Naan Avan Illai 16

download (3)-54e11ee0

நான் அவன் இல்லை 16

” போ …. ” உச்சஸ்தாதியில் அலறிய மதுமதியின் குரலில் அதிர்ந்தது அரண்மனை மட்டுமல்ல  , ஆதித்யாவும்  தான் .

” மதி !” என்ற  ஆதித்யா,  மறுநொடி    அவள் இருக்கும் தன் அறையை நோக்கி ஓடினான்.

மதியின் அலறலில் ஏற்பட்ட பதற்றத்தால்   மின்தூக்கி மறந்து வேகமாக படிக்கட்டுகளில் ஏறி,  தன் அறைக்கு விரைந்த ஆதித்யா   . உள்ளே போக பயந்து கொண்டு ,  வாசலில் தங்களின் கைகளை பிசைந்தபடி நின்ற  வேலையாட்களிடம்  ,

” என்னாச்சு  ??இங்க என்ன பண்றீங்க ??”  கண்டிக்கும்  குரலில்  கேட்டான் .

“அவங்க கிட்ட ஏன் கேட்குறீங்க .. என்கிட்ட கேளுங்க “என  நெற்றியில்   வழியும் இரத்தத்தை  …. மேலும் வழிய விடாமல்  ஒரு துணியால் அழுத்தி பிடித்தபடி  அவன் எதிரே வந்தாள் தாரா .

“மதி  எப்படி இருக்கா … ??யார் இப்படி பண்ணினது …. ?? செக்யூரிட்டி எல்லாரும் எங்க ??  ” –  தாராவின் நிலையை கண்டதும் ஆதித்யாவுக்கு  மதியின் அலறல் நினைவுக்கு வர ,மதிக்கு என்னாயிற்றோ என்று பதறியவன் , தாராவிடன் அவளை பற்றி விசாரித்தான்   … ஆதனால்  ஆதித்யா மீது    ஆத்திரம் கொண்ட தாரா ,

” ஆதித்யா  …  என்னை கீழ தள்ளிவிட்டதே  மதி தான் … என்னை மட்டும் இல்லை இதோ ” என்று கையில் கர்சீப்பை கட்டிக்கொண்டு நிற்கும் வீராவை காட்டி “என்னை காப்பாத்த வந்த   வீராவோட கையையும்  கத்தியால கிழிச்சிட்டா ” ஆதங்கத்தில்  தன் உதடுகள் துடிக்க கூறினாள் தாரா .

” வாட் அவளா ! ? நீங்க அவளை என்ன பண்ணுனீங்க …?? ” ஆதித்யாவின் பார்வை வீராவை ஆழ துளைத்தது . உடனே பதறிய வீரா ,

” ஆதி  … நான் எதுவும் பண்ணல … தாரா அவளுக்கு  ட்ரீட்மென்ட் கொடுக்க ரூம்க்கு போயிருக்கா , தாராவை கிட்டவே வர விடாம , ரகளை பண்ணி கீழ  புடிச்சு  மது தான்  தள்ளிருக்கா …அந்த வழியா நான் ஒரு வேலையா  போனேன் அப்போ உன்  ரூம்ல இருந்து சத்தம் கேட்டு உள்ள வந்து பார்த்தேன்   … தாரா தலையில அடிபட்டு கீழ கிடந்தா  .. மதுகிட்ட என்னாச்சுன்னு தான் கேட்டேன் … திடிர்னு பழம் வெட்ட  வச்சிருந்த கத்தியை எடுத்து என் கைய கிழிச்சிட்டா  … கிட்ட போனா’ என்னை மன்னிச்சிரு நான் வேணும்ன்னு பண்ணல  போ போன்னு’ கத்துறா … என்னாச்சுன்னு தெரியல? ஆனா ஆதி,  அவ ரொம்ப பயந்து போய் இருக்கா  “

” சரி நீங்க உடனே போய் க்ளீன் பண்ணி ட்ரெஸிங் போட்ருங்க …நான் மதியை  பார்த்துக்கறேன் ” என்ற ஆதித்யா தன் அறைக்குள் நுழையவும்  , அவனை தடுத்த தாரா,

 ” ஆதி … அவ சைக்கோ மாதிரி நடந்துகிறா … கையில கத்தி வச்சிருக்கா …  நீங்க உள்ள போகாதீங்க ….. உங்களை ஏதாவது செஞ்சிர போறா “

” நான் பார்த்துகிறேன் தாரா  … ஐ கேன் ஹண்டில்  ஹெர் …” – என்னால   அவளை சமாளிக்க முடியும் என்றவன் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான் .

