நான் அவன் இல்லை 14
வேகமாக காரின் ஓட்டுநர் சீட்டுக்கு அருகில் வந்து நின்ற மதுமதி ,
” அண்ணா என்னை காப்பாத்துங்க … இங்க இருந்து என்னை ஊருக்குள்ள கூட்டிட்டு போக முடியுமா ப்ளீஸ் ?” அவர்களிடம் மாட்டிக்கொள்ள கூடாது என்கிற பதைபதைப்புடன் அக்கம் பக்கம் பார்த்தபடி கெஞ்சி கேட்டாள் .
” மேடம் அதுக்கு முன்னாடி இந்த போனை கொஞ்சம் பாருங்க ” என அவர் தன் கைபேசியை அவளிடம் நீட்ட … ஒருவித தயக்கத்துடன் அவரை பார்த்தவள் … இதயம் பயத்தில் ‘ பட படக்க ‘ கைபேசியை வாங்கியவள் அதில் இருந்த வீடியோ பதிவை பார்த்தாள் .
அவ்வளவு தான் அவளது கரம் தானாக நடுங்கியது ….. அவளது ஒரே தோழி சந்தியா மருத்துவமனையில் தலையில் கட்டுடன் கண் மூடி படுத்திருக்க அவள் அருகே மருத்துவர் உடையில் ஆதித்யாவின் ஆள் ஒருவன் சந்தியாவை குறிவைத்தபடி தன் கையில் இருக்கும் துப்பாக்கியை உயர்த்தி பிடித்து கொண்டு நிற்கும் படியான லைவ் வீடியோ காட்சி கண்டு அரண்டு போனவள், கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக இறங்கியது .
அப்பொழுது காரின் பின் சீட்டில் இருந்து இறங்கிய வீரா மதுவின் கையில் இருந்த அலைபேசியை வாங்கிவிட்டு
” வண்டியில ஏறுங்க மது ” என்று தன்மையுடன் கூறினான் .
ஆனால் ஆதித்யா மீதுள்ள ஆவேசத்தில் வீராவின் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அடித்தவள்,
” என் ஃப்ரண்ட என்னடா பண்ணுனீங்க ” வீராவின் சட்டையை இறுக்கமாக பிடித்து உலுக்கிய படி கதறி அழுதாள் . ஆனால் அவனோ அதற்கு எந்த உணர்ச்சியும் காட்டாமல் அவள் கொடுத்த அடியை வாங்கி கொண்டு இயந்திரம் போல அசையாமல் நின்றான் ,
‘ உங்களுக்கு வேற ஆப்ஷன் இல்லை … காரின் உள்ளே ஏறு ‘ என்பதை சொல்லாமல் வெறும் காரின் கதவை மட்டும் திறக்க … மதியின் கண்கள் கோபத்தில் சிவந்தது.
அழுது அழுது கண்ணீர் வற்றி போக சோர்ந்து அமர்ந்திருந்த மதியை பார்க்க பார்க்க வீராவுக்கு சிறு வருத்தம் எழுந்தாலும் …தயாளனின் வாரிசை அவனால் சந்தேகப்படாமல் இருக்க முடியவில்லை .
கார் மறுபடியும் கோட்டைக்குள் சீறி பாய்ந்தது .
” பாய் வீ ரீச்ட் …”- நாங்க வந்துட்டோம் என்றான் வீரா .
” இதோ வரோம் ” வீராவிடம் கத்தரித்து பேசிவிட்டு அழைப்பை துண்டித்த துரியனின் இதழ்கள் இகழ்ச்சியில் வளைந்தன .
” வா ஆதித்யா … ” என்று மேஜை மேல் இருந்த ஆதித்யாவின் துப்பாக்கியை தன் முதுகில் சொருகிய துரியன் …. ஆதித்யாவின் கரங்களை வலுக்கட்டாயமாக பிடித்து கொண்டு பேஸ்மெண்டில் மதுவை அடைத்து வைத்திருக்கும், சவுண்ட் ப்ரூஃப் அறைக்கு சென்றான்.
” என்னை ஏன் இப்படி கொடுமை படுத்துறீங்க ” இருட்டறையில் கைகள் ரெண்டும் முதுகுக்கு பின்னால் சேர்த்து வைத்து கட்டப்பட்டிருக்க …. தன் இயலாமையை எண்ணி கோபத்தில் கத்தினாள் .
