Naan Avan Illai 13

download (11)-197a5183

Naan Avan Illai 13

நான் அவன் இல்லை 13

துரியனின் கொலை மிரட்டலால்  அச்சத்தில் உறைந்திருந்த  மதுமதி பின்விளைவுகளை பற்றி சிந்திக்காமல் ஒரு முடிவு எடுத்தாள்.

” இனி நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு தான் ஆபத்து .

இங்கிருந்து எப்படியாவது தப்பித்தாக வேண்டும் .

அவன் செய்த கொலைக்கு  நாமே சாட்சி … அப்படி இருக்கும் பொழுது விட்டுவைப்பானா  நம்மை?

ஆதித்யா என்ன தான் நம்மிடம்  மென்மையாக   நடந்து கொண்டாலும் …அவனுக்கு பொறுமை என்பது கொஞ்சம் கூட கிடையாது .

கோபம் வந்தால்  உடனே துப்பாக்கியை எடுத்து விடுவான் … அதை நாமே எத்தனை முறை பார்த்திருக்கிறோம் ,  எத்தனை பேரை நாம் பார்க்க அன்று  அந்த பாழடைந்த வீட்டில் வைத்து கொலை  செய்தான்.

அப்புறம் அந்த சிவகுரு … இதெல்லாம் பார்த்ததுக்கு அப்புறமும் அவனை போய் நம்பிவிட்டேனே .!

இது எவ்வளவு பெரிய பிழை ! ஒரு உயிரை கொள்வது என்பது அவ்வளவு  சாதாரணமான  விஷயமா என்ன ??அதை குற்ற உணர்ச்சியே  இல்லாமல் செய்யும் இவனை போய் நம்பிவிட்டேனே !

அத்தகைய  கொடூரத்தை புரிந்தவனை போய் நம் மனதில்  எப்படி வைத்தோம் ??

எவ்வளவு நம்பினோம் ?? இறுதியில் அவன் புத்தியை  காட்டிவிட்டானே !நம் வீட்டில் நம்மை காணாமல் எல்லாரும் என்ன பாடு படுகிறார்களோ? ”  – என்றவளுக்கு அவளது நிலையை எண்ணி கலக்கமாக  இருந்தது .

அப்பொழுது கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த  பணிப்பெண்  மது சாப்பிடுவதற்கு உணவை கொடுக்க

” வேண்டாம் ” என  மறுத்து விட்டாள்.

அந்த பெண்மணி எதுவும் பேசாமல் சாப்பாடு தட்டை அவள் அருகில் வைத்துவிட்டு அங்கிருந்து  கிளம்பும் நேரம் மதிக்கு ஒரு யோசனை தோன்ற  ” ஆ ஆ ஆ ” என்று தன் வயிறை பிடித்துக்கொண்டு அலறினாள்.

அவள் போட்ட சத்தத்தில்  பயந்து போன  பெண்மணி ‘ ஐயோ என்னாச்சு மா ‘ என்று  பதற்றத்துடன் அவள் அருகில் வர …   

” என்னை மன்னிச்சிருங்க மா ” என்ற மதி … அந்த பெண்மணியை கீழே தள்ளியவள்  ஓடி வந்து கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு   …வெளியே ஓடினாள் .

ஆதித்யா சக்கரவர்த்தி …  வாழும் அரண்மனை  நான்கு அடுக்கு பாதுகாப்பை  கொண்டது . முதல் அடுக்கு முழுவதும் மின்னசரம்  பொருத்திய  பெரிய கோட்டை சுவர் …அங்கே சுமார் இருபதில் இருந்து முப்பது வகையான  வேட்டை நாய்கள் மற்றும்   ஆயுதம் ஏங்கித்திய   காவலாளிகள்  எந்நேரமும்  விழிப்புடன் இருப்பர் . அவர்களை தாண்டி  அடர்ந்த கொடிய மிருகங்களை  கொண்ட காடு ….  அதை தாண்டி  அவனுக்கு உரிமையான  சாலை … இறுதியாக  கடல் … கிட்ட தட்ட அது ஒரு   தீவு .

அந்த தீவுக்குள் ஆதித்யாவின்  அரண்மனை மட்டும் இல்லை …  அவனது அரண்மனைக்கு  பக்கத்தில் தான் துரியனின் அரண்மனையும்  உள்ளது  அவனுடன் தான் விக்டர் தேசாய் வசிக்கிறார் . வீரா மற்றும்  நாகா ஆதித்யாவுடன் தங்கிருக்கின்றனர் . ஆக இது ஜித்தேரியின் மரண வாயில் .