‘தடதடவென’ ஆடும் தன் கால்கள் இரண்டையும் தன்  நடுங்கும்  கரங்களால்  வளைத்து பிடித்து  …முழங்காலுக்குள் தன் முகத்தை புதைத்து கொண்டு  ….படுக்கையில்  அரண்டு  போய்  அமர்ந்திருந்த   மதியை கண்டதும் சில நொடிகள் அறைவாசலிலே  நின்றுவிட்டான் ஆதித்யா .

அவனது மனதில் ஏதேதோ உணர்வுகள் …. போராட்டங்கள் … ஒருவித குற்ற உணர்ச்சி …இன்னதென்று அவனால் வரையறுக்க  முடியவில்லை.

ஓரிரு நிமிடங்கள் கழித்து உள்ளே நுழைந்த ஆதி  … மதியிடம் நெருங்க  அவளிடம் இருந்து வெளிப்பட்ட விசும்பல் சத்தம் அவனை மேலும் சங்கடப்படுத்தியது.

ஆதித்யாவின் கை தானாக அவளது சிகையை தொட்டு தடவியது . இறுக்கி  பிடித்தும்  தட  தடவென   நடுங்கிய அவளது  மென்கரத்தை     மெதுவாக வருடினான் . நெஞ்சுக்குழிக்குள்  ஏதோ ஒன்று அழுத்தியது … கத்த வேண்டும் போல் இருந்தது , ஆனால் அடக்கிக் கொண்டான் .

கயிறால்  இறுக்கமாக கட்டப்பட்டிருந்த மணிக்கட்டில்  சதை கிழிந்து காய்ந்திருந்த  ரத்த துளிகளை  கண்டதும் அடிவயிற்றில் இருந்து எழுந்து வந்த துக்கம் அவன் நெஞ்சை முழுவதுமாக  ஆக்கிரமித்தது .மெதுவாய் அவளது கரத்தை பிடித்து , காயம் பட்ட அவளது கையில் அழுத்தமாக தன்  இதழ் பதித்தான் . அவனது தொண்டைக்குழி அடைத்தது . அவளது தளர்ந்த மென் கரத்தை தனது  வலிய கரங்களுகுள்ளே பாதுகாப்பாக  வைத்து கொண்டான் .  அவளுடைய காயம் ..அவளுடைய வலி …அவளுடைய துயரம் அனைத்தும் ஆதித்யாவை  பெரிதும் பாதித்தது .

சில நிமிடங்கள் கண்களை மூடி  தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவன்  தன் கண்களை திறந்த பொழுது …மதியின் சோர்வான    பார்வையை சந்தித்தான். அவளது பார்வை அவனை கேள்வி கேட்டது … அவன் மீது குற்றம் சுமத்தியது … சட்டென்று  மனம் கனத்து போக ஒருவித வலியுடன்  அவளை பார்த்தவன் ,

” எப்படி இருக்க மதி ?? ” என்று முணுமுணுப்புடன் கேட்டான் .

அவளது கண்களில் தெரிந்த தளர்ந்த  பார்வை இப்பொழுது அக்னி பார்வையாக மாறியது ,

” இன்னும் செத்துபோல “வெறுப்புடன்  அவனை பார்த்தாள் …. அவளது வெறுப்பு கலந்த அக்னி  பார்வை அவனது மனதை பொசுக்கியது .

அவன் உடல் விறைத்தது … தடித்த  கீழ  உதடுகளை   பற்களால் அழுத்தி மூடினான் . சில நொடிகள் எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தவன் …. அவளது கரங்களை இன்னும் அழுத்தமாக பிடித்துக்கொண்டு,

”  நான் இருக்கேன்  மதி …. என்னை நம்பு  ” என்றான் .

” மாட்டேன் …. நா ….நம்..பவே ….மாட்டே..ன் …” தன் அருகில் இருந்த கத்தியை அவன் முகத்திற்கு எதிரே நீட்டி கடுங்கோபத்துடன்  கத்தினாள் .

