நான் அவன் இல்லை 22
” அர்ஜுன் …அந்த போலீஸ்காரன் தானே ?” இறுகிய முகத்துடன் அவளை வெறித்து பார்த்தான் ஆதித்யா சக்கரவர்த்தி ….. மதுமதி அரண்டு போனாள் . பயத்தில் இதயம் ‘ தட தட ‘ என ஓடியது … உள்ளங்கை முதல் மொத்த உடம்பும் வியர்வையில் குளித்தது .
கையில் மருந்து பையோடு நின்றிருந்த வீராவை கண்டாள் ‘ நம்புனதுக்கு நல்லா செஞ்சிருக்க ? ‘ ஐவிரல் பட்டு சிவந்திருந்த அவனது கன்னங்கள் மதுவை குற்றம் சாட்டியது .
வீராவின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் உதட்டை கடித்து கொண்டு தலை கவிழ்ந்தாள் மதுமதி .
ஆதித்யாவை கண்டதும் சல்யூட் அடித்த அந்த ஆடவன் ,
”யாரையோ காணும்ன்னு சொல்லி ஃபோன் கேட்டாங்க சார்” ஆதித்யாவின் கரங்களில் இருக்கும் தன் அலைபேசியை பார்த்தப்படி விளக்கம் கொடுத்தான் .
“வேற ஃபோன் உனக்கு வரும் நீ போ” என்று ஆதித்யா கூறிய மறுநொடி … ஆதித்யாவுக்கு வணக்கம் வைத்துவிட்டு அந்த ஆடவன் கிளம்பிவிட … மதுக்கு தான் உள்ளுக்குள்ளே குளிர் எடுத்தது .
” தலைவலி இப்போ எப்படி இருக்கு பேபி ?”அடங்கியிருந்த அவன் குரலில் சூறாவளியின் சீற்றம் ஒளிந்திருப்பதை அறிந்த மதுமதியின் உடலில் நடுக்கம் பிறந்தது .’ பேபி ‘ என்னும் சொல்லில் இருந்த அழுத்தம் … அவளது இரத்த அழுத்தத்தை கூட்டியது.
“…….”
” ஏதாவது சொன்னீங்களா ? எனக்கு கேட்கல ” – வேண்டுமென்றே நக்கலாக கேட்டான் .
” ————— ” பதில் சொல்ல முடியாமல் மௌனித்தாள் .
” ஸ்பீட் அவுட்” காட்டுக்கத்து கத்தினான் .
” சா…ரி “
” எதுக்கு ?”
“———————————” கண்களில் இருந்து கண்ணீர் மணிகள் உருண்டன .
மதுமதியின் வெளிறிய முகமும்… வடியும் கண்ணீரும் வீராவை கலங்கடித்தது …. அவள் மீது அவனுக்கும் கோபம் இருக்க தான் செய்தது. ஆனாலும் ஏனோ அவள் துன்பப்படுவதை அவனால் பார்க்க முடியவில்லை . அதனால் அவள் மீதுள்ள கோபத்தை ஒதுக்கிவைத்தவன் ,
” ஆதித்யா “- மதுவின் மீது ஆதித்யாவுக்கு இருந்த கோபத்தை திசை திருப்ப ஆதித்யாவை அழைத்தான் வீரா .
” …… “
” ஆதி உன் கிட்ட கொஞ்சம் பேசணும் “
” ம்ம் லிசனிங் “- கேட்டுட்டு தான் இருக்கேன் ..மதியின் மீது இருந்த தன் பார்வையை அகற்றாமல் கூறினான் .
” ஆதி பேசணும்ன்னு சொன்னேன் “
” சொல்லுங்க சார் … நீங்க என்ன சொல்ல போறீங்க ” இப்பொழுது அவனது பார்வை வீராவை எரித்தது .