“மிகவும் சிரமப்பட்டு தப்பித்து இறுதியில் இக்கயவர்களிடமே வந்து மாட்டிக்கொண்டோமே” தன் விதியை நொந்தவள் “ஆ …” ஆத்திரத்தில் அகோரமாக அலறினாள் .
” கடவுளே ப்ளீஸ் ஹெல்ப் மீ ” தன்னால் முடிந்த அளவு கதறினாள் … வேடனிடம் அகப்பட்டுக்கொண்ட புறாவின் இறக்கை போல் அவள் இதயம் அடித்துக்கொண்டது . பயத்தில் பைத்தியம் பிடித்தது போல கத்தி கூச்சலிட்டாள் .
” டக்..டக் ” என்னும் பூட்ஸ் காலின் ஓசை கதவுக்கு அருகே கேட்டதும் அரக்கர்களின் வருகையை அவளது மூளை அவளுக்கு உணர்த்த பயத்தில் மதுமதியின் முதுகுத்தண்டு சில்லிட்டது . கத்தி கத்தி நா உலர்ந்து போக … சில நொடிகளிலே வேகமாக திறக்கப்பட்ட கதவு ‘ டமார் ‘ என்னும் சத்தத்துடன் சுவற்றில் சென்று மோதியது .
” ஆ ” திடீர் அதிர்வில் மிரண்டு அலறியவள் , முகத்தில் பட்ட திடீர் ஒளியில் தன் கண்கள் கூச அப்படியே தரையில் விழுந்தாள் .
அதி வேகமான நடையில் துரியன் ஜித்தேரி … ஆதித்யா சக்கரவர்த்தியுடன் உள்ளே வர , அவர்களை தொடர்ந்து வந்த இருவரில் நாகா கதவுக்கு தாளிட்டுவிட்டு கதவின் அருகே நின்றுகொண்டான். .பயப்பந்து அவளது நெஞ்சை அடைத்தது .
தன்னை வேட்டையாடி தன் சதையை கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து திங்கும் கொடூர பார்வையில் அழுத்தமான காலடிகளுடன் தன்னை நோக்கி நடந்து வந்த துரியனை கண்டதும் அவளது கை கால்கள் படபடவென நடுங்கியது .
துரியனை பார்க்கவே பயந்தவள் நெஞ்சில் எஞ்சி இருந்த நம்பிக்கையில் தன் பார்வையை உயர்த்தி ஆதித்யாவின் முகத்தை பார்த்தாள் .
மறந்தும் கூட அவன் விழிகள் இவளை சந்திக்க வில்லை … சிலையென நின்றவனின் விழியில் துளியும் இரக்கம் இல்லை … இதுவரை அவள் பார்த்த ஆதித்யா இவன் அல்ல … இவன் யாரோ ?? இவன் அரக்கன் ! இரக்கமற்ற கொலைகாரன் ! மதியின் மூளை ஆணி அடித்தது போல அவளது மனத்திற்கு உணர்த்தியது .
மதியின் இறுதி நம்பிக்கையும் உடைந்து போக இதயம் கனத்து வலித்தது .
அவளை சுற்றி இருந்த காற்றில் கூட மரணத்தின் வாசனையை உணர்ந்தவளுக்கு ஈரக்கொலை நடுங்கியது .
” எவ்வளவு தைரியம் இருந்தா தப்பிச்சு போவ … யார் சொல்லி ஆதி கூட பழகின ” அடி குரலில் கர்ஜித்தான் துரியன் .
துரியனின் கேள்வி புரிந்த மறுநிமிடம் மறுப்பாக தலையை குறுக்கே ஆட்டியவள் ” யார் சொல்லியும் நான் அவர் கூட பழகலை “அவசரமாக மறுத்தவள் … ஆதித்யாவை பார்த்து அழுதபடி … தலையை வேகமாக ஆட்டினாள் .
” பொ….ய் … பொய் சொல்ற, அதுவும் என்கிட்ட … உன்னை ” திரண்டெழுந்த ஆத்திரத்தில் மதியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை கொடுத்தான் துரியன் .
அவன் அடித்த வேகத்தில் தலை சுவற்றில் மோதி ரத்தம் வடிய தரையில் விழுந்தாள். வலியிலும் அச்சத்திலும் வார்த்தைகள் வாயினின்று வெடித்து … “ஆ ” என சத்தமாக அழுதாள் .