ஆனால் இது எதை பற்றியும் அறியாமல்  … அவனது பலத்தை பற்றி  தெரியாமல்  … குருட்டு பூனை விட்டதில்  ஏறின கதையாக பின்விளைவுகளை  பற்றி சிந்திக்காமல்

 தப்பிக்கும்  முயற்சியில்  இறங்கிவிட்டாள் மதுமதி … ஆனால் ,இப்பொழுது   பார்வையற்ற பூனை  எப்படி வீட்டின் விட்டதில்  மேல் ஏறி எங்கே குதிப்பது  என்று தெரியாமல்  குழப்பத்தில் விட்டத்திலேயே  நின்று கொண்டிருக்குமோ  . அது போல  அந்த அறையில் இருந்து , ஒருவித குருட்டு தைரியத்தில் தப்பித்த மது அதன் பிறகு எங்கே எப்படி செல்வது என்று புறியாமல் நின்ற இடத்திலே நின்றாள்  .

சில நொடிகள் எந்த திசையில் செல்லவது என்று குழம்பினாள்  … பிரம்மாண்டமான  அந்த அரண்மனையில்  உள்ள பெரிய பெரிய சிற்பங்களும்  .. அறைகளுக்கும்  அவளை திக்குமுக்காட  வைக்க  அப்படியே உறைந்து  நின்றுவிட்டவள் .

பின்பு  ‘ இப்படியே நின்றால் மாட்டிக்கொள்ள கூடும் ‘ என்பதை சில நிமிடங்கள் கழித்து உணர்ந்து … ஒவ்வொரு  மறைவான இடத்திலும் பதுங்கி பதுங்கி யாரும் வருகிறார்களா  என்று பார்த்தபடி எச்சரிக்கையுடன்   தோட்டத்திற்குள் சென்று ஒரு அடர்ந்த புதருக்குள்  மறைந்தாள்   .

ஆங்காங்கே  துப்பாக்கி ஏந்திய காவலாளிகள்  கண்களில் விளக்கெண்ணெய் விட்டு கொண்டு விழிப்புடன் இருக்க ,   எப்படியோ ஒளிந்து மறைந்து அந்த வீட்டை கடந்த மது மதி ,  தன் உயிரை கையில் பிடித்து கொண்டு காட்டு பகுதிக்குள் ஓட ஆரம்பித்தாள் .

சிறிய ஒளிக்கு கூட அனுமதி மறுக்கப்பட்ட  அந்த அடர்ந்த வனத்துக்குள் … இருளின் கை ஓங்கி இருந்தது . இருட்டில் பாதையும் புலப்படவில்லை . உடலிலும்  சக்தி இல்லை …. போதாகுறைக்கு  ஆங்காங்கே விட்டு விட்டு கண்ணடித்த மின்கல விளக்குகள் அவளுக்கு ஆதித்யாவின் காவலர்கள் இங்கும் இருக்கிறார்கள் என்பதை எச்சரிக்க …   நடுக்கத்துடன் தட்டு தடுமாறி அந்த இருட்டுக்குள் நடந்தாள் . அரண்டவன் கண்களுக்கு  இருண்டதெல்லாம் பேய் என்னும் கதையாக  சருகுகள் மிதிபடும்  சத்தம் கூட  அவளை மிகவும் அச்சுறுத்தியது .

இதில் மிருகங்களின் சத்தம் வேறு அவளை பயம்காட்ட ….

” பாதையே தெரியலையே  எப்படி போறது ”   திசை தெரியாமல் திணறினாள் .

” ஒருவேளை அவங்க கிட்ட மாட்டிக்கிட்டா ??” என்று அவள் எண்ணிய மறுநொடி … நடுக்கத்தில் மூச்சு வேகமாக  வாங்கியது …. இதயம்  காற்று பட்ட ஜன்னல் போல  ‘ படார் படார் ‘  என்று அடித்துக்கொண்டது . வாயில் வந்த கடவுள் பெயரை எல்லாம் சொல்லி  வேண்டினாள் .

” ஒரு வெளிச்சம் கூட இல்லையே … எந்த டைரெக்ஷ்ன்ல  போனா ரோட் வரும்  எவ்வளவு நேரமா நடக்குறோம் … கடவுளே  கொஞ்சம் வெளிச்சம் தெரிஞ்சா நல்லா இருக்கும் ” என்றபடி நடந்தவளுக்கு தொலைவில் ஹெட் லைட் வெளிச்சம் தெரிந்தது . உடனே வெளிச்சம் வந்த திசையை  நோக்கி வேகமாக நடந்தாள்.

