபப்படுறீங்க ?” என்ற ஜுவாலா  ப்ரீத்தாவின் முகத்தில் தண்ணீர் தெளிக்க … இளமாறனும் அர்ஜுனும் அவளை கைத்தாங்கலாக  பிடித்துக்கொண்டு மெத்தையில் படுக்க வைத்தனர் .

” சாரி மா … ஏதோ கோபத்தில் பேசிட்டேன் ,உங்களுக்கு இப்போ எப்படி இருக்கு? டாக்டர்கிட்ட போகணுமா ” தாயின் கரங்களை தன் கரங்களுக்குள் அணைத்துக்கொண்டபடி அர்ஜுன் கேட்டான் .

” வேண்டாம் , எனக்கு எதுவும் வேண்டாம் …. நீ என்னை விட்டுட்டு மட்டும் எங்கையும் போயிராத அர்ஜுன் … என்கூடவே இரு…  நிறைய வலியை அனுபவிச்சிட்டேன் ..  இதுக்கு மேலையும் என்னால் முடியாது ” ப்ரீதாவின் விழிகளில் ஒருவித பயமும் பதற்றமும் அப்பட்டமாய் தெரிந்தது. அதை விட அர்ஜுனை இழந்துவிடுவோமோ என்கின்ற தவிப்பு அதிகமாய் இருந்தது .

” நான்  எங்கையும் போகல மா … நீங்க பயப்படாதீங்க  ” என்றவன் தாயின் அருகிலேயே இருக்க ,  ப்ரீதாவின் மனமோ  கடந்தகாலத்தை எண்ணி  புயலில் சிக்கிக்கொண்ட ஓடம் போல தத்தளித்தது.

கேங்ஸ்டர் கலாச்சாரம் என்பது கடந்த நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இருந்து இந்தியாவில் முக்கியமாக மும்பையில்  அதிகமாக உள்ளது. இதில் சிலர் 1970 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே சின்ன சின்ன  சட்டவிரோதமானது பொருட்களை  விற்ப்பதன் மூலம் தங்களது  இருண்ட வாழ்க்கையை துவங்கினர்.

‘ஜித்தேரி கேங் ‘ – 1976 களில் மும்பையில் தலையெடுத்த இந்த மாபியா கேங் விஷ கிருமி போல  மெல்ல மெல்ல நம் இந்திய நாடு முழுவதும் பரவி இப்பொழுது யாரும் அழிக்க முடியாதளவுக்கு மாபெரும் வளர்ச்சியை  அடைந்துள்ளது .

இவர்களது முக்கியமான பிஸ்னஸ்  ஹவாலா பணம்  மற்றும் கனிம வளங்களை கடத்துதல் தான்  .

நம் நாட்டில் நடக்கும் இது போன்ற முக்கால்வாசி  கடத்தல் சம்பவங்கள் இவர்கள் தலைமையில் தான் நடக்கின்றது .இது அனைத்தும் அறைந்திருந்தும் நம் இந்திய அரசால் இதுவரை  அவர்களுக்கு எதிராக எந்த வழக்கும் தொடுக்க  முடியவில்லை,   அதற்கு முக்கிய காரணம் …. இவர்களுக்கு பக்க பலமாக இருப்பது நம் நாட்டை ஆளும்  அரசியல் தலைவர்களும் … பெரிய பெரிய  வெளிநாட்டு  நிறுவனங்களை வைத்திருக்கும் பணக்கார முதலைகளும் .

வெளிப்பார்வைக்கு ‘ஜித்தேரி கேங் ‘ ஒரே ஒரு  குழுவாக தெரியும் ஆனால் இதற்கு கீழ் பல குழுக்கள் லோக்கல் தாதாக்களின்  தலைமையின் கீழ் இயங்கி வருகின்றது .

1795 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஆந்திராவில்  இரு நாட்டு மன்னர்களுக்கு எதிரே நடந்த போரில்  தோற்கடிப்பட்ட மன்னர் கோட்டா வம்சத்தின்  படை  வீரர்கள்  மற்றும் அவர்களது குடும்பத்தினர்  எதிரி நாட்டு மன்னரால்  விரட்டப்படுகின்றனர் …. அவர்கள் பிழைப்புக்காக  வடநாட்டில் நடந்த கட்டுமான பணிக்காக தங்களின் சொந்த ஊர்  ஆந்திராவிலிருந்து இருந்து கூலித்தொழிலாளிகளாக இங்கே வருகின்றனர் …. அவர்கள் வாழ்ந்த பகுதியே ‘ஜித்தேரி’   .