‘ சொல்லி தான் பாரேன் … அவளுக்கு சப்போர்ட் மட்டும் பண்ணு உன் மூஞ்சோடு சேர்த்து உன் பல்லையும் உடைக்கிறேன் … என்கிட்ட சொல்லாம சுத்துற அளவுக்கு உனக்கு குளிர் விட்டு போச்சு ‘ என எண்ணியவனின் கை முஷ்டி இறுகியது .
‘ நான் பார்த்துகிறேன் ‘ கலங்கி போயிருந்த மதுவுக்கு தன் கண்களாலே தைரியம் கூறினான் வீரா … ‘ சாரி ‘ மதியின் கண்கள் மன்னிப்பை யாசித்தது. நொடி பொழுது நடந்த பார்வை பரிமாற்றம் தான் … அதை கண்ட ஆதித்யாவின் விழிகள் தகித்தது .
“ஓ இது வேறையா !” இகழ்ச்சியில் ஆதித்யாவின் இதழ் வளைந்தது.
‘என்னை தவிர மற்ற அனைவரையும் பிடித்திருக்கிறது ??’ என திகுதிகுவென எரியும் ஆதித்யாவின் கனல் விழிகள் மதியை பஸ்மமாக்கி கொண்டிருக்க அப்பொழுது ,
“கொஞ்சம் ஈஸியா ஹண்டில் பண்ணு ஆதி” – என வீரா சொன்ன மறுநொடி …இதற்காக தான் காத்திருந்தவன் போல “ஹவ் டேர் யு … நீ எனக்கு சொல்லி தரியா” – உச்சஸ்தாதியில் கத்தியபடி வீராவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தவன் …கரத்தில் இருந்த அலைபேசியை தரையில் ஓங்கி எறிந்தான் .அலைபேசி சில்லு சில்லாக சிதறியது .
” என்ன பண்றீங்க ஆதி ..” என வீராக்காக பதறியபடி தன்னை நெருங்கிய மதுவை …”ஏய் ஸ்டே தேர் என்ன ம்ம்ம் துடிக்கிற …. அங்கையே நில்லு” என ஆதித்யா தீவிரமாக எச்சரிக்க … அதிர்ந்தபடி பின்வாங்கினாள் .
செய்வதை செய்து விட்டு .. மழைக்கு கூட அஞ்சும் பூனையை போல அழுது கொண்டு இருப்பவளை காண காண இளகும் தன் மனதை எண்ணி பல்லை கடித்தவன் . ‘ எல்லாம் நடிப்பு … மத்தபடி பயமே இல்லை … இன்னைக்கு விட்டா திரும்ப திரும்ப இதையே தான் செய்வா ‘ என்று எண்ணியவன். தன்னிடம் இருந்து நழுவிக்கொண்டிருந்த கடுமையை மீண்டும் இறுக்கமாக பற்றி கொண்டான் .
“வீட்டுக்கு வா உனக்கு இருக்கு” என அவளது கரத்தை இறுக்கமாக பிடித்தவன் வலுக்கட்டாயமாக அவளை தன்னோடு அழைத்து சென்றான் .
ஆதித்யாவின் கைகளில் சிக்கிக்கொண்டு … கார் சீறியபடி அவன் கோட்டையை அடைந்தது ‘இன்னும் அர்ஜுன் தான் உன் மனசுல இருக்கான்ல … அ..ர்…ஜு..ன் .’ என்று எண்ணியவனுக்கு வலியும் கோபமும் ஒன்றாய் வந்து வதைத்தது . கண்களை இறுக்கமாக மூடி திறந்தான்.
அவளை பார்த்தான் ! காரின் ஓரத்தில் ஒடுங்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள் .அவள் உடல் வெட வெடவென நடுங்கியது .. தன்னிடம் இருந்து விலகுகிறாள் ! ஆனால் அதை எப்படி அனுமதிக்க முடியும்? உள்ளுக்குள் பொருமினான் …. தலையை அழுந்த கோதி சீரற்ற தன் மூச்சு காற்றை சமன் செய்தான் .