” மதி … கத்திய கீழ போடு … நீ நல்லா இருக்க , உனக்கு ஒன்னும் ஆகாது, என்னை   நம்பு ”  அவளை அமைதி படுத்த முயற்சி செய்தான் .

” நா … நம்ப … மாட்டேன் … நான் சாக போறேன் … என்னை  நீங்க எல்லாரும் கொலை பண்ண போறீங்க ” வெறிபிடித்தது போல ஆக்ரோஷமாக  கதறினாள்  .

” மதி ” ஆதித்யா மதியை நெருங்க முயன்றான் .

“ஏய் … போ … கிட்ட வராத ” கத்தியை நீட்டி எச்சரித்த படி பின்னால் சென்றாள்.

” மதி … நான் சொல்றதை கொஞ்சம் கேளு … நீயே உன்னை பாரு,  நீ உயிரோட தான் இருக்க … நான் உன்னை காயப்படுத்த வரல ” மீண்டும்  அவளை நெருங்கினான் .

“வராத … யு   ப்ளடி  கில்லர்  வெளிய போடா ” அகோரமாக கத்தியபடி … கண்ணில் பட்டத்தை எல்லாம் தூக்கி அவன் மீது எறிந்தாள் . கையில் கிடைத்ததை தூக்கி அவன் மீது  அடித்து ரகளை செய்தாள்…. தடுக்காமல் வாங்கிக்கொண்டான் … ஆனால்  அவளை விட்டு அவன் எங்கும் செல்ல வில்லை  .

” வெளிய போ இல்லைனா  நான் என்னையே குத்திக்குவேன் ” என    தன்னை தான காயப்படுத்திக்கொள்ள அவள் துணிந்த மறுநொடி தன் இரும்பு கரங்களால் அவளை தன்னோடு  இறுக்கி பிடித்துக்கொண்ட  ஆதித்யா  , அவளது கையில் இருக்கும் கத்தியை பிடுங்க முயற்சிக்க அவளோ அவனிடம் இருந்து விடுபட போராடினாள் … கத்தினாள் கதறினாள் ….  அது முடியாது போகவும்  அவளது முகம் விகாரமாய்  மாறியது … இல்லை ஆதித்யா மீதுள்ள கோபம் ,ஏமாற்றம் , துக்கம் , உடல் வலி எல்லாம் அவளை அப்படி மாற்றியது .

ஆத்திரத்தில் வதனம் சிவந்துவிட ஆவேசத்தில் அவள் கையில் இருந்த கத்தி  அவனது நெஞ்சை குத்தி கீறியது .

” ஸ்ஸ் … ” கத்தினான் …பயங்கரமாக  வலித்தது … ஆனாலும் காட்டிகொள்ளாதவன்,   அவள் கையில் இருந்த கத்தியை எப்படியோ அவளுக்கு சேதாரம் வராமல்  வாங்கி கீழே எறிந்தான் .

” வேண்டாம் என்னை விட்டுடு ” என்று பின்னால் சென்று சுவற்றுடன் ஒன்றிக்கொண்டு கதறி அழுதாள் .

” மதி …. ” கோபத்தில் கத்தியவன்  … பயத்தில் புலம்பிக்கொண்டிருந்தவளை  கண்டு, சட்டென்று மனம் இளகி ” நான் உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன் ” பொறுமையாக கூறினான் .

” நான் சாக போறேன் …” – என்று பிதற்றியவளின் அழுகை அதிகமானது … ஆதித்யாவுக்கு ஒன்று புரியவில்லை .

” ஐயோ இரத்தம்   … உடம்பெல்லாம்  இரத்தம் என் மேல இருந்து கொட்டுது  …  இரத்தமா இருக்கு ” தன் கைகளை துடைத்தபடி கத்தினாள் .

” இரத்தம்  எல்லாம் இல்லை .. நல்லா பாரு மதி ”  அவள் அருகில் சென்று உண்மையை உணர்த்தினான் .

” இல்லை இரத்தம்   இருக்கு … என் தலையில  இருந்து வருது …. என் மேல ஸ்மெல்லா இருக்கு … போகவே மாட்டிக்குது ” அழுத்தி கைகளை துடைத்தபடி  கூறினாள் .

” கடவுளே ! நீ நல்லா தான் இருக்க மதி … உனக்கு ஒன்னும் ஆகலை “அவனது முயற்சிகள் பலன் அளிக்காமல் போனதும்,  கோபத்தில் கத்தினான் .