அதன் பிறகு, 1880 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர் ஆட்சியில் அங்குள்ள ராணுவத்தினருக்கு சேவை செய்து பிழைத்து வந்தவர்கள் .

ஆங்கிலேய ஆட்சி முடிவுக்கு வந்து அவர்கள் நாட்டை விட்டு சென்ற பிறகும் சுகந்திரம் அடையாத இந்த மக்கள்  நம்நாட்டு பணக்காரர்களிடம்    கொத்தடிமைகளாக வேலை பார்த்தனர் .

ஜித்தேரி இனத்து பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்ள ….. அவர்கள் மிகவும்  துன்பறுத்த பட்டனர் … ஆனாலும் அனைவரும் அவர்கள் கொடுத்த இன்னல்களை அனுபவித்து கொள்ள   ‘ காலா ராவத் ‘ என்னும்  பதினெட்டு வயது வாலிபன் மட்டும் அதை கண்டு  எழுச்சியடைந்தான் .

அங்குள்ள மக்களின்  உரிமைக்காக  வாய்வழியே போராடியவன் ஒரு கட்டத்தில் ஆயுதம் ஏந்தினான்  … அவனுக்கு ஆதரவாய் பலரும்  கொடிபிடிக்க …  உரிமைக்காக  அவன் எடுத்த கத்தி  அவனை   நிழல் உலகிற்குள்  தள்ளியது . காலா ராவத்காலா ஜித்தேரி  ஆனான்   … காலா ராவத்தின்  தலைமையில் 1976 யில் உருவாக்கப்பட்டதே  ‘ஜித்தேரி கேங் ‘ .

அவருக்கு மிகவும் நெருக்கமான  விசுவாசமான ஊழியர்கள் தான் தீனதயாளன்  மற்றும் வரதராஜன் . இருவரும் நெருங்கிய நண்பர்கள் … அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருக்க …. 1980 ஆம் ஆண்டை ஒட்டி,   நீண்ட நாள் காதலர்கள் ஆன காலா ஜித்தேரியின் ஒரே மகள் மாலினிக்கும்    தயாளனுக்கும்   திருமணம் நிகழ்ந்தது …. அவர்கள் திருமணம் முடிந்து ஒரு ஆண்டு கடந்திருக்க  காலா உடல் நல குறையால் மரணத்தை தழுவ .ஜித்தேரியின் ஆணி வேர் ஆட்டம் கண்டது .

காலாவின் மரணம்    ஜித்தேரியில் பெரிய புயலை கிளப்பியது  ‘ ஜித்தேரிக்கு ‘ அடுத்த தலைவர்  யார்?  என்பதில்  தயாளனுக்கும் வரதராஜனுக்கும்  பெரிய போரே  நடந்தேறியது  … தயாளன் தலைமையில் சிலர் … பிறகு வரதன் தலைமையில் சிலர் என்று ஜித்தேரி கேங் இரண்டாக பிரிந்தது …. இருவருமே சம பலம் கொண்டிருக்க வேறு வழியின்றி ஜித்தேரியின் மூத்த உறுப்பினர்கள்  கலந்து பேசி ஜித்தேரி கேங்கை  வடக்கு மற்றும்  மேற்காக பிரித்தனர் …. அதன் படி   ‘நார்த்  ஜித்தேரி ‘ தயாளனுக்கும்  மற்றும் ‘ வெஸ்ட் ஜித்தேரி ‘ வரதராஜனுக்கும் என பிரித்து… காலா ஜித்தேரி இறந்த அதே ஆண்டிலே இவர்கள் இருவரும் தலைமை  பொறுப்பை எடுத்துக்கொண்டனர் .

பிரிக்கும் பொழுதே இருவரும் தொழிலையும்  பிரித்து கொள்ள  ….தயாளன் தலைமையில் இருக்கும்  ‘ நார்த் ஜித்தேரி ‘    கேங்  போதை மருந்து மாபியா   , கனிம வளங்கள் மாபியா தொழிலை கையில்  எடுத்தது … வரதன்   தலைமையில் உள்ள ‘வெஸ்ட் ஜித்தேரி ‘ கேங்   ஹவாலா மற்றும் கோல்ட் மாபியாவை கையில் எடுத்தனர் . இருவருமே பெரும்புள்ளிகள் .