‘தப்பிக்க நினைத்தது வர சரி … அர்ஜுன் …. அந்த அர்ஜுனுக்கு எப்படி அழைக்கலாம் ?’ ஆதித்யாவால் தாங்கிக்கவே முடியவில்லை … ஏதாவது செய்ய வேண்டும் போல் தோன்றியது .
‘வெண்ணை திரண்டு வரும் பொழுது, தாழியை உடைத்துவிடாதே ஆதி ‘எச்சரித்தது மனம்! கண்களை மூடி ஆழமாக மூச்சை வெளியிட்டு கோபத்தை மட்டுப்படுத்த எண்ணினான் . ம்ஹும் … ஒன்றும் வேலைக்காகவில்லை … அர்ஜுனின் சிரித்த முகம் வந்து வந்து சென்று ஆதித்யாவின் கோபத்தை தூண்டிவிட . ‘பாடம் புகட்டிய தீர வேண்டும்’ என உள்ளுக்குள் இருந்த மிருதன் ஏற்றிவிட்டான் .
தன் அறைக்கு செல்லும் வரை கூட பொறுமை இல்லாமல் போக … மதியை இறுக்கமாக முறைத்தான் ஆதித்யா .
‘அவன் உன்னை தான் முறைத்து பார்க்கிறான் …’ எச்சரித்தது மனம் …. தெரியாமல் இல்லை ! ஆனால் அவனை பார்க்காதது போல அமர்ந்திருந்தாள் .
முதல் நாள் தப்பித்த பொழுது நடந்த சம்பவங்கள் அனைத்தும் அவள் முன்பு தோன்றி மறைந்தன … முதுகுத்தண்டு சில்லிட்டது .
“இன்னும் உன் மனசுல தப்பிச்சு போகணும் என்கிற எண்ணம் இருக்கு….ம்ம்ம்ம்? ” முரட்டு குரலில் விரவியிருந்த அமைதி …அவளை மேலும் கலவரப்படுத்தியது .
‘ சா…. ர ‘ பயத்தில் வார்த்தை வர மறுத்தது .
” உனக்கு யாரும் இல்லை அனாதைன்னு சொன்னியே அப்போ அவன் யாரு உனக்கு.. ?”
“— ” பதில் சொல்ல முடியாமல் அமர்ந்திருந்தாள் ….ஆனால் ‘ஏதோ நடக்க போகிறது ‘ என்று மட்டும் அவள் மனம் எச்சரித்து கொண்டே இருந்தது .
” என்ன லவ்வா?? ” இறுதியாக கேட்டுவிட்டான் … அவளிடம் ‘இல்லைன்னு’ என்னும் பதிலை எதிர்பார்த்து .
அவளும் அதையே தான் சொல்லிருப்பாள் நேற்று அந்த சம்பவத்தை காணாமல் இருந்திருந்தால் …. ஆனால் இன்று இந்த நொடி மதிக்கு ஆதித்யா மீது இருக்கும் வெறுப்பு அவளை வேறு விதமாய் பேச வைத்தது .
” ஆமா லவ் பண்றோம் … கல்யாணம் பண்ணிக்க போறோம் ” பயம் தான் ஆனாலும் சொல்லிவிட்டாள் .அப்படி சொன்னாலாவது விட்டுவிட மாட்டானா என்னும் நப்பாசையில் .
ஆதித்யாவிடம் இருந்த கொஞ்ச பொறுமையும் காற்றில் பறந்துவிட .. சுரீரென்று ஏதோ அவனுக்குள் பாய்ந்தது .. சட்டென்று படபடவென துடித்த இதயத்தை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்று அவனுக்கு தெரியவில்லை … இது போன்று பதற்றமடைவதெல்லாம் அவனுக்கு மிகவும் புதிது … மனம் மோசமாக வலித்தது .
” ஆஹாங் … ” வலியை மறைத்தவன் பொய்யாக வியந்தான் .
