பார்வையற்றிருந்தாலும் அவள் உடையணியும் விதத்திலான நேர்த்தி அவனை எப்போதும் வியப்பில் ஆழ்த்தும்.
இவற்றையெல்லாம் நுணுக்கமாய் அவன் விழிகள் ரசித்தபடி இருக்க,
அங்கே நிலுவிய அமைதியை பொறுக்க முடியாமல் “எங்க இருக்கீங்க… ஏதாச்சும் வாய் ஓயாம பேசிக்கிட்டே இருப்பீங்க… ஏன் எதுவும் பேச மாட்டிறீங்க மகிழ்… இப்படி சத்தமில்லாம இருக்கிறது எனக்கு என்னவோ போல இருக்கு” என்றாள்.
அவன் புன்னகையிக்க அவள் சோர்வோடு
“மாயாவையும் கூட்டிட்டு வந்திருக்களாம்… “
“மாயா எதுக்கு நம்ம இரண்டு பேர் நடுவுல ?” லேசான கோபம் தெரிந்தது அவன் குரலில்.
“அவ என் கூட இருந்தா ஏதாச்சும் பேசுக்கிட்டே இருப்பாளே” என்றாள்.
“எப்பவுமே பேசிக்கிட்டே இருக்க முடியுமா? “
“எனக்கு ஸைலன்ஸ் சுத்தமா பிடிக்காது மகிழ்… அதனாலதான் உங்களை கூட எனக்கு ரொம்ப பிடிக்கும்”
முச்சை இழுத்துவிட்டவன் “புரியுது… ஆனா எப்பவுமே நம்ம கூட மாயா இருக்க முடியாது சாக்ஷி… அப்புறம்… நம்ம இரண்டு பேருக்கும் கொஞ்சமாச்சும் ப்ரைவஸி வேண்டாமா?!” என்று கேட்டான்.
“ப்ரைவஸியா ? எதுக்கு” என்று வினவினாள்.
“நாசமா போச்சு…”
“ஏன்?” என்று அவள் கேட்க அவள் முகத்தில் தெரிந்த வெகுளித்தனம் அழகாய் இருந்தாலும் அவனுக்கு அது இக்கட்டாகவும் இருந்தது.
அவளை நோக்கி “லவ்வர்ஸ் எல்லாம் எப்படி இருப்பாங்கனு உனக்கு தெரியுமா?” என்று ஏக்கமாய் அவன் கேள்வி எழுப்ப
“எப்படி இருப்பாங்க?” என்று அவளுமே பதில் கேள்வி கேட்டாள்.
அவன் கோபத் தொனியில் “நான் உன்னை கேட்டா நீ என்னை திருப்பி கேட்கிறியா?” என்றான்.
“தெரியாததினாலதானே கேட்கிறேன்… சொல்லுங்க மகிழ்… லவர்ஸ் எல்லாம் எப்படி இருப்பாங்க? ” என்று அவள் ஆர்வமாய் கேட்க அவன் முகம் சோர்ந்து போனது.
“கஷ்டமாயிருந்தாலும் நீங்க சொன்னாதானே எனக்கு புரியும்… பிராக்டிக்கலா பண்ணா எனக்கெப்படி தெரியும்” என்று கேட்டுக் கொண்டிருந்த அவள் முகபாவனைகளை பார்த்து சிரித்தவன் அவள் கரத்தை பிடிக்க. அவள் பின்னோடு இழுத்துக் கொண்டு “கையெல்லாம் பிடிக்காதீங்க… என்னால கவனமா கேட்டு புரிஞ்சிக்க மூடியாது” என்றாள்.
கொஞ்சம் அலுத்தபடி “விளங்கிடும்” என்றான்.
“ஏதாச்சும் தெளிவா சொன்னதானே விளங்கும்”
“உனக்கு புரிய வைக்க முடியும்னு எனக்கு தோணல”
“ஏன் அப்படி சொல்றீங்க ?… நான் ரொம்ப ஷார்ப்… நீங்க சொல்லுங்க… நான் புரிஞ்சிக்கிறேன்”
“சாக்ஷி… சொல்லாம கூட சில விஷயங்களை புரிய வைக்க முடியும்”
“எப்படி. ?” என்று கேட்டவளின் கன்னத்தை தன் கரங்களால் ஏந்திக் கொண்டான்.
அத்தனை நேரம் ஓயாமல் பேசிக் கொண்டிருந்த அவள் உதடுகள் ஸ்தம்பித்து விட, அவன் நெருங்கி வருவதை அவன் சுவாசத்தின் மூலம் உணர்ந்தவள் அவன் கரத்தை இடையில் நிறுத்தி தடுத்தாள்.