அனைத்தும் சரியாக சென்று கொண்டிருக்க இரு கேங்குக்கும் இடையே நடந்த  கேங் வாரில்   தயாளன் –   வரதராஜன் மற்றும்  அவரது  வலது கையான விக்டர் தேசா மீது தாக்குதல் நடத்த … இருவரும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்  … அதில்  வரதராஜன்  இறந்துவிட  …அதன் காரணமாக  தயாளன் கேங்கில் அடுத்தடுத்து ஏகப்பட்ட   இழப்புகள்  ஏற்பட்டன . ஒருகட்டத்தில் தயாளன் உயிருக்கு பயந்து தப்பி தலைமறைவாக  … அவரது தலைமையில் இயங்கிய ‘ நார்த் ஜித்தேரி கேங் ‘ தலைமை இல்லாது முற்றிலும்  செயலற்று  சிதறி போனது . இப்பொழுது ஜித்தேரி மொத்தமும்  வரதராஜனின்  ஒரே மகன்  துரியனிடம்  வந்துவிட்டது . வரதராஜனின்  ஒரே வாரிசான துரியனை  பாதுகாக்கும்  பொறுப்பு விக்டர் தேசா எடுத்துக்கொள்ள  … விக்டர் ஜித்தேரிக்கு ஒரு நல்ல விசுவாசியாக  இருந்து துரியனை வழிநடத்தினார் .  

பழி பாவத்துக்கு    அஞ்சாத  இவர்கள் இதுவரை செய்யாத  வேலையே  கிடையாது …. உளவு பார்ப்பத்தில் ஆரம்பித்து ஆள் கடத்துதல்  கொலை செய்தல் என அவர்கள் கால் பதிக்காத வேலையே கிடையாது … தங்களின்  லட்சியத்திற்காக எந்த இழிவான காரியத்தையும் செய்யக்கூடியவர்கள் , மிகவும் ஆபத்தானவர்கள் . தனக்கு ஒரு கண் போனால் எதிரிக்கு உயிரே போக வேண்டும் என்னும் வக்கிர குணம் படைத்தவர்கள் .

இப்படி பட்ட கட்டமைப்புடன்  இயங்கும் இவர்களை அழிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல …இவர்களை நெருங்குவதே கடினம்  இதில்   இவர்களை ஒழிப்பது என்பது நடக்காத காரியம் .

இவர்களில்  எத்தனை குழுக்கள் உள்ளனர் ??யார் யார்  என்ன என்ன பணிகள் மேற்கொள்கின்றனர் .??இவர்களின் திட்டங்கள் என்ன ?என்று  யாருக்குமே தெரியாது .

நம் நாட்டின் வளங்கள் ….மற்றும்  மக்களின் பொருளாதாரத்தை கரையான் போல் அரித்துக் கொண்டிருக்கும்  இந்த மாபியா கும்பல் அரசாங்கத்துக்கும்  போலீசுக்கும் சிம்ம சொப்பதனமாக இருக்கின்றனர்.

ஆனால் ‘ ஜித்தேரி ‘ பற்றி முழுவதும்  அறிந்திராத  மதுமதி ‘ ஜித்தேரி ‘ என்னும் நரக சாம்ராஜ்யத்தின்   முக்கிய தளபதியான ஆதித்ய சக்கரவர்த்தி என்னும் நிழல் உலக மரண தேவனின்   மனதில் சத்தமில்லாமல் சிம்மாசனம்விட்டுவிட்டாள்.

ஊருக்கு தொலைவில் இருந்து , ஆதித்யாவுக்கு தான் இருக்கும் இடத்திற்கு வரவே  மூன்று மணிநேரம் ஆனது . அதற்குள் அவள் பட்ட வேதனையை  விட அவன் பட்ட வேதனை தான் அதிகம் . மயக்கத்தில் கிடந்தவளை தூக்கிக்கொண்டு உள்ளே ஓடினான் .

அவன் அங்கு வரும்பொழுதே அனைத்து ஏற்பாடுகளும்  தயாரான  நிலையில் இருக்க மதுவுக்கு உடனே  சிகிச்சை அளிக்கப்பட்டது .