“ஆமா ” மீண்டும் ஆமோதிப்பதாக கூறி தலையசைத்தாள் . அவனது தாடை இறுகியது . அவளை சில நிமிடங்கள் கூர்மையாக பார்த்தான் … இதயம் துடிப்பின் வேகம் அதிகரித்தது …. வலி … கோபம் .. வெறுமை … வெறுப்பு என ஏகப்பட்ட உணர்ச்சிக்குவியல்கள் … ஆதித்யாவுக்கு அதை எப்படி கையாள்வது என்பது கூட தெரியவில்லை …. அடக்கப்பட்ட கோபத்தில் தன் பின்னங்கழுத்தை நீவியவன் அவளை நெருங்கி ,
” ம்ம்ம் அது அப்போ ….இனி உன் வாழ்க்கையில அர்ஜூன்னு ஒருத்தன் இருந்ததையே மறந்திடு “என்று அழுத்தமாக கூறியவன், இதற்கு மேல் இங்கே இருந்தால் தனது கோபம் நிச்சயம் அவளை காயப்படுத்திவிடும் என்பதை உணர்ந்து … அவளது பதிலை எதிர்பாராமல் காரை விட்டு இறங்கி வேகமாக நடக்க,
மதுவுக்கு தான் ஆத்திரமாக வந்தது ‘இவன் யாரு இதை சொல்றதுக்கு ..?இவன் சொன்னா அப்படியே செய்யணுமா என்ன ? ‘ என எண்ணியவள் “முடியாது” என ஆதித்யாவின் காதில் விழும்படி கத்தினாள் .
அடுத்த நொடியே அவனது நடையின் வேகம் குறைந்திருக்க … ஆதித்யாவின் பார்வை இப்போது மதியின் முகத்தை முற்றுகையிட்டது .
” நீங்க சொன்னா நான் மறந்திடணுமா ?நான் ஒன்னும் உங்க அடிமை இல்லை ” அதரங்கள் துடிக்க கூறினாள் . ‘ தன்னவளின் முதல் கோபம் ‘ கலப்படமற்ற குழந்தையின் சிரிப்பை போல அழகாக இருந்தது
ரசிக்கத்தான் செய்தான் … ஆனால் அதற்கு பிறகு அவள் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் அவனுக்குள் இருக்கும் அசுரனை எழுப்பிவிட்டது .
” நீங்க என்னை கட்டுப்படுத்தலாம்.. ஆனால் என் மனசை கட்டுப்படுத்த முடியாது … இன்னைக்கு இல்லைன்னாலும் ஒருநாள் கண்டிப்பா அர்ஜுன் என்னை தேடி வருவான் அன்னைக்கு நீங்க பார்க்க அவன் கைய புடிச்சிட்டு நான் போவேன் …. ” என உறுதியாக கூறினாள் …. அவள் குரலில் தான் அத்தனை நம்பிக்கை .
“ஓ அவன் மேல அவ்வளவு நம்பிக்கை…! அப்போ உடைக்காம எப்படி ?இதோ இப்பவே உடைக்கிறேன் ” என தன் சிவந்த விழிகள் இடுங்க பார்த்த ஆதித்யாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது .
மதியை பயமும் கோபமும் ஒரே நேரத்தில் ஆட்கொண்டது …
‘ மிஞ்சி போனால் என்னை என்ன செய்துவிடுவான் … ?? உயிர் தானே போனால் போகட்டும் … இந்த சதை வெறி பிடித்த மிருகத்தினரிடம் இருப்பதை விட மரணம் ஒன்றும் கொடூரம் அல்ல! ‘ என எண்ணியவள் தனக்குள் இருக்கும் பயத்தை முழுங்கியபடி தன் முகத்தை அவன் பார்க்க வேறுபக்கம் திருப்பிக்கொண்டு அலட்சியமாக நின்றாள் .