“சாக்ஷி ப்ளீஸ்” என்று முன்னேற வந்தவனை விடாமல் தடுத்தவள்
“எனக்கு எதுவும் தெரிய வேண்டாம்… நான் போகனும்” என்று எழுந்து நின்று கொள்ள,
அவன் புன்முறுவலோடு “நீ ஷார்ப்தான்… எதுவும் பண்ணாமலே உனக்கு எல்லாம் புரிஞ்சிடுச்சு… இவ்வளவு நேரம் என்கிட்ட நடிச்சதானே” என்றான்.
“சத்தியமா நடிக்க எல்லாம் இல்லை… நீங்க ஏதோ முக்கியமா சொல்லப் போறீங்கன்னு நினைச்சேன்”
“இதுவும் வாழ்க்கையில ரொம்ப முக்கியமான விஷயம்தான்”
“மகிழ்… எனக்கு ரொம்ப எம்பாரிஸ்ஸிங்கா இருக்கு… இப்படி எல்லாம் பேசாதீங்க” என்றாள்.
“பேசவும் கூடாதா…இதென்ன அநியாயம் ?… ”
“அய்யோ மகிழ்… எனக்கு ரொம்ப பசிக்குது… லஞ்ச் சாப்பிட போலாமே”
“தப்பிச்சிக்க இப்படி ஒரு வழியா?”
“அய்யோ அந்த விஷயத்தை விடுங்களேன்” என்று அவள் அவனை கெஞ்சலாய் கேட்க
“சரி விட்டுவிட்டேன்… ஆனா நம்ம லஞ்ச் சாப்பிட வெளியே போக வேண்டாம்… அக்கா எனக்கு பிடிச்ச மட்டன் பிரியாணி செஞ்சி எடுத்துட்டு வர்றேன்னு சொன்னா… ஆனா இன்னும் வரக் காணோம்… நான் கால் பண்ணிக் கேட்கிறேன்” என்றபடி தன் கைப்பேசி எடுத்து பேசியவன்
சாக்ஷியின் புறம் திரும்பி “அக்கா இங்கதான் பக்கத்துல இருக்கா… நான் போய் கூட்டிட்டு வந்திடிறேன்… நீ பத்திரமா இங்கயே இரு… நான் பைஃவ் மினிட்ஸ்ல வந்திரேன்” என்று சொல்ல அவளும் இயல்பாக தலையசைத்து சம்மதித்தாள்.
அவன் வெளியேறி அவசரமாய் பைக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டவன், எழிலின் வீட்டில் இருந்து அவளை அழைத்துக் கொண்டு வருவதற்கு கொஞ்சம் தாமதமானது.
எழில் உள்ளே நுழையும் போதே “சாக்ஷி” என்றழைத்து அவள் அருகாமையில் வந்து அமர்ந்தாள்.
அத்தனை நேரம் சிலையை அமர்ந்திருந்தவள் எழிலின் அழைப்பில் உயிர் பெற்றுக் கொண்டாள்.
அவள் முகம் பதட்டத்தை நிரப்பியிருக்க அந்த இடைவெளிக்குள் ஏதோ நிகழ்ந்திருக்கிறது. ஆனால் அதனை பெரிதாக இருவரும் கவனிக்கவில்லை.
எழில் புன்னகையோடு “உன்னை தனியா கூட்டிட்டு வந்து ரோமான்ஸ் பன்றானா ?!” என்று கேட்க சாக்ஷி ஏனோ இயல்பு நிலையில் இல்லை.
மகிழ் அவள் காதில் “அக்காகிட்ட எதுவும் உளறி வைக்காதே” என்றதும் அவளும் அவன் சொன்னதன் அர்த்தம் புரியாமலே தலையசைத்தாள்.
சாக்ஷியின் மனநிலையை உணராமலே மகிழ் தன் சகோதிரியிடம் உரையாடிக் கொண்டிருந்தான்.
அவனுக்கு பிறந்த நாள் என்பதற்காக எழில் அவனுக்கு பிடித்த உணவு வகைகளை எல்லாம் சமைத்து எடுத்து வந்திருந்தாள்.
எழில் உணவு பரிமாறி இருவரையும் சாப்பிட சொல்ல, சாக்ஷிக்கு இருந்த பசியெல்லாம் அப்போது காணாமல் போயிருந்தது.
அவர்களின் கட்டாயத்திற்காக வேறு வழியின்றி சாக்ஷியும் உணவருந்தினாள்.