“அவளுக்கு வலிக்க கூடாது . வலிக்காம இருக்க முதல்ல அனஸ்தீஷியா  குடுங்க” என தனது காயத்தை கூட பொருட்படுத்தாது ,    மயக்க நிலையிலும் வலியில் முகம் சுளித்தவளை பார்த்து கொண்டே கூறியவனின் கண்களில் தான் அத்தனை வலி .

” ஆதித்யா அவளுக்கு தான் ட்ரீட்மெண்ட் குடுக்குறாங்கல்ல ..வா உனக்கு ட்ரீட்மண்ட் கொடுப்போம் உனக்கும் புல்லெட் இறங்கிருக்கு  ” என நாகா அழைக்க ,

” அவளுக்கு முடியட்டும் ” என்றவனின் பார்வை அவள் மீதே நிலைத்திருந்தது .

சில நிமிடங்களுக்கு பிறகு “பயப்படுறத்துக்கு  எதுவும் இல்லை ஆதித்யா … கொஞ்ச நாள் நல்லா ரெஸ்ட் எடுத்தா  சரியா போய்டும்”  என  மருத்துவர் கூற,

 ” உஃப்”  – என இயல்பாக மூச்சுவிடும் பொழுது தான்  ஆதித்யாவுக்கு  புரிந்தது , தான் இவ்வளவு நேரம் மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டிருந்திருக்கின்றோம் என்று …. அதுவரை உச்சகட்ட  பதற்றத்தில் இருந்தவன் மருத்துவர் , மதியின் நலனை உறுதி செய்த பிறகே  மெல்ல மெல்ல  ரிலாக்ஸானான்  .

அவள் அருகிலேயே ஒரு நாற்காலியை  இழுத்து போட்டு அமர்ந்துகொள்ள  மருத்துவர் அவனுக்கு சிகிச்சை அளித்தார்  .

” ஆதித்யா அனஸ்தீஷியா ” என மருத்துவர் தாரா கேட்க .

” நோ ” தன் கைகளினால் வேண்டாம் என தடுத்தவன் … மதியையே  வெறித்து பார்த்தப்படி இருந்தான் .  தோள்பட்டையில்  இறங்கியிருந்த தோட்டா அவனது சதையை கிழித்தபடி நீக்கப்பட்டது … ஆனால் அவனது உடம்பில் சிறு அசைவு கூட  இல்லை  ‘ இவன் மனிதனா! …. இல்லை உணர்ச்சியற்ற ஜடமா  ‘ என தாராவுக்கு  ஆச்சரியமாக இருந்தது  .

” முடிச்சாச்சு  ஆதித்யா … டேக் சம் ரெஸ்ட் ” என தாரா கூறிய மறுநிமிடம்  மதிக்கு சிறிதும் நோகாமல் அவளை தன் கையில் ஏந்தியவன் தன் அறையை நோக்கி சென்றான் .

” என்ன நாகா இது அவர் ரெஸ்ட் எடுக்கணும் ….” என தாரா நாகாவை பார்த்து சிறு கோபத்துடன் கூறினார் .

” சொன்னா கேட்க மாட்டான் தாரா … உனக்கு அவனை நல்லா தெரியுமே    “

” உண்மையாவே ஆதித்யா சக்கரவர்த்தி  இரும்பு மனுஷன் தான் பா … என் வாழ்க்கையிலையே இவரை மாதிரி ஒருத்தரை நான் இதுவரை பார்த்தது இல்லை  ” சிறு மென்னகையுடன் கூறியவள் அங்கிருந்து செல்ல … நாகா ஆதித்யாவின் அறையை நோக்கி சென்றான் .

மெதுவாக அவளை படுக்கையில் கிடத்தியவன் …  போர்வையை அவளது கழுத்து வரை  போர்த்திவிட்டு அவளையே பார்த்தபடி அவள் அருகிலேயே கைகளை  மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு நின்றான் .     கண்களை மூடி குழந்தை போல கிடந்தவள் சில மணிநேரத்துக்கு  முன்பு  குண்டடி பட்டு ரத்தவெள்ளத்தில்  தனக்காக  அலறி  துடித்தது கண்முன் வர ,

” ஏன் மதி இப்படி செஞ்ச … நீ அப்பவே போயிருக்கணும் … ” என  மனதிற்குள்  எண்ணினான் .