இங்கே வந்த இத்தனை நாட்களில் அவள் அர்ஜுனை பற்றி ஒரு நிமிடம் கூட முழுமையாக எண்ணியதே இல்லை காரணம், திட்டிக்கொண்டோ இல்லை அலுத்துக்கொண்டோ அவள் மனம் ஆதித்யாவை மட்டும் தான் நினைத்து கொண்டிருந்தது .
ஆனால் நேற்று இரவு அவள் கண்ட சம்பவம் அது கொடுத்த ஏமாற்றமும் வலியும் மதியின் மனதை வெகுவாய் பாதித்தது அந்த பாதிப்பின் வெளிப்பாடு தான் இந்த அலட்சியம் .
அதை கொஞ்சமும் அறிந்திராத ஆதித்யாவுக்கு அவளது அலட்சியம் ஆத்திரத்தை கொடுத்தது . அவளது கோபத்தை ரசிக்க முடிந்த அவனால் அவளது உதாசீனத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை . அவ்வளவு நேரம் இழுத்துப்பிடித்து வைத்திருந்த பொறுமை எல்லாம் எங்கோ பறந்திருக்க …வேகமாக அவளை நெருங்கியவன் முரட்டுத்தனமாக அவளது தாடையை பற்றி தன் பக்கம் திருப்பினான் …
” என்ன நெஞ்சழுத்தம் ! பேசிட்டு இருக்கும் போது முகத்தை திருப்புற” பல்லை கடித்துக்கொண்டு கேட்டான் . லேசாக அவன் பிடித்ததுக்கே வலியில் அவள் கண்கள் கலங்கியது …அப்பொழுதும் அவளது பார்வை அவனை சந்திக்க வில்லை .
” ம..தி … பாரு …லுக் அட் மீ ” கோபமாக கூறினான் … இன்னும் கொஞ்சம் அழுத்தினால் வலி தாங்காமல் சரணடைந்துவிடுவாள் என்பது அவனுக்கு நன்றாக தெரியும் … . ஆனால் தன்னவளை காயப்படுத்தி தனது காரியத்தை சாதிக்கொள்வதை தன் ஆண்மைக்கு ஏற்படும் இழுக்காக நினைத்தவனால் அவளிடம் கடுமையாக நடந்துகொள்ள முடியவில்லை . ஆனால் அவளது பிடிவாதம் அவனை சோதித்தது .
” திமிரு! உன்னை என்ன பண்றேன் பாரு ” பல்லை கடித்துக்கொண்டு தன் அழுத்தத்தை கூட்டினான் … வலி தாங்காமல் அவன் முகத்தை பார்த்தாள் அழகிய மீன் விழிகள் இப்பொழுது வெறுப்பை கக்கியது ….. சட்டென்று தன் பிடியை தளர்த்தினான் .
” யு ஆர் ஸோ டிஸ்கஸ்டிங் ” – நீ மிகவும் அருவருப்பானவன் வலியில் தன் தாடையை பிடித்து நீவியபடி முகத்தை சுளித்தாள் .
‘என்ன வார்த்தை சொல்லிவிட்டாள்! நான் அருவருப்பானவனா ? ‘அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை .யார் நீ என அவனை தள்ளி நிறுத்திய அவளது பார்வை அவனது மனதை கூறுபோட்டது .
‘ மதி என்னை அப்படி பார்க்காத’ என்று மனதிற்குள் மிகவும் வருந்தினான் . சிறு வயதில் இருந்து வலிகளையும் உதாசீனங்களையும் போராடி கடந்து வந்தவனால் இந்த சிறு பெண்ணின் நிராகரிப்பை மட்டும் ஏனோ தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் விலகி சென்றான் .