அவளோ விடமால் உளறிக்கொண்டிருந்தாள் … இப்படியே விட்டால் அவளுக்கு ஏதும் ஆகிவிட கூடும் என்று உணர்ந்தவன்,

” சரி ஓகே … நான்  எல்லாம் சரி பண்ணிறேன் … இப்போவே இதெல்லாத்தை  க்ளீன் பண்ணிரலாம்  … ” என்று  அவள் போகிலே சென்று அவளை சமாதானம்   செய்ய முனைந்தான் .

” இரத்தமா  கொட்டுது  … இரத்தமா  கொட்டுது ” திரும்ப திரும்ப உளறினாள் .

“ஆமா … பயப்படாத  இப்போவே க்ளீன் பண்ணிரலாம் ” என்று சொல்லிக்கொண்டே  மதியை தன் கையில் ஏந்திக்கொண்டு  குளியல்  அறைக்குள்  நுழைந்தவன் . அவளை கீழே இறக்கிவிட்டு  ஷவருக்கு  அருகே நிப்பாட்டினான் .

அவளோ ,” என்னை விடு  என்னை கொலை பண்ண போற … இரத்தம் ..ஆஆ … சுட போற ” என்று பிதற்றிக்கொண்டு அவனை அடிக்க ,  விடாப்பிடியாக அவளை தடுத்து தன் பிடிக்குள் கொண்டு  வந்தான் ஆதித்யா .

” விடு …. ” – வான் பிளக்க கத்தினாள் .

” ஷட் அப் ” –  பதிலுக்கு கத்தியபடியே  மதியை தன்னுடன் இணைத்து அணைத்துக்கொண்ட ஆதித்யா , அவளது கண்களை நேருக்கு நேராக பார்த்து ,

” நீ மட்டும் தனியா இல்லை பேபி  … நானும் உன் கூட இருக்கேன் … இதை சரி பண்ணிரலாம் … இரத்தம் எல்லாத்தையும் க்ளீன் பண்ணிரலாம்   ” – ஆசுவாசப்படுத்தினான் .

” இல்லை நீ என்னை  கொலை பண்ண போற  .!” – என்று அலறப் போனவளின் வாயை தன்  கரம் கொண்டு மூடியவன்… மெல்ல ஷவரை திறந்து தானும் அவளுடன் நனைந்தான் .

” இதோ இரத்தம் எல்லாம் போயிடும் ” என்று சொல்லி கொண்டே  மதியின்  முகம் , கை  ,காலெல்லாம்  மெதுவாய்   கொட்டும் நீரில் கழுவினான் …

” பார்த்தியா இரத்தம் எல்லாம் க்ளீன் பண்ணியாச்சு … இப்போ நீ சுத்தமா இருக்க … இப்போ உன் மேல இரத்தம் இல்லை ” என்றான்  .

” ஹாங் போய்டுச்சு …இரத்தம் எல்லாம் போய்டுச்சு ” தன் முகம்  மற்றும்  கைகள்  … எல்லாம் தடவி தடவி பார்த்துக்கொண்டாள் .

குளிர்ந்த நீர் ஆங்காங்கே  இருக்கும் காயத்தில் பட்டதும்  அவ்வப்பொழுது ” இஸ்ஸ்ஸ்ஸ் ஆஆ ஆஆ “-  வலியில் கத்தினாள் .

” சரியாகிடும்  பேபி ” நம்பிக்கை கூறினான் .

” இரத்தம் எல்லாம் போய்டுச்சு… நான் சாகலை ” சிறு குழந்தை போல மகிழ்ந்தவளின்   கண்களில் கண்ணீர் சுரந்தது .கொட்டும் நீருக்கு நடுவிலும் அவளது  விழிநீரை கண்டறிந்த ஆதித்யா  . மதியை இழுத்து தன்னோடு சேர்த்து இறுக்கி  அணைத்துக்கொண்டான் .

அவளது  கண்ணீர் அவனை  மீண்டும் பலவீனமாக்கியது … ” காம் டவுன் ….காம் டவுன் மதி … இனி இப்படி நடக்காது  ” –  அவள் தலையை  ஆறுதலாய் வருடி கொடுத்தான்…   அவளது கண்ணீர் மேலும் அதிகரித்தது . அவனுக்குள் இருக்க வேண்டிய ஏதோ ஒன்று அவனை விட்டு நழுவியது … மீண்டும் அதே பலவீனம் அவனை ஆட்கொண்டது .