தரையில் கிடந்தவளை வீரா கைத்தாங்கலாக பிடித்து தூக்கி நிறுத்தினான் .நீரற்ற மலர போல வதனம் வாடி இருந்தது … இதழ்களோ வறண்ட பாலைவனம் போல வெடிப்புடன் காணப்பட்டது …” ப்ளீஸ் … நா … ஏது…ம் ” வார்த்தைகள் தொண்டை குழியில் சிக்கிக்கொள்ள … பேச முடியாமல் திணறினாள் .
” ஏய் உன் அப்பா எங்க இருக்கான் ??” – இதை கேட்டதும் அவள் உள்ளம் ஊமையாய் அழுதது .
” சொல்லு ம்ம்ம் ” அதட்டினான் துரியன் .
” அப்பா செத்து போய்ட்டாரு ” அதற்கு மேல் அவளால் ஒரு வார்த்தை பேச முடியவில்லை … துரியனின் இரும்பு கரங்கள் அவளது கழுத்தை இறுக்கமாக நெரித்திருந்தது … அவ்வளவு நெருக்கத்தில் அவனது சிவந்த விழிகளை பார்த்து அஞ்சி நடுங்கினாள் . இறுக்கமாய் அவன் பிடித்தத்தில் அவளது மூச்சு குழாய் அடைத்து கொள்ள …. சுவாசத்திற்காக யாசித்த அவள் தேகம் … தரையில் விழுந்து துடிக்கும் மீன் குட்டி போல அவனது கரங்களுக்குள் மாட்டிக்கொண்டு துடித்தது … முகமெல்லாம் ரத்தம் இன்றி வெளிற ஆரம்பித்தது .
‘ ஆதி அவ சாக போறா ஏதாவது செய் ‘என்றான் ஆதித்யாவுக்குள் இருந்த மனிதன் …’ நோ டோன்ட் பீ வீக் … அவ பொய் சொல்றா ஜஸ்ட் கில் ஹெர்… அவள் உன்னை வீழ்த்த பார்க்கிறாள் … அவளிடம் உண்மை இல்லை … கொலை செய் ‘ உறுமினான் அவனுக்குள் இருக்கும் மிருகம் . மனிதனும் மிருகமும் முட்டி மோதிக்கொள்ள … ஆதித்யாவின் இதயம் யுத்த களமானது . உணர்ச்சி குவியலுக்குள் சிக்கிக்கொண்டு தவித்த ஆதித்யா … மதியின் பரிதாபமான நிலை கண்டு மிகவும் வருந்தினான் .
‘ இதற்கு மேல் கொஞ்சம் அழுத்தினாலும் அவள் உயிர் இருக்காது … ‘ ஆதியின் மூளை எச்சரிக்கை விடுக்க … சட்டென்று துரியனின் முதுகில் சொருகி இருந்த தனது துப்பாக்கியை உருவிய ஆதித்யா … துரியனை விலக்கிவிட்டு ,
” நீ ஏன் கஷ்டப்படுற துரியா …. நானே இவ கதையை முடிக்கிறேன் ” என அவளை நெருங்கினான் .
துரியனின் பிடி தளர்த்தப்பட்டதும் …. தரையில் சரிந்த மதுமதி … தொண்டை வறண்டு போக பயங்கரமாக இருமினாள்… தன் கழுத்தை பிடித்துக்கொண்டு சுற்றியிருக்கும் மொத்த காற்றையும் இழுத்துக்கொள்ளும் வேகத்தில் ஆழமாக மூச்செடுத்தவள் … சில மணித்துளி கடந்த பிறகே மெல்ல மெல்ல தன் இயல்பு நிலைக்கு திரும்பினாள் .
மதுமதியின் மிரண்ட விழியும் ஆதித்யாவின் மிரட்டும் விழியும் சில நொடிகள் சந்தித்தன ….பெண்ணின் விழிகள் எதையோ அவனிடம் யாசித்தது .. ஏதோ ஒன்று அவனது கட்டுப்பாட்டை உடைத்து கொண்டு அவனிடம் இருந்து நழுவி சென்றது … மிகவும் பலவீனமாக உணர்ந்தான் .