***********************************************
வேகமாக தன் அறைக்குள் நுழைந்து கதவை அடித்து சாற்றியவன் , கட்டிலில் அமர்ந்து தலையை இறுக பற்றிக்கொண்டான் . தன்னை தானே கட்டுப்படுத்த முடியாதளவு கோபம் கொண்டவனின் முகம் அதீத உணர்ச்சியில் சிவந்து இருக்க , சுற்றும் முற்றும் பார்த்தவனின் கண்களில் அவன் அறையின் பால்கனியில் தொங்க விட பட்டிருந்த பஞ்சிங் பேக் கண்களில் பட … தன் பலம் முழுவதையும் சேர்த்து வேகமாக பஞ்சிங் பேகில் குத்தினான் .
” ஏன் மதி …. ஏன் என் மேல இவ்வளவு வெறுப்பு ? ” என ஆக்ரோஷமாக கத்தியபடி தன் பலம் முழுவதையும் சேர்த்து மூர்க்கத்தனமாக பஞ்சிங் பேகில் குத்தினான் . அவன் வேகமாக குத்தியதில் பஞ்சிங் பேக் அவனை நோக்கி நகர்ந்து வர,
” ஏன் ?” என கர்ஜித்தபடி அதை தன் காலால் ஓங்கி உதைத்தான் . அவனது நெற்றி நரம்பில் தொடங்கி , தேகத்தின் தசைகள் உட்பட அணைத்தும் புடைத்திருந்தது .
அவன் ஆழ்ந்து இழுத்துவிட்டு மூச்சில் அவனது திண்ணிய மார்பு மேலும் கீழும் ஏறி இறங்கியது… வெற்று தேகம் வியர்வையில் குளித்திருக்க கிட்டத்தட்ட ரெண்டு மணிநேரம் ஏதோ தன் எதிரியை துவம்சம் செய்வது போல பஞ்சிங் பேகை அடித்து துவைத்தவனின் மனம் இப்பொழுதும் சமாதானம் அடையவில்லை .
” ஏன் ?” என்ற ஒரே ஒரு கேள்வி அவனை படுத்தி எடுத்தது …. அடித்து அடித்து தளர்ந்து போனவனின் கைகளில் உள்ள மேல் தோல்கள் அணிந்திருந்த க்ளோவ்சையும் தாண்டி கிழிந்திருக்க … மேல் சட்டையை கழற்றி இருந்தவன் ஆறாய் வழியும் வியர்வையோடு அப்படியே தரையில் படுத்தான் .
அவனிடம் என்ன இல்லை ? அவனுக்காகவே வாழும் தாய் !பாசத்தை வாரி வாரி வழங்க ஒன்றுக்கு இரெண்டு தங்கைகள் !கேட்டால் உயிரையே கொடுக்கும் நண்பன் ! யாருக்கும் கிடைக்காத பதவி ! இதற்கு மேல் ஒரு மனிதனுக்கு என்ன வேண்டும் ?? எல்லாம் இருந்தும் ஏன் இந்த வெறுமை ?? இதெல்லாம் இல்லாமல் பார்த்தால், ஆதித்யா என்பவன் யார் ?
சிறு வயதில் இருந்து ,எத்தனை வலிகள் …? எத்தனை போராட்டங்கள் ?
தாகத்தோடு சில நாட்கள் ! பசியோடு பல நாட்கள் ! உறக்கம் இன்றி எத்தனை நாட்கள் ? .
அன்று அடிப்படை தேவைகளுக்காக தொடங்கிய அவனது போராட்டம் , இன்று வரை ஏதோ ஒன்றிற்காக நீடித்து கொண்டு தான் இருக்கின்றது … அதில் சில விஷயங்களை அடைந்து விட்டான் … ஆனால் பல விஷயங்கள் இன்னும் அவனுக்கு மறுக்கப்பட , ஒவ்வொரு கணமும் கனமாக தான் அவனுக்கு கழிகின்றது .
இப்பொழுது அவனுக்கு இருக்கும் செல்வாக்கிற்கு அவன் நினைத்தால் நொடிக்கு ஒரு பெண்ணுடன்… மது மாது என்று உல்லாசமாக இருக்கலாம் .