****************************

ஆதித்யாவின் அலுவலக அறைக்குள்  வேகமாக ஓடி வந்த வீரா ” மதுமதி ஹஸ் எஸ்கேப்ட்….  மதுமதி  தப்பித்துவிட்டாள்   ”   மூச்சிரைக்க  கூறினான் .

” ம்ம் அதான் பார்த்துட்டு இருக்கோம் ” என்ற துரியன்  …. ஆதித்யாவின்

அறையில் இருக்கும்  பெரிய தொலைக்காட்சி பெட்டியை காட்டினான் .

மது  பதுங்கி பதுங்கி யாருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து செல்லும் காட்சிகள் லைவாக  ஓடிக்கொண்டிருந்தது .

” நமக்கு தெரியாம போறாங்களாம் … !! அதான பார்த்தேன் தயாளன் பொண்ணு   எப்படி பயந்த சுபாவம் உள்ளவளாக  இருக்க  முடியும்ன்னு ??  அப்பனை மாதிரியே மறைஞ்சு  ஓடுறா ” எள்ளலுடன் கூறிய துரியனின் பார்வை  ஆதித்யாவின்  முகத்தில்  தெரியும் உணர்வுகளை  படிக்கும்  ஆர்வத்துடன்  ஆராய்ந்தது .

ஆனால் ஆதித்யா சக்கரவர்த்தி  ஒரு வார்த்தை கூட பேச வில்லை … கைகள் ரெண்டையும்  பின்னால் கட்டிக்கொண்டு உணர்வுகள் அற்ற விக்கிரகம் போல நின்றான் . இல்லை அப்படி காட்டிக்கொண்டான் ! அவனால் எதுவும் பேச முடியவில்லை … அவனை ஏதோ ஒன்று கட்டிப்போட்டது . அது துரியனின்  நட்பா !இல்லை அவன் வகிக்கும்  பொறுப்பா!  இதில் ஏதோ ஒன்றுக்கு கட்டுப்பட்டவன்  போல இறுக்கத்துடன்   நின்றான் .

” இப்போ என்ன சொல்ல போற ஆதி?? ” ஆதித்யாவின்  விழிகளை

 பார்த்தபடி தன் கன்னங்கள்  அதிர கேட்டான்   துரியன் .

” ஷி வில் பீ பக்  … அவள் திரும்பி வருவாள்  ” புயலை உள்ளடக்கிய ஆதித்யாவின் குரலில் தான் அத்தனை ஆத்திரம் .

***********************************

வெளிச்சம் வந்த திசையை நோக்கி நடந்தவள்  சில தூரத்திலே தான் வரவேண்டிய சாலையை அடைந்து விட … தப்பித்து செல்ல வாகனங்கள் ஏதும் வருகிறதா  என்று  சுற்றும் முற்றும் பார்த்தாள் … கண்ணுக்கு தெரிந்த வரை எந்த வாகனமும் வராததை எண்ணி கவலையுற்றவள்  … ” அவங்க நம்மளை தேடி வர்றதுக்குள்ள  நாம இங்க இருந்து கிளம்பணுமே , இப்போ என்ன பண்றது ?? ” மூச்சிரைக்க புலம்பியவள் மிகவும் சோர்வாக காணப்பட்டாள். அவர்கள் வந்தால் கூட எழுந்து ஓட உடம்பில் தெம்பில்லாமல்  …. இறைவன் மீது பாரத்தை போட்ட மது அப்படியே  மடிந்து சாலையில்  அமர்ந்தாள்.

வெகு நேரமாகியும்  வாகனங்கள் எதுவும் வராமல் போக கவலையுடன் இருந்தவளுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடித்தது போல அவளுக்கு எதிரே ஒரு கார் வருவது தெரிய …சட்டென்று  எழுந்தவள் ‘ கடவுளே ரொம்ப நன்றி … எப்படியோ தப்பிச்சிட்டேன்  ‘  என மகிழ்ந்தவள் வேகமாக காரின் முன்னால் நின்று தன் கைகை குறுக்கே நீட்டி வேகமாக ஆட்டினாள் . காரும் சில தூரம் தள்ளி நின்று பிரேக் போட்டு நின்றது .

வேகமாக காரின்  ஓட்டுநர்  சீட்டுக்கு அருகில் வந்து நின்றவள் ,’

” அண்ணா  என்னை காப்பாத்துங்க  …   இங்க இருந்து என்னை ஊருக்குள்ள கூட்டிட்டு போக முடியுமா ப்ளீஸ் ?” கெஞ்சி கேட்டாள் .