தன்னிலை மறந்து சற்று நேரம் அவனது அணைப்பில் அடங்கிருந்தவள் … சில நொடிகள் கழித்து எதோ ஒன்று தன்  மனதை அழுத்த,   திடீரென்று அவனிடம் இருந்து விலகினாள் . குளிரில் நடுங்கியபடி நின்றவளை கண்டவன்  எதுவும் பேசாமல் ஷவரை அணைத்தான் .

பின்  குளியல் அறைக்குள் இருக்கும் கப்போர்டை திறந்து  ஒரு துண்டை எடுத்து அவளது உடம்பில் சுற்றி விட்டு,  இன்னொரு துண்டை எடுத்து அவளது கையில்  கொடுத்து ,

 ” ரொம்ப நேரம் ஈரத்துல நிக்காத ..காய்ச்சல் வரலாம் ” என்று கூறிவிட்டு வெளியே வந்தான் .

பின்பு சில நொடிகள் கழித்து  பாத்ரூமின் கதவை தட்டியவன் அவள் கையில் மாற்று உடையை கொடுத்து,

” இது என்னுடையது தான்,  இன்னைக்கு இதை  போட்டுக்கோ …  நாளைக்கு உன்னை நான் வெளிய கூட்டிட்டு போறேன் … உனக்கு வேண்டியதை வாங்கிக்கலாம்…  ” என்று அவள் முகம் பார்க்காமல் கூறியவன் அங்கிருந்து சென்றுவிட  … மதியும் அவன் கொடுத்ததை மறுக்காமல் வாங்கிக்கொண்டாள் .

சோர்ந்து போய் இருந்த உடம்பில் ஆங்காங்கே கடுமையாக வலித்தது … .தனது மெலிந்த உடலுக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத அவனது    டீ ஷர்ட்டையும்  … ட்ராக் பேண்ட்டையும்  அணிந்து  கொண்டவளின் தளர்ந்த கால்கள் நடக்க கூட வலுவில்லாமல் பின்னியது.மிகவும் சிரமப்பட்டு  வெளியே வந்தவள் …  மெதுவாக வந்து கட்டிலில் அமர்ந்தாள்.  

துரியன்  தன்னை  துப்பாக்கியால்  சுட வில்லை …. நாம் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்வதற்கே மதுமதிக்கு  இவ்வளவு நேரம் எடுத்தது … நாம் இன்னும் சாக வில்லை என்பதை எண்ணி மனம் களிகூர்ந்தாலும் , துரியன் தன்னை சுட வந்த பொழுதும் சரி … தன்னை காயப்படுத்தியபொழுதும்  சரி ஆதித்யா கொஞ்சம் கூட தடுக்காமல் சிலை போல நின்றதை எண்ணி பார்த்தவளின் மனம் மறுநொடி  பாறையை சுமந்தது போல கனத்தது .

எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம் !செய்துவிட்டு   இப்பொழுது நம்மிடம் வந்து  வேஷம் போட எவ்வளவு தைரியம்  இருக்க வேண்டும்  என்று அவள் உள்ளம் கோபத்தில் கொதித்துக்கொண்டிருக்க  , ஈரத்தலையும் வெற்று மார்புமாக கருப்பு நிற ட்ராக் பேண்டை  மற்றும் அணிந்து கொண்டு வெளியே வந்தான் ஆதித்யா .

அவனை கண்டதும் மது தன் தலையை தாழ்த்திக்கொள்ள …  அதை கண்டு கொண்ட ஆதித்யா … எதுவும் பேசாமல் தன் அறையில் இருக்கும் கப்போர்டை திறந்து முதலுதவி பெட்டியை எடுத்துக்கொண்டு மதியின்  அருகில் வந்து அமர்ந்து … அதில் இருந்து மருந்தை எடுத்துக்கொண்டு  அவளை  பார்த்தான்  … அவளும் அவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள் … இருவரின் பார்வையையும் ஒன்றை ஒன்று பின்னிக்கொண்டது . 