அப்பொழுது அவள் உடம்பில் திடிரென்று  சிறு அதிர்வு” நோ …. ஆதித்யா  …. வேண்டா….ப்ளீஸ்….. நோ சூட் … பண்ணாதீங்க ….. ” மயக்கத்திலே  அழுதாள் . உடல் வெட்டி போட்டது போல துடித்தது … வேகமாக அவள் அருகில் வந்து அமர்ந்தான் . அவளது  முகமெல்லாம் முத்துமுத்தாய் வியர்த்து இருந்தது … பதற்றத்தில் …. பயத்திலும்  உதடுகள் துடித்தது .

” மதி …  நீ பத்திரமா தான் இருக்க ” – நடுங்கும் அவளது கரங்களை தன் கைகளுக்குள்  வைத்துக்கொண்டு அவளை ஆறுதல் படுத்தினான் .

அவளது அலறலும்  பதற்றமும்  அதிகமானது … கண்களில் இருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிந்தது .

” யாரவது காப்பாத்துங்க …ப்ளீஸ் …..ஆதி ” சத்தமாக புலம்பினாள்.

” ஒன்னும் இல்லை பேபி … நான் நல்லா இருக்கேன் ” சட்டென்று  அவளை தன் மார்போடு அணைத்து பிடித்துக்கொண்டான் .

” ஆதித்யா …. ப்ளட்டா  வருது ” விம்மியபடி  அழுதாள் .

அவளது கண்ணீரை  துடைத்து …. சிகையை வருடி ” ஷ்ஷ் ….. நான் உன் பக்கத்துல தான் இருக்கேன்  எல்லாமே சரி பண்ணியாச்சு  ” அமைதி படுத்த முயன்றான் . அவளோ அவனது வெற்று மார்பில் முட்டி மோதினாள் … பயத்தில் அவனிடம் இருந்து விடுபட போராடினாள் .

” ட்ரஸ்ட் மீ பேபி எல்லாமே சரி பண்ணிடலாம் ” முடிச்சிட்ட அவளது  புருவத்தை  நீவியபடி  நம்பிக்கை கூறினான் .

” ட்ரஸ்ட் யூ ஆதி ” உதடுகள் மெல்ல முணுமுணுத்தது … புலம்பல் மெல்ல குறைந்தது … அழுகையும் குறைந்தது … மீண்டும் ஆழ்ந்த நித்திரைக்கு  சென்றாள் மதுமதி . அப்பொழுதும் அவனது குண்டடி பட்ட புஜத்தை விடாமல் அழுத்தமாக பிடித்திருந்தாள். வலிக்காமல் இல்லை ! ஆனாலும் பொறுத்துக்கொண்டான் .

மதியின் முகத்தை மறைத்தபடி விழுந்து கிடந்த முடி கற்றை ஒதுக்கினான் . அன்று மின்னல் ஒளியில் அவனை ஈர்த்த , அதே மதி முகத்தின் அழகு இப்பொழுதும் அவனை ஈர்த்தது … வலியை மறந்து அவளது முகத்தில் இருந்து தன் பார்வையை அகற்றாமல் பார்த்துக்கொண்டிருந்தான் . எங்கோ இருட்டில் கிடந்தவனுக்கு  மின்மினியாய் வெளிச்சத்தை கொடுத்தது அவளது மதி முகம்.

மனதிற்குள் ஆயிரம் ஆசைகள் முளைத்தது இந்த உலகம் இப்படியே நின்றுவிட்டால் எப்படி இருக்கும் மனம் பேராசை கொண்டது .

” என்ன நடந்தாலும் இப்படியே என் கூடவே இருப்பியா மதி ” என்றவன்  அவளது நெற்றியை நோக்கி குனிந்த மறுநிமிடம்  மதியின் விழிகள்  ஆதியின் விழிகளுடன் பின்னிக்கொண்டது  .

சட்டென்று அவனிடம் இருந்து எழுந்து அமர்ந்தவள் ,” உங்களுக்கு ஒன்னும் இல்லையே ” அவனது தோள்களை  பதற்றத்தில்  அழுத்தமாக  பிடித்து கேட்க .

” ஆ ” வலியில் அவன்  சிறு முனங்களுடன் முகத்தை சுளித்ததும்  தன் தவறு உணர கைகளை விலக்கியவள்  ,” ஸ்ஸ் … சாரி ஆதி   … ரொம்ப வலிக்குதா ? ” மென்மையாக  அவனது காயத்தை பட்டும் படாமல் வருடியபடி கேட்டாள் … அதன் ஸ்பரிசம்  அவனது இதயத்தை தொட்டு மீண்டது .. அவளது கரம் பட்ட மறுநிமிடம்  வலி கூட சுகமானதாக  மாறியது    ” இல்லை  இப்போ வலி இல்லை  ” மென்னைகையுடன் கூறினான்.