**********************************

வண்ணமயமான  விளக்குகள் … காதில் தேனாய் இழையும் இன்ஸ்ட்ருமென்ட்டல் இசை … மயக்கும்  நறுமணம் . இதை  எல்லாம் தாண்டி தன்  எதிரில் , பார்ப்பவர்களை வீழ்த்தும்  அழகுடன் இருக்கும் தன்   காதலி ஆர்த்தி  !   என்று  எப்பொழுதும்   போல ரம்மியமாய்  காட்சியளித்த இந்த  காஃபி ஷாப்  இன்று  மட்டும் ஏனோ இளமாறனை   ஈர்க்க வில்லை .

முகத்தில் பதற்றத்துடன்  அமர்ந்திருந்த  இளமாறனின்  கரங்களை ஆதரவாக பிடித்த  ஆர்த்தி ,

” என்னாச்சு இளா ஏன் ஒரு மாதிரியா இருக்க …?? வந்ததில் இருந்து எதுவுமே பேசலை … அவசரமா  வர சொன்ன … நானும் வந்துட்டேன் … என்னன்னு சொல்லாம இப்படி அமைதியா உட்கார்ந்திருந்தா நான் என்னனு நினைக்கிறது … ப்ளீஸ் பா சொல்லு  ” என அவளது அழகு கொவ்வை இதழ்கள் இதோடு மூன்று தடவைக்கு  மேல் கெஞ்சிவிட்டது  … ஆனால் அவனோ பதில் சொல்லாமல்  ஒருவித தவிப்புடன் அப்படியே அமர்ந்திருந்தான் .

” இளா ப்ளீஸ் யுவர் சைலன்ஸ்  இஸ் கில்லிங் மீ மேன் …. உன் அமைதி என்னை கொல்கிறது “இம்முறை தன்  கொஞ்சும் மீன் விழிகளை  உருட்டியபடி  கொஞ்சம்  கோபமாகவே கேட்டாள் .

” அது ஆர்த்தி எப்படி ஆரம்பிக்கிறதுன்னு ” என இளமாறன் தயங்கிக்கொண்டிருக்க ,

” அவன் சொல்ல மாட்டான் , நானே சொல்றேன்  ” என்ற குரல் வந்த திசை பக்கம்  திரும்பியவள்  … அந்த குரலுக்கு சொந்தக்காரனை  யார் என்று தெரியாமல்  பார்க்க , அவளது பார்வைக்கான  அர்த்தத்தை  உணர்ந்தவன்  … இளாவுக்கு அருகே வந்து அமர்ந்து ,

” ஐயம் அர்ஜுன் … இளாவோட கசின்  … உங்களுக்கு என்னை தெரியாது நான் உங்களை இளா கூட பார்த்திருக்கேன் ” என  தன் கரம் நீட்டி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்  அர்ஜுன் .

” ஓ ஹாய் … சொல்லிருக்கான் ” – என்று சிற்பம் போல சுருக்கமாய்  சிரித்தாள்  ஆர்த்தி    .

” ஹாய் … ஆர்த்தி  நீங்க இங்க ஏன் வந்திருக்கீங்கன்னு  உங்களுக்கு தெரியுமா?? “

” இளா பார்க்கணும்ன்னு சொன்னான் அதான் வந்திருக்கேன் ….இது நாங்க எப்பொழுதும்  வர்ற காஃபி ஷாப் தான்  ” தன் தோள்களை குலுக்கியபடி  கூறினாள் .

”  ஆர்த்தி உங்களுக்கு மது காணாம போன விஷயம் பத்தி தெரியுமா?? “

” ம்ம்ம் ஆமா நேத்து தான் சொன்னான் … நான் கூட என் அண்ணன் கிட்ட சொல்லி ஹெல்ப் பண்ணட்டுமான்னு கேட்டேன் … பட் ஹீ ரெப்யூஸ்ட் (அவன் நிராகரித்துவிட்டான் )… மது  பத்தி ஏதும் தெரிஞ்சிதா?? “

” நோ … தேடிட்டே இருக்கேன் பட் கண்டிப்பா கண்டு புடிச்சிருவேன் ” உறுதியுடன்  அர்ஜுன் கூறினான் .

” கவலை படாதீங்க அவங்க கண்டிப்பா கிடைச்சிருவாங்க “

” தேங்க யு ஆர்த்தி … ஆர்த்தி  உங்க கிட்ட மது கிட்ணப் ஆனதை பத்தி  கொஞ்சம் பேசணும் .”