” ஏய் எந்திரிடி ” ஆதித்யாவை ஒதுக்கிவிட்டு அவளை நெருங்கிய துரியன்,
” கடைசியா ஒரு வாய்ப்பு கொடுக்குறேன் … எங்க உன் அப்பா ?” – துரியன் .
” எவ்வளவு கேட்டாலும் ஒரே பதில் தான் … எனக்கு யாரும் இல்லை நான் ஒரு அனாதை” ஆதித்யா உட்பட அங்கிருந்த அனைவர்க்கும் அவளது பதில் கோபத்தை உண்டாக்கியது .
“அப்போ உன் அப்பன் போன இடத்துக்கே போ ” என்ற துரியன் , ஆதித்யாவின் கையில் இருந்த துப்பாக்கியை வேகமாக பிடுங்கி மதியின் நெற்றியில் வைத்து அழுத்தினான் .
அவளது கண்கள் மௌனமாய் கண்ணீர் வடித்தது … தன் குடும்பத்தினரின் உருவத்தை தன் மனத்திற்குள் நிரப்பியவள் … இறுதியாக ஆதித்யாவை பார்த்தாள் .. அவள் படும் துன்பம் கண்டும் கரையாமல் மௌனமாய் நின்றான் . விரக்தியான பார்வையை அவன் மேல் சிந்தியவள் ‘ இனி அவ்வளவு தான்…. நாம சாகப்போகிறோம் ‘ என்று பயந்தவள் இதயம் தாறுமாறாய் துடிக்க .. அழுந்த கண்களை மூடிக்கொண்டாள் . அதன் பின் கடந்தது அனைத்துமே அவளுக்கு ‘ திக் திக் ‘ நிமிடங்கள் தான் .
**************************************************
அமாவாசை இரவு , வானிடம் இருந்து நிலவை பிரித்து … தன்னோடு வைத்துக்கொள்ள … நிலவு இல்லாமல் சோகத்தில் இருண்டு கிடக்கும் வானத்தை வெறித்த படி மொட்டை மாடியில் தன் விரல்களுக்கு இடையே இருந்த சிகரெட்டை ஐந்து நொடிக்கு ஒரு முறை தன் உதட்டில் வைத்து புகையை வெளியே தள்ளியபடி தன்னந்தனியாக நின்றுகொண்டிருந்தான் அர்ஜுன் . சுழலில் சிக்கிய படகு போல அவன் மனம் தத்தளித்தது … அணைத்து பிரச்சனைகளிலும் பொறுமையாக செயல்பட்டு வெற்றி பெறுபவனால் . மதுவின் விஷயத்தில் அப்படி பொறுமையாக செயல்பட முடியவில்லை . அனைத்திற்கும் கோபம் வந்தது .. அனைவரிடமும் எரிந்து விழுந்தான் . அப்படி தான் சற்று நேரத்திற்கு முன்பு இளமாறனுக்கும் அவனுக்கும் நடந்த வாக்குவாதத்தில் . வார்த்தைகள் தடிக்க … இருவரும் முட்டிக்கொண்டனர். அப்பொழுது அர்ஜுன் ஆதித்யா மீதுள்ள ஆத்திரத்தில் ஆர்த்தியை பற்றி தவறாய் பேச … கோபத்தில் இளமாறன் பதிலுக்கு அர்ஜுனை பார்த்து ,
“உனக்கு மட்டும் தான் மது மேல் அக்கறை இருக்கிற மாதிரி காட்டிக்காத … உன்னை மாதிரியே தான் நாங்களும் கவலையில இருக்கோம், ஆனா நாங்க யாரும் ஒருத்தரை ஒருத்தர் குத்தி காட்டல … மத்தவங்க மேல குற்றம் சுமத்தலை… ஏன் தெரியுமா ?? ஏன்னா எங்க மனசு முழுவதும் மது தான் இருக்கா, அவளுக்கு எதுவும் ஆகிற கூடாது என்பதை தாண்டி எங்களுக்கு வேற சிந்தனையே இல்லை …. ஆனா நீ ! உன் மனசு ! அதுல மொத்தமும் ஆதித்யா மட்டும் தான் இருக்கான் … மதுவை எப்படி கண்டு பிடிக்கணும் என்பதை விட .. ஆதித்யாவை எப்படி அரெஸ்ட் பண்ணலாம்ன்னு தான் நீ அதிகமா யோசிக்கிற … உனக்கு வெறி புடிச்சிருச்சு … பழிவாங்கணும் என்கிற வெறி … அதனால தான் ஆதித்யா ஆதித்யான்னு ஒரே வட்டத்துக்குள்ள சுத்திட்டு இருக்க … உன்னால வேற விதமா யோசிக்க முடியல …” தன் மனதில் உள்ளதை இளமாறன் படபடவென கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட … அவனது வார்த்தை அர்ஜுனின் மனதை வெகுவாய் தாக்கியது . புரியாததை புரியவைத்தது .