அதன் பிறகு மகிழ் அவளை தன் காரில் மீண்டும் அழைத்துவந்து சாரதா இல்லத்தில் விட்டான்.
அவன் யோசனை குறியோடு “என்ன விஷயம் சாக்ஷி? ” என்று கேட்க அவள் இறுக்கமான முகத்தோடு “என்னை முதல் முதலில் பார்த்ததும் என்ன நினைச்சிங்க ?” என்று கேட்டதும்
“என்ன நினைச்சேன்… ஆ… அழகு அறிவு திறமை எல்லா இருக்கிற உனக்கு கண் பார்வையில்லைன்னு நம்ப முடியல… மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு” என்றான்.
அவன் இயல்பாகவே பதிலுரைத்தாலும் அந்த வார்த்தை சென்றடைந்த அர்த்தத்தை அவன் உணர்ந்திருக்கவில்லை.
“சரி சாக்ஷி… நான் கிளம்பட்டுமா ?” என்று கேட்டான்.
“ம்ம்ம்” என்றாள்.
“அப்புறம்… நான் இரண்டு நாளைக்கு ப்ரண்ட் மேரேஜுக்கு டெல்லி போறேன்… பேச டைம் கிடைக்குமான்னு தெரியல… முடிஞ்சளவுக்கு கால் பண்ண ட்ரை பன்றேன்… கால் பண்ணலன்னலனா கோச்சிக்க கூடாது ?” என்று சொல்லவும் அவள் அதற்கும் மௌனமாகவே தலையசைத்தாள்.
அவளின் அந்த அழுத்தமான மௌனத்தின் பிண்ணனியை ஆராய வேண்டுமென்று அவனுக்கு அப்போது தோன்றவில்லை. ஆனால் இப்போது யோசித்து பார்த்தால் அவன் வீட்டில் இல்லாத சமயத்தில் எதோ நிகழ்ந்திருக்கும் என்று எண்ணினாலும் அது என்னவாக இருக்க முடியும் என்று அவனால் யூகிக்க முடியவில்லை.
அவன் மூளைக்கு எதுவும் எட்டவில்லை.
சில கேள்விகளுக்கான விடையை நாம் எங்கங்கோ தேட, அதன் விடை நம் அருகாமையிலயே இருக்கும் என்பதை பல நேரங்களில் யாரும் அறிவதில்லை.
அப்படிதான் மகிழ் மாதங்கள் கடந்து சாக்ஷி அவனை தவறாக புரிந்து கொண்டதன் காரணத்தை தேடி தேடி மனதளவில் ரொம்பவும் பாதிக்கப்பட்டான்.
அவனின் தேடல் முடிவுறாமல் நகர்ந்து கொண்டிருக்க, அவன் கேள்விக்கான விடையை சொல்ல சாக்ஷியால் மட்டுமே முடியும்.
ஆனால் அதற்கு அவள் மீண்டும் உயிர்த்தெழுந்துதான் வர வேண்டும். அது சாத்தியப்படுமா என்ன ?
**********
ஏழு மாதங்கள் அசாதாரணமாய் உருண்டோடியது.
அன்றுதான் சையத் இயக்கிய முதல் படத்தின் ப்ர்வீயூ ஷோ.
பிரபலங்கள் எல்லோருமே அந்த படத்தை பார்த்து வியந்து சையத்தையும் ராகவையும் பாராட்டினர்.
ராகவின் வெற்றிக்கான வரிசைப்பட்டியலில் அந்த படமும் இடம் பெற காத்திருந்தது. அது பல நடிகர்கள் மனதில் பொறாமை தீயைக் கூட வளரச் செய்தது.
இப்படி வெற்றி மேல் வெற்றியாய் அவன் குவித்துக் கொண்டிருக்க, அந்த வளர்ச்சி பலரின் பார்வைக்கும் உருத்தலாகவே இருந்தது.
அதோடு அல்லாது இந்த வெற்றியின் மூலம் மக்களின் மனதிலும் ராகவ் தனக்கென்ற நிலையான இடத்தை தக்க வைத்து கொண்டான்.
அந்த படத்தின் மூலமாக ராகவுக்கும் சையத்திற்கும் பலமான நட்பும் உருவாகி இருந்தது.
சையத்திற்கும் அந்த படம் புகழின் உச்சாணி கொம்பில் ஏற்றி வைக்க காத்திருக்க, அவனின் ஒரே எண்ணமெல்லாம் அந்த வெற்றியை தன் குடும்பத்தாரோடு பெருமிதமாய் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.