” என்கிட்ட அதை பத்தி என்ன பேசணும் ” ஆர்த்தி குழப்பத்துடன் இளமாறனை பார்த்தாள் . அவனோ தலை கவிழ்ந்தபடி அமர்ந்திருந்தான்  .

” சொல்றேன் … மது கிட்ணப்க்கும்  உங்க அண்ணனுக்கும் சம்பந்தம்  இருக்கும்ன்னு  நான் நினைக்கிறன் … மது காணாம போனதில் இருந்து  உங்க அண்ணனையும்  காணும் … உன் அண்ணன் …. அவர் பார்க்கிற தொழில்,   அதை தாண்டி அவருடைய இந்த  திடீர் தலை மறைவு  இதெல்லாம்  கேட்கவே ஃப்பிஷியா இல்லை ” – உங்க அண்ணன் ஒரு கடத்தல்காரன்…. அவன் பண்ற தொழில் தப்பான தொழில் … அவன் தான் மதுவை கடத்திருக்கான் .. இப்போ பயந்து தலைமறைவா  இருக்கான் என்பதை  பட்டென்று போட்டு உடைத்தான் அர்ஜுன் . அதை கேட்ட மறுநொடி  விருட்டென்று  தன் இருக்கையில் இருந்து எழுந்தாள் ஆர்த்தி .

” ஹவ் டேர் யு ! டாக்கிங்  ரப்பிஷ் அபவுட் மை பிரதர் டூ  மீ ” – என்கிட்டையே  என் அண்ணனை பத்தி தப்பா பேச உனக்கு எவ்வளவு தையிரியம்  இருக்கணும்  என்று  ஆவேசப்பட்டவளின்  அதரங்கள்  ஆத்திரத்தில்  நடுங்கியது.

” ஆர்த்தி ப்ளீஸ் ” காதலியின்  கரம் பிடித்து ஆசுவாசப்படுத்தினான்  இளமாறன் .

” ஷட் அப் ” என்று அவனது கையை உதறியவள் … இளமாறனை ஒரு பார்வை பார்த்தவள் … அவன்  எதுவும் பேசாமல் இருக்கவும் ,” வாவ் ! உன் தம்பிய கண்டிக்காம  என்னை அடக்க பாக்குற ” என்று கூறி சற்று நிறுத்தியவள் மேலும் தொடர்ந்து ,

” என் அண்ணன்  யாருன்னு நீ  எனக்கு சொல்ல வேண்டாம் …. அவன் ஒரு பெர்பக்ட் ஜென்டில்மேன் … அவன் அழகுக்கும் ஸ்டேட்டஸ்கும் ஆயிரம் பொண்ணுங்க நீ நான்ன்னு போட்டி போடுறாங்க … அவன் ஏன்  மதுவை கடத்தணும் … அவன் என்ன பிஸ்னஸ் பண்ணினா உனக்கு என்ன ??  … மதுவை காணும்ன்னா  எங்கே தொலைச்சியோ  அங்க போய் தேடு … அதை விட்டுட்டு  தேவை இல்லாம பேசாத ..  அப்புறம் அர்ஜுன் ஏன் இப்படி இருக்க கூடாது ஒருவேளை மதுவுக்கு  உன்னை புடிக்காம என் அண்ணனை  புடிச்சிருந்து  அவளே விருப்பப்பட்டு என் அண்ணன் கூட போயிருந்தா ?? ஏதுக்கும் கொஞ்சம் இப்படியும் யோசிச்சு பாரு   ” என்று வேண்டுமென்றே  அர்ஜுனை   சீண்டியவள் …அவனை  கடுமையாக எச்சரித்தாள் .

” ஆர்த்தி என்ன பேச்சு இதெல்லாம் ” என்ற  இளமாறனை இறுக்கமாக முறைத்தவள் ,

“ம்ம்ம் உன் தங்கிச்சிய  பத்தி நான் தப்பா  பேசினா

 எவ்வளவு கோபம் வருது , அப்படி தான்  என் அண்ணனை பத்தி இவன் பேசும் பொழுது எனக்கும் கோபம் வந்திச்சு  … இளா , இனிமே என் முகத்திலையே  முழிச்சிறாத    ” என்றவள்  சீற்றத்துடன் அங்கிருந்து சென்றாள்.

அர்ஜுன் சங்கடத்துடன்  இளமாறனிடம் மன்னிப்பு கேட்க அவனோ ” என்னடா இது இப்படியா பேசுவ .. அவ கிட்ட பார்த்து  பேசுன்னு  சொன்னேன்ல…   ”  என்று தன் நெற்றியை நீவியபடி  அப்படியே உட்கார்ந்தான்.

-தொடரும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!