ஆனால் அது அவன் அல்லவே …!
தனது இந்த முப்பத்தைந்து வருட வாழ்க்கையில் ஒரு நொடி கூட அவன் மனம் அதற்கு ஆசை கொண்டதில்லை!
இனியும் அப்படி தான் ! அது தான் அவன் ! ஆதித்யா சக்கரவர்த்தி … ! தனிமை …. வலிகள் … உதாசீனங்கள் என அனைத்தையும் போராடி, கடந்து வந்தவனால் , மதியின் வெறுப்பை மட்டும் ஏனோ தாங்கிக்கொள்ள முடியவில்லை .
காதல் … குடும்பம் … மகிழ்ச்சி இதெல்லாம் தனக்கு எட்டாத கனி என்று நினைத்திருந்தவன் மனதில், என்றாவது ஒருநாள் உனக்கும் எட்டும் என்று நம்பிக்கை கொடுத்தது மதுமதியுடனான சந்திப்பு , ஆனால் இன்று அவன் மீது அவள் காட்டிய வெளிப்படையான வெறுப்பு அவனது ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்து , அதெல்லாம் உனக்கு எட்டவே எட்டாது என்பதை ஆணித்தனமாய் கூற சிலுவையில் அறைந்தது போல ஆதியின் மனம் புண்பட்டது.
வலிகளை தாங்க முடியாத மனிதன் ஒன்றும் அவன் இல்லையே … தனது விடலை பருவம் தொடங்கி எவ்வளவு வலிகளை அனுபவித்திருப்பான் . ஆனால் அது அனைத்தையும் நொடி பொழுதில் கடந்து சென்ற இரும்பு மனிதன் அல்லவா அவன் !
இன்று போல அவன் ஒருநாளும் தோய்ந்து அமர்ந்ததே கிடையாது … அனைத்தையும் போனால் போகட்டும் என கடந்துவிடுபவனால் … ஏனோ மதுமதியை மட்டும் அப்படி விட்டுவிட முடியவில்லை .
“காசுக்காக போராடினேன் ! பாசத்துக்காக போராடினேன் ! உணவுக்காக போராடினேன் ! அனைத்திலும் போராட்டம் அனைத்துமே போராட்டம் … இறுதியில் இதிலும்(காதலும்) போராட்டம் என்றால் எப்படி ? எங்கே சென்றாலும் அடைக்கப்பட்ட கதவு , அதுக்குள் ஒளிந்திருக்கும் மறுக்கப்பட்ட பாசம் ….” என அவன் வலிகள் மொத்தமாக ஒன்று திரண்டு அவனை சிதைக்க தொடங்கின … தலை பயங்கரமாக கனத்தது .
‘இந்த அற்ப பாசத்திற்காக மட்டும் எத்தனை இழப்புகளை நீ சந்தித்து விட்டாய் … !இன்னுமா உனக்கு புத்தி வரவில்லை! ‘ என மனம் திட்டாமல் இல்லை ,ஆனாலும் அடிபட்ட மனம் மீண்டும் அதற்காக ஏங்கியது .
இப்பொழுதும் கூட அவள் கொஞ்சி காதல் பேச வேண்டாம் ….குறைந்தபட்சம் அவன் அவளிடம் இருந்து எதிர்பார்ப்பது ஒரு கனிவான பார்வை! நிறைவான புன்னகை ! அதை கூட தர மறுத்தால் எப்படி? எப்படி விட முடியும்? முடியவே முடியாது !
” என்ன ஆனாலும் சரி , நீ அர்ஜுனை மறந்து தான் ஆகணும் மதி ..மறக்க வைப்பேன் ” என்று சூளுரைத்த ஆதித்யா… தேடி சென்றது மதியின் அறைக்கு.
போராடி வெல்ல பெண்ணின் மனம் ஒன்றும் யுத்த களம் இல்லையே ! அதை இந்த போராளி உணர்வானா?
-தொடரும்