அவன் பார்வையில் தெரிந்த மென்மை … அவளது காயத்தை வருடியது  … அவன் தொடாமலே  உடம்பில் ஒருவித சிலிர்ப்பை உணர்ந்தாள் . சில நொடிகளுக்கு முன்னால் அவன் மீது  இருந்த கோபமெல்லாம் இப்பொழுது  காற்றில் உருத்தெரியாமல்  கரைந்து போக  …பெண்ணவள் அப்படியே உறைந்து  விட்டாள்.

அவளது நாடியை சற்று தூக்கி கழுத்தில் இருந்த காயத்திற்கு மருந்தை பூசினான்… அப்பொழுது மதி வலியில் முனங்க … உடனே மருந்திடுவதை நிறுத்தியவன் ” ரொம்ப வலிக்குதா ?? வேகமாக பண்ணிட்டேனா ” அக்கறையுடன் கேட்டான் .

உருகிருந்த அவளது மனம் அவன் கேட்ட கேள்வியில் சட்டென்று இறுகியது .அவளது முகத்தில் தெரிந்த மாற்றம்  அவனை வெகுவாய் உறுத்தியது .

” என்னாச்சு இன்னும் வலிக்குதா ??” என ஆதித்யா கேட்டான் .

” எப்படி உங்களாலா  முடியுது … ??எல்லாம் பண்ணிட்டு , எதுவுமே நடக்காத மாதிரி, என் முன்னாடி  உக்கார்ந்துக்கிட்டு … வலிக்குதான்னு

 கேட்க முடியுது … ??குற்ற உணர்ச்சியா இல்லை ?” ஆத்திரத்தில் படபடவென  பொரிந்தாள்.

” இன்னைக்கு மட்டும் இதை எத்தனை தடவை உன் கிட்ட சொன்னேன்னு தெரியலை … ஆனாலும் சொல்றேன் … ஐயம் சாரி … நான் உன்னை இங்க காயப்படுத்த வரல … …எல்லாம் சரியாகிரும் “தயக்கத்துடன் கூறினான் .

” வாவ் … எல்லாம் சரியாகிருமா ?? ஹா  ” சிரித்தபடி தன் கைகளை  தட்டினாள் … இயலாமையுடன் அவளை பார்த்தான் .

” எதுக்கு என்ன மூணு தடவ காப்பாத்துனீங்க  ஆதி  …இப்படி என்னை கொடுமை படுத்தவா …??” விழிகளில் நீர் வழிந்தது .

“இனி இப்படி நடக்காது … ! உன்னை அந்த மாதிரி நடத்திருக்க  கூடாது … !எல்லாம் என் தப்பு தான் …! நாங்க உன்னை நம்பியிருக்கணும்  … !வேற ஒரு ஆளை நீன்னு நினைச்சு அந்த மாதிரி பண்ணிட்டோம்  …  !இனிமே உன்கிட்ட இங்க யாரும் இப்படி நடந்துக்க  மாட்டாங்க ” ஏதேதோ சொல்லி ஆறுதல் படுத்தினான் .

” நான் போகணும் ” அவன் முகத்தை பார்த்தபடிஅழுத்தமாய்  கூறினாள் .

” எங்க? “

” என் வீட்டுக்கு ?”

” உனக்கு தான் யாரும் இல்லையே “

” ஆமா … அதுக்காக இங்கையே இருக்க முடியாது “

” அங்க உனக்கு பாதுகாப்பு இல்லை “

” ஓ … அப்போ இங்க இருக்கு ” நக்கலாக கேட்டாள் . அவனது முகம் கோபத்தில் சிவந்தது . ஆனால் அதை   புறக்கணித்தவள் ,

” நீங்க என்ன சொல்றது,  நான் போறேன் , அவ்வளவு தான் ” வெடுக்கென்று அவன் நெஞ்சில் கைவைத்து அவனை தள்ளியபடி எழுந்தாள் . அப்பொழுது அவளது கரம் தவறுதலாய்  அவன் நெஞ்சில் இருந்த காயத்தின் மீது பட்டுவிட

“ஸ்ஸ்ஸ் … ஆஆ ஆ  ” வலியில் கத்திவிட்டான் … முகம் ஜிவுஜிவு  என்று சிவந்து விட வலியில்  பற்களை கடித்தபடி அடக்கிக்கொண்டவன்  ,தன் நெஞ்சில் இருந்து  இரத்தம் வழிந்து கொண்டிருக்கும்  காயப்பட்ட பகுதியை அழுத்தி பிடித்து கொண்டான் .