” நிஜமாகவே நான் ஆதித்யாவை பற்றி மட்டும் தான் யோசிக்கிறேனா … ??அதனால தான் மதுவை என்னால கண்டுபுடிக்க முடியலையா ” தன்னை தானே கேள்வி கேட்டவன் … கண்களை மூடியபடி நிற்க ,
” தம் அடிச்சா எல்லாம் சரியாகிடுமா ?? ” என அர்ஜுனின் உதட்டில் இருந்த சிகரெட்டை வெடுக்கென்று எடுத்து , அவனது கையில் சூடான காஃபி கப்பை திணித்தபடி அவனுக்கு எதிரே தன் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு நின்றாள் ஜுவாலா.
யாரையும் திரும்பி பார்க்க வைக்கும் அழகி … ஆனால் பார்த்து ரசிக்க வேண்டியவனோ அந்த வானத்தை பார்த்தபடி நின்றிருந்தான் .
” குறை சொல்ல வந்துட்டு ஏன் பேசம இருக்க ?? என்ன சொல்லணுமோ சொல்லு ” என்றான் அந்த இருண்ட வானத்தை பார்த்தபடி .
” நான் உன்னை நம்புறேன் அர்ஜுன் ” தீர்க்கமாக கூறினாள் … அவளது பதிலில் வியந்தவனின் பார்வை இப்பொழுது இருளை விடுத்து … தன் எதிரிலே இருக்கும் ஜுவாலாவின் முகத்தை பார்த்தது ….. அவளது முகம் தீயின் ஜுவாலை போல இருளில் பிரகாசமாக இருந்தது … இருவரின் விழிகளும் சந்தித்தன .. சில நொடிகள் சந்திப்பு தான் ஆனால் ஜுவாலாவின் மனதில் மின்னல் வெட்டியது .
” தேங்க் யு ” மெலிதாய் புன்னகைத்தபடி அவள் கொடுத்த காஃபியை சுவைத்தான் … வலுக்கட்டாயமாக வந்த புன்னகையில் அழகு இருந்தது ஆனால் உயிர் இல்லை . அவளுக்குள் வலித்தது .
” எல்லாம் சரியாகிரும் … உன்கிட்ட புடிச்சதே உன் பொறுமை தான் , அதை இழந்துராத அர்ஜுன் …. பொறுமையா தேடு மது கண்டிப்பா கிடைப்பா” என்ற ஜுவாலா காலி கப்பை எடுத்து கொண்டு அங்கிருந்து செல்ல … அர்ஜுனின் மனம் சிந்தனையில் மூழ்கியது .
*****************************************************
சில நொடிகள் மதுவையும் ஆதித்யாவையும் வெறித்து பார்த்த துரியன் … மதுவை குறிவைத்திருந்த துப்பாக்கியை கீழே இறக்கி ” நோ … நான் சுட மாட்டேன் …இவளை நான் கொலை பண்ணினா என் எதிரியை பழிவாங்குன சந்தோசம் எனக்கு கிடைக்கும் …ஆனா உன்னை … உன் நட்பை நான் நம்பாத மாதிரி ஆகிடும் … என் எதிரியை பழிவாங்குறதை விட எனக்கு நம்ம நட்பு தான் முக்கியம் … என்னை , நம்ம ஜித்தேறிய பாதிக்கிற மாதிரி நீ எதுவும் செய்ய மாட்டன்னு எனக்கு தெரியும் … உன்னை நான் நம்புறேன் ஆதி … பட் ஷீ இஸ் டேஞ்சரஸ் ” என்ற துரியன் வேகமாக அங்கிருந்து சென்றுவிட … ஆதித்யா உட்பட மூவரும் துரியனின் திடீர் மனமாற்றத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் உறைந்திருந்தனர் .
-தொடரும்