சில நிமிடங்கள் கழித்து அவள் அருகில் இருந்து எழுந்தவன் ,” உனக்கு வலி மருந்து கொடுத்திருக்காங்க  அதனால இன்னும் ரெண்டு மணிநேரத்துக்கு வலி இருக்காது … அதுக்கப்புறம்  கொஞ்சம் வலி அதிகமா இருக்கும் … ரொம்ப வலிச்சா சொல்லு மருந்து  தரேன் ” என்றவன்  அங்கிருந்து கிளம்ப … உடனே படுக்கையில் இருந்து எழுந்தவள் ” ஆதித்யா நான் இங்க இருந்து ” என்று  கூறி  முடிப்பதற்குள் ,

”  ஆதி  ” என்று அழைத்தபடி நாகா உள்ளே வர ….

அவனை கண்டதும்  மதி சட்டென்று ஆதித்யாவின் முதுகுக்குப்  பின்னால் அவனது கரத்தை பிடித்தபடி தயக்கத்துடன் மறைந்துகொண்டாள் … சில நொடிகளில் அவளது தயக்கத்திற்கான  காரணத்தை உணர்ந்த ஆதித்யா,

” நாகா நீ போ வரேன் ” என்று நாகாவை வெளியே அனுப்ப … ஆதித்யாவுக்கு  பின்னால் மறைந்திருந்த  மதியை ஒரு பார்வை பார்த்த நாகா வேகமாக வெளியேறினான் .

நாகா சென்ற பிறகு சிறு தயக்கத்துடன்  ஆதித்யாவை விட்டு தள்ளி வந்த மதி   அவன் முகத்தை கூட பார்க்காது  தலை கவிழ்ந்து நிற்க … ஆதித்யாவும் எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியே சென்றான் .

ஆதித்யாவின் வருகைக்காக வெகு நேரமாக அவனது ஆபிஸ் ரூமில் காத்திருந்த நாகா அவனை கண்டதும்  ,

” இவளை ஏன் இங்க கூட்டிட்டு வந்த ஆதி ” என கோபத்துடன் கேட்டான் .

” வா வந்து உக்காரு ” தன் எதிரே இருக்கும் இருக்கையை காட்டி அமரச் சொன்னவன் …உள்ளே தாரா வருவதை கவனித்து நாகாவை அமைதியாக இருக்கும் படி செய்கை செய்து  அனுமதி கேட்டு நின்றவளை உள்ளே அழைத்தான்,

” வாங்க தாரா “

” ஆதித்யா அவங்களுக்கு வேண்டியதை கொடுத்துட்டேன் … வேணும்ன்னா நான் அவங்களை என் கூட தங்க  வச்சுகிட்டுமா …  “

” வேண்டாம் நான் பார்த்துகிறேன் … வேற ஏதவது சொல்லனுமா ” சொல்ல ஏதாவது  இருந்தா சொல்லு இல்லைனா கிளம்பு என்னும் தோரணையில் ஆதித்யா சொன்னதன்  அர்த்தத்தை உணர்ந்தவளின் தன்மானம் அடிபட,

” இல்லை ”   சிறு கோபத்துடன் பற்களை கடித்தாள் .

” தென் ஓகே … பார்க்கலாம் ” வெளியே போ என ஆதித்யா  நாகரிகத்துடன் கூறினான் … ஆனால் அவனது வார்த்தையில் இருந்த மென்மை அவனது குரலிலும் பார்வையிலும் இல்லை .அதை உணர்ந்த தாரா  ஆதித்யாவிடம் கோபத்தை காட்ட முடியாமல் , போலியான  புன்னகையுடன் வெளியேறினாள் .

” என்னதான் ஆதித்யா நல்லவன் மாதிரி தெரிஞ்சாலும்  இங்கையே என்னால இருக்க முடியாது … ஐ ஹேவ்  டூ லீவ் … ஆதித்யா வந்ததும் இதை பத்தி பேசணும் … வீட்ல எல்லாரும் ரொம்ப பதறி போய் இருப்பாங்க … சந்தியா எப்படி இருக்கான்னு தெரியலை ” என  தன் உடலை போர்வைக்குள்  குறுக்கிக்கொண்டு மதுமதி சிந்தனையுடன்   படுத்திருக்க … அவளது சிந்தனையை கலைத்தபடி உள்ளே நுழைந்த  தாரா , மதி அணிந்துகொள்ள அவளுக்கு ஒரு செட் ஆடை மற்றும் அவளுக்கு தேவையான  பொருட்களை  அவளுக்கு அருகே வைத்தாள்.