அதற்காகவே அந்த படம் வெளியாகி அதன் வெற்றி மக்களால் பறைசாற்றப்பட்ட அடுத்த கணமே அவன் வீட்டிற்கு சென்றான்.
அவனின் தம்பி தங்கைகள் அவன் வீட்டின் வாசலை அடைந்த போது அவன் கால்களை கட்டிக் கொண்டு அழத் தொடங்கினர்.
“வாபா நம்மல விட்டுவிட்டு போயிட்டாருன்னா” என்று கதற அவன் அதிர்ந்து நின்றான்.
மூன்று மாதத்திற்கு முன்பு நிகழ்ந்த தந்தையின் மரணம் குறித்த செய்தி அவனுக்கு தெரியாமலே போனது. அவன் படம் இயக்கும் மும்மரத்தில் குடும்பத்தாரோடு தொடர்பில்லாமல் இருந்தான்.
தன் இலட்சியத்தில் படாத பாடுப்பட்டு உழைத்து வெற்றிக் கண்டவன், அதற்கு விலையாய் கொடுத்தது அவன் தந்தையின் உயிரை.
இலட்சியத்தை நோக்கிய ஓட்டத்தில், அவன் குடும்பத்தை அலட்சியம் செய்ததினால் ஏற்பட்ட விளைவு.
சாஜி தன் மகனின் முகத்தை பார்க்க கூட விருப்பமில்லாமல் கதவை தாளிட்டு கொண்டவர் “போயிடு சையத்… என் கண் முன்னாடியே வராதே” என்றார்
“நான் தப்பு செஞ்சிட்டேன்மா… என்னை மன்னிச்சிடுங்க” என்று மனமுருகி அவன் அழுது கேட்ட எந்தவித சாமதானங்களையும் மன்னிப்புகளையும் சாஜி எற்க தயாராயில்லை.
“இனிமே வாபாவோட இடத்தில இருந்து எல்லா பொறுப்பையும் ஆஷிக் பார்த்துப்பான்… எங்களுக்கு அந்த அல்லா துணையிருப்பார்… நீ இனி இந்த வீட்டுக்கு வரவே வேண்டாம்” என்றார் தீர்க்கமாக!
“அம்மா…” என்று அவன் கதற, அந்த கதறல் அவன் தாயின் மனதை கரைக்கவில்லை.
அவன் எதிர்பார்த்தது போல் தமிழ் சினிமா அவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய அதே சமயம் அவன் குடும்பத்தாரால் துச்சமாக ஒதுக்கப்பட்டான்.
அவன் எதிர்பார்த்த பேரும் புகழும் கிட்டிய போதும் அந்த இன்பத்தை அனுபவிக்க முடியாத நிலையில் நின்றான் சையத்.
********
சையத்தின் வாழ்க்கைக்கு நேரெதிராய் மாறியிருந்தது மகிழின் வாழ்க்கை.
மகிழின் போக்கு மாதங்கள் செல்ல செல்ல மோசமாகி கொண்டு போனதே தவிர அவன் பழைய நிலைக்கு திரும்பவேயில்லை.
இப்படி இருந்தவன் சில நாட்களாகவே எங்கே சென்றான் என்றே பலராலும் அறிய முடியவில்லை.
அவன் குடும்பத்தார் அவனை தேடி அலைந்து கொண்டிருந்தனர்.
கெனடாவில் இருந்து வேந்தனும் அவசரமாக புறப்பட்டு வந்து, தன் தம்பியை தேடும் பணியில் மும்முரமாய் ஈடுபட்டான்.
அந்த தேடல் வேந்தனை குற்றவுணர்வில் ஆழ்த்தியது. சாக்ஷியின் மீது தான் கொண்ட வக்கிரம்தான் தன் தம்பியின் இந்த நிலைக்கு காரணம் என்று அவன் மனம் அவனையே நிந்திக்க தொடங்கியது.
எல்லோருமே ஒருவிதத்தில் தங்கள் சுயலாபத்திற்காக இன்னொருவரின் வாழ்க்கையை பணயமாக்க, அதனால் உண்டாகும் விளைவுகளை யாராக இருந்தாலும் சந்தித்தே தீர வேண்டும்
அது நடந்த நிகழ்வுகளை மாற்றிவிட போவதில்லை எனினும் நடக்கும் நிகழ்வுகளில் பெரியளவிலான மாற்றத்தையும் பாபதிப்பையும் ஏற்படுத்தும்.
அத்தகைய மாற்றங்களே இந்த பூமியின் இயல்பு.
For discounts in the shop section, please contact mspublications1@gmail.com Dismiss