அவன் கையில் வழியும் ரத்தத்தை  கண்டு பதறிய  மதி  …தான் செய்த காரியத்தை எண்ணி குற்ற உணர்வில் மிகவும்   வருந்தியவள் .

சட்டென்று அவன் அருகில் வந்து அவன் நெஞ்சில் இருந்த காயத்தை தொட்டு பார்த்தாள் … அவன் ஒரு வார்த்தை பேசவில்லை …  உணர்ச்சியற்ற  சிலை போல அவளையே வெறித்தபடி அமர்ந்திருந்தான் … அவனது உணர்வற்ற பார்வை அவளை வெகுவாய் வருத்தியது .

” ரொம்ப ப்ளட் வருது ஆதி… எவ்வளவு இரத்தம் வருது பாருங்க   ” தன் கையில் இருக்கும் அவனது இரத்தத்தை பார்த்தபடி பதறியவள் .

உடனே அவனது காயத்தை சுத்தம் செய்து மருந்திட்டாள் .  அவனது காயம் அவளை வெகுவாய் பாதித்தது  … துரோகம் செய்தவன் தான் ஆனாலும் அவனுக்காக அவள் மனம் தவித்தது …. கண்கள் கலங்கியது … அவனது காயம் , அவளுக்கு வலியை கொடுத்தது . .

” ஆதி இதெல்லாம் வேண்டாம்…  என்னால முடியல … நான் இங்க இருக்க முடியாது  ..நான் போகணும் ப்ளீஸ் என்னை விட்டுடுங்க இப்போவே  போறேன் ஆதி … உங்களால என்னை புடிச்சு  வைக்க முடியாது  ” என்று அழுதபடி எழுந்தவளை ,

அவளது முன்னங்கையை பற்றி இழுத்து தன் மார்போடு அணைத்தவன் அவளது காதோரம் குனிந்து ,” ஏன் முடியாது? ஆதி நினைச்சா எல்லாம்  முடியும் …வெளியில   உன் பாதுகாப்புக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னு தெரிஞ்சதுக்கு  அப்புறம் தான்  என்னால உன்னை விட முடியும் அதுவரை  நீ  இங்க தான் இருக்கனும் ..இது என் இறுதி முடிவு ” என்றவனின் மூச்சு காற்று அவளது  காதுமடலை தீண்ட … இதயத்தில் ஒருவித பரபரப்பு பரவியது …. சட்டென்று அவனிடம் இருந்து விலகியவளுக்கு அவனது ஆணவமான பேச்சு ஆத்திரத்தை வரவழைத்தது . 

” ஆதி என்னை நீங்க கட்டுப்படுத்த முடியாது … நான் உங்க அடிமை இல்லை ” கண்களில் கண்ணீருடன் கத்தினாள்  … அவளது கண்ணீரை கண்டதும் வருத்தமடைந்தவன் தலையை அழுந்த கோதி தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு ,

” லுக் மதி … இனி நீ இங்க பத்திரமா இருக்கலாம் … யாரும்  உன்னை காயப்படுத்த  மாட்டாங்க …  ஸோ திரும்ப திரும்ப போகணும்ன்னு சொல்லாத ..நேரம் வரும் பொழுது நானே உன்னை அனுப்பி வைப்பேன்   ” என்ற ஆதி  முதலுதவி பெட்டியை அதன் இடத்தில்  வைத்துவிட்டு , மீண்டும் அவள் அருகில் வந்து ,

” நீ  ரொம்ப சோர்வா இருக்க  கொஞ்சம்  தூங்கு … எனக்கு கொஞ்சம்  வேலை இருக்கு ” என்று மென்மையாக கூறிவிட்டு  அங்கிருந்து செல்ல …மதிக்கு தான் குழப்பமாக இருந்தது .

கொஞ்சம் நேரத்திற்கு முன்பு  அவளுக்கு நடந்த கொடுமைகளை  தன் கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தவன்… இப்பொழுது  வந்து அக்கறையாக   பேசினால் சந்தேகம் வர தானே செய்யும்.  மதிக்கும் அப்படி தான் இருந்தது …ஏனோ மதியின் உள்ளம் ஆதியை நம்ப மறுத்தது .

-தொடரும்