” இதெல்லாம் நான் கேட்கலையே ” என்றாள் மது.

” ஆதித்யா தான் குடுக்க சொன்னாரு “கோபத்துடன் கூறினாள்.

” ஆதியா ” மதுவின் இதழ் அழகாய் விரிய …மது ஆதித்யாவை ஆதி என உரிமையாக அழைத்த விதம் தாராவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது ‘ யாரையும் அவர் ரூம் பக்கம் கூட அனுமதிக்க மாட்டாரு இவளை மட்டும் இங்கையே தங்க வச்சிருக்காரு … இது சரி வராது இப்போவே போய் பேசணும் ” என்று எண்ணியவள் நேராக ஆதித்யாவை காண சென்றாள் ….ஆனால் வழக்கம் போல அவன் அவளை அவமதித்துவிட மதியின் மீது தான் அவளுக்கு கோபம்  அதிகரித்தது .

தாரா  வைத்துவிட்டு சென்ற ஆடையை தன் கையில் எடுத்த மதுவின் நெஞ்சம் முழுவதும் ஆதித்யா தான் வியாபித்து இருந்தான் . தன் தேவையை தான் கூறாமலே புரிந்து கொண்ட  ஆதித்யாவின் மேல் மதுவின் மனதிற்குள் சொல்ல முடியாத ஏதோ ஒரு உணர்வு மின்னலை போல தோன்றி மறைந்தது. 

” ஆதி நீ என்ன பண்ணிட்டு இருக்கன்னு தெரிஞ்சி தான் பண்றியா “என நாகா ஆவேசத்துடன் கேட்க ..

” அவ தன் உயிரை பணயம் வைத்து என் உயிரை காப்பாத்திருக்கா … எப்படி என்னால அவளை விட்டுட்டு வர முடியும் ” அதே ஆவேசத்துடன் பதில் கூறினான் .

” நீ ஏன் அவளை காப்பாற்ற போன?? “

” என்னால தான் சிவகுரு அவளை கடத்தினான் … அவளை காப்பாற்ற வேண்டியது என் கடமை “

” சரி இப்போ காப்பாத்திட்ட .. எப்பவுமே உன்னால அவளை காப்பாற்ற முடியுமா ?இதோ பாய் வந்துட்டு இருக்காரு முதல்ல அவளை போட்டுட்டு தான் பேசவே செய்வாரு ..அப்போ என்ன பண்ணுவ … ??துரியன் பாய் கிட்ட இருந்து உன்னால அவளை காப்பாற்ற  முடியுமா …. ?? சரி விடு …. முதல்ல உன்கிட்ட இருந்தே அவளை உன்னால் காப்பாற்ற முடியுமா சொல்லு ??… உன்னால முடியாது ஆதி  …. இன்னைக்கு இல்லைனாலும்  என்னைக்காவது  ஒருநாள்  அவ உயிர்க்கு ஆபத்து வரலாம் … ஏன் அதுக்கு காரணம் நீயா கூட இருக்கலாம் …”

” நாகா ஷீ கேன்பீ இன்னோசென்ட்  இப்போ வர என்னால அவளை சந்தேகப்பட முடியல..இவளை கொலை பண்றதுனால நமக்கு ஒன்னும் கிடைக்க போறதில்லை”

”  ஆதி …. பாய் கூட விக்டரும்  வாராரு … நீ  என்ன பண்ண போறன்னு எனக்கு தெரியலை …அவங்க இவளை விட்டு வைக்க மாட்டாங்க “

” துருவ் கிட்ட நான் பேசுறேன் ” என்று ஆதித்யா சொல்லவும் …” ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ …. ” மதுவின் அலறல் சத்தம் ஆபிஸ்   ரூமில் பேசிக்கொண்டிருக்கும்   ஆதித்யாவுக்கு மிக துல்லியமாக கேட்க  ” மதி ….” என்றவன் மறுநிமிடமே தன் அறைக்கு விரைந்தான் .

– தொடரும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!